Monday, June 22, 2009

பஸ் டிக்கெட் கிடைக்கலைன்னா என்ன பண்ணுவீங்க?

2005. அக்டோபர் மாதம். தீபாவளி சமயம்.

பனிந்தர சாமா. இருபத்தியெட்டு வயது. பிட்ஸ் பிலானியில் படித்தவர். பெங்களூரில் டெக்ஸாஸ் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். தீபாவளிக்கு சொந்த ஊரான ஹைதராபாத் செல்ல வேண்டும். பின்ன, தீபாவளிக்கு பெங்களூரில் என்ன செய்ய முடியும்? எப்போதும் பிதுங்கி வழியும் பெங்களூர் சாலைகள், விழா விடுமுறைகளின் போது, வெறிச்சோடி கிடக்கும். சாப்ட்வேர் கம்பெனிகளில், சில சமயம், என்ன எப்போது நடக்கும் என்று தெரியாததால். கடைசி வரை ஊருக்கு எப்போது போவோம் என்று அவருக்கு தெரியவில்லை. அதனால் முன்கூட்டியே ரயிலில் டிக்கெட் எடுக்கும் பிளான் இல்லை.

ஆனால், கடைசி நேரத்தில் ஊர் செல்லுவது என்று முடிவாகி விட்டது. ரயிலை கேட்கவே வேண்டாம். டிக்கெட், கண்டிப்பாக இருக்காது. சரி, பஸ்ஸில் எடுத்து விடலாம் என்று பஸ்ஸில் டிக்கெட் எடுக்க செல்கிறார். எங்கேயும் இல்லை. நகரில் இருக்கும் டிராவல்ஸ், டிராவல் ஏஜெண்ட்ஸ் எங்கும் இல்லை. இருக்கும் நெரிசலில், கடை கடையாக சென்று நொந்து விட்டார்.

ஒரு பஸ் டிக்கெட் எடுக்கணும்ன்னா இவ்ளோ கஷ்டப்படணுமா? தெரு தெருவா சுத்தணுமா? ரயிலுக்கு இருப்பது போல், ஏன் பஸ் டிக்கெட்டை இன்டர்நெட்டில் புக் செய்ய முடியாதா? இந்தியா முழுக்க ரயிலை நடத்துவது ஒரே நிறுவனம். அரசாங்கம். பஸ், அப்படி இல்லையே? எல்லா ஊருக்கும், எல்லா பஸ் கம்பெனிகளின் பஸ் டிக்கெட்டுக்கும் சேர்த்து ஒரே வெப்சைட் இருந்தால் எப்படி இருக்கும்?

கனவை வெறும் புலம்பலாக உதிர்த்துவிட்டு போகவில்லை அவர். தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார். சுதாகர், ஐபிஎம்மில் பணிபுரிகிறார். சரண் ஹனிவெல்லில். அவர்களுக்கும் நியாயம் புரிந்தது. ஆர்வம் துளிர் விட்டது. கலந்து பேசினார்கள். பேருந்துகளில் பிரயாணம் செய்யும் மக்களை சந்தித்து பேசினார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பை புரிந்து கொண்டார்கள். பஸ் நிறுவனங்களுக்கு சென்று பேசினார்கள். அவர்களால் என்ன செய்யமுடியும் என்று தெரிந்து கொண்டார்கள். பணம்? முதலீட்டாளர்களை தொடர்பு கொண்டார்கள். இது முடியும் என்ற தெம்பு கிடைத்தது. அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம்.

பார்த்து வந்த வேலையை விடும் எண்ணமே இல்லை. சரியாக திட்டமிட்டால், எவ்வளவு நேரம் என்றாலும் கிடைக்கும். வாரயிறுதிகளில், ஒன்றாக இருந்து ப்ரோக்ராமிங் செய்தார்கள். இன்டர்நெட்டில் உட்கார்ந்து பஸ் இருக்கை தேடும் வசதி. சீட் இருந்தால் புக் செய்யும் வசதி. ஈ-பஸ் டிக்கெட். முடிந்தது வேலை. இண்டஸ் எண்டர்பிரனர்ஸில் தங்கள் கனவை செயலில் காட்டினார்கள். அவர்களும் மனது வைத்தார்கள். இனி வேலையை விடலாம். நல்ல சம்பளம் தந்த பாதுக்காப்பான வேலையை விட்டார்கள். முடிவு அல்ல அது. தொடக்கம். பயணம் இனிதே தொடங்கியது.

http://www.redbus.in

சுலபமாக சொன்னாலும், பின்னால் இருக்கும் உழைப்பு பெரியது. ஒவ்வொரு பஸ் நிறுவனத்தையும் சம்மதிக்க வைப்பது மிக பெரிய காரியம். பஸ் நிறுவனத்தை சம்மதிக்க வைத்தால் போதுமா? யார் டிக்கெட் எடுப்பார்கள்? யாருக்கு தெரியும்? தெரிய வைத்தார்கள். எடுத்தவர்களுக்கு பிடித்திருந்ததால், வாய் மொழி விளம்பரமாக பரவியது. நான் கூட என் நண்பர்களுக்கு பரிந்துரைத்திருக்கிறேன். இன்று 350க்கும் மேற்பட்ட பஸ் கம்பெனிகளின் டிக்கெட்டை ரெட்பஸ் மூலம் பெற்று கொள்ளலாம். இண்டர்நெட் என்றில்லை. வெளியிலும், கடைகள் மூலமாக பெறலாம். சரியான பார்ட்னர்களை தேர்ந்தெடுத்தார்கள். இன்று, ரெட்பஸ் டிக்கெட் கொடுக்க, 75000க்கும் அதிகமான கடைகள் உள்ளது. போன் செய்தால், டிக்கெட் வீட்டுக்கு வரும். எஸ்.எம்.எஸ்ஸில் கூட டிக்கெட் எடுக்கலாம்.

வெற்றி, தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உள்ளது. அது மக்களுக்கு சரியாக உதவிடும் போது, வெற்றி மகிழ்ச்சியை கொடுக்கிறது. எண்ணங்களை சரியான திட்டமிடலுடன் செயலில் காட்டினால், சாதனை புரியலாம் என்பது ரெட்பஸ் மூலம் இன்னுமொருமுறை நிருப்பிக்கப்பட்டுள்ளது.

7 comments:

சரவணகுமரன் said...

Test

சப்ராஸ் அபூ பக்கர் said...

////போன் செய்தால், டிக்கெட் வீட்டுக்கு வரும். எஸ்.எம்.எஸ்ஸில் கூட டிக்கெட் எடுக்கலாம்.////

மிஸ் call கொடுத்தா கொண்டு வந்து தருவாங்களா??? (ஹி...........ஹி............லொள்ளு...)

அருமையாக இருந்தது பதிவு....தொடருங்கள்....

நம்ம ஏரியாவுக்கும் வர்றது.....

சரவணகுமரன் said...

//மிஸ் call கொடுத்தா கொண்டு வந்து தருவாங்களா??? //

இதெல்லாம் ஓவரு...

//அருமையாக இருந்தது பதிவு....தொடருங்கள்....//

நன்றி, அபூ பக்கர்...

//நம்ம ஏரியாவுக்கும் வர்றது.....//

வந்துட்டா போச்சு! :-)

Anonymous said...

All goody-goody article.

They never refund money if you cancel their ticket and instead give a coupon to redeem at a later day. I don't like this.

All they get is 5 seats in each of these carriers. Try BLR-CBE route any day, all the Volvo buses are shown full.

சரவணகுமரன் said...

நன்றி shiyamsena

சரவணகுமரன் said...

அனானி, உங்க கருத்திற்கு நன்றி

Unknown said...

yenakku onnume theriyaleye