Wednesday, June 3, 2009

கருணாநிதியும் சோவும் சேர்ந்தால் ஜோசியம்தான்

சோவின் வார்த்தைகளில்,

“’பராசக்தி’, ’திரும்பிப்பார்’, ‘மனோகரா’ - போன்ற படங்களைப் பார்த்து, கருணாநிதியின் வசனங்களால் பெரிதும் கவரப்பட்ட ஒரு மாணவர் கூட்டமே அன்றிருந்தது. அக்கூட்டத்தில் நானும் ஒருவன். அப்படிப்பட்ட திறமையாளர், எங்கள் நாடகங்கள் சிலவற்றுக்குத் தலைமை வகித்து, பெரிதும் பாராட்டியிருந்தார். சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, நான் திரைப்படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியபோது, எனக்கு வந்த முதல் வாய்ப்புகளில், கருணாநிதி அவர்களின் ‘மறக்க முடியுமா?’ படமும் ஒன்று.

படப்பிடிப்பின் இடைவேளைகளின் போது, கருணாநிதியுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்கு பலமுறை கிட்டியது. யாருக்கும் தோன்றாத கோணம், அவருக்கு திடீரென்று தோன்றும். அந்த உரையாடல்களில் அவருடைய குணாதிசயம் அடிக்கடி வெளிப்படும்.

ஒருமுறை நாங்கள் பேசிக் கொண்டிக்கும்போது, ‘மறக்க முடியுமா?’ படத்திற்காக தயாரான விளம்பரப் போஸ்டர் வடிவமைப்பு வந்தது. அதைக் காண்பித்து எல்லோரிடமும் அபிப்பிராயம் கேட்டார் கருணாநிதி. எனக்கு அந்த டிஸைன் பிடிக்கவில்லை. பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு... என்று பல வண்ணங்களும் சேர்ந்து, முகத்தில் அறைகிறாற் போல் இருந்தது அந்த டிஸைன். இதை நான் அவரிடம் சொன்னேன்.

கருணாநிதி ஒரு கணம் கூட தயங்கவில்லை. ‘அந்த டிஸைன் போட்டவருக்கு பாலிடிக்ஸும் தெரியும் போல இருக்குது. எங்க கூட்டணியிலே இருக்கற எல்லா கலர்களையும் போட்டுட்டாரு! சுதந்திரா கட்சிக்காக நீலம், முஸ்லிம் லீக்குக்காக பச்சை, எங்கள் கட்சிக்காக கருப்பு, சிவப்பு...’ என்று ஆரம்பித்து, அந்த போஸ்டரிலிருந்த மற்ற எல்லா நிறங்களுக்கும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொடுத்தார் அவர். இப்படி பளீர் என பேசக் கூடிய அவர், மற்றவர்கள் அப்படி பேசும் போதும், அதை ரசிக்கக் கூடியவரே.

மற்றொரு நிகழ்ச்சி. வி.பி.சிங் அரசு கவிழ இருந்த நேரம். சந்திரசேகருக்கு ஆதரவாக சில பணிகளைச் செய்ய, நான் விமானம் மூலம் டெல்லி சென்று கொண்டிருந்தேன். அதே விமானத்தில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, வி.பி. சிங்கை சந்திப்பதற்காகவும், தேசிய முன்னணியின் தலைவர்களோடு கலந்து பேசுவதற்காகவும் டெல்லி சென்று கொண்டிருந்தார்.

விமானப் பயணத்தின் போது நான் அவரை அணுகி, வணக்கம் தெரிவித்தேன். அவரும் பதில் வணக்கம் சொல்லிவிட்டு, என்னுடைய நலனைப் பற்றி விசாரித்த பிறகு, அருகில் இருந்தவர்களிடம், ‘இந்த சந்திப்பு என்ன தெரியுமா?’ என்று கேட்டார். மற்றவர்களுக்கும், எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவரே தொடர்ந்தார். என்னைச் சுட்டிக்காட்டி, ‘சோ’ என்று கூறி, தன்னையே சுட்டிக்காட்டி ‘சி.எம்.’ என்று சொல்லிவிட்டு. இரண்டையும் சேர்த்து ‘சோ சிஎம் - சோசியம்’ என்றார்!

‘டெல்லியிலே இப்ப எல்லாரும் பார்க்கறது ஜோசியம்தானே! இப்ப நீங்க எல்லாரும் இங்கேயே ஜோசியம் பார்த்துட்டீங்களே’ என்று நான் விளக்கம் அளிக்க, மற்றவர்களுக்கு விஷயமே அப்போதுதான் புரிந்தது! இப்படிப்பட்ட நகைச்சுவை அவருக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது.”

சோவின் ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ புத்தகத்திலிருந்து

-----

இன்றும், எண்பத்தி ஆறு வயதில் அதே நகைச்சுவை உணர்வுடன் வாழ்ந்து வரும் முதல்வருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

1 comment:

raman said...

even in sri lanka tamilian matter... good happy birthday .. Mr. M.K