Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, May 21, 2017

நன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.




நவம்பர் மாதம் வந்து விட்டால், தேங்க்ஸ் கிவிங்கிற்கு (Thanksgiving) என்ன செய்யலாம் என்று அமெரிக்கர்கள் யோசிப்பார்களோ, இல்லையோ, என்ன வாங்கலாம் என்று அமெரிக்காவில் இந்தியர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பொருள் தேவையோ, இல்லையோ, டிஸ்கவுண்ட் என்ற சொல் மீது அலாதி ப்ரியம் நம்மவர்களுக்கு.
டிஸ்கவுண்ட் என்று வந்து விட்டால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்போம், டீல் இல்லையென்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்பது போல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அமெரிக்கத் தேங்க்ஸ் கிவிங் வரலாறு பதினாறாம் நூற்றாண்டில் தொடங்குகிறது. விவசாயப் பெருங்குடி மக்கள், விளைச்சல் காலத்திற்குப் பிறகு நன்றி தெரிவிக்கும் காலமாக இது ஆரம்பித்தது. பிறகு, மத ரீதியான நன்றி நவிலல் வழிபாடுகள் ஆரம்பித்தன. தற்சமயம், நவம்பர் மாதத்தின் நாலாம் வியாழன் அன்று அதிகாரபூர்வமாக விடுமுறை விடப்பட்டு, அமெரிக்கா எங்கும் தேங்க்ஸ் கிவிங் டே (Thanksgiving Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
வருமானம் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம், அவர்களுக்கு இந்த நாளில் குறைந்த விலையில் பொருட்கள் விற்கிறார்கள் என்று நம்பப்படும் கன்ஸ்யூமர் ஐதீகம் இது. "அவ்வளவு நல்லவங்களாடா நீங்க?" என்று எந்தக் கேள்வி கேட்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி, அடிக்கிற கார்த்திகை மாசக் குளிரில், தெருத் தெருவாக, கடை கடையாக நம்ம ஜனங்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள். நாமதான் ஓ.பி.கொ.கு ரகமாச்சே!!!
இந்த நுகர்வோர் சடங்கு நம்மவர்களுக்கு ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்குகிறது என்றால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. மலிவாகத் தோன்றும் வகையில், ஒரு பொருளின் விற்பனை விலையை நிர்ணயித்துவிட்டு, அதற்கேற்றாற் போல் வடிவமைத்து, கண்டிப்பாக லாபம் இருக்கும் வகையில் ஆசியத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து, நவம்பர் நாலாம் வியாழன் கிழமை கடையில் பண்டல் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். நம்மவர்களும் பிற்பகலிலேயே கிளம்பி, இந்தப் பண்டலின் மீது கையை வைத்துக் கொண்டு, விஜிபி கோல்டன் பீச் சிப்பாய் போல் நிற்க ஆரம்பித்து விடுவார்கள். அந்தப் பண்டல் 6 மணிக்கோ, 8 மணிக்கோ அல்லது 10 மணிக்கோ திறக்கப்படும். அதுவரை, தீபாவளிக்குத் தட்கலில் ட்ரெயின் டிக்கெட் எடுக்கக் காத்துக் கிடப்பவர்கள் போல், நம்மவர்கள் இங்கு நிற்பார்கள். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன், பிள்ளையார் கோவில் முன்பு உடைக்கப்பட்ட சிதறு தேங்காயைப் பொறுக்கிக் கொண்டு ஓடுவதுபோல் இங்கு பொருட்களை அள்ளிக்கொண்டு ஓடுவார்கள்.
இப்படிக் கொரில்லாத் தாக்குதல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கடைக்குள் நீண்ட நீண்ட க்யூக்கள் ஆங்காங்கே நிற்கும். எங்கு ஆரம்பிக்கிறது, எங்கு முடிகிறது, என்ன கொடுப்பார்கள், அது நமக்குக் கிடைக்குமா என்பது எல்லாம் புரிந்தும், புரியாமலும் பேங்கில் செல்லாத 500-1000 ரூபாயை மாற்ற வந்தவர்கள் போல் நிற்பார்கள். இதிலேயே பக்காவாக ப்ளான் செய்து, குடும்ப உறுப்பினர்களையோ, அல்லது நண்பர்களையோ ஆங்காங்கே அனுப்பி விட்டு, பொருட்களை வாங்கி வர, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் முறையில் ஷாப்பிங் செய்பவர்களும் உண்டு.
இப்படி எதுவும் இல்லாமல் வேடிக்கை பார்க்க மட்டுமே ஒரு கூட்டம் வரும். என்ன விற்கிறார்கள், என்ன வாங்க வந்தோம் என்று தெரியாமல், எல்லாக் களேபரமும் முடிந்த பின்னர், அப்பல்லோ வாசல் அப்பாவித் தொண்டர்கள் போல் கலைந்து, களைத்துச் செல்வார்கள்.
இவர்கள் எல்லோரையும் விடப் போற்றிப் புகழ வேண்டிய பாகுபலிகள், கடைக்கு வெளியே அடிக்கிற சில்லென்ற குளிரில், போர்வை போர்த்திக் கொண்டு நிற்கும் நமது ஷாப்பிங் ஜவான்ஸ். நடுஇரவு பனிரெண்டு மணிக்குத் திறக்கும் கடைக்கு, இரவு எட்டு மணிக்கே டின்னர் முடித்துப் பங்ச்சுவலாக வந்து நிற்பார்கள். நேரமாக நேரமாக க்யூ வளைந்து அங்கிங்கு செல்லும். பனிரெண்டு மணிக்குக் கடை திறந்த பின்பு, உள்ளே ஓடும் கூட்டத்தில் முதல் பத்து - பதினைந்து பேருக்குத் தான் சொல்லிக் கொள்ளும்படி ஏதேனும் கிடைக்கும். மற்றவர்கள், அந்தப் பத்து - பதினைந்து பொருட்களைத் தூக்கிக் கொண்டு பில்லிங் முடித்துச் செல்லும் அழகைத் தான் காண முடியும்.
இந்த நாளுக்காக இவர்கள் ஆயத்தமாவதையும் குறிப்பிட வேண்டும். ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே, இந்த வருடம் என்ன சீப்பாகக் கிடைக்கும் என்று தங்கள் எஃப்.பி.ஐ. மூளையை முடுக்கிவிட்டு, இணையத்தில் தேட ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு ஏற்றாற்போல் தகவல் கொடுக்கவும் இணைய தளங்கள் நிறைய இருக்கின்றன. இருக்குற தளங்களை எல்லாம் க்ரால் செய்து, டேட்டா மைனிங், ஆனலிட்டிக்ஸ் எல்லாம் புரிந்து, எக்ஸல் ரிப்போர்ட் தயார் செய்வார்கள். எந்தக் கடைக்கு, எப்ப போனா, என்ன கிடைக்கும் என்பதைப் பாய்ஸ் படத்தில் வரும் செந்தில் போல் ரெடி செய்து (இன்பர்மேஷன் இஸ் வெல்த்!!), தாங்கள் கொண்ட செல்வம், பெறுக இவ்வையகம் என்ற பொதுவுடமைத் தத்துவத்தின்படி, வாட்ஸ் அப், மெஸ்ஸஞ்சர், ஃபேஸ்புக், ட்வீட்டர், ப்ளஸ் என்று சமூக ஊடகத்தின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி நம்மை நெருக்குவார்கள்.
மெய்யுலக ஷாப்பிங் மட்டுமில்லாமல், மெய்நிகர் உலக ஷாப்பிங்கும் குறைவில்லாமல் நடக்கும். இதற்காக ப்ளாக் ஃப்ரைடே, சைபர் மண்டே, காதல் செவ்வாய், காவிய புதன் என்று வகைவகையான பெயரில், நமது மெயில்பாக்ஸிற்கு அழைப்பிதழ் அனுப்புவார்கள். நாமும் சும்மா இல்லாமல், இங்கே இந்த ரேட், அங்க என்ன ரேட் என்று ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் போல் சுற்றியலைந்து கொண்டிருப்போம்.
அடுத்தக்கட்டமாக, இந்த ஜூரம் கண்டம் கடந்து இந்தியா வரை சென்றுவிட்டது. ஆடிக் கழிவுப் பாரம்பரியத்தில் இருந்து பிக் பில்லியன் டே கலாச்சாரத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கோம். அது போதாது என்று, அமெரிக்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஃபோன் போட்டுத் தேங்க்ஸ் கிவிங் வாழ்த்துச் சொல்லிவிட்டு, ஷாப்பிங் ஆர்டர் கொடுக்கவும் தயாராகிவிட்டார்கள். 'எப்படி அனுப்புவது?' என்று கேட்டால், அதற்கும் ஃபோன் போட்டு யாரையாவது தயார் செய்து வைத்திருக்கிறார்கள். நமது நேரம் எப்படியோ, சமயங்களில் நாமும் குருவி வேலை பார்க்க வேண்டி வரும்.
இத்தனை கலாட்டாவில், இந்தத் தினத்தின் முக்கிய அம்சமான நன்றி நவிலலை மறந்து விட்டு, மற்றவரை இடித்துக்கொண்டு, காலை மிதித்தாலும் மன்னிப்புக் கேட்க நேரம் இல்லாமல் ஓடும் நுகர்வோர் வெறியை உருவாக்கியிருக்கும் கார்ப்பரேட் உலகிற்கு நம்மால் எப்படி நன்றி கூற முடியும் என்று தெரியவில்லை.
இச்சந்தர்ப்பத்தில் ஜப்பானில் பிரபலமாகிவரும் மினிமலிஸம் (Minimalism) போன்ற வாழ்க்கைமுறை அறிதல் தான் அவசியமாகிறது. பழகிவிட்ட இந்த யுகத்தில், எல்லோராலும் மினிமலிஸத்தை எந்த அளவிற்குக் கடைப்பிடிக்க முடியுமோ, தெரியாது. ஆனால், அது போன்ற வாழ்வு முறையைத் தெரிந்து கொண்டு, நமது அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுப்பது, அவர்களது நன்றியை நாம் பெறுவதற்குத் தகுதியை ஏற்படுத்திக்கொடுக்கும்.
அனைவருக்கும் நன்றி நவிலல் வாழ்த்துகள்.


.

Thursday, October 4, 2012

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் நானும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், என்னை ஏதேனும் விதத்தில் பாதிக்கும் என்று தோன்றியதே இல்லை. இன்று என்னை பாதித்தது. பெரிதாக ஒன்றும் இல்லை. என் தினசரி அலுவலக வேலையில் ஒரு சின்ன பாதிப்பு.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஒரு அங்கமாக, இரு வேட்பாளர்களும் ஒரே மேடையில் விவாதம் நடத்துவார்கள் என்று நம்மூர் செய்தித்தாளில் படித்து கேள்விப்பட்டிருக்கேன். அவ்வித முதல் விவாதம் இன்று டென்வரில் நடந்தது. நடந்த இடம், நான் அலுவலகம் செல்லும் சாலையில் இருக்கும் ஒரு யூனிவர்சிட்டியில்.

ஒருவாரம் முன்பே இந்த சாலை இன்றைய தினத்தில் மாலை நேரத்தில் அடைக்கப்படும் என்று தகவல் வந்து சேர்ந்தது. அந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும் என்றில்லை. ஆனால், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் சீக்கிரமே சாயங்காலம் அலுவலத்தில் இருந்து கிளம்ப சொல்லிவிட்டார்கள்.

அப்புறம் என்ன, வீட்டிற்கு வந்து மீதி வேலையை பார்த்தேன். அவ்வளவுதான்!!!

----

யூ-ட்யூபில் நேரடி ஒளிப்பரப்பில் இந்த விவாதத்தைப் பார்க்க நேர்ந்தது.





அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர், சும்மா பேச்சாளராக இருந்தால் மட்டும் போதாது. விவரம் தெரிந்த பேச்சாளராக இருக்க வேண்டும் என்று புரிந்தது. என்னதான், இவர்களுக்கு பின்னால் இருக்கும் தேர்ந்த அணிகள் பிரச்சார யுக்தி அமைக்கும் என்றாலும், இம்மாதிரி விவாதத்தில் மேடையில் இருக்கும் வேட்பாளர்களுக்கு பொருளாதாரம், வணிகம், மருத்துவ காப்பீட்டு, வெளியுறவு கொள்கை போன்ற மக்களைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், கிழித்து எறிந்துவிடுவார்கள்.

எனக்கு ரொம்ப புரியவில்லை என்றாலும், விவாதம் ஆர்வம் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

எனக்கு புரிந்த வகையில், ரோம்னியின் கொள்கைகள், ஒபாமாவை விட சிறப்பானதாக இல்லை என்றாலும்,  ஒபாமாவை விட ரோம்னி நன்றாக பேசியது போல் இருந்தது. ஆட்சியில் இல்லாதவர்கள், ஆட்சியில் இருக்கும் குறைகளை சொல்லி அதிபரை தொங்க விடலாம். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், எதை வேண்டுமென்றாலும் செய்வோம் என்று புருடா வாக்குறுதி கொடுக்கலாம். அதுவே ஆட்சியில் இருப்பவர்களால், தங்கள் கொள்கைகளை பற்றி அதுபோல் கூற முடியாது. லட்சணம் ஏற்கனவே தெரிந்திருக்கும். இது போன்ற காரணங்களால், ரோம்னி பெட்டராக பேசியது போல் தெரிந்திருக்கலாம்.

---

கொஞ்சம் கூட கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல் பேசுகிறார்கள். தாக்கும்போது கூட, முகத்தில் சினேக புன்னகையுடன் தாக்குகிறார்கள். நடுவராக இருப்பவர் கொடுக்கும் நேரத்திற்கு பேசி, நடுவர் பேச்சுக்கு மதிப்பளிக்கிறார்கள். (”President, please tell about this in 2 minutes...”) அடுத்தவர் பேசும்போது, சீரியஸாக பேனாவால் நோட்ஸ் எடுத்து, அதற்கு பதிலளிக்கிறார்கள். அவ்வப்போது அசட்டு ஜோக்கும் அடிக்கிறார்கள். இறுதியில் குடும்பத்துடன் இணைந்து, குசலம் விசாரிக்கிறார்கள்.

இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும், முதன்முதலாக நேரடி ஒளிபரப்பில் கண்டது - நல்ல அனுபவம்.

இருந்தாலும், நான் நம்மவர்களை விட்டுக்கொடுக்க மாட்டேன். அமெரிக்கர்கள் போலியானவர்கள். எதிராளியை தோற்கடிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாலும், வெளியில் போலியாக நட்பு பாராட்டுகிறார்கள். ஆனால், நம்மாட்கள் அப்படி இல்லை. மனதிற்குள் என்ன நினைக்கிறார்களோ, அதையே வெளியேயும் காட்டுகிறார்கள். பேச்சிலும் காட்டுகிறார்கள்.

---

சென்ற மாதம் விழுப்புரத்தில் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கொடுத்த ஒரு பதிலடி, சாம்பிளுக்கு....

"தினமும் கோர்ட்டில் வாய்தா வாங்குபவர், தன்மானம் பற்றி பேசுவதா? அரசு பொருளை விலை கொடுத்து வாங்கியது தவறென, கோர்ட் சுட்டிக்காட்டும் அளவிற்கு நடந்துள்ளீர்கள். அட தன்மானமே, உன் நிலைமை இப்படி ஆயிற்றே?

200 முறை வாய்தா வாங்குவது, நீதிபதி மேல் புகார் கூறுவது, 68 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மானம் போகவில்லையா...????கருணாநிதிக்கா தன்மானம் போயிற்று. தன்மானம் என்றால் என்ன பொருள் என, உனது தமிழாசிரியர் கூறுவார். எல்லாம் எனக்கு தெரியும். அதற்குரியவர் யார் என, ஒரு நாள் விவாதம் நடத்திப் பார்க்கலாமா... சட்டசபையில் தேவையில்லை; பொது மண்டபத்தில் பேசலாமா... பட்டிமன்றத்தில் தகராறு வந்து விடாது. பயம் வேண்டாம். ஆணும், பெண்ணும் வாதிடும்போது கைகலப்பு நேராது. அதனை நான் விரும்பவும் இல்லை. இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், தம்பிமார்களை தட்டிவிட்டால் பிரச்னை எங்கேயோ போய் விடும்."

 
.

Friday, February 3, 2012

ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா

இந்த வார தெஹல்காவில் வந்திருந்த கட்டுரையைப் படித்த போது பகீரென்று இருந்தது.



ஜெயலலிதா சசிகலாவை விரட்டியது தெரிந்த விஷயம். அதற்கான காரணங்கள், உள்விவகாரங்கள் பற்றிய விஷயங்கள், தெரிந்திருக்கவில்லை.

தெஹல்காவில் வந்திருந்த விஷயங்கள் உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், எவ்வளவு அதிகாரங்கள் இருந்தாலும், பக்கத்திலேயே நம்பிக்கைக்குரியவர்கள் இல்லாவிடில், நாம் ஒன்றுமில்லை என்பது நிச்சயம் என்று ஞாபகப்படுத்தியது.

ஜெயலலிதாவுக்கு பதில் சசிகலாவை முதலமைச்சராக்குவது என்பது மன்னார்குடி கும்பலின் திட்டம். ஏதாவது சந்தர்ப்பம் அமையுமா என்று இருந்தவர்களுக்கு, ஜெயலலிதாவின் பெங்களூர் நீதிமன்ற வழக்கு, யோசிக்க வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வழக்கில் ஏதேனும் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு பாதகமாக வந்தால், அதை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள திட்டம் தீட்டப்பட்டது.

ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கும் வேலையாட்கள், சசிகலாவின் ஆட்கள். ஜெயலலிதாவின் காவலாளிகள், சசிகலாவின் ஆட்கள். கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், சசிகலாவின் ஆட்கள். இப்படி எல்லாமே சசிகலாவின் ஏற்பாட்டில் நிறுவப்பட்டவை. சசிகலாவிற்கு தெரியாமல், ஜெயலலிதாவிற்கு ஏதும் தெரிய வாய்ப்பில்லை.

இந்நிலையில் இந்த சதி திட்டம், ஜெயலலிதாவிற்கு தெரியவந்தது, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மூலம். தமிழகத்திற்கு வந்த தொழிலதிபர்களை எக்கச்சக்க கமிஷன் கேட்டு, மன்னார்குடி மாஃபியா குஜராத்திற்கு விரட்டியடிக்க, அத்தொழிலதிபர்கள் மோடியிடம் நடந்த பேச்சுவார்த்தையின் போது, இது குறித்து தகவல் சொல்ல, எச்சரிக்கை மணி அங்கிருந்து அடித்திருக்கிறது.

அம்மாவிற்கு அதன்பிறகே, தன்னைச் சுற்றி நடக்கும் பேரங்கள் தெரியவந்திருக்கிறது. மோனோ ரயில் காண்ட்ராக்ட் விஷயத்தில், தன்னுடைய கையெழுத்து தன்னையறியாமல் போடப்பட்டிருப்பது தெரியவந்தது.

தனக்கு கொடுக்கப்படும் உணவை, பழங்களை, மருந்துகளை பரிசோதிக்க சொல்லி அனுப்ப, அதில் சிறிய அளவில் விஷம் கலக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் பிறகு, ஜெயலலிதா சுதாரித்துக்கொண்டு, மன்னார்குடி கும்பலின் நடவடிக்கைகளை, தொலைபேசி பேச்சுகளை, துப்பறியும் நிறுவனம் கொண்டு கவனிக்க, தன்னை சுற்றி, கட்சி முழுக்க, ஆட்சி முழுக்க, இந்த கும்பலின் சிலந்தி வலை பின்னப்பட்டிருப்பது தெரிந்து, கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க தொடங்கினார்.

அதன் பிறகு நடந்ததில் கொஞ்சம் நமக்கு தெரிந்தது.

இதை வாசித்தப்போது, ஜெயலலிதாவின் நிலை பரிதாபத்தை கொடுத்தது. குடும்பம்தான் பலவீனம் என்றாலும், கருணாநிதியின் நிலை பரவாயில்லை. யோசித்து பார்த்தால், இப்படிப்பட்டவர்களின் கைகளில் ஆட்சியை கொடுக்கும், தமிழக மக்களாகிய நமது நிலை தான் உண்மையில் பரிதாபத்திற்குரியது.

எப்படிபட்டவர்களாக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், ஆப்பில்லாத வாழ்க்கை எங்கும் இல்லை என்பது தான் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறுதலான பாடம்.

.

Friday, December 17, 2010

விஜய், சில்வர்ஸ்பூன் சில்பாக்குமாரா?

முதலில் இந்த வீடியோவை பார்க்க முடிந்தவர்கள், பார்த்துவிட்டு வரவும்.



சும்மா சொல்லக்கூடாது. கவுண்டமணி ஞானிதான்.

முன்பெல்லாம் எனக்கு காமெடி பதிவு எழுத வேண்டுமென்றால், ஈஸியாக இருந்தது - விஜய் பற்றி எழுதுவது தான். இவ்வருட ஆரம்பத்தில் சபதம் செய்துகூட, அதை நிறுத்தி வைத்தேன். இதோ, இவ்வருட இறுதியில், விஜய் ஆதரவு டோனுடன் இப்படியொரு பதிவு எழுதுவேன் என்று நினைத்தே பார்க்கவில்லை.

2010 - விஜய்யின் வாழ்க்கையில் மறக்க முடியாத வருடம் தான். இந்த வருடம் வெளியான ஒரே விஜய் படம், சுறா. இன்னொன்று வெளியாகும், வெளியாகும் என்று சொல்கிறார்கள். வெளிவந்த பாடு இல்லை.



இதுவரை விஜய் படம் நன்றாக இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். படம் சரியாக போகவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த வருடம் தான், விஜய்யின் கடைசி அரை டஜன் படங்கள் ப்ளாப் என்று வெளிப்படையாக விஜய்க்கு எதிராக சினிமா துறையிலேயே குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்திருக்கிறது. இப்போது தான், ஒரே மாதிரி படங்களிலும் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அதெல்லாம் பரவாயில்லை. இனி சரி பண்ணிடலாம் என்று ஒரு நம்பிக்கை வரும் வண்ணம் காவலன், வேலாயுதம் மற்றும் 3 இடியட்ஸ் எனத்தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்தார். இப்ப, என்னவென்றால், ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இன்னொரு படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். நல்லவேளை, வேலாயுதம் பற்றி எவ்வித நெகட்டிவ் செய்தியும் இதுவரை வரவில்லை. படம் முடியட்டும், பார்க்கலாம்.

தமிழ் திரையுலக விநியோக அதிகாரம் ’நிதி’களிடம் சிக்கியபோது, படங்களின் வெற்றியும், பெரும்பகுதி லாபமும் இவர்களையே சேரும் என்பது மட்டுமே முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால், விஜய் போன்ற ஒரு முன்னணி நடிகரே, இவர்களிடம் படும் பாட்டை பார்க்கும்போது தான், இவர்கள் திரையுலகம் மீது கொண்டுள்ள முழு கட்டுப்பாடும் தெரிகிறது. எனக்கு தெரிந்த ஒரு அஜித் ரசிகரே, ‘ஐயோ பாவம், விஜய்!’ என்று வருத்தப்படுகிறார்.

விஜய்க்கு மக்கள் ஆதரவை பெற நல்ல வாய்ப்பு. ஏற்கனவே, கலைஞர் பாராட்டுவிழாவில் அஜித்தின் பேச்சுக்கு கிடைத்த ஆதரவை நினைத்து பாருங்கள்.

விஜய்யின் அரசியல், இதுவரை எவ்வித காரணங்களும் இன்றி ஒரு காமெடி விஷயமாகத்தான் இருந்தது. அவர் அரசியலுக்கு வருவதற்கு எவ்வித நேர்மையான உந்துதலோ, உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமோ இருந்ததில்லை. ஏழைகளுக்கு தானம் செய்வதைக்கூட, தயாரிப்பாளர்களின் ஸ்பான்சருடன் செய்வதாகவே தெரிகிறது.

இவர்கள் இப்போது விஜய்க்கு கொடுக்கும் பிரஷரைப் பார்க்கும்போது, அவருடைய அரசியல் ஆசையை சீரியஸாக ஆக்கிவிடுவார்களோ என்று பயப்பட வேண்டி இருக்கிறது. இது அரசுக்கு எதிராக இருக்கும் உணர்வுகளை, தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் விஜய்யின் திட்டமாகக்கூட இருக்கலாம்.

ரஜினி, கமல், அஜித், சூர்யா என சினிமாவின் மேல் மட்டும் முழு கவனம் கொண்டவர்கள், இவர்களை அனுசரித்தே செல்கிறார்கள். தற்சமயம் ‘பாக்ஸ் ஆபிஸ் செல்லம்’ என்றழைக்கப்படும் சூர்யாவின் கடைசி ஐந்து படங்களும், இவர்கள் தயவில் வெளிவந்தவை. அதுபோல் ரஜினி, கமல் நடித்ததும், அஜித் நடித்துக் கொண்டிருப்பதும் ‘நிதி’களின் படங்களே. விஜய்யும் அப்படி சென்றவர்தான். எந்த தைரியத்திலோ அல்லது வேறு வழியில்லாமலோ, இப்போது எதிர் வழியில் செல்கிறார்.

ஒருவகையில் வீரன் போல் தெரிந்தாலும், முடிவில், அட்லீஸ்ட் அடுத்த வருட இறுதியில் என்னவாகிறார் என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

.

Friday, November 12, 2010

ஸ்பெக்ட்ரம் - அறிவியலும், அரசியலும்

ஸ்பெக்ட்ரமை தமிழில் அலைக்கற்றை என்று சொல்லுவார்கள். நாம் ஸ்பெக்ட்ரம் என்றே தொடரலாம். தகவல் பரிமாற்றத்திற்காக, வான் வழியே அனுப்பப்படும் அலைகள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் இது சம்பந்தமாக அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொடர்புத்தொடர்பு நிறுவனங்கள் வாங்க வேண்டிய சமாச்சாரம் இது மட்டும் தான். மற்றபடி, டவர் அமைத்து பைசா பிடுங்கி காசு சம்பாதிக்க தொடங்கிவிடலாம். வியாபாரமே இதை நம்பி இருப்பதால், அலைவரிசைகள் விற்கப்படுகிறது. அலைவரிசை குறிப்பிட்ட அளவிலும், வாங்குவதற்கு போட்டி அதிக அளவில் இருப்பதாலும் இது ஏலம் விடப்படுகிறது.



தொடர்த்தொடர்பு துறையில் ஏற்படும் முன்னேற்றத்தால், புது புது தலைமுறைகள் உருவாக்கப்படுகிறது. முதல் தலைமுறை (1G), இரண்டாம் தலைமுறை (2G), மூன்றாம் தலைமுறை (3G) என ஒவ்வொரு தலைமுறையிலும் அலைவரிசை அதிகரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கான வசதி அதிகரிக்கப்படுகிறது. வசதி அதிகரித்தால், அதிக காசு. அதிக போட்டி. ஏலம் ஜோரா போகும்.

இனி, புகழ்ப்பெற்ற இரண்டாம் தலைமுறைக்கான ஏலத்தில் நடந்த ஜோரை பார்க்கலாம்.

- 2008இல் விற்கப்பட்ட இந்தியா முழுமைக்குமான 2G லைசன்ஸ், 2001 ஆண்டிற்கான விலையில் ஒன்பது நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது. (விலையை உயர்த்தினால், விலைவாசி விலைவாசி’ன்னு புலம்புறது. இல்லாட்டி இப்படியா!)

- 7442 கோடியில் இருந்து 47912 கோடி வரை மதிப்புள்ள லைசன்ஸ், 1651 கோடி கொடுக்கப்பட்டது. (சலுகை விலை. அடுத்த தேர்தலில் ஜெயிக்க வைத்தால், இலவச ஸ்பெக்ட்ரம்!)

- ஏலம் வைத்து அதிக விலை கேட்பவருக்கு கொடுக்காமல், முதலில் கேட்பவருக்கே கொடுக்கப்பட்டது. (தீயா வேலைப்பார்க்க வேண்டாம்?!!!)

- எந்த சட்டத்திட்டமும் இல்லாமல், ஏலத்தில் விலை கேட்பது தான்தோன்றித்தனமாய் நிறுத்தப்பட்டது. (ஒரு மத்திய மந்திரிக்கு அதுக்குக்கூட உரிமை இல்லையா?! இது என்ன நியாயம்? இதுவே....)

- 122 லைசன்ஸ்களில் 85 லைசன்ஸ்கள், ஏலத்தில் பங்குப்பெற இருக்க வேண்டிய தகுதிகள் இல்லாத நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது. (அப்புறம் அவுங்க எப்ப வளர்றது? இப்படித்தான் நாங்க...)

- சில நிறுவனங்களுக்கு அதிகப்படியான அலைவரிசை குறைந்த விலையில் வழங்கப்பட்டது. (ஒண்ணு வாங்குனா, ஒண்ணு ப்ரீ)

- நிதித்துறை அமைச்சகம், நீதித்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பு போன்றவை கூறிய அறிவுரைகளை மீறி ஏலம் நடத்தப்பட்டது. (ம்ம்க்கும். நான் ஒன்றை இங்கு கேட்கிறேன். தொலைத்தொடர்புத்துறையில் மூக்கை நுழைக்க அவர்கள் யார்?!)

இந்த ஏல முறைக்கூட்டினால்(!), ஒரு தமிழன் இந்திய அளவில் பெருமையடைந்துள்ளான். 1.77 லட்சக்கோடி என்று சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள அவனை நினைத்து ஒவ்வொரு தமிழனும் பெருமையடைய வேண்டும்.

---

நான் என்ன நினைக்கிறேன் என்றால், 1.77 லட்சக்கோடிகள் அந்த ஏலத்தில் அரசு சம்பாதித்திருக்கலாம். ஆனால், குறைவாக சம்பாதித்துள்ளது. முறைக்கேடு சில ஆயிரக்கோடிகள் இருக்கலாம். யார் யாருக்கு எவ்வளவு போனதோ? இருந்தாலும், 1.77 லட்சக்கோடியும் ஒரு குரூப் சம்பாதித்திருக்குமா? என்பது சந்தேகம் தான்.

ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. ஒரு வீட்டில் திருட்டு போகிறது. திருடன் வீட்டில் இருந்த நகைகளையும், பணத்தையும் கொள்ளை அடித்து சென்று விட்டான். போலீஸ் விசாரணை நடத்துக்கிறது. வீட்டுக்கார அம்மாவிடம் எவ்வளவு நகை, பணம் வீட்டில் வைத்திருந்தீர்கள் என்று கேட்கிறார்கள். அதான் திருட்டு போய்விட்டதே! எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம் என்று வீட்டுக்கார அம்மா பெருமைக்காக, ஒவ்வொன்றையும் கூட்டிக்கூட்டி சொல்கிறார். இது அடுத்தநாள் செய்தித்தாளில் வருகிறது. செய்தியை படித்த திருடன், கடுமையான கோபமும், வருத்தமும் கொள்கிறான். நாம் அவ்வளவு அடிக்கவில்லையே என்று.

நம் நாட்டிலும் சிலர், அந்த 1.77 லட்சக்கோடியை கேட்டு இவ்வுணர்வை அடைந்திருப்பார்கள்!

.

Friday, September 24, 2010

அயோத்தி வழக்கு - வரலாறும் வருங்காலமும்

அயோத்தி இந்தியாவின் இதயப்பகுதியில் இருப்பதாலோ என்னவோ, அங்கு விழுந்த அடி காலத்திற்கும் இந்தியாவின் தேகமெங்கும் நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வேண்டுமானால் 1992 நிகழ்வு, பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கலாம். ஆனால், அடிப்படை பிரச்சினை 1885 யிலேயே வேர் விட தொடங்கிவிட்டது.



இந்து மத நம்பிக்கைபடி அயோத்தி, தசரதன் ஆண்ட நகரம். ராமர் பிறந்த மண். தற்போது இங்கு இருக்கும் பாபர் மசூதி, முகாலய அரசர் பாபரின் தளபதி மிர் பஹியால் கட்டப்பட்டது. அவரை இங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதியை கட்டினாரா என்பது இந்தியாவிற்கு தலைவலியை கொடுக்கும் சர்ச்சைக்குரிய கேள்வி. பதிலுக்கு மொத்த நாடும் காத்திருக்கிறது.

1885 இல் ரகுபர் தாஸ் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அயோத்தியில் பாபர் மசூதிக்கு பக்கமிருக்கும் அவருடைய நிலத்தில் ஒரு திண்டு (திண்ணை போன்ற மேடை) இருந்தது. அது தான் ராமர் பிறந்ததாக நம்பப்பட்டு வந்த இடம். அதில் கோவில் கட்ட அனுமதியளிக்கும் படி ஒரு வழக்கு தொடர்ந்தார். இடம் அவருடையதாக இருந்தாலும், பக்கத்திலேயே மசூதி இருப்பதால் கோவில் கட்ட அனுமதிக்க முடியாது என்று ஃபைசாபாத் துணை நீதிபதி தீர்ப்பளித்தார். இதே வழக்கு ஃபைசாபாத் மாவட்ட நீதிபதியிடம் செல்ல, அவரும் அனுமதி மறுத்தார். “என்னத்தான் இந்துக்களின் புனிதத்தலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டு இருந்தாலும், இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கட்டும்” என்றார் அந்த ஆங்கிலேயே நீதிபதி சம்பியர்.

பிறகு இரு மதத்தினரும் இந்த இடத்தில் வழிபாடு நடத்தி வந்தனர்.

1934இல் ஒரு பசு கொல்லப்பட்டதால் உருவான கலவரத்தில் மசூதி தாக்கப்பட்டது. அரசே அதை சரி செய்தும் கொடுத்தது.

எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது. 1949 இல் மசூதிக்குள் ஒரு ராமர் சிலை வைக்கப்பட்டது. யார் வைத்தது? எப்படி வைக்கப்பட்டது? தெரியாது. ஆனால், அதற்கு இந்துக்கள் கூட்டம் கூடியது. பூஜைகளும் நடத்தப்பட்டது. பிறகு கூட்டம் தடுக்கப்பட்டு, மசூதி பூட்டப்பட்டாலும், அந்த சிலை வெளியே எடுக்கப்படவில்லை. அந்த சிலையை வெளியே எடுக்க, யாருக்கும் தைரியம் வரவில்லை. அப்போதைய பிரதமர் நேரு ஆணையிட்டும், யாரும் எடுக்க தயாராக இல்லை. அந்த ஊர் மாஜிஸ்ட்ரேட், “என்னை வேலைவிட்டு போக சொன்னாலும் சொல்லுங்க, அந்த சிலை எடுக்க சொல்லாதீங்க” என்றார்.

ஃபைசாபாத் கமிஷனர் அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த சிலையை தற்சமயம் எடுப்பது சரிப்பட்டு வராது. கொஞ்ச நாள் பொறுப்போம். எல்லாம் அடங்கிய பிறகு முடிவெடுப்போம்.

அவர் சொன்னது போலவே சில காலம் ஏதும் பிரச்சினை இல்லாமல் சென்றது. 1949 இல் நகர மாஜிஸ்ட்ரேட் ஆணையின்படி, அந்த இடம் நகராட்சி சேர்மனால் கையகப்படுத்தப்பட்டது.

திரும்ப 1950 இல் கோபால் சிங் என்பவர் மசூதிக்குள் ராமர் சிலைக்கு பூஜை செய்ய அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும், உள்ளூர் பூசாரி ஒருவர் மட்டும் உள்ளே தினமும் சென்று வர அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டில் வழங்கப்பட்ட இன்னொரு வழக்கின் தீர்ப்பில், “இந்த மசூதி முஸ்லீம்களால் பல ஆண்டு காலம், வழிப்பாட்டுக்காக பயன்பட்டு வந்ததாகவும், அது ராமரின் வழிப்பாட்டு தலமாக இருந்ததில்லை எனவும்” கூறப்பட்டது. ராமர் சிலை ரகசியமாக, தவறாக உள்ளே வைக்கப்பட்டதாக அந்த தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டது.

1955 இல் அந்த இடத்திற்கு உரிமை கோரி நின்மோஹி அஹாரா என்பவரும், மொகமது ஹசிம் என்பவர் தலைமையில் ஐந்து முஸ்லிம்கள் அதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு தீர்ப்பளித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், தற்போது நிலவும் நிலையிலேயே நீடிக்குமாறு தீர்ப்பளித்தனர். பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆறு மாதத்தில் ஒரு முடிவு கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறினாலும், ஒன்றும் நடக்கவில்லை.

1961 இல் ஹசிம் இடத்தை முஸ்லீம்களிடம் திரும்ப வழங்க கோரி இன்னொரு வழக்கு தொடர்ந்தார். 1964 இல் இதை பற்றிய அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கிற்கு தீர்ப்பு நாள் குறிக்கப்பட்டது. 1968 இல் அந்த இடத்திற்கு ஒரு பொறுப்பாளரை நீதிமன்றம் நியமித்தது. ஆனால், 1971 இல் இன்னொரு வழக்கு தொடரப்பட்டதால் அவருக்கு வேலை இல்லாமல் போனது.

1983 இல் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த பிரச்சினையை பெரியளவில் எடுத்த செல்லும் வரை, அந்த வழக்கு கண்டுக்கொள்ளப்படவில்லை. பிரச்சினையின் தீவிரம் கூட கூட, ஃபைசாபாத் நீதிமன்றம் 1886இல் அந்த இடத்தை இழுத்து மூடியது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டை சந்தித்து ராம தரிசனத்திற்கு அனுமதி கோர, அதற்கு அவர் வழங்கிய ஆணை, கடும் சூட்டை கிளப்பியது. கலவரம் ஆரம்பித்தது.

நீதிபதி பாண்டே கூறியது என்னவென்றால், “இருதரப்பையும் விசாரித்ததில், அந்த இடத்தை திறந்து விடுவதாலும், சிலைகளுக்கு பூஜை செய்வதாலும் முஸ்லீம் மக்களுக்கு எந்த பிரச்சினை இல்லையென்று தெரிகிறது. திறந்துவிடுவதால் ஒன்றும் வானம் இடிந்து விழ போவதில்லை”.

இதை தொடர்ந்து வக்பூ வாரியமும், பாப்ரி மஸ்ஜித் செயல் குழுவும் அலாகாபாத் நீதிமன்றத்திற்கு சென்றனர். வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மதவாதிகளுக்கு இது முழு நேர தொழிலானது. கரசேவகர்கள் பிஸியானார்கள். 1990 இல் முலாயம் சிங் ஆட்சியில், கரசேவகர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தப்பட, இதை பிரச்சினையாக்கி பாரதீய ஜனதா உத்திரப்பிரதேசத்தில் 1991 ஆட்சியை பிடித்தது. பாஜக முதல்வர், மசூதியை சுற்றி அமைந்துள்ள இரண்டே முக்கால் ஏக்கரை, கோவில் கட்டுவதற்காக கையகப்படுத்தினார். பாப்ரி மஸ்ஜித் செயல் குழு அப்படியேதும் கட்டப்படாமல் இருக்க தடைக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

1992இல் பாஜக தலைமையின் முன்னிலையில் மசூதி தகர்க்கப்பட்டது. இந்தியாவே ஆட்டம் கண்டது. கல்யாண் சிங் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தை சுற்றி 67 ஏக்கர், மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு, இந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு முன்பு, ராமர் கோவில் இருந்ததா? என்று கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நடந்த விசாரணையின் முடிவில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. தற்போது தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு, அதன் மேல் முடிவெடுக்க இம்மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் கூடுகிறது.

---

வழக்கின் தீர்ப்பு, அங்கு ராமர் கோவில் இருந்ததா இல்லையா என்பதை குறித்தே அமையும். தீர்ப்பையொட்டி கலவரம் ஏற்படலாம் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், வழக்கின் முடிவு எப்படி இருந்தாலும், பாதிக்கப்பட்ட அணி மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் செல்லும். முடிவில், அதுவும் இழுக்கப்பட்டு இழுக்கப்பட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை அறிய, நாமெல்லாம் இருப்போமா என்பதே சந்தேகம் தான்.

ஒரு சாதாரண இடப்பிரச்சினையாக இதை எடுத்துக்கொண்டால், என்னத்தான் முன்பு ராமர் கோவில் இருந்தாலும், 400 ஆண்டுகளுக்கு மேலாக மசூதி இருப்பதால், அதில் கோவில் கட்ட சட்டரீதியாக இடமில்லை. இல்லாவிட்டால், இப்போது நாம் இருக்கும் இடமெல்லாம் நமக்கில்லாமல் போகலாம். இது என் மூதாதையர் இடம், அது என் மூதாதையர் இடம் என ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள்.

இப்பிரச்சினை பெரிதாக காரணம், அரசியல்வாதிகளே. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, இது ஒரு முக்கிய காரணம். ஆனால், முன்பு இருந்தது போல தற்போது மக்களிடம் இதற்கு ஈடுபாடு அதிகமில்லை. அதே சமயம், பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, அப்போதைய தொழிலதிபர்களும் காரணமாக இருந்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், தொழில் சூழல் நன்றாக அமையும் என்று ஒரு நம்பிக்கையிருந்ததால், அவர்களது ஆதரவு இருந்தது. ஆனால், தற்போது தொழிலதிபர்களின் பிரதிநிதியாக பிரதமராக செயல்படுவதால், காங்கிரஸிற்கு அவர்களது முழு ஆதரவும் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், மதரீதியாக பிரச்சினை ஏற்பட்டு, சுமூகமான தொழிற்சூழல் கெட தொழிற்துறை விரும்பாததால், அவர்களை காப்பதற்காக, காங்கிரஸ் இப்பிரச்சினையை தள்ளிப்போடவும், முக்கியத்துவம் கொடுக்காமல் கண்டுக்கொள்ளாமலும் இருக்கவே முயலும். ஏன், பாஜகவும் இதை பெரிதாக பிரச்சினையாக்காது என்றே கருதப்படுகிறது.

எப்படியோ, இவ்வழக்கின் தீர்ப்பில் நடுநிலைமை சாத்தியம் இல்லை. தலைவலியாகத்தான் இருக்கப்போகிறது. இந்திய நீதித்துறையின் பெரும் பிரச்சினையான கால விரயமே, இப்பிரச்சினையை காக்கக்கூடும். தீர்ப்பு வழங்கப்போகும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெறுவதால், அதன் பிறகு உடனே தீர்ப்பு வழங்க முடியாது. அச்சமயம் விசாரணை திரும்ப முதலில் இருந்து நடைப்பெறும்.

நாமும் இன்னும் சில பல ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.

பின்குறிப்பு - இணையத்தில் பல்வேறு தளங்களில் வாசித்ததை பதிந்திருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால் குறிப்பிடவும்.

.

Thursday, July 1, 2010

அரசுக்கெதிரான ஒரு தனிமனித போராட்டம்

கர்நாடக சட்டசபை கடந்த இரண்டு நாட்களாக அமளிதுமளிபடுகிறது. காரணம், ஒருவருடைய ராஜினாமா கடிதம். அரசு துறைகளில் இருக்கும் லஞ்ச மற்றும் இதர சீர்கேட்டினை விசாரிக்க இருக்கும் அமைப்பின் தலைவருடைய ராஜினாமா கடிதம். பாஜக அரசை தவிர கவர்னர், எதிர்க்கட்சிகள், மக்கள் என அனைவரும் ராஜினாமாவை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகளின் இந்த அக்கறைக்கு அரசியல் காரணங்கள் இருப்பினும், நடுநிலையாளர்களின் வருத்தம் - இருக்கும் சொற்ப நம்பிக்கைகளையும் பாழாய் போன அரசியல் காலி செய்கிறதே என்பது தான்.

---

’லோக் அயுக்தா’ என்றொரு அமைப்பை மொரார்ஜி தேசாய், அவருடைய ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தினார். அதன் முக்கிய நோக்கம், லஞ்ச முறைக்கேட்டை கண்டறிவது. லோக் அயுக்தா என்றால் ‘மக்கள் தூதுவன்’ என்பது போன்ற அர்த்தம் வரும். இந்த அமைப்புக்கான சட்டத்தை ஒவ்வொரு மாநிலமும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் ஒரு லோக் அயுக்தாவை நியமிக்க வேண்டும். ஒரு முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி, இதன் தலைவராக இருப்பார். அவரும் ‘லோக் அயுக்தா’ என்று தான் அழைக்கப்படுவார். இவரை நியமிக்கும் அதிகாரம், மாநில ஆளுனருக்கு உண்டு. ஒரு மாநிலத்தின் முதல்வர் முதற்கொண்டு கடைநிலை அரசு ஊழியர்கள் வரை, லோக் அயுக்தாவின் விசாரணை வட்டத்திற்குள் வருவார்கள்.

கேட்க நன்றாக இருந்தாலும், விசாரணை மற்றும் அறிக்கை வரை தான் இவர்களது அதிகாரம். அதற்கு மேல் தண்டிக்கும் அதிகாரமெல்லாம் இவர்களுக்கு கிடையாது.

நான் தமிழ்நாட்டில் இப்படி ஒரு வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை. பெங்களூர் செய்திதாள்களில் அடிக்கடி இது சம்பந்தமான செய்திகள் வரும். இங்கு லோக் அயுக்தாவாக இருப்பவர், 69 வயதான முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி - சந்தோஷ் ஹெக்டே. மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக திகழும் அளவுக்கு, பல விஷயங்களை செய்திருப்பவர். உதாரணத்திற்கு சில.



---

அந்த அன்னைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மணி இரவு 2. அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றால், கண்டுக்கொள்ள யாருமில்லை. ஹெக்டேவுக்கு தொலைபேசி எண்ணை சுழற்றினார். ”அய்யா, நீங்க சொல்லுங்கய்யா... கேப்பாங்க...”. ஹெக்டேவுடைய வேலை இதுவல்ல. ஆனாலும் அந்த மருத்துவமனைக்கு போன் போட்டார். ஒரே போன். அடுத்த சில மணித்துளிகளில், மருத்துவர்கள் அந்த பெண்ணின் குடிசைக்கு முன்பு நின்றார்கள்.

ஏதோ அதிகாரமில்லாதவர்களை மட்டும் பிடித்து மிரட்டுபவரல்ல இவர். கோலார் எம்.எல்.ஏ.வையும் லஞ்சம் வாங்கும்போது, கையும் களவுமாக பிடித்திருக்கிறது இவருடைய அணி. அவ்வளவு ஏன், போன வருடம் பாராளுமன்றத்தில் 17 முக்கியமான மசோதாக்களை 13 நிமிடத்தில் தாக்கல் செய்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் மீதே கோபக்கனலை வீசினார். காரணம் - லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் கறைப்படிந்த கரங்களை கழுவ வழி ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.

---

சமீபத்தில் இவர் வாளை சுழட்ட ஆரம்பித்த இடம் - பெல்லாரி் கனிம சுரங்கத் தொழிலில். பெரிய இடம் தான். ஒரு மாநிலத்தின் ஆட்சியையே தொங்கலில் வைக்கும் அளவுக்குக்கான செல்வாக்கு படைத்தவர்களுக்கு எல்லாமே சட்டவிரோதம் தான். எல்லாவற்றையும் விசாரித்து என்னதான் அறிக்கையை அரசுக்கு அனுப்பினாலும், பலன் தெளிவான பூஜ்யம். திரும்ப திரும்ப விசாரித்து அனுப்பினாலும், பலன் அதே. தவிர, இவருக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளுக்கு பலவிதமான நெருக்கடிகள். இவர் தவறு செய்த அரசு அதிகாரி ஒருவரை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பினால், சில நாட்களில் சஸ்பென்சன் தடை செய்யப்பட்டு, ஜாலியாக சீட்டில் அமர்ந்திருப்பார் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். இவர் அரசிடம் வைத்த கோரிக்கைகள் எதையும் சட்டை செய்யவில்லை அரசு.

பொறுத்தார். பார்த்தார். ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டார்.

“என் பேச்சுக்கு கட்டுப்பட்டு, நேர்மையுடன் எனக்கு கீழே வேலைப்பார்க்கும் அதிகாரிகளை என்னால் காப்பாற்ற முடியாவிட்டால், அவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்க நான் தகுதியானவன் அல்ல. அரசு வீட்டுக்காகவும், சிகப்பு விளக்கு பொருத்திய காருக்காகவும் மட்டும் இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன்.”

பதவியில் இருந்து விலகினாலும், தனது சமூக பணிகள் தொடரும் என்கிறார் ஹெக்டே.

இவர் பிரஸ் மீட் வைத்ததை பார்த்து தலைமறைவான முதல்வர் எடியுரப்பா, அடுத்த நாள்தான் வெளியே வந்தார். ”ராஜினாமா முடிவை பரிசீலனை செய்ய கேட்பீர்களா?” என்ற கேள்விக்கு, முதல்வரின் பதில் - “நான் அவருடைய முடிவை மதிக்கிறேன்.”

நல்லா மதிச்சீங்க!

---

மக்கள் பிரச்சனைகளை உடனே தீர்த்துவைப்பது போல் ஒரு படம் அமைந்தாலே, அதை பேண்டஸி என வகைப்படுத்திவிடுகிறோம். அந்த அளவில் தான், தீர்வுகளை நோக்கிய நம் நம்பிக்கை இருக்கிறது. எப்பொழுதாவது சின்னதாக ஒரு நம்பிக்கை பூக்கும். அதையும் பூத்து மலர்வதற்கு முன்பே பிடுங்கி ஏறிய சிலர் தயாராக இருக்கும் வரை, நமக்கு உடனடி நியாய தீர்வென்பது பேண்டஸி தான் போலும்.

.

Thursday, June 24, 2010

சில ’புரியல’கள்



வயசு பசங்க, ஒரு வயசு பொண்ணப்பார்த்து, ‘சூப்பர் பிகர்’ என தங்களுக்குள் பேசிக்கொள்வது ஆணாதிக்கமா?

---

தம் அடிப்பவனும், தண்ணி அடிப்பவனும் சமூக ஒழுக்கத்தைப் பற்றி பேசலாமா? கூடாதா?

---

வாதம் செய்கிறேன் என்று வாய்ப்பே கொடுக்காமல் வகுந்தெடுப்பது பாசிசமா? இல்லையா?

---

அவனவன் அவன் வேலையையும், வீட்டையும் ஒழுங்காக பார்த்துக்கொண்டாலே, சமுதாயம் அதுவா முன்னேறும் என்கிறார்களே, உண்மையா?

---

ராவணன் பிராமணன் என்றும் வாசித்திருக்கிறேன். ராவணன் திராவிடன் என்றும் வாசித்திருக்கிறேன். எது உண்மை? இரண்டும் உண்மையா?

---

ராமரை கும்பிட்டால், ராமாயணம் வெறும் கதை எனக்கூறுபவர்கள், ராவணனை வெறும் படமாக பார்க்கவிடாமல், ராமாயண அரசியலை ஏன் உள்ளே இழுக்கிறார்கள்?

---

ஹீரோயிச ராவணன், கிளாமர் சீதை, சூழ்ச்சிக்கார ராமன், சரக்கடிக்கும் அனுமர் என இருந்தும் திராவிட நாத்திகர்கள் ஏன் மணிரத்னத்தை ரவுண்ட் கட்டுகிறார்கள்? அதற்கேற்ப காரணங்களை எப்படி பிடிக்கிறார்கள்?

---

முதலாளித்துவம் கெட்ட சொல்லா? முதலாளிகள் அனைவரும் கெட்டவர்களா?

---

நல்ல முதலாளிகள் யார் யார்? அப்படி யாருமே கிடையாதா? நல்ல முதலாளி ஆவது எப்படி?

---

நமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியும் கெட்டவரா? அவர் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டே, அவரையோ, அவரை போல சிந்தாந்தம் கொண்டவர்களையோ கெட்ட விதமாக விமர்சிப்பது சரியா?

---

முதலாளிகளையும், அவர்கள் தரும் சம்பளம், இன்னபிற வசதிகளையும் உதறி தள்ளிவிட்டு நியாயம் பேசுவதுதான் சரியாமே?

---

எடுக்கப்படும் சினிமா அனைத்திலும் நியாயமான சமூக அரசியல் தீர்வுகளை எதிர்ப்பார்ப்பவர்கள், பொழுதுபோக்கிற்கு நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ எங்கு செல்வார்கள்?

---

பொதுவுடமை பேசும் பதிவர்கள் ஏன் தங்கள் பதிவுகளை முழுதாக ரீடரில் காட்டுவதில்லை?

---

பைரேட்டட் மைக்ரோசாப்ட் மெஷினில், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து, தாராளமயமாக்கத்தை எதிர்த்து கூகிள் ப்ளாக்கரில் பதிவெழுதி, அதையே அடோப் பிடிஎப் பைலாகவும் மாற்றி நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது சரியா?

---

இத்தனை இஸங்களை தெரிந்துக்கொண்டு, சுற்றி இருப்பவர்களை ரப்ச்சர் பண்ணி வாழ்வது சிறந்ததா? இது பற்றி எதுவும் தெரியாமல் சாதா மொக்கைகளைப் போட்டு ஜாலியாக வாழ்வது சிறந்ததா?

.

Wednesday, June 23, 2010

செம்மொழி மாநாடு துவக்கமும் கணேஷின் முடிவும்

கணேஷ் போன் பண்ணினான். வேலை முடிந்துவிட்டதால், சீக்கிரம் வீடு வந்துவிட்டானாம்.

“சீக்கிரமே வந்து வீட்டுல என்ன பண்ணிட்டு இருக்க?”

“செம்மொழி மாநாடு டிவில போட்டுட்டு இருக்காங்க. அதான் பாத்துட்டு இருக்கேன்.”



என்னவோ தெரியவில்லை. கணேஷ் இந்த மாநாடு விஷயத்தில் ரொம்பவும் கவனம் செலுத்துகிறான். இந்த வாரயிறுதியில் கோவை செல்வதாக கூட ஜடியா இருப்பதாக நேற்று சொல்லியிருந்தான்.

வெறுமே ”ம்” என்றேன்.

“ஏன் இத நடத்துறாங்க?”

எனக்கு தெரிந்ததை சொன்னேன். ரெண்டு மூன்று நாட்களாக வாசித்துக்கொண்டிருந்த தமிழ் பெருமைகளையும், இந்த மாநாடு மூலம் நடக்க போவதாக சொன்ன நன்மைகளையும் சொன்னேன்.

“இத யாரு நடத்துறா?”

“நம்ம முதல்வர் தாத்தா தான். இதுவரை இவர் நடத்தியதில்லை. முதல்முறையாக நடத்துகிறார்”. கூடுதல் தகவல்களையும் கொடுத்தேன்.

”மேடையில யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?” டிவி பார்த்துக்கொண்டே கேட்டான்.

“யாரெல்லாம்?”

“மதுரை சிங்கம்.”

“அழகிரியா?”

“ஆமாம். அதுக்கு அப்புறம் தாடி வைச்சுக்கிட்டு ஒரு சிங்!”

“சுர்ஜித் சிங் பர்னாலா.”

“அப்புறம் முக்காடு போட்டுக்கிட்டு ஒரு பாட்டி.”

“ம்”

“நெக்ஸ்ட், நம்ம தாத்தா”

“அப்புறம்?”

“தளபதி”

”ஸ்டாலினா? அடுத்தது என்ன கனிமொழியா?”

“ஆமாம்”

என்னால் நம்ப முடியவில்லை.

“அப்புறம் சன் பிக்சர்ஸ்.”

”என்னது கலாநிதி... ச்சே தயாநிதி மாறனா?”

“ஆமாம்.”

உண்மையை சொல்கிறானா? பொய் சொல்கிறானா? தெரியவில்லை. இப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லவும் முடியாது. ஊர் நிலவரம் அப்படியிருக்கிறது. ஆனால் ஒன்று உறுதியாக சொல்ல முடியும். கணேஷ் இந்த வாரம் கோயமுத்தூர் போகவில்லையாம்.

சண்டே ராவணன் போகலாம் என்றிருக்கிறானாம்.

பின் குறிப்பு - கலைஞர் செய்திகள் பார்த்தபோது, கணேஷ் சொன்னது முழுவதும் உண்மை இல்லை என்று தெரிந்தது. பிற அனைத்து குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணி தலைவர்களும் இருந்தனர்.

.

Thursday, April 29, 2010

ஆகட்டும் பார்க்கலாம்

சன் டிவியில் இருக்கும் போது, ரபி பெர்னார்டுக்கு பிரச்சினை வந்து ரபி விலகியப் பிறகு, அந்த இடத்தில் வந்தவர் வீரபாண்டியன். ஆரம்பக் கால ரபி அளவுக்கு இல்லாததால், இவர் மேல் பெரிய அபிப்ராயம் இல்லை. ’நேருக்கு நேர்’ நிகழ்ச்சி பார்ப்பதும் குறைந்து, ஒரு கட்டத்தில் நின்று விட்டது.

சமீபத்தில் நூலகத்தில் ஒரு புத்தகம் பார்த்தப்போது தான், இவரைப் பற்றி மேலும் சில விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன். இவருடைய தந்தை தியாகி திருநாவுக்கரசு அவர்கள் காமராஜரின் நண்பர். காமராஜருக்காக களத்தில் இறங்கி பல வேலைகள் செய்தவர். காமராஜர் இறந்த பிறகு, அரசியலில் இருந்து விலகிவிட்டார். வீரபாண்டியன் பல்வேறு வானொலிகளில், அரசியல் நிகழ்ச்சிகள் நடத்திய பின்னர், சன் டிவிக்கு வந்திருக்கிறார்.

தந்தைக்கு காமராஜருடன் இருந்த நெருக்கத்தால், சிறுவயதில் இருந்தே வீரபாண்டியனுக்கு காமராஜரிடம் அறிமுகம் இருந்திருக்கிறது. சிறுவனாக இருக்கும் போது, மேடைக்கு சென்று காமராஜருக்கு மாலை அணிவித்திருக்கிறார். கல்லூரி படிக்கும்போது, அங்கு வருகை வந்த காமராஜர் இவர் பெயரை ஞாபகமாக சொல்லி அழைத்திருக்கிறார். இப்படி காமராஜர் மேலான தாக்கம் தந்தை, மகன் இருவருக்கும் இருந்திருக்கிறது.

இவர் தந்தை இவரிடம் வைத்த ஒரு வேண்டுகோள், காமராஜர் பற்றிய தகவல்களை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவது. இவரும் தந்தையின் சொல்லுக்கேற்ப, தந்தையிடம் கேட்டது, காமராஜரிடன் பழகிய தலைவர்களிடன் கேட்டது அனைத்தையும் தொகுத்து ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதை தனது தந்தைக்கு அர்பணித்திருக்கிறார்.



‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜரின் பஞ்ச் டயலாக். புத்தகம் முழுக்க தகவல் தொகுப்புகள். ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து இரண்டு மூன்று பக்கங்கள் இருக்கிறது. தகவல்கள் விலாவாரியாக இருக்கிறது. இவையெல்லாம் உண்மை என்று அடித்து சத்தியம் செய்திருக்கிறார். ஒவ்வொன்றையும் சொன்னது யார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். கலைஞர், மூப்பனார் என பல தலைவர்கள் இப்புத்தகத்திற்கு பங்களித்திருக்கிறார்கள். சொந்த கட்சியினர் கொள்கைக்கு புறம்பாக இருந்தால் அவர்களை கண்டிப்பதும், மாற்று கட்சியினரின் மக்கள் நல காரியங்களுக்கு அவர்களை பாராட்டுவதும் என காமராஜர் மற்ற தலைவர்களுடன் பழகிய விதம் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

---

காமராஜர் ஒரு கூட்டத்திற்கு சென்றுக்கொண்டிருந்தப்போது, பக்கத்தில் இருந்த மின்சார கம்பத்தில் ஏறி நின்றுக்கொண்டு ஒருவர், “தலைவர் வாழ்க!” என்று அவரை பார்த்து கத்தியிருக்கிறார்.

இதை கவனித்த காமராஜர், அவரை பார்த்து, “ஏலேய் கிறுக்கா! நான் வாழுறது இருக்கட்டும். நீ செத்துறாதே. கீழே இறங்கி வா...” என அழைத்திருக்கிறார்.

கீழே வந்து மாலை அணிவித்தவர் பெயர், தொழில் எல்லாம் விசாரித்து, தையல்காரர் என்று தெரிந்துக்கொண்டார். செல்லும்போது, “ஒழுங்கா துணியை தையி, இப்படி தொங்காதே!” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

---

இது கலைஞர் சொன்னது.

ஒருமுறை சட்டசபையில், இந்தி எதிர்ப்பு பற்றிய விவாதத்தின் போது, ஒரு திமுக எம்.எல்.ஏ (யாருன்னு மறந்து போச்சு!) சொன்னாராம். ”தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஹிந்தி சொல்லிக்கொடுக்கக்கூடாது. ஆங்கிலமும் சொல்லிக்கொடுக்கக்கூடாது. தமிழ் மட்டும் தான்” என்று. கேட்டுக்கொண்டிருந்த அன்றைய முதல்வர் காமராஜர், எதிர்க்கட்சி தலைவர் அண்ணாவை, தன்னருகில் அழைத்தார். கலைஞரும் உடன் சென்றாராம்.

அண்ணாவிடம் காமராஜர் சொன்னது,

“நான் என்ன தமிழுக்கு எதிரியா? பள்ளிக்கூடத்துல ஆங்கிலம் சொல்லிக்கொடுக்காம எப்படி? அப்புறம், அதுக்கு பதில் ஹிந்தி அல்லவா வந்து உட்கார்ந்துவிடும்?”

அதைக்கேட்ட அண்ணா, பின்பு காரில் செல்லும்போது கருணாநிதியுடம் கூறியது,

“திமுக கொடி தான் பிடிக்கவில்லை என்றாலும், அவருக்கு உள்ள தமிழ் உணர்வு நம்மிடம் உள்ளது போன்றது தான்.”

---

சாப்பாடு கூடை தூக்கும் ஒரு பாட்டியை காமராஜர் ஒரு கூட்டத்தில் சந்தித்தார். அந்த பாட்டி காமராஜரிடம் தனது நிலையை எடுத்துக்கூறி உதவி கேட்க, அருகே இருந்தவர் அந்த பாட்டிக்கு சிறிது பணம் கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்க மறுத்து, அதற்கு அந்த பாட்டி, “இன்னைக்கு நீங்க கொடுத்திருவீங்க? ஒருநாள் சரி. ஆனா, என்னை மாதிரி ஆதரவு இல்லாதவுங்க நிலை என்னைக்கும் இப்படித்தானே இருக்கும்?” என கேட்க, ”ஆகட்டும் பார்க்கலாம்” என சொல்லி அனுப்பியிருக்கிறார் காமராஜர்.

அலுவலகம் வந்தப்பிறகு அதிகாரிகளை கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். முதியோர்கள் எத்தனை பேர் இப்படி ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள், ஒரு வயதானவருக்கு மாதம் எவ்வளவு செலவு ஆகும் என்றெல்லாம் கேட்டு, மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

---

இப்படி நிறைய தகவல்கள் தொகுப்புக்கள். ஆனாலும், சில புத்தகங்களில் இருக்கும் கதை படிக்கும் உணர்வு இதில் இல்லை. மாறாக, சொன்னவர் பெயர், இடம், முடிந்தளவுக்கு தேதி வாரியாக குறிப்பிட்டு இருப்பதால், நடந்த நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ தொகுப்பாக இருக்கிறது.

வழக்கமா பழைய தலைவர்களின் பெருமையை இப்படி படிப்பது தான். அதுவும் காமராஜரைப் பற்றி சொல்ல வேண்டாம். ”இப்படி எல்லாம் அந்த காலத்துல இருந்திருக்கிறார்களே? இப்பவும் தலைவர்கள்’ன்னு இருக்காங்களே!” என்ற புலம்பல்கள் எல்லாம் இனி தேவையற்றது என நினைக்கிறேன்.

ஓட்டுக்கு காசு வாங்கிற மக்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்ன? மக்கள் மாறிய காலத்தில், தலைவர்கள் மட்டும் அப்படி மாறாமல் இருக்க வேண்டுமா?!

இந்த புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

.

Saturday, March 27, 2010

கார்ட்டூன் - அம்மாவின் சாணக்கியத்தனம்

பெரிதாக்கி காண க்ளிக்கவும்.



செய்தி:

தலைவர் கலைஞருக்குப் பிறகு திமுகவில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. - அழகிரி.

திமுகவின் தலைமை பீடத்தை நிர்வகிக்கும் தகுதியும் திறமையும் ஸ்டாலினுக்கே உண்டு. - வெற்றிகொண்டான்

.

Tuesday, March 23, 2010

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள்

இன்றைய தமிழ் சினிமாவின் நிதி நிலைமை, மூன்று ‘நிதி’களின் கைகளில் தான் இருக்கிறது. கலாநிதி, உதயநிதி, தயாநிதி.

தயாரிப்பாளர்கள் தான் பணம் போட்டு, ஒரு படத்தை எடுத்தாலும், தமிழ் சினிமா அவர்களை முதலாளிகள் போல் நடத்தியதில்லை. நடிகர்கள் வீட்டில் காத்து கிடப்பது, அவர்களது கால்ஷீட்டுக்காக தவிப்பது, பல தலைவலிக்கிடையே படப்பிடிப்பு நடத்துவது, பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிடுவது, லாபம் வந்தால் ஹீரோ, விநியோதர்கள், தியேட்டர் ஓனர்களுடன் பகிர்ந்துக்கொண்டு, அதுவே நஷ்டம் என்றால் மொத்தத்தையும் எடுத்துக்கொண்டு, தூக்கு வரை சென்ற தயாரிப்பாளர்களை கண்டு இருக்கிறோம். விதிவிலக்குகள் ஒரு சிலரே.

இந்த ட்ரெண்ட் ’நிதி’களின் திரையுலக வருகைக்கு பிறகு மாறியிருக்கிறது. அவர்கள் விஷயத்தில் மட்டும்.

---

ஒரு தற்காப்புக்கு படங்களை வாங்கி திரையிட ஆரம்பித்தார் கலாநிதி. அடிமாட்டு விலைக்கு படத்தை வாங்கி, விளம்பரம் செய்து வெளியிட்டு, படம் ஓடினால் சினிமா லாபம், இல்லாவிட்டால் டிவியில் போட்டு சேனல் லாபம் என்பது தான் இவரின் ஆரம்ப திட்டமாக இருந்தது. சன் பிக்சர்ஸின் விளம்பர யுக்தியும், படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங்கும், பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்களையே அசைத்து பார்த்தது.

பல வருடகால தயாரிப்பு அனுபவம் பெற்ற ஏவிஎம், தனது படத்தை சன் பிக்சர்ஸிடம் விற்றது. எந்திரன் தயாரிப்பாளர் பணக் கஷ்டத்தில் மாட்ட, ரஜினி ஷங்கருடன் ஓடி வந்து சந்தித்தது கலாநிதியை. தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த விஜய், தனது படத்தை இவர்களிடம் விற்றுவிட்டு, அவர்கள் சொல்படி தியேட்டர் தியேட்டராக சுற்றினார்.



மக்களிடம் இவர்கள் மேல் இருந்த மயக்கம் குறைந்துவிட்டாலும், இவர்கள் பேனரில் படம் வெளிவந்தால், படத்திற்கு பாஸிட்டிவ் எனர்ஜி கிடைப்பதாக திரையுலகத்தினர் இன்னமும் நம்புகிறார்கள். அப்படியே, படத்தை இவர்களிடம் விற்காவிட்டாலும், படத்திற்கு இவர்களது தயவு முக்கியம் என கருதுகிறார்கள். நல்ல கதைகளில் நடித்துக்கொண்டிருந்த ஜீவா கூட, இவர்கள் விளம்பரத்தில் சொன்ன பொய்யை நம்பிவிட்டாரா என்று தெரியவில்லை. மசாலா கதையை கேட்டு இன்னொரு படமும் நடித்துவிட்டார்.

ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். உண்மையா, பொய்யா தெரியவில்லை. சக்சேனா பண்ணிய போன் காலை ஷங்கர் எடுக்காததால், இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடக்கவில்லையாம். இப்படி உபத்திரவம் இருந்தாலும், வியாபாரத்திற்காக இவர்களை சகித்துக்கொள்ள திரையுலகினர் தயாராகவே இருக்கிறார்கள்.

---

கலாநிதி படம் எடுத்தால் கூட, அது அவர் காசு, அவர் படம் எடுக்கிறார் என நினைப்பவர்கள், உதயநிதி, தயாநிதி விஷயத்தில் அப்படி நினைப்பதில்லை.

ரெண்டு பெரிய வீட்டு பசங்க பண்ணும் செலவுகளாக எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் நினைக்கிறார்கள். காரணம் - கலாநிதி மாறன் ஏற்கனவே பெரிய தொழிலதிபர். படம் எடுக்க தேவையான, நிதி நிலைமை உள்ளவர். மற்ற இருவரின், தந்தைகளும் அரசியல்வாதிகள் மட்டுமே. தொழிலதிபர்கள் அல்ல.

இந்த சின்ன வயசில், இவ்வளவு பெரிய முதலீடுகளுடன் படம் எடுப்பதற்கான அடிப்படை, அரசியலில் சம்பாதித்தது என சாதாரணமாகவே கருதுகிறார்கள்.

---

எனது சின்ன வயசில், பிடித்த ஹீரோ, பிடித்த ஹீரோயின், காமெடி நடிகர் என எனக்கு பிடித்த பல காம்பினேஷன்களில் படம் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பார்ப்பேன். பிறகு, நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் என பிடித்த காம்பினேஷனில் நினைத்து பார்த்திருக்கிறேன். இவரும் அவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அவரும் இவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? என. நீங்களும் நினைத்து பார்த்திருக்கலாம்.

நம்மால் நினைக்க மட்டும் முடிந்ததை செய்துக்கொண்டிருக்கிறார் உதயநிதி. கில்லி மாதிரி இன்னொரு படம் தயாரிக்க முடியுமா? ஏன் முடியாது என குருவி தயாரித்தார். சூர்யா-ரவிக்குமார்-ஹாரிஸ் என ஆதவன் தயாரித்தார்.

நாமெல்லாம் ஒரு படத்தின் பாடல் பிடித்தால், கேசட்டோ சிடியோ யோசித்து வாங்குவோம். இவர் படத்தை வாங்கினார். விண்ணைத்தாண்டி வருவாயா. அதுவும் போட்டிக்கு ஆளில்லாததால், நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு படம் வெற்றிவிழாவிற்கு நாயகன் படமோ, அல்லது ஒரு குருப் போட்டோவோ போட்டு விளம்பரம் வெளியிடுவார்கள். முதல்வன் வெற்றிவிழாவிற்கு, ஷங்கர்-ரஹ்மான்-மாதேஷ் மூவரும் கோர்ட்-சூட்டுடன் உட்கார்ந்திருப்பது போல் விளம்பரம் வந்தது. மற்றபடி, ஹீரோ-ஹீரோயின் இல்லாமல் விளம்பரம் பார்த்தது கிடையாது.

இங்க பாருங்க.



கமல்-ரவிக்குமார் காம்பினேஷனில் அடுத்த படம். கூடிய சீக்கிரம் கலைஞர் டிவியில், கமல் நின்றுக்கொண்டு, நேயர்கள் கேள்விக்கு பதில் சொல்லுவார்.

---

அடுத்து சின்னவர் - தயாநிதி. தொடக்கத்திலேயே, பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் இருந்து படத்தை வாங்கி வெளியிட்டார். அடுத்து, குறைந்த செலவில் ஒரு தமிழ்ப்படம் எடுத்து, நிறைய லாபம் சம்பாதித்தார். வேறு யார் அந்த படத்தை எடுத்திருந்தாலும், படத்தின் நிலை அதோ கதிதான். அடுத்து தயாரிப்பது - தூங்காநகரம். முன்னவர்கள் போல் இல்லாமல், இவர் கொஞ்சம் கதையும் கேட்பது போல் இருக்கிறது.



இது தான் இவர் ஸ்டைல் என்று சொல்லமுடியாத படி, அடுத்து பையாவை வெளியிடுகிறார். அதற்கடுத்தது, அஜித்-கௌதம்-ரஹ்மான் கூட்டணியில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.

தயாரிப்பாளர் சங்க, நடிகர் சங்க எச்சரிக்கையெல்லாம் சட்டை செய்யாமல், அஜித் காலரை தூக்கிவிட்டு கொண்டு துணிச்சலாக இருந்ததற்கு, தயாநிதிக்கு இவர் கொடுத்த கால்ஷீட்டும் ஒரு காரணம் எனலாம்.

---

ரஜினி, கமல், விஜய், அஜித் என நடிகர்களின் கைகளில் இருந்த தமிழ் சினிமா, இன்று இந்த மும்மூர்த்திகளின் கைகளில் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. விஜய், தனுஷ், விஷால் ஆகியோரை தியேட்டர், தியேட்டராக சுற்ற வைத்தவர்கள், மற்றவர்களையும் விட போவதில்லை. அட்லீஸ்ட், சன் டிவி, கலைஞர் டிவி ஸ்டுடியோக்களுக்காவது வர வைத்துவிடுவார்கள்.

மக்கள் ஒரு விஷயத்திற்காக சந்தோஷப்பட வேண்டும். இவர்களும் அரசியலுக்கு வந்துவிடாமல், சினிமாவிற்கு வந்தார்களே என்று.

பணம் வரவும் செய்யணும், போகவும் செய்யணும் அல்லவா? அது தானே, பணபுழக்கத்திற்கு வழி செய்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும். அந்த வகையில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இவர்கள் சேவை, இன்னமும் தேவை.

.

Friday, March 19, 2010

பெங்களுர் தேர்தல்

பெங்களுரில் விரைவில் மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகிறது. ஏற்பாடு என்றது, தேர்தல் கமிஷன் செய்வதை சொல்லவில்லை. வேட்பாளர்கள் பல விஷயங்கள் செய்து வருகிறார்கள். உதாரணமாக, நேற்று முன்தினம் கர்னாடகாவில் ஒரு விசேஷம். உகாதிக்கு அடுத்த நாள், கறி சோறு சமைத்து சாப்பிடுவார்களாம். அதனால், சில இடங்களில் வீட்டுக்கு வீடு மட்டனும், சிக்கனும் காலையிலேயே வந்திருக்கிறது.

இது ஒருபுறம் என்றால், இளைஞர்களை வளைத்துப்போட, ஐபிஎல் டிக்கெட்டுகளை சில வேட்பாளர்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆண்களுக்கு சரக்கு, பெண்களுக்கு சேலை என்று ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி தேர்தல் பரிசு. எல்லா ஊரும் ஒரே மாதிரி தான் இருக்கு.

---

ஜனதா தளம், தனது வேட்பாளர்களுக்கு ‘பிரச்சாரம் செய்வது எப்படி?’ என்று வகுப்பு நடத்தியிருக்கிறது. ஒழுங்காக சட்டையில பட்டன் போட்டுட்டு போ, படிச்சவன் இருக்குற இடத்துல வெடி போடாதே; அது உனக்கே வெடிச்சிரும், எவன் என்ன திட்டுனாலும் சிரிச்சிட்டு வந்துரு என பல அரசியல் பாலப்பாடங்களை நடத்தியிருக்கிறார்கள் குமாரசாமியின் தலைமையிலான கட்சியின் தலைவர்கள்.

ஏதாவது பதிப்பகம் “30 நாளில் அரசியல்வாதி ஆவது எப்படி?”, “நீங்களும் பிரச்சாரம் செய்யலாம்” போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிட்டால், இவர்களின் சிரமத்தை குறைக்கலாம்.

---

தேர்தல்’ன்னா போதும். எங்கிருந்து தான் இவ்ளோ பவ்யம் வருமோ?



நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா.

.

Saturday, October 24, 2009

ரஜினிகாந்தும் விஜயகாந்தும்

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிரடி ஆட்டம் போட்டு கொண்டிருந்த போது, விஜயகாந்த் மதுரையில் அவருடைய அரிசி மில்லில் விரலாலயே மூட்டையை குத்தி அரிசி தரம் பார்த்துக் கொண்டிருந்தார். ‘ஆசை அறுபது நாள்’ படத்தின் 50வது நாள் விழாவிற்கு மதுரை வந்த ரஜினியை பாதுகாப்பாக கவனித்தவர் அப்போதைய விஜயராஜ். அவ்விழாவில் சினிமா நட்சத்திரங்களை பாதுகாத்த விஜயராஜை பாராட்டிய ரஜினி, அவரிடம் சொன்னது - “நீங்க பார்க்குறதுக்கு என்னை மாதிரியே இருக்கீங்க விஜி!”

மதுரையில் விநியோகஸ்தராக இருந்த மர்சூக், ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க எண்ணியிருந்தார். அவரோ ரொம்ப பிஸியாக இருக்க, கால்ஷீட் கிடைக்காத சூழ்நிலை. ரஜினி போல் இருக்கும் விஜயராஜை நடிக்க வைத்தால் என்ன? என்று ஒரு எண்ணம் அவருக்கு வந்தது. விஜயராஜும் ஒத்துக்கொண்டார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த படத்தை கைவிடும் நிலையாகிவிட்டது.

பிறகு, சென்னையில் ஒருமுறை ரஜினியை ப்ரியா படப்பிடிப்பில் மர்சூக்கும் விஜயராஜும் சந்தித்தார்கள். விஜயராஜை திரும்பவும் ரஜினியிடம் அறிமுகப்படுத்திய மர்சூக்கிடம், ரஜினி சிரித்தப்படியே கேட்டது - “அட அச்சு அசலா என்னை மாதிரியே இருக்குறாரே? எனக்கு போட்டியை உருவாக்குறீங்களா?”



அச்சமயம், விஜயராஜுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பெயர் ‘என் கேள்விக்கென்ன பதில்?’. படத்தின் ஹீரோ ரஜினி. விஜயராஜுக்கு கிடைத்த கேரக்டர், ரஜினியின் தம்பி. ஷூட்டிங் ஆரம்பித்து, நாலு நாட்களிலே விஜயராஜ் படத்தில் இருந்து தூக்கப்பட்டார். உண்மைக்காரணம் என்னவோ? ஆனால், ’தமிழ் ஒழுங்கா பேசலை’ என்பது அதற்கு சொல்லப்பட்ட காரணம்.

அப்புறம் விஜயராஜ் ஊருக்கு திரும்பி சென்று, சில காலம் கழித்து மறுபடியும் வாய்ப்பு தேடி சென்னை வந்து, ஆல்பமும் கையுமாக சுற்றியலைந்தார். ஆல்பம் முழுக்க ரஜினி ஸ்டைலில் ஸ்டில்ஸ். ஆல்பத்தை கண்டவர்கள் கேட்டது - ‘கறுப்பா இருந்துட்டா மட்டும் ரஜினி ஆயிட முடியுமா?’.

ஒரு வழியா வாய்ப்பு கிடைத்து ’இனிக்கும் இளமை’ என்ற படத்துல் நடித்து விட்டார். படத்தின் இயக்குனர் எம்.ஏ.காஜா, அவருக்கு ‘அம்ருதராஜ்’ என்று பெயர் வைத்து பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். சில பத்திரிக்கையாளர்கள், ‘இந்த பேரு சரி இல்லைங்க. பார்க்க ரஜினி மாதிரி இருக்காரு. ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு ஒரு பேரு வைங்க’ என்றதால், அப்போதே எம்.ஏ.காஜா அவருக்கு விருச்சிககாந்த், சாரி, விஜயகாந்த் என்று பெயர் வைத்தார்.

அப்புறம் என்ன நடந்தது என்றுதான் தெரியுமே? இப்ப, விஜய்க்கு பிடிக்காட்டி விஷாலுக்கு கதை சொல்ல இயக்குனர்கள் செல்வது போல், அப்போது ரஜினியால் நடிக்க இயலாத படங்களில் இயக்குனர்களின் ஒரே சாய்ஸ் - விஜயகாந்த். விறுவிறுவென வெற்றிகளைக் கொடுத்து, ரஜினி இருந்த அதே முன்னணி நடிகர்களின் வரிசைக்கு வந்தார். நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு நடிகர் சங்க தலைவரானார்.



’நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்திலே கரெக்டா வருவேன்’ என்று ரஜினி டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த போது, விஜயகாந்த் ‘நான் இப்போ வருவேன், அப்போ வருவேன், நேரா வருவேன், சைடுலே எட்டிப்பார்ப்பேன்னுல்லாம் சொல்லமாட்டேன். கண்டிப்பா வருவேன்.’ என்று தடாலடியாக அரசியலில் நுழைந்தார்.

ரஜினி தனது ரசிகர்கள் தனது படத்தை தேர்தலில் பயன்படுத்தியபோது, அதற்கு தடைவிதித்தார். விஜயகாந்தோ, கண்டுக்கொள்ளவில்லை. சுயேட்சையாகவே, அவரது ரசிகர்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்கள். கட்சி ஆரம்பித்து, கொஞ்ச காலத்திலேயே நடந்த தேர்தலிலும் குறிப்பிடத்தக்க ஓட்டு சதவிகிதத்தை பெற்றார். தொடர்ந்து படங்களிலும் நடித்தார். படங்களில் நடித்தாலும், விஜயகாந்தின் முழு பார்வையும் அரசியலில் தான். இந்நேரத்தில் ‘அரசியல், சினிமா - இரண்டு குதிரையிலும் திறமையாக சவாரி செய்கிறார் விஜயகாந்த்’ என்று ஒரு மேடையில் ரஜினி பாராட்டியிருந்தார். ஆனால், அரசியலில் இறங்கிய பிறகு, விஜயகாந்தின் எந்த படமும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



கறுப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்கிற விஜயகாந்துக்கு ஏன் இன்னமும் எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல் பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. யாருக்குக்கிட்ட கேட்க? ரஜினி என்ன சொல்கிறார்? ரஜினியிடம், ஒரு ரசிகர் அரசியல் வெற்றி பற்றி கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் - ‘அதுக்கு பெருந்துணையா இருப்பது நேரமும், சூழலும்.’

தன் ரசிகராக இருந்த ஒருவர், சினிமாவிற்கு வந்து, உச்சத்தை அடைந்து, பிறகு வீழ்ச்சியைக் கண்ட பிறகும், முன்பிருந்தது போல் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராக இருப்பது ரஜினியின் சாதனை. அரசியலில் ஈடுபட சகல தகுதிகளும் கொண்ட தன் அபிமான நடிகரே தயங்கும் போது, தைரியத்துடன் இறங்கி ஆரம்பத்திலேயே ஒரளவுக்கு வெற்றியும் பெற்றது, விஜயகாந்தின் சாதனை.

---

விஜயகாந்த் பற்றிய புத்தகத்தில் நம்ம யுவகிருஷ்ணா (எ) லக்கிலுக், விஜயகாந்தின் சிறுவயது காலம் முதல் தற்போதைய அரசியல் முகம் வரை அவருக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார். படிப்பவர்களுக்கு தாவூ தீராது, டவுசர் கிழியாது என்பது உத்தரவாதம். விஜயகாந்த பற்றி எழுதிய இந்த புத்தகத்தை ஆசிரியர் சமர்ப்பித்து இருப்பது, கலைஞருக்கும் புரட்சித்தலைவிக்கும். புத்தகத்தின் ஆரம்பத்தில் ஆசிரியர் விஜயகாந்திற்கு கொடுத்திருக்கும்
எண்ட்ரி, இதுவரை எந்த படத்திலும் அவருக்கு கிடைத்திராதது.

விஜயகாந்த் பற்றி வந்த தொடர்கள், புத்தகங்கள், செய்திகளிலிருந்து கிடைத்த தகவல்களை கொண்டு சிறப்பான நடையில் வந்திருக்கும் இப்புத்தகம், அவருடன் நெருங்கி பழகியவர்களின் பேட்டிகளின் துணைக்கொண்டு வந்திருந்தால் இன்னும் வேறு சில பரிணாமங்களை தந்திருக்குமோ? சினிமாவில் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டாலும், விஜயகாந்த் அரசியலில் ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கிறார். சினிமாவில் பெற்ற வெற்றியை அரசியலில் பெற விஜயகாந்திற்கும், அதை பற்றியும் புத்தகம் எழுத யுவகிருஷ்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.

புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

.

Wednesday, September 30, 2009

என்ன இது? சிறுபிள்ளைத்தனமா...



நான் முன்பு ஒரு கார்ட்டூன் கண்காட்சிக்கு போனதாக சொல்லியிருந்தேனே? அவர்கள் ஒரு கேலிச்சித்திரப்போட்டி நடத்துகிறார்கள்.

முதல் பரிசு - 1 லட்ச ரூபாய்.

போட்டி?

சோனியா, மன்மோகன் சிங்கை வைத்து கேலிச்சித்திரம் வரைய வேண்டுமாம்!

போட்டி நடத்துபவர்களுக்கு இவர்கள் மேல் என்ன கோபமோ?

---

நேற்று நடந்தது இது.

குஜராத் முதல்வர் மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வருகிறார். காத்திருந்த நிருபர் கூட்டம் ஓடி வருகிறது.

நிருபர்கள்: எங்களுக்காக இரு நிமிடங்கள் ஒதுக்க முடியுமா?

அங்கு வைத்திருந்த மைக்குகளுக்கு முன்னால் வந்து நிற்கிறார். ஒன்றும் பேசவில்லை.

நிருபர்கள்: எதுக்கு அமைதியா இருக்கீங்க?

மோடி: நீங்க தானே இரு நிமிடங்கள் கேட்டீங்க?

நிருபர்கள்: எங்க கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

அதற்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை. சிரித்தபடியே இரண்டு நிமிடங்கள் நிற்கிறார். இரண்டு நிமிடங்கள் கழித்து, ஒன்று கூறாமல் நகர்கிறார்.

---

டெய்லர் ப்ரான்ச் என்பவர் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனுடன் நடத்திய உரையாடல்களை வைத்து வெளியிட்டு இருக்கும் ’The Clinton Tapes: Wrestling History with the President' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கார்கில் யுத்தத்தின் போது இந்திய - பாகிஸ்தான் தலைமைகள் இப்படி கேஷுவலாக பேசிக்கொண்டதாக கிளிண்டன் கூறினாராம்.

இந்தியா - ”பாகிஸ்தான் தோற்கும் நிலையில் இருக்கிறார்கள். அடுத்தக்கட்டமா, அவுங்கக்கிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், நம்ம ஆளுக 30-50 கோடி வரைக்கும் சாவாங்க. நாம பதிலுக்கு, நம்மக்கிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை பயன்படுத்தினா, மொத்த 12 கோடி பாகிஸ்தானியர்களையும் சாகடிச்சிடலாம். போர்லயும் ஜெயிச்சிடலாம்.”

பாகிஸ்தான் - “நமக்கு பிரச்சினையில்லைப்பா... மலைகள் தடுப்பா இருக்குது. இந்தியாவுக்கு தான் கஷ்டம். சமவெளியா இருக்குது”

இப்படித்தான் நானும் குழந்தையா இருக்கும் போது பேசிட்டு இருந்தேன்.

.

Tuesday, September 29, 2009

கலை வாரிசுகள்

ரஜினியும் கமலும் இன்னும் யூத்துகளாவே நடிப்பதற்கு அவர்கள் தான் காரணம். அதாவது, கமலுக்கு காரணம் ரஜினி. ரஜினிக்கு காரணம் கமல். ஒருவர் இளமையாக நடித்துக்கொண்டிருக்க, மற்றொருவரால் வயதானராக நடிக்க முடியாதே! அவர்களின் வெற்றிக்கு எப்படி அவர்களுக்கிடையேயான ஒப்பீடும், போட்டியும் உதவியாக இருக்கிறதோ, மற்ற விஷயங்களுக்கும் இவை காரணமாக இருக்கிறது.

பிரமாண்டமாக படமெடுப்பதாகட்டும், வெற்றிகள் கொடுப்பதாகட்டும், ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் ஆகட்டும் - ஒருவரை மற்றொருவர் பெஞ்ச்மார்க்காக வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் இருவருக்கும் பசங்க இருந்திருந்தால், இந்நேரம் அவர்கள் ஹீரோவாக, இவர்கள் கொஞ்சமாவது பிள்ளை பாசத்தால் இறங்கி வந்திருப்பார்கள். (எனக்கு இவர்கள் யூத்துகளாக நடிப்பதில், எந்த ஆட்சேபனையும் இல்லை. நிஜத்தில் இல்லாததை பார்க்கவும் தானே, சினிமாவுக்கு போகிறோம்?)



உன்னைப்போல் ஒருவன் தீம் பாடலுக்கான வீடியோ ப்ரமோவை டிவியில் பார்த்தவர்கள், தியேட்டரில் அதை கட் செய்து விட்டதாக புலம்ப, அது படத்தில் இடம்பெறுவதற்காக எடுக்கப்பட்டதில்லை என்றிருக்கிறார்கள். அப்புறம் எதுக்கு எடுத்தீங்க? என்று கேட்க, இப்ப அதை படம் ஆரம்பிக்கும் முன்பு போடுகிறார்கள். பிள்ளை பாசம் என்றாலும் சும்மா சொல்ல கூடாது. பொண்ணும் நல்லா மியூசிக் போட்டு இருக்குது. நல்லா பாடி இருக்காங்க. ஆடி இருக்காங்க. பாடலை நல்லா இயக்கி இருக்குறாங்க. இவ்வளவு திறமைகளுக்கு கமல் காரணம் என்பதுபோல், இவ்வளவு வாய்ப்புகளுக்கும் கமல் காரணம்.

ஆனா, கமல் தன் பிள்ளைக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து இருக்காரு’ன்னு சொல்லிட்டு போயிட கூடாது. இந்த படத்துல, பலருக்கு வாய்ப்பு கொடுத்துருக்காரு. சதி லீலாவதில கமல் பையனா வருகிறவர், இந்த படத்தில் ஹாக்கர நடிக்க மட்டுமில்லை. படத்தில் ஒலிப்பதிவும் அவர்தான்.

விஜய் பையன், வேட்டைக்காரனில் ஆட்டம் போட்டு இருக்கானாமே? இன்னும் சில வருடங்களில், ஹீரோவாக்கிவிட்டு விடுவார்கள். அப்புறம் யாத்ரா? இப்பொழுதே, சினிமாவில் பிரபு, கார்த்திக், விஜய், பிரசாந்த், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, யுவன் சங்கர்ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஜேசுதாஸ், வெங்கட் பிரபு என்று லேயர்லிலும் வாரிசுகள் இருக்கிறார்கள். வருங்காலத்தில், வாரிசு கலைஞர்கள் என்பவர்கள் தான் மெஜாரிட்டியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அவரவர் சார்ந்திருக்கும் துறையின் நெளிவு சுளிவுகள் தெரிந்திருப்பதால், வாரிசுகளும் சுலபமாக தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பும் சுலபமாக கிடைக்கிறது.

வாரிசு அறிமுகம் என்பது இன்று எல்லாத்துறைகளிலும் வந்து விட்டது. டாக்டர்கள் வாரிசுகள், பெரும்பாலும் டாக்டர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் என்பது தொழிலில்லை என்பதால், அதில் மட்டும் அவ்வப்போது எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது. ஆனால், அதையும் தொழிலாய் நினைப்பவர்கள் வாரிசுகளை இறக்கிவிட்டு கொண்டிருக்கிறார்கள். வாரிசுகளால், வாய்ப்பை இழந்தவர்கள் தான் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். பிறகு, அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து ஒரு இடத்தை அடைந்து விட்டால், அவர்களது வாரிசுகளுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை.

நம்மை அறியாமலே, குலத்தொழில் காலத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறோமோ?

கட்டாய குலத்தொழில் என்றபோது எதிர்ப்பு வந்தது. இப்பொழுது, அவர்கள் விருப்பத்தோடு குலத்தொழில் என்றாகிவிட்டது. பிடித்த தொழில், கவுரவமான தொழில் எனும்போது, யாருக்கு விருப்பமில்லாமல் போகும்?

.

Friday, September 4, 2009

இந்திய அரசியலில் ஆய்த எழுத்து

ஆந்திராவில் கடந்த இரு நாட்களில் நடந்த சம்பவம் சினிமாவில் வந்திருந்தால், நம்பாமல் ‘லாஜிக்கே இல்லை’ என்று சொல்லியிருப்போம். ஆனால், நிஜத்திலேயே அப்படி நடந்துள்ளது. ஹெலிகாப்டரில் சென்ற ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜ சேகர ரெட்டியை காணாமல் தேடி, 24 மணி நேரங்களுக்கு பிறகு உடலை கண்டுபிடித்திருக்கிறார். மக்களுக்கு நல்ல விஷயங்கள் நிறைய செய்துள்ள முதல்வருக்கு நேர்ந்துள்ள கதி, வருந்த வைக்கிறது.

முதல்வருக்கே இந்த கதியா என்று சிலர் கேட்கிறார்கள். சாதாரண மக்களுக்கு பஸ்ஸே கிடைப்பதில்லை என்பதால், இப்படியெல்லாம் நேர போவதில்லை. மக்களுக்கு, இந்தியாவின் தேடுதல் வேட்டையின் திறன், இந்நிகழ்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலகத்திற்கும் சேர்த்து.

ஆங்கில சேனல்கள் இரு நாட்கள் தொடர்ச்சியாக இதை கவர் செய்தார்கள். இன்னும் வரும் நாட்களிலும் விஐபிகளின் வாகன சோதனை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பி இதை தொடர்வார்கள். என்.டி.டி.வியில் காணாமல் போய் எவ்வளவு நேரம் ஆகியுள்ளது என்று ஒரு ஓடும் கடிகாரத்தை திரையின் ஓரத்தில் வைத்திருந்தார்கள். எனக்கு தெரிந்து நிறைய ஆந்திர மக்கள், இரவு முழுவதும் கண் முழித்து தொலைக்காட்சியைப் பார்த்து கொண்டிருந்தார்கள்.

இவர்கள் கட்சி பாகுபாடு இல்லாமல், தங்கள் மாநில முதல்வர் மேல் அக்கறை கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம், இணையங்களில், பின்னூட்டங்களில், சிலர் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல், அரசியல்வாதி என்ற ஒரே காரணத்தில் மோசமான கமெண்ட்களை வீசிக்கொண்டிருந்தார்கள்.

இன்று தமிழ்நாடு, கர்நாடக போன்ற பிற மாநிலங்களிலும் அரசு விடுமுறை விட்டிருக்கிறார்கள். தமிழ் சேனல்களில், இதற்கும் சிறப்பு நிகழ்ச்சிக்களை போட்டு விட கூடாதென்று வேண்டி கொள்கிறேன்.

---

இனி தலைப்பு மேட்டர்...

அரசியலுக்கு மாணவர்கள் வர வேண்டும். வந்தாத்தான் நாடு முன்னேறும். அப்படின்னு எப்பவும் ஒரு பேச்சு இருக்கும். ஆய்த எழுத்து படத்தில் வருவது போல், சட்டசபை முழுக்க இளைஞர்கள் இருந்தா, எப்படி இருக்கும்’ங்கிறது கனவு மட்டும் இல்லை. நிஜத்தில் அப்படி நடந்திருக்கிறது. அதுவும், இந்தியாவில்.

---

பங்களாதேஷ் உருவானபோது நடந்த போரில், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு, அஸ்ஸாமுக்கு வந்தனர். வந்தவர்கள், போர் முடிந்தபின்பும், சொந்த ஊர் திரும்பாமல் இங்கேயே தங்கி விட, பின்னால் இவர்களால் கலாச்சார ரீதியாக, சமூக ரீதியாக, முக்கியமாக பொருளாதார ரீதியாக, வேலை வாய்ப்பு விஷயத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக, அஸ்ஸாமில் ஒரு கடுப்பு நிலவி வந்தது.

அகதிகளை அவர்கள் ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று சொல்லி அஸ்ஸாம் மாநிலம் முழுக்க போராட்டம் வெடித்தது. அதில், தீவிரமாக இருந்தவர்கள் அம்மாநில மாணவர்கள். அமைதியாக நடந்த போராட்டம் என்றாலும், கண்ணில் பட்ட வங்க மக்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் உண்டு. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள், பள்ளி, கல்லூரிகள் மூடி கிடந்தன.




நிலைமை கட்டுக்கடங்காமல் போக, மாநிலத்தை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் வந்திறங்கியது.

1983 ஆம் ஆண்டு. சட்டசபைக்கு தேர்தல் நடத்த வேண்டும். ”அகதிகளை அனுப்பி விட்டு, தேர்தலை நடத்துங்கள்” என்றது அஸ்ஸாம் மாணவர் அமைப்பு. பாகிஸ்தானை பிரித்து வங்காளம் உருவாக காரணமாக இருந்த இந்திரா காந்தி, இந்த கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. விடாப்பிடியாக தேர்தலை நடத்த முயன்றார்.

”எவனாவது நின்னீங்க” என்ற மாணவர்களது எச்சரிக்கைக்கு பயந்து, காங்கிரஸைத் தவிர எந்த கட்சியும் தேர்தலில் நிற்கவில்லை. ஒரு சில இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சிகள் நின்றன. மற்ற இடத்தில், காங்கிரஸை எதிர்த்து நின்றது சுயேட்சைகளே.

தேர்தலில் 32 சதவித ஓட்டுக்கள்தான் பதிவாகியிருந்தது. பல இடங்களில், சுயேட்சை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. தரம்பூர் என்ற தொகுதியில் மொத்தம் பதிவான ஓட்டுகள் - 267. 266 ஓட்டுகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அங்கு வெற்றி பெற்றார். அந்த இன்னொரு ஓட்டை பெற்றவர், விஜயகாந்த் போல் இரண்டாம் இடத்தை சுலபமாக பெற்றார்.

விழுந்த வரைக்கும் பெற்ற ஓட்டுக்களைப் வைத்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மாணவர்களது போராட்டம் இன்னும் தீவிரமானது.

அதற்கு பிறகு, இந்திரா சுட்டு கொல்லப்பட, பிரதமரான ராஜீவ், அஸ்ஸாம் விஷயத்தில் கொஞ்சம் இறங்கி வந்தார். 10 லட்சம் ஓட்டுரிமை, 10 ஆண்டுகளுக்கு பறிக்கப்பட்டது. ஆட்சியை முடித்துக்கொண்டு, மீண்டும் தேர்தல் நடத்த பிரதமர் முன்வந்தார்.

85இல் தேர்தல் நடத்தப்பட்டது. மாணவர் இயக்கம், அஸாம் கண பரிஷத் ஆக உருவெடுத்து, தேர்தலில் குதித்தது. 126 தொகுதிகளில், 67 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. கட்சியின் தலைவராக இருந்த பிரபுல்ல குமார் மொகந்தா, முதல்வராக பதவியேற்றார். அப்போது அவருக்கு வயது 31. நாட்டின் இளம் முதல்வர் என்ற பெருமையை பெற்றார். மற்ற சட்டசபை உறுப்பினர்கள், அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். திருமணம் ஆகாதவர்கள். முதல்வர் மட்டும் தன்னுடன் பயின்ற மாணவியை திருமணம் செய்திருந்தார். மாணவர் புரட்சி, இப்படி ஆட்சி வரை வந்தது - இந்தியாவின் முக்கிய நிகழ்வாகும்.

அதற்காக ஆட்சியில் பாலும் தேனும் ஓடியதென்று சொல்ல முடியாது. அதற்கடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடுங்கி கொள்ள, பின்னர் நடந்த தேர்தலில் அஸ்ஸாம் கண பரிஷத்தே மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இம்முறை முதல்வர் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள். ஊழல், ரகசிய கொலைகள், இன்னொரு பெண்ணுடன் ரகசிய திருமணம் என்று பல விஷயங்களில் மாட்டி, கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அப்புறம் என்ன? இன்னொரு கட்சியின் பிறப்பு, வேறு கூட்டணி, கடைசியில் தாய் கட்சியுடன் மீண்டும் இணைப்பு.

அரசியலில்ல இதெல்லாம் சகஜமப்பா!

நீதி - எல்லோருக்கும் தெரிந்ததுதான். ‘அரசியல் ஒரு சாக்கடை. யார் இறங்கினாலும், சட்டையில இருந்து கோவணம் வரைக்கும் கலிஜ்ஜாகும்.’

.

Friday, August 7, 2009

திருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது?

இன்று பெங்களூர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்திருந்த கர்நாடக அரசு விளம்பரம்.



அப்பப்பா! ஒரு சிலை வைக்க எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது...

நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா

.

Saturday, July 25, 2009

கலாமை சோதனையிட்டது தப்பா?

கலாமை அமெரிக்க விமான நிறுவனம் அவமரியாதை செய்துவிட்டது. மன்னிப்பு தெரிவிக்கவில்லை. பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பிரச்சினை. விமான நிறுவனம் மன்னிப்பு. பிறகு இல்லையென்று இந்த வாரம் செய்திதாளில் தினமும் வந்த செய்தி இது.

இதில் கலாம் என்ற மனிதரை விட்டுவிடலாம். ஒரு முன்னாள் ஜனாதிபதியை சோதனை செய்யலாமா வேண்டாமா? என்பதை மட்டும் பார்க்கலாம். முன்னாள் மட்டுமில்லை, இந்நாள் ஜனாதிபதியையும், மற்ற குடிமகன்கள் என்ன சோதனைக்களுக்கு உட்படுத்தபடுகிறார்களே, அத்தனைக்கும் உட்படுத்த வேண்டும். அவரும் குடிமகன் தானே? முதல் குடிமகன்.

தவிர, சோதனை செய்வதை எப்படி அவமரியாதை என்ன எண்ணலாம்? நாட்டில் எல்லோரையும் தான் சோதனை செய்கிறார்கள். அப்ப, நாமெல்லாம் தினமும் கேவலப்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கிறோமா? நம்ம மேல சந்தேகப்படுறாங்க. எனக்கு மரியாதை இல்லைன்னு நினைச்சா, பிறகு பாதுகாப்பில் தான் குறை ஏற்படும். பாதுகாப்பிற்கு என்று சில சோதனைகளை வரைமுறை செய்துவிட்டால், அனைவரையும் அதில் உட்படுத்தவேண்டும்.

பெரிய பதவியில் இருப்பவர்கள் தவறு செய்ய மாட்டார்களா? ஒருமுறை ஒரு எம்.பி. லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கி கொண்டு சென்றார் என்று செய்தி வந்தது. இன்னொரு எம்.பி. தனது மனைவியின் பாஸ்போர்ட்டில் இன்னொரு பெண்ணை வெளிநாடு அழைத்து சென்று மாட்டி கொண்டார். தங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

இவர்கள் தவறு செய்பவர்களா? என்று எண்ணாமல், அனைவரும் சமம் என்னும் ரீதியிலாவது இந்த சோதனைகள் அவசியம். சில நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான அனுமதிகள் உண்டு. நிறுவன தலைவர் உட்பட. எது கொண்டு செல்லலாம்? எது கொண்டு செல்ல கூடாது? என்று. இது வரவேற்க்கபட வேண்டியது தானே?

இப்பொழுது கலாம் என்ற மனிதர் சம்பந்தபட்டதால், மக்கள் ஆதரவோடு அரசியல்வாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதில் அரசியல்வாதிகள், ஆதாயம் தேட வாய்ப்புள்ளது. அடிபட போவது, சோதனை செய்யும் பணியாளர்களின் கடமையுணர்ச்சி. எங்கே, இவரை சோதனையிட்டால் பிரச்சினை ஆகுமோ? என்று யோசிக்கும் நிலை வரும். அது நல்லதற்கில்லை.

முதலில் பாதுக்காப்புக்காக செய்யப்படும் இந்த சோதனைகளில் பாரபட்சம் கூடாது. அதேப்போல், சோதனையிடுவதை கௌரவ குறைவாக எடுத்துக்கொள்ள கூடாது. இது பற்றி கலாமிடம் கருத்து கேட்டாலே, நாட்டின் பாதுகாப்பு பற்றி அக்கறை உள்ளவராக, இதற்கு ஆதரவு தெரிவிப்பார்.

முன்னாள் ஜனாதிபதியை சோதனையிட தேவையில்லை என்பது நமது அரசாங்க ப்ரோட்டோக்கால். முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், சோதனையிட வேண்டும் என்பது அமெரிக்க விமான நிறுவனத்தின் பாலிஸி. இப்போது ஒரு கேள்வி? இந்திய விமான நிறுவனங்கள் - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியை சோதனையிடுமா, இல்லையா? இதில் தெரிந்துவிடும் லட்சணம்.

மீடியாக்களை சொல்ல வேண்டும். சோதனையிட்டாலும் கூச்சல். சரியாக சோதனையிடாமல் பிளைட் கடத்தப்பட்டாலும் கூச்சல்.

Tuesday, June 9, 2009

முதல்வர் விஜய்

ஜூன் 22 ஆம் தேதி நடக்க போறதா சொல்லி வருற நியூஸை பார்க்கும்போதெல்லாம் ரொம்ப பயமா இருக்கு. தினசரி காலண்டரை எடுத்து பார்க்குறேன். அன்னிக்கு ஏதாச்சும் விசேஷம்ன்னு போட்டு இருக்கான்னு. நல்ல வேளை, அப்படி ஏதும் இல்லை. இதையே நினைச்சு நினைச்சு, தூக்கத்துல கூட இது தான் கனவுல வருது. என்ன வருதா?

எஸ்.ஜே.சூர்யா பாணியில் வாசிக்கவும்.

கனவுல என்ன நடக்குது? அதான் இந்த பதிவு. வாங்க. லெட் அஸ் வாட்ச் த ட்ரீம்....

----



வி.பி. 42 ஆம் ஆண்டு. அதாங்க, கி.பி. 2016. எல்லோரும் எதிர்ப்பார்த்தப்படி முதல்வராக விஜய். இது நடக்கும்ன்னு தெரிஞ்சு, பல கட்சிகளை கலைச்சிட்டாங்க. விஜய் முதல்வர் ஆனவுடன் ‘கௌரவ முதல்வர்’ என்றொரு புது பொறுப்பு உருவாக்கப்பட்டு அதில் எஸ்.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதல் பிரஸ் மீட்.

“சார்... எதுக்கு இந்த புது பதவி? இதுக்கு சட்டசபையில் விவாதித்து, கவர்னர் ஒப்புதல் வாங்கி இருக்கீங்களா?”

“தம்பி, நான் ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன். இதுல, சட்டசபை உறுப்பினர்கள், கவர்னர் பேச்ச எங்க கேட்குறது?”

“என்ன சார்... ஒரு முதல்வரா இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க?”

எஸ்.ஏ. விடம் விஜய், “அப்பா, வந்திருக்க எல்லாரோட பேரையும், அட்ரஸையும் குறிச்சு வச்சிருக்கீங்களா?”

அந்த நிருபர் மறைகிறார்.

இனி, அடுத்த நிருபர், “முதல்ல, எந்த கோப்புல கையெழுத்து போட போறீங்க?”

“இந்தியாவோட கடன், பல ஆயிரம் கோடிகள். அத அடைக்க வழி செய்ய போறேன்.”

“சார். தமிழக முதல்வரா, அத எப்படி நீங்க அடைப்பீங்க?”

“ஓ! அப்படியா? சரி. தமிழகத்தோட கடனை அடைக்க வழி செய்வேன்.”

“அது எப்படி?”

“என்னோட முத மாச சம்பள பணத்தை (ஒரு ரூபா) இதுக்காக கொடுக்குறேன். நீங்களும் கொடுங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்களே எடுத்துக்குறோம்?”

”ஐய்யயோ! மக்கள்கிட்ட இதுக்கு எதிர்ப்பு வருமே? என்ன பண்ணுவீங்க”

”மக்களுக்கு பிடிக்கலைங்கறதால நான் என்ன நடிக்காமலா இருந்தேன்? நடிச்சேன்ல. அது மாதிரிதான்”

“ஆனா, அடுத்த தேர்தல்ல ஓட்டு விழாம போச்சுனா?”

விஜய் வாயை இறுக்க மூடி கொண்டு அப்பாவை பார்க்கிறார். அவர் விஜய் காதில் ஏதோ சொல்கிறார்.

“அதுக்கு நாங்க இன்னொரு வழி வச்சிருக்கோம்.”

“என்ன?”

“மலேஷியாவுக்கு கலை நிகழ்ச்சி போயி பணம் திரட்டுவோம்.”

“நீங்க நாலு படத்துக்கு மூணு ப்ளாப் கொடுப்பீங்களே? அந்த ப்ளாப் பட தயாரிப்பாளர்களோட கடன்களுக்கு ஏதாவது திட்டம் இருக்கா?” கேள்வி கேட்டு விட்டு அதற்கு பதிலாக வரும் முறைப்பை கண்டு அந்த நிருபரும் எஸ்ஸாகிறார்.

நெக்ஸ்ட்.

“மாநிலத்தொட உள் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கு என்ன பண்ண போறீங்க?”

“அதான் ஏற்கனவே, சொல்லி ஆரம்பிச்சிருக்கோமே? மாவட்டம் தோறும் கல்யாண மண்டபம் கட்டுறோம். கல்யாணம் இலவசமா பண்ணிக்கலாம். ஆனா, வாடகை உண்டு!.”

”வறுமை கோட்டுக்கு கீழே இருக்குற மக்களுக்கு என்ன பண்ண போறீங்க?”

“பிரியாணி பண்ண போறோம்.”

”என்ன?”

“ஆமாம். டெய்லி இலவசமா பிரியாணி போட போறோம்”

எஸ்.ஏ.எஸ். வந்து காதை கடிக்கிறார். “மகனே, பிரியாணி போடுறதுக்கு அவுங்க என்ன நாம நடத்துற உண்ணாவிரதத்துக்கு வந்தவுங்களா?”

“சரி, சட்ட ஒழுங்கு மேம்பட என்ன திட்டங்கள் வச்சிருக்கீங்க?”

“அது எங்க அப்பா செக்‌ஷன். அவர் சொல்லுவார்?”

எஸ்.ஏ.எஸ் - ”சட்டம் ஒரு இருட்டறை. நல்ல லைட்டா வாங்கி மாட்ட போறோம். சட்டத்துல இருக்குற ஓட்டைகளை அடைக்க, ஒரு வெளிநாட்டு கட்டுமான நிறுவனத்தோடு பேசிட்டு இருக்கோம்.”

“ஸ்ஸ்ஸ்... எப்பா! போதும்.”

கேட்ட நிருபர் முணுமுணுத்த படி, “முதல்ல உங்க படத்துல வருற பாத்ரூம்ல இருக்குற ஓட்டையை அடைங்க”

“என்ன சத்தம்?”

“இல்ல சார், சைலன்ஸ் சைலண்டா தான் இருக்கோம். நீங்க தான் பேசிட்டு இருக்கீங்கல்ல?”

“வெளிநாட்டு முதலீடுகளை நம்ம மாநிலத்துக்கு கொண்டு வர, என்ன பண்ண போறீங்க?”

“அத பத்தி ஏற்கனவே பேசிருக்கோம், ஒரு லண்டன் நிறுவனத்துடன். அக்ரிமெண்ட் போட்டு ஆரம்பிச்சுட வேண்டியது தான்.”

“என்ன அக்ரிமெண்ட்?”

“ஒன் இயர் அக்ரிமெண்ட். பிடிச்சிருந்தா வச்சிருப்போம். இல்லாட்டி திருப்பி அனுப்பிடுவோம்.”

“அது சரி. நீங்க ஆறேழு வருசத்துக்கு முன்னாடி எம்.ஜி.ஆர். பட பேரு, எம்.ஜி.ஆர். பாட்டு அப்படின்னு இருந்தீங்க. இப்பல்லாம் அப்படி இல்லாம, பெரியார், பெரியார்ன்னு பேசுறீங்களே? ஏன்?”

“பேசிக்கலா, பெரியாருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு.”

“என்னன்ன?”

“பெரியார் அப்பா, ஈரோட்டுல ஒரு மளிகை கடை வச்சிருந்தாரு. அந்த கடைக்கு தன்னோட பையன் வரணும்ன்னு ஆசைப்பட்டாரு. ஆசைப்பட்ட மாதிரியே, பெரியாரும் கடைக்கு வந்து பிஸினஸ்ல இறங்கினாரு. அது மட்டுமில்லாம, அவுங்க அப்பாவை விட பெரிய நிலைக்கு வந்தாரு”

என்று சொல்லிய படி, திரும்பி அப்பாவை பார்க்கிறார். அப்பா பெருமையில் கண்ணீர் விட்டு, அதை துடைத்து விட, இது தான் சாக்கு என்று எஞ்சியிருந்த நிருபர் கூட்டம், சும்மா ’கில்லி’ மாதிரி எஸ்ஸாகிறார்கள்.

.