Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Sunday, May 21, 2017

2016 - ஒரு பார்வை

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



எல்லா வருடங்களைப் போலவே, இந்த ஆண்டிலும் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிருக்கிறது. பல நல்லது கெட்டதுகளைச் சந்தித்திருக்கிறது. தூக்கி வாரிப்போடும் சம்பவங்களைச் சகஜமாகக் கடந்திருக்கிறோம். சிலது வெறும் சம்பவங்கள், சிலது மைல்கல்கள், சிலது திருப்புமுனைகள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் வகையில் முத்திரை பதித்திருக்கும் 2016ஆம் ஆண்டின் டைரிக்குறிப்புகளில் எழுதப்பட்ட முக்கிய உலக நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கலாமா?

கனடா தமிழர் பாரம்பரிய மாதம்

அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று, கனடா பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தைத் தமிழர் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்கும் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ் மொழியின் சிறப்பு, கனடிய தமிழர்கள் கனடா நாட்டிற்கு ஆற்றிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் கனடா நாட்டுப் பாராளுமன்றத்தில் ஏற்கப்பட்டது. ஜனவரி மாதத்தில் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை வருவதால், இம்மாதம் தமிழர் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படப்போகிறது. இதில் அரசியல் நோக்கம் இருக்கிறது என்று குரல்கள் கேட்கப்பட்டாலும், தமிழர்களுக்கு இது ஒரு இனிமையான செய்தி. இது போன்ற சட்டங்களும், நடைமுறைகளும் அனைத்து நாடுகளிலும் வரப் போகும் நாள் தொலைவில் இல்லை.

தமிழகச் சட்டசபை தேர்தல்

தமிழ்நாட்டின் பதினைந்தாம் சட்டசபைக்கான தேர்தல் இந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. பொதுவாக, கடந்த சில ஆண்டுகளாக, திமுக-அதிமுக என இரு அணிகளாகப் பிரிந்து, பெரும்பாலான முக்கியக் கட்சிகள் அனைத்தும் தமிழகத் தேர்தலில் போட்டியிடும். இந்தாண்டு வித்தியாசமாக, பல அணிகள் மற்றும் பல கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு முன்பு வரை, பல அணி போட்டியாகத் தெரிந்த தேர்தல் களம், தேர்தல் முடிவுக்குப் பிறகு, பழையபடி, இருமுனை போட்டியாகவே அறியப்பட்டது. இந்தத் தேர்தலில் கட்சிகள் கற்ற பாடம், அவர்களது அடுத்தடுத்த தேர்தல் போட்டி முடிவுகளுக்கு உதவும் என்ற வகையில் 2016 தேர்தல், தமிழக அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான தேர்தல் எனலாம். 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஆளும்கட்சியே ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்ட தேர்தலும் இதுவே.

ஒலிம்பிக்

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ப்ரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்றது. இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் பத்தாயிரம் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் முதல் இடத்தை அமெரிக்காவும், இரண்டாம் இடத்தைப் பிரிட்டனும், மூன்றாம் இடத்தைச் சைனாவும் பிடித்தன. இந்தியாவிற்கு ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் கிடைத்தன. இரண்டுமே சிந்து, சாக் ஷி என்ற பெண் வீரர்களால் கிடைத்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு ஒன்று கூடக் கிடைக்கவில்லை என்பது இந்திய தேசப்பக்தி விளையாட்டு ரசிகர்களுக்குப் போதுமான செய்தியாக இருந்தது.

ப்ரெக்ஸிட்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது என்னும் முடிவுக்கு இவ்வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற வாக்குப்பதிவில் பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். இதன் தாக்கம், உலகமெங்கும் எதிரொலித்தது. உலகமெங்கும் உலகமயமாக்கலுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாகக் கருதுவதற்கு ஏதுவாக அமைந்த முடிவு இது. இந்த முடிவிற்குப் பிறகு, பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் விலகி, தெரெசா மே அவர்கள் பதவிக்கு வந்தார்கள். இதன் பாதிப்பு என்னவாக இருக்கும் எனப் பல கணிப்புகள் வந்தாலும், உண்மை நிலை, வரும் நாட்களில், நாடுகளின், அமைப்புகளின், நிறுவனங்களின் செயல்திட்டங்கள் மூலம் தெரிய வரும்.

ஜிகா வைரஸ்

கடந்த காலங்களில், தென் அமெரிக்க நாட்டு மக்களை, குறிப்பாகக் கர்ப்பிணி பெண்களைப் பதற வைத்துக்கொண்டு இருந்த ஜிகா வைரஸ், 2016 இல் உலகளவில் தனது ஆதிக்கத்தைக் காட்டத் தொடங்கியது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உடல் நல குறைவுடனும், சிறிய தலையுடனும் பிறப்பதாலும், அதைக் குணப்படுத்தக்கூடிய மருந்து இன்னமும் கண்டுப்பிடிக்க இயலாத நிலையில், அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாட்டின் அரசுகள், அதன் மக்களைக் குழந்தை பெறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தும் நிலை ஏற்பட்டது. ஜனவரி 2016ல் உலகச் சுகாதார மையம், இந்த வைரஸ் அமெரிக்காவெங்கும் பரவும் நிலை இந்தாண்டு இறுதிக்குள் ஏற்படும் என்று எச்சரிக்கை மணி அடித்தது. ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட ப்ரேசில் நாட்டில் இந்தாண்டு ஒலிம்பிக்ஸ் நடக்க, இது மேலும் பரவும் என்று உலகளவில் அச்சம் ஏற்பட்டது. நவம்பர் 2016இல் உலகச் சுகாதார மையம் தனது எச்சரிக்கை அளவைக் குறைத்துக்கொண்டது, இவ்வருடத்தின் நிம்மதி எனலாம்.

சிரியா போர் அகதிகள்

2011 இல் ஆரம்பித்த உள்நாட்டு போர், உலக நாடுகளின் பங்களிப்புடன் இன்னமும் தொடர்ந்து வருகிறது. உலகில் அதிகளவில் அகதிகளை உருவாக்கிய போர் இது என்று வர்ணிக்கப்படுகிறது. சிரியா அகதிகளின் பிரச்சினை உலகளவில் விவாதிக்கப்படும் நிலை 2016 இல் உருவானது. இது ஐரோப்பிய நாடுகளிடையே அகதிகளாகக் குடியேறும் மக்களை ஏற்பதில் முரண்பாட்டை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலிலும் விவாதப்பொருளாக இருந்தது. ஒம்ரான் என்னும் போரில் பாதிக்கப்பட்ட சிறுவன், ஆம்புலன்ஸில் ஆரஞ்சு நிற சீட்டில் அழாமல் தனது கூரியத் துக்கத்தை வெளிப்படுத்திய புகைப்படம், உலகளவில் சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை உண்டாக்கியது.


தமிழ் சினிமா

இந்தாண்டு இதுவரை 180க்கு மேலான திரைப்படங்கள் வெளியாகி உள்ள தமிழ் திரையுலகில், வழக்கம் போல் வெற்றி விகிதம் குறைவே. ரஜினி முருகன், பிச்சைக்காரன், தெறி, கபாலி, ரெமோ போன்ற படங்கள் வசூலில் வெற்றிபெற, இறுதிச்சுற்று, விசாரணை, ஜோக்கர், மனிதன், அப்பா, குற்றமே தண்டனை போன்றவை விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படங்களாக வந்தன. இதில் விசாரணை ஆஸ்கருக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டது மகிழ்வைக் கொடுத்தாலும், அது இறுதிசுற்றுக்குத் தேர்வுபெறாமல் போனது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்தது. அதே சமயம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பீலே படத்திற்காக இன்னமும் ஆஸ்கர் போட்டியில் இருப்பது, நம்மவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் செய்தி. 2016 இல் நிகழ்ந்த கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம், கவிஞர் நா. முத்துக்குமார், கவிஞர் அண்ணாமலை போன்றோரின் மரணங்கள், திரையுலகினர் மட்டுமில்லாமல், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஜியோ மொபைல்

ரிலையன்ஸ் நிறுவனத்தால், செப்டம்பர் மாதம் இந்திய மார்க்கெட்டில் இறக்கிவிடப்பட்ட ஜியோ மொபைல் சேவை, பயனாளிகளுக்கு இலவசத்தை அள்ளிவிட, இந்திய அலைபேசி சேவை தனது அடுத்தக்கட்டத்திற்குத் தாவியது. இலவச உள்நாட்டு அழைப்புகள், சல்லிசான விலையில் 4ஜி இணையச்சேவை போன்றவை, பிற இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. சேவை அறிமுகமான ஒரே மாதத்தில் 16 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பிடித்தார்கள். 83 நாட்களில் 50 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற பொழுது, இது எந்த நாட்டிலிலும் இல்லாத ரெக்கார்ட் ஆனது. இதற்கு முன்பு, ஏர்டெல் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சேர்க்க 12 வருடங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. வருங்காலப் பரிமாற்றங்கள் அனைத்தும் அலைபேசி வழியே என்னும் நிலை இந்தியாவில் வருவதற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட அதிரடி தொடக்கம் இது எனலாம். உண்மையான பயன் யாருக்கு என்பது போகப் போகத் தான் தெரியும்.

அமெரிக்கத் தேர்தல்

உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த 58வது அமெரிக்கத் தேர்தலில் பாப்புலர் வாக்குகளின் முடிவுகள், நவம்பர் 9 ஆம் தேதியன்று வெளியானது. பெரும்பாலான கணிப்புகளுக்கு நேரெதிராக இத்தேர்தலில் அமெரிக்கத் தொழிலதிபர் ட்ரம்ப் அவர்கள் வெற்றிப்பெற்றது, அனைவருக்குமே வியப்பை அளிப்பதாக இருந்தது. பிரமிளா ஜெயபால், கமலா ஹாரிஸ், ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமி பேரா ஆகிய இந்திய வம்சாவழி வேட்பாளர்கள் இத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி இத்தேர்தலில் தோல்வியடைய, பிரச்சாரத்தின் போது சர்ச்சைகள் பல கிளப்பிய ட்ரம்ப் வெற்றிப்பெற்றதால், நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புப் பேரணிகள் சில நாட்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தல் முடிவில் ரஷ்யாவின் பங்கு இருக்கிறது என அடுத்தச் சர்ச்சை கிளம்ப, தேர்தல் சூடு இன்னமும் அணையாமல் இருக்கிறது. ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க அதிபராக 2017 ஜனவரியில் பதவியேற்க உள்ளார். தற்சமயம், தன்னுடன் அமைச்சர்களாகப் பணிபுரிய உள்ள சகாக்களைத் தேர்ந்தெடுப்பதில் பிசியாக உள்ளார்.

ரூபாய் 500 & 1000 பண மதிப்பிழப்பு

கருப்புப்பணத்தை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியினால், நவம்பர் 9ஆம் தேதியன்று ஐநூறு, ஆயிரம் ரூபாய் தாள்கள் மதிப்பிழக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒருபக்கம் கருப்புப்பணத்தை அழிக்கும், கள்ளப்பணத்தை ஒழிக்கும், தீவிரவாதத்தைக் குறைக்கும், மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் என்று ஆதரவு குரல்கள் கேட்டாலும், மறுபக்கம் ஏடிஎம் வாசலில் பணத்திற்காகக் காத்திருக்கும் மக்களிடம் இருந்து எழுந்த கோபக்குரல்கள் குறைந்த பாடில்லை. இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார மேம்பாட்டுக்கு இது கண்டிப்பாக உதவும் என்று நம்பிக்கை கூறப்படும் இந்த நடவடிக்கை, இந்த ஆண்டின் முக்கியமான இந்தியப் பொருளாதார நிகழ்வு என்றால் அது மிகையில்லை. முடிவு எப்படி இருக்கும் என்பது வரும் ஆண்டுகளில் தான் தெரியும்.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்

ஜெயலலிதாவிற்கு அரசியல் உச்சத்தையும், வாழ்வின் மறைவையும் ஒருங்கே பதிவுச் செய்த வருடம் இது. மே மாதம் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்கு பிறகு, தொடர்ச்சியாக ஆட்சியைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொண்டார். செப்டம்பர் மாதம், உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதியன்று மரணித்தார். ஜெயலலிதா அவர்களின் மரணம், அவருடைய கட்சியான அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதால், இது ஒரு புதுத் தலைமையை உருவாக்கும் சூழலைக் கொண்டு வந்து தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

சென்னை வர்தா புயல்

2004 ல் சுனாமி, 2015 ல் வெள்ளம் என்று இயற்கை பேரிடர்களைச் சந்தித்த சென்னை மக்கள், இந்தாண்டு எதிர்க்கொண்டது, வர்தா புயலை. பாகிஸ்தானால் வர்தா என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் புயல், டிசம்பர் 12 ஆம் தேதியன்று சென்னையைக் கடக்க, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் அடித்த புயல் காற்றின் வீரியத்தை, இந்தத் தலைமுறை மக்களால் நேரடியாகக் காண முடிந்தது.. மரங்கள், மின் கம்பங்கள், வாகனங்கள் எனப் புயலில் அடித்துக் கவிழ்க்கப்பட்ட சேதாரங்கள் ஏராளம். இதுவும் கடந்து போகும் என்று சென்னை மக்கள் சில நாட்களில் சகஜ வாழ்வுக்குத் திரும்பினர்.

பிரபலங்களின் மரணங்கள்

2016 இல் உலகின் பல பிரபலங்களின் மரணங்களைக் காண வேண்டியதாகப் போனது. கியூபப் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ அவர்கள் நவம்பர் 25ஆம் தேதியன்று மறைந்தார். இது கியூபா மட்டுமின்றி உலகமெங்கும் அவரைப் பின் தொடர்ந்து வந்தவர்களைக் கவலையுறச் செய்தது.

மினசோட்டாவைச் சார்ந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான ப்ரின்ஸின் மரணம், மினசோட்டாவில் அவரைப் பற்றியே சில நாட்கள் அனைவரையும் பேச வைத்தது. ஏப்ரல் 21க்குப் பிறகான நாட்களில், எங்கும் செவ்வூதாவாக இருந்தது. அவர் மரணம் மினசோட்டா மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தை அந்நாட்களில் நேரடியாகக் காண முடிந்தது,

தமிழ்நாட்டின் மூத்த கர்னாடக இசைக்கலைஞரான பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் நவம்பர் 22ஆம் தேதி அன்று மறைந்தார். பாடல்கள் மட்டுமின்றித் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். பலருக்கு இசை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அவர் பெறாத விருதில்லை எனலாம். அவரின் மரணம், கண்டிப்பாக இசையுலகிற்குப் பெரும் இழப்பே.

மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் யுக்தியாளருமான சோ ராமஸ்வாமி, டிசம்பர் 7ஆம் தேதியன்று மறைந்தார். பத்திரிக்கையாளர், அரசியல் ஆலோசகர் என்பதெல்லாம் அவருடைய சுருக்கமான அடையாளங்கள். மேடை நாடக, சினிமா மற்றும் டிவி நாடக நடிகர், இயக்குனர், வக்கீல், எம்பி, எம்டி என்று அவர் பார்த்த வேலைகள் ஏராளம். பழகிய ஆளுமைகள் பலர். கொண்ட அனுபவங்கள் எக்கச்சக்கம். ஹாஸ்ய உணர்வு மிக்கவர். எவ்வளவு பேருக்கு அவரைப் பிடிக்குமோ, அதே போல் அவர் மேல் வெறுப்புக்கொண்டவர்களும் ஏராளம். ஆனால், அது எதையும் கண்டுக்கொள்ளாமல், தன் கருத்தைப் பயப்படாமல், எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே.

இப்படி மரணித்த பிரபலங்கள் மட்டுமின்றி உதித்த பிரபலங்கள் பலர் இந்த ஆண்டில் உள்ளனர். அவர்களெல்லாம் யார் என்பதை வருங்காலம் அடையாளம் காட்டும்!!

2016 உங்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அது வரும் ஆண்டில் நல்ல பலன்களைக் கொண்டு வர, அனைவருக்கும் எங்களது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

.

Thursday, June 28, 2012

மீண்டும்...




ரொம்பவெல்லாம் இல்லை. போன பதிவு எழுதி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது.

இந்தியாவிற்கு சென்ற மனைவி, குழந்தையுடன் திரும்பி வந்து, ஒரு மாதமாகிறது. இப்ப தெரிந்திருக்குமே? ஏன் இந்த இடைவெளி என்று?

---

மனைவி ஊருக்கு சென்றிருந்த போதும், என்னால் நிறைய எழுத முடிந்ததில்லை. அப்போது காரணம் வேறு. இப்போது வேறு. அப்போது சமைப்பது, ஊருக்கு போன் பண்ணுவது, அலுவலக வேலை என்று பொழுது போனது.

இப்போது அப்படி இல்லை. பாப்பாவுடன் விளையாடவே நேரம் போதுவதில்லை. இதில் எங்கு மற்ற வேலைகளை செய்ய?

---

எழுத ரொம்ப ஆசை. பார்க்கலாம், என்ன எழுதுகிறேன் என்று?

.

Monday, February 13, 2012

இலக்கிய பரோட்டா - நகலும் அசலும்

நகலும் அசலும்



---

நகல்

பஞ்சாப்பில் உருவான மைதாவும், பெல்லாரியில் விளைந்த வெங்காயமும், நாமக்கல்லில் போடப்பட்ட முட்டையும் இங்கே என் இலையில் சங்கமித்திருக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு இந்தியனின் பசியை நீக்க, ஒன்றிணைந்த இந்திய ஒருமைப்பாடா?

அசல்

பரோட்டா வெறும் உணவில்லை அது ஒரு கலாச்சாரக் குறியீடு, பரோட்டா சாப்பிடாதவர்களே இல்லை எனும்படி அது தமிழகம் எங்கும் பரவியிருக்கிறது,


---

நகல்

புரோட்டா வட இந்திய உணவு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். முகலாய படையெடுப்பின் மூலம் இந்திய பிரதேசத்திற்குள் அறிமுகமான உணவு இது. புரோட்டா பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து நம்மிடம் வந்திருக்கிறது. அதனிடம், எந்த முகலாய பேரரசர் இதை சொல்லி அனுப்பினார்?

அசல்

பஞ்சாபில் இருந்து பரோட்டா எப்படி தென்னிந்தியாவிற்குள் வந்தது, தமிழ்மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொண்டார்கள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு எவ்வாறு பரோட்டா அறிமுகமானது, அங்கு பரோட்டா அடைந்த உருமாற்றங்கள் என்ன என்பதை முழுமையாக விவரித்திருக்கிறார் ஷாநவாஸ், மொகலாய மன்னர்களின் உணவுபட்டியலில் பரோட்டா இடம் பெற்றிருப்பது வரை மனிதர் தேடித்துருவி ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார்.


---

நகல்

மாஸ்டர் அதை தயார் செய்து கொண்டிருந்தது, அவருடைய இரும்பு கரண்டி, கல்லில் எழுப்பும் ஒலியின் மூலம் எனக்கு தெரிந்தது. அது ஒரு வன்முறையின் ஒலியாக எனக்கு கேட்டது. கண்ணுக்கே தெரியாத, புரோட்டாக்கள், முட்டைகள், தக்காளிகள், வெங்காயங்கள், கறிவேப்பிலைகள், ’உனக்காக நாங்கள் மரணிக்கிறோம்’ என எழுப்பும் மரண ஒலியாக அது என்னை வந்தடைந்தது.

சிறிது நேரத்தில் ஒலியின் அளவு குறைந்தது. இரும்பு கரண்டியின் வன்முறையை தாங்க முடியாத உணவு பொருட்கள், அதற்கு அடங்கி, கொத்து புரோட்டாவாக உருவெடுத்திருக்கும் நேரம் அது.


அசல்

பள்ளிவயதில் பரோட்டா போடும் மாஸ்டரின் லாவகத்தை வியந்து பார்த்துக் கொண்டிருப்பேன், பரோட்டாவை பிய்த்துப் போட்டு அதில் சால்னா ஊற்றுவது ஒரு கலை, அது போலவே கொத்து பரோட்டா போடும் கல்லின் தாள ஒசை தனியான லயம் கொண்டது.

---

எது எப்படியோ, ”ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்” - நான் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகம் என்றாகிவிட்டது.

தூத்துக்குடி பரோட்டா பற்றி வாசிக்க, இங்கே செல்லுங்கள்.

.

Sunday, May 15, 2011

மாற்றம்

நடந்த முடிந்த தேர்தல் பற்றிய பதிவல்ல இது. என் வாழ்க்கையில் நடந்த முடிந்த மாற்றங்களைப் பற்றிய பதிவு இது.



போன பதிவில் ’மாற்றங்களுடன் எழுத வந்திருக்கிறேன்’ என்றவுடன், சிலர் எழுத்தில் மாற்றம் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அது அப்படியே தான் (மொக்கையாக!) இருக்கும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

என் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களில், இரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. ஒன்று, திருமணம். இன்னொன்று, இட மாற்றம்.

---

கல்யாணம் நல்லபடியாக நடந்தது. அந்நேரங்களில் இணையம் பக்கமே வர முடியாததால், அது பற்றி எதுவும் எழுத முடியவில்லை.

தற்சமயம், நண்பர்கள் மத்தியில் பத்திரிக்கை வைப்பது பெரும்பாலும் இணையம் வழியாகவே நடக்கிறது. எனக்கு நண்பர்கள் அனைவருக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் சுற்ற வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன்.

நான் இப்படி திட்டமிட்டாலும், பலரும் ’எதற்கு அலைகிறாய்? மெயிலிலேயே அனுப்பி விடு. நீ அனுப்பாவிட்டாலும் கண்டிப்பாக வந்துவிடுவோம்’ என்று கூறியிருந்தார்கள். இருந்தும், விடவில்லை. முடிந்தவரை, பெங்களூர், சென்னை, கோயமுத்தூரில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நேரிலேயே சென்று கொடுத்துவிட்டேன். மற்றவர்களுக்கும், ஸ்டாம்ப் ஒட்டியோ, ஸ்பீடு போஸ்ட்டிலேயோ அனுப்பி வைத்துவிட்டேன். நல்ல அனுபவமாக இருந்தது.

இந்த அவசர ஓட்டத்தில், நான் தவறவிட்டது, இந்த தளத்தை. இணைய நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும். கல்யாணம் ஆகி ரெண்டு மாதம் தான் ஆகிறது. இப்ப வாழ்த்தினாலும், சந்தோஷமாக வாங்கி கொள்வேன்.

---

இணையம் பக்கமே வர முடியாத அளவுக்கு, அவ்வளவு பிஸியா? இரண்டாவது மாற்றமான - இடமாற்றம், அப்படி செய்து விட்டது.

பெங்களூரில் இருந்து அமெரிக்காவின் டென்வருக்கு பணி நிமித்தமாக மாற்றமாகி வந்துவிட்டேன்.

நான் வரும்போதே மனைவியையும் அழைத்து வந்துவிட வேண்டும் என்பதற்காக, அலுவலகத்திற்குள்ளும், வெளியே பதிவு ஆபிஸ், பாஸ்போர்ட் ஆபிஸ், விசா ஆபிஸ் என்றும் அலையோ அலை என்று அலைந்திருக்கிறேன். முடிவில், நல்லபடியாக நினைத்தப்படி இருவரும் வந்து சேர்ந்துவிட்டோம்.

---

ஊர், வேலை எல்லாம் புதுசாக இருக்கிறது. இது அனைத்தையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை எப்போதும் வரும். படிப்பவர்களுக்காக இல்லாவிட்டாலும், நான் ஆச்சர்யப்பட்ட விஷயங்களை திரும்ப பார்க்க ஏதுவாக, நான் பின்னால் படித்து பார்ப்பதற்காகவாவது எழுத வேண்டும் என்று நினைத்தும், நேரமின்மையால் எழுத முடியவில்லை.

’எனக்கு நேரமில்லை’ என்று சொல்லவே கூச்சமாக இருக்கிறது. அப்படி ஒன்றும் பெரிதாக செய்து கிழிக்கவில்லை என்றாலும், சிறு சிறு வேலைகளிலேயே முழு நேரமும் ஓடிவிடுகிறது.

இதோ இவ்வளவு எழுத இன்று அவகாசம் கிடைத்துள்ளது. இப்படியே தொடர்ந்தால், நிறைய எழுதுவேன். எழுத நிறைய இருக்கிறது.

.

Tuesday, April 19, 2011

மீண்டும்...



ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, மீண்டும் எழுத போகிறேன். இந்த கேப்பில் என்னை விசாரித்தவர்கள் மற்றும் எழுத சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி.

இம்முறை நிறைய மாற்றங்களுடன் வந்திருக்கிறேன்.

என்ன, ஏதுவென்று அடுத்த பதிவில்...

அதை எழுதுங்க, இதை எழுதுங்க என்று அவ்வப்போது கமெண்ட் போட்ட நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.

வந்துட்டேங்க!

.

Sunday, September 26, 2010

வலைச்சரத்தில் நான்

வரும் வாரம், வலைச்சரத்தில் வலைப்பூக்களை கதம்பமாக தொடுக்கிறேன்.



நண்பர்கள் வந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். :-)

.

Monday, July 19, 2010

ரஜினியின் வலைப்பதிவு - பதிவர்களுக்கு எச்சரிக்கை

ஊர் உலகத்துல ஆளாளுக்கு ப்ளாக் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். ரஜினி ஒன்று ஆரம்பிக்கலாம், இல்லையா? இப்படி ரஜினியை ப்ளாக் ஆரம்பிக்க சொல்லி அமிதாப்பிடம் நச்சரிக்கிறார்களாம் இணைய ரசிகர்கள்.

அமிதாப் ஒவ்வொருவரையாக ப்ளாக் ஆரம்பிக்க சொல்ல, ட்விட்டர் கணக்கு தொடங்க சொல்ல, உச்ச நட்சத்திரங்களும் அவர் பேச்சை கேட்டு தொடங்குகிறார்கள். நமக்கு ஒரு தூதுவர் கிடைத்துவிட்டார் என்றெண்ணி பெரும்பாலான ரசிகர்களும் அவரிடம் ரஜினிக்கு இணையத்தில் ஒரு துண்டு போட்டு சீட் பிடிக்க நெருக்குகிறார்களாம்.



’நானென்ன இம்மாதிரி இணைய தளங்களுக்கு விளம்பர தூதுவரா?’ என்று அமிதாப் கேட்டாலும், எனக்கென்னமோ இது உண்மையாக இருக்குமோ என்று கூட தோன்றுகிறது. இப்ப கொஞ்சம் பரவாயில்லை. சில காலம் முன்பு, டிவியில் விளம்பரம் போட ஆரம்பித்தால், வரிசையாக சீப்பு, சோப்பு என எல்லாவற்றிலும் அமிதாப் தான் வருவார். ஏன் வெள்ளிக்கிழமையானால் போதும். ஏதோ ஒரு அமிதாப் படம் ரிலீஸ் ஆகிவிடும். தற்சமயம் நிலைமை சீரடைந்து இருக்கிறது. அதனால், தனது வியாபாரத்தை இணையத்தில் தொடங்கிவிட்டாரோ? என்றெண்ண தோன்றுகிறது. இப்ப ‘ஆனா, ஊனா’ என்றால் ப்ளாக், ட்விட்டர் என்பதே இவர் பேச்சாக இருக்கிறது.

ஆனால், இந்த விஷயத்தில் இவர் பேச்சையெல்லாம் ரஜினி கேட்க போவதில்லை. ரஜினி தனது இமேஜ்/ப்ராண்ட் போன்றவற்றை, பொதுஜனம்/மீடியா போன்றவற்றில் இருந்து விலகியே வளர்ப்பவர். மூடியிருப்பதை பார்க்கும் ஆசை தான், ரஜினியின் புகழ் யுக்தி. விளம்பரங்களில் நடித்து தனது சூப்பர் ஸ்டார் இமேஜை நீர்த்துப்போகாமல் வைத்திருப்பவர். அவ்வளவாக விழாக்களில், நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளாதவர். (கலைஞரின் பாராட்டுவிழாக்கள் விதிவிலக்கு). முன்புக்கு இப்போது பரவாயில்லை.

ரஜினி டிவிக்கு, பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து எவ்வளவு நாளாகிறது? விஜய் டிவியில் அவருக்கு ‘செவாலியே சிவாஜி விருது’ வழங்கி, கோபிநாத் ஒரு சிறு பேட்டி எடுத்தார். கமல் போன்றோர் வரும் பொதுநல விளம்பரங்களில் கூட தலைக்காட்டுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு, போலியோ விளம்பரத்தில் வந்தார்.

அப்படி திரைப்போட்டு வாழ்பவர், வலைப்பதிவு ஆரம்பித்து தன் எண்ணங்களை பதிவாரா, என்ன? தற்போதைக்கு சாத்தியமே இல்லை. வேண்டுமானால், இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, ஓய்வு நேரம் அதிகமிருக்கும் சமயத்தில் ஆரம்பிக்கலாம்.

இப்ப போய் கேட்டா, ”நம்ம கையில என்ன இருக்கு? எல்லாம்...” என்று சொல்லி மேலே கையைக் காட்டுவார்.

---

நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பும் போது, விண்ணப்பித்தவர்களைப் பற்றி அறிந்துக்கொள்ளவும், ஒருக்கட்டத்திற்கு மேல் வடிகட்டுவதற்கும், சமீபகாலங்களில் அவர்களின் பெயரை இணையத்தில் தேடி, அதன் மூலம் அவர்களின் குணாதிசயங்களை தேர்வாளர்கள் தெரிந்துக்கொள்கிறார்களாம்.

உதாரணத்திற்கு, உங்கள் பெயரை கூகிளில் தேடுங்கள். பேஸ்புக், ப்ளாக், ட்விட்டர், லிங்க்இன் - இப்படி எதிலாவது உங்கள் பக்கத்தை எடுத்துக்காட்டும். அப்படியே அங்கு இருப்பதை பார்த்தால், உங்கள் மறுபக்கம் தெரிந்துவிடும்.

நீங்க கேவலமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்திருந்தால், மானாவாரியாக கவர்மெண்ட்டை திட்டி, நிறுவனங்களை திட்டி பதிவெழுதியிருந்தால், ஆப்பு நிச்சயம். என்ன தான் நிறுவனங்கள் கருத்து சுதந்திரத்தை அனுமதித்தாலும், அநாகரீகமாக சொல்லப்படும் கருத்தை ஏற்க போவதில்லை.

இதற்கு தான் புனைப்பெயர்கள் உதவுகிறது. ஆனால், அதிலும் சிலர் ஆர்வகோளாறில் தங்களது போட்டோவை போட்டுவிடுவார்கள். ஆக, இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, அதுவும் வேலைக்கு ஆகாது. அப்படி இப்படி குலுக்கி போட்டு கண்டுப்பிடித்துவிடுவார்கள். அதனால், இம்மாதிரி சிக்கல்களில் சிக்காமல் இருக்க, ஒழுக்கமாக எழுதவும். இதுவரை ஏதாவது வில்லங்கமாக எழுதியிருந்தால், உடனே தூக்கிவிடுங்கள். ஆமா, அப்படியே நாம் தூக்கினாலும், கூகிள் கேச் விடவா போகிறது?!!!

இனியாவது இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு பதிவெழுதவும். இல்லாவிட்டால், முற்றிலும் வேறொரு முகமூடியுடன் பதிவெழுதவும்.

ஆனால், அதில் மல்டிபிள் டிஸ்ஆர்டர் வியாதி வரும் ஆபத்து இருப்பதால், ஒழுக்கமே விழுப்பம் தரும்.

.

Tuesday, July 6, 2010

ப்ளாக்கர் - பின்னூட்ட பிரச்சினை

ப்ளாக்கரில் வலைத்தளம் வைத்திருப்பவர்கள், இன்று தலையை பிய்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள்.



உங்கள் பதிவுக்கு ‘இத்தனை’ பேர் பின்னூட்டமிட்டு இருக்கிறார்கள் என்று ப்ளாக்கரின் முதல் பக்கத்தில் கணக்கு காட்டும். என்னவென்று பார்க்க மாடரேட் பக்கத்திற்கு சென்றால், ஒன்றும் இருக்காது.

இப்பிரச்சினை பலருக்கு இருக்கிறது. ப்ளாக்கர் டீம் சரி செய்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது.

பதிவை போட்டுவிட்டு, என்னடா இது யாரும் ஒண்ணும் சொல்லலையே? என்று குழப்பமடையவோ, வருத்தமடையோ வேண்டும். இது உங்க குத்தம் இல்லை. ப்ளாக்கர் குத்தம்.

மறைந்து போகும்/மறைக்கப்படும் பின்னூட்டங்களைப் பார்க்க ஒரு வழி. பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை பார்க்க, மெயில் ஐடியை செட் செய்து வைத்துக்கொள்வது. (Blogger -> Settings -> Comments -> Comment moderation/Comment Notification Email)

சில பதிவுகளைப் பார்க்கும் போது, நல்லவேளை இன்று பின்னூட்டம் வேலை செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது.

தற்போது இப்பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், அவ்வப்போது error என்று பல்லிளிக்கிறது.

.

Thursday, June 24, 2010

சில ’புரியல’கள்



வயசு பசங்க, ஒரு வயசு பொண்ணப்பார்த்து, ‘சூப்பர் பிகர்’ என தங்களுக்குள் பேசிக்கொள்வது ஆணாதிக்கமா?

---

தம் அடிப்பவனும், தண்ணி அடிப்பவனும் சமூக ஒழுக்கத்தைப் பற்றி பேசலாமா? கூடாதா?

---

வாதம் செய்கிறேன் என்று வாய்ப்பே கொடுக்காமல் வகுந்தெடுப்பது பாசிசமா? இல்லையா?

---

அவனவன் அவன் வேலையையும், வீட்டையும் ஒழுங்காக பார்த்துக்கொண்டாலே, சமுதாயம் அதுவா முன்னேறும் என்கிறார்களே, உண்மையா?

---

ராவணன் பிராமணன் என்றும் வாசித்திருக்கிறேன். ராவணன் திராவிடன் என்றும் வாசித்திருக்கிறேன். எது உண்மை? இரண்டும் உண்மையா?

---

ராமரை கும்பிட்டால், ராமாயணம் வெறும் கதை எனக்கூறுபவர்கள், ராவணனை வெறும் படமாக பார்க்கவிடாமல், ராமாயண அரசியலை ஏன் உள்ளே இழுக்கிறார்கள்?

---

ஹீரோயிச ராவணன், கிளாமர் சீதை, சூழ்ச்சிக்கார ராமன், சரக்கடிக்கும் அனுமர் என இருந்தும் திராவிட நாத்திகர்கள் ஏன் மணிரத்னத்தை ரவுண்ட் கட்டுகிறார்கள்? அதற்கேற்ப காரணங்களை எப்படி பிடிக்கிறார்கள்?

---

முதலாளித்துவம் கெட்ட சொல்லா? முதலாளிகள் அனைவரும் கெட்டவர்களா?

---

நல்ல முதலாளிகள் யார் யார்? அப்படி யாருமே கிடையாதா? நல்ல முதலாளி ஆவது எப்படி?

---

நமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியும் கெட்டவரா? அவர் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டே, அவரையோ, அவரை போல சிந்தாந்தம் கொண்டவர்களையோ கெட்ட விதமாக விமர்சிப்பது சரியா?

---

முதலாளிகளையும், அவர்கள் தரும் சம்பளம், இன்னபிற வசதிகளையும் உதறி தள்ளிவிட்டு நியாயம் பேசுவதுதான் சரியாமே?

---

எடுக்கப்படும் சினிமா அனைத்திலும் நியாயமான சமூக அரசியல் தீர்வுகளை எதிர்ப்பார்ப்பவர்கள், பொழுதுபோக்கிற்கு நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ எங்கு செல்வார்கள்?

---

பொதுவுடமை பேசும் பதிவர்கள் ஏன் தங்கள் பதிவுகளை முழுதாக ரீடரில் காட்டுவதில்லை?

---

பைரேட்டட் மைக்ரோசாப்ட் மெஷினில், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து, தாராளமயமாக்கத்தை எதிர்த்து கூகிள் ப்ளாக்கரில் பதிவெழுதி, அதையே அடோப் பிடிஎப் பைலாகவும் மாற்றி நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது சரியா?

---

இத்தனை இஸங்களை தெரிந்துக்கொண்டு, சுற்றி இருப்பவர்களை ரப்ச்சர் பண்ணி வாழ்வது சிறந்ததா? இது பற்றி எதுவும் தெரியாமல் சாதா மொக்கைகளைப் போட்டு ஜாலியாக வாழ்வது சிறந்ததா?

.

Tuesday, December 1, 2009

என்னாதிது?!!!

இன்று தான் கவனித்தேன்...

Notable & Must Read Tamil Blogs: List II

-----

தமிழ்ப் பதிவுகளில் ஏற்கனவே 1-10 பட்டியல் போட்டது போல் அடுத்த பத்து போட்டு பார்க்கும் ஆசை. அடுத்த பத்து வலைப்பதிவுகளுக்கான 10 காரணங்கள்:

  1. முதல் பதிவு முழுக்க நேம் ட்ராப்பிங். இது ட்ரீம் ரைட்டிங்.
  2. எப்படி இட ஒதுக்கீடு? அடிக்கடி எழுதவேண்டும். தினந்தோறும் எழுதும் ஆர்வத்தில், செய்தித்தளங்களை சக்களத்தி ஆக்கிக் கொள்ளாமல், கருத்து கனகாம்பரங்களை மட்டும் வெறும் முழம் போடாமல் இருக்க வேண்டும்.
  3. அப்பொழுது பத்ரி. இப்பொழுது சன்னாசியின் இடப்புறத்தில் இடம் இருக்கிறதா?
  4. போன தடவை லக்கிலுக் உரல் காண்பித்து கூட்டம் கூட வைத்தார். இந்த முறையும் அந்த மாதிரி செய்யத் தகுந்த எவராவது ஒருவருக்காவது இடந்தர வேண்டும்.
  5. எமக்குப் பிடித்தது 3 மேட்டர்: சினிமா, அனுபவம், இலக்கிய அரசியல். இதைப் பற்றியெல்லாம் யார் ரெகுலரா எழுதறாங்களோ… அவங்க.
  6. தொடர்புள்ள பதிவு: முந்தைய 30 இட்டதில் இருந்து உருவலாம்
  7. சென்ற பத்து பதிவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவர்கள். பலர் அச்சு ராசியும், புத்தக லக்கின ஜாதகமும் கொண்டவர்கள். இந்தப் பட்டியலில் பலரும், எல்லோரும் அறிந்த எக்ஸ்க்ளூசிவ் இணைய எழுத்தாளர்கள்.
  8. யாம் படிப்பது பெறுக இவ்வையக விரிவு வலை.
  9. இன்று செப். 2; அப்படியானால் இரண்டாம் ஸ்டேஜ் பதிவர் ரிலீஸ்.
  10. உரிமைதுறப்பு: ‘மன்னன்‘ படத்தில் ரஜினி கேட்கும் கேள்வி: ‘ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா!’


எந்த வரிசையிலும் இல்லை.

---

எல்லோருக்கும் ரொம்ப நன்றி... :-)

.