Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Monday, October 2, 2017

ஃபெட்னா பேரவை விழா - தயாராகும் மின்னசோட்டா

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னாவின் (FETNA) பேரவை விழா, இந்தாண்டு மின்னசொட்டாவில் மின்னியாபொலிஸ் கன்வென்சன் சென்டரில் (Minneapolis Convention Center) நடைபெறவுள்ளது. இதற்காக அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் ட்வின் சிட்டீஸிற்கு ஜூலை முதல் வாரம் (July 1st and 2nd) வருகை தர உள்ளனர்.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாகக் கயானா பிரதமர் மோசசு வீரசாமி நாகமுத்து, இலினொய் மாநிலத்தின் கீழவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய பாராளுமன்ற உறுப்பினர் டி. ராஜா, நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், ரோகிணி, கிட்டி, மிஷ்கின், எழுத்தாளர்கள் சுகிர்தராணி, சுகுமாரன், மரபிசை பாடகர்கள் நல்லசிவம், ஜெயமூர்த்தி, நடிகர் சின்னி ஜெயந்த், திரைத்துறை பாடகர் அருண்ராஜா ஆகியோர் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள்.

இவர்கள் இவ்விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக்கொள்ள இருக்கிறார்கள். “தமிழர் கலையைப் போற்றிடுவோம்!! தமிழர் மரபை மீட்டெடுப்போம்!!” என்னும் கருப்பொருளைக் கொண்டு இவ்விழா நடைபெற இருப்பதால், அது சார்ந்த தலைப்புகளில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரோகிணி அவர்கள் “தமிழ் மரபுகள் மீட்கப்படுகின்றனவா? அழிக்கப்படுகின்றனவா?” என்னும் தலைப்பில் கருத்துக்களம் நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். கவிஞர் சுகிர்தராணி அவர்கள் “தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ?” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

தமிழறிஞர் வானமாமலை அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றிடும் வகையில், அவருடைய மூலக்கதையில் உருவான “மருதநாயகம்” நாடகம் பேராசிரியர் ராஜூ அவர்களின் குழுவினரால் ஃபெட்னா பேரவை விழாவில் மேடையேற்றப்படுகிறது. தமிழர்களின் பலநாள் வெள்ளித்திரை எதிர்பார்ப்பான “மருதநாயகம்”, மின்னசோட்டாவில் அரங்கேறப்போவது இந்த நிகழ்வின் சிறப்பு. இதற்கெனப் பேராசிரியர் ராஜுவுடன், இசை ஆய்வாளர் முருகவேல், ஆய்வாளர் சமணராஜா, ஆராய்ச்சியாளர் சந்தோஷ், முனைவர் பினுகுமார் ஆகியோர் இந்தியாவில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு மின்னசோட்டா வந்தனர். அவர்களுடன் தேர்ந்தெடுக்க உள்ளூர்வாசிகள் இணைந்து இதற்கான நாடகப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல், தமிழ் நாடகக்கலையின் தந்தை எனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றியைம்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அவருடைய “சாரங்கதாரா” நாடகமும் இவ்விழாவில் இடம்பெறுகிறது.

விழாவின் கருப்பொருள் (Theme), சின்னம் (Logo) உருவாக்கத்தில் தொடங்கி, இந்த நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின்னசொட்டா தமிழ் சங்கத்தினர், ஃபெட்னா அமைப்பினருடனும், பிற தமிழ் சங்க உறுப்பினர்கள், ஆர்வலர்களுடன் இணைந்து செய்துக்கொண்டு வருகின்றனர்.

மின்னசொட்டா மாநில அரசின் நிதி உதவியுடன், இங்கிருப்போருக்குத் தமிழ் பண்பாட்டு இசைக் கருவிகளான பறை, தவில், நாகசுரம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்க, நாகசுர வித்வான் மாம்பலம் ராமசந்திரன், தவில் வித்வான் அடையார் சிலம்பரசன், பறை கலைஞர் சக்தி ஆகியோர் ஏற்கனவே மின்னியாபொலிஸ் வந்திருந்து இங்கிருக்கும் ஆர்வமிக்க மாணவர்களுக்குக் கடந்த சில வாரங்களாகப் பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஹாப்கின்ஸ் பள்ளிகளுக்கு, இவர்கள் பயிற்சியளிக்கும் சமயம் ஒருநாள் சென்று வந்தால், நாமிருப்பது அமெரிக்காவா என்ற சந்தேகம் வந்து விடும்.

இந்த இசை கலைஞர்கள், இவர்களிடம் பயின்ற மாணவர்களும் இணைந்து, ஃபெட்னா பேரவை விழாவில் இசைக்கப் போகிறார்கள். விருந்தினராக வருகை தரும் மற்ற இசை கலைஞர்களுடன் இணைந்தும், இசை நிகழ்ச்சி வழங்கப் போகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு அடுத்தப்படியாகப் பறைக்குழுக்கள் அதிகம் உள்ள அமெரிக்காவில், முதல்முறையாக இவ்விழாவில் 133 அதிகாரப் பறை முழக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 133 பறை இசைகலைஞர்கள் மேடையில் தோன்றி பறை இசையில் அதிர வைக்கப் போகிறார்கள். பண்ணிசை பாடகரும், பேராசிரியருமான நல்லசிவம் அவர்கள் பண்ணிசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். 'நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ், மக்களிசை கலைஞர் ஜெயமூர்த்தி, சின்னதிரை பாடகர்கள் நிரஞ்சனா, ஸ்ரதா, ராஜகணபதி ஆகியோர் இணைந்து மெல்லிசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்கள்.

மக்களிசையுடன் கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், புலியாட்டம் போன்ற மரபு ஆட்டமும் இடம்பெற இருக்கின்றன. இவற்றுடன் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்று தமிழர் நில ஐந்திணைகளையும் கருப்பொருளாகக் கொண்டு ஒரு பரத நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இசையுடன் கூடிய சிலம்ப நிகழ்ச்சியும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழர் மரபு கலைகளை, அமெரிக்காவில் உள்ள அடுத்தத் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இலக்கிய ஆர்வலர்களைக் கவரும் இலக்கிய வினாடி வினா, குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, வினாடி வினா ஆகியவை கொண்ட தமிழ்த் தேனீ, திருக்குறளைக் கூறும் குறள் தேனீ ஆகிய போட்டிகளும் இந்த விழாவில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், இதற்கான பயிற்சிகளில் கடந்த சில வாரங்களாகவே ஈடுபட்டு வருகின்றனர்.

முதன்மை மேடையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற, இணையரங்க நிகழ்வுகளாகப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம், திரைப்பட, குறும்படப் பயிற்சி பட்டறை, பேலியோ டயட் கருத்தரங்கம், குடியேற்ற சட்ட மாற்றங்கள் குறித்த கருத்தரங்கம், பண்ணிசை பயிற்சி பட்டறை எனப் பல்வேறு இணையரங்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. முழு நாள் நிகழ்வாக நடைபெற உள்ள தொழில்முனைவோர் கருத்தரங்கில், அமெரிக்க அவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஆச்சி குழும தலைவர் பத்மசிங், வேல்ஸ் பல்கலைகழகத் தலைவர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு பேச இருக்கின்றனர். அமெரிக்காவில் தொழில் தொடங்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு, இந்த நிகழ்ச்சி பெரும் உதவிகரமாக இருக்கும் என நம்பலாம். திரைப்படப் பட்டறையை இயக்குனர் மிஷ்கினும், பேராசிரியர் சுவர்ணவேலும் நடத்த இருக்கிறார்கள். பேலியோ டயட் கருத்தரங்கில், சமூக வலைத்தளங்களிலும், தமிழகத்திலும் பேலியோ டயட்டைப் பெருமளவு கொண்டு சேர்த்த நியாண்டர் செல்வன் அவர்கள் பேச இருக்கிறார்.

இவ்விழா நடக்கும் சனி, ஞாயிறு இரண்டு தினமும் மதிய உணவும், இரவு உணவும் விழா நடைபெறும் மின்னியாபொலிஸ் கன்வென்ஷன் செண்டரில் பரிமாறப்படுகிறது. வெள்ளி இரவு நடக்கும் நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் இருந்து ஞாயிறு இரவு வரையான விருந்துகளில் பல தமிழ் மரபு உணவுவகைகளும் பல்வேறு பிற வகை உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட உள்ளன. கருப்பட்டி மைசூர்பாகு, கருப்பட்டி பொங்கல், அதிரசம், கேழ்வரகு அடை, பச்சைபயிறு பாயாசம், பனங்கற்கண்டு பால் போன்ற சிறப்பு உணவுவகைகளுடன், தலப்பாகட்டி கோழிக்கறி, ஆட்டுக்கறி சுக்கா வறுவல், செட்டி நாட்டுக்கோழிக்கறி போன்ற அசைவ உணவுவிரும்பிகளைக் கவரும் பலவகை உணவுவகைகளும் உண்டு.

இந்த நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களுக்கான விழா முன்பதிவு, பயண ஏற்பாடுகள், தங்கும் வசதிகள், விழா மலர் தயாரிப்பு, விழா அரங்க அலங்காரம், பரிசுப் பொருட்கள் ஏற்பாடு, போக்குவரத்துத் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல், பயிற்சி, ஒத்திகை என இந்த நிகழ்வில் பங்குபெறும் ஒவ்வொருவரும் கடந்த சில வாரங்களாகக் கடும் உழைப்பைப் கொட்டி வருகின்றனர். மின்னசோட்டாவில் நடைபெறும் மிகப்பெரும் தமிழர் சார்ந்த விழா என்பதால், இதில் கலந்து மின்னசோட்டாவாசிகள் மட்டுமின்றிப் பிற மாகாணத்தினரும் பெரும் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மின்னசோட்டா வருவது மூலம், அவர்களுக்கு மின்னசோட்டாவைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும் சேர்ந்து கிடைக்கிறது.

ஆக, மின்னசோட்டா தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியத் தருணமாக, ஜூலை 1ஆம், 2ஆம் தேதிகளில் நடைபெறும் இந்தப் பேரவை விழா இருக்கப்போகிறது. இதில் கலந்துக்கொள்ள வாய்ப்புடைய அனைவரும் இந்த விழாவில் கலந்துக்கொண்டு, இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்குக்கொள்வது, இவ்விழாவின் வெற்றிக்குச் சாட்சியாக அமையும். இவ்விழாவில் பங்குக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எமது வாழ்த்துகள்.

.

Sunday, May 21, 2017

2016 - ஒரு பார்வை

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



எல்லா வருடங்களைப் போலவே, இந்த ஆண்டிலும் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிருக்கிறது. பல நல்லது கெட்டதுகளைச் சந்தித்திருக்கிறது. தூக்கி வாரிப்போடும் சம்பவங்களைச் சகஜமாகக் கடந்திருக்கிறோம். சிலது வெறும் சம்பவங்கள், சிலது மைல்கல்கள், சிலது திருப்புமுனைகள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் வகையில் முத்திரை பதித்திருக்கும் 2016ஆம் ஆண்டின் டைரிக்குறிப்புகளில் எழுதப்பட்ட முக்கிய உலக நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கலாமா?

கனடா தமிழர் பாரம்பரிய மாதம்

அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று, கனடா பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தைத் தமிழர் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்கும் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ் மொழியின் சிறப்பு, கனடிய தமிழர்கள் கனடா நாட்டிற்கு ஆற்றிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் கனடா நாட்டுப் பாராளுமன்றத்தில் ஏற்கப்பட்டது. ஜனவரி மாதத்தில் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை வருவதால், இம்மாதம் தமிழர் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படப்போகிறது. இதில் அரசியல் நோக்கம் இருக்கிறது என்று குரல்கள் கேட்கப்பட்டாலும், தமிழர்களுக்கு இது ஒரு இனிமையான செய்தி. இது போன்ற சட்டங்களும், நடைமுறைகளும் அனைத்து நாடுகளிலும் வரப் போகும் நாள் தொலைவில் இல்லை.

தமிழகச் சட்டசபை தேர்தல்

தமிழ்நாட்டின் பதினைந்தாம் சட்டசபைக்கான தேர்தல் இந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. பொதுவாக, கடந்த சில ஆண்டுகளாக, திமுக-அதிமுக என இரு அணிகளாகப் பிரிந்து, பெரும்பாலான முக்கியக் கட்சிகள் அனைத்தும் தமிழகத் தேர்தலில் போட்டியிடும். இந்தாண்டு வித்தியாசமாக, பல அணிகள் மற்றும் பல கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு முன்பு வரை, பல அணி போட்டியாகத் தெரிந்த தேர்தல் களம், தேர்தல் முடிவுக்குப் பிறகு, பழையபடி, இருமுனை போட்டியாகவே அறியப்பட்டது. இந்தத் தேர்தலில் கட்சிகள் கற்ற பாடம், அவர்களது அடுத்தடுத்த தேர்தல் போட்டி முடிவுகளுக்கு உதவும் என்ற வகையில் 2016 தேர்தல், தமிழக அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான தேர்தல் எனலாம். 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஆளும்கட்சியே ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்ட தேர்தலும் இதுவே.

ஒலிம்பிக்

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ப்ரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்றது. இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் பத்தாயிரம் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் முதல் இடத்தை அமெரிக்காவும், இரண்டாம் இடத்தைப் பிரிட்டனும், மூன்றாம் இடத்தைச் சைனாவும் பிடித்தன. இந்தியாவிற்கு ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் கிடைத்தன. இரண்டுமே சிந்து, சாக் ஷி என்ற பெண் வீரர்களால் கிடைத்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு ஒன்று கூடக் கிடைக்கவில்லை என்பது இந்திய தேசப்பக்தி விளையாட்டு ரசிகர்களுக்குப் போதுமான செய்தியாக இருந்தது.

ப்ரெக்ஸிட்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது என்னும் முடிவுக்கு இவ்வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற வாக்குப்பதிவில் பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். இதன் தாக்கம், உலகமெங்கும் எதிரொலித்தது. உலகமெங்கும் உலகமயமாக்கலுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாகக் கருதுவதற்கு ஏதுவாக அமைந்த முடிவு இது. இந்த முடிவிற்குப் பிறகு, பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் விலகி, தெரெசா மே அவர்கள் பதவிக்கு வந்தார்கள். இதன் பாதிப்பு என்னவாக இருக்கும் எனப் பல கணிப்புகள் வந்தாலும், உண்மை நிலை, வரும் நாட்களில், நாடுகளின், அமைப்புகளின், நிறுவனங்களின் செயல்திட்டங்கள் மூலம் தெரிய வரும்.

ஜிகா வைரஸ்

கடந்த காலங்களில், தென் அமெரிக்க நாட்டு மக்களை, குறிப்பாகக் கர்ப்பிணி பெண்களைப் பதற வைத்துக்கொண்டு இருந்த ஜிகா வைரஸ், 2016 இல் உலகளவில் தனது ஆதிக்கத்தைக் காட்டத் தொடங்கியது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உடல் நல குறைவுடனும், சிறிய தலையுடனும் பிறப்பதாலும், அதைக் குணப்படுத்தக்கூடிய மருந்து இன்னமும் கண்டுப்பிடிக்க இயலாத நிலையில், அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாட்டின் அரசுகள், அதன் மக்களைக் குழந்தை பெறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தும் நிலை ஏற்பட்டது. ஜனவரி 2016ல் உலகச் சுகாதார மையம், இந்த வைரஸ் அமெரிக்காவெங்கும் பரவும் நிலை இந்தாண்டு இறுதிக்குள் ஏற்படும் என்று எச்சரிக்கை மணி அடித்தது. ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட ப்ரேசில் நாட்டில் இந்தாண்டு ஒலிம்பிக்ஸ் நடக்க, இது மேலும் பரவும் என்று உலகளவில் அச்சம் ஏற்பட்டது. நவம்பர் 2016இல் உலகச் சுகாதார மையம் தனது எச்சரிக்கை அளவைக் குறைத்துக்கொண்டது, இவ்வருடத்தின் நிம்மதி எனலாம்.

சிரியா போர் அகதிகள்

2011 இல் ஆரம்பித்த உள்நாட்டு போர், உலக நாடுகளின் பங்களிப்புடன் இன்னமும் தொடர்ந்து வருகிறது. உலகில் அதிகளவில் அகதிகளை உருவாக்கிய போர் இது என்று வர்ணிக்கப்படுகிறது. சிரியா அகதிகளின் பிரச்சினை உலகளவில் விவாதிக்கப்படும் நிலை 2016 இல் உருவானது. இது ஐரோப்பிய நாடுகளிடையே அகதிகளாகக் குடியேறும் மக்களை ஏற்பதில் முரண்பாட்டை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலிலும் விவாதப்பொருளாக இருந்தது. ஒம்ரான் என்னும் போரில் பாதிக்கப்பட்ட சிறுவன், ஆம்புலன்ஸில் ஆரஞ்சு நிற சீட்டில் அழாமல் தனது கூரியத் துக்கத்தை வெளிப்படுத்திய புகைப்படம், உலகளவில் சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை உண்டாக்கியது.


தமிழ் சினிமா

இந்தாண்டு இதுவரை 180க்கு மேலான திரைப்படங்கள் வெளியாகி உள்ள தமிழ் திரையுலகில், வழக்கம் போல் வெற்றி விகிதம் குறைவே. ரஜினி முருகன், பிச்சைக்காரன், தெறி, கபாலி, ரெமோ போன்ற படங்கள் வசூலில் வெற்றிபெற, இறுதிச்சுற்று, விசாரணை, ஜோக்கர், மனிதன், அப்பா, குற்றமே தண்டனை போன்றவை விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படங்களாக வந்தன. இதில் விசாரணை ஆஸ்கருக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டது மகிழ்வைக் கொடுத்தாலும், அது இறுதிசுற்றுக்குத் தேர்வுபெறாமல் போனது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்தது. அதே சமயம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பீலே படத்திற்காக இன்னமும் ஆஸ்கர் போட்டியில் இருப்பது, நம்மவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் செய்தி. 2016 இல் நிகழ்ந்த கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம், கவிஞர் நா. முத்துக்குமார், கவிஞர் அண்ணாமலை போன்றோரின் மரணங்கள், திரையுலகினர் மட்டுமில்லாமல், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஜியோ மொபைல்

ரிலையன்ஸ் நிறுவனத்தால், செப்டம்பர் மாதம் இந்திய மார்க்கெட்டில் இறக்கிவிடப்பட்ட ஜியோ மொபைல் சேவை, பயனாளிகளுக்கு இலவசத்தை அள்ளிவிட, இந்திய அலைபேசி சேவை தனது அடுத்தக்கட்டத்திற்குத் தாவியது. இலவச உள்நாட்டு அழைப்புகள், சல்லிசான விலையில் 4ஜி இணையச்சேவை போன்றவை, பிற இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. சேவை அறிமுகமான ஒரே மாதத்தில் 16 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பிடித்தார்கள். 83 நாட்களில் 50 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற பொழுது, இது எந்த நாட்டிலிலும் இல்லாத ரெக்கார்ட் ஆனது. இதற்கு முன்பு, ஏர்டெல் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சேர்க்க 12 வருடங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. வருங்காலப் பரிமாற்றங்கள் அனைத்தும் அலைபேசி வழியே என்னும் நிலை இந்தியாவில் வருவதற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட அதிரடி தொடக்கம் இது எனலாம். உண்மையான பயன் யாருக்கு என்பது போகப் போகத் தான் தெரியும்.

அமெரிக்கத் தேர்தல்

உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த 58வது அமெரிக்கத் தேர்தலில் பாப்புலர் வாக்குகளின் முடிவுகள், நவம்பர் 9 ஆம் தேதியன்று வெளியானது. பெரும்பாலான கணிப்புகளுக்கு நேரெதிராக இத்தேர்தலில் அமெரிக்கத் தொழிலதிபர் ட்ரம்ப் அவர்கள் வெற்றிப்பெற்றது, அனைவருக்குமே வியப்பை அளிப்பதாக இருந்தது. பிரமிளா ஜெயபால், கமலா ஹாரிஸ், ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமி பேரா ஆகிய இந்திய வம்சாவழி வேட்பாளர்கள் இத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி இத்தேர்தலில் தோல்வியடைய, பிரச்சாரத்தின் போது சர்ச்சைகள் பல கிளப்பிய ட்ரம்ப் வெற்றிப்பெற்றதால், நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புப் பேரணிகள் சில நாட்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தல் முடிவில் ரஷ்யாவின் பங்கு இருக்கிறது என அடுத்தச் சர்ச்சை கிளம்ப, தேர்தல் சூடு இன்னமும் அணையாமல் இருக்கிறது. ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க அதிபராக 2017 ஜனவரியில் பதவியேற்க உள்ளார். தற்சமயம், தன்னுடன் அமைச்சர்களாகப் பணிபுரிய உள்ள சகாக்களைத் தேர்ந்தெடுப்பதில் பிசியாக உள்ளார்.

ரூபாய் 500 & 1000 பண மதிப்பிழப்பு

கருப்புப்பணத்தை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியினால், நவம்பர் 9ஆம் தேதியன்று ஐநூறு, ஆயிரம் ரூபாய் தாள்கள் மதிப்பிழக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒருபக்கம் கருப்புப்பணத்தை அழிக்கும், கள்ளப்பணத்தை ஒழிக்கும், தீவிரவாதத்தைக் குறைக்கும், மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் என்று ஆதரவு குரல்கள் கேட்டாலும், மறுபக்கம் ஏடிஎம் வாசலில் பணத்திற்காகக் காத்திருக்கும் மக்களிடம் இருந்து எழுந்த கோபக்குரல்கள் குறைந்த பாடில்லை. இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார மேம்பாட்டுக்கு இது கண்டிப்பாக உதவும் என்று நம்பிக்கை கூறப்படும் இந்த நடவடிக்கை, இந்த ஆண்டின் முக்கியமான இந்தியப் பொருளாதார நிகழ்வு என்றால் அது மிகையில்லை. முடிவு எப்படி இருக்கும் என்பது வரும் ஆண்டுகளில் தான் தெரியும்.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்

ஜெயலலிதாவிற்கு அரசியல் உச்சத்தையும், வாழ்வின் மறைவையும் ஒருங்கே பதிவுச் செய்த வருடம் இது. மே மாதம் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்கு பிறகு, தொடர்ச்சியாக ஆட்சியைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொண்டார். செப்டம்பர் மாதம், உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதியன்று மரணித்தார். ஜெயலலிதா அவர்களின் மரணம், அவருடைய கட்சியான அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதால், இது ஒரு புதுத் தலைமையை உருவாக்கும் சூழலைக் கொண்டு வந்து தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

சென்னை வர்தா புயல்

2004 ல் சுனாமி, 2015 ல் வெள்ளம் என்று இயற்கை பேரிடர்களைச் சந்தித்த சென்னை மக்கள், இந்தாண்டு எதிர்க்கொண்டது, வர்தா புயலை. பாகிஸ்தானால் வர்தா என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் புயல், டிசம்பர் 12 ஆம் தேதியன்று சென்னையைக் கடக்க, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் அடித்த புயல் காற்றின் வீரியத்தை, இந்தத் தலைமுறை மக்களால் நேரடியாகக் காண முடிந்தது.. மரங்கள், மின் கம்பங்கள், வாகனங்கள் எனப் புயலில் அடித்துக் கவிழ்க்கப்பட்ட சேதாரங்கள் ஏராளம். இதுவும் கடந்து போகும் என்று சென்னை மக்கள் சில நாட்களில் சகஜ வாழ்வுக்குத் திரும்பினர்.

பிரபலங்களின் மரணங்கள்

2016 இல் உலகின் பல பிரபலங்களின் மரணங்களைக் காண வேண்டியதாகப் போனது. கியூபப் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ அவர்கள் நவம்பர் 25ஆம் தேதியன்று மறைந்தார். இது கியூபா மட்டுமின்றி உலகமெங்கும் அவரைப் பின் தொடர்ந்து வந்தவர்களைக் கவலையுறச் செய்தது.

மினசோட்டாவைச் சார்ந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான ப்ரின்ஸின் மரணம், மினசோட்டாவில் அவரைப் பற்றியே சில நாட்கள் அனைவரையும் பேச வைத்தது. ஏப்ரல் 21க்குப் பிறகான நாட்களில், எங்கும் செவ்வூதாவாக இருந்தது. அவர் மரணம் மினசோட்டா மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தை அந்நாட்களில் நேரடியாகக் காண முடிந்தது,

தமிழ்நாட்டின் மூத்த கர்னாடக இசைக்கலைஞரான பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் நவம்பர் 22ஆம் தேதி அன்று மறைந்தார். பாடல்கள் மட்டுமின்றித் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். பலருக்கு இசை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அவர் பெறாத விருதில்லை எனலாம். அவரின் மரணம், கண்டிப்பாக இசையுலகிற்குப் பெரும் இழப்பே.

மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் யுக்தியாளருமான சோ ராமஸ்வாமி, டிசம்பர் 7ஆம் தேதியன்று மறைந்தார். பத்திரிக்கையாளர், அரசியல் ஆலோசகர் என்பதெல்லாம் அவருடைய சுருக்கமான அடையாளங்கள். மேடை நாடக, சினிமா மற்றும் டிவி நாடக நடிகர், இயக்குனர், வக்கீல், எம்பி, எம்டி என்று அவர் பார்த்த வேலைகள் ஏராளம். பழகிய ஆளுமைகள் பலர். கொண்ட அனுபவங்கள் எக்கச்சக்கம். ஹாஸ்ய உணர்வு மிக்கவர். எவ்வளவு பேருக்கு அவரைப் பிடிக்குமோ, அதே போல் அவர் மேல் வெறுப்புக்கொண்டவர்களும் ஏராளம். ஆனால், அது எதையும் கண்டுக்கொள்ளாமல், தன் கருத்தைப் பயப்படாமல், எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே.

இப்படி மரணித்த பிரபலங்கள் மட்டுமின்றி உதித்த பிரபலங்கள் பலர் இந்த ஆண்டில் உள்ளனர். அவர்களெல்லாம் யார் என்பதை வருங்காலம் அடையாளம் காட்டும்!!

2016 உங்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அது வரும் ஆண்டில் நல்ல பலன்களைக் கொண்டு வர, அனைவருக்கும் எங்களது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

.

Friday, September 23, 2016

மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.





டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
“இயல், இசை, நாடகத்தில் ஆர்வம் கொண்ட பெருமக்களே!! உங்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் பதினான்காம் தேதி வரை, மினியாபோலிஸில் ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் (Fringe Festival) நடக்கப் போகிறது. அதிலும், மிக முக்கியமாக, தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தெருக்கூத்தாக மேடையேறப் போகிறது. மதுரையை எரித்த கண்ணகியை, மினசோட்டாவில் காண வாய்ப்பு.
அது போலவே, சென்ற வருடம், சாதனை படைத்த நிகழ்ச்சியை அளித்த பாலிவுட் டான்ஸ் சீன் குழுவும் தங்கள் பங்குக்கு, தங்களது பிரத்யேக நகைச்சுவை, நடன, நாடகத்துடன் கலக்க இருக்கிறார்கள். தவற விடாதீர்கள்!!...”
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
----
மேலே போவதற்கு முன், லைட்டாக ஃப்ரிஞ்ச் வரலாற்றைப் பார்த்து விடலாம். 1947 ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பராவில் இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் தொடங்கப்பட்டது. அதுவரை, இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்டு, களைத்துப் போன மக்களுக்கு, புத்துயிர் ஊட்டும் விதமாகவும், ஐரோப்பிய கலை வடிவங்களை மேடையில் அரங்கேற்றும் விதமாகவும், இந்த எடின்பரா இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் கலந்து கொள்ளச் சென்ற எட்டுக் குழுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த எட்டுக் குழுக்களும், இதனால் சோர்ந்து வீடு திரும்பிவிடவில்லை. நகரின் முக்கிய அரங்கங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நடக்க, இன்னொரு பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட குழுவினர், நகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில், தங்களின் படைப்புகளை மேடையேற்றினார்கள். அதற்குக் கிடைத்த வரவேற்பு தான், ‘எடின்பரா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்’ என்று வருடந்தோறும் பெரும் வரவேற்புடன் தொடரத் தொடங்கியது. எடின்பராவில் தொடங்கிய இந்தப் பயணம் இன்று உலகம் முழுக்கப் பிரபலமாகி, பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஃப்ரிஞ்ச் என்றால் குஞ்சம், ஜரிகை போல் ஓரத்தில் செய்யப்பட்ட அலங்காரங்கள். அதிகாரப்பூர்வ விழா, ஒரு பக்கம் நடக்க, இன்னொரு ஓரத்தில் நடத்தப்பட்ட, இந்தச் சிறு, குறு நிகழ்ச்சிகளும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க, ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் இந்த விழாக்கள் பிரபலம் அடையத் தொடங்கின.
இந்த ஃப்ரிஞ்ச் விழாவில் கலந்து கொள்வதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ விதிமுறைகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அனுபவம், குறிப்பிட்ட கலை வகை, பிரபலம் என்று எந்தத் தகுதியும் தேவையில்லை. இங்குக் கலைக்குத் தணிக்கை கிடையாது. உண்மையான ஜனநாயகம். அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அந்தந்தச் சமூகத்தின் பக்குவத்தைப் பொறுத்தது. அனைவருக்கும் மேடை கிடைப்பது மூலம், தகுதி படைத்தவர்கள் வளருவார்கள். திறமை கொண்டவர்கள் பாராட்டுப் பெறுவார்கள், சமூகப் படைப்பாளிகள் சிந்தனையைத் தூண்டுவார்கள்.
---
1994இல் இருந்து மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில், முதலில் வருபவர்களுக்கு வாய்ப்பு என்ற முறையில், பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 2004இல் இருந்து, அந்த முறை மாற்றப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வு என்ற நடைமுறை வந்தது. அமெரிக்காவின் மிகப் பெரிய ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்களில் ஒன்று, மினசோட்டா ஃபெஸ்டிவல்.
இந்தாண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை, நகரின் பல்வேறு அரங்கங்களில் நடைபெறுகிறது. சில நிகழ்ச்சிகள், காட்சியின் தேவைக்கேற்ப வெளிப்புறங்களில், பிற இடங்களிலும் நடக்கும்.
இந்தாண்டு ஃப்ரிஞ்ச் திருவிழாவில், இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பில், இரு நாட்டிய நாடகங்கள் மேடையில் அரங்கேறுகிறது. மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 'The lost anklet’ என்ற தெருக் கூத்தும், பாலிவுட் டான்ஸ் சீன் குழுவின் சார்பில் 'Bezubaan - The Voiceless’ என்ற நடனத்துடன் கூடிய நாடகமும் மினசோட்டா ஃப்ரிஞ்ச் ரசிகர்களின் முன் மேடையேறுகின்றன.
---
தமிழர்களுக்குத் தொலைந்த சிலம்பைத் தெரிந்திருக்கும். இந்த ஃப்ரிஞ்ச் திருவிழாவில், தொலைந்த சிலம்பைப் பற்றியும், அதன் பின்னால் இருக்கும் காதல், பிரிவு, வலி, சோகம், கோபம் ஆகிய அனைத்தைப் பற்றியும் பிற மாநிலத்தவரும், நாட்டினரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ‘The lost anklet’ தெருக்கூத்தின் மூலம் உருவாகியுள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன், தமிழ் மண்ணில் இளங்கோவடிகள் எழுதிய காப்பியம், இன்றும் உலகின் வேறொரு பகுதியில் தமிழர்களால் மேடையேறும் சிறப்பை என்னவென்று கூற?

மாதவியின் நவரசம் கூடிய நடனம், கண்ணகியின் உணர்வு கலந்த ராகங்கள், மதுரைத் தமிழ் மண்ணின் சிறப்பிற்குரிய இசை எனக் கிட்டத்தட்ட 25 கலைஞர்களின் பங்களிப்பில், கீழே குறிப்பிடப்பட்ட தினங்களில் சதர்ன் தியேட்டரில் இந்தத் தெருக்கூத்து மேடையேறுகிறது. வண்ண மயமான ஒளி மற்றும் இனிமையான ஒலியுடன் கூடிய கலைப்படைப்பாக அரங்கேறுகிறது.
வெள்ளிக்கிழமை, 8/5 - 5:30pm
சனிக்கிழமை, 8/6 - 8:30pm
ஞாயிற்றுக்கிழமை, 8/7 - 5:30pm
வியாழக்கிழமை, 8/11 - 10:00pm
சனிக்கிழமை, 8/13 - 4:00pm
இந்தத் தெருக்கூத்து, ஏற்கனவே ‘சிலம்பின் கதை’ என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டு தமிழில் அரங்கேற்றப்பட்டு, மினசோட்டாத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இம்முறை பாடல்கள் தமிழிலும், வசனங்கள் ஆங்கிலத்திலும் அமைத்திருப்பது, இந்தக் காவியத்தின் அருமையையும், தமிழின் பெருமையையும் பிற மொழியினருடன் கொண்டு செல்லும் என்கிறார் இந்தத் தெருக்கூத்தின் இயக்குனர் சச்சிதானந்தன்.
---
பாலிவுட் டான்ஸ் சீன் என்னும் மினசோட்டாவைச் சேர்ந்த நடனக்குழு, கடந்த சில வருடங்களாகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் பெஸ்டிவலில் கலந்துக்கொண்டு கலக்கி வருகிறார்கள். சென்ற வருடம், அதிகப் பார்வைகள் கிடைத்த நிகழ்ச்சி, இவர்கள் நடனத்தில் உருவாக்கிய ‘Spicy Masala Chai’ என்ற நடன நாடக நிகழ்ச்சியாகும். மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் வரலாற்றில், அதிக டிக்கெட் விற்பனையைக் கண்ட நிகழ்ச்சி இதுதான் என்பது இந்தியர்களுக்குப் பெருமையளிக்கக்கூடிய தகவல்.
இது பற்றிய கட்டுரையை இங்கே காணலாம்.
இந்தக் குழு ‘Bezubaan: Voiceless’ என்னும் நடனத்துடன் கூடிய நாடகத்தை இம்முறை அரங்கேற்றுகிறார்கள். புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு, மக்களிடம் தேவைப்படும் மதச் சகிப்புத்தன்மை, பன்முகச் சமுதாயங்களிடையே உருவாகும் சமத்துவம் போன்ற கருத்துகளைப் பேசும் நாடகம் இது. கருத்து பேசினாலும், நகைச்சுவையும் நடனமும் இவர்களது முக்கிய பலம். பாலிவுட் மற்றும் பிறமொழித் திரைப்படப் பாடல்களின் கண்கவரும் நளின நடனம், பார்வையாளர்களின் கரவொலியைச் சந்தேகமில்லாமல் எழுப்பும் எனலாம். இந்த நாடகம், இண்டர்நேஷனல் மார்க்கெட் பின்னணியில் நடக்கும் கதை என்கிறார் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவின் அமைப்பாளர் திவ்யா.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் தினங்கள்,
வெள்ளிக்கிழமை, 8/5 - 5:30 pm
சனிக்கிழமை, 8/6 - 2:30 pm
ஞாயிற்றுக்கிழமை, 8/7 - 5:30 pm
புதன்கிழமை, 8/10 - 7:00 pm
சனிக்கிழமை, 8/13 - 2:30 pm
நிகழ்ச்சி நடைபெறும் இடம் - U of M Rarig Center Thrust
நடனம், நாடகத்தில் ஆர்வம் கொண்டவர்கள், மிஸ் செய்துவிடக் கூடாத நிகழ்வு - மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல். இதில் உங்கள் பங்கேற்பை உறுதி செய்து, நம்மவர்களுக்கு உங்களது ஆதரவை அளிக்கவும்.
மேலும் தகவலுக்கு,


.

Friday, March 30, 2012

நல்லவர்கள்

இன்று ஒரு நிகழ்ச்சியை இணையத்தில் பார்த்தேன். கண்டிப்பாக பகிர வேண்டும் என்று தோன்றியது.

---

கேரளாவில் லாட்டரி சீட்டு விற்றுவருகிறார் சுரேஷ். வறுமையான வாழ்க்கைதான். இவரிடம் ஒருநாள் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் லாட்டரி சீட்டு வாங்க வந்திருக்கிறார்.

பெரியவருக்கு திருமண வயதில் இரு பெண்கள். கஷ்டத்தில் இருப்பவர் தான். ஐந்து சீட்டுகள் வாங்கியவர், ”எவ்வளவு?” என்று கேட்க, சுரேஷ் “இருநூற்று ஐம்பது” என்று சொல்ல, “என்னிடம் இப்போது அவ்வளவு இல்லை. நாளை வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு பெரியவர் சென்று விட்டார்.

அடுத்த நாள், லாட்டரி சீட்டுக்கான ரிசல்ட் பேப்பரில் வந்திருக்கிறது. சுரேஷ் ரிசல்ட்டை பார்க்க, அதில் பெரியவர் எடுத்த ஐந்து சீட்டுகளில் ஒன்றிற்கு 1 கோடி பரிசு விழுந்திருக்கிறது.

சுரேஷை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ந்திருக்கிறார்கள். சுரேஷிற்கு நல்ல காலம் என்று. ஆனால், சுரேஷ் அந்த பணம் தனக்கு சொந்தமானதில்லை என்று உறுதியாக சொல்லியிருக்கிறார். அதைவிட முக்கியம், கஷ்டத்தில் இருக்கும் அவருடைய வீட்டினரும் அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.

சுரேஷ், பெரியவரை எப்படியோ தேடி கண்டுபிடித்திருக்கிறார். “உங்க சீட்டுக்கு பணம் விழுந்திருக்கிறது” என்று சொல்ல, பெரியவர் “நான் இன்னும் உங்களிடம், இதற்கான பணத்தை கொடுக்கவில்லையே? அப்படியென்றால் இது உங்களுடையது தானே?” என்று சொல்லி வாங்க மறுக்க, சுரேஷ் விடவில்லை. “இது நீங்கள் வாங்குவதாக சொல்லி, என்னிடம் வைத்திருக்க சொன்ன சீட்டு. இது உங்களுக்கு தான்.” என்று சொல்லி கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.

மலையாளியான இவருக்கு, நடிகர் பார்த்திபன் சென்னைக்கு வரவழைத்து, ராஜ மரியாதை கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்.

எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்? விக்ரமன் படத்தில் கூட இப்படிப்பட்ட நல்லவர்களைப் பார்க்கமுடியாது!!!

---

வீடியோ இங்கே இருக்கிறது.



பகிர வேண்டிய விஷயம்தானே? (இதை அப்படியே கட் & பேஸ்ட் செய்துகூட, நீங்களும் பகிரலாம்!)

.

Thursday, September 30, 2010

ஜட்ஜ்மெண்ட் டே

கல்லூரி காலத்திற்கு பிறகு, அரை நாள் விடுமுறை இன்று அதிகாரப்பூர்வமாக எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் எப்போதுமே அரை நாளுக்கு பிறகுதான், வேலையைத் தொடங்குவேன். நான் வேலையை தொடங்கும் சமயம், எல்லோரும் கிளம்ப தொடங்கிவிட்டார்கள். இரண்டரை மணிக்கு முக்கால்வாசி பேருக்கு மேல் அலுவலகத்தில் வெளியே சென்று விட்டார்கள்.



ஒரு நீதிமன்ற தீர்ப்பு, தேசத்தையே முழு எச்சரிக்கை நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. முன்பு ஒருமுறை காவிரி தீர்ப்பு வந்த சமயம், இப்படித்தான் பெங்களூரில் 3-4 மணிக்கே அனுப்பிவிட்டார்கள்.

வழியில் ஒருவர், ‘வெற்றி நமக்குதான்’ என்று ஏதோ கிரிக்கெட் போட்டி ரிசல்ட் மாதிரி பேசிக்கொண்டிருந்தார்.

உண்மையிலேயே அக்கறையுடன் சொன்னார்களோ இல்லையோ, எல்லா அரசியல்வாதிகளுமே ‘அமைதி அமைதி’ என பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். நியாயப்படி, இது அரசியல்வாதிகளை நோக்கி நாம் கூற வேண்டிய வார்த்தை. அவனவனுக்கு அவன் பிரச்சினை. லீவ் விட்டுவிட்டார்கள்.

அனைத்து டிவி ரிப்போர்ட்டர்களும், நீதிமன்றத்தை சுற்றி சுற்றி வந்தார்கள். நீதிமன்ற கேட், காவலுக்கு நின்ற போலீஸ் ஒருவரையும் விடவில்லை. பார்க்க காமெடியாக இருந்தது.

டைம்ஸ் நவ்வில் தீர்ப்பு வந்தப்பிறகு, அதை ஆராய்ந்து உண்மை நிலையை கூறுவோம். அதுவரை குத்துமதிப்பாக எதுவும் சொல்ல மாட்டோம் என்று நல்ல பிள்ளையாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதற்குள், மற்ற சானல்கள் டிக்கர் போட தொடங்கிவிட்டார்கள். டிஆர்பி போச்சே!

தீர்ப்பை நேரடியாக காண வேண்டும் என்று டிவி முன்பு உட்கார்ந்தவர்கள் எல்லாம், குழம்பிய நிலைக்கு சென்றிருப்பார்கள். கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணும் புரியவில்லை. ஆளாளுக்கு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். எது தீர்ப்பு, எது கருத்து என்றே தெரியவில்லை. பத்திரிக்கையாளர்களுக்குள் ஒரு அடிதடி வேறு நடந்தது. இவுங்க நம்மள அமைதியாக இருக்க சொல்கிறார்கள்!

தீர்ப்பு ஆன்லைனிலும் கிடைக்கும் என்றார்கள். கண்டிப்பாக சர்வர் தீய்ந்துபோய்விடும் என்று நினைத்திருந்தேன். அப்படியே ஆனது. ஊப்ஸ்! பேஜ் கேனாட்பி டிஸ்ப்ளேயிட்! இங்கு முழு தீர்ப்பும் கிடைக்கிறது.

மசூதியின் மையப் பகுதிக்கு, கீழே உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு ஆதாரமாக எதை எடுத்துக்கொண்டார்கள் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

---

சன் டிவியில் ‘படிக்காதவன்’ ஒளிப்பரப்பினார்கள். ஷங்கர் தான், ரஜினியை வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் எடுப்பாரா? அப்பவே, இயக்குனர் ராஜசேகர் இந்த படத்தில் ரஜினியின் ‘லக்‌ஷ்மி’ டாக்ஸிக்கு ஆர்ட்டிபிஸியல் இண்டலிஜென்ஸ் திறமையை கொடுத்திருந்தார். வண்டியில் கஞ்சா, சாராயம் வைத்துக்கொண்டு யார் ஏறினாலும், சத்தம் கொடுத்தப்படியே கிளம்ப மறுக்கிறது.

இரண்டாம் பகுதியில் வரும் கோர்ட் காட்சி நன்றாக இருக்கும். ‘அண்ணன் நீதிபதி, ஒரு தம்பி குற்றவாளி, இன்னொரு தம்பி சாட்சி’ என்று சிவாஜி சொல்லும் காட்சி அருமை. சிவாஜியிடம் காட்டும் மரியாதை, தம்பியிடம் கொட்டும் பாசம் எதுவும் ரஜினியிடம் வெறும் நடிப்பாக தெரியாது.

---

ஆண்டுக்கணக்கில் காத்திருந்து, முடிவில் இன்று தீர்ப்பு வெளிவந்துவிட்டது.

ஆமாம். எந்திரன் நன்றாக இருக்கிறதாம். ரஜினிக்கு ஆஸ்கரோ, தேசிய விருதோ கிடைக்க வாய்ப்புள்ளதாம்! :-)

.

Friday, September 24, 2010

அயோத்தி வழக்கு - வரலாறும் வருங்காலமும்

அயோத்தி இந்தியாவின் இதயப்பகுதியில் இருப்பதாலோ என்னவோ, அங்கு விழுந்த அடி காலத்திற்கும் இந்தியாவின் தேகமெங்கும் நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வேண்டுமானால் 1992 நிகழ்வு, பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கலாம். ஆனால், அடிப்படை பிரச்சினை 1885 யிலேயே வேர் விட தொடங்கிவிட்டது.



இந்து மத நம்பிக்கைபடி அயோத்தி, தசரதன் ஆண்ட நகரம். ராமர் பிறந்த மண். தற்போது இங்கு இருக்கும் பாபர் மசூதி, முகாலய அரசர் பாபரின் தளபதி மிர் பஹியால் கட்டப்பட்டது. அவரை இங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதியை கட்டினாரா என்பது இந்தியாவிற்கு தலைவலியை கொடுக்கும் சர்ச்சைக்குரிய கேள்வி. பதிலுக்கு மொத்த நாடும் காத்திருக்கிறது.

1885 இல் ரகுபர் தாஸ் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அயோத்தியில் பாபர் மசூதிக்கு பக்கமிருக்கும் அவருடைய நிலத்தில் ஒரு திண்டு (திண்ணை போன்ற மேடை) இருந்தது. அது தான் ராமர் பிறந்ததாக நம்பப்பட்டு வந்த இடம். அதில் கோவில் கட்ட அனுமதியளிக்கும் படி ஒரு வழக்கு தொடர்ந்தார். இடம் அவருடையதாக இருந்தாலும், பக்கத்திலேயே மசூதி இருப்பதால் கோவில் கட்ட அனுமதிக்க முடியாது என்று ஃபைசாபாத் துணை நீதிபதி தீர்ப்பளித்தார். இதே வழக்கு ஃபைசாபாத் மாவட்ட நீதிபதியிடம் செல்ல, அவரும் அனுமதி மறுத்தார். “என்னத்தான் இந்துக்களின் புனிதத்தலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டு இருந்தாலும், இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கட்டும்” என்றார் அந்த ஆங்கிலேயே நீதிபதி சம்பியர்.

பிறகு இரு மதத்தினரும் இந்த இடத்தில் வழிபாடு நடத்தி வந்தனர்.

1934இல் ஒரு பசு கொல்லப்பட்டதால் உருவான கலவரத்தில் மசூதி தாக்கப்பட்டது. அரசே அதை சரி செய்தும் கொடுத்தது.

எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது. 1949 இல் மசூதிக்குள் ஒரு ராமர் சிலை வைக்கப்பட்டது. யார் வைத்தது? எப்படி வைக்கப்பட்டது? தெரியாது. ஆனால், அதற்கு இந்துக்கள் கூட்டம் கூடியது. பூஜைகளும் நடத்தப்பட்டது. பிறகு கூட்டம் தடுக்கப்பட்டு, மசூதி பூட்டப்பட்டாலும், அந்த சிலை வெளியே எடுக்கப்படவில்லை. அந்த சிலையை வெளியே எடுக்க, யாருக்கும் தைரியம் வரவில்லை. அப்போதைய பிரதமர் நேரு ஆணையிட்டும், யாரும் எடுக்க தயாராக இல்லை. அந்த ஊர் மாஜிஸ்ட்ரேட், “என்னை வேலைவிட்டு போக சொன்னாலும் சொல்லுங்க, அந்த சிலை எடுக்க சொல்லாதீங்க” என்றார்.

ஃபைசாபாத் கமிஷனர் அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த சிலையை தற்சமயம் எடுப்பது சரிப்பட்டு வராது. கொஞ்ச நாள் பொறுப்போம். எல்லாம் அடங்கிய பிறகு முடிவெடுப்போம்.

அவர் சொன்னது போலவே சில காலம் ஏதும் பிரச்சினை இல்லாமல் சென்றது. 1949 இல் நகர மாஜிஸ்ட்ரேட் ஆணையின்படி, அந்த இடம் நகராட்சி சேர்மனால் கையகப்படுத்தப்பட்டது.

திரும்ப 1950 இல் கோபால் சிங் என்பவர் மசூதிக்குள் ராமர் சிலைக்கு பூஜை செய்ய அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும், உள்ளூர் பூசாரி ஒருவர் மட்டும் உள்ளே தினமும் சென்று வர அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டில் வழங்கப்பட்ட இன்னொரு வழக்கின் தீர்ப்பில், “இந்த மசூதி முஸ்லீம்களால் பல ஆண்டு காலம், வழிப்பாட்டுக்காக பயன்பட்டு வந்ததாகவும், அது ராமரின் வழிப்பாட்டு தலமாக இருந்ததில்லை எனவும்” கூறப்பட்டது. ராமர் சிலை ரகசியமாக, தவறாக உள்ளே வைக்கப்பட்டதாக அந்த தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டது.

1955 இல் அந்த இடத்திற்கு உரிமை கோரி நின்மோஹி அஹாரா என்பவரும், மொகமது ஹசிம் என்பவர் தலைமையில் ஐந்து முஸ்லிம்கள் அதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு தீர்ப்பளித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், தற்போது நிலவும் நிலையிலேயே நீடிக்குமாறு தீர்ப்பளித்தனர். பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆறு மாதத்தில் ஒரு முடிவு கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறினாலும், ஒன்றும் நடக்கவில்லை.

1961 இல் ஹசிம் இடத்தை முஸ்லீம்களிடம் திரும்ப வழங்க கோரி இன்னொரு வழக்கு தொடர்ந்தார். 1964 இல் இதை பற்றிய அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கிற்கு தீர்ப்பு நாள் குறிக்கப்பட்டது. 1968 இல் அந்த இடத்திற்கு ஒரு பொறுப்பாளரை நீதிமன்றம் நியமித்தது. ஆனால், 1971 இல் இன்னொரு வழக்கு தொடரப்பட்டதால் அவருக்கு வேலை இல்லாமல் போனது.

1983 இல் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த பிரச்சினையை பெரியளவில் எடுத்த செல்லும் வரை, அந்த வழக்கு கண்டுக்கொள்ளப்படவில்லை. பிரச்சினையின் தீவிரம் கூட கூட, ஃபைசாபாத் நீதிமன்றம் 1886இல் அந்த இடத்தை இழுத்து மூடியது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டை சந்தித்து ராம தரிசனத்திற்கு அனுமதி கோர, அதற்கு அவர் வழங்கிய ஆணை, கடும் சூட்டை கிளப்பியது. கலவரம் ஆரம்பித்தது.

நீதிபதி பாண்டே கூறியது என்னவென்றால், “இருதரப்பையும் விசாரித்ததில், அந்த இடத்தை திறந்து விடுவதாலும், சிலைகளுக்கு பூஜை செய்வதாலும் முஸ்லீம் மக்களுக்கு எந்த பிரச்சினை இல்லையென்று தெரிகிறது. திறந்துவிடுவதால் ஒன்றும் வானம் இடிந்து விழ போவதில்லை”.

இதை தொடர்ந்து வக்பூ வாரியமும், பாப்ரி மஸ்ஜித் செயல் குழுவும் அலாகாபாத் நீதிமன்றத்திற்கு சென்றனர். வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மதவாதிகளுக்கு இது முழு நேர தொழிலானது. கரசேவகர்கள் பிஸியானார்கள். 1990 இல் முலாயம் சிங் ஆட்சியில், கரசேவகர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தப்பட, இதை பிரச்சினையாக்கி பாரதீய ஜனதா உத்திரப்பிரதேசத்தில் 1991 ஆட்சியை பிடித்தது. பாஜக முதல்வர், மசூதியை சுற்றி அமைந்துள்ள இரண்டே முக்கால் ஏக்கரை, கோவில் கட்டுவதற்காக கையகப்படுத்தினார். பாப்ரி மஸ்ஜித் செயல் குழு அப்படியேதும் கட்டப்படாமல் இருக்க தடைக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

1992இல் பாஜக தலைமையின் முன்னிலையில் மசூதி தகர்க்கப்பட்டது. இந்தியாவே ஆட்டம் கண்டது. கல்யாண் சிங் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தை சுற்றி 67 ஏக்கர், மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு, இந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு முன்பு, ராமர் கோவில் இருந்ததா? என்று கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நடந்த விசாரணையின் முடிவில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. தற்போது தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு, அதன் மேல் முடிவெடுக்க இம்மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் கூடுகிறது.

---

வழக்கின் தீர்ப்பு, அங்கு ராமர் கோவில் இருந்ததா இல்லையா என்பதை குறித்தே அமையும். தீர்ப்பையொட்டி கலவரம் ஏற்படலாம் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், வழக்கின் முடிவு எப்படி இருந்தாலும், பாதிக்கப்பட்ட அணி மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் செல்லும். முடிவில், அதுவும் இழுக்கப்பட்டு இழுக்கப்பட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை அறிய, நாமெல்லாம் இருப்போமா என்பதே சந்தேகம் தான்.

ஒரு சாதாரண இடப்பிரச்சினையாக இதை எடுத்துக்கொண்டால், என்னத்தான் முன்பு ராமர் கோவில் இருந்தாலும், 400 ஆண்டுகளுக்கு மேலாக மசூதி இருப்பதால், அதில் கோவில் கட்ட சட்டரீதியாக இடமில்லை. இல்லாவிட்டால், இப்போது நாம் இருக்கும் இடமெல்லாம் நமக்கில்லாமல் போகலாம். இது என் மூதாதையர் இடம், அது என் மூதாதையர் இடம் என ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள்.

இப்பிரச்சினை பெரிதாக காரணம், அரசியல்வாதிகளே. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, இது ஒரு முக்கிய காரணம். ஆனால், முன்பு இருந்தது போல தற்போது மக்களிடம் இதற்கு ஈடுபாடு அதிகமில்லை. அதே சமயம், பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, அப்போதைய தொழிலதிபர்களும் காரணமாக இருந்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், தொழில் சூழல் நன்றாக அமையும் என்று ஒரு நம்பிக்கையிருந்ததால், அவர்களது ஆதரவு இருந்தது. ஆனால், தற்போது தொழிலதிபர்களின் பிரதிநிதியாக பிரதமராக செயல்படுவதால், காங்கிரஸிற்கு அவர்களது முழு ஆதரவும் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், மதரீதியாக பிரச்சினை ஏற்பட்டு, சுமூகமான தொழிற்சூழல் கெட தொழிற்துறை விரும்பாததால், அவர்களை காப்பதற்காக, காங்கிரஸ் இப்பிரச்சினையை தள்ளிப்போடவும், முக்கியத்துவம் கொடுக்காமல் கண்டுக்கொள்ளாமலும் இருக்கவே முயலும். ஏன், பாஜகவும் இதை பெரிதாக பிரச்சினையாக்காது என்றே கருதப்படுகிறது.

எப்படியோ, இவ்வழக்கின் தீர்ப்பில் நடுநிலைமை சாத்தியம் இல்லை. தலைவலியாகத்தான் இருக்கப்போகிறது. இந்திய நீதித்துறையின் பெரும் பிரச்சினையான கால விரயமே, இப்பிரச்சினையை காக்கக்கூடும். தீர்ப்பு வழங்கப்போகும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெறுவதால், அதன் பிறகு உடனே தீர்ப்பு வழங்க முடியாது. அச்சமயம் விசாரணை திரும்ப முதலில் இருந்து நடைப்பெறும்.

நாமும் இன்னும் சில பல ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.

பின்குறிப்பு - இணையத்தில் பல்வேறு தளங்களில் வாசித்ததை பதிந்திருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால் குறிப்பிடவும்.

.

Wednesday, September 22, 2010

காமன்வெல்த் சித்து விளையாட்டுக்கள்

ஆரம்பத்தில் இருந்தே டெல்லியில் நடக்க இருக்கும் (நடக்குமா என்பது சந்தேகம் தான்!) காமன்வெல்த் விளையாட்டைப் பற்றி நெகட்டிவ் செய்திகள் தான் வந்துக்கொண்டிருந்தது. நாங்களும் பெரிய ஆட்கள் என்பதை காட்டிக்கொள்ள, இந்த வாய்ப்பை கேட்டு வாங்கி விட்டார்கள். தற்போது உண்மை நிலவரம் புரிந்திருக்கும். காசை அள்ளிக்கொட்டினால், நடத்தி காட்டி விடலாம் என்று நினைத்திருப்பார்கள். 70,000 கோடி ஸ்வாஹா.



இதுவரை நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுகளிலே, இதற்கு தான் செலவு அதிகம். மட்டமான ஏற்பாடும் நடந்தது இதற்கு தான்.

செம்மொழி மாநாடு பாடல், எந்திரன் பாடல் என்று ஹிட் ரூட்டில் சென்றுக்கொண்டிருந்த ரஹ்மானையும் பிடித்து காய்ச்சியது இதில் தான். சம்பந்தபடும் அனைவரும் அடிவாங்குகிறார்கள்.

கொஞ்ச நாள் முன்னாடி ஊழல் செய்திகளாக வந்துக்கொண்டு இருந்தது. இந்தியாவுல ஊழல் இல்லாம எப்படி? நடுவில் கொஞ்சம் நல்ல செய்திகள் அரசு தரப்பில் இருந்து வந்தது. இப்ப, பழையபடி பேக் டூ ட்ராக்.

கமிஷன் அடிச்சாவது வேலையை முடிச்சிடுவாங்க என்றொரு சராசரி இந்திய நம்பிக்கையில் இருந்தேன். ஒழுக்கமில்லாத, தரமில்லாத வேலைக்கு பலனாக தற்போது அடிமேல் அடி வாங்குகிறார்கள்.

விளையாட்டு வீரர்கள் தங்க, புதிதாக கட்டப்பட்ட அபார்ட்மெண்ட் நாறுகிறதாம். தண்ணீர் ஒழுகுகிறதாம். நியூசிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் ஒரு பெரிய பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைய, டஜன் கணக்கில் வாசலில் போலீஸ்காரர்கள் இருந்தாலும், யாரும் பெட்டியை பரிசோதிக்கவில்லையாம். துரை மேல நம்பிக்கையாக இருந்திருப்பார்கள். புதிதாக கட்டப்பட்ட நடைபாதை பாலம் இடிந்துவிட்டது.

இதற்கெல்லாம் ஏற்பாடுகளை நடத்தும் பொறுப்பாளர்கள் சொல்லும் பதில்கள், ரொம்ப பொறுப்பானவை.

“வீரர்கள் தங்க இருக்கும் இடங்கள் நாறுகிறதாமே?”

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டாண்டர்ட் இருக்கும். இது இந்திய ஸ்டாண்டர்ட். வேலை செய்பவர்கள், அதே கழிவறையை பயன்படுத்துவதால் இந்த பிரச்சினை. சீக்கிரம் கழுவிடலாம்.”

“பாலம் இடிந்து விழுந்துவிட்டதே?”

”நல்லவேளை, இப்பவே விழுந்துவிட்டதே. விளையாட்டின் போது விழாமல்.”

“விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தபோகும் பாலம் இடிந்ததால் ஏற்படும் பாதிப்பு என்ன?”

“சே, சே... இது விளையாட்டு வீரர்களுக்கான பாலம் இல்லை. சாதாரண பொது ஜனங்களுக்கானது.”

எனக்கு இந்த விஷயங்கள் எதுவும் வருத்ததையோ, கோபத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக, இந்திய அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் சந்திக்க போது சங்கடங்களை நினைத்து குஜாலாக இருக்கிறது. கிளாஸ் லீடர் டீச்சரிடம் திட்டு வாங்கும்போது கிளாஸுக்கு இருப்பது போலவும், ப்ராஜக்ட் மேனேஜர் கிளையண்டிடம் டோஸ் வாங்கும்போது டீமுக்கு இருப்பது போலவும்.

பார்க்கலாம், இன்னும் என்னென்ன சித்து விளையாட்டுக்கள் நடத்தி இருக்கிறார்கள் என்று.

.

Tuesday, September 21, 2010

பேசிய பேப்பர் விளம்பரம் - டைம்ஸ் அசத்தல்

டைம்ஸ் நாளிதழில் வித்தியாசமாக விளம்பரங்கள் வரும். செய்தியை விட விளம்பரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்களோ? என தோன்றும் வகையிலான விளம்பரங்கள்.

முதல் பக்கம் முழுக்க விளம்பரம்.

பேப்பரில் ஓட்டைப்போட்டு விளம்பரம்.

செய்திகளுக்குள் விளம்பரம்.

இப்படி பல வேலைகள் செய்திருக்கிறார்கள். இன்றைய நாளிதழில் இன்னொரு வித்தியாசமான முயற்சி. இதற்கு முன் யாரும் இப்படி செய்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. நான் பார்த்தது, பெங்களூர் பதிப்பில்

மடித்த பேப்பரை திறந்தால், கடைசி பக்கத்தில் இருந்து சத்தம். என்னவென்று பார்த்தால் வோல்க்ஸ்வாகன் கார் விளம்பரம். காரின் அருமை பெருமைகளை, ஆண் குரலில் அந்த விளம்பரத்தில் ஒட்டியிருந்த கருவி பேசுகிறது.



முன்பு கிரிட்டிங் கார்ட்டில் பார்த்த விஷயம். இன்று மூன்று ரூபாய் செய்தித்தாளுடன். உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு பொருள் ரெடி.



பேப்பரை மடித்துவைத்துவிட்டால், சத்தம் நின்றுவிடுகிறது. திறந்து வைத்து படிக்க முடியவில்லை. கய்யாமுய்யாவென்று.

இதை வைத்து இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ?

பிற்சேர்க்கை - ஹிந்துவிலும் வந்திருக்கிறது. ஐடியா வோல்க்ஸ்வாகனுடையது போலும். வெறும் குரல் என்றில்லாமல், கார் சத்தம், மியூசிக் என்று இன்னும் சேர்த்திருக்கலாம். நல்ல வாய்ப்பை மிஸ் செய்துவிட்டார்கள்.

.

Thursday, July 1, 2010

அரசுக்கெதிரான ஒரு தனிமனித போராட்டம்

கர்நாடக சட்டசபை கடந்த இரண்டு நாட்களாக அமளிதுமளிபடுகிறது. காரணம், ஒருவருடைய ராஜினாமா கடிதம். அரசு துறைகளில் இருக்கும் லஞ்ச மற்றும் இதர சீர்கேட்டினை விசாரிக்க இருக்கும் அமைப்பின் தலைவருடைய ராஜினாமா கடிதம். பாஜக அரசை தவிர கவர்னர், எதிர்க்கட்சிகள், மக்கள் என அனைவரும் ராஜினாமாவை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகளின் இந்த அக்கறைக்கு அரசியல் காரணங்கள் இருப்பினும், நடுநிலையாளர்களின் வருத்தம் - இருக்கும் சொற்ப நம்பிக்கைகளையும் பாழாய் போன அரசியல் காலி செய்கிறதே என்பது தான்.

---

’லோக் அயுக்தா’ என்றொரு அமைப்பை மொரார்ஜி தேசாய், அவருடைய ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தினார். அதன் முக்கிய நோக்கம், லஞ்ச முறைக்கேட்டை கண்டறிவது. லோக் அயுக்தா என்றால் ‘மக்கள் தூதுவன்’ என்பது போன்ற அர்த்தம் வரும். இந்த அமைப்புக்கான சட்டத்தை ஒவ்வொரு மாநிலமும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் ஒரு லோக் அயுக்தாவை நியமிக்க வேண்டும். ஒரு முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி, இதன் தலைவராக இருப்பார். அவரும் ‘லோக் அயுக்தா’ என்று தான் அழைக்கப்படுவார். இவரை நியமிக்கும் அதிகாரம், மாநில ஆளுனருக்கு உண்டு. ஒரு மாநிலத்தின் முதல்வர் முதற்கொண்டு கடைநிலை அரசு ஊழியர்கள் வரை, லோக் அயுக்தாவின் விசாரணை வட்டத்திற்குள் வருவார்கள்.

கேட்க நன்றாக இருந்தாலும், விசாரணை மற்றும் அறிக்கை வரை தான் இவர்களது அதிகாரம். அதற்கு மேல் தண்டிக்கும் அதிகாரமெல்லாம் இவர்களுக்கு கிடையாது.

நான் தமிழ்நாட்டில் இப்படி ஒரு வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை. பெங்களூர் செய்திதாள்களில் அடிக்கடி இது சம்பந்தமான செய்திகள் வரும். இங்கு லோக் அயுக்தாவாக இருப்பவர், 69 வயதான முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி - சந்தோஷ் ஹெக்டே. மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக திகழும் அளவுக்கு, பல விஷயங்களை செய்திருப்பவர். உதாரணத்திற்கு சில.



---

அந்த அன்னைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மணி இரவு 2. அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றால், கண்டுக்கொள்ள யாருமில்லை. ஹெக்டேவுக்கு தொலைபேசி எண்ணை சுழற்றினார். ”அய்யா, நீங்க சொல்லுங்கய்யா... கேப்பாங்க...”. ஹெக்டேவுடைய வேலை இதுவல்ல. ஆனாலும் அந்த மருத்துவமனைக்கு போன் போட்டார். ஒரே போன். அடுத்த சில மணித்துளிகளில், மருத்துவர்கள் அந்த பெண்ணின் குடிசைக்கு முன்பு நின்றார்கள்.

ஏதோ அதிகாரமில்லாதவர்களை மட்டும் பிடித்து மிரட்டுபவரல்ல இவர். கோலார் எம்.எல்.ஏ.வையும் லஞ்சம் வாங்கும்போது, கையும் களவுமாக பிடித்திருக்கிறது இவருடைய அணி. அவ்வளவு ஏன், போன வருடம் பாராளுமன்றத்தில் 17 முக்கியமான மசோதாக்களை 13 நிமிடத்தில் தாக்கல் செய்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் மீதே கோபக்கனலை வீசினார். காரணம் - லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் கறைப்படிந்த கரங்களை கழுவ வழி ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.

---

சமீபத்தில் இவர் வாளை சுழட்ட ஆரம்பித்த இடம் - பெல்லாரி் கனிம சுரங்கத் தொழிலில். பெரிய இடம் தான். ஒரு மாநிலத்தின் ஆட்சியையே தொங்கலில் வைக்கும் அளவுக்குக்கான செல்வாக்கு படைத்தவர்களுக்கு எல்லாமே சட்டவிரோதம் தான். எல்லாவற்றையும் விசாரித்து என்னதான் அறிக்கையை அரசுக்கு அனுப்பினாலும், பலன் தெளிவான பூஜ்யம். திரும்ப திரும்ப விசாரித்து அனுப்பினாலும், பலன் அதே. தவிர, இவருக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளுக்கு பலவிதமான நெருக்கடிகள். இவர் தவறு செய்த அரசு அதிகாரி ஒருவரை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பினால், சில நாட்களில் சஸ்பென்சன் தடை செய்யப்பட்டு, ஜாலியாக சீட்டில் அமர்ந்திருப்பார் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். இவர் அரசிடம் வைத்த கோரிக்கைகள் எதையும் சட்டை செய்யவில்லை அரசு.

பொறுத்தார். பார்த்தார். ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டார்.

“என் பேச்சுக்கு கட்டுப்பட்டு, நேர்மையுடன் எனக்கு கீழே வேலைப்பார்க்கும் அதிகாரிகளை என்னால் காப்பாற்ற முடியாவிட்டால், அவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்க நான் தகுதியானவன் அல்ல. அரசு வீட்டுக்காகவும், சிகப்பு விளக்கு பொருத்திய காருக்காகவும் மட்டும் இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன்.”

பதவியில் இருந்து விலகினாலும், தனது சமூக பணிகள் தொடரும் என்கிறார் ஹெக்டே.

இவர் பிரஸ் மீட் வைத்ததை பார்த்து தலைமறைவான முதல்வர் எடியுரப்பா, அடுத்த நாள்தான் வெளியே வந்தார். ”ராஜினாமா முடிவை பரிசீலனை செய்ய கேட்பீர்களா?” என்ற கேள்விக்கு, முதல்வரின் பதில் - “நான் அவருடைய முடிவை மதிக்கிறேன்.”

நல்லா மதிச்சீங்க!

---

மக்கள் பிரச்சனைகளை உடனே தீர்த்துவைப்பது போல் ஒரு படம் அமைந்தாலே, அதை பேண்டஸி என வகைப்படுத்திவிடுகிறோம். அந்த அளவில் தான், தீர்வுகளை நோக்கிய நம் நம்பிக்கை இருக்கிறது. எப்பொழுதாவது சின்னதாக ஒரு நம்பிக்கை பூக்கும். அதையும் பூத்து மலர்வதற்கு முன்பே பிடுங்கி ஏறிய சிலர் தயாராக இருக்கும் வரை, நமக்கு உடனடி நியாய தீர்வென்பது பேண்டஸி தான் போலும்.

.

Wednesday, June 23, 2010

செம்மொழி மாநாடு துவக்கமும் கணேஷின் முடிவும்

கணேஷ் போன் பண்ணினான். வேலை முடிந்துவிட்டதால், சீக்கிரம் வீடு வந்துவிட்டானாம்.

“சீக்கிரமே வந்து வீட்டுல என்ன பண்ணிட்டு இருக்க?”

“செம்மொழி மாநாடு டிவில போட்டுட்டு இருக்காங்க. அதான் பாத்துட்டு இருக்கேன்.”



என்னவோ தெரியவில்லை. கணேஷ் இந்த மாநாடு விஷயத்தில் ரொம்பவும் கவனம் செலுத்துகிறான். இந்த வாரயிறுதியில் கோவை செல்வதாக கூட ஜடியா இருப்பதாக நேற்று சொல்லியிருந்தான்.

வெறுமே ”ம்” என்றேன்.

“ஏன் இத நடத்துறாங்க?”

எனக்கு தெரிந்ததை சொன்னேன். ரெண்டு மூன்று நாட்களாக வாசித்துக்கொண்டிருந்த தமிழ் பெருமைகளையும், இந்த மாநாடு மூலம் நடக்க போவதாக சொன்ன நன்மைகளையும் சொன்னேன்.

“இத யாரு நடத்துறா?”

“நம்ம முதல்வர் தாத்தா தான். இதுவரை இவர் நடத்தியதில்லை. முதல்முறையாக நடத்துகிறார்”. கூடுதல் தகவல்களையும் கொடுத்தேன்.

”மேடையில யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?” டிவி பார்த்துக்கொண்டே கேட்டான்.

“யாரெல்லாம்?”

“மதுரை சிங்கம்.”

“அழகிரியா?”

“ஆமாம். அதுக்கு அப்புறம் தாடி வைச்சுக்கிட்டு ஒரு சிங்!”

“சுர்ஜித் சிங் பர்னாலா.”

“அப்புறம் முக்காடு போட்டுக்கிட்டு ஒரு பாட்டி.”

“ம்”

“நெக்ஸ்ட், நம்ம தாத்தா”

“அப்புறம்?”

“தளபதி”

”ஸ்டாலினா? அடுத்தது என்ன கனிமொழியா?”

“ஆமாம்”

என்னால் நம்ப முடியவில்லை.

“அப்புறம் சன் பிக்சர்ஸ்.”

”என்னது கலாநிதி... ச்சே தயாநிதி மாறனா?”

“ஆமாம்.”

உண்மையை சொல்கிறானா? பொய் சொல்கிறானா? தெரியவில்லை. இப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லவும் முடியாது. ஊர் நிலவரம் அப்படியிருக்கிறது. ஆனால் ஒன்று உறுதியாக சொல்ல முடியும். கணேஷ் இந்த வாரம் கோயமுத்தூர் போகவில்லையாம்.

சண்டே ராவணன் போகலாம் என்றிருக்கிறானாம்.

பின் குறிப்பு - கலைஞர் செய்திகள் பார்த்தபோது, கணேஷ் சொன்னது முழுவதும் உண்மை இல்லை என்று தெரிந்தது. பிற அனைத்து குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணி தலைவர்களும் இருந்தனர்.

.

Wednesday, March 3, 2010

நித்தி அடைந்த ஆனந்தம்

போன ஞாயிறு, ஓசூரில் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் இருக்கும் ஒரு ஓட்டலில் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன். மணி ஏழு- ஏழரை இருக்கும். ஓட்டலின் கல்லா டேபிளுக்கு எதிரே ஒரு பெரிய நித்தியானந்தா புகைப்படம் ஒரு சின்ன டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்தது.

கடையின் முதலாளியா? யாரென்று தெரியவில்லை. போட்டோவுக்கு மாலைப்போட்டு, ரொம்ப பயபக்தியுடன் சாம்பிராணி போட்டு பூஜை செய்தார். அவருடன் இருந்தவர்களும் தொட்டு கும்பிட்டு சென்றார்கள்.

இன்னமும் அந்த போட்டோ இருக்கிறதா, பூஜை நடக்கிறதா என்று தெரியவில்லை.

(அந்த போட்டோவை எடுத்துவிட்டதாக, நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவிர, ஓசுரில் நண்பர் வீட்டில் இரண்டு நாட்கள் கேபிள் தெரியவில்லையாம். கேபிள் ஆபரேட்டரும் நித்தியானந்தாவின் பக்தராம்!)

---

என்னுடன் படித்த நண்பன் ஒருவன் அடிக்கடி போன் செய்து நித்தியானந்தா ஆசிரமத்திற்கு கூப்பிடுவான். சும்மா இருந்தா வாடாவென்பான். ஸ்ட்ரெஸ் குறைச்சிக்கலாம் என்பான்.

சும்மா இருந்தாலும் போகாமல் இருந்ததற்கு காரணம் - 750, 1000 ரூபாய் என்று பீஸ் கேட்பார்கள். இல்லாவிட்டால், போய் என்னத்தான் சொல்கிறார்கள் என்று பார்த்திருப்பேன். ஸ்ட்ரெஸ் குறைக்கலாம் என்பதற்கு அப்படி ஒன்று என்னிடம் இல்லை என்பேன். இல்ல, நீ என் கூட வா. நம்ம பசங்கள பார்க்கலாம். ஏதாச்சும் படம் பார்க்கலாம். உனக்கு ஸ்ட்ரெஸ் இருந்தா குறையும் என்பேன். நல்ல நண்பர்களுடன் பேசுவதை விட வேறு எதில் ஸ்ட்ரெஸ் குறைந்துவிட போகிறது?

ஒரு கட்டத்திற்கு மேல் அழைப்பதை நிறுத்திவிட்டான். இன்று அவனுக்கு போன் செய்யவே எனக்கு தயக்கமாக இருக்கிறது. பாவம்! ரொம்ப நொந்துப்போய் இருப்பான்.

ஒருவேளை, அந்த களவாணிப்பயல் பண்ணினதுக்கு எனக்கென்ன? என்று சாரு மாதிரி கேட்டாலும் கேட்பான்.

---

சன் டிவியில் எனக்கு பிடித்த விஷயம் - படங்களில் அவர்கள் செய்யும் சென்ஸார். அவர்கள் போடும் தமிழ்ப்படங்களில் முத்தக்காட்சியோ, விவகாரமான காட்சியோ இருந்தால் கட் செய்துவிடுவார்கள். குடும்பத்துடன் பார்க்கும்போது சங்கடங்கள் நேராது.

உதாரணத்திற்கு, சன் டிவியில் காதல் கொண்டேன் படம் போட்டால் தைரியமாக பார்க்கலாம். தேவதையை கண்டேன் பாடல் காட்சியை போடும்போது கூட, அதிலிருக்கும் முத்தக்காட்சி இருக்காது. விவகாரமான காட்சி என்று இல்லை. அவர்களுக்கு பிடிக்காத எதையும் கட் செய்துவிடுவார்கள்.

சரவணா படத்தில் ஒரு காட்சியில் ‘டாக்டர் ராமதாஸ்கிட்ட சொல்லிடுவேன்’ என்பார் சிம்பு. அதைக்கூட கட் செய்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் நித்தியானந்தா விஷயத்தில் இறங்கி அடித்திருக்கிறார்கள். பார்க்க முடிகிற விஷயங்களை மட்டும் தான் போடுகிறோம் என்று ஒரு டிஸ்கி வேறு. என்ன நியூஸ் சொல்கிறார்கள் என்பதை ஹாலில் உட்கார்ந்து டிவியில் கேட்கமுடியாத அளவுக்கு காட்சிகள்.

---

சன் டிவியில் நேற்று இரவு என்றால், இன்று இந்தியா முழுக்க.

பெங்களூரில் சலூன், மெடிக்கல் ஷாப், ஹோட்டல் என்று எல்லா இடங்களில் உள்ள டிவிக்களிலும் நியூஸ் சேனல்கள் ஓடிக்கொண்டிருந்தது. எல்லாவற்றிலும், நித்தி-ரஞ்சி சல்சா.

பப்ளிக்கா எல்லா இடங்களிலும், படுக்கையறை காட்சியை போட்டுக்கொண்டு இருந்தது அசிங்கம்.

---

நித்தியானந்தாவின் பேமஸ் கட்டுரை தலைப்பை, இன்று பதிவர்கள் பதிவு தலைப்பாக பயன்படுத்தியிருந்தது செம காமெடி.

கதவை திற! ரஞ்சிதா வரட்டும்!
கதவைத் திற காமிரா உள்ளே வரட்டும்
கதவைத் திற கட்டழகி வரட்டும்
கதவைத் திற காமிரா வரும்

---

நித்தியாந்தாவின் கட்டுரைகளை போட்டு கல்லா கட்டிய குமுதம் இப்போது என்ன செய்கிறது?

இதோ!



இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

.

Wednesday, December 30, 2009

விஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை

என் சிறு வயதில் அண்ணனுடன் திரையரங்கில் செகண்ட் ரிலீஸில் ‘விடுதலை’ படம் பார்த்தேன். ரஜினி சிவாஜியுடன் செய்யும் குறும்புத்தனங்களுக்காக எனக்கு பிடித்த படம். ரஜினியுடன் நடித்த ஹீரோ யாரென்று அண்ணனிடம் கேட்டபோது, விஷ்ணு’ன்னு ஒருத்தன் என என் காதில் விழுந்தது. கன்னடத்தின் சூப்பர் ஸ்டார் என்பது உபத்தகவல். ரஜினி, சிரஞ்சிவி, மம்மூட்டி என்ற சூப்பர் ஸ்டார் லிஸ்டில் இவரை சேர்த்துக்கொண்டேன்.



எப்ப இவரை பற்றி பேசும் போதும், எதற்கு அண்ணன் ”விஷ்ணு’ன்னு ஒருத்தன்” என்றே சொல்கிறார்? என்பது ஒரு கேள்வியாகவே இருந்தது. அண்ணன் மட்டுமல்ல, எல்லோருமே அப்படித்தான் சொன்னார்கள். ரொம்ப நாள் கழித்து தான், அவருடைய பெயர் ”விஷ்ணுவர்தன்” என்று தெரிந்தது. அது என் காதில் விஷ்ணு’ன்னு ஒருத்தன் என விழுந்திருக்கிறது.

இன்று காலை, விஷ்ணுவர்த்தன் என்கிற இந்த ஒருவர் இறந்த செய்தியைக் கேட்டப்போது, யாரோ ஒருவர் என்று தோணவில்லை. நம்பவும் முடியவில்லை.

அந்த படத்தில் ஆரம்பத்தில் ரஜினியின் ஜோடி மாதுரியை இவர் டாவடித்ததால், எனக்கு இவரை அப்போது பிடிக்கவில்லை. கடைசியில், பேபி ஷாலினியுடன் தனியாகவே சென்று விட்டதால், சமாதானமானேன். இவரை எப்போது பார்க்கும்போதும், பரிதாபமாக இருக்கும். இந்த படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆனதாலும், டிவியில் எதிலும் போடாததாலும், ரொம்பவும் தேடி, டிவிடி வாங்கி வைத்துள்ளேன். கடைசியில் போராக இருக்கும். இருந்தாலும், இன்னோரு முறை பார்க்க வேண்டும்.

---

சந்திரமுகியின் கன்னட ஒரிஜினலான ஆப்தமித்ரா வெளியான சமயம், அதன் ஹீரோயின் சௌந்தர்யா மரணமடைந்தார். தற்போது, அதன் இரண்டாம் பாகம் எடுத்துவருகிறார்கள். ஹீரோ இறந்துவிட்டார்.

---

கன்னட ரசிகர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ராஜ்குமார் இறந்தபோது நடந்தது போல், இன்றும் ரகளை, கலாட்டாக்கள் நடந்துள்ளது. பல அலுவலகங்களில், மதியமே வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள். நிறைய கடைகள் பூட்டி கிடந்தன. பஸ், கார், வேன்களில் விஷ்ணுவர்தன் படம் தற்காப்பிற்காக ஒட்டப்பட்டிருந்தது. ப்ளேக்ஸ் போர்டுகளில் சிரித்த முகத்துடன் இருந்தவருக்கு மாலை போட்டு அனுதாபம் தெரிவித்திருந்தனர்.

---

கன்னட சேனல்கள் அனைத்திலும் விஷ்ணுவர்தன் தான். மியூசிக் சேனல்களில் அவருடைய பாடல்களும், மூவி சேனல்களில் அவருடைய படங்களும் ஓடிக்கொண்டிருந்தது. உதயாவில் கன்னட ரமணா ஒடிக்கொண்டிருந்தது. நியூஸ் சேனல்களிலும் முழுக்க அவரை பற்றிய செய்திகளே. பிரபலங்கள் அவரை பற்றி கருத்து சொன்னார்கள். ரஜினி உருக்கமாக பேசினார். அவருடைய உடலுக்கு பக்கத்தில் அம்பரிஷ், அர்ஜுன், சுஹாசினி போன்றோர் அழுதுக்கொண்டு இருந்தார்கள்.

---

நடிகர்கள் தான் எவ்வளவு நெருக்கமாக மக்களுடன் கலந்துவிடுகிறார்கள். இது எல்லோருக்கும் அமைவது இல்லை. ஒரு சிலருக்கே.

முன்பின் சந்தித்திருக்காதபோதும், நடிகர்கள் திருமணத்தின் போது, தங்கள் வீட்டு திருமணம் போன்றே மகிழ்வதும், அவர்கள் இறப்பின் போது உணர்ச்சிவயப்பட்டு அழுவதும், வேறெந்த துறையினருக்கும் கிடைப்பதில்லை. தினம் தினம் அல்லது அடிக்கடி பார்ப்பதால், தங்களுக்கு பிடித்தவராக இருப்பதால், இனி அவர்களுடைய படைப்பு இல்லை எனும் நிலை ஏற்படும்போது, அவர்களின் இழப்பு கஷ்டமானதாக ஆகிறது.

ஒரு கலைஞனிடம் அவனுடைய படைப்பை மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகனுக்கே இப்படியென்றால், அவன் குடும்பத்தினருக்கு?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

.