யெல்லோஸ்டோனில் வெவ்வேறு இடங்களில் எடுத்த வீடியோ துணுக்குகளை இணைத்து, பின்னணியில் இசை சேர்த்து வீடியோ படமாக்கியிருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்து சொல்லவும்.
நிறைய இடங்களில் ஷேக் ஆகியுள்ள வீடியோ, கண் வலியை ஏற்படுத்தும். எச்சரிக்கை.
ஒரு ஃப்ளோவில் பயணப்பதிவு தொடரை எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று எதிர்பாராமல் இன்னொரு பயணத்திற்கு தயாராகி செல்ல நேரிட, இந்த தொடருக்கு சின்ன தடங்கல். இப்ப, திரும்ப தொடரலாம்.
யுனிவர்சல் ஸ்டுடியோஸிலும் தேவர் ஃபிலிம்ஸ், தேனாண்டாள் மூவிஸ் போல மிருகங்களுக்கு என தனியே ஒரு இலாகா இருக்கிறது. நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட மிருகங்களும், அவற்றிற்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் குழுவும்.
இந்த அணி, இங்கு யுனிவர்சல் ஸ்டுடியோஸில் ஒரு நிகழ்ச்சியை நடத்துக்கிறார்கள். எப்படி தங்களுக்கு மிருகங்கள் கிடைக்கின்றது, எப்படி பயிற்சியளிக்கிறோம், எப்படி இந்த மிருகங்கள் படங்களில் நடிக்கின்றன போன்ற சுவையான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.
பார்வையாளர்கள் பங்குக்கொள்ளும்வாறு நிகழ்ச்சியை அமைத்திருந்தார்கள்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, எங்க பாப்பா தூங்கிக்கொண்டிருந்தாள். நிகழ்ச்சியின் போது விழித்தவள், பின்பு தூங்காமல் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தாள்.
இந்த நிகழ்ச்சியின் போது எடுத்த வீடியோக்கள் இவை.
பறவை பறப்பதை எப்படி படம் பிடிக்கிறார்கள் என்பதை விளக்கும் வீடியோ.
ஒரு பறவை எப்படி சொன்ன இடத்திற்கு சரியாக பறந்து செல்கிறது என்பதை விளக்கியது, இந்த வீடியோவில் இருக்கிறது.
நாயிற்கு அளிக்கும் பயிற்சி பற்றிய வீடியோ.
அதே பயிற்சியாளர், அந்த நாயை வைத்து நடத்திய நிகழ்ச்சி, பாதியில் இருந்து, இந்த வீடியோவில்.
இது ஒரு நீளமான வீடியோ. நாய்களை வைத்து ஒரு நிகழ்ச்சியும், மொத்த விலங்குகள், பறவைகள் பங்குக்கொள்ளும் இறுதி நிகழ்ச்சியும் இந்த வீடியோவில் இருக்கிறது.
பின்குறிப்பு - கொஞ்சம் தூரத்தில் இருந்து எடுத்ததால், ஜூம் செய்ய வேண்டி இருந்தது. அதே சமயம், காட்சிப்படுத்த வேண்டியவைகள் அங்குமிங்கும் இருந்ததால், லாங் ஷாட் வித் ட்ராக்கிங் போன்றவற்றில் பெரிய முன்னனுபவம் இல்லாததால், கேமராவை அங்குமிங்கும் நகர்த்த, பார்த்த உங்களுக்கு தலைவலி வரலாம். மன்னிக்கவும். :-)
இன்று ஒரு நிகழ்ச்சியை இணையத்தில் பார்த்தேன். கண்டிப்பாக பகிர வேண்டும் என்று தோன்றியது.
---
கேரளாவில் லாட்டரி சீட்டு விற்றுவருகிறார் சுரேஷ். வறுமையான வாழ்க்கைதான். இவரிடம் ஒருநாள் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் லாட்டரி சீட்டு வாங்க வந்திருக்கிறார்.
பெரியவருக்கு திருமண வயதில் இரு பெண்கள். கஷ்டத்தில் இருப்பவர் தான். ஐந்து சீட்டுகள் வாங்கியவர், ”எவ்வளவு?” என்று கேட்க, சுரேஷ் “இருநூற்று ஐம்பது” என்று சொல்ல, “என்னிடம் இப்போது அவ்வளவு இல்லை. நாளை வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு பெரியவர் சென்று விட்டார்.
அடுத்த நாள், லாட்டரி சீட்டுக்கான ரிசல்ட் பேப்பரில் வந்திருக்கிறது. சுரேஷ் ரிசல்ட்டை பார்க்க, அதில் பெரியவர் எடுத்த ஐந்து சீட்டுகளில் ஒன்றிற்கு 1 கோடி பரிசு விழுந்திருக்கிறது.
சுரேஷை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ந்திருக்கிறார்கள். சுரேஷிற்கு நல்ல காலம் என்று. ஆனால், சுரேஷ் அந்த பணம் தனக்கு சொந்தமானதில்லை என்று உறுதியாக சொல்லியிருக்கிறார். அதைவிட முக்கியம், கஷ்டத்தில் இருக்கும் அவருடைய வீட்டினரும் அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.
சுரேஷ், பெரியவரை எப்படியோ தேடி கண்டுபிடித்திருக்கிறார். “உங்க சீட்டுக்கு பணம் விழுந்திருக்கிறது” என்று சொல்ல, பெரியவர் “நான் இன்னும் உங்களிடம், இதற்கான பணத்தை கொடுக்கவில்லையே? அப்படியென்றால் இது உங்களுடையது தானே?” என்று சொல்லி வாங்க மறுக்க, சுரேஷ் விடவில்லை. “இது நீங்கள் வாங்குவதாக சொல்லி, என்னிடம் வைத்திருக்க சொன்ன சீட்டு. இது உங்களுக்கு தான்.” என்று சொல்லி கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.
மலையாளியான இவருக்கு, நடிகர் பார்த்திபன் சென்னைக்கு வரவழைத்து, ராஜ மரியாதை கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்.
எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்? விக்ரமன் படத்தில் கூட இப்படிப்பட்ட நல்லவர்களைப் பார்க்கமுடியாது!!!
---
வீடியோ இங்கே இருக்கிறது.
பகிர வேண்டிய விஷயம்தானே?
(இதை அப்படியே கட் & பேஸ்ட் செய்துகூட, நீங்களும் பகிரலாம்!)
புத்தாண்டுக்கு ஒன்றும் ஸ்பெஷலாக செய்யவில்லை (அட, கேசரிக்கூட செய்யவில்லையா? என்று கேட்காதீர்கள்). இங்கு புத்தாண்டுக்கு ஊருக்குள் விசேஷமாக வாண வேடிக்கை காட்டுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால், ரொம்ப எதிர்பார்த்து செல்லாதே என்றும் சொன்னார்கள். அங்கு சென்று, அந்த சமயத்தில் ஷூ லேஸ் அவிழ்ந்து அதை மாட்ட குனிந்தால், அந்த சமயத்திற்குள் வாண வேடிக்கை முடிந்து விடும் அளவிற்கு சுருக்கமானது அது என்று காமெடியாக சொல்லியிருந்தார்கள். அதனால், அங்கு செல்லும் ஆர்வமும் இல்லை.
ஒரு மாலுக்கு இரவு ஏழு மணிவாக்கில் சென்றோம். கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. எங்களைப்போல் வெகு சிலரே வந்திருந்தார்கள். சாலைகளிலும் அதிக போக்குவரத்து இல்லை. நம்மை போல் இல்லாமல், இங்கு ரொம்ப அமைதியாக யாருக்கும் தெரியாமல், புது வருஷத்தை கொண்டாடுகிறார்கள்.
---
அடுத்த நாள், இரண்டாம் தேதி எனக்கு விடுமுறை. மெதுவாக எழுந்து, வீட்டிற்கு போன் செய்து, தோசை சுட்டு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அலுவலகம் சென்ற நண்பர் போன் செய்தார். “ரொம்ப கடமையுணர்ச்சியோடு ஆபிஸ் வந்து பார்த்தா, யாரும் இல்லை. விசாரிச்சா, எங்களுக்கும் இன்னைக்கு லீவாம். முத நாளே, இப்படி பல்ப். வாங்க, எங்காச்சும் வெளியே போகலாம்” என்றார்.
---
எங்கு செல்லலாம் என்று தெரியாமலே, வெளியே கிளம்பினோம். பனி சறுக்கு செல்ல (அதாவது வேடிக்கை பார்க்க!!!) ஆர்வம் மற்றும் திட்டம் இருந்தாலும், பாதி நாள் ஆகிவிட்டதால், இம்முறை வேறு எங்காவது செல்லலாம் என்று கிளம்பினோம்.
ஊரை கடந்து வெளியே வந்தவுடன், சுற்றி தெரியும் மலைத்தொடர்களைப் பார்க்க அழகாக இருக்கும். இந்த வீடியோவைப் பாருங்கள். புரியும்.
’இதாஹோ ஸ்பிரிங்க்ஸ்’ என்ற இடத்திற்கு எதற்கு சென்றோம் என்றே தெரியவில்லை. இது மலையின் இடையில் இருக்கும் ஒரு பழைய ஊர்.
சின்ன ஊர்தான். ஒரு கடை தெரு இருந்தது. கார் நிறுத்த இடம் கிடைக்காமல், சுற்றி சுற்றி வந்து, ஒரு வழியாக எங்கோ நிறுத்தி, அங்கு இருந்த ஒரே ஒரு தெருவான கடைத்தெருவில் இங்கிட்டும் அங்கிட்டும் ஒரு நடை நடந்தோம்.
இங்கிருந்த ஒரு ஓடையில் நீர் ஐஸ்கட்டியாகி, நடுவில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு சிறு நீர்வீழ்ச்சி, உறைந்துப்போய் நின்றிருந்தது.
அதற்கு மேல் அங்கு பார்க்க ஒன்றும் இல்லாததால், அங்கிருந்து அரை மணி தூரத்தில் இருக்கும் ஒரு ஏரி பூங்காவிற்கு சென்றோம்.
ஏரியும், ஏரிக்கு செல்லும் வழியும் பனியாக இருந்தது. கடைசியாக பனி பெய்து, இரு வாரங்கள் ஆனாலும், தினம் சூரியன் வந்து சென்றாலும், பனி அப்படியே தான் இருக்கிறது.
ஏரி முழுக்க ஐஸ் கட்டியாக இருந்தது பார்க்க அழகாக, ஆச்சரியமாக இருந்தது. அதன் மேல், ஏறி நடக்க பயமாகவும் இருந்தது (எத்தனை இங்கிலிஷ் படம் பார்த்திருக்கோம்?!).
இதிலும் ஒருவர் வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.
இங்கு மீன் பிடிப்பது வெறும் பொழுதுபோக்கு. பல உபகரணங்கள் கொண்டு வந்து, ரொம்ப பொறுமையாக பல மணி நேரம் மீன் சிக்கும் வரை இருந்து, பின் மீன் சிக்கிய பிறகு, அதை பார்த்துவிட்டு, மீண்டும் தண்ணீரிலேயே எறிந்துவிட்டு சென்றுவிடுவார்கள்!
சூரியன் இருக்கும் வரை தான் இருக்க முடிந்தது. சூரியன் மறைந்தவுடன் குளிர் ஆட்ட தொடங்கியதால், கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம்.
பின்குறிப்பு - வீடியோக்களின் பின்னணியில் விஜய் பாடல்கள் கேட்பது தற்செயலான நிகழ்வே. அனைத்து வித யூகங்களையும் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஒருமுறை இங்கிருக்கும் ராக்கி மலைத்தொடருக்கு சென்றிருந்த போது, டிரைவர் போகும்வழியில் பஸ்ஸை நிறுத்தி எல்லோரையும் கீழே இறக்கிறார். அங்கு தூரத்தில் தெரிந்த காட்டு மான்களை காட்டினார்.
உடன் வந்த பயணிகள் அனைவரும், அந்த மான்களுக்கு ஏதோ டைனோசர் லெவலுக்கு பில்டப் கொடுத்து பார்த்தார்கள். தூரத்தில் தெரிந்த அந்த மான்களை, போட்டோ வேறு எடுத்துக்கொண்டார்கள்.
நானும் முயற்சி செய்தேன். முடியவில்லை. நம்ம கேமராவுக்கு அந்தளவுக்கு திறமையில்லை. அப்போது முடிவு செய்துக்கொண்டேன். அடுத்தது, சூப்பர் ஜூம் கேமரா தான் வாங்க வேண்டும் என்று.
இந்த கேமரா நன்றாக இருக்க, அடுத்த கேமரா எப்போது வாங்குவோமோ? என்று நினைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன். நாம எப்போதும் தேய தேய ஒரு பொருளை தேய்ஞ்ச பிறகுதான் அடுத்தத வாங்குற ஆளு!!!
அந்த பயணத்தின் போதே, மனைவி பனியை கண்ட ஆர்வக்கோளாறில், ஒரு உருண்டைப்பிடித்து, ஆசையாக என் மீது எறிய, அது கேமராவில் பட்டு, கேமரா உயிரைவிட, என் ஆசை நிறைவேறியது. உயிர் விட்டது என்றால், ஒரேடியாக விடவில்லை. எடுக்கும் படங்களில் எல்லாம் குறுக்கே கோடுகள்.
அது தான் என்னுடைய முதல் கேமரா. ஆயிரக்கணக்கில் புகைப்படங்கள் எடுத்து தள்ளிய கேமரா. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இன்னொரு கேமரா வாங்கும் வாய்ப்பு கிடைத்ததால், சமாதானம் ஆனேன்.
இதுதான் புது கேமரா வாங்குவதற்கான காரண காரியம் நிகழ்ந்த சம்பவம்.
இதையடுத்து, சமீபத்தில் Canon SX 40 வாங்கினேன். எதிர்பார்த்த விஷயம், பிடித்த விஷயம், இதிலுள்ள ஜூம் தான்.
சமீபத்தில் எடுத்த இந்த வீடியோ, இதை விளக்கும்.
யூ-ட்யூபில் இது போல் பல வீடியோக்கள் காணக்கிடைக்கிறது. நிலாவைக்கூட ஜூம் செய்து போட்டிருக்கிறார்கள். வடை சுட்ட பாட்டியைத்தான் தெரியவில்லை!