Friday, March 30, 2012

நல்லவர்கள்

இன்று ஒரு நிகழ்ச்சியை இணையத்தில் பார்த்தேன். கண்டிப்பாக பகிர வேண்டும் என்று தோன்றியது.

---

கேரளாவில் லாட்டரி சீட்டு விற்றுவருகிறார் சுரேஷ். வறுமையான வாழ்க்கைதான். இவரிடம் ஒருநாள் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் லாட்டரி சீட்டு வாங்க வந்திருக்கிறார்.

பெரியவருக்கு திருமண வயதில் இரு பெண்கள். கஷ்டத்தில் இருப்பவர் தான். ஐந்து சீட்டுகள் வாங்கியவர், ”எவ்வளவு?” என்று கேட்க, சுரேஷ் “இருநூற்று ஐம்பது” என்று சொல்ல, “என்னிடம் இப்போது அவ்வளவு இல்லை. நாளை வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு பெரியவர் சென்று விட்டார்.

அடுத்த நாள், லாட்டரி சீட்டுக்கான ரிசல்ட் பேப்பரில் வந்திருக்கிறது. சுரேஷ் ரிசல்ட்டை பார்க்க, அதில் பெரியவர் எடுத்த ஐந்து சீட்டுகளில் ஒன்றிற்கு 1 கோடி பரிசு விழுந்திருக்கிறது.

சுரேஷை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ந்திருக்கிறார்கள். சுரேஷிற்கு நல்ல காலம் என்று. ஆனால், சுரேஷ் அந்த பணம் தனக்கு சொந்தமானதில்லை என்று உறுதியாக சொல்லியிருக்கிறார். அதைவிட முக்கியம், கஷ்டத்தில் இருக்கும் அவருடைய வீட்டினரும் அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.

சுரேஷ், பெரியவரை எப்படியோ தேடி கண்டுபிடித்திருக்கிறார். “உங்க சீட்டுக்கு பணம் விழுந்திருக்கிறது” என்று சொல்ல, பெரியவர் “நான் இன்னும் உங்களிடம், இதற்கான பணத்தை கொடுக்கவில்லையே? அப்படியென்றால் இது உங்களுடையது தானே?” என்று சொல்லி வாங்க மறுக்க, சுரேஷ் விடவில்லை. “இது நீங்கள் வாங்குவதாக சொல்லி, என்னிடம் வைத்திருக்க சொன்ன சீட்டு. இது உங்களுக்கு தான்.” என்று சொல்லி கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.

மலையாளியான இவருக்கு, நடிகர் பார்த்திபன் சென்னைக்கு வரவழைத்து, ராஜ மரியாதை கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்.

எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்? விக்ரமன் படத்தில் கூட இப்படிப்பட்ட நல்லவர்களைப் பார்க்கமுடியாது!!!

---

வீடியோ இங்கே இருக்கிறது.பகிர வேண்டிய விஷயம்தானே? (இதை அப்படியே கட் & பேஸ்ட் செய்துகூட, நீங்களும் பகிரலாம்!)

.

Saturday, March 24, 2012

டென்வரில் ஒரு வருடம்

டென்வர் வந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது.

அதற்குள் ஒரு வருடமா? என்பது போல் இருக்கிறது. என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று நினைத்து பார்க்கிறேன்.

பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கே இருக்கும், சுற்று வட்டாரத்தில் இருக்கும் இடங்களை மட்டுமே சுற்றி வந்திருக்கிறேன். இந்தியாவில் இருக்கும் போது கூட, ஆங்காங்கே ட்ரிப் போட்டு சென்று வந்து கொண்டிருப்பேன்.

ஊரில் இருக்கும்போது, எங்காவது ஒரு ஊருக்கு போய் வந்தாலே, அந்த அனுபவத்தைப் பற்றி இரண்டு மூன்று பதிவுகள் எழுதி போடுவேன். இங்கு, ம்ஹூம்.

ஆரம்பத்தில் நிறைய எழுத தோன்றியும், நேரமில்லாததால் எதுவும் எழுதவில்லை. ‘பட்டிகாட்டான் மிட்டாய்கடை’ போல அனைத்தையும் எழுத நினைத்தும் முடியவில்லை. ஞாநி ’ஓ பக்கங்களில்’ ஒருமுறை அவர் அமெரிக்கா வந்த அனுபவத்தை வைத்து, அமெரிக்காவை பற்றியும் அமெரிக்கர்களை பற்றியும் பல கருத்துகளை கூறியிருந்தார். என்னால் என் அனுபவங்களை வைத்து, எந்த அனுமானத்திற்கும் வர முடியவில்லை.

ஓகே. என் ஒரு வருட அனுபவத்தை சில புகைப்படங்களில் காட்டுகிறேன்.

---

ரெடியா?ஸ்டார்ட்கண்டம் விட்டு...ஏர்போர்ட் குதிரைபால் காய்ப்புடென்வர் இஸ்கான் கோவில்பனி மலை பயணம்எங்க போனாலும், மீன விட மாட்டோம்ல!
டென்வர் மிருகக்காட்சி சாலை

மியூசியம் கேண்டீன்பாப்பா போட்டோநாம என்னைக்கி இப்படி தட்டுல சமாதி ஆவோமோ’ன்னு பார்க்கும் மீன்நாய் ட்ரெஸ்விளக்குமாத்துல கலைநயமா?

ஆப்பிள் முட்டாய்பட்டாம்பூச்சி தோட்டம்மெதுவா தொடுகாட்டுக்குள் இருக்கும் புத்தர் கோவில்
டேய்! நீ எப்படிடா இதுக்குள்ள போன?அதிரடிக்காரன் மச்சான் மச்சான்...

ரொம்பவும் நீளுவதால், இன்னொரு பதிவில் தொடர்கிறேன்...

.

Sunday, March 11, 2012

எல்லோரும் தோனியாக முடியுமா?


இப்பொழுது தான் தோனி படம் பார்த்தேன். நல்ல படம், நல்ல மெஸெஜ், நடிப்பு, இசை. படத்தின் மையக்கருத்தை பற்றி யோசித்ததில் சில எண்ணங்கள்.

---

திரைப்படங்கள், சமூகத்தை பிரதிப்பலிப்பது. அப்படி இருந்தால் தான் நல்லதும் கூட.

எண்பதுகளில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்தபோது வந்த படங்களில், படித்து வேலை இல்லாமல் இருப்பதாக இளைஞர்களை காட்டுவார்கள். உ.தா. - வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள். தற்சமயம் இருக்கும் நிலைக்கேற்ப, படங்களில் மென்பொருள் நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள், தனியார் வங்கிகள், அவை கொடுக்கும் கடன்கள் பற்றிய களங்களில் படங்கள் வெளியாகிறது. உ.தா - யாரடி நீ மோகினி, பொல்லாதவன், மகான் கணக்கு. அவ்வகையில் சினிமாக்கள் சமூகத்தை சரியாகவே அவ்வப்போது பிரதிபலித்து வருவதாக கூறலாம்.

அவை கூறும் கருத்துக்கள், சமூகத்தில் பிரதிபலிக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறி. பிரதிபலிக்க வேண்டுமா என்பது இன்னொரு கேள்விக்குறி. என்னுடைய கேள்வியும் அதுவே.


---

சமீபகாலமாக வரும் படங்களில் கல்வி பற்றிய கருத்துக்களுடன் படங்கள் வெளிவருவது நல்ல விஷயமே. நண்பனில் அவரவருக்கு பிடித்தமான துறையை தேர்ந்தெடுப்பது பற்றியும், தோனியில் கிட்டத்தட்ட அதைப்போன்ற கருத்துடன் கூடவே பள்ளிகளின் மோசமான போக்கைப் பற்றியும் காட்டியிருக்கிறார்கள். உடும்பன் என்ற படத்திலும் பள்ளிகளைப் பற்றி காட்டியிருப்பதாக கேள்விப்பட்டேன்.

இதில் ஒரு சுழற்சி இருக்கிறது. சில அல்லது பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று, அதிக சம்பளம் தரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த எதிர்ப்பார்ப்பை குழந்தைகளிடமும், பள்ளிகள் மீதும் ஏற்றுகிறார்கள். பள்ளிகள் திரும்ப குழந்தைகள் மீதும், அதன் மூலம் பெற்றோர்கள் மீதும் ஏற்றுகிறார்கள். நான் ஒன்றை தொடக்கமாகவும், மற்றொன்றை தொடர்ச்சியாகவும் குறிப்பிட்டுள்ளேன். இது இன்னொரு திசையிலும் வரும்.


அதனால், இப்பொழுது என்ன நீதி சொல்கிறார்கள் என்றால், குழந்தைகளுக்கு பிடித்ததை செய்ய விடுங்கள். படி, படி என்று படிப்பைக்கட்டி கொண்டு அழாதீர்கள் என்கிறார்கள். கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்று ஒத்துக்கொள்ளும் என் மனம், குழந்தைகளுக்கு பிடித்ததை மட்டுமே செய்யவிடுங்கள் என்ற கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

---

சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியாவில் கல்லாதோர் எண்ணிக்கை அதிகமாக இருக்க, தலைவர்கள் கல்வி அவசியம் கருதி பல திட்டங்கள் தீட்டினார்கள். தமிழ்நாட்டில் ‘கல்விக்கு நிதி இல்லையென்றால், பிச்சையெடுத்து நிதி திரட்டவும் தயார்’ என்று காமராஜர் கூறி, பள்ளிக்கூடங்கள் நிறைய தொடங்கினார். ஒரளவுக்கு கல்வியின் அவசியம் குறித்து அனைவருக்குமே தெரிந்தது. வசதியின்மை போன்ற காரணங்களால் முறையான கல்வி பெற முடியாமல் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், கல்வியின் அவசியம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தது.

ஆனால், அப்போது படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியாது. குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோருக்கும் கூட. ஏன் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியருக்கும் தெரியாது.

முன்னமே சொன்னது போல், பல படங்களில் காட்டப்படும் வேலையில்லாத் திண்டாட்டத்தை பற்றி அறிந்திருப்பார்கள். செய்திகளில் பார்த்திருப்பார்கள். நேரிலும் கண்டிருப்பார்கள். இருந்தாலும், ஏன் படி படி என்றார்கள்? தெரியாது.

அப்படி எதற்கு படிக்கிறோம் என்றே தெரியாமல் படித்தது வீணாக போய்விட்டதா? இல்லை. தொண்ணூறுகளுக்கு மேல் ஏற்பட்ட உலகமயமாக்கத்தால் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டான வாய்ப்புகள், எதற்கு படித்தோம் என்று தெரியாமல் படித்த பலருக்கு கைக்கொடுத்திருக்கிறது. மினிமம் கேரண்டி.

இன்று அனைத்து துறைகளிலும் உண்டான மாற்றத்தால், வாய்ப்புகளால், பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டாகிவிட்டதால், பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக்கொள், எதிலும் சம்பாதிக்கலாம் என்பது போல் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

---

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, எனக்கு படிப்பு என்றாலோ, பள்ளி என்றாலோ பிடித்ததே இல்லை. எங்காவது மளிகைக்கடையில் சேர்ந்து பொட்டலம் போட போக சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன். ஆனால், எல்லா வீட்டிலும் சொல்வது போல், எங்கள் வீட்டிலும் அப்பா படிக்க சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் அப்பா அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும் போது, கையில் ஏதாவது புத்தகம் இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.

அப்போது எனக்கு எதற்கு படிக்கிறோம் என்றே தெரியாது. நானும் மற்றவர்கள் போல, கிரிக்கெட் விளையாட செல்வது (இப்பொழுது கிரிக்கெட் பார்ப்பது கூட இல்லை), சினிமா பார்ப்பது, நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி நியாயம் பேசுவது போன்ற காரியங்களில் தான் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.

பிறகு, சில விஷயங்களைக் கண்டு, அப்பா ஆசையை நிறைவேற்றுவதே எனது ஆர்வமானது. சில முன்னணி கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பித்தது (கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்!), எண்ட்ரன்ஸ் எழுதியது (மார்க் கம்மிதான்), கவுன்சலிங் சென்றது (சுமாரான காலேஜ் தான்), அப்போதைக்கு வேலைக்கு உத்தரவாதம் இருப்பது போல் தோன்றிய துறையை தேர்தெடுத்தது, வேலைக்கு சென்றது என அனைத்தும் வீட்டினரின் விருப்பப்படி. அவர்கள் விருப்பம், நான் நல்லா இருக்க வேண்டும் என்பது.

எனக்கு விருப்பமான சில விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். அதை தொடர்ந்திருந்தால் கூட, இப்போது இருப்பது போல் இருந்திருப்பேனா? என்று தெரியவில்லை. இன்னும் பெட்டராகவும் இருந்திருக்கலாம். காலத்திற்கு தான் தெரியும்.

சில விருப்பமான விஷயங்களை, ஒரு ஒரமாக செய்தே வருகிறேன். அதனால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

---

அதனால், என்ன சொல்ல வருகிறேனென்றால், பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் எதிர்காலம் குறித்த ஒரு புரிதல் இருப்பதில்லை. இப்போதுள்ள நிலையில், மாணவர்கள் நிறைய அறிந்திருப்பார்கள் என்றாலும், குழந்தைகளுக்கு பிடிக்கிறதே என்பதால் அதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சரியல்ல என்று எனக்கு தோன்றுகிறது. இந்த கருத்து பாப்புலரானால், அதனால் சில சிக்கல்களை நமது சமூகம் சந்திக்க வேண்டி வரும். அவரவர் நிலைக்கேற்ப, சூழலுக்கேற்ப, தேர்ந்தெடுக்கும் துறையை ஆராய்ந்து, பரஸ்பர புரிதலுடன், ஒப்புதலுடன் தேர்ந்தெடுப்பதே சரியென்று நினைக்கிறேன்.இது எதிர்கால சிக்கல்களை தவிர்க்க உதவும்.

இல்லாவிட்டால், அதை சரி செய்ய மெஸெஜ் சொல்ல, வேறு சில திரைப்படங்கள் தேவையிருக்கும்.

.

பனி சறுக்கிய இரு அப்பாவிகள்

நெடுநாளைய ஆசைகளில் ஒன்று, இன்று நிறைவேறியது.

பனி பார்த்தது, பனி மலையை பார்த்தது என்ற வரிசையில் இன்று பனி சறுக்கு பார்த்ததும், சறுக்கியதும் சேர்ந்தது.டென்வரை சுற்றியிருக்கும் மலை தொடர்களில், ’ஸ்கீயிங்’ எனப்படும் பனி சறுக்கு விளையாடுவதற்கு ஏதுவாக, மலைகளை நிறுவனங்கள் ’ரெடி’ செய்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தது, பனி மற்றும் பணியால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. நேற்று ரிசர்வ் செய்து, இன்று சென்று வந்து விட்டோம்.

---

முன்பு, என் மனைவியுடன், வெளியே ஊரை சுற்றிப் பார்க்க செல்லும் போது, அங்கு கடைகளில் கிடைக்கும் உணவு, அவளுக்கு ஒத்து வராததால், நாங்களே புளியோதரை, தயிர் சாதம் என்று எடுத்து செல்வோம். இந்த வழக்கத்தை விட்டொழுக்க மாட்டோமா? என்று நினைத்தாலும், அந்தந்த இடங்களில் உட்கார்ந்து நம்மூர் ஐட்டங்களை ஒரு கட்டு கட்டுவது, புது அனுபவம் தான்.

இன்று நண்பருடன் சென்றதால், அப்படி எல்லாம் நடக்காது என்று நினைத்திருந்தேன்.

நான் விழிப்பதற்கு முன்பே, நண்பர் எழுந்து தக்காளி சாதமும், சிலபல முட்டைகளை வேக வைத்து ரெடியாக இருந்தார்.

தக்காளி சாதமும், முட்டையும் எடுத்துக்கொண்டு ஸ்கீயிங் சென்றவர்கள் நாங்களாக தான் இருக்கும்.

---

நாங்கள் சென்ற இடத்திற்கு பெயர் - லவ்லேண்ட் ஸ்கீ ஏரியா. மலையை வாங்கிவிட்டார்களா? அல்லது கவர்மெண்ட்டிடம் லீஸுக்கு எடுத்திருக்கிறார்களா? தெரியவில்லை. மலையில் இருக்கும் மரங்களை மொட்டையடித்து, சறுக்குவதற்கு ஏதுவாக மாற்றியிருக்கிறார்கள். சுள்ளென்று வெயில் அடித்தாலும், பனி கரையாமல் இருக்க ஏதேனும் செய்திருக்கிறார்களா? என்றும் தெரியவில்லை. ஆனால், பொதுவாக ஊருக்குள்ளேயே ஒருநாள் பனி பெய்தால், அடுத்து ஒரு வாரத்திற்கு அப்படி தான் இருக்கும்.

பனி சறுக்குவது அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதால், க்ளாஸ் நடத்துகிறார்கள். காலையில் பத்து மணியில் இருந்து, மாலை மூன்று மணி வரை. க்ளாஸுக்கு சென்றால், அணிய வேண்டிய உபகரணங்கள் அனைத்தையும் அவர்களே தருகிறார்கள். அங்கு சென்று, கைக்கு மாட்டுவது, காலுக்கு மாட்டுவது, தலைக்கு மாட்டுவது என்று அனைத்தையும் மாட்டிக்கொண்டு, ஒரு வாத்தியாரை தேடினோம். ஒருவர் சிக்கினார். அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, இன்னொருவர் வந்து எங்களை ‘நான் இவர்களுக்கு பாடம் எடுக்கிறேன்’ என்று பேசிக்கூட்டி சென்றார். அவர் இப்போது, ‘வம்பா போய் இவனுங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோமே!’ என்று நினைத்துக்கொண்டு இருக்கலாம்!

---

முட்டுக்கு கொஞ்சம் கீழே வரை இருக்கும் அந்த பூட்டை காலில் மாட்டுவதே, பெரும்பாடாக இருக்கிறது. அதை காலில் மாட்டிக்கொண்டு நடப்பது என்பது, அந்த காலத்தில் பழைய படங்களில் காட்டுவார்களே, கைதிகளின் கால்களில் ஒரு இரும்பு உருண்டையை மாட்டிவிடுவது போல், அப்படி இருந்தது. காலையில் மாட்டும் போது, ஒன்றும் தெரியவில்லை. பிறகு, க்ளாஸின் போதும் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. மதியம் சாப்பிடும் போதும், கடைசியில் முடிக்கும்போது தான், அந்த தண்டனையின் வீரியம் தெரிந்தது.

அந்த பூட்டை காலில் மாட்டி, பிறகு சறுக்க உதவும் ஸ்கீ எனப்படும் நீளமான குறுகலான பலகையில், பூட்டை மாட்ட வேண்டும். கையில் இரண்டு குச்சிகள். அது ‘போல்’ எனப்படுவது. அதை பனியில் குத்தி குத்தி ஒரு பாலன்ஸ்க்கு வைத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் பேலன்ஸ். போக, போக வேகமாக செல்ல அது தான் உதவும்.

ஆரம்பம் நன்றாக தான் சென்றது. அதன்பிறகு, ஒரு லெவலுக்கு மேல் எங்களால் எந்த முன்னேற்றத்தையும் காட்ட முடியவில்லை. கொஞ்சம் தூரம் வழுக்கிக்கொண்டு, பிறகு கீழே பொத்தென்று விழத்தான் தெரிந்தது. ஸ்பீடை குறைக்க, திசையை மாற்ற, நிறுத்த என்று எங்களுக்கு டிரிக்குகளை அவர் சொல்லி தந்தார். சொல்லி தரும் போது, மண்டை மண்டையை ஆட்டிவிட்டு, வழுக்க ஆரம்பித்தவுடன், நிறுத்த தெரியாமல், திசையை மாற்ற தெரியாமல், கீழே விழுந்து விழுந்து எழுந்தேன்.

இப்பொழுது தான் நடக்க ஆரம்பித்த குழந்தை எல்லாம், எங்கள் முன்னால் சாகசம் காட்டிக்கொண்டிருக்க, நாங்களோ கைப்புள்ளயாய் அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருந்தோம்.

உச்சக்கட்டமாய், தடுப்புக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் குச்சிகளை சிதறடித்துக்கொண்டு விழ, சாகசத்தை மூன்று மணிவாக்கில் நிறுத்திக்கொண்டோம்.

---முதல் நாளிலேயே முழுக்க சறுக்க தெரிந்துக்கொள்ள முடியாதென்றாலும், ஏன் எங்களால் ஒரளவுக்கு கற்றுக்கொள்ள முடியவில்லை என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

முதலாவது, எந்த விளையாட்டும், உடற்பயிற்சியும் செய்வதில்லை. அதனால், அவ்வளவு வெயிட்டுடன் காலை தூக்கிவைத்து நடப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இதில், சறுக்கிக்கொண்டு இருக்கும் போது, காலை தூக்கி திசையை மாற்றுவது என்பது கைக்கூட இல்லை, கால்கூடவில்லை.

கிட்டத்தட்ட முட்டி வரை இருக்கும் அந்த பூட்டினால், நாம் கீழே விழுவதற்கு சாத்தியம் மிகவும் குறைவு. எந்த பக்கம் சாய்ந்தாலும், நமக்கு சப்போர்ட் கொடுக்கும். நாங்கள் விழுந்தது, எங்களால். குழந்தைகள் பிராக்டிஸ் பண்ணுவது, நாங்கள் பிராக்டிஸ் செய்ததற்கு பக்கத்தில் இருந்தது. அவர்கள் ஏரியாவில் நுழையக்கூடாது என்று எங்கள் வாத்தியார் சொல்லியிருந்தார். ஆனால், நான் அந்த திசையிலேயே சென்றுக்கொண்டிருந்தேன். திரும்ப முயற்சி செய்து, முடியாதபட்சத்தில் சாய்ந்து, விழுந்து, என்னை நானே நிறுத்திக்கொள்வேன். ஒன்றிரண்டு முறை மட்டுமே, நின்றவாறே நிறுத்திக்கொண்டேன்.

கொஞ்சம் மேலே ஏற்றி செல்ல, ஒரு லிப்ட் இருக்கிறது. அதை மேஜிக் கார்பட் என்றார். அது கொஞ்சம் மேலே கொண்டு செல்லும். பிறகு, கீழே நாம் சறுக்கி வரவேண்டும். இவ்வளவு வசதி இருந்தாலும், சிறிது நேரத்திலேயே டயர்டாகி விடுவேன். மேலே சென்றவுடன், காலை ’ஒரு சைடாக’ வைத்துக்கொண்டு, இன்னொரு ஓரத்திற்கு சைடாக நடந்து சென்று, அங்கிருந்து சறுக்க சொன்னார். அந்த ’ஒரு சைடு’ கொஞ்சம் வேறு மாதிரி வைத்தாலும், வழுக்கி விழுந்துவிடுவோமோ என்று பயந்துக்கொண்டு, நடப்பதிலேயே களைப்பு வந்துவிடுகிறது. நமக்கு பின்னால் ஆரம்பித்து, சாவகாசமாக வந்து, நமக்கு முன்னால் வந்து, இன்னொரு ஓரத்தில் வாத்தியார் நிற்பார். ‘காமன் காமன்’ என்று சொல்லிக்கொண்டு. அவர் அருகே சென்ற உடன், எப்படி சறுக்க வேண்டும், என்று சொல்லிக்கொண்டு, சறுக்கி சென்று விடுவார். பிறகு, கொஞ்சம் கீழே இருந்து ‘காமன் காமன்’ என்பார்.

எனக்கு அவர் அருகே செல்வதற்குள்ளாகவே, கால் வலித்துக்கொண்டு இருக்கும். உடனே, கீழே வர சொன்னால்? எதையும் யோசிக்காமல், ஒரு பக்கமாக வழுக்கிக்கொண்டு, பிறகு, நானாக கீழே விழுந்து, சிறிது ரெஸ்ட் எடுப்பேன். நான் கீழே விழுவதில், இப்படி ஒரு காரணமும் இருந்தது!

நண்பர், ’இவருக்கு சொல்லி தர தெரியவில்லை’ என்றார். நானும் பிறகு அப்படிதான் நினைத்தேன். சறுக்க ஆர்வம், அதை கற்றுக்கொள்ளவும் ஆர்வம் இருந்து, பிறகு விழுந்து, விழுந்து, களைத்து, சலித்து, அங்கிருந்த பெரிய கடிகாரத்தில் ‘எப்படா மூணு மணியாகும்?’ என்ற பார்க்க வைத்ததில், அவருக்கும் பங்கிருக்கிறது. நமக்கு கற்றுக்கொள்ள முடியாவிட்டால், வாத்தியாரை குறை சொல்வது தான் இப்ப ட்ரெண்டாச்சே?உருப்படியாக, கற்றுக்கொண்டது - விழுந்துவிட்டால், எப்படி காலில் இருப்பதை கழட்டிவிட்டு, பிறகு எழுந்து, காலில் திரும்பவும் மாட்டிக்கொள்வது என்பதுதான். இது அவ்வளவு சுலபமில்லை. கொஞ்ச கஷ்டம் தான்.

ரொம்ப குளிருமோ? என்று பெரிய ஜெர்கின், குல்லா மாட்டிக்கொண்டு செல்ல, அங்கோ உடலுக்கு கொடுத்த கடும் பயிற்சியில், உள்ளே ஊற்றிக்கொண்டு இருந்தது. பிறகு, மதியத்திற்கு மேல் சில ஐட்டங்களை கழட்டிவிட்டு செய்தோம்.

---

வீட்டிற்கு வரும் போது, கார் பனியில் வழுக்கிக்கொண்டு செல்வது போலவே இருந்தது. வீட்டிற்கு வந்த பிறகு, சிறிது நேரம் இருவரும் தூங்கினோம். பிறகு, சாப்பிட உட்காரும் போது, நான் அவரிடம் ஆரம்பித்தேன்.

“கண்ணை மூடினா, ...” முடிப்பதற்குள்,

“பனியில வழுக்கி, விழுற மாதிரியே வருதுங்க” என்றார் அவர்.

.

Thursday, March 8, 2012

நாட்டு சரக்கு - விமர்சனத்திற்கு விமர்சனம்

’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றியிருக்கிறதா? ஏறியிருக்கும் என்று தான் நினைக்கிறேன். ஆரம்ப கேள்விகளை சுலபம் என்றில்லை, காமெடி என்று சொல்லலாம். என்னை இந்த நிகழ்ச்சியில் கவரும் விஷயங்கள் என்னவென்றால் கேள்விகளும், நிகழ்ச்சிக்கு வரும் விதவிதமான மனிதர்களும்.

கேள்விகளில் எந்த அளவுக்கு காமெடியாக கேள்வி கேட்கிறார்கள் என்றும், பிறகு வரும் கேள்விகளில், நமக்கு எந்தளவுக்கு தெரிந்திருக்கிறது என்றும் கவனித்து வருகிறேன். எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்? என்று ஒரு படத்தில் விவேக் கேள்விக்கேட்டு காமெடி செய்வார். கிட்டத்தட்ட அதைப்போல் ஒரு கேள்வியை கூட, இந்த நிகழ்ச்சியில் சூர்யா கேட்டார்.

----

படத்தில் நடிப்பது மட்டுமல்ல, இம்மாதிரி நிகழ்ச்சியில் ’நடிப்பதும்’ பெரிய விஷயம் தான். அதற்கும் ஒரு திறமை தேவை தான்!

நடிகர்கள் பொதுவாக படத்தில் பேசும் போது ஒரு மாதிரியும், நிஜத்தில் வேறு மாதிரியும் பேசுவார்கள். எனக்கென்னமோ, சூர்யா எங்கும் ஒரே மாதிரி பேசுவது போல் இருக்கிறது. நடிப்பு, ரத்தத்தில் கலந்த விஷயம் என்பார்களே! இதுதானா அது?

---

விஜய் டிவியில் இருந்து சிலர் ஜெயா டிவிக்கு ஓடி வந்துவிட்டார்கள் போலும்.

புதிதாக ஜெயா டிவியில் ‘ஆட்டோகிராப்’ என்றொரு நிகழ்ச்சி போடுகிறார்கள். ஒரு பிரபலத்தை வரவழைத்து, அவருடைய வாழ்க்கை பயணத்தைப் பற்றி சொல்ல வைத்து, இடை இடையே அவர் குறிப்பிடும் சில மனிதர்களை சர்ப்ரைஸாக வரவழைத்து பிரபலத்துடன் பேசவிடுகிறார்கள்.

இந்த வாரம், கே.எஸ்.ரவிக்குமார் வந்தார். அவருக்கு பழக்கமான நிறைய பேர் வந்தார்கள். ஒன்றிரண்டு நிமிடங்கள் இருந்து பேசிவிட்டு சென்றார்கள். கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரொம்பவே ஆச்சர்யம். நிறைய சுவையான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். கடைசியில் அவருடைய தாயார் வர, இயக்குனர் கண்கலங்கிவிட்டார். விஜய் டிவி டச்!

ஆரம்ப வாரங்கள் ஒகே. அனைவருக்கும் சர்ப்ரைஸ் எலிமெண்ட் இருக்கும். வரும் வாரங்களில், இவ்வாறான சுவாரஸ்யம் இருக்குமா என்பது சந்தேகம் தான்.முக்கியமான விஷயம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், சுஹாசினி. இனி நீங்க பார்ப்பீங்களோ, என்னமோ?

----

விஜய் டிவியில் பாக்யராஜும், ஜெயா டிவியில் மதனும், ராஜ் டிவியில் ரோகிணியும் திரை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆரம்பத்தில் பாக்யராஜ் நிகழ்ச்சியின் மேல் எதிர்பார்ப்பு இருந்தது. திரைக்கதை மன்னனான அவர், நல்லவிதமாக விமர்சனம் செய்வார் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர் எதற்கெடுத்தாலும் படத்தில் காமெடி இல்லை, இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்றே சொல்லி வருகிறார். சும்மா டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கே எரிச்சல் வருகிறது என்றால், படத்தை எடுத்த இயக்குனருக்கு எப்படி இருக்கும்? பெரிய மனுசஷனாச்சே! என்று தலையையாட்டி விட்டு வருகிறார்கள். (சமீபகாலமாக நிகழ்ச்சியை பார்க்கவில்லை. வருகிறதா?)

ரோகிணி விமர்சனத்தில் எந்த குறையும் நான் காணவில்லை. படத்தை நுணுக்கமாகத்தான் கவனித்து விமர்சனம் செய்கிறார். சொல்லும் விஷயங்களும், நியாயமாகத்தான் இருக்கிறது என்றாலும், அவர் சொல்லும் தொனி, தொகுத்து வழங்கும் விதம் என்னமோ போல் இருக்கிறது. ஆனால், அது என்னவென்று சொல்ல தெரியவில்லை.

இவ்வகை விமர்சன நிகழ்ச்சிகளிலேயே என்னை கவர்ந்தது, மதனின் நிகழ்ச்சி தான். எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும், பாராட்ட வேண்டிய விஷயங்களை பாராட்டிவிட்டு, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் குறைகளையும் சொல்லிவிடுகிறார். ஒரு நல்ல ரப்போர்ட்டுடன் வருபவர்களிடம் பேசுகிறார்.இந்த வாரம், ‘உடும்பன்’ பட இயக்குனர் இவரிடம் மாட்டிக்கொண்டு பட்ட பாடு இருக்கிறதே! பாவமாகவும் இருந்தது. சிரிப்பாகவும் இருந்தது.