Sunday, March 11, 2012

எல்லோரும் தோனியாக முடியுமா?


இப்பொழுது தான் தோனி படம் பார்த்தேன். நல்ல படம், நல்ல மெஸெஜ், நடிப்பு, இசை. படத்தின் மையக்கருத்தை பற்றி யோசித்ததில் சில எண்ணங்கள்.

---

திரைப்படங்கள், சமூகத்தை பிரதிப்பலிப்பது. அப்படி இருந்தால் தான் நல்லதும் கூட.

எண்பதுகளில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்தபோது வந்த படங்களில், படித்து வேலை இல்லாமல் இருப்பதாக இளைஞர்களை காட்டுவார்கள். உ.தா. - வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள். தற்சமயம் இருக்கும் நிலைக்கேற்ப, படங்களில் மென்பொருள் நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள், தனியார் வங்கிகள், அவை கொடுக்கும் கடன்கள் பற்றிய களங்களில் படங்கள் வெளியாகிறது. உ.தா - யாரடி நீ மோகினி, பொல்லாதவன், மகான் கணக்கு. அவ்வகையில் சினிமாக்கள் சமூகத்தை சரியாகவே அவ்வப்போது பிரதிபலித்து வருவதாக கூறலாம்.

அவை கூறும் கருத்துக்கள், சமூகத்தில் பிரதிபலிக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறி. பிரதிபலிக்க வேண்டுமா என்பது இன்னொரு கேள்விக்குறி. என்னுடைய கேள்வியும் அதுவே.


---

சமீபகாலமாக வரும் படங்களில் கல்வி பற்றிய கருத்துக்களுடன் படங்கள் வெளிவருவது நல்ல விஷயமே. நண்பனில் அவரவருக்கு பிடித்தமான துறையை தேர்ந்தெடுப்பது பற்றியும், தோனியில் கிட்டத்தட்ட அதைப்போன்ற கருத்துடன் கூடவே பள்ளிகளின் மோசமான போக்கைப் பற்றியும் காட்டியிருக்கிறார்கள். உடும்பன் என்ற படத்திலும் பள்ளிகளைப் பற்றி காட்டியிருப்பதாக கேள்விப்பட்டேன்.

இதில் ஒரு சுழற்சி இருக்கிறது. சில அல்லது பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று, அதிக சம்பளம் தரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த எதிர்ப்பார்ப்பை குழந்தைகளிடமும், பள்ளிகள் மீதும் ஏற்றுகிறார்கள். பள்ளிகள் திரும்ப குழந்தைகள் மீதும், அதன் மூலம் பெற்றோர்கள் மீதும் ஏற்றுகிறார்கள். நான் ஒன்றை தொடக்கமாகவும், மற்றொன்றை தொடர்ச்சியாகவும் குறிப்பிட்டுள்ளேன். இது இன்னொரு திசையிலும் வரும்.


அதனால், இப்பொழுது என்ன நீதி சொல்கிறார்கள் என்றால், குழந்தைகளுக்கு பிடித்ததை செய்ய விடுங்கள். படி, படி என்று படிப்பைக்கட்டி கொண்டு அழாதீர்கள் என்கிறார்கள். கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்று ஒத்துக்கொள்ளும் என் மனம், குழந்தைகளுக்கு பிடித்ததை மட்டுமே செய்யவிடுங்கள் என்ற கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

---

சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியாவில் கல்லாதோர் எண்ணிக்கை அதிகமாக இருக்க, தலைவர்கள் கல்வி அவசியம் கருதி பல திட்டங்கள் தீட்டினார்கள். தமிழ்நாட்டில் ‘கல்விக்கு நிதி இல்லையென்றால், பிச்சையெடுத்து நிதி திரட்டவும் தயார்’ என்று காமராஜர் கூறி, பள்ளிக்கூடங்கள் நிறைய தொடங்கினார். ஒரளவுக்கு கல்வியின் அவசியம் குறித்து அனைவருக்குமே தெரிந்தது. வசதியின்மை போன்ற காரணங்களால் முறையான கல்வி பெற முடியாமல் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், கல்வியின் அவசியம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தது.

ஆனால், அப்போது படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியாது. குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோருக்கும் கூட. ஏன் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியருக்கும் தெரியாது.

முன்னமே சொன்னது போல், பல படங்களில் காட்டப்படும் வேலையில்லாத் திண்டாட்டத்தை பற்றி அறிந்திருப்பார்கள். செய்திகளில் பார்த்திருப்பார்கள். நேரிலும் கண்டிருப்பார்கள். இருந்தாலும், ஏன் படி படி என்றார்கள்? தெரியாது.

அப்படி எதற்கு படிக்கிறோம் என்றே தெரியாமல் படித்தது வீணாக போய்விட்டதா? இல்லை. தொண்ணூறுகளுக்கு மேல் ஏற்பட்ட உலகமயமாக்கத்தால் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டான வாய்ப்புகள், எதற்கு படித்தோம் என்று தெரியாமல் படித்த பலருக்கு கைக்கொடுத்திருக்கிறது. மினிமம் கேரண்டி.

இன்று அனைத்து துறைகளிலும் உண்டான மாற்றத்தால், வாய்ப்புகளால், பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டாகிவிட்டதால், பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக்கொள், எதிலும் சம்பாதிக்கலாம் என்பது போல் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

---

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, எனக்கு படிப்பு என்றாலோ, பள்ளி என்றாலோ பிடித்ததே இல்லை. எங்காவது மளிகைக்கடையில் சேர்ந்து பொட்டலம் போட போக சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன். ஆனால், எல்லா வீட்டிலும் சொல்வது போல், எங்கள் வீட்டிலும் அப்பா படிக்க சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் அப்பா அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும் போது, கையில் ஏதாவது புத்தகம் இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.

அப்போது எனக்கு எதற்கு படிக்கிறோம் என்றே தெரியாது. நானும் மற்றவர்கள் போல, கிரிக்கெட் விளையாட செல்வது (இப்பொழுது கிரிக்கெட் பார்ப்பது கூட இல்லை), சினிமா பார்ப்பது, நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி நியாயம் பேசுவது போன்ற காரியங்களில் தான் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.

பிறகு, சில விஷயங்களைக் கண்டு, அப்பா ஆசையை நிறைவேற்றுவதே எனது ஆர்வமானது. சில முன்னணி கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பித்தது (கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்!), எண்ட்ரன்ஸ் எழுதியது (மார்க் கம்மிதான்), கவுன்சலிங் சென்றது (சுமாரான காலேஜ் தான்), அப்போதைக்கு வேலைக்கு உத்தரவாதம் இருப்பது போல் தோன்றிய துறையை தேர்தெடுத்தது, வேலைக்கு சென்றது என அனைத்தும் வீட்டினரின் விருப்பப்படி. அவர்கள் விருப்பம், நான் நல்லா இருக்க வேண்டும் என்பது.

எனக்கு விருப்பமான சில விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். அதை தொடர்ந்திருந்தால் கூட, இப்போது இருப்பது போல் இருந்திருப்பேனா? என்று தெரியவில்லை. இன்னும் பெட்டராகவும் இருந்திருக்கலாம். காலத்திற்கு தான் தெரியும்.

சில விருப்பமான விஷயங்களை, ஒரு ஒரமாக செய்தே வருகிறேன். அதனால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

---

அதனால், என்ன சொல்ல வருகிறேனென்றால், பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் எதிர்காலம் குறித்த ஒரு புரிதல் இருப்பதில்லை. இப்போதுள்ள நிலையில், மாணவர்கள் நிறைய அறிந்திருப்பார்கள் என்றாலும், குழந்தைகளுக்கு பிடிக்கிறதே என்பதால் அதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சரியல்ல என்று எனக்கு தோன்றுகிறது. இந்த கருத்து பாப்புலரானால், அதனால் சில சிக்கல்களை நமது சமூகம் சந்திக்க வேண்டி வரும். அவரவர் நிலைக்கேற்ப, சூழலுக்கேற்ப, தேர்ந்தெடுக்கும் துறையை ஆராய்ந்து, பரஸ்பர புரிதலுடன், ஒப்புதலுடன் தேர்ந்தெடுப்பதே சரியென்று நினைக்கிறேன்.இது எதிர்கால சிக்கல்களை தவிர்க்க உதவும்.

இல்லாவிட்டால், அதை சரி செய்ய மெஸெஜ் சொல்ல, வேறு சில திரைப்படங்கள் தேவையிருக்கும்.

.

11 comments:

Umesh said...

Fantastic thoughts sir !

I too felt something uncomfortable in the message conveyed by "Dhoni", you nailed it !

முரளிகண்ணன் said...

நல்ல கோணத்தில் எழுதப்பட்ட பதிவு

Kartheeswaran said...

அற்புதம்... சிறப்பாக சொல்லியிருக்கின்றீர்கள்...

இதை படித்த போது எனது பள்ளிப் பருவ நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது...

நானும் பெரிதாக படிக்கவில்லை...
+2 வரை தான் படித்தேன், பிறகு குடும்ப சூழல் காரணமாக பணி செய்ய வேண்டிய நிலையில் ஆரம்பித்தது, இன்று வரை தொடர்கிறது...

நான் பள்ளியில் கற்றதை விட அதற்கு பிறகு கற்றது அதிகம்...

நமது பள்ளி பருவத்தில் நமது பெற்றோர்களில் பெரும்பான்மையானவர்கள் பெரிதாக கல்வி அறிவு இல்லாதவர்கள், அதனான் புரிதல் இடைவெளி என்பது பெரியாதாக இல்லை, எதோ மகன் படித்தால் போதுமென்ற நிலை. ஆனால் தற்போதைய நிலை வேறு, அதே போல் புரிதலும் பிரச்சனையாக உள்ளது. இன்றைய தலையாய பிரச்சனைகளில் இது மிக முக்கியமானது, ஆனால் அதுகுறித்த அக்கறையோ, தொலை நோக்கு திட்டங்களோ நமது அரசிடம் இல்லை என்பதே வேதனையான உண்மை...

உங்களது கோணம் அருமை...

வாழ்த்துக்கள்...!

ஜமீல் said...

சமூக பொறுப்புடன், சரியான கோணத்தில் எழுதியிருக்கிறீர்கள்....
content-ல் சொல்லாததை title ல் சொன்னது, பளிச்....!!!!

ஜமீல் said...

சமூக பொறுப்புடன், சரியான கோணத்தில் எழுதியிருக்கிறீர்கள்....
content-ல் சொல்லாததை title ல் சொன்னது, பளிச்....!!!!

சரவணகுமரன் said...

நன்றி உமேஷ்

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

சரவணகுமரன் said...

நன்றி கார்த்தீஸ்வரன்

சரவணகுமரன் said...

நன்றி ஜமீல்

Ramesh said...

இது போன்ற படங்கள் எல்லாம் வெறும் romanticization தானே சார்! தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புடிச்ச விஷயமே இந்த romanticization தான். உன்னால் முடியும் தம்பின்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி எல்லாரையும் காலி பண்றதுதான் இவனுங்க வேல.

ஒளுங்கு மரியாதையா படிச்சவனே டிங்கி அடிக்கறான். இவனுங்க என்னடான்னா இப்படி ரீல் சுத்தறானுங்க.

கேட்டா பில் கேட்ஸ் படிச்சாரா, இளையராஜா படிப்பளியான்னு மொக்க கேள்வி கேப்பாங்க.

உங்க பதிவு ரொம்ப புடிச்சிருக்கு. வாழ்க வளமுடன்!

Ramesh said...

"குழந்தைகளுக்கு பிடித்ததை மட்டுமே செய்யவிடுங்கள் என்ற கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை."

I agree. This may be possible and fruitful in first world nations. Not a good idea for India.