Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts

Monday, October 2, 2017

நீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா?

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



உலகமெங்கும் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம், அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் முதல் திங்கள் அன்று கொண்டாடப்படும் காரணம் என்ன? அமெரிக்காவுக்குச் சைனீஸ் நூடுல்ஸும் டொமட்டோ சாஸும் பிடிக்கும் அளவுக்கு, சோஷலிசமும் போராட்டங்களும் பிடிப்பதில்லை. மே 1 முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து நடத்தப்பட்ட சிகாகோ தொழிலாளர் போராட்டத்தை உலகமே வருடம் தோறும் மே ஒன்றாம் தேதி அன்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அமெரிக்காவில் மட்டும் தொழிலாளர் தினமான செப்டம்பர் முதல் திங்களில் "சம்மர் முடியுது, ஸ்கூல் தொறக்குது, வருடத்தின் கடைசி ட்ரிப்" என்று ப்ளான் செய்து சுற்றுலா சொகுசில் இருப்பார்கள் மக்கள்.

சரி, அது என்ன சிகாகோ போராட்டம், எட்டு மணி நேர வேலை? 1870களில் உலகமெங்கும் தொழிற்சாலைகள் பெருகிய காலக்கட்டத்தில், சிகாகோவிலும் அந்த வளர்ச்சி நன்கு காணப்பட்டது. தொழிலாளர்கள் சராசரியாக வாரத்திற்கு ஆறு நாட்கள் எனச் சுமார் அறுபது மணி நேரங்கள் மேலே உழைத்தார்கள். நூறு மணி நேரங்கள் உழைக்க வைக்கப்பட்டவர்களும் இருந்தனர். அவர்களது பணிநிலையைச் சீராக்க, தினசரி எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கை, தொழிலாளர்களால் அதிகார வர்க்கத்திடம் வைக்கப்பட்டது. அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம், 1886 மே ஒன்றில் இருந்து தினசரி வேலை நேரம் 8 மணி நேரமாகத் தான் இருக்க வேண்டும் என்று தீர்மானத்தை முன்வைத்து, அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்கான போராட்டங்கள், பேரணி பல இடங்களில் நடந்தன. சிகாகோவில் ஹேமார்க்கெட்டில் என்னும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த காவல்துறை, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயல, அந்தப் போராட்டக்களத்தில் தொழிலாளர் உரிமைக்கான முதல் குண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஏழு போலீஸார் உள்படச் சுமார் பதினைந்து பேர் பலியானார்கள். அறுபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தன. 1940 இல் அமெரிக்கக் காங்கிரஸ் 40 மணி நேர வார வேலைக்கான சட்டம் இயற்றியது.

ஆனால், இந்த உலகில் தொழிலாளர்கள் எல்லாம் இன்னமுமா எட்டு நேரம் மட்டும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? எனக்கு நன்கு தெரிந்த ஐடி துறையை எடுத்துக் கொண்டாலே, என்னால் தயக்கமின்றிக் கூற முடியும் - இல்லையென்று.

கம்பெனியின் பாலிசி, அப்பாயிண்மெண்ட் லெட்டர் எனப் பயன்பாட்டில் இல்லாதவற்றைக் கூறும் பேப்பரில் மட்டும் தான், எட்டு மணி நேர வேலை இருக்கும். அதற்கு முரணாக, அன்றாடப் பயன்பாட்டு நெறிமுறைகள் இருக்கும் பிற இடங்களில் எட்டு மணி நேர வேலைக்கான வாய்ப்பே இருக்காது. ப்ரொடக்ஷன் இஷ்யூ (Production Issue) என்றால் எந்நேரம் என்றாலும் பார்க்க வேண்டும், ப்ரொடக்ஷன் இன்ஸ்டாலை (Production install) நைட் தான் செய்ய வேண்டும், டிசாஸ்டர் ரிக்கவரி டெஸ்டிங் (Disaster Recovery Testing) வாரயிறுதியில் செய்ய வேண்டும், ஸ்ப்ரிண்டில் (Sprint) கம்மிட் செய்தவை, எந்த நிலையிலும் கண்டிப்பாக ஸ்ப்ரிண்ட் முடிவிற்குள் முடிக்கப்பட வேண்டும். இதற்கு ஈடுகட்ட தனியாக விடுமுறை ஏதும் இல்லை. பிறகு, எட்டு மணி நேர வேலை? அமெரிக்காவில் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதில் காரணம் இருக்கிறதல்லவா!!

கணினி முன் உட்கார்ந்துப் பார்க்கும் வேலைகளில், பெரிய உடல் உழைப்பு இல்லையென்பதால், இப்படி நேரம் கடந்த வேலையை, ஒரு குறையாக யாரும் பெரிதாகச் சொல்வதில்லை. ஆனால், இப்படி வேலை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை, சம்பந்தப்பட்டவர்களே கவனிப்பதில்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

இன்னொன்று, ஃபேக்டரி கதவை மூடிவிட்டு உள்ளூக்குள் கிடந்து வேலைப் பார்க்கும் சூழல் இதில் இல்லை. கையில் ஒரு லேப்டாப்பைக் கொடுத்து, எங்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்பதால், ஆர்வக் கோளாறு காரணமாகவும், பெயருக்கும், பணியிடத்து முன்னேற்றங்களுக்காகவும் பலரும் தாமே பலருக்குத் தவறான முன்னுதாரணமாக இந்த விஷயத்தில் அமைந்து விடுகிறார்கள்.

இது போன்ற விஷயங்களில் சில பெண்கள் தான் கட்டுப்பாட்டுடன் 8 மணி நேர வேலையுடன் ஒருதினத்தை நிறுத்திக்கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் குடும்பச் சூழல், சார்புப் பொருளாதார நிலைமை போன்றவை காரணமாக இருக்கலாம். பெரும்பாலான ஆண்களை முழு நேரமும் அலுவலக வேலைக்கு நேர்ந்துவிட்டதால், அதிலேயே கதியாகக் கிடக்கிறார்கள். தனிப்பட்ட வேறு துறைச் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டால், இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துக்கொள்ளலாம்..

எட்டு மணி நேரத்தை அதிகாரவர்க்கத்திடம் பேசுவதை விட்டு, தனி ஒருவனாக ஒவ்வொரு தொழிலாளியும் தன்னுள் இருந்து சிந்திக்கும் காலக்கட்டம் இது.

.

Wednesday, October 22, 2014

இந்திய சேவை. என்ன தேவை?



ஃப்ளிப்கார்டில் ஒரு பரிசு பொருள் ஆர்டர் செய்திருந்தேன். சொன்ன தேதிக்கு போய்  சேரவில்லை. போன் செய்து பார்த்தால், ஏதோ  கதையை சொன்னார்கள். கஸ்டமர் கேர்காரர்களுக்கு மன்னிப்பு கேட்பதில் எந்த ஈகோவும் இருப்பதில்லை.மன்னிப்பு கேட்பது பெரிய மனுஷத்தனம் என்ற கமலின் கூற்றின்படி, இவர்கள் பெரிய மனிதர்கள்.

சரி, ஒண்ணும்  பிரச்சினை இல்லை. சர்ப்ரைஸ் கிப்ட் தானே? சர்ப்ரைஸா மெதுவா போகட்டும் என்று விட்டுவிட்டேன்.

இங்கு அமெரிக்காவில் பெரும்பாலான பொருட்களை ஆன்லைனில் தான் வாங்குவேன். 90% சொன்ன தேதிக்கு வரும். 5% சொன்ன தேதிக்கு ஒருநாள் பிறகு வரும். 5% சொன்ன தேதிக்கு முன்பு வரும். இது என்னோட புள்ளிவிபரம். சொல்லவரும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலான சமயங்களில் சொன்ன தேதிக்கு முன்பே வரும் என்பது தான்.

தொடர்வதற்கு முன்பு, இன்னொரு விஷயம். இந்தியாவில் இருக்கும் போது, யாராவது இந்தியாவை மட்டம் தட்டி, அங்க அப்படி, இங்க இப்படி என்று சொன்னால் கடியாக இருக்கும். இப்படி நானும் எரிச்சல் கிளப்பக்கூடாது என்று தான் பல பதிவுகளை எழுத நினைத்து, எழுத ஆரம்பித்து விட்டிருக்கிறேன். இதுவும் அப்படி ஒரு பதிவுதான். இருந்தாலும், எழுதுகிறேன். யாரையேனும் புண்படுத்தினால், மன்னிக்கவும்.

ஃப்ளிப்கார்ட்டில் இப்படி ஆனதும், நான் நினைத்தது, ஃப்ளிப்கார்ட், ஒரு இந்திய கம்பெனி என்பதால், இம்மாதிரி பிரச்சினைகள் இருக்கிறது என்று. ஈபே, அமேசான் போன்ற அமெரிக்க கம்பெனிகளின் இந்திய தளங்கள் நல்லபடியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

அது தவறு என்று விரைவிலேயே தெரிந்தது. போன வருடம், என் அண்ணன் ஈபேயில் ஒரு நோக்கியா போன் வாங்கியிருக்கிறார். புது போன் தான். இந்த வருடம், ஏதோ பிரச்சினை வந்திருக்கிறது. நோக்கியாவில் கேட்டால், வாரண்டி போன வருடமே முடிந்திருக்கிறது. போன் வாங்குவதற்கு முன்பு. அதாவது, வாரண்டி முடிந்த பிறகு, பழைய போனை புது போன் என்று பொய் சொல்லி விற்றிருக்கிறார்கள். ஈபேயில் கேட்டால், இது விற்பனையாளர் தவறு. நீங்கள் வாங்கி இரண்டு மாதத்திற்குள் புகார் சொல்லியிருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்தது, சமீபத்தில் அபிலாஷின் இந்த பதிவை படித்தேன். அமேசானின் டெலிவரி குளறுபடி பற்றியது.

இப்ப எனக்கு தோன்றுவது, ஃப்ளிப்கார்ட் அமெரிக்க தளம் ஆரம்பித்தாலும், இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகள் இருக்க போவதில்லை என்று.

அதாவது, பிரச்சினை இருப்பது, நிறுவனத்தின் விதிமுறைகளிலோ, செயல்முறைகளிலோ இல்லை. ஊழியர்களிடம். ஊழியர்களாகிய மனிதர்களின் மனநிலையில். மனிதர்கள் வாழும் சூழலில்.

இவையெல்லாம் மாறாமல், இம்மாதிரி சேவைகளின் தரம் மாற போவதில்லை.

.


Sunday, March 11, 2012

எல்லோரும் தோனியாக முடியுமா?


இப்பொழுது தான் தோனி படம் பார்த்தேன். நல்ல படம், நல்ல மெஸெஜ், நடிப்பு, இசை. படத்தின் மையக்கருத்தை பற்றி யோசித்ததில் சில எண்ணங்கள்.

---

திரைப்படங்கள், சமூகத்தை பிரதிப்பலிப்பது. அப்படி இருந்தால் தான் நல்லதும் கூட.

எண்பதுகளில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்தபோது வந்த படங்களில், படித்து வேலை இல்லாமல் இருப்பதாக இளைஞர்களை காட்டுவார்கள். உ.தா. - வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள். தற்சமயம் இருக்கும் நிலைக்கேற்ப, படங்களில் மென்பொருள் நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள், தனியார் வங்கிகள், அவை கொடுக்கும் கடன்கள் பற்றிய களங்களில் படங்கள் வெளியாகிறது. உ.தா - யாரடி நீ மோகினி, பொல்லாதவன், மகான் கணக்கு. அவ்வகையில் சினிமாக்கள் சமூகத்தை சரியாகவே அவ்வப்போது பிரதிபலித்து வருவதாக கூறலாம்.

அவை கூறும் கருத்துக்கள், சமூகத்தில் பிரதிபலிக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறி. பிரதிபலிக்க வேண்டுமா என்பது இன்னொரு கேள்விக்குறி. என்னுடைய கேள்வியும் அதுவே.


---

சமீபகாலமாக வரும் படங்களில் கல்வி பற்றிய கருத்துக்களுடன் படங்கள் வெளிவருவது நல்ல விஷயமே. நண்பனில் அவரவருக்கு பிடித்தமான துறையை தேர்ந்தெடுப்பது பற்றியும், தோனியில் கிட்டத்தட்ட அதைப்போன்ற கருத்துடன் கூடவே பள்ளிகளின் மோசமான போக்கைப் பற்றியும் காட்டியிருக்கிறார்கள். உடும்பன் என்ற படத்திலும் பள்ளிகளைப் பற்றி காட்டியிருப்பதாக கேள்விப்பட்டேன்.

இதில் ஒரு சுழற்சி இருக்கிறது. சில அல்லது பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று, அதிக சம்பளம் தரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த எதிர்ப்பார்ப்பை குழந்தைகளிடமும், பள்ளிகள் மீதும் ஏற்றுகிறார்கள். பள்ளிகள் திரும்ப குழந்தைகள் மீதும், அதன் மூலம் பெற்றோர்கள் மீதும் ஏற்றுகிறார்கள். நான் ஒன்றை தொடக்கமாகவும், மற்றொன்றை தொடர்ச்சியாகவும் குறிப்பிட்டுள்ளேன். இது இன்னொரு திசையிலும் வரும்.


அதனால், இப்பொழுது என்ன நீதி சொல்கிறார்கள் என்றால், குழந்தைகளுக்கு பிடித்ததை செய்ய விடுங்கள். படி, படி என்று படிப்பைக்கட்டி கொண்டு அழாதீர்கள் என்கிறார்கள். கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்று ஒத்துக்கொள்ளும் என் மனம், குழந்தைகளுக்கு பிடித்ததை மட்டுமே செய்யவிடுங்கள் என்ற கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

---

சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியாவில் கல்லாதோர் எண்ணிக்கை அதிகமாக இருக்க, தலைவர்கள் கல்வி அவசியம் கருதி பல திட்டங்கள் தீட்டினார்கள். தமிழ்நாட்டில் ‘கல்விக்கு நிதி இல்லையென்றால், பிச்சையெடுத்து நிதி திரட்டவும் தயார்’ என்று காமராஜர் கூறி, பள்ளிக்கூடங்கள் நிறைய தொடங்கினார். ஒரளவுக்கு கல்வியின் அவசியம் குறித்து அனைவருக்குமே தெரிந்தது. வசதியின்மை போன்ற காரணங்களால் முறையான கல்வி பெற முடியாமல் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், கல்வியின் அவசியம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தது.

ஆனால், அப்போது படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியாது. குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோருக்கும் கூட. ஏன் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியருக்கும் தெரியாது.

முன்னமே சொன்னது போல், பல படங்களில் காட்டப்படும் வேலையில்லாத் திண்டாட்டத்தை பற்றி அறிந்திருப்பார்கள். செய்திகளில் பார்த்திருப்பார்கள். நேரிலும் கண்டிருப்பார்கள். இருந்தாலும், ஏன் படி படி என்றார்கள்? தெரியாது.

அப்படி எதற்கு படிக்கிறோம் என்றே தெரியாமல் படித்தது வீணாக போய்விட்டதா? இல்லை. தொண்ணூறுகளுக்கு மேல் ஏற்பட்ட உலகமயமாக்கத்தால் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டான வாய்ப்புகள், எதற்கு படித்தோம் என்று தெரியாமல் படித்த பலருக்கு கைக்கொடுத்திருக்கிறது. மினிமம் கேரண்டி.

இன்று அனைத்து துறைகளிலும் உண்டான மாற்றத்தால், வாய்ப்புகளால், பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டாகிவிட்டதால், பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக்கொள், எதிலும் சம்பாதிக்கலாம் என்பது போல் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

---

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, எனக்கு படிப்பு என்றாலோ, பள்ளி என்றாலோ பிடித்ததே இல்லை. எங்காவது மளிகைக்கடையில் சேர்ந்து பொட்டலம் போட போக சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன். ஆனால், எல்லா வீட்டிலும் சொல்வது போல், எங்கள் வீட்டிலும் அப்பா படிக்க சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் அப்பா அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும் போது, கையில் ஏதாவது புத்தகம் இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.

அப்போது எனக்கு எதற்கு படிக்கிறோம் என்றே தெரியாது. நானும் மற்றவர்கள் போல, கிரிக்கெட் விளையாட செல்வது (இப்பொழுது கிரிக்கெட் பார்ப்பது கூட இல்லை), சினிமா பார்ப்பது, நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி நியாயம் பேசுவது போன்ற காரியங்களில் தான் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.

பிறகு, சில விஷயங்களைக் கண்டு, அப்பா ஆசையை நிறைவேற்றுவதே எனது ஆர்வமானது. சில முன்னணி கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பித்தது (கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்!), எண்ட்ரன்ஸ் எழுதியது (மார்க் கம்மிதான்), கவுன்சலிங் சென்றது (சுமாரான காலேஜ் தான்), அப்போதைக்கு வேலைக்கு உத்தரவாதம் இருப்பது போல் தோன்றிய துறையை தேர்தெடுத்தது, வேலைக்கு சென்றது என அனைத்தும் வீட்டினரின் விருப்பப்படி. அவர்கள் விருப்பம், நான் நல்லா இருக்க வேண்டும் என்பது.

எனக்கு விருப்பமான சில விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். அதை தொடர்ந்திருந்தால் கூட, இப்போது இருப்பது போல் இருந்திருப்பேனா? என்று தெரியவில்லை. இன்னும் பெட்டராகவும் இருந்திருக்கலாம். காலத்திற்கு தான் தெரியும்.

சில விருப்பமான விஷயங்களை, ஒரு ஒரமாக செய்தே வருகிறேன். அதனால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

---

அதனால், என்ன சொல்ல வருகிறேனென்றால், பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் எதிர்காலம் குறித்த ஒரு புரிதல் இருப்பதில்லை. இப்போதுள்ள நிலையில், மாணவர்கள் நிறைய அறிந்திருப்பார்கள் என்றாலும், குழந்தைகளுக்கு பிடிக்கிறதே என்பதால் அதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சரியல்ல என்று எனக்கு தோன்றுகிறது. இந்த கருத்து பாப்புலரானால், அதனால் சில சிக்கல்களை நமது சமூகம் சந்திக்க வேண்டி வரும். அவரவர் நிலைக்கேற்ப, சூழலுக்கேற்ப, தேர்ந்தெடுக்கும் துறையை ஆராய்ந்து, பரஸ்பர புரிதலுடன், ஒப்புதலுடன் தேர்ந்தெடுப்பதே சரியென்று நினைக்கிறேன்.இது எதிர்கால சிக்கல்களை தவிர்க்க உதவும்.

இல்லாவிட்டால், அதை சரி செய்ய மெஸெஜ் சொல்ல, வேறு சில திரைப்படங்கள் தேவையிருக்கும்.

.

Sunday, August 15, 2010

பெங்களூரில் சோழர் கோவில் - சுதந்திர தின ஸ்பெஷல்

”சுதந்திர தினத்திற்கு என்னப்பா ப்ளான்?”

“காலையில் எந்திரிச்சு, குளிச்சு, கோவிலுக்கு போய் இந்தியா நல்லா இருக்கணும்’ன்னு வேண்டிக்க போறேன்!”

“என்னது?!!!”

---

அவன்கிட்ட காமெடியாக சொன்னாலும், கோவிலுக்கு போவது தான் ப்ளான். இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது, இது கண்ணில் பட்டது. இன்னும் தேடி பிடித்து வாசித்ததில், சோழர் காலத்து ஊர் என்றும், முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோவில்களில் ஒன்று என்றும் தெரிய வந்தது. இந்த பக்கங்களின் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை. இங்கே சில புகைப்படங்களைப் பார்த்த போது, ரொம்ப பழைய காலத்து கோவில் என்பது மட்டும் புரிந்தது.

கண்டிப்பாக பார்க்க வேண்டும் என கிளம்பிவிட்டேன்.

---

பெங்களூர் ஓசூர் ரோட்டில், பொம்மன்னஹள்ளி சிக்னலில் பேகூர் ரோட்டில் சென்றால், சிறிது தூரத்தில் பேகூர் என்ற கிராமம் வருகிறது. கிராமம் என்பதை விட, பெங்களூரின் ஒரு ஏரியா என்று சொல்லிவிடலாம். ஊரோடு ஊராக கலந்துவிட்டது.

ஒரு ஏரி இருக்கிறது. ஏரியின் பக்கத்தில் இந்த கோவில். ஏரியின் மறுபக்கம் ப்ளாட் போட்டு விற்று, வீடுகள் பெருகி விட்டது. இங்கே இடத்தின் மதிப்பு சதுர அடிக்கு 1500 மேல்.



பழைய கோவிலுக்கு முன்பு, ஒரு புதிய கோவில் கட்டும் பணி நடந்துக்கொண்டிருந்தது. கோவில் சின்னது தான். வரிசையாக நிறைய லிங்கங்கள் இருந்தது. கோவிலுக்குள் ரொம்ப தாழ்வாரமாக இருந்தது. குனிந்துக்கொண்டே செல்ல வேண்டியிருந்தது. நிறைய சிற்பங்கள் பார்த்தேன். கூரையின் மேல்பக்கமும் சிற்பங்கள் இருந்தது.

பழைய கோவிலுக்கு என்றே ஒரு மணம் இருக்கிறது. அப்படி ஒரு மணத்தை சுவாசித்துக்கொண்டே சாமி கும்பிடும் அனுபவம், நவீன கோவில்களில் கிடைக்காது. பக்கத்தில் பழைய காலத்து கிணறு ஒன்றும் இருக்கிறது. அதற்கு பக்கத்தில் ஒரு பேமிலி புளியோதரை கட்டி கொண்டு வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

இந்த கோவில் எனக்கு பிடித்து போய்விட்டது.

---

ஒரு நடுத்தர வயது தம்பதி கோவில் பூசாரியிடம் வந்து கோவிலைப் பற்றி கன்னடத்தில் ஏதோ கேட்டார்கள். ’வைப்ரேஷன்’ என்று நடுவே சில வார்த்தைகள் வந்து விழுந்தது. இப்படி ஒட்டுக்கேட்டதில் புரிந்தது. ‘இங்கே எங்கோ அமர்ந்து பூஜித்தால், உள்ளுக்குள் அதிர்வு ஏற்படுமாமே?’ என்பது அவர்கள் கேள்வி. அதற்கு பூசாரி சில இடங்களை சொல்லி அனுப்பினார்.

நான் கிளம்பி, கோவிலை ஒரு ரவுண்ட் வந்தேன். பின்பக்கத்தில் கோபுரத்தை பார்க்க நன்றாக இருக்க, கேமராவை எடுத்தேன். பொசிஷன் செய்து, க்ளிக் செய்ய, சுவிச் ஆப் ஆகிவிட்டது. திரும்ப, திரும்ப முயற்சி செய்ய, வெளிவந்த லென்ஸ் உள்ளே செல்லாமல், அப்படியே அணைந்தது. ”என்னடா இது! வைப்ரேஷனா இருக்குமோ?” என்று நினைத்துக்கொண்டே கிளம்பினேன்.

வீட்டுக்கு வந்து சோதித்துப்பார்த்தால், பேட்டரி ப்ராப்ளம்.

---

ஒரு சுதந்திர தின தகவல்.

நாம் விசேஷமாக கொண்டாடும் சுதந்திர தினத்தை, எந்த விசேஷமும் இல்லாமல், திட்டமும் இல்லாமல், சட்டென்று நினைவுக்கு தோன்ற, ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சொன்னது மவுண்ட்பேட்டன். மதராஸப்பட்டினத்தில் பார்த்திருப்பீகளே?

“அதிகார மாற்றம் எப்போது நடைபெறவுள்ளது?”

“கூடிய விரைவில்”

”முக்கியமான இந்த நிகழ்வுக்கு ஒரு தேதி குறித்திருப்பீர்களே?”

“ஆமாம்” உண்மையில் இல்லை!

“எந்த தேதி?”

ஐப்பானை வெற்றிக்கொண்ட 15ஆம் தேதி மவுண்ட் பேட்டனுக்கு நினைவுக்கு வந்தது.

“ஆகஸ்ட் 15”

அவ்வளவு தான். நாம் வருடா வருடம் கொடியேற்றி மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

நன்றி : மருதனின் “இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு”.

---

ஒரு சுதந்திர தின கருத்து.

இந்தியா என்ற அமைப்பின் மேல் நம்பிக்கை இல்லாமல், ஏன் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என எழுப்பப்படும் கேள்வி பார்வையில் பட்டது.

வாழ்க்கையில் கொண்டாடப்படும் நிகழ்வுகள் எதுவும் மறுக்கப்படக்கூடாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவை இவர்கள் வெறுப்பதற்கான காரணங்கள் எதற்கும் இந்தியா என்ற அமைப்பு அடிப்படையாக இருப்பது கிடையாது. காரணம் - சில அரசியல்வாதிகள். அதிகாரிகள். அவர்களை மாற்றுவதற்கான வழியை தான் காணவேண்டுமே ஒழிய, இந்தியாவை எதிர்ப்பதற்கான வழியை அல்ல.

அன்பு, வெறுப்பு - இதில் அன்பு வழியை தேர்ந்தெடுத்தால், எல்லைக்கோடுகள் மறையும். வெறுப்பு வழி, மேலும் பிரிவினையை வளர்க்கும். சிறு சிறு துன்பங்கள் நேர்ந்தாலும், நம்பிக்கையுடன் அன்பு வழியை தேர்ந்தெடுப்போம். வேறுபாடுகளை குறைப்போம். களைவோம்.

துண்டு, துண்டாக சிதறாமல், ஓர் மனித இனமாக மாற கனவு காண்போம்.

.

Monday, July 19, 2010

ரஜினியின் வலைப்பதிவு - பதிவர்களுக்கு எச்சரிக்கை

ஊர் உலகத்துல ஆளாளுக்கு ப்ளாக் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். ரஜினி ஒன்று ஆரம்பிக்கலாம், இல்லையா? இப்படி ரஜினியை ப்ளாக் ஆரம்பிக்க சொல்லி அமிதாப்பிடம் நச்சரிக்கிறார்களாம் இணைய ரசிகர்கள்.

அமிதாப் ஒவ்வொருவரையாக ப்ளாக் ஆரம்பிக்க சொல்ல, ட்விட்டர் கணக்கு தொடங்க சொல்ல, உச்ச நட்சத்திரங்களும் அவர் பேச்சை கேட்டு தொடங்குகிறார்கள். நமக்கு ஒரு தூதுவர் கிடைத்துவிட்டார் என்றெண்ணி பெரும்பாலான ரசிகர்களும் அவரிடம் ரஜினிக்கு இணையத்தில் ஒரு துண்டு போட்டு சீட் பிடிக்க நெருக்குகிறார்களாம்.



’நானென்ன இம்மாதிரி இணைய தளங்களுக்கு விளம்பர தூதுவரா?’ என்று அமிதாப் கேட்டாலும், எனக்கென்னமோ இது உண்மையாக இருக்குமோ என்று கூட தோன்றுகிறது. இப்ப கொஞ்சம் பரவாயில்லை. சில காலம் முன்பு, டிவியில் விளம்பரம் போட ஆரம்பித்தால், வரிசையாக சீப்பு, சோப்பு என எல்லாவற்றிலும் அமிதாப் தான் வருவார். ஏன் வெள்ளிக்கிழமையானால் போதும். ஏதோ ஒரு அமிதாப் படம் ரிலீஸ் ஆகிவிடும். தற்சமயம் நிலைமை சீரடைந்து இருக்கிறது. அதனால், தனது வியாபாரத்தை இணையத்தில் தொடங்கிவிட்டாரோ? என்றெண்ண தோன்றுகிறது. இப்ப ‘ஆனா, ஊனா’ என்றால் ப்ளாக், ட்விட்டர் என்பதே இவர் பேச்சாக இருக்கிறது.

ஆனால், இந்த விஷயத்தில் இவர் பேச்சையெல்லாம் ரஜினி கேட்க போவதில்லை. ரஜினி தனது இமேஜ்/ப்ராண்ட் போன்றவற்றை, பொதுஜனம்/மீடியா போன்றவற்றில் இருந்து விலகியே வளர்ப்பவர். மூடியிருப்பதை பார்க்கும் ஆசை தான், ரஜினியின் புகழ் யுக்தி. விளம்பரங்களில் நடித்து தனது சூப்பர் ஸ்டார் இமேஜை நீர்த்துப்போகாமல் வைத்திருப்பவர். அவ்வளவாக விழாக்களில், நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளாதவர். (கலைஞரின் பாராட்டுவிழாக்கள் விதிவிலக்கு). முன்புக்கு இப்போது பரவாயில்லை.

ரஜினி டிவிக்கு, பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து எவ்வளவு நாளாகிறது? விஜய் டிவியில் அவருக்கு ‘செவாலியே சிவாஜி விருது’ வழங்கி, கோபிநாத் ஒரு சிறு பேட்டி எடுத்தார். கமல் போன்றோர் வரும் பொதுநல விளம்பரங்களில் கூட தலைக்காட்டுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு, போலியோ விளம்பரத்தில் வந்தார்.

அப்படி திரைப்போட்டு வாழ்பவர், வலைப்பதிவு ஆரம்பித்து தன் எண்ணங்களை பதிவாரா, என்ன? தற்போதைக்கு சாத்தியமே இல்லை. வேண்டுமானால், இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, ஓய்வு நேரம் அதிகமிருக்கும் சமயத்தில் ஆரம்பிக்கலாம்.

இப்ப போய் கேட்டா, ”நம்ம கையில என்ன இருக்கு? எல்லாம்...” என்று சொல்லி மேலே கையைக் காட்டுவார்.

---

நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பும் போது, விண்ணப்பித்தவர்களைப் பற்றி அறிந்துக்கொள்ளவும், ஒருக்கட்டத்திற்கு மேல் வடிகட்டுவதற்கும், சமீபகாலங்களில் அவர்களின் பெயரை இணையத்தில் தேடி, அதன் மூலம் அவர்களின் குணாதிசயங்களை தேர்வாளர்கள் தெரிந்துக்கொள்கிறார்களாம்.

உதாரணத்திற்கு, உங்கள் பெயரை கூகிளில் தேடுங்கள். பேஸ்புக், ப்ளாக், ட்விட்டர், லிங்க்இன் - இப்படி எதிலாவது உங்கள் பக்கத்தை எடுத்துக்காட்டும். அப்படியே அங்கு இருப்பதை பார்த்தால், உங்கள் மறுபக்கம் தெரிந்துவிடும்.

நீங்க கேவலமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்திருந்தால், மானாவாரியாக கவர்மெண்ட்டை திட்டி, நிறுவனங்களை திட்டி பதிவெழுதியிருந்தால், ஆப்பு நிச்சயம். என்ன தான் நிறுவனங்கள் கருத்து சுதந்திரத்தை அனுமதித்தாலும், அநாகரீகமாக சொல்லப்படும் கருத்தை ஏற்க போவதில்லை.

இதற்கு தான் புனைப்பெயர்கள் உதவுகிறது. ஆனால், அதிலும் சிலர் ஆர்வகோளாறில் தங்களது போட்டோவை போட்டுவிடுவார்கள். ஆக, இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, அதுவும் வேலைக்கு ஆகாது. அப்படி இப்படி குலுக்கி போட்டு கண்டுப்பிடித்துவிடுவார்கள். அதனால், இம்மாதிரி சிக்கல்களில் சிக்காமல் இருக்க, ஒழுக்கமாக எழுதவும். இதுவரை ஏதாவது வில்லங்கமாக எழுதியிருந்தால், உடனே தூக்கிவிடுங்கள். ஆமா, அப்படியே நாம் தூக்கினாலும், கூகிள் கேச் விடவா போகிறது?!!!

இனியாவது இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு பதிவெழுதவும். இல்லாவிட்டால், முற்றிலும் வேறொரு முகமூடியுடன் பதிவெழுதவும்.

ஆனால், அதில் மல்டிபிள் டிஸ்ஆர்டர் வியாதி வரும் ஆபத்து இருப்பதால், ஒழுக்கமே விழுப்பம் தரும்.

.

Sunday, August 30, 2009

பெங்களூர் - சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தற்கொலைகள்

கடந்த ஒரே வாரத்தில், பெங்களூரில் இரு சாப்ட்வேர் இன்ஜினியர்கள், தங்கள் நிறுவனங்களின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்திருக்கிறார்கள். இரண்டுமே இந்திய முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் - எச்.சி.எல். & விப்ரோ. இதைப் பற்றி இரண்டு நிறுவனங்களுமே, எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எச்.சி.எல். அலுவலகத்தில் நடந்த இந்த தற்கொலை பற்றி காவல்துறையிடம் கூட தெரிவிக்கவில்லை. மருத்துவமனை சொல்லி, காவல்துறை தெரிந்து கொண்டு இருக்கிறது. இரு நிறுவனங்களும், இது பற்றி எந்த அறிக்கையோ, விளக்கமோ வெளியிடவில்லை. தனியார் நிறுவனங்களின் பொது அம்சங்கள் இவை.

இந்த தற்கொலைகளுக்கு வேலை இழப்பு காரணமாக இருக்கலாம் என்று ஊகங்கள் வெளிவருகிறது. இந்த தற்கொலைகளுக்கான காரணம் எதுவாக இருந்தாலும், இன்னமும் நிறைய தற்கொலைகள் வேலை இழப்பினால் நடக்கிறது என்பது உண்மை.

---

முதலில் எந்த பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. எந்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கோழைகள் எடுக்கும் தைரியமாக முடிவு என்று தற்கொலையைக் கூறுவார்கள். வேலை இழப்பிற்கு உயிர் இழப்பது கோழைத்தனமானது மட்டுமல்ல, முட்டாள்தனமானதும் கூட.

இந்த வாழ்க்கை வாழ்வதற்கானது. வேலை அதில் ஒரு அங்கம். வாழ்க்கையை வசதியாக வாழ வழி செய்து கொடுப்பது வேலை. அவ்வளவே. இந்த வேலை இல்லாவிட்டால் இன்னொன்று. தற்போது, இந்த ஐடி துறை மேலேயெழும்பி வருவதாகவே கூறுகிறார்கள். வேலை இழந்தவர்கள், ஓரிரு மாதங்களில் வேலை பெற்று விடுகிறார்கள். அப்படியே, இந்த துறை விழுந்தாலும், வேறு துறைகள் இருக்கிறது. எல்லாம் அவரவர் மனம் சார்ந்தது.

இதற்காக எதற்கு உயிர் விட வேண்டும்?

---

நல்ல காலத்திலேயே, வேலைக்காக பிழிந்தெடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள், இந்த நெருக்கடிக்காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பல கொடூரமானவை. இவை, ஒரு சிலரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி சித்ரவதைக்குள்ளாக்கிறது என்பது உண்மை. சரியான ஆறுதலும், துணையும் இல்லாத பட்சத்தில், தற்கொலைக்கு தூண்டப்படும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றது.

நம் நாட்டின் பொருளாரத்தை இயக்குவது பங்கு சந்தை. ஏறத்தாழ இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பங்குசந்தையில் பணம் திரட்டப்பட்டு நடத்தப்படுபவையே. ஒரு நிறுவனத்தின் ஏற்றமும் தாழ்வும் சந்தையை பாதிக்கிறது. சந்தையை பாதிக்கும் விஷயங்கள் அனைத்தும், நிறுவனங்களை பாதிக்கிறது. அதனால், நிறுவனங்கள் பங்குசந்தையை சார்ந்தே இருக்கிறது. அவரவர் நிறுவன பங்கு மதிப்பின் மேல் கவனம், நிறுவனங்களுக்கு எப்போதும் உண்டு.

ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பை, பாதிக்கும் விஷயங்களில் நிறுவனத்தின் வர்த்தக செயல்பாட்டை விட, சமயத்தில் நிறுவனத்தை பற்றிய செய்திகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நிறுவனம் புது ஆர்டர் பெற்றால், மதிப்பு உயரும். ஆர்டர் இழந்தால், மதிப்பு குறையும்.

ஊழியர்களை பணி நீக்கம் செய்தால்? நிறுவனத்தில் ஏதோ பிரச்சினை என்று சந்தையில் அது பிரதிபலிக்கும். இந்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று தான், நிறுவனங்கள் வேறு வழிகளை பயன்படுத்துகிறது.

---

உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது, வணிக வாய்ப்புகள் குறைகிறது. வேலைகள் குறைகிறது. ஆட்குறைப்பு அவசியமாகிறது. பணி நீக்கம் என்று சொல்லி, நல்ல பெயரை இழக்காமல், ஊழியர்களை அவர்களாகவே வேலையை விட்டு விலகுமாறு சொல்லி, நிறுவனத்திற்கு இருக்கும் பெயரை பாதுகாக்கிறார்கள்.

விலக மறுத்தால்?

1) நாங்களே உன்னை வேலையை விட்டு நீக்குவோம்.
2) தவிர, உனக்கு வேலைக்கான அனுபவ சான்றிதழ்களும், மற்ற சான்றிதழ்களும் ஒழுங்காக வந்து சேராது.
3) தவிர, சம்பள பைசல் ஒழுங்காக இருக்காது.
4) தவிர, வேறு வேலையில் சேர முடியாதபடி, மத்திய தகவல் மையத்தில் உன் பெயருக்கு கரும்புள்ளி வைத்து விடுவோம்.
5) நீயாகவே போனால், எல்லாம் ஒழுங்காக வந்து சேரும்.

வேறு வழியில்லாமல், ஊழியர்கள் வேலையை விட வேண்டியிருக்கிறது, அவர்களாகவே விடும்படி. நிறுவனங்கள், இந்த மந்தநிலையிலும் யாரையும் வேலையை விட்டு நீக்கவில்லை என மார்தட்டி கொள்ளும் சூழலை வைத்துக்கொள்கிறார்கள்.

துறை உச்சத்தில் இருக்கும் போது, ஓங்கும் ஊழியர்களின் கைகள், இச்சமயம் மேலெழும்புவதில்லை. அடங்கி, அமைதியாக ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடுகின்றன.

---

இதனால் மனமொடிந்து செய்யப்படும் தற்கொலைகளும், நிறுவனங்கள் செய்யும் கொலைகளாகவே கருதப்பட வேண்டும். நிறுவனங்கள் மூடிய கதவினுள் செய்யும் இக்கொடுமைகளை பற்றி தெரிந்தும், ஏதும் கேள்வி கேட்காமல், எதிர்ப்பை பதிவு செய்யாமல், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற ஊழியர்களும், இதற்கு மறைமுகமாக உடந்தையாகிறார்கள். அவரவருக்கு ஏதும் நிகழாதவரை, ஏதும் தோன்றுவதில்லை.

நிறுவனத்தின் சாதனைகளை பங்கு போட்டுக்கொண்டு, லாபங்களை பங்கு போட்டுக்கொண்டு, வசதிகளைப் வசதியாக பெற்றுவரும் ஊழியர்கள், இந்த உயிர் இழப்புகளின் பாவத்தையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்.

உலகில் மற்ற நாடுகளில் போர் என்ற பெயரில், அமெரிக்கா நடத்தி வந்த வெறியாட்டத்தின் பலனை, ஏற்கனவே அந்நாடு சிறிது அனுபவித்து விட்டது. நம் அண்டை நாட்டில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்த நம் நாடும், அதற்கான பலனை பெறும். போலவே, நிறுவனங்கள் ஊழியர்களுக்கெதிராக மேற்கொள்ளூம் கொடுமைகளை, கண்டுக்கொள்ளாமல் இருப்பதின் மூலம் ஊக்கமளித்து வருவதின் பலனை, நிறுவனங்களுடன் சேர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியர்களான நாமும் அனுபவிப்போம்.

வேறென்ன செய்ய? தண்டனை நாளின்போது, நேர்மையுடன், நிறைவுடன் இருப்போம்.

.

Wednesday, July 15, 2009

சமுத்திரக்கனியின் நட்பிலக்கணம்

சென்ற வார ‘நீயா நானா’வில் நட்பை பற்றி கலந்துரையாடினார்கள். நட்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று குரூப்பும் நட்பென்றாலும் அதில் ஒரு லிமிட் வேண்டும் என்று மற்றொரு குரூப்பும் பேசினார்கள். ஆனால் அவர்கள் பேசியதை விட சிறப்பு விருந்தினர்களாக வந்த ’நாடோடிகள்’ இயக்குனர் சமுத்திரக்கனியும் ’குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ நாயகன் ராமகிருஷ்ணனும் அதிகம் பேசினார்கள். காரசாரமாக விவாதம் செய்து கொண்டார்கள். நட்பில் லிமிட் பார்க்கக்கூடாது என்று சமுத்திரக்கனியும் லிமிட் தேவை என்று ராமகிருஷ்ணனும்.

சமுத்திரக்கனியும் ராமகிருஷ்ணனும் பல வருட நண்பர்கள். அவர்களின் அதீத ஆர்வ பங்கேற்பிற்கு இதுவும் ஒரு காரணம். இருவரும் வாடா போடா என்று பேசிகொண்டது எனக்கு ஆச்சரியமளித்தது. ஏனெனில், ராமகிருஷ்ணன் படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருந்தார்.

சமுத்திரக்கனி சொன்னது “நண்பர்களிடம் பிரதிபலன் பார்த்து பழக கூடாது (சரி). நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போ. நான் உனக்காக எதையும் செய்யும்படிதான் இருப்பேன். (இதுதான் உதைக்குது)”



அதாவது அவருடன் ஒன்றாக படுத்துறங்கிய நண்பன், காலையில் அவர் பார்க்க இருந்த தயாரிப்பாளரிடம் அவருக்கு முன்னால் சென்று கதை சொன்னாராம். பின்னால், அந்த நண்பன் உதவி கேட்டு வந்த போது, இவர் அவருக்கு உதவினாராம்.

தனக்கு தீங்கிழைத்த நண்பனை பழிவாங்க நினைக்காமல் உதவி செய்தது நல்ல விஷயம். நண்பன் என்றில்லை. எந்த மனிதனாக இருந்தாலும் கஷ்டத்தில் உதவலாம். ஆனால், திரும்ப திரும்ப எப்படிப்பட்டவனாக இருந்தாலும், எவ்வளவு துரோகம் இழைத்தாலும், நண்பனுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று சொன்னது தான் எனக்கு சரியாகப்படவில்லை. திரும்ப திரும்ப உதவி செய்வதற்கு மனிதாபிமானம் காரணமாக இருக்கலாம். அதற்கு நட்பென்ற மூலாம் எதற்கு?

நாடோடிகள் படத்தில் இருந்து என்ன கற்று கொண்டீர்கள்? நான் படத்தின் கருத்தாக எடுத்துக்கொண்டது - நண்பனுக்காகவும் நண்பனின் நண்பனுக்காகவும் உயிரை பணயம் வைத்து உதவி செய்கிறார்கள். அவரவர் வாழ்க்கையில் பெரிய இழப்புகளை சந்திக்கிறார்கள். ஆனால், செய்த உதவி பலனற்று போகிறது. அதனால் செய்யும் உதவியின் முக்கியத்துவம் கருதி உதவி செய்யவேண்டும்.

அதன் பிறகு படத்தில் காட்டியது - உதவி செய்து உதாசீனப்படுத்திய நண்பனைக் கூட்டி பாடம் நடத்தி அனுப்பி விட்டு, இன்னொரு உதவிக்கு கிளம்புகிறார்கள். வேற வழியில்லை. படத்தை அப்படித்தான் முடிக்க முடியும். வெளியே வரும்போது ரசிகன், நன்றாக பீல் பண்ண வேண்டும் அல்லவா? ஆனால், இதுவா வாழ்க்கைக்கான பாடம்? தவறில் இருந்து எது சரி என்று கற்றுக்கொள்ள வேண்டாமா?

சரி, விடுங்க. படம் பார்த்தோமா, என்ஜாய் பண்ணோமா என்றில்லை இதென்ன? ஒ.கே.



ஆனால், இதையே தான் அந்த நிகழ்ச்சியிலும் வந்து பேசி கொண்டிருந்தார். ராமகிருஷ்ணனும் மற்றவர்களும் என் நண்பன் என்னை ஏமாற்றி விட்டான். நான் எதற்கு உதவ வேண்டும்? என்றால் ‘அப்படியென்றால் அவன் நண்பனே இல்லை’ என்று விளக்கம் கொடுப்பதும், ஆனால் அதையே அவர் நண்பன் செய்தால் ’அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன். ஏனெனில் அவன் என் நண்பன். நட்பு.’ என்று ஓவராக பொங்கிக்கொண்டிருந்தார். லாஜிக்கே இல்லாமல் பேசி கைத்தட்டல் வாங்கி கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் தான் தங்கள் அணி சார்பில் எதை சொன்னாலும் கைத்தட்டுவார்களே!

நண்பனுக்கு உதவ போய் நீ கஷ்டப்படலாம். ஏன்னா, அவன் உன் நண்பன். உன் குடும்பத்தார்களும் உன்னை சுற்றியிருப்பவர்களும் ஏன் கஷ்டப்படவேண்டும்? நான் நினைப்பது - எந்த உறவா இருந்தாலும் தாமரை இலை மேல் நீர் போல் இருக்க வேண்டும். (இது தவறாக இருக்கலாம். என் அனுபவ அறிவு கம்மி. போகப் போக கற்றுக்கொள்ளலாம்.)



எத்தனை முறை என்னை ஏமாற்றினாலும், நான் அப்படியே தான் இருப்பேன் என்று கூறுவது சரியானதா? அனுபவங்களில் இருந்து நம்மை மேம்படுத்தி கொள்ள வேண்டாமா? ஏமாளி, தியாகி என்று ராமகிருஷ்ணன் கூறினாலும், சமுத்திரக்கனி இது உணர்வுபூர்வமானது என்றார். அறிவுப்பூர்வமாக பார்த்தால், உதவி தேவைப்படும் யாருக்கும் நம்மால் முடிந்த, மற்றவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்தாத உதவிகளை செய்யலாம். நமது உதவியின் முக்கியத்துவத்தை பலனடைந்தவர்கள் புரிந்து நடக்க வேண்டும். இது ஒன்றும் பிரதிபலன் இல்லை. அடிப்படை மனுஷத்தன்மை. இதை சமுத்திரக்கனியிடம் சொன்னால், “இப்படியெல்லாம் யோசிச்சா, அது நட்பே இல்லை” என்பார்.

பாஸ், ஓவர் சென்டிமெண்ட் உடம்புக்கு ஆகாது.

பி.கு.: சும்மா சொல்லக்கூடாது. ப்ரோக்ராம் செம ஜாலியா இருந்தது. குறிப்பா, சமுத்திரக்கனி ராமகிருஷ்ணனை தாக்கி பேசிய பேச்சு. நிகழ்ச்சியைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.

ரசிச்சு பார்த்தா ஜாலி
யோசிச்சு பார்க்கலைன்னா முடிஞ்சுது ஜோலி!

Saturday, June 13, 2009

நாட்டு சரக்கு - போலி ஸ்டேட்மெண்ட்ஸ்

ஐ.டி. பாதிப்பால் வேலை இழந்தவர்கள் வெறும் 1 % மட்டுமே என்று சொல்லியிருக்கிறார், நாஸ்காம் தலைவர்.

ஒரு உண்மை சம்பவம். ஒரு முன்னணி ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் ஒருவர், அவர்களது நிறுவனத்தில் புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவருக்கு வருடாந்திர ரேட்டிங்கில் 6 இல் ஒன்று சரியில்லாமல் போய்விட்டது. தேர்வு ஒன்றும் சுலபமில்லை. இதுவரை பணிப்புரிய வாய்ப்பு கிடைத்திராத தொழில்நுட்பங்களில் படித்து தேர்ச்சி பெற வேண்டும். கால நேரம் பார்க்காமல் பார்க்கும் அலுவலக வேலையுடன். அதே சமயம் அவருடைய ப்ராஜக்ட் அந்த வாரம் தான் முடிந்திருந்தது. ஃப்ரி பூல்.

மனிதவள மேலாளரிடம் இருந்து அழைப்பு. “இங்க பாருங்க. உங்களுக்கு ரேட்டிங் குறைந்து விட்டது. நீங்க வேலையும் இல்லாம இருக்கீங்க. அதனால, இன்னைக்கே ரிசைன் பண்ணிருங்க. நீங்களே ரிசைன் பண்ணிட்டுங்கன்னா, ரெண்டு மாச நோட்டீஸ் ப்ரியட் சம்பளம். நாங்களே உங்கள வேலையை விட்டு நிறுத்தினா, அப்புறம் சம்பளமும் கிடைக்காது. டாக்குமெண்ட்ஸும் ஒழுங்கா வராது.”

இதற்கும் சம்பந்தப்பட்ட நபர் ஒரு நல்ல பெர்பார்மர். அலுவலகத்தில் அவார்டுகள் வாங்கியுள்ளார். அதை சொல்லி கேட்டதற்கு, இந்த மாதம் நாங்க இத்தனை ஊழியர்களை நீக்க வேண்டி உள்ளது, வேறு வழியில்லை என்றிருக்கிறார். பேசி பார்த்து ஒன்றும் முடியாததால், வந்து மெயில் அனுப்பி விட்டார். நல்ல காலத்தில், தாமதமாகும் ஆள் விடுவிப்பு பாலிஸி, இப்ப செம பாஸ்ட்.

”கம்பெனியில வேலை இல்லங்கறத சொல்றத விட்டுட்டு, என் வேலை சரியில்லை, என் தகுதி சரியில்லைன்னு சொல்றது கஷ்டமா இருக்கு. ஹச்.ஆர். கூப்பிட்டா மொபைல்ல வாய்ஸ் அல்லது வீடியோ ரிக்கார்டரை ஆன் பண்ணிட்டு உள்ளே போங்க”ன்னு பார்ப்பவர்களிடம் சொல்லி வருகிறார்.

-----

மணி சங்கர் அய்யரிடம் இருந்து அவருடன் தொடர்புள்ளவர்களுக்கு மெயில் வந்திருக்கிறது.

“ஸாரி. இங்கிலாந்துக்கு ஒரு செமினாருக்கு வந்தேன். வந்த இடத்தில், என் பர்ஸை தொலைத்து விட்டேன். செலவுக்கு காசில்லை. ரூம் ரெண்ட் கட்டணும். உடனே 3500 டாலர் அனுப்பி வைக்கவும்.

இப்படிக்கு,
மணி.”

இப்படி. என்னன்னு அவருக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, நான் இப்ப நியூயார்க்கில் இருக்கிறேன். என் இமெயில் ஐடி ஹாக் செய்யப்பட்டு உள்ளது. அந்த மெயில லூஸ்ல விடுங்கன்னு சொல்லியிருக்கார்.

எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. :-)

-----

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, மகாராஷ்ட்ரா அரசு குழந்தை நட்சத்திரங்களை பயன்படுத்தும் சானல்கள் மீது கேஸ் போட போவதாக அறிவித்துள்ளது. குழந்தைகள் என்ன கொடுமைகள் அனுபவித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த தடை கொஞ்சம் ஒவரா தெரியுது. குழந்தைகளை நடிக்க வைத்தால், என்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்ட வடிவம் கொடுத்திருக்கலாம்.

மிருக வதை என்று படங்களில் மிருகங்கள் பயன்படுத்துவதை தடை செய்தார்கள். மது, சிகரெட் காட்சிகளை தடை செய்தார்கள். அடுத்தது, குழந்தை நட்சத்திரங்களா?

மூட நம்பிக்கை என்று சாமி படங்கள் எடுப்பதையும் தடை செய்தால், இராம நாராயணனின் முழு போர்ட்பொலியோவையும் மூடிய மகிழ்ச்சி கிடைக்கும். கமல், சூர்யா படங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களே குழந்தை வேஷமும் போட்டுவிடுவார்கள்.

----

கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆக போகிறது. மும்பை தாக்குதல் நடந்து. இறந்தவர்களை புதைத்திருந்தால், வெறும் எலும்பு கூடு தான் மிச்சம் இருக்கும். ஆனால், இன்னமும் அந்த கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. மாட்டிய கஸாப்பை இன்னமும் அடையாளம் காட்ட, சாட்சியங்களை கோர்ட்டுக்கு கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். எத்தனை ரயில்வே கேமராக்கள். எத்தனை டிவி சானல் கேமராக்கள். படித்து உருண்டு எல்லாம் எடுத்தார்கள். ஆனால், இன்னமும் சாட்சி வேண்டுமாம். மாட்டியவனிடம் கேட்டால், அவனே ஒத்து கொள்வான்.

எல்லாம் சட்டப்படியே நடக்கட்டும். அதற்காக இப்படியா? உங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கவில்லை. வயியெரிய வைக்கிறது. எலும்புகளும் மக்குவதற்குள் தீர்ப்பு சொல்லுவீங்களா?

இப்படித்தான் போன வாரம் சம்பவத்தில் குண்டடிப்பட்ட ஒரு பத்து வயது சிறுமியை சாட்சி சொல்ல அழைத்திருக்கிறார்கள். அவளும் ஊன்றுகோல் ஊன்றியப்படி கோர்ட்டுக்கு வந்து, ’நான் சொல்வது எல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றுமில்லை’ என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு கஸாப்பை அடையாளம் காட்டி சாட்சியம் கொடுத்திருக்கிறாள்.

எனக்கு இதுதான் குழந்தைகளுக்கெதிரான கொடுமையாக தெரிகிறது.

Wednesday, April 15, 2009

யாருக்கு ஓட்டு போட?

நேற்று ரயிலில் வந்து கொண்டிருந்தேன். அப்ப, யாருக்கு ஓட்டு போடலாம்ன்னு ஒரு ஆழ்ந்த சிந்தனை. கிட்டத்தட்ட அரை தூக்கம்! இதுவரைக்கும் ரெண்டு தடவை ஓட்டு போட்டு இருக்கேன். ரெண்டு தடவையும் நான் ஓட்டு போட்ட ஆட்கள் தோத்து போயிட்டாங்க. ஜெயிச்சவங்களும் எதுவும் செய்ததில்லை. ஓட்டு போடாம விடலாம்ன்னு பார்த்தா, அதுவும் தப்புங்கறாங்க. என்ன செய்ய?

இந்த தேர்தலில் கட்சிகள் வேட்பாளர்களிடம் வெளிப்படையாக எதிர்ப்பார்த்த அம்சம், ‘எவ்ளோ செலவு பண்ணுவீங்க?’. ‘என் தொகுதி மட்டுமில்லாம பக்கத்து தொகுதிகளையும் பார்த்துக்கிறேன்’ன்னு சொன்னா, கண்டிப்பா சீட்டாம். எல்லாம் கோடிஸ்வர வேட்பாளர்கள். அதனால களத்துல, பணம் நல்லா புரளும்.

எத அடிப்படையா வச்சு ஓட்டு போடுறது?

கட்சி கொள்கையா? அப்படி ஒண்ணு எந்த கட்சிக்கும் கிடையாது.

நல்ல வேட்பாளர்களை பார்த்து ஓட்டு போடுறதுன்னா, எந்த கட்சியிலயும் நல்ல வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்கறது இல்லை. நல்ல கட்சிகாரர், நல்ல அரசியல்வாதி என்பதே முரண்பட்ட சொற்கள். சுயேட்சையா நிற்குற நல்லவர் யாருக்காவது (அப்படி யாராவது நின்றால்) ஓட்டு போடலாம் என்றால், அவர் ஜெயித்து என்ன பண்ணுவார்? எந்த கட்சிக்கும் சார்பில்லாமல், அவரால் எப்படி, என்ன செய்ய முடியும்? அந்த நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்வாரியான ஆதரவு இல்லாவிட்டால், ஸ்திரதன்மை இல்லாமல், நாட்டின் முன்னேற்றம் தான் பாதிக்கப்படும்.

யாருமே மெஜாரிட்டி இல்லாமல், நாடு தள்ளாடுவதற்கு பதில், எந்த திருடனாவது, பொறுக்கியாவது இருந்து நிலையா கொள்ளையடித்தால் என்ன? என்று தோன்றுகிறது. கமிஷன் வாங்கினாலும், கம்னாட்டி கன்ட்ரிக்கு எதாச்சும் பண்ணினா சரின்னு தோணுது.

நல்ல கட்சிகளும் கிடையாது, நல்ல தலைவர்களும் கிடையாது, நல்ல வேட்பாளர்களும் கிடையாது. ஆனா, ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கணும். வாக்காளனுக்கு ஜனநாயகம் வைக்கும் செக். தோற்பது என்னவோ, இரண்டுமே தான்.

---

ரயிலில் சைடில் மூன்று பெர்த் வைத்துள்ளார்கள். எந்த கிறுக்கன் ஐடியா கொடுத்தானோ? இப்போது, அந்த திட்டம் வாபஸ் என்றார்கள். ஆனால், இன்னமும் இருக்க தான் செய்கிறது.

மேலே உள்ள இரண்டு பெர்த்களிலும், ஏறி உட்கார்ந்து படுக்க முடியாது. படுத்தவாறே ஏற வேண்டும். படுத்தவாறே இறங்க வேண்டும். இதற்கென்றே தனியாக பிராக்டிஸ் செய்து விட்டு பயணம் செய்ய வேண்டும்.

சின்ன குழந்தைகள், இளைத்த வாலிபர்கள் - இவர்களை தவிர வேறு யாராலும் சுலபமாக இதில் ஏறி படுக்க முடியாது. நான் பார்த்த வயதானவர்கள், பெண்கள் ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள். ரயிலில் அதிகம் பயணம் செய்பவர்கள், இவர்கள் தான்.

இதிலும் மேல் பெர்த்தில் படுக்கிறவர்கள், பேனுக்கு இணையாக படுக்க வேண்டும். கொஞ்சம் கூட காத்து வராது. அடிக்குற வெக்கையில் தூங்கவும் முடியாது. இறங்கவும் முடியாது. சாவுங்கடா! என்பது போல் ஒரு சித்திரவதை வடிவமைப்பு.

---

இந்த கொடுமைக்காகவே, பீகார் போயி லாலுவுக்கு எதிரா ஓட்டு போட தோணிச்சு. இப்படி ஒவ்வொரு விஷயத்துக்காகவும், ஒவ்வொரு கட்சிக்கு எதிரான மனநிலை இருக்குது. எந்த கட்சிக்கு ஆதரவாவும், எதிராவும் ஓட்டு போட்டு ஒண்ணும் ஆகிட போறதில்லை.

ஓ போடுங்கன்னு சிலர் சொல்லுறாங்க. அதனால என்ன நன்மை? அத போடுறது அவ்ளோ சுலபம் இல்லை. அதனால அதற்கு பெரும்பான்மை கிடைக்க போறது இல்லை. அப்படியே, சுலபமா ஆக்கிட்டாங்கனாலும், பெரும்பான்மை கிடைச்சாலும் என்ன நடக்கும்? திரும்ப தேர்தல் நடக்கும். உடனே, கட்சிகள் நல்லவங்கள கூட்டிட்டு வந்து நிறுத்திட போறாங்களா? எனக்கென்னமோ, இதனால எந்த பயனும் இருக்குறது போல் இல்ல.

ஒருமுறை எலக்‌ஷன் நடக்கணும். அதுல, ஒரு கட்சியோ, ஒரு கூட்டணியோ பெரும்பான்மை பெற வேண்டும். பின்பு, அது ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை கொடுக்க வேண்டும். எல்லாவகையிலும், அதுதான் நல்லது.

---

இன்னும் குழப்பத்துல தான் இருக்கேன்.

சறுக்கு வழுக்கி விளையாடும்போது, குழந்தைகள் நிறைய இருந்துதுனா, எல்லாம் மொத்தமா ஏறும். அதில் ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு வழுக்கவா, வேண்டாமான்னு ஒரு தயக்கம் இருக்கும். பின்னாடி இருக்குற குழந்தைகள் கொடுக்குற பிரஷர்ல, ஒரு கட்டத்துல, வலுகட்டாயமா, சல்லுன்னு வழுக்கிட்டு வந்திடும்.

அப்படிதான் நடக்கும்ன்னு நினைக்குறேன். அதுவரைக்கும் யோசிச்சிட்டே இருக்கேன். :-)

Saturday, March 28, 2009

ஒபாமா கண்டிபிடித்த ரகசியம் & ஒரு இந்திய ரகசியம்

இன்று ஒரு மீட்டிங்கில் பேசிய ஒபாமா கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.

“இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யப்பட்டிருந்த வேலைகள், குறைந்த ஊழியத்திற்கானவை. ஆனால், அதிக வேலை பளு உள்ளவை. இதை தடுத்து, அமெரிக்காவிற்கு கொண்டு வருவதால் எந்த பலனும் இல்லை. இதற்கு பதில், அமெரிக்கா வாழ்க்கை தரத்திற்கு ஏற்றாற்போலான உயர் நிலை வேலைகளை இங்கு உருவாக்க வேண்டும்.”

அப்பாடி, ஒரு வழியாக விஷயத்தை கண்டுபிடிச்சுட்டாரு! இந்த விஷயம் தெரியாமத்தான் தேர்தல்ல அப்படி பிரச்சாரம் பண்ணினாரா?

எது எப்படியோ, இந்த நெருக்கடி நேரத்தில், இந்திய ஐடி & பிபிஒ துறை நிறுவனங்கள் சந்தோஷப்பட்டு கொள்ள ஒரு செய்தி.

---

மருத்துவ சுற்றுலா என்றழைக்கப்படும் வெளிநாட்டினர்க்கு மருத்துவ சேவை அளிப்பதில், இந்தியா உலகத்திலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறதாம். இங்கு மருத்துவ செலவு குறைவென்பதால், வெளிநாட்டில் இருந்து நிறைய பேர் இந்தியா வருகிறார்களாம்.

அதே சமயம், இன்னொரு விஷயம். இந்தியா, தன் மக்களின் மருத்துவத்திற்காக செலவளிப்பது, மொத்த ஜிடிபியில் 1.2 பர்சண்டேஜ் தான்.

‘ஊரார் வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் வீட்டு பிள்ளை தானா வளரும்’ன்னு சொல்ற மாதிரி, வெளிநாட்டுக்காரங்களை நல்லா கவனிச்சு அனுப்பினோம்ன்னா, இங்குள்ள மக்களின் உடல் நலம் தானா கவனிக்கப்படும்’ன்னு நினைச்சுக்கிச்சா அரசாங்கம்?

Monday, February 9, 2009

நான் கடவுளும் வாழ்வதற்கான உரிமையும்

நான் கடவுள் ரிலீசான அதே சமயம் அந்த படத்தின் மூலக்கருத்தான "வாழ இயலாதவர்களுக்கு கொடுக்கப்படும் மரணம் வரம்" என்பதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை போப் சொல்லியிருக்கிறார். உலக உடல்நல குன்றியவர்களுக்கான தினத்தில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

"இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொரு நோய்வுற்றவருக்காகவும் வேண்டுவோம். குறிப்பாக முற்றிலும் மற்றவர் துணையுடன் வாழும் ஜீவன்களுக்கு கடவுளின் அன்பை உணர உதவுவோம்."

---

இத்தாலியில் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கியவர், என்க்லரோ. அப்போதிருந்து ஒரு உயிரற்ற உடலாகவே ஆஸ்பத்திரியில் வாழ்ந்து வருகிறார். இத்தனை வருடம் குழாய் மூலமாகவே உணவு உடலில் ஏற்றப்பட்டு வருகிறது.

அவருடைய தந்தைக்கு இது கொடுமையாக தெரிய, தன் மகளின் வாழ்வை முடித்து கொள்ள சம்மதித்து கோர்ட்டில் வேண்டுகோள் எழுப்பியிருந்தார். அவருடைய வாதத்தின் படி விபத்திற்கு முன்பு தன் மகள் இதுப்போல் வாழ விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறாள் என்கிறார். ஒரு முறை, அவள் தோழியின் நிலை கண்டு இவ்வாறு கூறியதாக சொல்கிறார்.

இவருடைய வேண்டுகோள் நீதிமன்றத்தில் இருமுறை நிராகரிக்கப்பட்டு பின்பு ஏற்றுகொள்ளப்பட்டது. இது இத்தாலியில் பெரும் சர்ச்சையானது. இது கொலை என்றும் கருணை அடிப்படையானது என்றும் வாக்குவாதங்கள். தற்போது அரசாங்கம் இந்த பிரச்சனையில் தலையிட்டுள்ளது.

போப் இப்போது இப்பிரச்சனையைதான் மறைமுகமாக தன் அறிவிப்பில் கூறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள்.

ஏற்கனவே அமெரிக்காவில் டெர்ரி என்பவரது வாழ்வு இதுபோன்று முடித்து வைக்கப்பட்டது.

---

இனி வாழவே முடியாதவர்களுக்கு எதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, அவர்களையும் கஷ்டபடுத்த வேண்டும்? என்பது சிலரின் வாதம். வாழ்வில் எது வேண்டுமென்றாலும் நடக்கும். கண்டிப்பாக இதுதான் நடக்கும், இது நடக்காது என்று யாராலும் கூற முடியாது. இன்று பிழைக்கவே மாட்டார் என கூறும் மருத்துவர்கள், நாளையே ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டால், "இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்" என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். அதனால், முடிந்த அளவுக்கு ஒரு உயிரை காக்கவும், பராமரிக்கவும் நம்மால் இயன்றவற்றை, இயன்றவரை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

---

சன் டிவியில் படிக்காதவன் படத்திற்காக தனுஷ், விவேக், தமன்னா ஆகியோரை உக்காரவைத்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

காம்பியர் : இந்த படத்துல என்ன மெசேஜ் சொல்றீங்க?
தனுஷ் (யோசித்துவிட்டு) : அப்படி ஒண்ணும் இல்ல.

எல்லோரும் சிரிக்கிறார்கள்.

காம்பியர் (சமாளிக்கும் விதமாக): இல்ல... இப்படி எடுத்துக்கலாம். படிக்காம இருந்தாலும் வாழ்க்கைல முன்னேறலாம்.
தனுஷ்: இந்த படத்துல நான் முன்னேறவே இல்லையே?

காம்பியர் அசடு வழிகிறார்.

விவேக் : படத்த படமா எடுத்துகோங்க. அது தான் மெசேஜ்.

சில நல்ல நோக்கத்துடன் எடுக்கப்படும் படங்கள் தவறான கருத்தினாலோ, தவறாக சித்தரிக்கபடுவதாலோ தோல்வியடைய கூடும். மாயக்கண்ணாடி ஒரு உதாரணம். தகுதியை மீறி பேராசைப்படக்கூடாது என்பது சொல்ல வந்த கருத்து. ஆனால், அது புரிந்து கொள்ளப்பட்ட விதம், யாரும் தகுதியை மீறி ஆசைப்பட கூடாது என்பது போல். தகுதிக்கு மேல் உள்ளவற்றை தகுதியை வளர்த்துக்கொண்டு அடையலாமே? தகுதியை வளர்த்து கொண்டு சேரன் வளர்கிறார், ஆனால், மக்களுக்கு தவறான பாடத்தை அல்லவா எடுக்கிறார்? என்பது போல் நெகடிவ் ரிவ்யுஸ்.

சேரனுக்கு அது ஒரு பாடம்.

கருத்து சொல்ல வேண்டும். அதை விட முக்கியம். தவறான கருத்தை சொல்லக்கூடாது. அதற்கு கருத்தே இல்லாமல் இருப்பது மேல்.

Wednesday, December 17, 2008

புஷ் செருப்படியை ஆதரித்தவர் பெங்களூரில் கைது

நேற்று முன்தினம் புஷ் மீது எறியப்பட்ட செருப்பை பார்க்க, உலகமெங்கும் மக்கள் செருப்பு என்று கூகிளில் தேடி கொண்டிருக்கிறார்கள். சிலர் அந்த மனுஷனுக்கு இது தேவைதான் என்று சொல்ல, சிலர் எவ்ளோ நேக்கா எஸ்கேப் ஆனாருன்னு புகழ்ந்திட்டு இருக்காங்க.

அவ்ளோ ஸ்பீடா வந்த செருப்புக்காக புஷ் குனிந்த வேகம், அபாரம். எப்பவும் இந்த மாதிரி ஏதாச்சும் எதிர்பார்த்திட்டே இருப்பாரு போல.

--------

பெங்களூர் மைக்கோ கம்பெனியில் நாற்பது வயதான ஜமீல் என்பவர் வேலை பார்த்து கொண்டு வருகிறார். நேத்து ஆபீஸில் இது பற்றி ஜமீலுடன், அவருடன் வேலை பார்ப்பவர்கள் பேசி கொண்டு இருந்தார்கள். ஜமீல் செருப்படியை ஆதரித்து, செருப்பை எறிந்த முந்ததர் அல்-செய்தியை புகழ்ந்து கொண்டிருந்தார். என்னடா ரொம்பத்தான் புகழுகிறாரேன்னு கூட இருந்தவுங்க போலீசுக்கு போன் போட்டுட்டாங்க.

வந்த போலீஸும் அவர ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அவர் இடத்தை சோதனை போட்டு பார்த்தப்ப, தீவிரவாத தாக்குதல் சம்பந்தமாக ஏகப்பட்ட நியூஸ் கட்டிங்க்ஸ் இருந்திருக்கு. அதுமட்டுமில்லாம, பாராளுமன்ற தாக்குதல் வழக்குல கைது செய்யபட்டிருந்த அப்சல் குருவை விடுதலை செய்ய கோரி, ஜனாதிபதிக்கு ஜமீல் அனுப்பியிருந்த லெட்டரும் இருந்திருக்கு.

இப்ப, ஜமீலுக்கு ஏதேனும் தீவிரவாத கும்பலுடன் சம்பந்தம் இருக்குதான்னு தீவிரமா விசாரணை பண்ணிட்டு இருக்காங்க.

---------

இனி, கருத்து சொல்லும் போது, ஜாக்கிரதையா கருத்து சொல்லுங்க...

நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா