Saturday, June 13, 2009

நாட்டு சரக்கு - போலி ஸ்டேட்மெண்ட்ஸ்

ஐ.டி. பாதிப்பால் வேலை இழந்தவர்கள் வெறும் 1 % மட்டுமே என்று சொல்லியிருக்கிறார், நாஸ்காம் தலைவர்.

ஒரு உண்மை சம்பவம். ஒரு முன்னணி ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் ஒருவர், அவர்களது நிறுவனத்தில் புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவருக்கு வருடாந்திர ரேட்டிங்கில் 6 இல் ஒன்று சரியில்லாமல் போய்விட்டது. தேர்வு ஒன்றும் சுலபமில்லை. இதுவரை பணிப்புரிய வாய்ப்பு கிடைத்திராத தொழில்நுட்பங்களில் படித்து தேர்ச்சி பெற வேண்டும். கால நேரம் பார்க்காமல் பார்க்கும் அலுவலக வேலையுடன். அதே சமயம் அவருடைய ப்ராஜக்ட் அந்த வாரம் தான் முடிந்திருந்தது. ஃப்ரி பூல்.

மனிதவள மேலாளரிடம் இருந்து அழைப்பு. “இங்க பாருங்க. உங்களுக்கு ரேட்டிங் குறைந்து விட்டது. நீங்க வேலையும் இல்லாம இருக்கீங்க. அதனால, இன்னைக்கே ரிசைன் பண்ணிருங்க. நீங்களே ரிசைன் பண்ணிட்டுங்கன்னா, ரெண்டு மாச நோட்டீஸ் ப்ரியட் சம்பளம். நாங்களே உங்கள வேலையை விட்டு நிறுத்தினா, அப்புறம் சம்பளமும் கிடைக்காது. டாக்குமெண்ட்ஸும் ஒழுங்கா வராது.”

இதற்கும் சம்பந்தப்பட்ட நபர் ஒரு நல்ல பெர்பார்மர். அலுவலகத்தில் அவார்டுகள் வாங்கியுள்ளார். அதை சொல்லி கேட்டதற்கு, இந்த மாதம் நாங்க இத்தனை ஊழியர்களை நீக்க வேண்டி உள்ளது, வேறு வழியில்லை என்றிருக்கிறார். பேசி பார்த்து ஒன்றும் முடியாததால், வந்து மெயில் அனுப்பி விட்டார். நல்ல காலத்தில், தாமதமாகும் ஆள் விடுவிப்பு பாலிஸி, இப்ப செம பாஸ்ட்.

”கம்பெனியில வேலை இல்லங்கறத சொல்றத விட்டுட்டு, என் வேலை சரியில்லை, என் தகுதி சரியில்லைன்னு சொல்றது கஷ்டமா இருக்கு. ஹச்.ஆர். கூப்பிட்டா மொபைல்ல வாய்ஸ் அல்லது வீடியோ ரிக்கார்டரை ஆன் பண்ணிட்டு உள்ளே போங்க”ன்னு பார்ப்பவர்களிடம் சொல்லி வருகிறார்.

-----

மணி சங்கர் அய்யரிடம் இருந்து அவருடன் தொடர்புள்ளவர்களுக்கு மெயில் வந்திருக்கிறது.

“ஸாரி. இங்கிலாந்துக்கு ஒரு செமினாருக்கு வந்தேன். வந்த இடத்தில், என் பர்ஸை தொலைத்து விட்டேன். செலவுக்கு காசில்லை. ரூம் ரெண்ட் கட்டணும். உடனே 3500 டாலர் அனுப்பி வைக்கவும்.

இப்படிக்கு,
மணி.”

இப்படி. என்னன்னு அவருக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, நான் இப்ப நியூயார்க்கில் இருக்கிறேன். என் இமெயில் ஐடி ஹாக் செய்யப்பட்டு உள்ளது. அந்த மெயில லூஸ்ல விடுங்கன்னு சொல்லியிருக்கார்.

எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. :-)

-----

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, மகாராஷ்ட்ரா அரசு குழந்தை நட்சத்திரங்களை பயன்படுத்தும் சானல்கள் மீது கேஸ் போட போவதாக அறிவித்துள்ளது. குழந்தைகள் என்ன கொடுமைகள் அனுபவித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த தடை கொஞ்சம் ஒவரா தெரியுது. குழந்தைகளை நடிக்க வைத்தால், என்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்ட வடிவம் கொடுத்திருக்கலாம்.

மிருக வதை என்று படங்களில் மிருகங்கள் பயன்படுத்துவதை தடை செய்தார்கள். மது, சிகரெட் காட்சிகளை தடை செய்தார்கள். அடுத்தது, குழந்தை நட்சத்திரங்களா?

மூட நம்பிக்கை என்று சாமி படங்கள் எடுப்பதையும் தடை செய்தால், இராம நாராயணனின் முழு போர்ட்பொலியோவையும் மூடிய மகிழ்ச்சி கிடைக்கும். கமல், சூர்யா படங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களே குழந்தை வேஷமும் போட்டுவிடுவார்கள்.

----

கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆக போகிறது. மும்பை தாக்குதல் நடந்து. இறந்தவர்களை புதைத்திருந்தால், வெறும் எலும்பு கூடு தான் மிச்சம் இருக்கும். ஆனால், இன்னமும் அந்த கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. மாட்டிய கஸாப்பை இன்னமும் அடையாளம் காட்ட, சாட்சியங்களை கோர்ட்டுக்கு கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். எத்தனை ரயில்வே கேமராக்கள். எத்தனை டிவி சானல் கேமராக்கள். படித்து உருண்டு எல்லாம் எடுத்தார்கள். ஆனால், இன்னமும் சாட்சி வேண்டுமாம். மாட்டியவனிடம் கேட்டால், அவனே ஒத்து கொள்வான்.

எல்லாம் சட்டப்படியே நடக்கட்டும். அதற்காக இப்படியா? உங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கவில்லை. வயியெரிய வைக்கிறது. எலும்புகளும் மக்குவதற்குள் தீர்ப்பு சொல்லுவீங்களா?

இப்படித்தான் போன வாரம் சம்பவத்தில் குண்டடிப்பட்ட ஒரு பத்து வயது சிறுமியை சாட்சி சொல்ல அழைத்திருக்கிறார்கள். அவளும் ஊன்றுகோல் ஊன்றியப்படி கோர்ட்டுக்கு வந்து, ’நான் சொல்வது எல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றுமில்லை’ என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு கஸாப்பை அடையாளம் காட்டி சாட்சியம் கொடுத்திருக்கிறாள்.

எனக்கு இதுதான் குழந்தைகளுக்கெதிரான கொடுமையாக தெரிகிறது.

6 comments:

முரளிகண்ணன் said...

\\கமல், சூர்யா படங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களே குழந்தை வேஷமும் போட்டுவிடுவார்கள்\\

:-))))

சித்து said...

/*எல்லாம் சட்டப்படியே நடக்கட்டும். அதற்காக இப்படியா? உங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கவில்லை. வயியெரிய வைக்கிறது. எலும்புகளும் மக்குவதற்குள் தீர்ப்பு சொல்லுவீங்களா?*/

உங்களுடைய இந்த கருத்துக்கு வழி மொழிகிறேன், ஈரான் நாட்டில் சமீபத்தில் செய்தது போல் (அதாவது குண்டு வெடிப்பு குற்றவாளிகளை முச்சந்தியில் தூக்கிலிட்டனர்) நம் நாட்டில் இது போன்ற குண்டு வெடிப்பு, கற்பழிப்பு, Acid வீச்சு போன்ற குற்றங்களுக்காவது செய்தால் தான் சரிப்படும். சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும். நடக்குமா இந்த திரு நாட்டில்??

சரவணகுமரன் said...

வாங்க முரளிகண்ணன்

சரவணகுமரன் said...

//சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும். நடக்குமா இந்த திரு நாட்டில்??//

எங்க? நம்ம நாட்டுல இருக்குற மரண தண்டனையையே தூக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்காங்க...

நரேஷ் said...

//எனக்கு இதுதான் குழந்தைகளுக்கெதிரான கொடுமையாக தெரிகிறது.//

நச்...

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ் :-)