Monday, February 22, 2010

ஆப்தரக்‌ஷகா (ஸ்பாய்லர்)

ஒரே கதையை பல விதங்களில் சொல்லலாம். இரண்டு கதையை ஒரே விதத்தில் சொல்லலாமா? பி.வாசு ஆப்தரக்‌ஷகாவில், அதைத்தான் செய்திருக்கிறார். ஆப்தமித்ரா பார்முலாவில் கொஞ்சம் வேறு மாதிரியான கதை.இங்கு இதை படிக்கும் யாரும் இப்படத்தை போய் பார்க்க போவதில்லை என்ற நம்பிக்கையில் முழு கதையும் இங்கே. ரஜினி இதன் தமிழாக்கத்தில் நடிக்க போவதில்லை என்று பட்டாலும், பிற்காலத்தில் கண்டிப்பாக சந்திரமுகி-2 வரும் சாத்தியம் இருக்கிறது.

---

ஒரு நாட்டியக்காரியின் அழகான ஓவியம் ஒன்று, படபடவென அடித்துக்கொண்டு பறந்து செல்கிறது. மேலே டைட்டில். டைட்டில் முடியும் தருவாயில், பாதையில் விழுந்து ஓவியம் சருகுகளால் மறைக்கப்படுகிறது. அது அந்த வழியில் வரும் ஒரு ஓவியரின் பார்வையில் பட, அவர் அதை தனது வீட்டுக்கு எடுத்துவருகிறார். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது, சத்தம் கேட்கிறது. ரா... ரா...

எழுந்து சென்று பார்க்கிறார். மறுநாள் காலையில் அவருடைய மனைவி வந்து பார்க்கும்போது, அவர் அந்த ஓவியத்திற்கு அருகில் இறந்து கிடக்கிறார். ஓவியரின் மனைவி, அந்த படத்தை யாராவது எடுத்து சென்று விடுமாறு சொல்லி அழுகிறார். பிறகு, அந்த ஓவியம் கைமாறி, ஒரு பரதநாட்டிய போட்டியில் பரிசாக அளிக்கப்படுகிறது. பரிசை வாங்குபவர் லஷ்மி கோபால்சுவாமி. இவருடைய காதலர், அந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு சாலையை கடக்கும்போது, லாரி அடிப்பட்டு இறக்கிறார்.

காட்சி இப்பொழுது ஒரு நிச்சயதார்த்தம் நடக்கும் வீட்டிற்கு மாறுகிறது. மணப்பெண் ’காதல்’ சந்தியா. சந்தியாவின் தோழி, மாடியில் ஒரு அறையில் முப்பது அடி பாம்பை கண்டு மயங்கிவிழுகிறார். அதே நேரத்தில், பால்கனியில் இருக்கும் மணமகனும் ‘எதையோ’ கண்டு, பயந்து, நிச்சயதார்த்ததை கான்சல் செய்து விட்டு ஓடிவிடுகிறார். பாம்பை பிடிக்க ஒரு பாம்பாட்டி வருகிறார். அவரும் ’எதையோ’ கண்டு, ரத்தம் கக்கி சாகிறார்.

வீட்டில் நடக்கும் அசாம்பவித சம்பவங்களை கண்டு, சந்தியாவின் அப்பா, ராமசந்திர ஆச்சார்யாவிடம் செல்கிறார். அவிநாஷ் தான். அவர் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு, அந்த ஓவியம் தான் காரணம் என்கிறார். ஓவியத்தில் இருப்பது - நாகவல்லி (சந்திரமுகி) என்றும், ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்ததையும் (ஆப்தமித்ரா) சொல்கிறார். இதை ஹேண்டில் செய்ய சரியான ஆள் என, பெரிய பெரிய பில்டப்களுடன், கேப்டன், டாக்டர் விஜய் (விஷ்ணுவர்தன்) என்கிறார். இங்க ஒரு சாங்.

இந்த பாடலில் டான்ஸ் மாஸ்டர் அசோக்குமார் போல், டைரக்டர் பி.வாசு வந்து ஆடுகிறார். அவர் மட்டுமில்லை, படத்தின் பின்னால் உழைத்திருக்கும் அனைவரும் ஆடுகிறார். மஹாதீராவில் எப்படி கடைசியில் ஆடுவார்களோ, அதுப்போல்.

விஷ்ணுவர்தன் அறிமுகமாவதில் இருந்து, அவருடன் வரும் காமெடி நடிகருடன் சேர்ந்துக்கொண்டு நிறைய காமெடிக்காட்சிகள் வருகிறது. நாகவல்லி சந்தேகம் பல பேர் மேல் வருகிறது. வரவைப்பது போல் காட்சிகள் வருகிறது. அவ்வப்போது, ரா ரா வருகிறது. பிறகு, விஷ்ணுவர்தன் மாடியில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் லஷ்மியை காண்கிறார். லஷ்மி, சந்தியாவின் அக்கா. தனது காதலரின் மரணத்தால், புத்தி பேதலித்து, ‘சந்திரமுகி’ மேக்கப்புடன் மாடியில் டான்ஸ் ஆடி கொண்டு இருக்கிறார். அவரை குணப்படுத்த, அவினாஷும், விஷ்ணுவர்தனும் முயற்சி எடுக்கிறார்கள்.இந்த ரேஞ்சில் நான் கதை சொல்லிக்கொண்டு போனால், ஒரு பதிவு பத்தாது. ஏகப்பட்ட பாகங்கள் வெளியிட வேண்டியிருக்கும். அதனால் கொஞ்சம் வேகமாக சுருக்கி சொல்லி முடிக்கிறேன். விஷ்ணு லைப்ரரிக்கு செல்கிறார். பழைய வரலாறு புத்தகத்தை எடுத்து படிக்கிறார். அவரை போலவே இருக்கும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசர் விஜய ராஜேந்திர பஹதூரை (வேட்டையன்) பற்றி தெரிந்துக்கொள்கிறார். (இடைவேளை) இந்த அரசர் இன்னொரு மன்னனை வெல்லும்போது, அவனுடன் இருந்த வைர, வைடூயங்களுடன், நாட்டியக்காரி நாகவல்லியையும் (ராமன் தேடிய சீதையில் வரும் விமலாராமன்) தன்னுடன் அரண்மனைக்கு இழுத்து செல்கிறார். அந்த நாட்டியக்காரியின் காதலன், வழக்கம்போல், வினித். ராஜா நாகவல்லியை தனது அரசவையில் ஆடவிட்டு, ஓவியம் வரைந்து வைத்துக்கொள்கிறார்.பிறகு, ராஜா ஒரு ஜோலியா வெளியே சென்றிருந்த சமயம், நாகவல்லியும், காதலனும், அரண்மனையில், ‘ரா ரா சரசுக்கு ரா ரா’. நடுவில் ராஜா வந்துவிடுகிறார். விரட்டி விரட்டி காதலனை தலை கொய்து கொன்று விடுகிறார். நாகவல்லியை வழக்கம்போல், எண்ணையை கொண்டுவர சொல்லி, எரித்துவிடுகிறார். பிறகு, நாட்டில் ஏற்படும் பிரச்சினை காரணமாக, அந்த ஓவியத்தை ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துவிடுகிறார். இந்த சமயத்தில் ஊருக்குள் புரட்சி ஏற்பட, ஊரை விட்டு ஓடிவிடுகிறார்.

கதையை படித்த விஷ்ணு வீட்டிற்கு வந்து அக்கா லஷ்மியை குணப்படுத்துகிறார். ஆனால், உண்மையில் நாகவல்லி அவரில்லை என்கிறார். பிறகு யார்? போய் வெள்ளித்திரையில் பாருங்கள். இல்லையென்றால், தொடர்ந்து படியுங்கள்!

ராஜா பஹதூர் ஜாதகத்தை எடுத்து வந்து விஷ்ணு, ஆச்சார்யாவிடம் கொடுக்கிறார். அவர் இந்த ஜாதகக்காரனுக்கு அழிவில்லை. நூறு வருஷம் மேல் வாழுவான் என்கிறார். அது எப்படிய்யா நூறு வருஷத்துக்கு மேல வாழமுடியும் என்று விஷ்ணு கேட்க, அவர் இமயமலையில் வாழும் முனிவர்கள் பற்றி சொல்கிறார். இப்ப, பேக்கிரவுண்ட்ல பாபா தீம் ஓடுது.

அந்த ஊரில் மலை மேல் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்திற்கு யாரும் செல்வதில்லையாம். விஷ்ணு அங்கு சென்று பார்க்கிறார். அரண்மனையை விட்டு ஓடிப்போன பஹதூர் ராஜா, நீண்ட முடி வளர்ந்துக்கொண்டு அங்கு இருக்கிறார். ஜெட்லி படத்தில் வருவது போல் பறந்து பறந்து சண்டை போடுகிறார். அவரிடம் இருந்து ஒருவழியாக விஷ்ணு தப்பித்து வருகிறார்.

வீட்டிற்கு வந்து ‘உங்களில் யார் நிஜ நாகவல்லி?’ என்று அறிவிக்கிறார். த அவார்ட் கோஸ் டூ....

...
...
...

சந்தியா...

ஆம். அவர்தான் இதில் நாகவல்லி. அதன்பிறகு, அவர் சந்திரமுகி மேக்கப்புடன் வந்து பயமுறுத்துகிறார். (இப்படித்தான் முதல்நாளே ‘சிநேகிதியே’ பார்த்துவிட்டு, எல்லோரிடமும் தபுதான் கொலைகாரி என்று சொல்லிவிட்டோம். ஹி... ஹி...)

முடிவில், மலைமேல் ராஜாவும், நாகவல்லியும் சண்டை போடுகிறார்கள். ராஜா, நாகவல்லியை கொல்லப்போகும்போது, இயற்கை இடியின் மூலம் ராஜாவை முடித்துவைக்கிறது. நாகவல்லி பழிவாங்கிய திருப்தியில், சந்தியா குணமாக, விஷ்ணு பை பை சொல்ல, முற்றும்.

---

கதை உங்களுக்கு எப்படி இருக்கிறது?

என்ன நடக்க போகிறது? எப்படி கதை செல்லும்? என்று தெரிந்தும் விறுவிறுப்பாக செல்கிறது. சந்திரமுகியில் வந்த மெருகேற்றிய விஷயங்கள், இதில் வருகிறது. கிராபிக்ஸில் உலகத்தரம் என்ன, நம்மூர் தரத்தை விட குறைவுதான். ராஜா காலத்து காட்சிகள், இம்சை அரசன் தரம்.

விஷ்ணுவர்தனின் இருநூறாவது படம். கடைசி படம். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஏன் கூட்டம் அதிகமாக இருக்கிறது? அவர்களது படம் மற்றவர்களை விட அதிக இடைவெளியில் வரும். வருஷத்திற்கு இரண்டு படங்கள் வருகிறது என்றால், அடுத்தது எப்ப வருமோ என அதிக ஆர்வத்தில் பார்ப்போம். இனி இவரை பார்க்கவே முடியாது என்றால்? அப்படித்தான் இங்கு இருக்கிறது ரசிகர்களின் கூட்டம்.

இவரது குரல், அந்த கன்னட மாடுலேஷனாலா என்று தெரியவில்லை, ரஜினி வாய்ஸ் போன்றே இருக்கிறது. நிறைவாக செய்திருக்கிறார். இவருக்கு ரஜினியை விட வயது கம்மிதான். ஆனால், மனிதர் ஆடவும், ஓடவும் கஷ்டப்படுகிறார். ரஜினியை பார்த்து ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் இது. ரஜினி வயது நாயகர்கள் தள்ளாடும்போது, ரஜினியோ துள்ளாட்டத்துடன் இருக்கிறார்.

விமலாராமனை பார்க்கும் போது, லைட்டா ‘அருந்ததி’ அனுஷ்கா போல் இருக்கிறார். சந்தியாவிற்கு அவரை போலவே ’வெயிட்’டான கேரக்டர்.

சந்திரமுகி கிளைமாக்ஸில் பிரபு காமெடி செய்தது போல், இதில் அவினாஷ் செய்திருக்கிறார். ஆரம்பத்தில், இவரைக்காட்டியே பயமுறுத்துகிறார்கள்.

திகில், காமெடி, செண்டிமெண்ட் என ஜெயித்த பார்முலாவிலேயே சென்று சொல்லி அடித்து, கன்னட ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் படைத்திருக்கிறார் பி.வாசு. சந்திரமுகியில் டாடா இண்டிகாமிற்கு படம் முழுக்க பேனர் கட்டியது போல், இதில் ஏர்செல்லுக்கு கட்டியிருக்கிறார்.

---

வேட்டையன் கேரக்டர் பலவீனமாக இறுதியில் இறப்பதால், ரஜினி இதில் நடிக்க வாய்ப்பு குறைவு. அது மட்டுமில்லை, நாகவல்லியில் தோஷத்தால் தான் சௌந்தர்யாவும் (முதல் பாக முடிவில்), விஷ்ணுவர்தனும் (இரண்டாம் பாக முடிவில்) இறந்ததாக யாரோ கொளுத்துப்போட, ரஜினி சென்ற வாரம் மைசூர் பக்கம் இருக்கும் கோவில்களுக்கு சென்று ஹோமம் வளர்த்திருக்கிறார். இது இரண்டு நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி. அதனால் தான், சென்னையில் ப்ரிவ்யூ பார்த்தப்பிறகு, நன்றாக இருப்பதாக பி.வாசுவை பாராட்டிய பின்பும், தமிழில் இரண்டாம் பாகத்திற்கு பிடிக்கொடுத்து பேசவில்லையாம்.

சூப்பர் ஸ்டார் நடிக்கவில்லையென்றாலும், யாராச்சும் சுப்ரீம் ஸ்டார்கள் பி.வாசுவிற்கு கிடைக்காமலா போய்விடுவார்கள்? அப்படி எடுக்கும்பட்சத்தில், இந்த படத்தின் கதையை கூகிளில் தேடப்போகும் தமிழ் ரசிகர்களுக்கும், படம் பார்த்து கதை சொன்ன கன்னட நண்பனுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

.

Saturday, February 20, 2010

என் வழி ரஜினி வழி - அஜித்

பில்லா ரஜினிபில்லா அஜித்சிவாஜி ப்ரொடக்‌ஷன்ஸ் வழங்கும் சந்திரமுகிசிவாஜி ப்ரொடக்‌ஷன்ஸ் வழங்கும் அசல்காலையில் முதலமைச்சரை சந்தித்தார் ரஜினிமாலையில் முதலமைச்சரை சந்தித்தார் அஜித்இனி ஒரு கற்பனை....

Tuesday, February 16, 2010

ட்டுடூர்ர்ர்ர்.....

"ஹலோ... எங்கடா இருக்கீங்க?”

“இதோ கிளம்பிட்டோம்... பாலாவுக்காக வெயிட்டிங்”

“நான் இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன். சீக்கிரம் வாங்கடா... எப்ப பாரு லேட்டா... அவசரம் புரியாம...”

கண்ணன் ஓடி சென்று, ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டே, கிக்கரை மிதித்து, அலுவலக பார்க்கிங்கில் இருந்து வண்டியை கிளப்பி, கேட்டின் அருகே சென்று பாலாவுக்காக வாசல் கதவை பார்த்தப்படி நின்றான்.

வாட்சில் டைம் பார்த்தான். அரை மணி நேரத்தில் சென்று விட முடியுமா? பாவம் அசோக். எவ்ளோ நேரம் தான் தனியாக காத்திருப்பான்?

திரும்பி வாசலை பார்க்க, பாலா ஓடி வந்துக்கொண்டிருந்தான்.

“சீக்கிரம்டா...” கத்திக்கொண்டே ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.

பாலா ஓடி வந்து வண்டியில் ஏறிக்கொள்ள, சீறிக்கொண்டு கிளம்பியது.

இரண்டு கிலோமீட்டருக்கு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

பிறகு, கண்ணன் திட்ட ஆரம்பித்தான்.

“ஏண்டா! லேட்?”

“நீ முதலேயே சொல்லியிருக்கணும். சரி, லூஸ்ல விடு. வேகமா போ!”

ஆக்ஸிலேட்டர் மேலும் முறுக்கப்பட, சத்தத்தை மேலும் கூட்டிக்கொண்டு, 150 சிசி இஞ்சின் பைக் உறுமலுடன், அருகில் இருந்த மற்ற வாகனங்களை விட்டு விலகி முன்னுக்கு சென்றது.

“டேய்! அங்க பாரு! கிரின் சிக்னல் போட்டுருக்கான்...” - பாலா கத்திக்கொண்டு சொன்னது, காற்றின் பேரிரைச்சலைத்தாண்டி ஹெல்மெட்டுக்குள் இருந்த கண்ணனின் காதில் மெதுவாக கேட்டது.ஆமாம். முன்னூறு மீட்டர் தொலைவில் அந்த சிக்னல். அப்போதே போட்டிருக்க வேண்டும். காத்திருந்த வாகனங்கள் கரைந்திருந்தது. சிக்னலில் மாட்டினால் பத்து நிமிடம் விரயமாகும். தாண்டி விட வேண்டும்.

முன்னால் சென்ற வாகனங்களையும், சிக்னலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே வண்டியை விரட்டினான். வண்டியின் உச்சப்பட்ச சேவை அது.

சிக்னலில் கிட்டத்தட்ட வண்டிகள் எதுவுமில்லை.

சிக்னலை கடக்கும்போது அது நிகழ்ந்தது. கண்ணனின் வண்டிக்கு முன்னால் இடதுப்புறம் சென்றவன், பின்னால் பார்த்துக்கொண்டே வலதுபுறம் மாறினான். சிக்னலில் வலதுபுறம் செல்லும் சாலைக்கு செல்கிறான் அவன். கண்ணன் பைக் வருவதற்கு முன் சென்று விடலாம் என்பது அவன் கணக்கு. தப்பு கணக்கு.

சரியாக சிக்னலின் மையம் அது.

வலதுபுறம் திரும்பிய அந்த நிதானவாதி வண்டியின் முடிவு, கொலைக்கார வேகத்தில் வந்த இவன் வண்டியின் ஆரம்பத்துடன் முத்தமிட...

“யேய்... யேய்ய்....”

வலதுப்புறம் சென்றவன் நலமாக சென்றுவிட, நேராக செல்லவேண்டியவர்களுக்கு நெருக்கடி. வேகத்தை குறைத்தும், சரிவை தடுக்க முடியவில்லை. ரெட் சிக்னல் போட்டுவிட்டார்கள். நேராக இருந்த சாலை, விழுந்ததில் இவர்கள் கண்களுக்கு குறுக்காக கிடந்தது. சிக்னலை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த ட்ராபிக் போலிஸ்காரர்களில் ஒருவர் ஓடி வந்தார். மற்றொருவர், கவிழ்த்த வண்டியை பிடித்தார்.

”பாத்து.. பாத்து... மெதுவா எந்திரிங்க...”

பக்கத்தில் இருந்த கடைக்காரர் ஒருவர் வண்டியை தூக்கிவிட்டார். போலிஸ்காரர் இருவரையும் அழைத்துக்கொண்டு, சாலையோரத்தில் இருந்த மரத்தடிக்கு கொண்டு வந்தார்.

”ரெண்டு பேரும் காலை உதறுங்க... ஆங்... அப்படி...”

“இல்ல சார்... ஒண்ணுமில்ல...” இருவரும் சமாளித்தார்கள். போலிஸ் திட்டாதது ஆறுதலாக இருந்தது. பாலா வண்டியை பார்த்தான். வண்டியின் வலதுப்பக்க இண்டிக்கேட்டர் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது. கண்ணனின் வலதுகால் முட்டியில் பேண்ட் சிறிது கிழிந்திருந்தது. பாலா தனது காலை பார்த்துக்கொண்டான். மடக்கிப் பார்த்துக்கொண்டான்.

சாலையின் அந்தப்பக்கம், முன்னால் சென்றுக்கொண்டிருந்தவனை, போலிஸ் பிடித்து விசாரித்துக்கொண்டிருந்தது, இருவருக்கும் அந்த நிதானவாதி மேல் பரிதாபத்தையும், குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியது.

உட்கார்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து செல்லுமாறு போலிஸ்காரர் இருவரிடமும் கூறினார். கண்ணன் வாட்ச்சை பார்த்துவிட்டு, பாலாவை பார்க்க,

“இல்ல சார்... பரவாயில்லை... ப்ராப்ளம் ஒண்ணுமில்லை...” என்றவாறே வண்டியில் ஏறி உட்கார்ந்து கிளம்ப, போலிஸ்காரர் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

“நல்லவேளை, அவரு நம்மள திட்டலை”

“மிஸ்டேக் நம்ம பக்கம் இல்லடா”

“சரி... சரி... சீக்கிரம் போ... அசோக் வந்து அரைமணி நேரம் ஆச்சு... பாவம், உள்ளயும் போக முடியாம தவிச்சுக்கிட்டு வெளியேவே நிப்பான்...”

அடுத்த பத்து நிமிடத்தில், அந்த காம்ப்ளெக்ஸை நெருங்கிவிட்டார்கள். வாசலிலேயே அசோக் நின்றுக்கொண்டிருந்தான். இருவரையும் பார்த்து கையை அசைத்தான்.

இவர்களும் பதிலுக்கு கையை காட்டிவிட்டு, வண்டியை நிறுத்திவிட்டு, அவனுடன் சேர்ந்து அவசரமாக உள்ளே ஓடினார்கள்.

“போட்டுடான்டா!!!”

ஸ்கிரினில் டைட்டில் ஓடிக்கொண்டிருந்தது. 3 இடியட்ஸ்.

.

Sunday, February 14, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா

ஒரு வருஷத்துக்கு பிறகு, ஒரு தமிழ்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் தான், அவரை பற்றி தமிழகம் அதிகம் பேசியிருக்கிறது.நம்மூர் இயக்குனர்கள் சிலருக்கு தங்கள் படத்தில் ரஹ்மான் இசை இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கு வாய்ப்பு அமையாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் வேறு இசையமைப்பாளர்களிடம் சென்று, எப்படியாவது தங்களுக்கு வேண்டிய இசையை தரமாக பெற்றுக்கொள்வார்கள். ரஹ்மான் இசையை ரசிக்கும் இவர்கள், வேறு இசையமைப்பாளர்களிடம் பெறும் இசையும், ரஹ்மான் இசையை ரசிப்பவர்களுக்கு பிடிப்பதாக இருக்கும்.

எஸ்.ஜே.சூர்யாவின் ஆரம்ப படங்களுக்கு தேவாதான் இசை. தேவா இசை இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. இயக்குனர் எப்படி கேட்டாலும், அப்படி கொடுப்பார். வசந்த், சூர்யா போன்றவர்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும். வாலிக்கு இசை இவர்தான் என்றாலும், படத்தில் சிம்ரன் வாக்மேனில் கேட்கும் பாடலாக ரஹ்மானின் ’அக்கடா’வை சேர்த்திருப்பார்கள். குஷியிலும் இப்படித்தான். நாயகிக்கு பிடித்த இசையமைப்பாளராக ரஹ்மானை வசனத்தில் சொல்லியிருப்பார்.

அதன் பிறகு, எஸ்.ஜே.சூர்யா ரஹ்மானுடன் சேர்ந்துவிட்டாலும், இவர் தேவாவிடம் பணியாற்றிய படங்கள் போல் வெற்றியடையவில்லை. இதேப்போல், மற்ற இசையமைப்பாளர்களிடம் சேர்ந்து வெற்றி கொடுத்த வசந்த், சரண் போன்ற இயக்குனர்கள் கூட ரஹ்மானுடன் இணைந்து தோல்வியடைந்தார்கள்.

ஏற்கனவே தொட்டுவிடும் தூரத்தில் இல்லாவிட்டாலும், இன்றைய ரஹ்மானின் உலகளாவிய வளர்ச்சியால் எட்டாகனியாகிவிட்டார். விண்ணைத்தாண்டி வருவாயா என ரஹ்மானை பார்த்து படைப்பாளிகள் பாடும் நிலை. இன்றைய நிலையில், இளம் முன்னணி இயக்குனர்களுக்கு ரஹ்மானின் ஆல்டர்னெட்டிவ் - ஹாரிஸும், யுவனும்.

யுவனின் ஹிட் ஜோடி செல்வராகவன், ஹிந்தியில் இயக்கும் படத்திற்கு ரஹ்மான் இசை என்றொரு செய்தி முன்பு வந்தது. அமீரும் ரஹ்மானுடன் பணிபுரியும் ஆசையை யுவனுக்கு முன்பே மேடையில் ரஹ்மானுடன் சொன்னார். அதேப்போல், முருகதாஸ் ஹிந்திக்கு கஜினியை கொண்டு சென்றபோது, ரஹ்மானை சேர்த்துக்கொண்டார். இப்படி, எந்நேரமும் ரஹ்மான் சிக்கினால், மற்றவர்களை கைவிடும் நிலையிலேயே இயக்குனர்கள் இருக்கிறார்கள். விஷ்ணுவர்தனும் இந்த லிஸ்டில் சேர்வார் என்று கணிக்கிறேன்.

இப்போது ஹாரிஸை விட்டு பிரிந்து, கௌதம் ரஹ்மானுடன் சேர்ந்திருக்கிறார். ஹாரிஸை பிரிந்ததால், ரஹ்மானுடன் சேர்ந்தாரா? இல்லை, ரஹ்மானுடன் சேர ஹாரிஸை பிரிந்தாரா? என்று தெரியவில்லை. ரசிகர்களுக்கு தேவை, நல்ல இசை.

இந்த படத்தின் பாடல்களை லண்டனில் வெளியிட்டு இருக்கிறார்கள். ”வொய் லண்டன்?” என்ற ரஹ்மானின் கேள்விக்கு, “வொய் நாட் லண்டன்?” என பதில் கூறி சமாளித்திருக்கிறார் கௌதம். தமிழ் பட பாடல்களை வெளிநாட்டினர் கவனிக்க செய்யும் ஒரு முயற்சிதான் இது. ரஹ்மானின் புகழ் எல்லை தாண்ட தாண்ட, இனி தமிழ்நாட்டில் வெளியிட்டாலும் கவனம் பெறும். பாடல், படத்தின் தரம் இயக்குனரின் கையில் இருக்கிறது.

ரஹ்மானின் டிஜிட்டல் இசையை ரசிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும், ஹாரிஸின் இசை உடனே பிடித்துவிடும் சாத்தியகூறுகள் இருக்கின்றன. ஆனால், ரஹ்மானை போல புதுப்புது முயற்சிகள் ஹாரிஸிடம் குறைவு. இன்ஸ்டண்ட் ஹிட், ஒரளவுக்கு கியாரண்டி.

விண்ணைத்தாண்டி வருவாயா ஆல்பத்தில் சில பாடல்கள் தான் கேட்டவுடன் எனக்கு பிடித்தது. இது செண்டிமெண்ட் ப்ராப்ளமா? அல்லது, புதிய முயற்சிகளை உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இல்லாமையா? என்று தெரியவில்லை.

கேட்டவுடன் பிடித்த பாடல், சின்மயி, தேவன் பாடிய ”உயிரே உயிரே”. உற்சாகத்துடன் மகிழ்ச்சியை கொண்டு வரும் பாடல் இது. இதில் நடுவில் வரும் பீட்டுடன் கூடிய நாதஸ்வர இசை ரொம்பவும் பிடித்தது.

அடுத்தது, ஸ்ரேயா கோஷலுடன் ரஹ்மான் பாடிய “மன்னிப்பாயா”. இதில் ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ படத்தின் “கண்டுக்கொண்டேன்” பாடலின் தாக்கம் சிறிது உள்ளது. இந்த பாடலின் ஸ்பெஷல், பாடலின் இடையில் வரும் திருக்குறள். ரஹ்மான் இசையை ரசித்துக்கேட்கும் எனக்கே, ‘ரஹ்மான் திருக்குறளுக்கு இசையமைக்கப் போகிறார்’, ‘ரஹ்மான் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைக்கப் போகிறார்’ எனும் செய்திகளைக் கேட்கும் போது, மெல்லிய பயம் வரும். அது எவ்வளவு தவறென்பது, இந்த பாடலில் ரஹ்மானின் ட்யூனில் திருக்குறளை கேட்கும்போது தெரிகிறது. அவ்வளவு அழகு.

இளையராஜாவும், ரஹ்மானும் தங்களது குரலில் டூயட் பாடிய பாடலுக்கு நடித்திருக்கும் ஒரே இளம் நடிகர் எனும் பெருமையை இந்த படத்துடன் சிம்பு பெறுகிறார். நடிகர் என்றுக்கூட சொல்லலாம். அட... ரஜினியும் இருக்கிறாரே! இந்த படத்துடன் யங் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார். அடுத்தது, மிடில் ஏஜ், ஓல்ட் என்று செல்லுமோ? எது எப்படியோ, ‘ஒரு இயக்குனரின்’ படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த மணிரத்னத்தின் படத்தில் நடிக்க போவதாக வேறு செய்திகள் வருகிறது. ஒரு ‘டண்டணக்கா’, ‘டணக்குணக்கா’ ஆகிறதே!

மற்றபடி, ’ஓமணப்பெண்ணே’, ’ஹோசான்னா’, ‘கண்ணுக்குள்’ பாடல்கள் ரெகுலர் பாடல்களாகத்தான் தெரிந்தது. ஏதோ க்ரிப் இல்லாதது போல் இருக்கிறது. கார்த்திக் பாடிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ தீம் - கொட்டாவி விடும் வகை. ரஹ்மான் என்பதால் உண்டான அதிக எதிர்ப்பார்ப்பினால் கேட்பதால் இருக்கலாம். அல்லது, படத்தின் தன்மைக்கேற்றாற் போல் இருக்கலாம். தமிழ் சினிமா பாடல் என்கிற இலக்கணத்திற்குள் எங்கும் வராத ‘அரோமலே’ பாடலையும், உடனே புரிந்துக்கொள்வதும், ரசித்துக்கேட்பதும் உண்மையிலேயே எனக்கு கடினமானதாகத்தான் இருந்தது.

ஆனால், எல்லாமுமே மென்மையான பாடல்கள். படத்துடன் கேட்கும்போதும், அதற்கு பிறகு கேட்கும்போதும் வேறொரு அனுபவத்தை கொடுக்கலாம். அதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

.

Saturday, February 13, 2010

காதலைக் காதலிக்கிறேன் - பிரகாஷ்ராஜ்”பூப்பதற்கான விநாடியை
எதிர்நோக்குகிறது ஒரு மொட்டு.
காத்திருக்கத் தெரியாத வண்டு
மொட்டறுத்து உள்புக முயற்சிக்கிறது
மொட்டவிழ்க்கவே தெரியாத வண்டுக்கு
தேன் உண்ணவா தெரியப்போகிறது?”


’கதா சப்த சதி’ங்கற தெலுங்குக் காதல் கவிதை தொகுப்பில், காதலையும் காமத்தையும் அவசரமா அடைஞ்சுடணும்னு நினைக்கிற தன் காதலனுக்கு அவனைக் காதலிக்கிற பொண்ணு சொல்றது இது.

கரெக்ட்! ஏன்னா, காதல் என்பது பெறுவது இல்லை, தருவது இல்லை. அடைவதும் இல்லை. அது... நிகழ்வது!

’வாழ்க்கை ரொம்ப போரடிக்குங்க!’ன்னு சொல்ற யாருமே, காதலிக்க தெரியாதவங்கதான். ஏன்னா, காதலிக்க தெரிஞ்சவுங்களுக்கு வாழ்க்கை போரடிக்கிறதில்லை. அதுக்கு நானும் ஒரு சாட்சி.

காதல் புனிதமானது’ன்னு சொல்றவனுக்கு அது புனிதம். காதல் அற்பமானது’ன்னு சொல்றவனுக்கு அது அற்பம். புன்னகையோ, கண்ணீரோ.. அதை நீங்க சந்திச்சே ஆகணும். நீங்க உங்க சொல்லாலும், செயலாலும் அழகாகணுமா? காதலைத் தேடுங்க. ஏன்னா, தேடல்தான் காதல்!

ஆனா, நிறைய காதல்கள், கல்யாணத்தன்னிக்கே செத்துப்போகுது. காரணம், காதலன் புருஷனாகிடுறான். காதலி பொண்டாட்டி ஆகிடுறா. கல்யாணம் பண்ணிக்கிட்டா காதலிக்கக் கூடாதுன்னு அவங்களாவே முடிவு பண்ணிடுறாங்க. அதான் வாழ்க்கை சீக்கிரம் போரடிக்க ஆரம்பிச்சுடுது.

நாட்டுப்புற கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. ஒரு கிழவனும் கிழவியும் தள்ளாடுற வயசுல இருக்காங்க. சாகப்போற நேரத்துக்கு முன்னால, கிழவன் தன்னோட கிழவியிடம் ஒரு வேண்டுகோள் வைப்பான்.

அந்த இருட்டுக்குடிசையில் ஒரேயொரு விளக்கை மட்டும் ஏத்த சொல்றான். எரிகிற தீபத்துக்கு பக்கத்தில் அவளோட முகத்தை வைக்க சொல்றான். ’கிழவனுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சு’ன்னு பிள்ளைக சொன்னாலும், கிழவன் சொன்னபடி செய்யுறா கிழவி.

வெளிச்சத்தில் அவளோட முகத்தை பார்த்ததும், கிழவன் முகத்தில் ஒரு வெளிச்சம் வருது.

”இவளும் நானும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணோம். வீடு, உறவு, ஊருன்னு எல்லோரோட எதிர்ப்பையும் மீறி கல்யாணம் பண்ணினோம். நாப்பது வருஷ வாழ்க்கை. இதோ இப்போ சாகப்போறேன்.

இத்தனை வருஷ வாழ்க்கையில், என்னை காதலிச்ச காரணத்தால, தன்னோட வருத்தங்களைக்கூட இவ எங்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம். நான் இவக்கூட எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்தேன்னு என் மனசாட்சிக்கு நல்லா தெரியும். அவ என்னோட எப்படி வாழ்ந்தாள்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.

இருட்டுக்கு நடுவில் எரியுற விளக்கு பிரகாசமா இருக்கு. விளக்கு பக்கத்தில் என் காதலியின் முகம் அதைவிடப் பிரகாசமா இருக்கு. என்னோட அவளும் சந்தோஷமாதான் வாழ்ந்திருக்கா. இந்த சந்தோஷத்தோட நான் இனிமேல் செத்துப்போவேன்”ன்னு கிழவன் சொல்றதா கதை முடியும்.

அப்படி ஒரு கிழவனா வாழக்கிடைக்கிறது ஆசீர்வாதம்!

”நீங்க எத்தனையோ பேரைக் காதலிச்சதா சொல்றீங்க. அதெல்லாம் உண்மையான காதலா? புனிதமான காதல்னா அது நிறைய பெண்கள் மேலே எப்படி வரும்?”னு என்கிட்ட கேட்டிருக்காங்க.

அவங்க, நான் பெண்களை காதலிக்கிறதா நினைச்சுட்டு இருக்காங்க. நான் அவங்களுக்குச் சொல்ல விரும்பறது இதுதான்.

நான் காதலைக் காதலிக்கிறேன்!

---

பிரகாஷ்ராஜ்
சொல்லாததும் உண்மை
விகடன் பிரசுரம்

.

Friday, February 12, 2010

தீராத விளையாட்டுப்பிள்ளை

ஆக்‌ஷன் படங்களால் வில்லனைவிட தானே அதிகம் அடிவாங்கியதால், விஷால் ரூட் மாறியிருக்கிறார். காதல் மெயின் கரு என்றாலும், ஆக்‌ஷன் பார்முலாவிலேயே சென்றிருக்கிறார்கள். “நான் நிறைய தோல்விகளை சந்திச்சிருக்கேன். இதுவும் ட்ரை பண்றேன். தோல்வியடைஞ்சா கத்துக்கிறேன். ஜெயிச்சா...” என்று பஞ்ச் பேசியிருக்கிறார்.

ஹீரோ எழுதுவதற்கு பென் வாங்கினாலேயே நாலைந்து பார்த்துத்தான் ஒன்று செலக்ட் செய்வார். கல்யாணத்திற்கும் மூன்று பெண்களை காதலித்து ஒரு பெண்ணை செலக்ட் செய்ய கிளம்ப, அதனால் ஏற்படும் விளைவுகள் தான் மீதி கதை. கொஞ்சம் கூட கதை தெரியாமல் போனததால் தான், ரசித்துப்பார்க்க முடிந்தது. அதனால் இதற்கு மேல் கதை வேண்டாம்.முதல் பாதி முழுக்க விஷால், சந்தானம், மயில்சாமி, சத்யன் காமெடி காட்சிகளால் கலகலப்பாக செல்கிறது படம். இரண்டாம் பாதியில் கதாநாயகிகளுடன் விஷால் ஆடும் சடுகுடு ஆட்டத்தால் கலகலப்புடன் விறுவிறுப்பாக செல்கிறது. இயக்குனர் அமைத்துள்ள புத்திசாலித்தனமான திரைக்கதை, யூகிக்க முடியாத படி இருக்கிறது. கடைசி அரை மணி நேரம் மட்டும் பொறுமையை சோதிக்கும்படி செல்கிறது. ஆனாலும், இறுதியில் ஜாலியாகவே முடிக்கிறார்கள். ‘நான் அவன் இல்லை’ சீரிஸ் எதுவும் பார்க்காமல் இருந்ததால், புதுசாக இருந்தது.

வழக்கமாக அமைந்திருக்கும் காட்சிகளில் எல்லாம், நாம் பேச நினைப்பதை எல்லாம் சந்தானம் பேசுகிறார். விஷாலும் நகைச்சுவைக்காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். டான்ஸும் நன்றாக செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் சொல்ல தேவையில்லை. வேஷ்டியை மடித்து கட்டுவதற்கே, தெருவில் இருக்கும் குப்பைகள் முழுக்க பறக்கிறது.

புரட்சி தளபதி ஆனாலும் ஆனார்... “ஆயிரத்து ஐநூறு கோடி இருந்தாலும் நீ பொம்பளை. ஒண்ணுமே இல்லனாலும் நான் ஆம்பிளை” போன்ற புரட்சி கருத்துகளை கூறி கைத்தட்டல் பெறுகிறார். வேலைக்கு பல நிறுவனங்களில் விண்ணப்பிப்பதையும், வீடு கட்டுவதற்கு பல பேங்குகளுக்கு செல்வதையும், கல்யாணத்திற்கு பெண் பார்ப்பதுடன் ஒப்பிட்டு லாஜிக் பேசி வேறு கைத்தட்டல் பெறுகிறார்.

யுவன் கவலைப்பட வேண்டியதே இல்லை. நச்சென்று ஒரு பின்னணி வேண்டுமென்றால், உடனே எடுத்துப்போடுவதற்கு, இளையராஜா நிறைய சொத்து சேர்த்துவைத்திருக்கிறார். இதில் அப்படி உதவியிருப்பது, ‘நெற்றிக்கண்’ படத்தின் வயலின் தீம். நன்றாக இருக்கிறது. ரிங் டோனில் ஒரு ரவுண்ட் வரும்.

என்னதான் ”கறுப்பான பசங்களை பொண்ணுங்க லவ் பண்ண மாட்டாங்கன்னு யாருடா சொன்னா?”ன்னு வசனம் வச்சாலும், மன்மதன் (சிம்பு அல்ல!) லெவலுக்கு விஷால் கொடுக்கும் பில்டப்புகள் ஓவராத்தான் தெரிகிறது. எல்லாக்காட்சிகளிலும் ஏதாவது ஒரு நாயகி வருவது, படத்திற்கு கலர்புல்லாக இருக்கிறது. பிரகாஷ்ராஜுக்கு பெரிய ரோல் இல்லை.

வேலண்டைன் டே வாரத்தில் வந்திருக்கும் இந்த படத்தின் முதல் பாதியில், விஷால் காதலை பற்றி சொல்லும் விஷயங்கள் எதுவும் காதலை போற்றும்படி இல்லாவிட்டாலும், இன்றைய இளைஞர்கள் காதல் மீது கொண்டிருக்கும் எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருப்பதாகத்தான் நினைக்கிறேன். இயக்குனர் திருவின் முதல் முயற்சி நன்றாக வந்திருக்கிறது. ரசிகர்களின் நாடித்துடிப்பு தெரிந்திருப்பதால், அபத்தமாக, அராஜகமாக இருந்தாலும், வசனங்கள் மூலம் கைத்தட்டல் வாங்க தெரிந்திருக்கிறது. முக்கியமாக, தினகரனுக்கு விளம்பரம் செய்யும் வசனங்கள் இல்லாதது இன்னும் சிறப்பு.

தீராத விளையாட்டுப்பிள்ளை - நன்றாகவே விளையாடி இருக்கிறான்.

.

Thursday, February 11, 2010

பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஹைவே - ஜாக்கிரதை

இந்த பதிவில் நண்பர் குப்பன்.யாஹூ, பகலில் எடுத்த புகைப்படங்களை போடுமாறு கேட்டிருந்தார். அவருக்காக சில படங்கள்... எச்சரிக்கை இறுதியில்...அறுபதிலேயே சென்றாலும், பத்து கிலோமீட்டரை பத்து நிமிடத்திற்குள் கடந்துவிட முடிகிறது. ஆனால், அதற்கே போர் அடித்துவிடுகிறது.கீழே சாலையில் செல்லும்போது, அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ஆனாலும், குறுக்கே செல்லும் நாய், வழியை மறித்துக்கொண்டு ஓடும் மனிதர்கள், ட்ராபிக் சிக்னல், சாலையோர கடைகள், விளம்பர பேனர்கள் என சுவாரஸ்யமாக பல விஷயங்களை கடந்து செல்வோம்.ஆனால், மேலே செல்லும்போது ஒரே பொசிஷனில் அப்படியே போவதால், பத்து நிமிடம் ஆனாலும் ரொம்ப நேரம் ஆவது போல் தெரிகிறது. காரில் செல்பவர்களுக்கு, எந்த இடத்தில் சென்றுக் கொண்டு இருக்கிறோம் என்று தெரிவது கடினம்.டோல் கேட்டில் இன்னமும் வேலை நடந்துக்கொண்டிருப்பதால், இதுவரை கட்டணம் வசூலிக்கவில்லை.இது கடந்த வாரம் நடந்த ஆக்ஸிடண்ட். சரியான விபரங்கள் தெரிவில்லை. பைக் இருக்கும் நிலையை கண்டால், ஓட்டியவர் என்ன ஆகியிருப்பார்?சாதாரணமான சாலையில் பைக்கில் இருந்து கீழே விழுந்தால், அதிகபட்சம் எலும்பு முறிவோடு முடிந்துவிடும். இங்கோ, மொத்தமும் முடிந்துவிடும்.


பெரிதாக்கி காண படத்தின் மீது க்ளிக்கவும்.

.

Wednesday, February 10, 2010

அந்நியன்சென்ற வார பயணத்தின் போது, ஒரு சேலம் பஸ்ஸில் ஏறினேன். முன்பக்க கதவை திறந்து ஏறியதால், சீட் தேடிய கண்களுக்கு, நேர் எதிரே இருந்த மூணு பேர் அமரும் சீட் வரிசை முதலில் தெரிந்தது. அதில் கறுப்பாக வெளிநாட்டை சேர்ந்த இரு பெண்கள் அமர்ந்திருந்தார். ஒரு இருக்கை காலியாக இருந்தது. அதற்கு முந்தைய சீட்டில், இரு கறுப்பின ஆண்களும் நம்மூர்காரர் ஒருவரும் உட்கார்ந்திருந்தார்கள்.

சரி, பின்னால் ஏதாவது சீட் இருக்கிறதா? என்று பார்க்க, ஏதும் இல்லாததால், அந்த பெண்கள் பக்கம் காலியாக இருந்த இருக்கையிலேயே உட்கார திரும்ப, அதற்குள் கண்டக்டர் முன்னால் இருந்த அவர்கள் நாட்டவர் ஒருவரை அந்த பெண்களுடன் உட்கார வைத்துவிட்டு, என்னை முன்னால் இருந்த சீட்டில் உட்கார செய்தார். கண்டக்டரின் இந்த செய்கைக்கு, அவ்விரு பெண்களும் ஆச்சரியத்துடன் சிரித்தார்கள்.

இப்ப, என் அருகில் இருந்த வெளிநாட்டை சேர்ந்தவனிடம், அவனை பற்றி கேட்டேன். அவன் கூறியது,

“என் பெயர் டோடோ (லைட்டா மாற்றியிருக்கிறேன்!). என் பெரிய பெயரை சொன்னால் புரியாது. அதான் முதல் எழுத்தை கடைசி எழுத்தையும் சேர்த்து இப்படி சுருக்கியுள்ளேன். இந்தியாவில் படிப்பதற்காக, நாங்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருக்கிறோம்.”

சேலத்தில் இருக்கும் ஒரு கலைக்கல்லூரியை சொன்னான். பிசிஏ படிக்கிறானான். அடுத்தது, எம்சிஏ படித்துவிட்டு, பிறகு வேலைக்கு தென்னாப்பிரிக்காவிற்கு சென்று விடுவானாம்.

“இந்தியா எப்படி இருக்கிறது?”

“நல்லா இருக்குது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குது.”

“படிக்க ஏன் இந்தியா?”

“இங்கு கல்வித்தரம் நன்றாக இருக்கிறது.”

கிழிஞ்சுது. நாம் நமது கல்வி முறையை விமர்சித்துக்கொண்டு இருக்க, தென்னாப்பிரிக்காவினருக்கு அது தரமாக தெரிகிறது. இதற்கும், அவன் சொன்ன கல்லூரியை நான் இதற்கு முன்னால் கேட்டதுக்கூட இல்லை. படிக்க, கிட்டத்தட்ட மூணு லட்ச ரூபாய் ஆகிறதாக சொன்னான்.

அரை மணி நேர பயணத்தில், நிறைய பேசினோம். பொதுவாக, பஸ்ஸில் போகும்போது யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டேன். ஏனோ, இவனிடம் நிறைய பேசினேன்.

அவனுடைய தாய்-தந்தை இருவரும் இறந்துவிட்டார்களாம். அவனுடைய அக்காதான் இவனை படிக்க வைக்கிறாராம். தற்போது, அவனுடைய அக்கா தென்னாப்பிரிக்காவில் இருக்கும் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகிறாராம்.

என் டப்பா இங்கிலிஷை கேட்டுவிட்டு, தமிழ்நாட்டில் இவ்வளவு நன்றாக இங்கிலிஷ் பேசி, நான் கேட்டது நீங்கள் ஒருவர்தான் என்றான். அவன் கல்லூரியில் யாருமே ஆங்கிலத்தில் பேச மாட்டார்களாம். (தெரிஞ்ச விஷயம் தானே!) ஆனால் அதற்குள், இவனை கொஞ்சம் தமிழில் பேச வைத்துவிட்டார்கள்.

அடுத்தது, கல்லூரியில் உடன் படிக்கும் தமிழ் பெண்கள் யாரும் தங்களுடன் பேசுவதே இல்லை என்று வருத்தப்பட்டான். அதுவும் தெரிஞ்ச விஷயம் தான். பாதிப்பேரு, தமிழ் பசங்க கூடவே பேச மாட்டாங்க!

அவர்கள் நாட்டில், கல்யாணம் 34 வயதில் தான் பண்ணுவார்களாம். இங்கே 25 வயதிலேயே பண்ணிவிடுகிறார்கள் என்று அவன் கூறியதில் வியப்பு இருந்ததா, வருத்தம் இருந்ததா என்று தெரியவில்லை. இப்ப, இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது.

சில நாட்கள் முன்பு, அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு தீம் தேர்வு செய்வது பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். சமூக பிரச்சினைகள் பலவற்றை சொல்லி நமது தீம் அதற்கு எதிராக இருக்க வேண்டும் என்றார்கள். ஒரு பெண், “பால்ய விவாஹம்” என்றார். “ஏங்க, அது எங்க இப்ப நடக்குது? அப்படியே நடந்தாலும், அவுங்களாவது சந்தோஷமா இருக்கட்டுமே?” என்று நான் விளையாட்டுக்கு சொன்னதற்கு, சுற்றி இருந்த பல பேச்சிலர்கள் சிரித்துக்கொண்டு ஆமோதித்ததில் இருந்து எனக்கு தெரிந்தது - 25 என்ற வயது வரம்பிற்கே இந்தியர்கள் பலர் உள்ளுக்குள் பொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான்.

பிறகு அவன் இந்தியா பற்றி உயர்வாக பல விஷயங்கள் கூறினான். இந்திய சாலைகளின் அகலம் அவர்கள் நாட்டில் இருப்பதை விட மிக பெரிது என்றான். செல்போன்களின் விலை அதிகமாக இருந்தாலும், கால் ரேட் கம்மியாக இருப்பதாக சொன்னான். தென்னாப்பிரிக்காவின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான எம்டிஎன்னை ஏர்டெல் வாங்குவதை பற்றி சொன்னான்.

இந்தியாவை பற்றி நாம் தாழ்வாக பேசினாலும், உயர்வாக பேச உலகத்தில் பல நாடுகள் இருப்பது அவனுடன் பேசும்போது தெரிந்தது.

ஆனால், கடைசியில் அவன் இந்தியாவை பற்றி சொன்ன ஒரு நிதர்சன உண்மை, கண்டிப்பாக இந்தியர்கள் வெட்கப்பட வேண்டியது.

“நான் எப்படி எங்கள் நாட்டில் இருந்து இங்கு வந்து ஒரு அந்நியனாக தெரிகிறேனோ, அதுப்போல் தான், ஒரே நாட்டிற்குள் வேறு மாநிலத்தில் பணிபுரியும் இந்தியர்களும் அம்மாநிலத்தவருக்கு அந்நியராக தெரிகிறீர்கள்.”

.

Tuesday, February 9, 2010

பத்மபூஷணும், பச்ச மஞ்ச செவப்பு தமிழனும்...

மகேந்திரனிடமிருந்து...பச்ச, மஞ்ச செவப்பு தமிழன் என்பது இன்று கேலிப்பாடலாக இருந்தாலும், இருபது வருடங்களுக்கு முன், நிஜமான ஒரு பச்ச, மஞ்ச, ரோசு தமிழன் இருந்தார்.... எல்லா தட்டு மக்களும் ரசித்த, அவரின் பல படங்கள் தொடர்ச்சியாக வந்தன.

காரணம் சொல்ல முடியாத அதிசயங்கள் எப்போதாவது நிகழ்வதுண்டு... ஆனால் இந்த அதிசயத்துக்கு அனைவரும் அறிந்த காரணம் உண்டு... அது... ராஜா....

ராமராஜன் வெற்றிகரமாக வலம் வந்ததற்கு முக்கியகாரணம் அவர் படத்திலிடம் பெற்ற ராஜாவின் பாடல்கள்... ஆர். சுந்தரராஜனைப்போல ராஜாவால் தூக்கிவிடப்பட்ட இன்னுமொரு நபர் ராமராஜன்.

எங்க ஊரு பாட்டுக்காரனுக்கு பின், அவரின் படங்கள் தொடர்ச்சியாக ராஜாவின் இசையில் வெளியாயின... அவற்றுள் பல படங்கள் கங்கை அமரனின் இயக்கத்தில் இருந்தது இன்னுமொரு சிறப்பு... தேவையானதை கேட்டு பெறவோ, வேண்டாததை மறுக்கவோ ராஜாவிடம் கூடுதல் உரிமை இருந்தது அமரனுக்கு...

ஒரே பாடலை படத்தில் மூன்று முறை பயன்படுத்தும் வழக்கம் அமரனுக்கு இருந்தது. எங்க ஊரு பாட்டுக்காரனில் செண்பகமே செண்பகமே போல... (ராமராஜனுக்கு மனோ, நிஷாந்திக்கு சுனந்தா & ரேகாவிற்கு ஆஷா போஸ்லே) கரகாட்டகாரனிலும் மாங்குயிலே பாடலை மூன்றாம் முறை சோகப்பாடலாக ஒலிக்கச்செய்ய ராஜாவை கேட்டபோது, ரெண்டு தடவை வந்ததே போதும்... அதுக்கு நான் வேற தாரேன்... என்று ராஜா தந்தது "குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா?"...

"ஊருவிட்டுஊரு வந்து காதல் கீதல்"' பாடலை கோர்க்கும் போது, ராமராஜனை கேலி செய்பவர்களெல்லாம் அவரின் கரகாட்டக்குழுவின் வாத்தியக்கலைஞர்கள் என்பதால், பாடல் முழுதும் ஒத்தூதுவது போல (பப்பப்பா... ஆமா... ஆமா... இல்லே...இல்லே....) சேர்ந்திசை குரல்களையே chords போல போடச்சொன்னாராம் ராஜா... என்ன தவம் செய்தனை அமரன்...

ராமராஜனின் படங்களுக்கு ராஜா போட்ட பாடல்களென என் தொகுப்பில் நான் பத்திரமாக வைத்திருக்கும் பாடல்களை பற்றி...

1988 ல் வெளியான எங்க ஊரு காவல்காரன், இந்த படத்தில் வரும் இரண்டு பாடல்கள் என் விருப்ப எண்கள்... தீபன் சக்கரவர்த்தி & சுசீலா பாடிய "அரும்பாகி மொட்டாகி பூவாகி..." அமரனின் வரிகள்...

மணக்கும் சந்தனம் பூசட்டுமா? இனிக்கும் சங்கதி பேசட்டுமா?
எதுக்குங்கப்பன கேக்கட்டுமா? அப்பறம் உன்கிட்ட பேசட்டுமா?


ஒரு சந்தர்ப்பத்தில் தீபன் அவர்களை சந்தித்த போது இந்த பாடல் பதிவின் நிகழ்வுகளை அவர் சொன்னது, இதை பாடிக் காண்பித்தது எல்லாம் இன்னமும் எனக்கு வியப்பு...

இன்னுமொரு பாடல் "ஆசையில பாத்திகட்டி நாத்து ஒண்ணு நட்டுவெச்சேன்..." சுசீலாவின் குரலில் ஒரு முறையும், மனோ & சுசீலாவின் ஜோடிக்குரல்களில் சோகப்பாடலாகவும் இருமுறை ஒலிக்கும்...

"கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்து தான் கூடவில்ல..."

ஆடி மாதம் நீர் நிறைந்து ஓடும் வாய்க்காலில், நல்ல வெயில் நேரம் அமிழ்ந்து கிடப்பது போன்ற மிதப்பை தரும் இந்த பாடல்...

1989 ல் வந்த "பொங்கி வரும் காவேரி" க்காக ராஜாவின் இசையில் அருண்மொழி & சித்ரா பாடிய "வெள்ளி கொலுசு மணி... வேலான கண்ணு மணி..." சில வருடங்களுக்கு முன் எனக்கு இந்த பாடலை தினமும் கேட்கும் வழக்கம் இருந்தது...

"கண்ணத்திறந்தேன் ... நெஞ்சில் விழுந்த...
உள்ளுக்குள்ள இன்ப சுகந்தான்..."


மிகத்தெளிவான சித்ராவின் குரலும் உச்சரிப்பும் இந்த பாடலின் பலம்...எங்க ஊரு பாட்டுகாரன் (1987 ), கங்கை அமரன் இயக்கிய இப்படத்தில் எல்லா பாடல்களுமே இனிமை எனினும், அறிமுகமான புதிது என்பதால் சற்றே தயக்கமான, மெலிதான பயம் கலந்த மனோவின் குரலில் வந்த "மதுர மரிக்கொழுந்து வாசம்"... பாடலுக்காக மனோவுடன் இணைந்திருப்பது சித்ரா.

"பச்சரிசி மாவிடிச்சி... சக்கரையில் பாவுவெச்சி..." என குழுவினர் குரலில் தொடங்கும் இந்தபாடல் கேட்கும் போதெல்லாம், ஏதோ ஒரு பொங்கல் நாளில் கரும்பு கடிப்பது போல தோன்றும்.

"சுத்துறது உனக்கு மட்டும் தானா? இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனோ..."

இந்த வரிகளின் மெட்டு எந்த கர்நாடக சங்கீத பாடலையும் ஏனென்று கேட்டு இடுப்பில் கைவைத்து முறைக்க வல்லது... மனசேனோ கிறங்குதடி, செறகடிச்சி பறக்குதடி மதுர... என்று மனோ முடிக்க மரிக்கொழுந்து வாசம் என்று சித்ரா தொடர்வார்... எனக்கு மனக்கண்ணில் ராஜா சிரிப்பார்...1990 ம் ஆண்டு வந்த கரகாட்டகாரன், தமிழ் சினிமா வசூல் வரலாற்றையே புரட்டிப்போட்டது... தில்லானா மோகனாம்பாளின் நாட்டுப்புற பதிப்பு போல எனக்கு தோன்றும்... நடிகர் தேர்வு, நகைச்சுவை எல்லாமே சிறப்பு. படத்தை தூக்கி நிறுத்தியது இசை...

படம் வெளிவந்த புதிதில், அதில் வரும் ஒரு தொக்கு பாடல் "நந்தவனத்தில் ஒரு ராஜகுமாரி... " முந்தானையை இழுத்து சொருகி, ராமராஜனை முறைக்கும் கனகா... ஹப்பா.... இந்த பாடல் சமீபத்தில் யுவன் ஷங்கரால் புதுப்பிக்கப்பட்டது... (முட்டத்து பக்கத்துல...) யாருமே கண்டுக்கல...(!!)

இந்த படத்தில் எனக்கான பாடல் "குடகுமலை காற்றில்வரும் பாட்டு கேட்குதா... என் கண்மணி..." மனோ & சித்ரா பாடிய வரிகள் அமரன் எழுதியவை... சரணத்தில் வரிக்கு வரி மெட்டு மாறுவது (tune variation) பிரமிப்பு... (இதற்கு இன்னொரு சிறப்பான உதாரணம் ராஜாதி ராஜா படத்தில் வரும் மீனம்மா பாடல்)

ஊருவிட்டு ஊருவந்து என்ற படத்திற்காக ராஜாவின் இசையில் எஸ்.பி.பி & ஜானகி பாடிய "தானா வந்த சந்தனமே... உன்ன தழுவ தினம் சம்மதமே..." கேட்பதற்கு மிக எளிதான தெம்மாங்கு பாடல் போல தோன்றினாலும், சங்கீத விற்பன்னர்களால் வியக்கப்பட்ட ராஜாவின் இசைக்கோர்வை இது...

இன்றும் கர்நாடக சங்கீதத்திற்கான வலைத்தளங்களில் விவாதிக்கவும் எடுத்துக்காட்டவும் முன் நிற்கும் பாடல்...

இதில் முதல் சரணத்தில் ஒரு வரி...

"முன்ன பின்ன அறிஞ்சதில்ல மொறையாக தெரிஞ்சதில்ல
சின்னச்சின்ன தவற நீயும் பொறுத்தாக வேணுமே...
புத்தகத்தில் படிச்சதில்ல புரியாம நடிக்கவில்ல...
வித்தைகள வெவரமாக வெளியாக்க வேணுமே..."


ஜானகியும் எஸ்.பி.பியும் வீடு கட்டி விளையாடியிருப்பார்கள்...

மீண்டும் ஜானகிக்கென கேட்கத்துவங்கி நான் அடிமையான ஒரு பாடல் செண்பகமே செண்பகமே (1988 ) படத்தில் எஸ்.பி.பி & ஜானகி பாடிய "வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா... வச்சிபுட்டா..."

இப்ப ஒண்ணும் அவசரமில்ல, நிதானமா போலாம் என்று எல்லோருக்கும் ராஜா சொன்னதைப்போல, வெகு நேர்த்தியான நடை, பாடகர்களுக்கு உச்ச ஸ்தாயி இம்சைகள் எதுவும் கொடுக்காத நானோ நீங்களோ பாடிவிட முடிகிற ஸ்ருதியில், வயலின்களும், அதற்கு மேல் ஜானகியும் கொஞ்சுகிற பாடல்.

இரண்டாம் சரணத்திற்கு முன் ஜானகியும் உடன் வயலினும் சொல்லும் ஒரு ஹம்மிங், அதற்கு பதில் சொல்லும் குழல் என அற்புதமான கோர்வை... பாடல் இறுதியில், "ஏதோ ஒண்ண சொல்லி சொல்லி என்ன இப்ப கிள்ளாத..." என்று ஜானகி சிணுங்க, அதற்கு எஸ்.பி.பி சிரிப்பார் பாருங்கள்... நான் காதலிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன்...!!

இறுதியாக இன்று பின்னிரவில், கேட்டு விட்டு தூங்கலாம் என்று உங்களை யோசிக்க வைக்க என்னுடைய அஸ்திரம் இந்த பாடல்...

1991 ல் வெளியான 'ஊரெல்லாம் உன் பாட்டு' படத்தில் ஸ்வர்ணலதா பாடிய "ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது..." இதே பாடல் ராஜா தனியே பாடி படத்தில் வராமல், இசைத்தட்டுகளில் மட்டும் வந்திருக்கும். ஒரு நீரோடை போல மிக தெளிவான மெட்டு, தாலாட்டும் தபேலா, வசீகரிக்கும் ஸ்வர்ணலதாவின் குரல் என மிக அருமையான பாடல்...

ஸ்வர்ணலதா... ராஜாவின் கண்டுபிடிப்பு இந்த குயில்... ஒரு கட்டத்தில் ராஜாவின் எல்லா படங்களுக்கும் இவரை பயன்படுத்தினார்... (ஒரு பாடலுக்கேனும்)

ஒரு நீண்ட ஏறி இறங்கும் ஆலாபனையுடன் துவங்கும் இந்த பாடல்... ஆலாபனை இறுதியில் கிடார் மட்டும் இணையும்... ஒரு வினாடி மௌனத்திற்கு பின் பாடல் துவங்கும்... பல்லவியின் இரண்டாம் வரியில் தபேலா இணையும்... மனசுக்கு மிக இணக்கமான தாளக்கட்டு... காதலிக்காதவரையும் சற்றே அசைத்துப்பார்க்கும் வரிகள்... நீங்களே கேளுங்கள்...ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது...
நாளெல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை கூட்டுது...
நீயல்லால் தெய்வம் வேறெது...
நீயெனை சேரும் நாளேது...

உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்...
இங்கு நீயில்லாது வாழ்வில் எது வேனிற்காலம் தான்?
என் மனம் உன் வசமே, கண்ணில் என்றும் உன் சொப்பனமே...
விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக்கோலம் தான்...
ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி...
ஆடும் நினைவுகள் நாளும் பாடும் உனதருள் தேடி...
இந்தப்பிறப்பிலும் எந்தப்பிறப்பிலும் எந்தன் உயிர் உன்னை சேரும்...

சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில் நின்றது உன் மயக்கம்...
இனி ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்?
உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு...
அதை நீயும் கேட்க நானும் சொல்ல எது வாசகம்?
பாதச்சுவடுகள் போலும் பாதை அறிந்திங்கு நானும்
கூட வருகின்ற நேரம் கூட மறுப்பதும் ஏனோ?
உள்ளக்கதவினை மெல்லத் திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேணும்...

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது...
நாளெல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை கூட்டுது...
நீயல்லால் தெய்வம் வேறெது...
நீயெனை சேரும் நாளேது...


-மகேந்திரன்.

.

Sunday, February 7, 2010

அசல் - தல தாங்கல...ராமராஜனுக்கு டவுசர், ராஜ்கீரணுக்கு மடித்து கட்டிய வேட்டி என்பது போல் அஜித்துக்கு கோட்டு சூட்டு கண்ணாடி என்று சென்டிமென்ட் டிரஸ் கோட் ஆக்கி விட்டார்கள். பில்லாவின் வெற்றியால் இதையெல்லாம் போட்டுக்கொண்டு, கையில் ஒரு பெட்டி எடுத்துக்கொண்டு நடக்கிறார், நடக்கிறார், பிரான்ஸ், மும்பை என நடந்துக்கொண்டே இருக்கிறார்.

சரண் படம் என்பதற்கு ஒரே ஒரு விஷயம் தான் படத்தில் தெரிகிறது. சமிரா, பாவனா என இரு ஹீரோயின்கள். அபத்தமாக இருந்தாலும், இரு நாயகி படங்களின் இறுதியில் எப்போதும் எனக்கு பிடித்த நாயகி தியாகம் செய்துவிடுவார். இதிலும் அப்படிதான் நடக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஆச்சரியம். சமிரா, தியாகம் செய்து விட்டார்.

அஜித் அடுத்த கட்டம் என்றார். அல்டிமேட் ஸ்டார் வேண்டாம் என்றார். ஆனால் படம் முழுக்க சம்பந்தம் இல்லாமல், எல்லா கதாபாத்திரங்களும் 'தல தல' என்றே வசனம் பேசுகிறார்கள். ஆனால், குறி வைத்தது போலவே, எல்லா இடங்களிலும் தலையின் வால்கள் கைத்தட்டுகிறார்கள். "டொட்ட டொய்ங்" பாடலுக்கு ஆட்டம் போட்டார்கள். புதியதாக கேட்டவர்கள் சிரித்தார்கள். "தல போல வருமா" பாடல், ஜேம்ஸ் பாண்ட் பாடல் போல இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். அதேப்போல், கண் செட் போட்டு பாடலை எடுத்திருக்கிறார்கள்.

காமெடிக்கு சரணின் ரெகுலர் பட்டாளம் இல்லாமல், யூகிசேது மட்டும். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், தனது அதிமேதாவித்தனத்தை காட்ட தவறவில்லை. பிரபு வரணுமே என்று வருகிறார். 'என்ன கொடுமை சரவணன்' போன்ற புகழ்பெற்ற வசனங்கள் எதுவும் பேசவில்லை. சிவாஜி, பிரபு ரசிகர்கள் தியேட்டரில் படத்திற்கு பேனர்கள் வைத்திருந்தார்கள். தற்போதைய டிரென்ட் படி, டிஜிட்டல் எடிட்டிங்கில், ப்ளெக்ஸ் பேனரில் சிவாஜியை பார்க்க வித்தியாசமாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் நன்றாக படம் காட்டினாலும் (பிரான்சை, குறிப்பாக ஈபில் டவரை மேலிருந்து காட்டுவது, சூப்பர்!), ஏதாச்சும் ட்விஸ்ட் வரும், புதுசா ஏதாச்சும் காட்டுவாங்க'ன்னு பார்த்தா ஒண்ணும் இல்ல. அரத பழைய கதை. கடைசியில் அஜித்தை கட்டி வைத்து அடிக்கிறார்கள். அவரும் கயிறை பிய்த்துக்கொண்டு வந்து அடிக்கிறார். தமிழ்ப்படம் நினைவுக்கு வந்தது. லொக்கேஷனும் அதேப்போல்.

உலகத்திலேயே இணை இயக்கத்திற்கு தியேட்டரில் கைதட்டல் வாங்கிய ஒரே கலைஞர் - அஜித் தான். கதை, திரைக்கதை, வசனத்திற்கு வேறு அஜித்தின் பெயரும் வருகிறது. அஜித்தின் கதை தேர்வு திறனிலேயே, நான் மோசமான அபிப்ராயம் வைத்திருக்கிறேன். 'வில்லனுக்கு' கதை எழுதிய யூகியும் இதன் கதையில் பங்கு பெற்று இருக்கிறார் என்றாலும், எதற்கு வம்பு என பார்க்காமல் இருந்த நான், 'நல்லா இருக்கு' என்று சொன்ன நண்பன் ஒருவனை நம்பி போனேன்.

படம் பார்த்தபிறகு, இன்னொரு நண்பரிடம் கேட்டால், அவரும் படம் நல்லாயிருக்கு என்கிறார். தற்போதைய நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களில் ஏதோ கதை போல் ஒன்றும், கடித்து குதறாமல் வெளியே விட்டால் போதும் என்ற நிலையும் இருந்தால் போதும் என்ற இறுதி கட்டத்திற்கு ரசிகர்கள் வந்து விட்டார்கள் போலும்.

அன்புமணி பேச்சை கேட்காமல், சுருட்டு பிடிக்கும் காட்சி எதையும் நீக்காமல் படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். கேட்டு இருக்கவும் முடியாது! ஏன்னா, சுருட்டு பிடிக்கும் காட்சிகளை நீக்கிவிட்டால் படத்தில் எதுவும் இருக்காது. அந்தளவுக்கு, படம் முழுக்க அஜித் ஊதி தள்ளுகிறார். அதனால் தானோ என்னவோ, தந்தை அஜித் தனது கடைசி காலம் முழுக்க இருமிக்கொண்டே இருக்கிறார். படத்தில் மெசேஜ் இருக்கத்தான் செய்கிறது.

.

Wednesday, February 3, 2010

கடற்புரத்தில்... (புகைப்படப் பதிவு)

கடற்கரையோரம் படகு மட்டுமா நிற்கும்?ஏரோப்பிளேனும் நிறுத்தி வைப்போம்’ல?ஏரோப்பிளோனோட உண்மையான மாடல்.டெரர் லுக்கில் ஒரு தாவரம்.கடலைப் பார்த்துக்கொண்டிருந்த நண்டு, போட்டோ எடுக்கிறேன் என்றதும் என்னை நோக்கி திரும்பியது.கடற்கரையில் வாக்கிங் மட்டும் தான் போகலாமா? சைக்கிளிங், பைக்கிங் போக கூடாதா?கரையோரம் ஒரு இயற்கை பூங்காவனம்.பை பை....

Monday, February 1, 2010

மாயாவதி

பொதுவாகவே வெகுஜனங்கள் பலருக்கு அரசியல்வாதிகளை கண்டால் பிடிக்காது. இதற்கு அவர்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் என பல காரணங்கள் இருக்கலாம். எனக்கு அப்படி எதுவுமில்லாமல், பார்த்தவுடனே பிடிக்காமல் போன அரசியல்வாதி என்றால் அது மாயாவதி தான். உத்திரப்பிரதேசத்தை தாண்டி இவரை பற்றி வரும் செய்திகள் எல்லாமுமே நெகட்டிவ்வாகத்தான் இருக்கும்.இந்த நிலையில் கடந்த தேர்தலின் போது, இவர் பிரதமராக வர வாய்ப்புக்கள் இருப்பதாக வட இந்திய மீடியாக்கள் தொடர்ந்து கூற, தேர்தல் முடிவுகள் அதை புஸ்வாணமாக்கியப்போது, ரொம்ப நிம்மதியாக இருந்தது. அந்தளவுக்கு மாயாவதி எனக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் தெரியவில்லை.

ஆனால், கிழக்குப் பதிப்பகத்தின் மாயாவதி புத்தகத்தை படித்தப்பிறகு இப்படி சொல்லவே எனக்கு பயமாக இருக்கிறது. ஏனெனில், குற்றசாட்டுக்களுக்கு மாயாவதி கொடுக்கும் பதிலடி அப்படி.

---

இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும்போதே, உள்ளுக்குள் குறுகுறுவென இருந்தது. கிழக்கு பதிப்பகத்தில் வரும் வாழ்க்கை வரலாறு புத்தகங்களைப் படித்து முடித்தவுடன், சம்பந்தப்பட்டவருக்கு தொண்டராகிவிடுவோம். கிழக்கின் புத்தகம் என்றில்லாமல், எந்த வாழ்க்கை வரலாறு புத்தகம் என்றாலும், சம்பந்தப்பட்டவர் பற்றி நிறைய பாஸிட்டிவ் தகவல்களும், தேவைப்பட்டால் கொஞ்சம் நெகட்டிவ் தகவல்களும் இருக்கும்.

அப்படி இருக்கும்போது, மாயாவதி பற்றி பாஸிட்டிவ் செய்திகள் என்ற ஆச்சரியமும், அவை என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் அதிகரித்தது. ஏனென்றால், சமீபக்காலங்களில்... ஏன் அவரை எனக்கு தெரிந்ததில் இருந்தே, செய்தித்தாள்களில் படிக்கும் செய்திகள் எல்லாமுமே தப்பாகத்தான் இருக்கும். ஊழல், ஆடம்பரம், தனக்கு தானே விளம்பரம் என எல்லாமுமே. இவரை பற்றி நல்லதாக என்ன படித்திருக்கிறேன் என்று யோசித்தால், ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை.

யார் இவர்? எப்படி இவர் இப்படி முதல்வராக முன்னிலைக்கு வந்தார்? பிரதமராகும் தகுதி இவருக்கு இருக்கிறதா? நல்லவரா, கெட்டவரா?

ஒரு தலைவராக, ஒரு பெண் வருவதே கஷ்டம் எனும்போது, ஒரு தலித் பெண்மணியால் எப்படி முதல்வராக முடிந்தது?

---

உத்திரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் ஏழை விவசாயிக்கு மகளாக பிறந்து, வறுமையில் தவித்து, சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டு, பிறகு கஷ்டப்பட்டு முன்னேறி தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கிறார் மாயாவதி என்றால் அது முற்றிலும் தவறு!

இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் டெல்லியில். இவருடைய தந்தை ஒரு அரசு ஊழியர். ஆணாதிக்க சூழலில் வளர்ந்தாலும், இயல்பிலேயே தைரியத்துடன் வளர்ந்தார். நன்றாக படித்தார். உத்திரப்பிரதேச கிராமங்களில் இருக்கும் சாதி வித்தியாசங்களை கண்டு வருந்தி கோபப்பட்டார். ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் ஆவதென முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆசிரியராகவும் வேலைப் பார்த்துக்கொண்டே.

அம்பேத்கார் சிந்தனைகளில் வயப்பட்டவர், விவாத மேடைகளில் யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி பலருடைய கவனத்தை பெற்றார். பிறகு கன்ஷிராமின் பார்வைப்பட்டு, தைரியமான பேச்சால், தலித் ஊழியர் நலன் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்தார். கன்ஷிராமின் வழிக்காட்டலில் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். கலெக்டர் கனவை கைவிட்டுவிட்டு, கன்ஷிராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியின் உத்திரப்பிரதேசத்திற்கான முகமாக மாறினார்.

அதற்கு பிறகு நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் நின்றவர், மூன்று முறை தோற்று, பிறகு எம்.பி. ஆனார். ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு வங்கி விரிவடைய விரிவடைய, ஒரு கட்டத்தில் அரசியல், கூட்டணி விளையாட்டால் உத்திரப்பிரதேசத்தின் முதல்வரானார். செல்வாக்கு வளர வளர, அதற்கு பிறகு அவரால் தனித்து ஆட்சியை பிடிக்கவும் முடிந்தது. “இந்திய பிரதமராகும் தகுதி எனக்கிருக்கிறது” என தைரியமாக கூச்சப்படாமல் அடிக்கடி சொல்லவும் முடிந்தது.

---

அரசியலில் இவர் வெற்றிப் பெற்றதற்கு முக்கிய காரணங்களாக இவரது தைரியத்தையும் பிடிவாதக்குணத்தையும் சொல்லலாம்.

மாயாவதியின் தந்தை பிரபு தாஸ் தயாள் பெண் குழந்தைகளை வெறுத்தவர். மாயாவதி உள்ளிட்ட தனது பெண் குழந்தைகளை கண்டுக்கொள்ளாமல் ஆண் குழந்தைகளை மட்டும் அக்கறையுடன் வளர்த்தவர். பின்னாட்களில், மாயாவதி முதல்வரானப்பிறகு அவருடைய தந்தை அவருக்கு தெரிந்தவர்கள் சிலருடைய கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு மாயாவதியிடம் சென்றார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மாயாவதி சொன்னது.

”இதையெல்லாம் என்கிட்ட ஏன் சொல்றீங்க? உங்களுக்கு உங்க பசங்க தானே உசத்தி? போய் அவுங்கிட்ட சொல்லுங்க?”

---

கன்ஷிராமை தொடாமல் மாயாவதி பற்றி தெரிந்துக்கொள்ள முடியாது. இந்திய அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர். தொலைநோக்கு பார்வை உடையவர்.

கட்சியை ஆரம்பித்தவர், எந்த பதவியிலும் இருந்ததில்லை. அதிகாரம் தன் கையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. உத்திரப்பிரதேச முதல்வர் நாற்காலியில் மாயாவதியை உட்கார வைத்தவர், இது போல் ஒவ்வொரு மாநிலத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் திட்டங்கள் தீட்டிக்கொண்டே இருந்தார். இன்று தமிழகத்திலும் கட்சியை ஆரம்பித்து, மாநில மாநாடு நடத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்கு எல்லாம் மூலக்காரணம் கன்ஷிராம்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். மாயாவதியின் வெற்றிக்கு பின்னால் இருந்தது கன்ஷிராம் என்றால் யாராலும் மறுக்க முடியாது.

---

தலித், தலித் முன்னேற்றம் என்று பேசி பேசி ஆட்சியை பிடித்தவர், அவர்களுக்காக அப்படி என்ன செய்தார் என்றால், பெரிதாக எதுவும் இல்லை. அரசாங்க வேலைகளில் முன்னுரிமை, தலித்களின் உரிமை காக்கும் சட்டம் தவிர புரட்சிக்கர திட்டங்கள் ஏதும் இல்லை. தலித்களுக்கு எதிரான கொடுமைகளும் குறைந்திருக்கிறதா என்று தெரியவில்லை. மற்றபடி ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தனக்குத்தானே வைத்துக்கொண்ட சிலைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் இவையனைத்திற்கும் குறைவேயில்லை. இவை பற்றி எழும்பும் கேள்விகளுக்கு இவர் சொல்லும் ஒரே பதில் - “ஒரு தலித் பெண் நன்றாக வாழ்கிறாளே? என்ற பொறாமையும் எரிச்சலும் தான் இந்த குற்றசாட்டுக்களுக்கு காரணம்.”

இதையெல்லாம் பார்க்கும்போது, இவர் நம்மூர் முன்னணி அரசியல்வாதிகளின் கலவையாகத்தான் தெரிகிறார்.

---

நூலாசிரியர் சி.என்.எஸ்., மாயாவதியின் அரசியல் வளர்ச்சியை சொல்லுவதின் மூலம், கன்ஷிராம் பற்றியும், அவருடைய சிந்தனைகள் பற்றியும், பகுஜன் சமாஜ் கட்சியின் பிறப்பை பற்றியும், உத்திரப்பிரதேச அரசியல் நிலையை பற்றியும் படிப்பவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா வந்தது போல், இந்தியாவின் முதல் தலித் பிரதமராக வரும் வாய்ப்பு மாயாவதிக்கு அதிகம் இருப்பதாக கூறுகிறார். தலித்-பிராமணர் தேர்தல் கூட்டணி போன்ற அவருடைய அரசியல் தந்திரமும், அவருடைய நடுத்தர வயதும் அதற்கு கைக்கொடுக்கும் என்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கோ, பகுஜன் சமாஜ் கட்சியின் பிரமாதமான நிதி நிலைமை பற்றிய கேள்விக்களுக்கோ மாயாவதியைப் போல் ஆசிரியரிடமும் பதிலில்லை.

புத்தகம் படித்து முடிந்தபிறகாவது, மாயாவதி மேலான எரிச்சல் குறைந்திருக்கிறதா என்றால் இல்லை. உங்களுக்கும் இம்மாதிரியான எரிச்சல் இருந்தால், நீங்களும் அதன் காரணம் தேடி இப்புத்தகம் படிக்கலாம். மற்றபடி, தமிழகத்தில் உதயமாகி வரும் பகுஜன் சமாஜ் தொண்டர்களும், திடீர் தலைவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

மாயாவதி
சி.என்.எஸ்.
கிழக்கு பதிப்பகம்
166 பக்கங்கள்
ரூ. 80


.