Sunday, February 7, 2010

அசல் - தல தாங்கல...



ராமராஜனுக்கு டவுசர், ராஜ்கீரணுக்கு மடித்து கட்டிய வேட்டி என்பது போல் அஜித்துக்கு கோட்டு சூட்டு கண்ணாடி என்று சென்டிமென்ட் டிரஸ் கோட் ஆக்கி விட்டார்கள். பில்லாவின் வெற்றியால் இதையெல்லாம் போட்டுக்கொண்டு, கையில் ஒரு பெட்டி எடுத்துக்கொண்டு நடக்கிறார், நடக்கிறார், பிரான்ஸ், மும்பை என நடந்துக்கொண்டே இருக்கிறார்.

சரண் படம் என்பதற்கு ஒரே ஒரு விஷயம் தான் படத்தில் தெரிகிறது. சமிரா, பாவனா என இரு ஹீரோயின்கள். அபத்தமாக இருந்தாலும், இரு நாயகி படங்களின் இறுதியில் எப்போதும் எனக்கு பிடித்த நாயகி தியாகம் செய்துவிடுவார். இதிலும் அப்படிதான் நடக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஆச்சரியம். சமிரா, தியாகம் செய்து விட்டார்.

அஜித் அடுத்த கட்டம் என்றார். அல்டிமேட் ஸ்டார் வேண்டாம் என்றார். ஆனால் படம் முழுக்க சம்பந்தம் இல்லாமல், எல்லா கதாபாத்திரங்களும் 'தல தல' என்றே வசனம் பேசுகிறார்கள். ஆனால், குறி வைத்தது போலவே, எல்லா இடங்களிலும் தலையின் வால்கள் கைத்தட்டுகிறார்கள். "டொட்ட டொய்ங்" பாடலுக்கு ஆட்டம் போட்டார்கள். புதியதாக கேட்டவர்கள் சிரித்தார்கள். "தல போல வருமா" பாடல், ஜேம்ஸ் பாண்ட் பாடல் போல இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். அதேப்போல், கண் செட் போட்டு பாடலை எடுத்திருக்கிறார்கள்.

காமெடிக்கு சரணின் ரெகுலர் பட்டாளம் இல்லாமல், யூகிசேது மட்டும். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், தனது அதிமேதாவித்தனத்தை காட்ட தவறவில்லை. பிரபு வரணுமே என்று வருகிறார். 'என்ன கொடுமை சரவணன்' போன்ற புகழ்பெற்ற வசனங்கள் எதுவும் பேசவில்லை. சிவாஜி, பிரபு ரசிகர்கள் தியேட்டரில் படத்திற்கு பேனர்கள் வைத்திருந்தார்கள். தற்போதைய டிரென்ட் படி, டிஜிட்டல் எடிட்டிங்கில், ப்ளெக்ஸ் பேனரில் சிவாஜியை பார்க்க வித்தியாசமாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் நன்றாக படம் காட்டினாலும் (பிரான்சை, குறிப்பாக ஈபில் டவரை மேலிருந்து காட்டுவது, சூப்பர்!), ஏதாச்சும் ட்விஸ்ட் வரும், புதுசா ஏதாச்சும் காட்டுவாங்க'ன்னு பார்த்தா ஒண்ணும் இல்ல. அரத பழைய கதை. கடைசியில் அஜித்தை கட்டி வைத்து அடிக்கிறார்கள். அவரும் கயிறை பிய்த்துக்கொண்டு வந்து அடிக்கிறார். தமிழ்ப்படம் நினைவுக்கு வந்தது. லொக்கேஷனும் அதேப்போல்.

உலகத்திலேயே இணை இயக்கத்திற்கு தியேட்டரில் கைதட்டல் வாங்கிய ஒரே கலைஞர் - அஜித் தான். கதை, திரைக்கதை, வசனத்திற்கு வேறு அஜித்தின் பெயரும் வருகிறது. அஜித்தின் கதை தேர்வு திறனிலேயே, நான் மோசமான அபிப்ராயம் வைத்திருக்கிறேன். 'வில்லனுக்கு' கதை எழுதிய யூகியும் இதன் கதையில் பங்கு பெற்று இருக்கிறார் என்றாலும், எதற்கு வம்பு என பார்க்காமல் இருந்த நான், 'நல்லா இருக்கு' என்று சொன்ன நண்பன் ஒருவனை நம்பி போனேன்.

படம் பார்த்தபிறகு, இன்னொரு நண்பரிடம் கேட்டால், அவரும் படம் நல்லாயிருக்கு என்கிறார். தற்போதைய நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களில் ஏதோ கதை போல் ஒன்றும், கடித்து குதறாமல் வெளியே விட்டால் போதும் என்ற நிலையும் இருந்தால் போதும் என்ற இறுதி கட்டத்திற்கு ரசிகர்கள் வந்து விட்டார்கள் போலும்.

அன்புமணி பேச்சை கேட்காமல், சுருட்டு பிடிக்கும் காட்சி எதையும் நீக்காமல் படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். கேட்டு இருக்கவும் முடியாது! ஏன்னா, சுருட்டு பிடிக்கும் காட்சிகளை நீக்கிவிட்டால் படத்தில் எதுவும் இருக்காது. அந்தளவுக்கு, படம் முழுக்க அஜித் ஊதி தள்ளுகிறார். அதனால் தானோ என்னவோ, தந்தை அஜித் தனது கடைசி காலம் முழுக்க இருமிக்கொண்டே இருக்கிறார். படத்தில் மெசேஜ் இருக்கத்தான் செய்கிறது.

.

17 comments:

Anonymous said...

//படம் முழுக்க அஜித் ஊதி தள்ளுகிறார். அதனால் தானோ என்னவோ, தந்தை அஜித் தனது கடைசி காலம் முழுக்க இருமிக்கொண்டே இருக்கிறார். படத்தில் மெசேஜ் இருக்கத்தான் செய்கிறது.//

இது அசல் டைமிங்! :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

தல!!! பாக்கலாமா? வேண்டாமா? டிக்கெட் ரெண்டு தினார்

Arun said...

நல்ல சொன்னிங்க சரவணகுமரன். தெரியதனமா போய்ட்டு...நான் பட்ட பாடு இருக்கே...முடிஞ்சா இத நாளைக்கு பாருங்க arunwritez.blogspot.com

Unknown said...

ஒரு விஜய் ரசிகனின் விமர்சனம் போல இருக்கிறதே??

சத்தியமாக நான் அஜித் ரசிகன் இல்லை.. :)))

ஜெட்லி... said...

//உலகத்திலேயே இணை இயக்கத்திற்கு தியேட்டரில் கைதட்டல் வாங்கிய ஒரே கலைஞர் - அஜித் தான்//

:))

Anonymous said...

thala thala thaan excellent movie

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//படம் முழுக்க அஜித் ஊதி தள்ளுகிறார். அதனால் தானோ என்னவோ, தந்தை அஜித் தனது கடைசி காலம் முழுக்க இருமிக்கொண்டே இருக்கிறார். படத்தில் மெசேஜ் இருக்கத்தான் செய்கிறது.//


அது..,

Rettaival's Blog said...

படம் பார்த்தபிறகு, இன்னொரு தற்போதைய நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களில் ஏதோ கதை போல் ஒன்றும், கடித்து குதறாமல் வெளியே விட்டால் போதும் என்ற நிலையும் இருந்தால் போதும் என்ற இறுதி கட்டத்திற்கு ரசிகர்கள் வந்து விட்டார்கள் போலும்/////

உண்மைதான் நண்பரே! அதையும் மீறி நல்ல கதைகள் அமையவிடாமல் பார்த்துக் கொள்வதும் அவர்களே... இந்தப் படத்தில் பட்டத்தையெல்லாம் அஜித் துறந்து விட்டாராமே...அப்படியா!

Unknown said...

அப்போ படம் ஹிட்டு தான

சரவணகுமரன் said...

அப்படியெல்லாம் பட்டுன்னு சொல்ல முடியாது, பாலகுமாரன். சொல்றது சொல்லியாச்சு. முடிவு பண்ண வேண்டியது நீங்க. :-)

சரவணகுமரன் said...

ஓ! பார்த்தாச்சா? அருண்...

சரவணகுமரன் said...

முகிலன்,

என்னது? விஜய் ரசிகனா? வேட்டைக்காரன் பதிவு பாருங்க...

ஆனா ஒண்ணு, அசல் வேட்டைக்காரனை விட பெட்டரு...

சரவணகுமரன் said...

என்ன ஜெட்லி, வலையுலக சரித்திரத்தில முத ஷோவ முதல் முறையா விட்டுடியே?

சரவணகுமரன் said...

நன்றி சுரேஷ்

சரவணகுமரன் said...

ஆமாம் ரெட்டைவால்

சரவணகுமரன் said...

ஹிட்டா இல்லையா தெரியாது. ஆனா, நல்ல வசூல்ன்னு சொல்றாங்க, பேநா மூடி.

Naresh Kumar said...

படம் பாத்தாச்சா!!!

என்னால முடியலை!!! ஏகனே தேவலாம் போல!!!