Saturday, February 13, 2010

காதலைக் காதலிக்கிறேன் - பிரகாஷ்ராஜ்



”பூப்பதற்கான விநாடியை
எதிர்நோக்குகிறது ஒரு மொட்டு.
காத்திருக்கத் தெரியாத வண்டு
மொட்டறுத்து உள்புக முயற்சிக்கிறது
மொட்டவிழ்க்கவே தெரியாத வண்டுக்கு
தேன் உண்ணவா தெரியப்போகிறது?”


’கதா சப்த சதி’ங்கற தெலுங்குக் காதல் கவிதை தொகுப்பில், காதலையும் காமத்தையும் அவசரமா அடைஞ்சுடணும்னு நினைக்கிற தன் காதலனுக்கு அவனைக் காதலிக்கிற பொண்ணு சொல்றது இது.

கரெக்ட்! ஏன்னா, காதல் என்பது பெறுவது இல்லை, தருவது இல்லை. அடைவதும் இல்லை. அது... நிகழ்வது!

’வாழ்க்கை ரொம்ப போரடிக்குங்க!’ன்னு சொல்ற யாருமே, காதலிக்க தெரியாதவங்கதான். ஏன்னா, காதலிக்க தெரிஞ்சவுங்களுக்கு வாழ்க்கை போரடிக்கிறதில்லை. அதுக்கு நானும் ஒரு சாட்சி.

காதல் புனிதமானது’ன்னு சொல்றவனுக்கு அது புனிதம். காதல் அற்பமானது’ன்னு சொல்றவனுக்கு அது அற்பம். புன்னகையோ, கண்ணீரோ.. அதை நீங்க சந்திச்சே ஆகணும். நீங்க உங்க சொல்லாலும், செயலாலும் அழகாகணுமா? காதலைத் தேடுங்க. ஏன்னா, தேடல்தான் காதல்!

ஆனா, நிறைய காதல்கள், கல்யாணத்தன்னிக்கே செத்துப்போகுது. காரணம், காதலன் புருஷனாகிடுறான். காதலி பொண்டாட்டி ஆகிடுறா. கல்யாணம் பண்ணிக்கிட்டா காதலிக்கக் கூடாதுன்னு அவங்களாவே முடிவு பண்ணிடுறாங்க. அதான் வாழ்க்கை சீக்கிரம் போரடிக்க ஆரம்பிச்சுடுது.

நாட்டுப்புற கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. ஒரு கிழவனும் கிழவியும் தள்ளாடுற வயசுல இருக்காங்க. சாகப்போற நேரத்துக்கு முன்னால, கிழவன் தன்னோட கிழவியிடம் ஒரு வேண்டுகோள் வைப்பான்.

அந்த இருட்டுக்குடிசையில் ஒரேயொரு விளக்கை மட்டும் ஏத்த சொல்றான். எரிகிற தீபத்துக்கு பக்கத்தில் அவளோட முகத்தை வைக்க சொல்றான். ’கிழவனுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சு’ன்னு பிள்ளைக சொன்னாலும், கிழவன் சொன்னபடி செய்யுறா கிழவி.

வெளிச்சத்தில் அவளோட முகத்தை பார்த்ததும், கிழவன் முகத்தில் ஒரு வெளிச்சம் வருது.

”இவளும் நானும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணோம். வீடு, உறவு, ஊருன்னு எல்லோரோட எதிர்ப்பையும் மீறி கல்யாணம் பண்ணினோம். நாப்பது வருஷ வாழ்க்கை. இதோ இப்போ சாகப்போறேன்.

இத்தனை வருஷ வாழ்க்கையில், என்னை காதலிச்ச காரணத்தால, தன்னோட வருத்தங்களைக்கூட இவ எங்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம். நான் இவக்கூட எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்தேன்னு என் மனசாட்சிக்கு நல்லா தெரியும். அவ என்னோட எப்படி வாழ்ந்தாள்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.

இருட்டுக்கு நடுவில் எரியுற விளக்கு பிரகாசமா இருக்கு. விளக்கு பக்கத்தில் என் காதலியின் முகம் அதைவிடப் பிரகாசமா இருக்கு. என்னோட அவளும் சந்தோஷமாதான் வாழ்ந்திருக்கா. இந்த சந்தோஷத்தோட நான் இனிமேல் செத்துப்போவேன்”ன்னு கிழவன் சொல்றதா கதை முடியும்.

அப்படி ஒரு கிழவனா வாழக்கிடைக்கிறது ஆசீர்வாதம்!

”நீங்க எத்தனையோ பேரைக் காதலிச்சதா சொல்றீங்க. அதெல்லாம் உண்மையான காதலா? புனிதமான காதல்னா அது நிறைய பெண்கள் மேலே எப்படி வரும்?”னு என்கிட்ட கேட்டிருக்காங்க.

அவங்க, நான் பெண்களை காதலிக்கிறதா நினைச்சுட்டு இருக்காங்க. நான் அவங்களுக்குச் சொல்ல விரும்பறது இதுதான்.

நான் காதலைக் காதலிக்கிறேன்!

---

பிரகாஷ்ராஜ்
சொல்லாததும் உண்மை
விகடன் பிரசுரம்

.

3 comments:

மதுரை சரவணன் said...

kaathalai kathalippathal kaathal thorpathu illai.

சரவணகுமரன் said...

சரிதான் மதுரை சரவணன்.

சரவணகுமரன் said...

நன்றி தியா