Monday, February 1, 2010

மாயாவதி

பொதுவாகவே வெகுஜனங்கள் பலருக்கு அரசியல்வாதிகளை கண்டால் பிடிக்காது. இதற்கு அவர்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் என பல காரணங்கள் இருக்கலாம். எனக்கு அப்படி எதுவுமில்லாமல், பார்த்தவுடனே பிடிக்காமல் போன அரசியல்வாதி என்றால் அது மாயாவதி தான். உத்திரப்பிரதேசத்தை தாண்டி இவரை பற்றி வரும் செய்திகள் எல்லாமுமே நெகட்டிவ்வாகத்தான் இருக்கும்.இந்த நிலையில் கடந்த தேர்தலின் போது, இவர் பிரதமராக வர வாய்ப்புக்கள் இருப்பதாக வட இந்திய மீடியாக்கள் தொடர்ந்து கூற, தேர்தல் முடிவுகள் அதை புஸ்வாணமாக்கியப்போது, ரொம்ப நிம்மதியாக இருந்தது. அந்தளவுக்கு மாயாவதி எனக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் தெரியவில்லை.

ஆனால், கிழக்குப் பதிப்பகத்தின் மாயாவதி புத்தகத்தை படித்தப்பிறகு இப்படி சொல்லவே எனக்கு பயமாக இருக்கிறது. ஏனெனில், குற்றசாட்டுக்களுக்கு மாயாவதி கொடுக்கும் பதிலடி அப்படி.

---

இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும்போதே, உள்ளுக்குள் குறுகுறுவென இருந்தது. கிழக்கு பதிப்பகத்தில் வரும் வாழ்க்கை வரலாறு புத்தகங்களைப் படித்து முடித்தவுடன், சம்பந்தப்பட்டவருக்கு தொண்டராகிவிடுவோம். கிழக்கின் புத்தகம் என்றில்லாமல், எந்த வாழ்க்கை வரலாறு புத்தகம் என்றாலும், சம்பந்தப்பட்டவர் பற்றி நிறைய பாஸிட்டிவ் தகவல்களும், தேவைப்பட்டால் கொஞ்சம் நெகட்டிவ் தகவல்களும் இருக்கும்.

அப்படி இருக்கும்போது, மாயாவதி பற்றி பாஸிட்டிவ் செய்திகள் என்ற ஆச்சரியமும், அவை என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் அதிகரித்தது. ஏனென்றால், சமீபக்காலங்களில்... ஏன் அவரை எனக்கு தெரிந்ததில் இருந்தே, செய்தித்தாள்களில் படிக்கும் செய்திகள் எல்லாமுமே தப்பாகத்தான் இருக்கும். ஊழல், ஆடம்பரம், தனக்கு தானே விளம்பரம் என எல்லாமுமே. இவரை பற்றி நல்லதாக என்ன படித்திருக்கிறேன் என்று யோசித்தால், ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை.

யார் இவர்? எப்படி இவர் இப்படி முதல்வராக முன்னிலைக்கு வந்தார்? பிரதமராகும் தகுதி இவருக்கு இருக்கிறதா? நல்லவரா, கெட்டவரா?

ஒரு தலைவராக, ஒரு பெண் வருவதே கஷ்டம் எனும்போது, ஒரு தலித் பெண்மணியால் எப்படி முதல்வராக முடிந்தது?

---

உத்திரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் ஏழை விவசாயிக்கு மகளாக பிறந்து, வறுமையில் தவித்து, சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டு, பிறகு கஷ்டப்பட்டு முன்னேறி தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கிறார் மாயாவதி என்றால் அது முற்றிலும் தவறு!

இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் டெல்லியில். இவருடைய தந்தை ஒரு அரசு ஊழியர். ஆணாதிக்க சூழலில் வளர்ந்தாலும், இயல்பிலேயே தைரியத்துடன் வளர்ந்தார். நன்றாக படித்தார். உத்திரப்பிரதேச கிராமங்களில் இருக்கும் சாதி வித்தியாசங்களை கண்டு வருந்தி கோபப்பட்டார். ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் ஆவதென முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆசிரியராகவும் வேலைப் பார்த்துக்கொண்டே.

அம்பேத்கார் சிந்தனைகளில் வயப்பட்டவர், விவாத மேடைகளில் யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி பலருடைய கவனத்தை பெற்றார். பிறகு கன்ஷிராமின் பார்வைப்பட்டு, தைரியமான பேச்சால், தலித் ஊழியர் நலன் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்தார். கன்ஷிராமின் வழிக்காட்டலில் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். கலெக்டர் கனவை கைவிட்டுவிட்டு, கன்ஷிராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியின் உத்திரப்பிரதேசத்திற்கான முகமாக மாறினார்.

அதற்கு பிறகு நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் நின்றவர், மூன்று முறை தோற்று, பிறகு எம்.பி. ஆனார். ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு வங்கி விரிவடைய விரிவடைய, ஒரு கட்டத்தில் அரசியல், கூட்டணி விளையாட்டால் உத்திரப்பிரதேசத்தின் முதல்வரானார். செல்வாக்கு வளர வளர, அதற்கு பிறகு அவரால் தனித்து ஆட்சியை பிடிக்கவும் முடிந்தது. “இந்திய பிரதமராகும் தகுதி எனக்கிருக்கிறது” என தைரியமாக கூச்சப்படாமல் அடிக்கடி சொல்லவும் முடிந்தது.

---

அரசியலில் இவர் வெற்றிப் பெற்றதற்கு முக்கிய காரணங்களாக இவரது தைரியத்தையும் பிடிவாதக்குணத்தையும் சொல்லலாம்.

மாயாவதியின் தந்தை பிரபு தாஸ் தயாள் பெண் குழந்தைகளை வெறுத்தவர். மாயாவதி உள்ளிட்ட தனது பெண் குழந்தைகளை கண்டுக்கொள்ளாமல் ஆண் குழந்தைகளை மட்டும் அக்கறையுடன் வளர்த்தவர். பின்னாட்களில், மாயாவதி முதல்வரானப்பிறகு அவருடைய தந்தை அவருக்கு தெரிந்தவர்கள் சிலருடைய கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு மாயாவதியிடம் சென்றார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மாயாவதி சொன்னது.

”இதையெல்லாம் என்கிட்ட ஏன் சொல்றீங்க? உங்களுக்கு உங்க பசங்க தானே உசத்தி? போய் அவுங்கிட்ட சொல்லுங்க?”

---

கன்ஷிராமை தொடாமல் மாயாவதி பற்றி தெரிந்துக்கொள்ள முடியாது. இந்திய அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர். தொலைநோக்கு பார்வை உடையவர்.

கட்சியை ஆரம்பித்தவர், எந்த பதவியிலும் இருந்ததில்லை. அதிகாரம் தன் கையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. உத்திரப்பிரதேச முதல்வர் நாற்காலியில் மாயாவதியை உட்கார வைத்தவர், இது போல் ஒவ்வொரு மாநிலத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் திட்டங்கள் தீட்டிக்கொண்டே இருந்தார். இன்று தமிழகத்திலும் கட்சியை ஆரம்பித்து, மாநில மாநாடு நடத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்கு எல்லாம் மூலக்காரணம் கன்ஷிராம்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். மாயாவதியின் வெற்றிக்கு பின்னால் இருந்தது கன்ஷிராம் என்றால் யாராலும் மறுக்க முடியாது.

---

தலித், தலித் முன்னேற்றம் என்று பேசி பேசி ஆட்சியை பிடித்தவர், அவர்களுக்காக அப்படி என்ன செய்தார் என்றால், பெரிதாக எதுவும் இல்லை. அரசாங்க வேலைகளில் முன்னுரிமை, தலித்களின் உரிமை காக்கும் சட்டம் தவிர புரட்சிக்கர திட்டங்கள் ஏதும் இல்லை. தலித்களுக்கு எதிரான கொடுமைகளும் குறைந்திருக்கிறதா என்று தெரியவில்லை. மற்றபடி ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தனக்குத்தானே வைத்துக்கொண்ட சிலைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் இவையனைத்திற்கும் குறைவேயில்லை. இவை பற்றி எழும்பும் கேள்விகளுக்கு இவர் சொல்லும் ஒரே பதில் - “ஒரு தலித் பெண் நன்றாக வாழ்கிறாளே? என்ற பொறாமையும் எரிச்சலும் தான் இந்த குற்றசாட்டுக்களுக்கு காரணம்.”

இதையெல்லாம் பார்க்கும்போது, இவர் நம்மூர் முன்னணி அரசியல்வாதிகளின் கலவையாகத்தான் தெரிகிறார்.

---

நூலாசிரியர் சி.என்.எஸ்., மாயாவதியின் அரசியல் வளர்ச்சியை சொல்லுவதின் மூலம், கன்ஷிராம் பற்றியும், அவருடைய சிந்தனைகள் பற்றியும், பகுஜன் சமாஜ் கட்சியின் பிறப்பை பற்றியும், உத்திரப்பிரதேச அரசியல் நிலையை பற்றியும் படிப்பவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா வந்தது போல், இந்தியாவின் முதல் தலித் பிரதமராக வரும் வாய்ப்பு மாயாவதிக்கு அதிகம் இருப்பதாக கூறுகிறார். தலித்-பிராமணர் தேர்தல் கூட்டணி போன்ற அவருடைய அரசியல் தந்திரமும், அவருடைய நடுத்தர வயதும் அதற்கு கைக்கொடுக்கும் என்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கோ, பகுஜன் சமாஜ் கட்சியின் பிரமாதமான நிதி நிலைமை பற்றிய கேள்விக்களுக்கோ மாயாவதியைப் போல் ஆசிரியரிடமும் பதிலில்லை.

புத்தகம் படித்து முடிந்தபிறகாவது, மாயாவதி மேலான எரிச்சல் குறைந்திருக்கிறதா என்றால் இல்லை. உங்களுக்கும் இம்மாதிரியான எரிச்சல் இருந்தால், நீங்களும் அதன் காரணம் தேடி இப்புத்தகம் படிக்கலாம். மற்றபடி, தமிழகத்தில் உதயமாகி வரும் பகுஜன் சமாஜ் தொண்டர்களும், திடீர் தலைவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

மாயாவதி
சி.என்.எஸ்.
கிழக்கு பதிப்பகம்
166 பக்கங்கள்
ரூ. 80


.

3 comments:

Anonymous said...

நவில்
//ஒரு தலைவராக, ஒரு பெண் வருவதே கஷ்டம் எனும்போது, ஒரு தலித் பெண்மணியால் எப்படி முதல்வராக முடிந்தது?//
இதுகூட ஒரு காரனமாக இருக்களாம் அவரைப்பற்றிய நெகட்டீவ் செய்திகளுக்கு. இந்தப்ப்திவை படித்தவுடன் என்னுடன் பணிபுரியும் ஒரு உத்திரப்பிரதேச நன்பரிடம்(காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்) நான் கேட்டு தெரிந்து கெண்டது முற்றிலும் மாறுபட்ட தகவளே. லஞ்சம், ரவுடிசம் போண்ற அடாவடிச்செயல்களை கட்டுக்குள் வைத்துள்ளது போண்ற பாசிட்டீவ் செய்திகளே. ஆனாலும் காரணமே இல்லாமள் சிலரை சிலருக்கு பிடிக்காது அது போலத்தான் இதுவும்

சரவணகுமரன் said...

நன்றி நவில்

Subu said...

இந்த சந்தடியில் மாயா சில அதிகாரிகளையும், சில கட்சி முக்கியங்களையும் பதவி நீக்கம் செய்துள்ளார். மாயா தனக்கு கீழே இருக்கும் பிராமண அதிகாரிகளை உயர் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு , தன் ஜாதிக்காரர்களையே முக்கிய அரசுப்பணிகளில் அமர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது

மற்றவை
http://manakkan.blogspot.com/2010/03/blog-post_18.html