Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Monday, October 2, 2017

நீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா?

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



உலகமெங்கும் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம், அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் முதல் திங்கள் அன்று கொண்டாடப்படும் காரணம் என்ன? அமெரிக்காவுக்குச் சைனீஸ் நூடுல்ஸும் டொமட்டோ சாஸும் பிடிக்கும் அளவுக்கு, சோஷலிசமும் போராட்டங்களும் பிடிப்பதில்லை. மே 1 முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து நடத்தப்பட்ட சிகாகோ தொழிலாளர் போராட்டத்தை உலகமே வருடம் தோறும் மே ஒன்றாம் தேதி அன்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அமெரிக்காவில் மட்டும் தொழிலாளர் தினமான செப்டம்பர் முதல் திங்களில் "சம்மர் முடியுது, ஸ்கூல் தொறக்குது, வருடத்தின் கடைசி ட்ரிப்" என்று ப்ளான் செய்து சுற்றுலா சொகுசில் இருப்பார்கள் மக்கள்.

சரி, அது என்ன சிகாகோ போராட்டம், எட்டு மணி நேர வேலை? 1870களில் உலகமெங்கும் தொழிற்சாலைகள் பெருகிய காலக்கட்டத்தில், சிகாகோவிலும் அந்த வளர்ச்சி நன்கு காணப்பட்டது. தொழிலாளர்கள் சராசரியாக வாரத்திற்கு ஆறு நாட்கள் எனச் சுமார் அறுபது மணி நேரங்கள் மேலே உழைத்தார்கள். நூறு மணி நேரங்கள் உழைக்க வைக்கப்பட்டவர்களும் இருந்தனர். அவர்களது பணிநிலையைச் சீராக்க, தினசரி எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கை, தொழிலாளர்களால் அதிகார வர்க்கத்திடம் வைக்கப்பட்டது. அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம், 1886 மே ஒன்றில் இருந்து தினசரி வேலை நேரம் 8 மணி நேரமாகத் தான் இருக்க வேண்டும் என்று தீர்மானத்தை முன்வைத்து, அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்கான போராட்டங்கள், பேரணி பல இடங்களில் நடந்தன. சிகாகோவில் ஹேமார்க்கெட்டில் என்னும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த காவல்துறை, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயல, அந்தப் போராட்டக்களத்தில் தொழிலாளர் உரிமைக்கான முதல் குண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஏழு போலீஸார் உள்படச் சுமார் பதினைந்து பேர் பலியானார்கள். அறுபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தன. 1940 இல் அமெரிக்கக் காங்கிரஸ் 40 மணி நேர வார வேலைக்கான சட்டம் இயற்றியது.

ஆனால், இந்த உலகில் தொழிலாளர்கள் எல்லாம் இன்னமுமா எட்டு நேரம் மட்டும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? எனக்கு நன்கு தெரிந்த ஐடி துறையை எடுத்துக் கொண்டாலே, என்னால் தயக்கமின்றிக் கூற முடியும் - இல்லையென்று.

கம்பெனியின் பாலிசி, அப்பாயிண்மெண்ட் லெட்டர் எனப் பயன்பாட்டில் இல்லாதவற்றைக் கூறும் பேப்பரில் மட்டும் தான், எட்டு மணி நேர வேலை இருக்கும். அதற்கு முரணாக, அன்றாடப் பயன்பாட்டு நெறிமுறைகள் இருக்கும் பிற இடங்களில் எட்டு மணி நேர வேலைக்கான வாய்ப்பே இருக்காது. ப்ரொடக்ஷன் இஷ்யூ (Production Issue) என்றால் எந்நேரம் என்றாலும் பார்க்க வேண்டும், ப்ரொடக்ஷன் இன்ஸ்டாலை (Production install) நைட் தான் செய்ய வேண்டும், டிசாஸ்டர் ரிக்கவரி டெஸ்டிங் (Disaster Recovery Testing) வாரயிறுதியில் செய்ய வேண்டும், ஸ்ப்ரிண்டில் (Sprint) கம்மிட் செய்தவை, எந்த நிலையிலும் கண்டிப்பாக ஸ்ப்ரிண்ட் முடிவிற்குள் முடிக்கப்பட வேண்டும். இதற்கு ஈடுகட்ட தனியாக விடுமுறை ஏதும் இல்லை. பிறகு, எட்டு மணி நேர வேலை? அமெரிக்காவில் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதில் காரணம் இருக்கிறதல்லவா!!

கணினி முன் உட்கார்ந்துப் பார்க்கும் வேலைகளில், பெரிய உடல் உழைப்பு இல்லையென்பதால், இப்படி நேரம் கடந்த வேலையை, ஒரு குறையாக யாரும் பெரிதாகச் சொல்வதில்லை. ஆனால், இப்படி வேலை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை, சம்பந்தப்பட்டவர்களே கவனிப்பதில்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

இன்னொன்று, ஃபேக்டரி கதவை மூடிவிட்டு உள்ளூக்குள் கிடந்து வேலைப் பார்க்கும் சூழல் இதில் இல்லை. கையில் ஒரு லேப்டாப்பைக் கொடுத்து, எங்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்பதால், ஆர்வக் கோளாறு காரணமாகவும், பெயருக்கும், பணியிடத்து முன்னேற்றங்களுக்காகவும் பலரும் தாமே பலருக்குத் தவறான முன்னுதாரணமாக இந்த விஷயத்தில் அமைந்து விடுகிறார்கள்.

இது போன்ற விஷயங்களில் சில பெண்கள் தான் கட்டுப்பாட்டுடன் 8 மணி நேர வேலையுடன் ஒருதினத்தை நிறுத்திக்கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் குடும்பச் சூழல், சார்புப் பொருளாதார நிலைமை போன்றவை காரணமாக இருக்கலாம். பெரும்பாலான ஆண்களை முழு நேரமும் அலுவலக வேலைக்கு நேர்ந்துவிட்டதால், அதிலேயே கதியாகக் கிடக்கிறார்கள். தனிப்பட்ட வேறு துறைச் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டால், இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துக்கொள்ளலாம்..

எட்டு மணி நேரத்தை அதிகாரவர்க்கத்திடம் பேசுவதை விட்டு, தனி ஒருவனாக ஒவ்வொரு தொழிலாளியும் தன்னுள் இருந்து சிந்திக்கும் காலக்கட்டம் இது.

.

தவத்தில் எழுந்த தேவாலயம் – Grotto of redemption

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



ஜெர்மனியில் 1872 ஆம் ஆண்டுப் பிறந்த பால் டோபர்ஸ்டேன் (Paul Dobberstein) தனது இருபதாவது வயதில் கல்லூரி கல்விக்காக அமெரிக்கா வந்தார். மில்வாக்கியில் செயிண்ட் பிரான்சிஸ் தே செல்ஸ் (Saint Francis de Sales) கல்லூரியில் மதகுருக்களுக்காகப் படிப்பைப் படித்தார். படித்து முடித்துத் தனது பொறுப்பை ஏற்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு ஜன்னி காய்ச்சலில் படுத்தார். அச்சமயம் கன்னிமாதாவிடம், தான் உயிர் பிழைத்து வந்தால், அவருக்குத் தேவாலயம் கட்டுவதாக வேண்டினார். அவரது வேண்டுதல் பலித்தது. மீட்சிக்கான மண்டபத்தை (Grotto of Redemption) எழுப்புவதற்கான எண்ணம் அப்போது  பிறந்தது.

படிக்கும் காலத்திலேயே, மாதாவிற்கு கிரட்டோ என்றழைக்கப்படும் வழிப்பாட்டு குகையைக் கல்லூரியில் அமைத்திருந்தார் பாதிரியார் பால். வழிப்பாட்டுக் குகைகள், ஐரோப்பியாவில் உருவான கட்டிட வடிவங்கள். அதை அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தியர் பால். அன்று அவருடன் படித்தவர்களில் பலர், அவர் எழுப்பிய அந்தச் சிறு வழிப்பாட்டு குகையால் ஈர்க்கப்பட்டு, வேறு பல இடங்களில் அது போன்று வழிப்பாட்டுக் குகைகளைக் கட்டினார்கள். அவ்வகையில் அமெரிக்காவில் இதற்கு முன்னோடி என்று பாதிரியார் பால் டோபர்ஸ்டேனைக் கூறலாம்.

படிப்பிற்குப் பிறகு, அவருக்கான பாதிரியார் பொறுப்பு ஐயோவா (Iowa) மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பெண்ட் (West Bend) என்னும் சிற்றூரில் கொடுக்கப்பட்டது. சுமார் 500 பேர் மக்கட்தொகை கொண்ட ஊர் அது. தனது வேண்டுதலின் படி, ஒரு பிரமாண்ட வழிப்பாட்டுத் தலத்தைத் தன் கையாலேயே முழுக்க அங்குக் கட்ட முடிவெடுத்தார். அவர் எடுத்த முடிவு தான், அவரது கனவு தலத்தை மேலும் சிறப்பாக்கியது. சாதாரணக் கற்கள் இல்லாமல், உலகின் சிறந்த, மதிப்பு வாய்ந்த கற்களால், அந்தக் குகையைக் கட்ட எண்ணினார்.

இதற்கெனப் பல ஊர்களுக்குப் பயணம் சென்று பலவித கற்களைச் சேகரித்தார். சுமார் 14 வருடங்கள் அவருடைய கற்களுக்கான தேடுதல் தொடர்ந்தது. படிகம், ஜகடம், புஷ்பராகம், சுண்ணாம்பு கல், மரத்திலான கல் எனப் பலவித கற்கள் சேர்ந்தது. அவரிருந்த ஐயோவாவில் இப்படிப் பல ரகக் கற்கள் கிடைப்பதில்லை. அதற்காகச் சவுத் டகோடா, அர்கான்சஸ் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று வந்தார். 1912இல் தான் சேகரித்த கற்கள் கொண்டு கட்டுமானத்தைத் தொடங்கினார்.

இந்தப் பணியில் தன்னுடன் மேட் (Matt) என்பவரை மட்டும் இணைத்துக்கொண்டார். பெரிதாக எந்த ப்ளானும் இல்லை. கணக்கு வழக்குகள் இல்லை. இஞ்சினியர்கள் இல்லை. ஆர்கிடெக்ட் இல்லை. எல்லாம் பாதிரியார் பால் தான். பெரிய கருவிகள் ஏதும் இல்லை. மின்விளக்கு கூட இல்லை. அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் மட்டுமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. 1954இல் அவர் இறக்கும் வரை, அவருடைய எண்ணம் எல்லாம் இதிலேயே இருந்தது. தனது வாழ்நாளின் பெரும் பகுதியை, இதன் உருவாக்கத்திலேயே செலவழித்தார். அவருக்குப் பின்னால் மேட்டும் பாதிரியார் க்ரெவிங் (Greving) இணைந்து, இந்தப் பணியை முடித்தார்கள். பாதிரியார் க்ரெவிங், அங்கேயே தங்கியிருந்து இந்த ஆலயத்தைப் பார்த்துக்கொண்டார். ஐம்பதாண்டுகளுக்கு மேலாக, பாதிரியார் பாலின் கனவு ஆலயத்தைக் கவனமாகப் பராமரித்தவர், இல் இவ்வுலகை விட்டு நீங்கினார்.

இங்குத் தற்சமயம் வருடத்திற்குப் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இது மினசோட்டா தலைநகர் செயிண்ட் பாலில் இருந்து சுமார் 200 மைல்கள் தொலைவிலும், ஐயோவா தலைநகர் டெ மாயின்ஸில் இருந்து சுமார் 140 மைல்கள் தொலைவிலும் உள்ளது. செல்லும் வழியெங்கும் விவசாய நிலங்கள் தான். பொதுவாக, ஐயோவா மாநிலம் எங்கும் விவசாய நிலங்களைத் தான், சாலையில் செல்லும் போது காண முடிகிறது. பெரும்பாலும் சோளமும், பீன்ஸும். விவசாயம் என்றால் இது கார்ப்பரெட் விவசாயம். நிலத்தைச் சுற்றிலும், நிறுவனத்தின் பெயர் கொண்ட தட்டிகள். ராட்சத கருவிகள் ஆங்காங்கே நின்று கொண்டு இருக்கின்றன. ஹெலிகாப்டரில் மருந்து தெளிக்கிறார்கள். ஒரு எளிய மனிதனின் பெரிய கனவுலகத்தைக் தரிசித்த மயக்கத்தில் வெளியே வந்தால், நமக்கும் மருந்தடித்து நிகழ்வுலகத்திற்குப் பழையபடி கொண்டு வருகிறார்கள்.

ஒரு கட்டிடமாக, வடிவமைப்போ, கட்டுமானமோ தூரத்தில் இருந்து பார்ப்போரைக் கவருவதில்லை. இதன் வரலாறும், அந்த வரலாற்றுடனான நெருங்கிய பார்வையும் நம்மைக் கண்டிப்பாக நெகிழ வைக்கும். இங்கிருக்கும் விதவிதமான கற்களும், அவை காலத்தைக் கடந்து வந்த பாதையும் நம்மை ஆச்சரியப்படுத்தும். அங்கிருக்கும் பணியாளர் ஒருவர், ஒவ்வொரு மணி நேரமும் இது குறித்த தகவல்களை அளித்தவாறு டூர் அழைத்துச் செல்கிறார். பக்கத்தில் இருக்கும் மியூசியத்தில் பாதிரியாரின் உடமைகளும், அவர் குறித்த தகவல்களும் காண கிடைக்கின்றன். அருகே இருக்கும் ராக் ஸ்டூடியோவில், இங்குப் பயன்படுத்தியிருக்கும் கற்கள் குறித்த குறிப்புகளை வைத்திருக்கிறார்கள். தவிர, ஒரு டாக்குமெண்டரி படமும் ஒளிப்பரப்புகிறார்கள். இது எதற்கும் கட்டணம் இல்லை. விருப்பமிருந்தால், நன்கொடை அளிக்கலாம்.

வரலாற்றுச் சின்னங்களைக் காண ஆர்வமிருப்போரும், நிலவியலில் ஈடுபாடு இருப்போரும் இங்குக் கண்டிப்பாக ஒருமுறை சென்று வரலாம். ஆன்மிக அன்பர்களுக்கும் பிடிக்கும். பக்கத்திலேயே வழிபாட்டிற்கு செயிண்ட் பீட்டர் அண்ட் பால் என்னும் தேவாலயம் உள்ளது. அருகே ஒரே ஒரு உள்ளூர் உணவகம் உள்ளது. சாலட், பர்கர், மால்ட், ஸ்மூத்தி, ஐஸ்கீரிம் போன்றவை கிடைக்கின்றன. குழந்தைகள் விளையாடுவதற்கு, சறுக்கு, ஊஞ்சல் போன்றவை இந்த ஆலயத்திற்கு எதிரே இருக்கும் பூங்காவில் உள்ளன.

வெகு சில மனிதர்களின் கடும் உழைப்பில் மட்டுமே உருவான இந்தத் தேவாலயம், இயற்கை சீற்றங்களைத் தாண்டி, பாதிப்புகள் ஏதும் இன்றி இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இன்றைய தேதிக்கு இங்கு இருக்கும் கற்களின் மதிப்பு எக்கச்சக்கம். நூறாண்டுகளைக் கடந்து இருக்கும் இத்தலத்தை எந்நாளும் எந்நேரமும் சென்று கண்டு வரலாம். வருடத்தின் 365 நாட்களும், 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். மீட்சிக்கான ஆலயத்திற்குக் கதவெதற்கு, இல்லையா?

.

மால் ஆஃப் அமெரிக்கா

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



மினசோட்டாவின் பெருமைகளில் ஒன்றான மால் ஆஃப் அமெரிக்காவிற்கு இது வெள்ளி விழா ஆண்டு. அப்படியென்ன பெருமை என்றால், அமெரிக்காவின் மிகப் பெரிய அங்காடி வளாகம் என்ற பெயரை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சூடிக் கொண்டு நிற்கிறதே.

மின்னியாபொலிஸ்வாசிகளுக்கு இந்த மால் மேல் எந்தளவு க்ரேஸ் இருக்கிறதோ தெரியாது, இங்கு வரும் வெளியூர் விருந்தினர்களுக்கு இதன் மேல் பெரும் ஆர்வம் இருக்கும். மின்னியாபொலிஸில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னும் லிஸ்டில் இது கண்டிப்பாக இருக்கும். இதன் முக்கியச் சிறப்பம்சம், இந்த மாலின் நடுவே இருக்கும் நிக்கலோடியன் யூனிவர்ஸ் (Nickelodeon Universe) உள்ளரங்குக் கேளிக்கை பூங்கா.

குழந்தைகளைக் கவரும் கேளிக்கை விளையாட்டுப் பூங்கா இது. உள்ளரங்கில் இருப்பதால், மழை, வெயில், பனி என்று எவ்வித தடங்கலும் இல்லாமல், வருடம் முழுக்கச் சென்று விளையாடுவதற்கு ஏற்ற இடம் இது. குளிர்காலத்தில் வெளியே எங்கே செல்வது என்று குழப்பமில்லாமல், ஒருநாள் முழுக்க நேரத்தைக் கழிப்பதற்கு, இவ்விடம் உதவும். இந்த மால் வளாகத்திற்குள்ளோ அல்லது இந்த விளையாட்டு திடலுக்கோ நுழைய எந்தக் கட்டணமும் இல்லை. விளையாடுவதற்குத் தனித்தனியாக டிக்கெட்டோ, அல்லது ஒருநாள் முழுக்க அனுமதி அளிக்கும் கை வளையமோ (Wristband) வாங்கிக்கொண்டு செல்லலாம். ஒருநாள் அனுமதி வாங்கினால், எதில் வேண்டுமானாலும், எவ்வளவு முறை வேண்டுமானாலும் விளையாடிக்கொள்ளலாம். அங்குச் சென்று வாங்குவதை விட, இணையத்தில் வாங்கினால் கொஞ்சம் சீப்பாகக் கிடைக்கும். அதைவிட மலிவாகக் காஸ்கோவில் (Costco) கிடைக்கும்.

இங்குக் குழந்தைகளைக் கவரும் மற்றொரு இடம் - சீ லைஃப் அக்வாரியம் (SeaLife Aquarium). இது ஒரு கடல்வாழ் உயிரினங்களின் அழகிய கண்காட்சி சாலை. நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற காண்பதற்கு அரிய உயிரினங்களை இங்குக் காணலாம். நட்சத்திர மீன் போன்றவற்றைத் தொட்டு கூடப் பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுப்பார்கள். இங்குக் கடலுக்கு அடியில் மீன்களுடன் சேர்ந்து நடக்கும் உணர்வை அளிக்கும் கடல் சுரங்கப்பாதை (Ocean Tunnel) பார்வையாளர்களைக் கவரும். இந்த இடத்தில் இரவு முழுக்க விட்டத்தில் மீன்கள் அங்குமிங்கும் சென்று வருவதைப் பார்த்துக் கொண்டே, ஒரு குழுவாக உறங்குவதற்குத் திட்டம் வைத்திருக்கிறார்கள். கடலுக்கு அடியில் தூங்க முடியுமா என்று யோசிப்பவர்கள், இதை முயற்சித்துப் பார்க்கலாம்.

மால் ஆஃப் அமெரிக்காவில் இவை சிறார்களைக் கவரும் அம்சம் என்றால், பெண்களைக் கவரும் அம்சமாகப் பல கடைகள் உள்ளன. மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள். பரப்பளவில் மட்டுமல்ல, கடைகளின் எண்ணிக்கையிலும், அமெரிக்காவின் பெரிய மால் இது தான். மேசிஸ், சியர்ஸ், நார்ட்ஸ்ராம், மார்சல்ஸ், ஓல்ட் நேவி, ஃபாரெவர் 21 முதலிய பெரிய உடை அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குமான கடைகளும், ஆப்பிள், மைக்ரோசாப்ட், பெஸ்ட் பை போன்ற தொழில்நுட்பக் கடைகளும் இங்கே அமைந்துள்ளன. ஒரு பக்கம் பெண்களையும், மறுபக்கம் குழந்தைகளையும் அனுப்பிவிட்டுவிட்டு, ஆண்கள் இன்னொரு பக்கம் வருவோர் போவோரை பராக்குப் பார்க்கலாம்!!

திருமணம் செய்யும் திட்டம் உள்ளவர்கள், இங்கிருக்கும் காதல் தேவாலயத்தை (Chapel of Love) ஒரு முறை சென்று பார்க்கவும். இது வரை இங்கு 7500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. திருமணத்திற்குத் தேவையான உடைகளும் பிற பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. திருமணம் ஆன பின்பு, எப்படியும் குழந்தை குட்டியோடு இங்கு அடிக்கடி வர வேண்டி இருக்கும். அப்படி வரும்போது, இந்த நிலைக்குக் காரணமான நிகழ்வு இங்குதான் நடந்தது என்பதை மகிழ்வாகவோ, அல்லது அவரவர் நிலைக்கு ஏற்ப நினைவுப்படுத்திக்கொள்ளலாம்!!

இன்று மால் ஆஃப் அமெரிக்கா இருக்கும் இடத்தில் தான், 1956 இல் இருந்து 1981 வரை மெட்ரோபாலிடன் ஸ்டேடியம் என்ற விளையாட்டு மைதானம் இருந்தது. 1986 இல் இந்த இடத்தை வாங்கிய கெர்மேசியன் (Germezian) என்ற நிறுவனம், 1989 இல் கட்டுமானப் பணியைத் தொடங்கியது. 1992 இல் கட்டுமானப் பணி நிறைவுற்று, இந்த மால் திறக்கப்பட்டது. திறந்த சமயத்தில் இருந்தே, இதுதான் அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். இன்றும் இதுவே அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். வட அமெரிக்கக் கண்டம் என்று எடுத்துக் கொண்டால், கனடாவில் இருக்கும் வெஸ்ட் எட்மான்டன் மால் (West Edmonton Mall) தான் பெரியது. அதன் உரிமையாளர்கள் தான், இதைக் கட்டியவர்களும் கூட. முன்பு இங்கு இருந்த ஸ்டேடியத்தின் ஞாபகமார்த்தமாக, அங்கிருந்த ஸ்டேடியத்தின் பெயர் பொறித்த சட்டகத்தினை இங்குத் தரையில் பதித்து வைத்திருக்கிறார்கள். அங்கிருந்த நாற்காலி ஒன்றையும் இங்குள்ள ஒரு சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

மால் ஆஃப் அமெரிக்கா கட்டிடத்தில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன. முதல் தளமான தரைத்தளத்தில் ஏற்கனவே நாம் குறிப்பிட்ட நிக்கலோடியன் யூனிவர்ஸ் விளையாட்டு அரங்கமும், சுற்றிலும் நான்கு பக்கமும் கடைகளும் உள்ளன. இங்கிருக்கும் லெகோ (Lego) கடையில் சிறுவர்கள் உட்கார்ந்து லெகோ விளையாட்டுப் பொருட்கள் கொண்டு விளையாடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். ஹார்ட் ராக், க்ரேவ் ஆகிய உணவகங்கள் தரைத்தளத்தில் உள்ளன.

இரண்டாம் தளத்தில், ஓக்லே ஸ்டோர், ஸ்கெட்சர்ஸ், அவேடா, சன்க்ளாஸ் ஹட் போன்ற ஆடை, அணிகலன்களுக்கான கடைகள் உள்ளன. மேசிஸ், சியர்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களின் பேரங்காடிகள் பல தளங்களுக்குப் பரந்து இருக்கின்றன.

மூன்றாவது தளம், உணவுக்கான தளம். பலவித சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றன. பஃபலோ வைல்ட் விங்க்ஸ், கிரேவ், ரெயின் பாரஸ்ட் கபே போன்ற சாவகாச உணவகங்களும், சிப்போட்லே, பர்கர் கிங், நூடுல்ஸ் & கம்பெனி உள்ளிட்ட துரித உணவகங்களும் பல இங்குக் கடை விரித்திருக்கிறார்கள். முன்பே சொன்னது போல், ஒருநாள் முழுக்க இருந்து, விதவிதமாகச் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம். மற்றபடி, நடக்கும் வழியெங்கும் அனைத்து தளங்களிலுமே, கரிபோ, ஸ்டார் பக்ஸ் போன்ற காபிக்கடைகள் இருக்கின்றன.

நான்காவது, ஸ்மாஷ் என்ற விர்சுவல் ரியாலிட்டி விளையாட்டு அரங்கம். இந்திய பூர்வீகத்தைக் கொண்ட நிறுவனம். மற்ற தளங்களை ஒப்பிடுகையில், இங்கு நான்காவது தளம் கொஞ்சம் குறைந்த ஜன நடமாட்டத்துடன் தான் இருக்கும். முன்பு, சில தியேட்டர்கள் இருந்தன. இப்போது அவை மூடப்பட்டு, விளையாட்டுத் தளமும், சில உணவகங்கள் மட்டுமே உள்ளன. மக்கள் அதிகம் சுற்றிக் கொண்டு இருப்பது, முதல் தளத்திலும், மூன்றாம் தளத்திலும் தான். பறக்கும் அனுபவம் (Flyover America), வண்ண அனுபவம் (Crayalo Experience), ஒளி அனுபவம் (Universe of Light) என இன்னும் பார்க்க இங்கு இருக்கின்றன. விருப்பத்திற்கேற்ப ஒரு ரவுண்ட் சென்று வரலாம்.

இந்த மால் ஊரில் சரியான இடத்தில் அமைந்திருக்கிறது எனக் கூறலாம். மின்னியாபொலிஸிற்குத் தெற்கே இருக்கும் ப்ளுமிங்டன் பகுதியில் இந்த மால் இருக்கிறது. மின்னியாபொலிஸ் டவுண்டவுன், செயின்ட் பால் டவுண்டவுன் இரண்டுக்குமே சமத்தொலைவில் அமைந்துள்ளது. இதற்கெனத் தனியாகவே பகுதி இலக்க எண் (Zip Code) தபால் துறையால் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவர்கள். ஆனால், அது அப்படியல்ல. இந்த எண்ணில் அருகே இருக்கும் பிற பகுதிகளும் அடக்கம். நகருக்குள்ளேயே இந்த மால் இருப்பதால், சென்று வருவது சுலபம். பஸ் வசதி, ரயில் வசதி இரண்டும் உள்ளது. பக்கத்தில் தான் ஏர்போர்ட் என்பதால், ப்ளைட்டில் வந்து கூட இறங்கலாம். டவுன்டவுணில் இருந்தும், ஏர்போர்ட்டில் இருந்தும், மாலுக்கு நேரடியாகச் செல்ல ரயில் இருக்கிறது. இவையனைத்திற்கும் மேல், காரில் சென்றால் பார்க் செய்வதற்கு 12000+ இடங்கள் உள்ளன. பார்க் செய்த தளம் மறந்து விடக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு தளத்திற்கு ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்தின் பெயரைச் சூட்டியுள்ளார்கள்.

மால் ஆஃப் அமெரிக்காவிற்குப் பக்கத்தில் தான் ஐக்கியாயும் (IKEA), வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்காவும் (Water Park of America) அமைந்துள்ளன. தற்சமயம், வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்கா சீரமைப்பு வேலைகளுக்காக மூடப்பட்டுள்ளது. ஒரே மாதிரி பெயர் இருந்தாலும், இதற்கும் மால் ஆஃப் அமெரிக்காவிற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

ஒவ்வொரு ஊரிலும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு மக்கள் ஏதேனும் இடத்தில் ஒன்று சேர்ந்துக் கொண்டாடுவது உலக மரபாகிவிட்டது. புத்தாண்டு சமயம் குளிர் உச்சத்தில் இருப்பதால், மின்னசொட்டாவாசிகளுக்குத் திறந்த வெளியில் புத்தாண்டு கொண்டாடுவது சிரமமான விஷயம். வருடத்தின் முதல் நாளிலேயே அவ்வளவு சிரமத்தை அனுபவிக்கக் கூடாதல்லவா? அதனால் மக்கள் பெரும் திரளாக இந்த மாலுக்குப் படையெடுத்துவிடுவார்கள். வருட இறுதி நாளின் மாலையில் இருந்தே சேரத் தொடங்கும் கூட்டம், நடுராத்திரி வரை இங்கேயே உலாவுவார்கள். விளையாடுவார்கள். உண்பார்கள். பனிரெண்டு மணிக்கு முன்பாக மாலின் மத்திய பகுதி ஒன்றில் கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டு மின்னணுப் பலகையில் ஒளிரத் தொடங்க, மக்கள் அனைவரும் இங்குச் சங்கமிக்கத் தொடங்குவார்கள். பனிரெண்டு மணிக்குக் கவுண்ட் டவுன் இறுதியில் பலமாக இசைச் சத்தத்துடன் மக்கள் ஆரவாரத்துடன் ஆடத் தொடங்குவார்கள். அப்படியே அரை மணி நேரம் கூட்ட நெரிசலில் ஆடிக் களைத்து, உறங்க வீட்டிற்குக் கலைந்துச் செல்வார்கள்.

இப்படி மின்னசொட்டாவாசிகள் பலரின் வருடப் பிறப்பு இங்குத் தான் தொடங்கும். வருடப்பிறப்பில் முதலில் இந்த மால் தரிசனம். பிறகு தான், மற்ற ஆலயத் தரிசனமெல்லாம். வருடத்திற்கு வருகை தரும் 40 மில்லியன் விருந்தினர்களில், 40 சதவிகிதம் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தான் இங்கு வருகிறார்கள்.  இது மின்னசொட்டாவின் "டோண்ட் மிஸ்” இடமாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

.

Sunday, June 19, 2016

கண்டுப்பிடி மிஸ்டர் ஸ்லையை!!

ஊடக அறம் என்ற வார்த்தை பிரயோகம், சமீப காலங்களில் அடிக்கடி நம்மிடம் அடிப்படுகிறது. ஊடக நிறுவனங்களின் வியாபார வெறியினால் பலமாக அது மிதிபடுவதினால் ஏற்படும் சத்தம் காரணமாக இருக்கக்கூடும். தொலைகாட்சிகள், டிஆர்பிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைக் கோர்த்துவிட்டு, தூண்டிவிட்டு, குழாயடி சண்டையை ஏற்படுத்துகிறார்கள் என்றால், பத்திரிக்கைகள் சர்குலேஷனைக் கூட்ட கருத்து கணிப்பு, புலனாய்வு போன்றவற்றை உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்கிறார்கள்.

சர்குலேஷனைக் கூட்ட, பத்திரிக்கைகள் கடைப்பிடிக்கும் பல யுக்திகளைக் கண்டிருக்கிறோம். உற்பத்தி செலவுக்கு கீழே பத்திரிக்கையை விற்று, வாசகர் எண்ணிக்கையைக் கூட்டிய நிறுவனத்தைத் தமிழ் வாசகர்கள் அறிவார்கள். புது பேப்பரை வாங்கி, எடைக்குப் போட்ட வரலாறும் நம்மூரில் உண்டு.

சர்குலேஷனை அதிகரிக்க, பலவித வழிமுறைகளை உலகம் முழுக்க இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மினசோட்டாவின் ட்ரிப்யூன் நாளிதழ் செய்த ஒரு ஐடியா, இன்றும் கேட்க சுவையானது. ஒப்பிட்டுக்குரியது.



1907இல் அமெரிக்காவில் ஒரு நாளிதழின் விலை - ஒரு செண்ட். நீண்டகால சந்தாதாரர்களை அதிகரிக்க, மினசோட்டாவின் ட்ரிப்யூன் நாளிதழ் உருவாக்கிய கதாபாத்திரம் தான் - மிஸ்டர் ஸ்லை (Mr. Sly). கற்பனை கதாபாத்திரத்தை, நிஜத்தில் உலவவிட்டு, அவரைச் சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு டாலர் ஐம்பதில் இருந்து இருநூற்று ஐம்பது டாலர் வரை பரிசு என்று அறிவிக்கப்பட்டது.

போட்டி அறிவித்த நாளில் இருந்து, தினமும் அவர்களது நாளிதழில் திருவாளர் ஸ்லையின் அடையாளங்கள் சிறு குறிப்புகளாக விவரிக்கப்பட்டது. மின்னியாபோலிஸ் நகரின் எந்த ஏரியாவில், அவர் ரவுண்ட்ஸ் வருவார் என்பதும் தெரிவிக்கப்பட்டது. வாசகர்கள், யார் மிஸ்டர் ஸ்லை என்று நினைக்கிறார்களோ, அவரிடம் சென்று "நீங்கள் தானே மிஸ்டர் ஸ்லை?" என்று கேட்க வேண்டும். உண்மையிலேயே, அவர்தான் மிஸ்டர் ஸ்லை என்றால் மறுக்காமல் ஒத்துக்கொள்வார். கையில் அன்றைய நாளிதழோடு, அவரை அப்படியே நாளிதழின் அலுவலகத்திற்கு கூட்டி சென்றால் ஐம்பது டாலர்கள் கொடுப்பார்கள். கூடவே, ஆறு மாத சந்தா வைத்திருந்தால், நூற்றி ஐம்பது டாலர்கள் பரிசு. ஒரு வருட சந்தா என்றால் இருநூற்று ஐம்பது டாலர்கள் பரிசு. என்னவொரு ஐடியா!! அன்றைய காலக்கட்டத்தில், ஒரு செண்ட்டில் விற்றுக்கொண்டிருந்த நாளிதழ், இருநூற்று ஐம்பது டாலர்கள் பரிசாக அளிக்கிறதென்றால், அதற்கு ஆசைப்படும் மக்கள், ஒரு வருட சந்தா வாங்க மாட்டார்களா? வாங்கினார்கள். வாங்கி ரசீதைக் கையோடு வைத்துக்கொண்டு, இந்த போட்டி நடைபெறும் சமயம் தெருவெங்கும் 'துப்பறியும் சாம்பு'வாக சுற்றிக்கொண்டிருந்தார்கள். போட்டிக்கான காலம், மிஸ்டர் ஸ்லை பிடிபடும் வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மிஸ்டர் ஸ்லையும், நாளிதழில் தினமும் தான் சுற்றி வந்த அனுபவத்தை எழுதிக்கொண்டு வந்தார். தான் அன்று ஒரு ட்ராபிக் போலீஸை சந்தித்தேன், அந்த துணிக்கடைக்கு சென்றேன், கல்லூரியில் ஒரு நபரிடம் பேசினேன் என்பது போல ஒவ்வொரு தினத்தின் நடப்புகளையும் எழுதி வந்தார். அவரை சந்தித்தவர்கள் அதை படித்தால், அடடா விட்டுவிட்டோமே!! என்று நினைக்கும்வாறு ஆனது. சிலர், 'அவனா நீ?' என்று நினைவு அடுக்குகளில் அவரது பிம்ப அடையாளத்தை தூசு தட்டி எடுத்து, அடுத்த நாளில் பிடித்துவிடலாம் என்று வீராவேசத்துடன் கிளம்பினார்கள். பத்திரிக்கையிலும், தலை, நாடி, காது என்று சிறு சிறு படங்களை வெளியிட்டு, தினசரி ஹைப் கூட்டினார்கள்.

பரிசு பெறும் ஆசையில், அவரைப் போல இருந்த சிலரை, பத்திரிக்கை ஆபிஸிற்கு இழுத்து வந்து சில ஆர்வ கோளாறுகள் பரிசு கேட்டார்கள். 'நான் அவன் இல்லை' என்று இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்து செல்வது பெரும்பாடாகியது. ரொம்ப அல்பமா இருக்கே!! இப்படியெல்லாமா அமெரிக்கர்கள் நடந்துக்கொள்வார்கள்? என்று நினைப்பே தேவையில்லை. ஓசியில் கொடுத்தால், பினாயிலையே குடிக்க தயாராகும் கலாச்சாரம், உலகம் முழுக்க உண்டு. அமெரிக்காவில், தேங்க்ஸ்கிவிங் (Thanksgiving) டீல் என்றால் பெஸ்ட் பை (Best Buy) கடை முன்னால், பெட் தலையணை சகிதம் படுப்பவர்களும் உண்டு. ஐக்கியாவில் முதல் நாள் டிஸ்கவுண்ட் சேல் என்றால், அலுவலகத்திற்கு லீவ் எடுத்து ஷாப்பிங் செல்பவர்களும் உண்டு. அதனால், மிஸ்டர் ஸ்லையை எப்படியாவது கண்டுபிடித்திட வேண்டும் என்று வெறியுடன் பல பேர் அன்றைய மின்னியாபோலிஸில் 'மிருதன்'களாக சுற்றிக்கொண்டிருந்தனர் என்பது நம்ப கடினமான செய்தி இல்லை.

இவர்களுடைய கண்களுக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டு, மிஸ்டர் ஸ்லை தெரு தெருவாக சுற்றிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இரு வாரங்களுக்கு மேலானது, அவர் மாட்டிக்கொள்ள. ஒரு சுபயோக தினத்தில், மிஸ்டர் ஸ்லை ஒரு ஹோட்டலின் வாசலில், சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ரிச்சர்ட்சன் என்பவரிடம் கையும், சந்தா ரசீதுடன் மாட்டிக்கொண்டார். ஒரு வருட சந்தா வைத்திருந்ததால், டாப் ப்ரைஸான இருநூற்று ஐம்பது டாலர்களைப் பரிசாக பெற்றார் ரிச்சர்ட்சன். மிஸ்டர் ஸ்லை தேடுதல் கூத்தும் அன்றுடன் முடிவுக்கு வந்தது. பரிசு பணத்தை படிப்புக்காக செலவிட போவதாக ரிச்சர்ட்சன் தெரிவித்தார். பிறகு, என்ன செய்தாரோ? ரிச்சர்ட்சனுக்கே வெளிச்சம்.

---

இந்த தேடுதல் கூத்தை வாசிக்கும் போது, நம்மூரின் தேர்தல் கூத்து தான் நினைவுக்கு வருகிறது. இதுவரை 'அடுத்த முதல்வர் நாந்தான்' என்று கிளம்பி வந்தவர்கள், தற்சமயம் ஒபாமா, கேஜ்ரிவால், பிரபு போன்றோரின் புண்ணியத்தில் 'மாற்றம்', 'மாற்று அரசியல்', 'நம்பிக்கை' (அதானே எல்லாம்!!) என்று கீவேர்ட்ஸை மாற்றிப்போட்டு கிளம்பிவிட்டார்கள். "எங்கள் மேல் ஊழல் குற்றசாட்டே இல்லை' என்று பவுசாக கூறுபவர்கள், மைண்ட் வாய்ஸில் 'இதுவரை அதற்கான வாய்ப்பே எங்களுக்கு கிடைக்கவில்லை' என்று கவலையுடன் கூறிக்கொள்வதும் மக்களுக்கு கேட்கத்தான் செய்கிறது.

மக்கள் நிலையும் குழப்ப நிலைதான். 250 டாலர் பரிசுக்காக, மிஸ்டர் ஸ்லையை தேடியலைந்த மினசோட்டா வாசகர்கள் போல், தங்களைக் காக்க வரும் தேவதூதன் யார் என்று தெரியாமல், விஜயகாந்த், அன்புமணி, வைகோ, திருமாவளவன், நல்லகண்ணு, சகாயம், கலாம் உதவியாளர் என்று வருபவர்களை எல்லாம் பார்த்து, எது மாற்றம், எது ஏமாற்றம் என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார்கள். நல்லா கேள்விக் கேக்குறாரே என்று ரங்கராஜ் பாண்டேவைக்கூட சட்டசபைக்கு அனுப்பி வைக்கலாமே என்று சிலர் யோசிக்கும் நிலை வந்துவிட்டது. அரே, ஒ சம்பா!!

உங்களுக்காவது தெரியுமா, நம்மூரில் மறைந்து நடமாடும் அந்த மிஸ்டர் ஸ்லை யாரென்று?

.

Sunday, April 1, 2012

அல்வா வரலாறு


முன்பே சொன்னது போல், நான் பார்க்கும்/பார்க்க விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று, புதிய தலைமுறையின் ‘கொஞ்சம் சோறு... கொஞ்சம் வரலாறு...”.
---

நம்மை சுற்றியிருக்கும், அனைத்து விஷயங்களை பற்றிய வரலாறும் முக்கியமானது தான். நம்மை பற்றி, நம் குடும்பத்தை பற்றி, நம் கோவில்களை பற்றி, நம் ஊரைப் பற்றி, நம்மை ஆள்பவர்களை, அவர்களின் அரசியல் பற்றி என அனைத்து வகை வரலாறும் முக்கியம் தான்.

அந்த வகையில், நாம் உண்ணும் உணவைப் பற்றிய வரலாறும் முக்கியம் தான்.

இன்றைய நிகழ்ச்சி - திருநெல்வேலி அல்வாவின் வரலாற்றைப் பற்றியது.

---




அல்வா என்பது ஒரு முகலாய உணவு பண்டம். அது ஒரு அரேபிய பெயர். அரேபியில் அல்வா என்றால் இனிப்பு என்று அர்த்தம். நான் இங்கிருக்கும் அரபிய கடைகளில் அல்வா என்ற பெயரில் இனிப்பு வகைகளைப் பார்த்து, ஆசைப்பட்டு, வாங்கி, சாப்பிட்டு பார்த்து ஏமாந்திருக்கிறேன்.  அவுங்க ஐட்டம் என்றாலும், நம்மாளூங்க கை பக்குவமே தனி தான்.

முகலாயர்கள் ஆண்ட வடக்கில் இருந்து, அல்வா எப்படி தெற்கே திருநெல்வேலிக்கு வந்தது? அதற்கு சொக்கம்பட்டி ஜமீன் தான் காரணம். சொக்கம்பட்டி என்பது தற்சமயம் நெல்லைக்கு பக்கமிருக்கும் ஒரு கிராமம். இந்த ஊரை சேர்ந்த ஜமீன், ஒருமுறை வட இந்தியாவிற்கு சென்ற போது, அங்கு அல்வாவை சாப்பிட்டு, அதன் சுவைக்கு அடிமையாகி, அந்த ஊர் சமையல்காரரை குடும்பத்தோடு அழைத்துக்கொண்டு சொக்கம்பட்டிக்கு வந்துவிட்டார்.

அந்த குடும்பம் தான், லாலா குடும்பம். நிஜமோ, பொய்யோ அவர்களின் பெயரில் தான், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இனிப்புக்கடைகளை பலர் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அல்வா செய்வதை காட்டினார்கள். கோதுமையை ஊறவைத்து, அரைத்து, அதில் பாலெடுத்து, அதைக்கொண்டு சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், நெய் சேர்ந்து அல்வா செய்யும் பக்குவம் இருக்கிறதே! அப்பப்பா... இப்படி கஷ்டப்பட்டு செய்யும் உணவு வகைகள் அனைத்தும் டக்கராக தான் இருக்கும்.

பிறகு, பேமஸ் இருட்டுகடையை காட்டினார்கள். நிகழ்ச்சி தொகுப்பாளர், கூட்டத்தில் முண்டியடித்து சென்று அல்வா வாங்கி வந்து, சாப்பிட்டு காட்டினார்.

ம்ம்ம்ம்... ஆசையாகத்தான் இருக்கிறது!!! எங்கிட்டு போய் சாப்பிடுவது? செய்ற மாதிரி ஐட்டமாக இருந்தா கூட, செஞ்சு சாப்பிடலாம். இது மெகா மகா வேலை.

---

திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருப்பதாலோ, என்னவோ தூத்துக்குடியிலும் அல்வா நன்றாக தான் இருக்கும். சிறுவயதில் கடைதெருவுக்கு செல்லும் போது, எங்க ஊரு லாலா கடையில், ஐம்பது கிராம் அல்வா கேட்டால், சிறிதாக வெட்டிய ஒரு வாழையிலையில் வைத்து தருவார்கள். மக்கள், கையில் வாழையிலையுடன் கடை முன்பு நின்று சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். வாழையிலையுடன் சேர்ந்து அதில் ஒரு சுவை இருக்கும்.

சமீபகாலங்களில் அப்படி யாரையும் பார்க்க முடிவதில்லை.

நான் காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு முறை ஊருக்கு வந்து திரும்பும் போது, அல்வா வாங்கி வருவேன். அது தொடர் பழக்கமாகி, நான் ஊர் திரும்பும் போது, எனது பையிற்காக பசங்க காத்திருப்பார்கள்.

வேலைக்கு சேர்ந்த பிறகு, அலுவலக நண்பர்களுக்காக, வாங்கி வருவேன். கூடவே, எங்கூர் மக்ரோனும்.

இங்கே வந்தபோதும் வாங்கி வந்தேன். பக்கத்து அப்பார்ட்மெண்ட் நண்பர், வேறு ஊர் சென்ற பிறகும், நான் ஊருக்கு செல்வது தெரிந்து, அல்வா வாங்கி Fedexஇல் அனுப்பிவிட சொன்னார்.

இப்படி பலருக்கும் அல்வா கொடுத்திருக்கிறேன். (தப்பா நினைச்சிக்காதீங்க!!!)


.

Sunday, February 12, 2012

நானும் எஸ்ராவும்

சும்மா சீனுக்கு வச்ச தலைப்பு தான்.

இருந்தாலும், ஒரு அர்த்தம் இருக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் காந்தி பற்றி சொன்னதாக வந்த தகவல்கள் தவறானவை என்று சர்ச்சை கிளம்பியது. பல புத்தகங்களை வாசித்து, பல திரைப்படங்களை பார்த்து, பல இடங்களுக்கு சென்று, அத்தகவல்களை மக்களுடன் பகிர்ந்துக்கொண்டு வருபவர் எஸ்ரா. வாசிக்கும் அனைத்தின் நம்பகத்தன்மையையும் சோதித்து பார்த்து சொல்வது கஷ்டமான விஷயம் தான்.


டால்ஸ்டாய்


இவற்றையெல்லாம் மிக உறுதியான தகவல்களாக எடுத்துவைக்காமல், ஒரு டிஸ்கி போட்டு பகிரலாம். அல்லது, தவறு என்று உறுதியான பிறகாவது, திருத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால், சர்ச்சை தான்.

சரி. எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?

நானும் அவர் கூறிய தகவலை, சில வருடங்களுக்கு முன்பு அவரை போலவே நம்பி, உண்மைப்போல் இத்தளத்தில் பகிர்ந்திருந்தேன்.

பெங்களூரில் வள்ளுவர் சிலை திறக்கப்பட்ட போது எழுதிய பதிவு அது.

இப்போது, அத்தகவல் தவறு என்று தெரிகிறது. தினமணியில் இது பற்றி லா.சு.ரங்கராஜன் எழுதியிருக்கிறார். அதை பற்றி, ஞாநியும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனால், எஸ்ரா போல் நானும் எதையோ வாசித்து ஏமாந்திருக்கிறேன் என்று தெரிகிறது. இருந்தாலும், அது உண்மையாக இருந்திருக்கலாம் என்று மனம் எண்ணுகிறது. பெருமையடிக்கத்தான். முன்பு, அலுவலகத்தில் பிற மொழியினரிடம் இதை சொல்லி பெருமையடித்திருக்கிறேன். (ஒகே... சொன்ன பொய்யை மறைச்சிடலாம்!!!)

எனிவே, என் பதிவைப் பார்த்து ஏமாந்தவர்களிடம் உண்மையை கூற கடமைப்பட்டுள்ளேன்.

அப்பதிவை வாசித்த நண்பர்களே, அதை மறந்துவிடுங்கள். ஓகே? :-)

.

Thursday, February 9, 2012

முதலும் முடிவும்

துர்காவை தொட்டவுடன் சுபாஷ் அடைந்த உணர்வை என்னவென்று சொல்ல முடியும்? நாம் தண்ணீர் ஊற்றிய செடியில் பூத்த முதல் மலரை தொடும் போது ஏற்படும் சிலிர்ப்பை விட நூறு மடங்கு பெரியது அது. வேரில்லாமல் விதையில் பூத்த அதிசய முதல் மலர் - துர்கா.

ஆம். துர்காவை டாக்டர் சுபாஷ் டெஸ்ட் ட்யூப் முறையில் படைத்திருந்தார்.

---

பத்திரிக்கையாளர்களிடம் இந்த சாதனையை அறிவித்தார் டாக்டர் சுபாஷ். செய்தி பரவ, அரசாங்கம் சுபாஷை அழைத்தது. “எப்படி செய்தாய், இந்த சாதனையை? உன்னால் எப்படி முடிந்தது? சொல்!” ஒரு வல்லுனர் குழுவை அமைத்தது, மேற்கு வங்காள அரசு.

---

வல்லுனர் குழுவின் முன் சுபாஷ்.

“எங்கு அந்த கருவை வைத்திருந்தாய்?”

சொன்னார். “எப்படி?” என்று அடுத்த கேள்வி. அடுத்தடுத்த எப்படிகளுக்கு பதில் கூறினாலும், எப்படிகள் நின்றபாடில்லை. சுபாஷால் சமாளிக்க முடியவில்லை.

வல்லுனர் குழு சொன்ன தீர்ப்பு - “இது போர்ஜரி!”.

---

தனது முயற்சியையும், முடிவுகளையும், ஆய்வு கட்டுரையாக எழுத நினைத்து விடுமுறைக்கு விண்ணப்பித்தார் சுபாஷ். விடுமுறை நிராகரிக்கப்பட்டது.

தனது முயற்சியை பற்றி விவாதிக்க, ஜப்பான் செல்ல வேண்டியிருந்தது. பயணம் நிராகரிக்கப்பட்டது.

முடிவில், கண்ணியல் துறை பேராசிரியராக பணி மாற்றம் செய்யப்பட்டு, கல்லூரிக்கு அனுப்பப்பட்டார்.

---

சுபாஷ் உருவாக்கிய முதல் இந்திய டெஸ்ட் ட்யூப் குழந்தை பிறந்ததற்கு 67 நாட்களுக்கு முன்பு தான், உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை இங்கிலாந்தில் பிறந்திருந்தது. அதை உருவாக்கிய லண்டன் டாக்டர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துக்கொண்டிருக்க, அதற்கு மாற்றான முறையில், குறைந்த வசதிகளை கொண்டு அச்சாதனையை உருவாக்கிய இந்திய டாக்டருக்கு அடி மேல் அடி விழுந்துக்கொண்டு இருந்தது.



1981 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி, தனது அறையில் தன் முடிவை நிகழ்த்திக் கொண்டார் சுபாஷ். இந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தையை உருவாக்கிய மருத்துவ பிரம்மா, அதிகாரவர்க்கத்தின் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டார்.

தொடங்கிவைத்தவருக்கு முடித்துவைப்பதில் என்ன கஷ்டமிருக்கப் போகிறது?

---

1986இல் டாக்டர் ஆனந்தின் மருத்துவ முயற்சியின் மூலம் பிறக்கப்பட்ட குழந்தையே, பல காலம் இந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபி என்றழைக்கப்பட்டது. நம்பப்பட்டது. பின்னர், சுபாஷின் ஆய்வு கட்டுரைகளை வாசிக்க நேர்ந்த அதே டாக்டர் ஆனந்த், 1997இல் டாக்டர் சுபாஷ் முகோபாத்யாவின் சாதனையை உலகிற்கு அறிய செய்தார்.

2010 இல் உலகின் முதல் குழந்தையை உருவாக்கிய இங்கிலாந்து டாக்டர் ராபர்ட்டிற்கு, அவருடைய சாதனைக்கான அங்கீகாரத்தின் உச்சமாக மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பரவாயில்லை, இந்தியாவிற்கு அதற்குள் அதன் உண்மையான சாதனை டாக்டரைப் பற்றி தெரிந்துக்கொள்ளவாவது முடிந்ததே? என்ன, உடனடியாக அவருக்கு முடிவுரை எழுதியது, இந்தியாவின் சாதனை!

---

இந்தியாவிற்கு அறிவுரை சொல்லுமளவுக்கு அப்பாடக்கர் இல்லை என்றாலும், அங்கீகாரத்தின் அவசியத்தை புரிந்துக்கொள்ள வேண்டியது நமக்கு மிக அவசியம். இந்திய சமூகத்தில் அங்கீகாரம் அவ்வளவு சீக்கிரம் எதற்கும் கிடைத்துவிடாது. ”இது என்ன பெரிய விஷயமா?” என்ற மனோபாவம் தான் இதற்கு காரணம்.

நம்மை சுற்றி நடக்கும் சிறு சிறு முயற்சிகளுக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களிடம் நமது பாராட்டுகளை கொண்டு சேர்க்கும்போது, ஏதோ நம்மால் ஆன அளவில் ஒரு சின்ன மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது. நமது வீட்டில் இருந்து, அலுவலகத்தில் இருந்து இதை நாம் தொடங்கலாமே?

முதல் முயற்சிகளை தொடங்கி வைத்த அனைத்துத்துறை இந்தியர்களுக்கும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

---

டிஸ்கி - கீழ்க்கண்ட இணைப்புகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

இணைப்புகள்:-http://drsubhasmukhopadhyay.blogspot.com/
http://www.drsubhasmukherjee.com/
http://en.wikipedia.org/wiki/Subhash_Mukhopadhyay_(physician)

.