Sunday, June 19, 2016

கண்டுப்பிடி மிஸ்டர் ஸ்லையை!!

ஊடக அறம் என்ற வார்த்தை பிரயோகம், சமீப காலங்களில் அடிக்கடி நம்மிடம் அடிப்படுகிறது. ஊடக நிறுவனங்களின் வியாபார வெறியினால் பலமாக அது மிதிபடுவதினால் ஏற்படும் சத்தம் காரணமாக இருக்கக்கூடும். தொலைகாட்சிகள், டிஆர்பிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைக் கோர்த்துவிட்டு, தூண்டிவிட்டு, குழாயடி சண்டையை ஏற்படுத்துகிறார்கள் என்றால், பத்திரிக்கைகள் சர்குலேஷனைக் கூட்ட கருத்து கணிப்பு, புலனாய்வு போன்றவற்றை உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்கிறார்கள்.

சர்குலேஷனைக் கூட்ட, பத்திரிக்கைகள் கடைப்பிடிக்கும் பல யுக்திகளைக் கண்டிருக்கிறோம். உற்பத்தி செலவுக்கு கீழே பத்திரிக்கையை விற்று, வாசகர் எண்ணிக்கையைக் கூட்டிய நிறுவனத்தைத் தமிழ் வாசகர்கள் அறிவார்கள். புது பேப்பரை வாங்கி, எடைக்குப் போட்ட வரலாறும் நம்மூரில் உண்டு.

சர்குலேஷனை அதிகரிக்க, பலவித வழிமுறைகளை உலகம் முழுக்க இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மினசோட்டாவின் ட்ரிப்யூன் நாளிதழ் செய்த ஒரு ஐடியா, இன்றும் கேட்க சுவையானது. ஒப்பிட்டுக்குரியது.1907இல் அமெரிக்காவில் ஒரு நாளிதழின் விலை - ஒரு செண்ட். நீண்டகால சந்தாதாரர்களை அதிகரிக்க, மினசோட்டாவின் ட்ரிப்யூன் நாளிதழ் உருவாக்கிய கதாபாத்திரம் தான் - மிஸ்டர் ஸ்லை (Mr. Sly). கற்பனை கதாபாத்திரத்தை, நிஜத்தில் உலவவிட்டு, அவரைச் சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு டாலர் ஐம்பதில் இருந்து இருநூற்று ஐம்பது டாலர் வரை பரிசு என்று அறிவிக்கப்பட்டது.

போட்டி அறிவித்த நாளில் இருந்து, தினமும் அவர்களது நாளிதழில் திருவாளர் ஸ்லையின் அடையாளங்கள் சிறு குறிப்புகளாக விவரிக்கப்பட்டது. மின்னியாபோலிஸ் நகரின் எந்த ஏரியாவில், அவர் ரவுண்ட்ஸ் வருவார் என்பதும் தெரிவிக்கப்பட்டது. வாசகர்கள், யார் மிஸ்டர் ஸ்லை என்று நினைக்கிறார்களோ, அவரிடம் சென்று "நீங்கள் தானே மிஸ்டர் ஸ்லை?" என்று கேட்க வேண்டும். உண்மையிலேயே, அவர்தான் மிஸ்டர் ஸ்லை என்றால் மறுக்காமல் ஒத்துக்கொள்வார். கையில் அன்றைய நாளிதழோடு, அவரை அப்படியே நாளிதழின் அலுவலகத்திற்கு கூட்டி சென்றால் ஐம்பது டாலர்கள் கொடுப்பார்கள். கூடவே, ஆறு மாத சந்தா வைத்திருந்தால், நூற்றி ஐம்பது டாலர்கள் பரிசு. ஒரு வருட சந்தா என்றால் இருநூற்று ஐம்பது டாலர்கள் பரிசு. என்னவொரு ஐடியா!! அன்றைய காலக்கட்டத்தில், ஒரு செண்ட்டில் விற்றுக்கொண்டிருந்த நாளிதழ், இருநூற்று ஐம்பது டாலர்கள் பரிசாக அளிக்கிறதென்றால், அதற்கு ஆசைப்படும் மக்கள், ஒரு வருட சந்தா வாங்க மாட்டார்களா? வாங்கினார்கள். வாங்கி ரசீதைக் கையோடு வைத்துக்கொண்டு, இந்த போட்டி நடைபெறும் சமயம் தெருவெங்கும் 'துப்பறியும் சாம்பு'வாக சுற்றிக்கொண்டிருந்தார்கள். போட்டிக்கான காலம், மிஸ்டர் ஸ்லை பிடிபடும் வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மிஸ்டர் ஸ்லையும், நாளிதழில் தினமும் தான் சுற்றி வந்த அனுபவத்தை எழுதிக்கொண்டு வந்தார். தான் அன்று ஒரு ட்ராபிக் போலீஸை சந்தித்தேன், அந்த துணிக்கடைக்கு சென்றேன், கல்லூரியில் ஒரு நபரிடம் பேசினேன் என்பது போல ஒவ்வொரு தினத்தின் நடப்புகளையும் எழுதி வந்தார். அவரை சந்தித்தவர்கள் அதை படித்தால், அடடா விட்டுவிட்டோமே!! என்று நினைக்கும்வாறு ஆனது. சிலர், 'அவனா நீ?' என்று நினைவு அடுக்குகளில் அவரது பிம்ப அடையாளத்தை தூசு தட்டி எடுத்து, அடுத்த நாளில் பிடித்துவிடலாம் என்று வீராவேசத்துடன் கிளம்பினார்கள். பத்திரிக்கையிலும், தலை, நாடி, காது என்று சிறு சிறு படங்களை வெளியிட்டு, தினசரி ஹைப் கூட்டினார்கள்.

பரிசு பெறும் ஆசையில், அவரைப் போல இருந்த சிலரை, பத்திரிக்கை ஆபிஸிற்கு இழுத்து வந்து சில ஆர்வ கோளாறுகள் பரிசு கேட்டார்கள். 'நான் அவன் இல்லை' என்று இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்து செல்வது பெரும்பாடாகியது. ரொம்ப அல்பமா இருக்கே!! இப்படியெல்லாமா அமெரிக்கர்கள் நடந்துக்கொள்வார்கள்? என்று நினைப்பே தேவையில்லை. ஓசியில் கொடுத்தால், பினாயிலையே குடிக்க தயாராகும் கலாச்சாரம், உலகம் முழுக்க உண்டு. அமெரிக்காவில், தேங்க்ஸ்கிவிங் (Thanksgiving) டீல் என்றால் பெஸ்ட் பை (Best Buy) கடை முன்னால், பெட் தலையணை சகிதம் படுப்பவர்களும் உண்டு. ஐக்கியாவில் முதல் நாள் டிஸ்கவுண்ட் சேல் என்றால், அலுவலகத்திற்கு லீவ் எடுத்து ஷாப்பிங் செல்பவர்களும் உண்டு. அதனால், மிஸ்டர் ஸ்லையை எப்படியாவது கண்டுபிடித்திட வேண்டும் என்று வெறியுடன் பல பேர் அன்றைய மின்னியாபோலிஸில் 'மிருதன்'களாக சுற்றிக்கொண்டிருந்தனர் என்பது நம்ப கடினமான செய்தி இல்லை.

இவர்களுடைய கண்களுக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டு, மிஸ்டர் ஸ்லை தெரு தெருவாக சுற்றிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இரு வாரங்களுக்கு மேலானது, அவர் மாட்டிக்கொள்ள. ஒரு சுபயோக தினத்தில், மிஸ்டர் ஸ்லை ஒரு ஹோட்டலின் வாசலில், சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ரிச்சர்ட்சன் என்பவரிடம் கையும், சந்தா ரசீதுடன் மாட்டிக்கொண்டார். ஒரு வருட சந்தா வைத்திருந்ததால், டாப் ப்ரைஸான இருநூற்று ஐம்பது டாலர்களைப் பரிசாக பெற்றார் ரிச்சர்ட்சன். மிஸ்டர் ஸ்லை தேடுதல் கூத்தும் அன்றுடன் முடிவுக்கு வந்தது. பரிசு பணத்தை படிப்புக்காக செலவிட போவதாக ரிச்சர்ட்சன் தெரிவித்தார். பிறகு, என்ன செய்தாரோ? ரிச்சர்ட்சனுக்கே வெளிச்சம்.

---

இந்த தேடுதல் கூத்தை வாசிக்கும் போது, நம்மூரின் தேர்தல் கூத்து தான் நினைவுக்கு வருகிறது. இதுவரை 'அடுத்த முதல்வர் நாந்தான்' என்று கிளம்பி வந்தவர்கள், தற்சமயம் ஒபாமா, கேஜ்ரிவால், பிரபு போன்றோரின் புண்ணியத்தில் 'மாற்றம்', 'மாற்று அரசியல்', 'நம்பிக்கை' (அதானே எல்லாம்!!) என்று கீவேர்ட்ஸை மாற்றிப்போட்டு கிளம்பிவிட்டார்கள். "எங்கள் மேல் ஊழல் குற்றசாட்டே இல்லை' என்று பவுசாக கூறுபவர்கள், மைண்ட் வாய்ஸில் 'இதுவரை அதற்கான வாய்ப்பே எங்களுக்கு கிடைக்கவில்லை' என்று கவலையுடன் கூறிக்கொள்வதும் மக்களுக்கு கேட்கத்தான் செய்கிறது.

மக்கள் நிலையும் குழப்ப நிலைதான். 250 டாலர் பரிசுக்காக, மிஸ்டர் ஸ்லையை தேடியலைந்த மினசோட்டா வாசகர்கள் போல், தங்களைக் காக்க வரும் தேவதூதன் யார் என்று தெரியாமல், விஜயகாந்த், அன்புமணி, வைகோ, திருமாவளவன், நல்லகண்ணு, சகாயம், கலாம் உதவியாளர் என்று வருபவர்களை எல்லாம் பார்த்து, எது மாற்றம், எது ஏமாற்றம் என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார்கள். நல்லா கேள்விக் கேக்குறாரே என்று ரங்கராஜ் பாண்டேவைக்கூட சட்டசபைக்கு அனுப்பி வைக்கலாமே என்று சிலர் யோசிக்கும் நிலை வந்துவிட்டது. அரே, ஒ சம்பா!!

உங்களுக்காவது தெரியுமா, நம்மூரில் மறைந்து நடமாடும் அந்த மிஸ்டர் ஸ்லை யாரென்று?

.

No comments: