Sunday, June 19, 2016

லேக் சுப்பீரியர் - ஏரிகளின் ராணி

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/6277


மினசோட்டாவில் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக டுலுத்'திற்கு (Duluth) ஒரு விசிட் அடித்திருப்பார்கள். 'என்னது, மினசோட்டாவில் இருந்துவிட்டு டுலுத் போனதில்லையா?' என யாராவது கேட்டுவிடுவார்களா என பயந்தே பலரும் போய்விட்டு வந்திருப்பார்கள். போலவே, லேக் சுப்பீரியரும். லேக் சுப்பீரியரின் கரையோரத்தில் இருக்கும் டுலுத்திற்கு செல்பவர்களின் கண்களின் இந்த சுப்பீரியர் ஏரி படாமல் போவதில்லை.

அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பகுதியிலும், இலையுதிர் காலத்தில் இயற்கையின் வர்ண ஜாலத்தைக் காண சில இடங்கள் இருக்கும். Fall color பார்க்க போகிறேன் என்று செப்டம்பர் இறுதி வாரங்களில் கேமரா தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள். கொலரடோவில் ஆஸ்பென் (Aspen), விர்ஜினியாவில் ப்ளூ ரிட்ஜ் பார்க்வே (Blue Ridge Parkway), கலிபோர்னியாவில் நாபா வேலி (Napa valley) என்று இருப்பது போல் மினசோட்டாவில் சுப்பீரியர் ஏரியை சுற்றியிருக்கும் பகுதிகளை இலையுதிர் காலத்திற்கான இடங்களாக சொல்லலாம்.

உண்மையில், லேக் சுப்பீரியர் எக்காலத்திலும் செல்ல உகந்த இடம்.

----

லேக் சுப்பிரியர். பெயருக்கேற்றாற் போல் பிரமாண்ட ஏரி. உண்மையில், தியாரிட்டிக்கலாக மட்டுமே இது ஏரி. பார்க்கும் எவர் கண்ணுக்குமே இது கடல். பரப்பளவில், உலகின் மிக பெரிய ஏரி இதுதான்.



ஏரியில் என்ன பார்க்கலாம்? என்னது, வாத்து, கொக்கா? அது சாதா ஏரியில். இது லேக் சுப்பீரியர். உலகின் ராட்சதக் கப்பல்களை, இந்த ஏரியில் காணலாம்.

கப்பலா? ஏரியிலா? என்று தான் எனக்கும் முதலில் ஆச்சர்யமாகவும், புரிந்துக் கொள்ள முடியாததாகவும் இருந்தது. ஏரி என்பது நான்கு புறமும் நிலப்பரப்புகளால் சூழ்ந்திருக்கும். பிறகு, கப்பல் எப்படி? மிகப் பெரிய ஏரி என்பதால், ஏரிக்கரையோரமிருக்கும் ஊர்களை இணைப்பதற்கான போக்குவரத்து கப்பலா? இல்லை. உலகின் எந்த பகுதி கப்பல்களும், இந்த ஏரிக்கு வந்து செல்லலாம். அதெப்படி? இதோ பார்க்கலாம்.




லேக் சுப்பீரியரின் ஒரு முனை லேக் மிச்சிகனை மெல்லிதாக தொட்டுக் கொண்டு இருக்கிறது. புதிதாக காதலிக்க தொடங்கியவன், காதலியை முதன் முதலில் தொடுவானே? அது போல், மெலிதாக. போலவே, லேக் ஹூரானும். அமெரிக்காவின் வடக்கு எல்லையில் கனடாவுடன் பங்குக்கொண்டு இருக்கும் சுப்பீரியர் ஏரி, மிச்சிகன் ஏரி, ஹுரான் ஏரி, எரி ஏரி, ஒண்டரியோ ஏரி ஆகியவை கூட்டாக "கிரேட் லேக்ஸ் ஆப் நார்த் அமெரிக்கா" என்றழைக்கப்படுகிறது.


இந்த கிரேட் லேக்ஸ், செயிண்ட் லாரன்ஸ் ஆற்றின் மூலம் அட்லாண்டிக் கடலுடன் இணைகிறது. இதன் மூலம், உலகின் எந்த மூலையிலிருந்தும், மினசோட்டாவிற்கு கடல் வழி போக்குவரத்து சாத்தியம். கடலே இல்லாத ஊருக்கு கப்பல் வருகிறது. வேடிக்கையாகவும் ஆச்சர்யமாகவும் இல்லை?

---

மினியாபோலிஸில் இருப்பவர்கள், ஒரு வாரயிறுதியில் சென்று வந்துவிடும் தூரத்திலேயே இந்த பிரமாண்ட ஏரி இருப்பது, உள்ளூர்காரர்கள் செய்த புண்ணியம். டுலுத்தில் தொடங்கும் நார்த் ஷோர் ட்ரைவ்வில் (North Shore Scenic Drive) ஆரம்பித்தால், கனடா எல்லையில் இருக்கும் க்ராண்ட் பொர்டேஜ் வரை காணக் கண்கொள்ளக்காட்சிகள் ஏராளம்.



மொத்தம் 142 மைலுக்கு தொடர்ந்திருக்கும் இந்த எழில்கொண்ட பாதையில் வரிசையாக பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. ஒரு நாளில் அனைத்து இடங்களையும் பார்த்துவிட முடியாது. ஒருநாளில் பாதித்தொலைவில் இருக்கும் இடங்களைக் காண முடியும். அதனால், டுலுத்தில் தங்குவதற்கு பதில், இந்த சாலையின் வழியில் இருக்கும் லுட்சன் (Lutsen), க்ராண்ட் மராய் (Grand Marais), ஷ்ரோடர் (Shroeder), டொபே (Tofte) போன்ற ஏதேனும் ஊரில் தங்குவது, பயணத்திட்டத்திற்கு உகந்ததாக இருக்கும். முதல் நாளில், பாதி வழியில் இருக்கும் இடங்களையும், மறுநாளில் மறுபாதியில் இருக்கும் இடங்களையும் அதிக அலைச்சல் இல்லாமல் பார்க்கலாம்.



டுலுத் துறைமுகத்தில் இருக்கும் ஏரியல் ப்ரிட்ஜ் (Aerial Bridge), டூ ஹார்பர் (Two Harbors) எனும் ஊரில் இருக்கும் லைட் ஹவுஸ், கூஸ்பெர்ரி அருவி (Gooseberry falls), ஸ்ப்ளிட் ராக் லைட் ஹவுஸ் (Split Rock light house), டெட்டகவுச் பூங்கா (Tettagouche State Park), டெம்பரன்ஸ் ஆறு (Temperance River), லுட்சன் மலைத்தொடர் (Lutsen Mountains), கன்ப்லிண்ட் மலைப்பாதை (Gunflint trail), ஜட்ஜ் மெக்னே பூங்கா (Judge C.R. Magney state park), க்ராண்ட் பொர்டேஜ் பூங்கா (Grand Portage state park) போன்றவற்றைக் குறிப்பிட்டு சொல்லலாம். ஆனால், அவரவர் ரசனைக்கேற்ற உலாத்தல்களே சுகம்.

இந்த பாதையில் ஒரு பக்கம் சுப்பீரியர் ஏரி. மறுபக்கம் மலைத்தொடர். ஒருமுறை ஒருபக்கம் மலை ஏறி அருவிகளைப் பார்த்தோமானால், அடுத்த முறை மறுபக்கம் இறங்கி அருவி வந்துக்கொட்டிய நீரை ஏரியில் பார்க்கலாம்.



இந்த வழியில் ஒன்றைக் கவனிக்கலாம். மற்ற இடங்களில் வழியெங்கும் மெக் டொனால்ட்ஸ், பர்கர் கிங், சீப்போட்லே என அமெரிக்க சம்பிரதாய தொடர் சங்கிலி உணவகங்களை காண்போம். ஆனால், இந்த வழியில் முழுக்க உள்ளூர் உணவகங்களே இருக்கும். இந்திய உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்கள், இதனைக் கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளுடன் இருப்பது அவசியம். எந்த உணவும் ஓகே என்பவர்கள், இந்த ஏரியில் பிடித்த மீன் வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவினை ஒரு கை, இல்லை ஒரு வாய் பார்க்கலாம்.



அதே போல், தங்குமிடங்களும் பெரும்பாலும் உள்ளூர் வர்த்தக நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. வருடத்தின் பெரும்பாலான நாட்கள், லாட்ஜ்களில், தனி வீடுகளில் இடம் கிடைப்பதில்லை. அதனால், பயணத்திற்கு வெகுநாட்களுக்கு முன்பே தங்குமிடத்தை முடிவு செய்து, ஏற்பாடுகளைச் செய்துக்கொள்வது இங்கு அவசியம்.

விதவிதமான இடங்கள் இருப்பதால், மலை ஏற விருப்பம் இருப்பவர்களுக்கும் பிடிக்கும், ஏரிகரையோரம் அமர்ந்து கதைப் பேசுபவர்களுக்கும் பிடிக்கும். எப்படியானாலும், லேக் சுப்பீரியர் உங்களை ஏமாற்றப் போவதில்லை. உலகின் நல்ல தண்ணீரில் 10 சதவிகிதம் கொட்டிக்கிடக்கும் இடமாயிற்றே!!

----

லேக் சுப்பீரியர் செல்பவர்கள், நேரமிருந்தால் பயண இணைப்பாக அப்போஸ்சில் தீவுகளுக்கும் சென்று வரலாம்.



21 தீவுகள் கொண்ட இந்த அப்போஸ்சில் தீவுக்கூட்டமும் லேக் சுப்பீரியரில் தான் இருக்கிறது. ஆனால், விஸ்கான்சின் மாகாணத்தில். ஆம், மினசோட்டா, விஸ்கான்சின், மிச்சிகன் என மூன்று மாகாணங்கள் லேக் சுப்பீரியரின் ஓரத்தில் அமெரிக்க பக்கம் இருக்கின்றன. மறுபக்கம், கனடாவின் ஒண்டாரியோ.

அப்போஸ்சில் தீவுகளின் சிறப்பம்சம் - இங்கு அமைந்திருக்கும் கடல் குகைகள். கயாக்கிங் ஆசை இருப்பவர்கள், கடல் குகைகள் அதிகமிருக்கும் சண்ட் தீவுக்கோ (Sand island), அல்லது டெவில்ஸ் தீவுக்கோ (Devils island) வாடகைக்கு படகு எடுத்துச் சென்று, அங்கிருந்து கயாக் மூலம் இந்த கடல் குகைகளுக்கு உள்ளே சென்று இயற்கையை தரிசிக்கலாம். பனிக்காலங்களில், இந்த குகைக்களுக்குள் ஒரு நடை சென்றுவிட்டு வரலாம்.

மற்றபடி, இங்கிருக்கும் க்ரூஸ் டூர்கள் மூலமும், இந்த இடங்களைப் பார்த்துவிட்டு வரலாம். போகும் வழியில், ஏரியில் புதைந்துப்போன பழைய கப்பல்களையும் காட்டுகிறார்கள். பனியில்லா காலங்களில் படகு பயணம் என்றால், பனிக்காலங்களில் இந்த ஏரியின் மேல் காரில் செல்லலாம். அச்சமயம், இந்த பனிப்பாதை பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து நாள்தோறும் கண்காணிக்கப்படுகிறது.

க்ரூஸ் பயணங்கள் மூன்றில் இருந்து நான்கு மணி நேரங்கள் எடுப்பதால், அதற்கேற்றாற் போல் தயாராக செல்வது முக்கியம். கூட்டமாக செல்லும் போது, சலிப்பு ஏற்படாமல் பேசிக்கொண்டு செல்லலாம். அதே போல், சாப்பிட்டுவிட்டு செல்வது சிறப்பு. இல்லாவிட்டால், பசி வெறியுடன் கரையை நோக்கி பார்த்துக்கொண்டு வர வேண்டி வரும்!!!

தரவுகள்
https://en.wikipedia.org/wiki/Lake_Superior
http://www.superiorbyways.com/routes/north-shore-scenic-drive
http://www.apostleisland.com/
https://upload.wikimedia.org/wikipedia/commons/a/af/Grlakes_lawrence_map.png

No comments: