Sunday, May 21, 2017

2016 - ஒரு பார்வை

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



எல்லா வருடங்களைப் போலவே, இந்த ஆண்டிலும் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிருக்கிறது. பல நல்லது கெட்டதுகளைச் சந்தித்திருக்கிறது. தூக்கி வாரிப்போடும் சம்பவங்களைச் சகஜமாகக் கடந்திருக்கிறோம். சிலது வெறும் சம்பவங்கள், சிலது மைல்கல்கள், சிலது திருப்புமுனைகள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் வகையில் முத்திரை பதித்திருக்கும் 2016ஆம் ஆண்டின் டைரிக்குறிப்புகளில் எழுதப்பட்ட முக்கிய உலக நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கலாமா?

கனடா தமிழர் பாரம்பரிய மாதம்

அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று, கனடா பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தைத் தமிழர் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்கும் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ் மொழியின் சிறப்பு, கனடிய தமிழர்கள் கனடா நாட்டிற்கு ஆற்றிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் கனடா நாட்டுப் பாராளுமன்றத்தில் ஏற்கப்பட்டது. ஜனவரி மாதத்தில் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை வருவதால், இம்மாதம் தமிழர் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படப்போகிறது. இதில் அரசியல் நோக்கம் இருக்கிறது என்று குரல்கள் கேட்கப்பட்டாலும், தமிழர்களுக்கு இது ஒரு இனிமையான செய்தி. இது போன்ற சட்டங்களும், நடைமுறைகளும் அனைத்து நாடுகளிலும் வரப் போகும் நாள் தொலைவில் இல்லை.

தமிழகச் சட்டசபை தேர்தல்

தமிழ்நாட்டின் பதினைந்தாம் சட்டசபைக்கான தேர்தல் இந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. பொதுவாக, கடந்த சில ஆண்டுகளாக, திமுக-அதிமுக என இரு அணிகளாகப் பிரிந்து, பெரும்பாலான முக்கியக் கட்சிகள் அனைத்தும் தமிழகத் தேர்தலில் போட்டியிடும். இந்தாண்டு வித்தியாசமாக, பல அணிகள் மற்றும் பல கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு முன்பு வரை, பல அணி போட்டியாகத் தெரிந்த தேர்தல் களம், தேர்தல் முடிவுக்குப் பிறகு, பழையபடி, இருமுனை போட்டியாகவே அறியப்பட்டது. இந்தத் தேர்தலில் கட்சிகள் கற்ற பாடம், அவர்களது அடுத்தடுத்த தேர்தல் போட்டி முடிவுகளுக்கு உதவும் என்ற வகையில் 2016 தேர்தல், தமிழக அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான தேர்தல் எனலாம். 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஆளும்கட்சியே ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்ட தேர்தலும் இதுவே.

ஒலிம்பிக்

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ப்ரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்றது. இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் பத்தாயிரம் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் முதல் இடத்தை அமெரிக்காவும், இரண்டாம் இடத்தைப் பிரிட்டனும், மூன்றாம் இடத்தைச் சைனாவும் பிடித்தன. இந்தியாவிற்கு ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் கிடைத்தன. இரண்டுமே சிந்து, சாக் ஷி என்ற பெண் வீரர்களால் கிடைத்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு ஒன்று கூடக் கிடைக்கவில்லை என்பது இந்திய தேசப்பக்தி விளையாட்டு ரசிகர்களுக்குப் போதுமான செய்தியாக இருந்தது.

ப்ரெக்ஸிட்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது என்னும் முடிவுக்கு இவ்வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற வாக்குப்பதிவில் பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். இதன் தாக்கம், உலகமெங்கும் எதிரொலித்தது. உலகமெங்கும் உலகமயமாக்கலுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாகக் கருதுவதற்கு ஏதுவாக அமைந்த முடிவு இது. இந்த முடிவிற்குப் பிறகு, பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் விலகி, தெரெசா மே அவர்கள் பதவிக்கு வந்தார்கள். இதன் பாதிப்பு என்னவாக இருக்கும் எனப் பல கணிப்புகள் வந்தாலும், உண்மை நிலை, வரும் நாட்களில், நாடுகளின், அமைப்புகளின், நிறுவனங்களின் செயல்திட்டங்கள் மூலம் தெரிய வரும்.

ஜிகா வைரஸ்

கடந்த காலங்களில், தென் அமெரிக்க நாட்டு மக்களை, குறிப்பாகக் கர்ப்பிணி பெண்களைப் பதற வைத்துக்கொண்டு இருந்த ஜிகா வைரஸ், 2016 இல் உலகளவில் தனது ஆதிக்கத்தைக் காட்டத் தொடங்கியது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உடல் நல குறைவுடனும், சிறிய தலையுடனும் பிறப்பதாலும், அதைக் குணப்படுத்தக்கூடிய மருந்து இன்னமும் கண்டுப்பிடிக்க இயலாத நிலையில், அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாட்டின் அரசுகள், அதன் மக்களைக் குழந்தை பெறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தும் நிலை ஏற்பட்டது. ஜனவரி 2016ல் உலகச் சுகாதார மையம், இந்த வைரஸ் அமெரிக்காவெங்கும் பரவும் நிலை இந்தாண்டு இறுதிக்குள் ஏற்படும் என்று எச்சரிக்கை மணி அடித்தது. ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட ப்ரேசில் நாட்டில் இந்தாண்டு ஒலிம்பிக்ஸ் நடக்க, இது மேலும் பரவும் என்று உலகளவில் அச்சம் ஏற்பட்டது. நவம்பர் 2016இல் உலகச் சுகாதார மையம் தனது எச்சரிக்கை அளவைக் குறைத்துக்கொண்டது, இவ்வருடத்தின் நிம்மதி எனலாம்.

சிரியா போர் அகதிகள்

2011 இல் ஆரம்பித்த உள்நாட்டு போர், உலக நாடுகளின் பங்களிப்புடன் இன்னமும் தொடர்ந்து வருகிறது. உலகில் அதிகளவில் அகதிகளை உருவாக்கிய போர் இது என்று வர்ணிக்கப்படுகிறது. சிரியா அகதிகளின் பிரச்சினை உலகளவில் விவாதிக்கப்படும் நிலை 2016 இல் உருவானது. இது ஐரோப்பிய நாடுகளிடையே அகதிகளாகக் குடியேறும் மக்களை ஏற்பதில் முரண்பாட்டை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலிலும் விவாதப்பொருளாக இருந்தது. ஒம்ரான் என்னும் போரில் பாதிக்கப்பட்ட சிறுவன், ஆம்புலன்ஸில் ஆரஞ்சு நிற சீட்டில் அழாமல் தனது கூரியத் துக்கத்தை வெளிப்படுத்திய புகைப்படம், உலகளவில் சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை உண்டாக்கியது.


தமிழ் சினிமா

இந்தாண்டு இதுவரை 180க்கு மேலான திரைப்படங்கள் வெளியாகி உள்ள தமிழ் திரையுலகில், வழக்கம் போல் வெற்றி விகிதம் குறைவே. ரஜினி முருகன், பிச்சைக்காரன், தெறி, கபாலி, ரெமோ போன்ற படங்கள் வசூலில் வெற்றிபெற, இறுதிச்சுற்று, விசாரணை, ஜோக்கர், மனிதன், அப்பா, குற்றமே தண்டனை போன்றவை விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படங்களாக வந்தன. இதில் விசாரணை ஆஸ்கருக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டது மகிழ்வைக் கொடுத்தாலும், அது இறுதிசுற்றுக்குத் தேர்வுபெறாமல் போனது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்தது. அதே சமயம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பீலே படத்திற்காக இன்னமும் ஆஸ்கர் போட்டியில் இருப்பது, நம்மவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் செய்தி. 2016 இல் நிகழ்ந்த கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம், கவிஞர் நா. முத்துக்குமார், கவிஞர் அண்ணாமலை போன்றோரின் மரணங்கள், திரையுலகினர் மட்டுமில்லாமல், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஜியோ மொபைல்

ரிலையன்ஸ் நிறுவனத்தால், செப்டம்பர் மாதம் இந்திய மார்க்கெட்டில் இறக்கிவிடப்பட்ட ஜியோ மொபைல் சேவை, பயனாளிகளுக்கு இலவசத்தை அள்ளிவிட, இந்திய அலைபேசி சேவை தனது அடுத்தக்கட்டத்திற்குத் தாவியது. இலவச உள்நாட்டு அழைப்புகள், சல்லிசான விலையில் 4ஜி இணையச்சேவை போன்றவை, பிற இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. சேவை அறிமுகமான ஒரே மாதத்தில் 16 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பிடித்தார்கள். 83 நாட்களில் 50 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற பொழுது, இது எந்த நாட்டிலிலும் இல்லாத ரெக்கார்ட் ஆனது. இதற்கு முன்பு, ஏர்டெல் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சேர்க்க 12 வருடங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. வருங்காலப் பரிமாற்றங்கள் அனைத்தும் அலைபேசி வழியே என்னும் நிலை இந்தியாவில் வருவதற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட அதிரடி தொடக்கம் இது எனலாம். உண்மையான பயன் யாருக்கு என்பது போகப் போகத் தான் தெரியும்.

அமெரிக்கத் தேர்தல்

உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த 58வது அமெரிக்கத் தேர்தலில் பாப்புலர் வாக்குகளின் முடிவுகள், நவம்பர் 9 ஆம் தேதியன்று வெளியானது. பெரும்பாலான கணிப்புகளுக்கு நேரெதிராக இத்தேர்தலில் அமெரிக்கத் தொழிலதிபர் ட்ரம்ப் அவர்கள் வெற்றிப்பெற்றது, அனைவருக்குமே வியப்பை அளிப்பதாக இருந்தது. பிரமிளா ஜெயபால், கமலா ஹாரிஸ், ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமி பேரா ஆகிய இந்திய வம்சாவழி வேட்பாளர்கள் இத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி இத்தேர்தலில் தோல்வியடைய, பிரச்சாரத்தின் போது சர்ச்சைகள் பல கிளப்பிய ட்ரம்ப் வெற்றிப்பெற்றதால், நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புப் பேரணிகள் சில நாட்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தல் முடிவில் ரஷ்யாவின் பங்கு இருக்கிறது என அடுத்தச் சர்ச்சை கிளம்ப, தேர்தல் சூடு இன்னமும் அணையாமல் இருக்கிறது. ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க அதிபராக 2017 ஜனவரியில் பதவியேற்க உள்ளார். தற்சமயம், தன்னுடன் அமைச்சர்களாகப் பணிபுரிய உள்ள சகாக்களைத் தேர்ந்தெடுப்பதில் பிசியாக உள்ளார்.

ரூபாய் 500 & 1000 பண மதிப்பிழப்பு

கருப்புப்பணத்தை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியினால், நவம்பர் 9ஆம் தேதியன்று ஐநூறு, ஆயிரம் ரூபாய் தாள்கள் மதிப்பிழக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒருபக்கம் கருப்புப்பணத்தை அழிக்கும், கள்ளப்பணத்தை ஒழிக்கும், தீவிரவாதத்தைக் குறைக்கும், மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் என்று ஆதரவு குரல்கள் கேட்டாலும், மறுபக்கம் ஏடிஎம் வாசலில் பணத்திற்காகக் காத்திருக்கும் மக்களிடம் இருந்து எழுந்த கோபக்குரல்கள் குறைந்த பாடில்லை. இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார மேம்பாட்டுக்கு இது கண்டிப்பாக உதவும் என்று நம்பிக்கை கூறப்படும் இந்த நடவடிக்கை, இந்த ஆண்டின் முக்கியமான இந்தியப் பொருளாதார நிகழ்வு என்றால் அது மிகையில்லை. முடிவு எப்படி இருக்கும் என்பது வரும் ஆண்டுகளில் தான் தெரியும்.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்

ஜெயலலிதாவிற்கு அரசியல் உச்சத்தையும், வாழ்வின் மறைவையும் ஒருங்கே பதிவுச் செய்த வருடம் இது. மே மாதம் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்கு பிறகு, தொடர்ச்சியாக ஆட்சியைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொண்டார். செப்டம்பர் மாதம், உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதியன்று மரணித்தார். ஜெயலலிதா அவர்களின் மரணம், அவருடைய கட்சியான அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதால், இது ஒரு புதுத் தலைமையை உருவாக்கும் சூழலைக் கொண்டு வந்து தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

சென்னை வர்தா புயல்

2004 ல் சுனாமி, 2015 ல் வெள்ளம் என்று இயற்கை பேரிடர்களைச் சந்தித்த சென்னை மக்கள், இந்தாண்டு எதிர்க்கொண்டது, வர்தா புயலை. பாகிஸ்தானால் வர்தா என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் புயல், டிசம்பர் 12 ஆம் தேதியன்று சென்னையைக் கடக்க, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் அடித்த புயல் காற்றின் வீரியத்தை, இந்தத் தலைமுறை மக்களால் நேரடியாகக் காண முடிந்தது.. மரங்கள், மின் கம்பங்கள், வாகனங்கள் எனப் புயலில் அடித்துக் கவிழ்க்கப்பட்ட சேதாரங்கள் ஏராளம். இதுவும் கடந்து போகும் என்று சென்னை மக்கள் சில நாட்களில் சகஜ வாழ்வுக்குத் திரும்பினர்.

பிரபலங்களின் மரணங்கள்

2016 இல் உலகின் பல பிரபலங்களின் மரணங்களைக் காண வேண்டியதாகப் போனது. கியூபப் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ அவர்கள் நவம்பர் 25ஆம் தேதியன்று மறைந்தார். இது கியூபா மட்டுமின்றி உலகமெங்கும் அவரைப் பின் தொடர்ந்து வந்தவர்களைக் கவலையுறச் செய்தது.

மினசோட்டாவைச் சார்ந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான ப்ரின்ஸின் மரணம், மினசோட்டாவில் அவரைப் பற்றியே சில நாட்கள் அனைவரையும் பேச வைத்தது. ஏப்ரல் 21க்குப் பிறகான நாட்களில், எங்கும் செவ்வூதாவாக இருந்தது. அவர் மரணம் மினசோட்டா மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தை அந்நாட்களில் நேரடியாகக் காண முடிந்தது,

தமிழ்நாட்டின் மூத்த கர்னாடக இசைக்கலைஞரான பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் நவம்பர் 22ஆம் தேதி அன்று மறைந்தார். பாடல்கள் மட்டுமின்றித் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். பலருக்கு இசை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அவர் பெறாத விருதில்லை எனலாம். அவரின் மரணம், கண்டிப்பாக இசையுலகிற்குப் பெரும் இழப்பே.

மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் யுக்தியாளருமான சோ ராமஸ்வாமி, டிசம்பர் 7ஆம் தேதியன்று மறைந்தார். பத்திரிக்கையாளர், அரசியல் ஆலோசகர் என்பதெல்லாம் அவருடைய சுருக்கமான அடையாளங்கள். மேடை நாடக, சினிமா மற்றும் டிவி நாடக நடிகர், இயக்குனர், வக்கீல், எம்பி, எம்டி என்று அவர் பார்த்த வேலைகள் ஏராளம். பழகிய ஆளுமைகள் பலர். கொண்ட அனுபவங்கள் எக்கச்சக்கம். ஹாஸ்ய உணர்வு மிக்கவர். எவ்வளவு பேருக்கு அவரைப் பிடிக்குமோ, அதே போல் அவர் மேல் வெறுப்புக்கொண்டவர்களும் ஏராளம். ஆனால், அது எதையும் கண்டுக்கொள்ளாமல், தன் கருத்தைப் பயப்படாமல், எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே.

இப்படி மரணித்த பிரபலங்கள் மட்டுமின்றி உதித்த பிரபலங்கள் பலர் இந்த ஆண்டில் உள்ளனர். அவர்களெல்லாம் யார் என்பதை வருங்காலம் அடையாளம் காட்டும்!!

2016 உங்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அது வரும் ஆண்டில் நல்ல பலன்களைக் கொண்டு வர, அனைவருக்கும் எங்களது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

.

No comments: