Thursday, October 4, 2012

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் நானும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், என்னை ஏதேனும் விதத்தில் பாதிக்கும் என்று தோன்றியதே இல்லை. இன்று என்னை பாதித்தது. பெரிதாக ஒன்றும் இல்லை. என் தினசரி அலுவலக வேலையில் ஒரு சின்ன பாதிப்பு.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஒரு அங்கமாக, இரு வேட்பாளர்களும் ஒரே மேடையில் விவாதம் நடத்துவார்கள் என்று நம்மூர் செய்தித்தாளில் படித்து கேள்விப்பட்டிருக்கேன். அவ்வித முதல் விவாதம் இன்று டென்வரில் நடந்தது. நடந்த இடம், நான் அலுவலகம் செல்லும் சாலையில் இருக்கும் ஒரு யூனிவர்சிட்டியில்.

ஒருவாரம் முன்பே இந்த சாலை இன்றைய தினத்தில் மாலை நேரத்தில் அடைக்கப்படும் என்று தகவல் வந்து சேர்ந்தது. அந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும் என்றில்லை. ஆனால், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் சீக்கிரமே சாயங்காலம் அலுவலத்தில் இருந்து கிளம்ப சொல்லிவிட்டார்கள்.

அப்புறம் என்ன, வீட்டிற்கு வந்து மீதி வேலையை பார்த்தேன். அவ்வளவுதான்!!!

----

யூ-ட்யூபில் நேரடி ஒளிப்பரப்பில் இந்த விவாதத்தைப் பார்க்க நேர்ந்தது.





அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர், சும்மா பேச்சாளராக இருந்தால் மட்டும் போதாது. விவரம் தெரிந்த பேச்சாளராக இருக்க வேண்டும் என்று புரிந்தது. என்னதான், இவர்களுக்கு பின்னால் இருக்கும் தேர்ந்த அணிகள் பிரச்சார யுக்தி அமைக்கும் என்றாலும், இம்மாதிரி விவாதத்தில் மேடையில் இருக்கும் வேட்பாளர்களுக்கு பொருளாதாரம், வணிகம், மருத்துவ காப்பீட்டு, வெளியுறவு கொள்கை போன்ற மக்களைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், கிழித்து எறிந்துவிடுவார்கள்.

எனக்கு ரொம்ப புரியவில்லை என்றாலும், விவாதம் ஆர்வம் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

எனக்கு புரிந்த வகையில், ரோம்னியின் கொள்கைகள், ஒபாமாவை விட சிறப்பானதாக இல்லை என்றாலும்,  ஒபாமாவை விட ரோம்னி நன்றாக பேசியது போல் இருந்தது. ஆட்சியில் இல்லாதவர்கள், ஆட்சியில் இருக்கும் குறைகளை சொல்லி அதிபரை தொங்க விடலாம். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், எதை வேண்டுமென்றாலும் செய்வோம் என்று புருடா வாக்குறுதி கொடுக்கலாம். அதுவே ஆட்சியில் இருப்பவர்களால், தங்கள் கொள்கைகளை பற்றி அதுபோல் கூற முடியாது. லட்சணம் ஏற்கனவே தெரிந்திருக்கும். இது போன்ற காரணங்களால், ரோம்னி பெட்டராக பேசியது போல் தெரிந்திருக்கலாம்.

---

கொஞ்சம் கூட கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல் பேசுகிறார்கள். தாக்கும்போது கூட, முகத்தில் சினேக புன்னகையுடன் தாக்குகிறார்கள். நடுவராக இருப்பவர் கொடுக்கும் நேரத்திற்கு பேசி, நடுவர் பேச்சுக்கு மதிப்பளிக்கிறார்கள். (”President, please tell about this in 2 minutes...”) அடுத்தவர் பேசும்போது, சீரியஸாக பேனாவால் நோட்ஸ் எடுத்து, அதற்கு பதிலளிக்கிறார்கள். அவ்வப்போது அசட்டு ஜோக்கும் அடிக்கிறார்கள். இறுதியில் குடும்பத்துடன் இணைந்து, குசலம் விசாரிக்கிறார்கள்.

இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும், முதன்முதலாக நேரடி ஒளிபரப்பில் கண்டது - நல்ல அனுபவம்.

இருந்தாலும், நான் நம்மவர்களை விட்டுக்கொடுக்க மாட்டேன். அமெரிக்கர்கள் போலியானவர்கள். எதிராளியை தோற்கடிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாலும், வெளியில் போலியாக நட்பு பாராட்டுகிறார்கள். ஆனால், நம்மாட்கள் அப்படி இல்லை. மனதிற்குள் என்ன நினைக்கிறார்களோ, அதையே வெளியேயும் காட்டுகிறார்கள். பேச்சிலும் காட்டுகிறார்கள்.

---

சென்ற மாதம் விழுப்புரத்தில் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கொடுத்த ஒரு பதிலடி, சாம்பிளுக்கு....

"தினமும் கோர்ட்டில் வாய்தா வாங்குபவர், தன்மானம் பற்றி பேசுவதா? அரசு பொருளை விலை கொடுத்து வாங்கியது தவறென, கோர்ட் சுட்டிக்காட்டும் அளவிற்கு நடந்துள்ளீர்கள். அட தன்மானமே, உன் நிலைமை இப்படி ஆயிற்றே?

200 முறை வாய்தா வாங்குவது, நீதிபதி மேல் புகார் கூறுவது, 68 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மானம் போகவில்லையா...????கருணாநிதிக்கா தன்மானம் போயிற்று. தன்மானம் என்றால் என்ன பொருள் என, உனது தமிழாசிரியர் கூறுவார். எல்லாம் எனக்கு தெரியும். அதற்குரியவர் யார் என, ஒரு நாள் விவாதம் நடத்திப் பார்க்கலாமா... சட்டசபையில் தேவையில்லை; பொது மண்டபத்தில் பேசலாமா... பட்டிமன்றத்தில் தகராறு வந்து விடாது. பயம் வேண்டாம். ஆணும், பெண்ணும் வாதிடும்போது கைகலப்பு நேராது. அதனை நான் விரும்பவும் இல்லை. இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், தம்பிமார்களை தட்டிவிட்டால் பிரச்னை எங்கேயோ போய் விடும்."

 
.

No comments: