Saturday, September 4, 2010

ஜெயமோகன் பற்றி சுஜாதா

சுபமங்களாவில் மார்ச் 1993இல் வந்தது.

---

தற்போது தமிழில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்களில் கவனிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஜெயமோகனின் பெயர் இருக்கிறது. சில ஆண்டுகளாக எழுதிவரும் இவர் கதைகளை நான் அவ்வப்போது கவனித்ததுண்டு. போன வருஷம் இவர் கதையான ‘ஜகன் மித்யை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜனாதிபதி பரிசு பெற்றது சந்தோஷமாக இருந்தது. (இவருடைய வேறு நல்ல கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது வேறு விஷயம்.) சிறு பத்திரிக்கைகளில் எழுதிவரும் ஒரு இளம் எழுத்தாளருக்கு இந்த மாதிரி அடையாளம் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயமே.



”திசைகளின் நடுவே”. ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் ஏற்கனவே வெளிவந்து ‘நல்ல கவனிப்பு பெற்றது’ என்று பின்னட்டை சொல்லும் இந்த புத்தகம் - பதினாலு சிறுகதைகளின் தொகுப்பு. அவருடைய சிறுகதை திறமையை கவனிக்க போதுமான கதைகள் உள்ளன.

என்னை பொறுத்த்வரையில் நான் ஒரு சிறுகதையின் உணர்ச்சிபூர்வமான அனுபவத்தில் பங்கேற்கும்போது தான் அது எனக்கு நல்ல கதையாகிறது. இல்லையெனில் நான் அதை உடனே நிராகரித்துவிடுகிறேன். மற்றவன் அனுபவம் எனக்கு முக்கியமில்லை.

இந்த பரீட்சையில் ஜெயமோகனின் “திசைகளின் நடுவே” தொகுப்பில் பதினான்கு கதைகளில் ஐந்து தேர்ந்தன. இதனால் மற்றவை நல்ல கதைகள் இல்லை என்று சொல்லவில்லை. எனக்கு அவை உறைக்கவில்லை.

‘பல்லக்கு’ என்ற அபாரமான கதையில் நான் சொன்ன நல்ல கதைக்குரிய அத்தனை அடையாளங்களும் இருக்கின்றன. முதலில் கதாசிரியன் சிருஷ்டிக்கும் தனிப்பட்ட யதார்த்தம். அந்த மலையாளச் சூழல். “ஓர்மிச்சா எனகு கரிச்சல் வரது, ஏமானே” போன்ற வினோத உரையாடல்கள். அற்புதமான வர்ணனைகள். இந்த வகை வர்ணனைகள் அந்தக் கதை சூழலை முழுவதும் அங்கீகரிக்க வைக்கின்றன்.

இந்தச் சூழலில் சொல்லப்படும் சம்பவங்கள் நமக்கு ஏற்படுத்தும் ‘ரியலைஸேஷன்’ தான் அந்த கதையின் இலக்கியத்தரத்தை உயர்த்துகிறது.

ஜெயமோகன் ஒரு வேற்று மொழிக்காரரின் அசாத்திய தைரியத்துடன் சிறுகதையின் பலவித வடிவங்களை முயற்சிப்பதை பாராட்ட வேண்டும். வேதகாலக் கதைகள், சாமியார் கதைகள், பிலாசபி கதைகள் எல்லாமே தயங்காமல் முயற்சிக்கிறார்.

”திசைகளின் நடுவே”யின் முன்னுரையில் “அறச்சார்பே எனது கடவுள். அறச்சார்பற்ற படைப்பை இலக்கியமாக மதிக்க மாட்டேன். கால் சுண்டு விரலால் எற்றித்தள்ள தயங்க மாட்டேன். அவற்றின் சகல அங்கீகாரங்களுடனும் கூட!” என்கிறார். இந்த ஆரவாரமான அலட்டலான முன்னுரையின் தேவையில்லாமலேயே ‘நதி’, ‘வலை’, ‘போதி’, ‘படுகை’ போன்ற கதைகளை ரசிக்க முடிகிறது.

அறசார்பு என்று எதை சொல்கிறார் என்பது குழப்பமாக இருப்பினும் ஒரு தொகுதிக்கு ஒரு ‘பல்லக்கு’ வந்தாலே போதும்.

.

7 comments:

ராம்ஜி_யாஹூ said...

Thanks for sharing

மதுரை சரவணன் said...

நல்ல விமர்சனம் அதுவும் சுஜாதாவிடம் இருந்து. ஜெயமோகன் அருமையான எழுத்தாளர். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

தமிழ்பாலா said...

ஒருபானைச் சோற்றுக்கு ஒருபருக்கைப் பதம் போதும்! ஒரு நல்ல எழுத்தாளனுக்கு ஒரு நல்ல அறிமுகம் அவன் சார்ந்த அவனுடைய படைப்பில் அவன் எதை அறம் சார்ந்தது என்று எதார்த்தத்தை தன்கையில் எடுக்கின்றானோ அப்போதே சமூகத்திற்கான நலனில் அக்கறை கொண்டுவிட்டான் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் !அவனது படைப்பு மக்களுக்கு எந்த அளவில் நன்மை தரக்கூடியது என்பதை நடைமுறை நிரூபித்த்க் காட்டிவிடும்!அவன் படைப்பு பரிசு பெற்றுவிட்டது என்ற பார்வையில் மட்டும் பார்க்காமல் ,சமூகமுன்னேற்றப் பாதையில் பார்த்தால் நலமாய் இருக்கும், நல்ல படைப்பாளிகளை விமர்சன ஈட்டியால் குத்திக் காயப்படுத்திவிடாமல் ,இப்படி சொல்லி இருந்தால் தேச நலனுக்கு,மக்கள் நலனுக்கு,ஊறின்றி இருந்திருக்கும் என்று சிறப்பிற்கு சிறப்பு செய்தால் நல்ல படைப்பாளிக்கு ஒரு ஊக்கச் சத்து தந்ததுபோல் இருக்கும், நன்றியுடன் தமிழ்பாலா-:

சரவணகுமரன் said...

நன்றி ராம்ஜி

சரவணகுமரன் said...

நன்றி மதுரை சரவணன்

சரவணகுமரன் said...

நன்றி தமிழ்பாலா

Annogen said...

பகிர்வுக்கு நன்றிகள்...