Sunday, September 19, 2010

எந்திரனை வரவேற்கிறேன்

கண்கள் இன்னும் தூக்கத்தில் இருந்து விடுபடவில்லை. பல் தேய்த்தால் சரியாகிவிடும்.

பிரஷ்ஷை வாஷ்பேசின் தண்ணீரில் நனைத்தேன். பேஸ்ட்டை பிதுக்கும் போது கவனித்தேன். ப்ராக்டர் அண்ட் கேம்பிள் ப்ராடெக்ட். உலகமயமாக்கத்தின் விளைவு. கண்கள் விழிப்படைந்தது. உள்ளூர் விக்கோ வஜ்ரதந்தி வாங்கினால், கேர்ள் பிரண்டுடன் கிஸ் சாத்தியமே இல்லை. தவிர, உள்ளூர்காரனாலும் அவனும் முதலாளிதானே?

என்ன செய்யலாம்? கோபால் பல்பொடி, பயோரியா உபயோகிக்கலாமா? அதற்கு முன்னால், தயாரிப்பவர்களின் குடும்ப விவரங்களை விசாரிக்க வேண்டும்.

செங்கல், வேப்பமரம், சாம்பல் - இப்படி ஏதாவது கிடைக்காமலா போய்விட போகிறது? இல்லாவிட்டால், பல் தேய்ப்பதையே புறக்கணித்துவிடப்போகிறேன். அவ்வளவுதானே?

புறக்கணித்துவிடலாமா?

---

இதே ரீதியில் சிந்தித்துக்கொண்டிருந்தால், இவ்வுலகில் புறக்கணிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. இதோ, இந்த வலைப்பூ உள்பட.



எந்திரன். உலகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது. சோத்துக்கே வழி இல்லாத நிலை பலருக்கு. இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு படம் தேவையா? அப்படி கேட்பவர்கள் முதலில் கேட்க வேண்டிய கேள்வி - இவ்வளவு பிரச்சினை இருக்கும் உலகில், சினிமா என்ற கேளிக்கைத்துறை தேவையா? அதைவிட்டு விட்டு, கடைகடையாக ஏறி இறங்கி, ஆஸ்கார் நாமினேஷன் படங்களின் பைரேடட் டிவிடி வாங்கினால் அது மட்டும் பிரச்சினைகளை தீர்த்துவிடப்போகிறதா?

சரி, சினிமா இருக்கலாம். அதில் மக்களின் பிரச்சினையை மட்டுமே பேச வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? பிரச்சினையை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? சினிமாவால் பிரச்சினைகளை தீர்க்க முடியுமா? சினிமா ஒரு தொழில் அல்லவா? இதில் வேறு மாதிரியான முயற்சிகள் இருக்க கூடாதா? பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க கூடாதா? ஒரு படம் உருவாக காரணமாக இருக்கும் பல தொழிலாளர்களின் உழைப்பிற்கு, சரியான பலனை அளிக்க வேண்டுமே? சரி, நல்ல படங்களாக எடுக்கட்டுமே! உழைப்பிற்கு பலன் வந்துவிட போகிறது என்பது அடுத்த கேள்வியாகிறது.

தயாரிப்பவர்கள் நல்ல படத்தை எடுக்க வேண்டும். ரசிகர்கள் நல்ல படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ரசிகர்கள் நல்ல படத்திற்கு வெற்றியை கொடுத்தால், தயாரிப்பவர்கள் நல்ல படத்தை எடுக்க முன்வருவார்கள். இது ஒரு மியூச்சுவலான விஷயம். ரசிகர்களின் ரசனை என்பது ஒரே மாதிரி இருக்காது. சின்ன வயசில் ’சகலகலா வல்லவனுக்கு’ கையை தட்டியவன், பெரிதானவுடன் ‘அன்பே சிவத்தால்’ கவரப்படுகிறான். அவனுக்கு இப்போது ‘சிங்கம்’ பிடிப்பதில்லை. சரி, அவனுடைய பையனுக்கு? உங்களுக்கு பிடிப்பதில்லை என்பதால், உங்களுடைய பையனுக்கு பிடித்ததை அவனுக்கு தடை செய்வது சர்வாதிக்காரமில்லையா?

சில வயதில் சில விஷயங்கள் தான் புரியும். கால ஓட்டத்தில் ஒவ்வொன்றாக புரிந்து அதற்கான பக்குவம் வரும். பூக்க வைக்கிறேன் என்று மொட்டை பிதுக்கினால், அது வளர்ச்சி அல்ல. சிதைத்தல்.

---

யார் வேண்டுமானாலும் படமெடுத்தால் பார்ப்பேன். சன் பிக்சர்ஸ் போன்ற கார்ப்பரேட் சுறாக்களுக்கு ம்ஹும். அவர்கள் மக்களிடம் வெற்றியை வேண்டி படமெடுப்பதில்லை. மக்களின் புத்தியை மழுங்கடித்து, காசை பிடுங்கி வெற்றியை அதிகாரத்துடன் பறிக்கிறார்கள். இதுவா உங்கள் பிரச்சினை?

ஒன்று புரிந்துக்கொள்ளுங்கள். படைப்பு ஒன்று நன்றாக இருந்தால் தான் வெற்றியடையும். இங்கு எது ‘நல்லது’ என்பது தான் உங்கள் குழப்பம். உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையை சொல்லி அழ வைத்தால், நல்ல படைப்பாக இருக்கலாம். மற்றவருக்கு நிஜ உலகின் பிரச்சினையை, சில மணி நேரங்கள் மறக்கடித்து சிரிக்க வைத்தால், நல்ல படைப்பாக இருக்கலாம். அது வேறு விஷயம். மொத்தத்தில், பெரும்பாலோரை ஏதேனும் வகையில் கவர்ந்தால் மட்டுமே வெற்றி. மற்றபடி, எப்பேர்ப்பட்ட வியாபார காந்தமாக இருந்தாலும், சும்மா மக்களை இழுக்க முடியாது. உதாரணம், ரிலையன்ஸின் ராவணன். சன் பிக்சர்ஸின் சுறா.

எந்திரனும் அப்படியே. முன் தீர்மானத்துடன் ஒரு படைப்பை அணுகுவது சரியா? என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.

தவிர, அவர்களாக ‘வேட்டைகாரன்’ வெற்றி, ‘சுறா’ வெற்றி என்று சொல்லிக்கொண்டிருந்தால் உங்களுக்கு என்ன? ரிமோட்டில் இரண்டாவது நம்பரை அழுத்துங்கள்.

---

வறுமைக்கோட்டுக்கு கீழே 37 சதவிகித மக்கள் வாழும் நாட்டில், நூற்றுக்கணக்கில் பணம் கொடுத்து ஒரு படம் பார்ப்பது சரியா? தவறு தான்.

முதலில் ஆயிரக்கணக்கில் முடியாதவர்களுக்கு செலவிடுங்கள். ’என்னால் முடிந்ததை செலவிடுகிறேன். இனி படம் பார்க்கலாமா?’ என்று நீங்கள் கேட்பீர்களானால், ’இல்லை, 37 சதவிகித்தினரும் கோட்டை தாண்டியபிறகு தான் படம் பார்க்க வேண்டும்’ என்று சொல்ல முடியுமா?

ஒரு விஷயம் மறக்க வேண்டாம். 37 சதவிகிதத்தில் சில விகிதங்கள் இப்படிப்பட்ட படங்களின் வெற்றியையும் சார்ந்து இருக்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் பணம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜானாவிற்கு மட்டும் போவதில்லை. பெரும்பகுதி போகும் என்பது உண்மை. அதுவும் ஒருக்கட்டத்தில் வெளி வந்தே தீரும். தவிர, ஆத்தூரில் இருக்கும் தியேட்டரிலும், சென்னையில் இருக்கும் தியேட்டரிலும் ஒரே விலையில் டிக்கெட் விற்கப்போவதில்லை. எங்கு பிடுங்க முடியுமோ, அங்கு பிடுங்குகிறார்கள். முடிந்தவன் கொடுக்கிறான்.

முதல் நாள், முதல் வாரம் என்பது கண்டிப்பாக அவசியமில்லை. 2 கோடி ரூபாய் செலவில் எடுத்த படத்தை பார்க்கும் டிக்கெட் விலையில், 190 கோடி ரூபாய் படத்தையும் பார்க்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்.

---

இம்மாதிரி பிரமாண்ட படங்களால், சிறு முதலாளிகளுக்கு கஷ்டம். சின்ன பட்ஜெட் படங்கள் வெளிவருவதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது இன்னொரு வாதம்.

இரண்டு மாதங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கலாம். ஒரேடியாக வராமல் போகாது.

சிவாஜி, தசாவதாரம் போன்ற படங்களுக்கு பிறகு தானே, சுப்பிரமணியபுரம், பசங்க, அங்காடி தெரு, களவாணி போன்ற படங்கள் வந்தது?

---

நான் பெரும்பாலான படங்களை நண்பர்களுடன் பார்த்தாலும், சில சமயங்களில் என் உறவின சிறார்களை கூட்டிக்கொண்டு திரையரங்கிற்கு செல்லும் பொழுதுகளே மகிழ்ச்சியானவை. அவர்களுக்கான தமிழ்ப்படங்கள் குறைவு. பசங்க போன்ற படங்கள் அவர்களுக்கானது என்றாலும் அவர்கள் பெரிதும் ரசிப்பது தமிழ் கமர்ஷியல் படங்களையும், ஹாலிவுட் டப்பிங் படங்களையும். ரசனை என்பது சூழலால் உருவாக்கப்படுவது என்றாலும், முன்பே சொன்னது போல் காலத்தால் உணர்ந்து பக்குவமடைவது.

நான் சிறுவயதில் ரசித்தது ரஜினியின் ‘ராஜா சின்ன ரோஜா’, ‘அதிசய பிறவி’ போன்ற படங்களை தான். ’பாயும் புலி’, ‘தாய் வீடு’ போன்ற படங்களை செகண்ட் ரிலீஸில் விரும்பி பார்த்திருக்கிறேன். அந்த வயதில் ‘முள்ளூம் மலரும்’ கவர்ந்ததில்லை. அதேப்போல், ரஜினியை பற்றி தெரியாத இந்த தலைமுறை குழந்தைகளைக் கூட ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’ போன்ற படங்கள் கவர்ந்தது. காரணம் - இன்றைய காலத்தில் பலர் காப்பியடித்தாலும் ரஜினிக்கே உரிய வித்தியாசமான நடை, உடை, பாவனை தான். (வட இந்தியர்கள் சிவாஜி ரஜினியை முழுக்க காமெடியாகவே பார்த்தார்கள்)

அந்த வகையில் கதை ரீதியாகவும், மேக்கிங் ரீதியாகவும் ‘எந்திரன்’ குழந்தைகளை பெரிதும் கவரும் என்று எண்ணுகிறேன். ஆரம்ப ஆர்ப்பாட்டங்கள் முடிந்த பிறகு, குடும்பத்துடன் பார்க்கவும் சரியான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இக்காரணங்களுக்காக,

எந்திரனை வரவேற்கிறேன்.

---

என்னிடம் இருப்பது சிலரிடம் இருப்பது போன்ற ஸ்பெஷல் புத்தியா, இல்லை சாதாரண பொது புத்தியா என்று தெரியவில்லை. தோன்றியதை சொல்லியிருக்கிறேன். சில நாட்கள் கழித்து இதே விஷயம் வேறு மாதிரியாகவும் தோன்றலாம். தற்போதைய மனநிலையில் நேர்மையாக பதிவிட்டுயிருக்கிறேன். அவ்வளவுதான். இதற்காக என்னையும் முட்டிப்போட்டு பிரார்த்தனை செய்த கூட்டத்துடன் சேர்த்துவிட வேண்டாம்!

.

17 comments:

Anonymous said...

உள்ளூர் விக்கோ வஜ்ரதந்தி வாங்கினால், கேர்ள் பிரண்டுடன் கிஸ் சாத்தியமே இல்லை//
அட்டகாசங்க...

வினோத் கெளதம் said...

Gud..

Rafeek said...

அருமையான..யதார்த்தமான பதிவு நண்பரே.தெளிவான பதிலை சில ஒப்பாரி திலகங்களுக்கு சிறப்பான பதிலை என் போன்றோர்களுக்காக வழங்கி இருக்கிங்க.நீங்கள் கூறுவது போல.. சந்திரமுகி திரைப்படம் பார்த்து ரஜினி விசிரியான சிறுவன் உதாரணம் என் வீட்டிலும் உண்டு. அவனுக்கு ரஜினியிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை தவிர?

ரா said...

Gud comments....i too agree with your views....
Even i am going to watch it in US..

எல் கே said...

அருமை... கிளாஸ்

எஸ்.கே said...

சில நாட்களாகவே இந்த விஷயம் நிகழ்ந்து வருகிறது. சிலர் எந்திரனை சில காரணங்களுக்காக புறக்கணிக்கலாம் என்கின்றனட். சிலர் புறக்கணிக்க மாட்டோம் என்கின்றனர். ஏதோ பெரிய சமூகப் பிரச்சினை போலாகி விட்டது :-)
எங்கே பார்த்தாலும் எந்திரன் என எனக்கு கூட தன் மீது சலிப்பு வந்தது உண்மைதான். ஆனால் நானும் அதை பார்ப்பேன். வெறும் படமாக அதை நினைத்து. தங்கள் கருத்துக்களே உண்மை புறக்கணிக்க சொல்லப்படுகிற காரணங்கள் உண்மையாக இருந்தாலும் அது சரியான காரணங்களில்லை. படத்தை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் பாருங்கள்.

Mohan said...

ஒரு படத்தை நிராகரிக்கச் சொல்வதற்குப் பதிலாக, அந்த நேரத்தில் வேறு ஏதாவது ஒரு நல்ல படம் வந்திருந்தால்,அப்படத்தைப் புகழ்ந்து,இரண்டு பதிவு எழுதுவது வேண்டுமானால் மக்கள் மனதை நல்ல படங்களைப் பார்க்க வைப்பதற்கு தூண்டுகோலாக இருக்கும்.

நம்மிடம் இருக்கும் பிரச்சனையே, இந்தப் படம் நன்றாக இருக்கிறது.போய் பாருங்கள் என்று அழுத்தி சொல்லமாட்டோம். அதே நேரத்தில் இந்தப் படத்தைப் பார்க்காதீர்கள் என்று தொடர்ந்து(படம் வருவதற்கு முன்பே) சொல்லிக் கொண்டிருப்போம்.

உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது!

Shafees Marikkar said...

very gud post en manasule irunthathe apdiye solliteenge, ethavathu oru nalla padam namme molile varuthunna sele perukku enne apdi oru erichchal

சரவணகுமரன் said...

நன்றி சதீஷ்குமார்

சரவணகுமரன் said...

நன்றி Rafeek

சரவணகுமரன் said...

நன்றி ராஜ்

சரவணகுமரன் said...

நன்றி LK

சரவணகுமரன் said...

நன்றி எஸ்.கே.

சரவணகுமரன் said...

நன்றி மோகன்

Annamalai Swamy said...

நல்ல பதிவு நண்பரே! மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

சார் ,
நீங்க எங்கே இருக்கீர்கள் ? உங்கள் திசையை பார்த்து ஒரு கும்பிடு போடுகிறேன் ....,செம்ம சார் ...,அருமையான..யதார்த்தமான பதிவுசார் ..,இப்போ தான் சார் பார்கிறேன் ....,chandramukhi படம் எங்க வீடு DVD தேய்ந்து போய் விட்டது ...,ஏழு வயசு பையன் தீவிர ரசிகன் ஆகிவிட்டான்...,

thatswhyiamhere said...

அருமையான..யதார்த்தமான பதிவு நண்பரே.தெளிவான பதிலை சில ஒப்பாரி திலகங்களுக்கு சிறப்பான பதிலை என் போன்றோர்களுக்காக வழங்கி இருக்கிங்