Tuesday, June 2, 2015

சிகாகோவில் ஏ ஆர் ரஹ்மான் - ஓர் இசையனுபவம்


இது பல நாள் கனவு.

தேடித் தேடி ரஹ்மான் இசையை கேட்டவன், காலங்கள் கடந்து ரஹ்மானுடன் சேர்ந்து தனது இசை ரசனையையும் கடந்தவன், மொக்கைப்படமாக இருந்தாலும் ரஹ்மான் இசைக்காக முதல் நாளே பார்த்தவன் என இருக்கும் ஒரு ரஹ்மான் ரசிகனின் இயல்பான ஆசையே, ரஹ்மான் இசைக்க நேரில் பார்க்க வேண்டும் என்பது. எனது அந்த ஆசை நேற்று (மே 31) நிறைவேறியது.

இன்று அதை பற்றிய பதிவை, ராஜாவின் பிறந்த நாளன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மின்னியாபொலிஸில் இருக்கிறேன். சிகாகோவில் நிகழ்ச்சி என்று கேள்விப்பட்டவுடன் 7 மணி நேர பயணம், மிக சிறிய பயணமாக தோன்றியது. உடனே டிக்கெட் புக் செய்துவிட்டேன். தவறவிட கூடாத சந்தர்ப்பமாக தோன்றியது.

இதற்கென ஒரு பட்ஜெட்டை ஒதுக்க வேண்டி இருந்தாலும், வாழ்வின் மிக முக்கிய செலவாகவே தோன்றியது. வாய்ப்பு எப்போதும் இருக்காதல்லவா?

போன வாரம் தான் லாங்வீக் எண்ட் என்று சவுத் டக்கோட்டாவிற்கு, நண்பர்கள் குடும்பத்துடன் சென்றிருந்தேன். திரும்ப அடுத்த வாரமே மற்றுமொரு பயணம் என்று கொஞ்சம் சலிப்பாகவும், மற்றவர்களிடம் கூற சங்கடமாகவும் இருந்தது. ஆனாலும், ரஹ்மான்...

இது தான் முதல் முறை சிகாகோ செல்கிறேன். விமானப்பயணத்தின் போது, விமானம் மாறுவதற்கு சென்றிருக்கிறேன். ஊருக்குள் செல்வது இப்போது தான்.

வாடகைக்கார் எடுத்து செல்வது வசதியாக இருந்தது. காரில் பெரும்பாலும் ரஹ்மான் இசையே. ஆரம்பத்தில் அப்படியே சிகாகோவையும் சுற்றிப்பார்த்துவிட்டு வருவது தான் திட்டமாக இருந்தது. பிறகு, இந்த வாரம் சிகாகோவில் பெய்த மழையும், மனைவி உடல் நிலை காரணமாக கொஞ்சம் டல்லாக இருந்ததாலும், பெரிதாக எங்கும் சுற்றவில்லை. சிகாகோ பெருமாள் கோவில் சென்று முருகனுக்கு முதலில் அர்ச்சனை செய்தோம்.

கோவிலில் உணவு சூப்பர். இட்லி, வடை, புளி சாதம், பொங்கல் என கொஞ்சம் கொஞ்சம் பல வெரைட்டி சாப்பிட்டோம். இந்த புளி சாதத்தின் பெருமையை மின்னியாபொலிஸ் வரை பேசுகிறார்கள்.

நிகழ்ச்சி இரவென்றாலும், மதியமே டவுண்டவுன் சென்று விட்டோம். கால் நடையாக அப்படியே ஊரைச் சுற்றி வந்தோம். சைனா டவுண் வரை சென்று ஒரு பார்வை விட்டு வந்தோம்.

தெருவெங்கும் இந்தியர்களை காண, அனைவரும் ரஹ்மானைக் காண வந்தது போலவே தோன்றியது. ஆங்காங்கே குழுமி இருந்த கூட்டம், நேரமாக ஆக அரங்கின் முன் குவிய தொடங்கினர். எப்படியும் டிக்கெட்டில் இருக்கும் சீட் நம்பர் தான் என்பதால், நான் சாவகாசமாக செல்லலாம் என்றிருந்தேன். மனைவிக்கோ கூட்டத்தைக் கண்டு டவுட். சீக்கிரம் செல்ல கூறிக்கொண்டே இருந்தார். சமாதானப்படுத்தி அழைத்து சென்றேன்.

அரங்கின் பெயர் - ஆடிட்டோரியம் தியேட்டர். சிகாகோவின் பழைமையான அரங்கம். பழமையும், பிரமாண்டமும், கம்பீர அழகும் கூடியதாக இருந்தது. மஞ்சள் விளக்குகளின் பிரகாசத்தில் தங்கமாக ஜொலித்தது. நிகழ்ச்சிக்கு காத்திருக்கும் நேரத்தில், கண்கள் கட்டிட கலையின் அழகில் நேரத்தை செலவிட்டது.

எங்காவது ஒரு சின்ன ஒளிகீற்றல் தெரிந்தாலே, அரங்கம் கதறியது. ரஹ்மான் இசையமைப்பாளர் மட்டுமல்ல. பலருக்கு ரோல் மாடல் என்று தெரியும். வெறித்தனமான ரசிகர்கள் கொண்ட தலைவராகவும் அங்கு தெரிந்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, ரஹ்மான் பற்றிய ஒரு விஷுவலுடன் தொடங்கினார்கள். அது வெறியை இன்னமும் ஏற்றியது. ரஹ்மான், ரஜினி படங்களுக்கு கூட அடித்திராத மாஸ் ஓப்பனிங்க் இசை அதற்குக் கொடுத்திருந்தார்.

என்னை அறியாமல் கத்துவேன் என்று முன்பே அறிந்திருந்தேன். அறிந்தே கத்தினேன். கத்தினோம். என் பொண்ணுக்கு என்னுடைய இந்த செய்கை வித்தியாசமாக இருந்திருக்கும். ஸ்கூலில் டீச்சர் சொல்வது போல், ஆள்காட்டி விரலை வாயின் குறுக்காக வைத்து, 'உஸ் உஸ்' என்றாள். சிரிப்பாக வந்தது. மனைவி டல்னெஸ் முற்றிலும் போயிருந்தது.

என்னை விடுங்கள். தன்னிலை மறந்த பலரை அங்கு கண்டேன். குடும்பமாக வந்த பலரும் தரை டிக்கெட் ரசிகர்களாக கூச்சலிட்டுக்கொண்டு இருந்தனர். வந்திருந்த குழந்தைகள், குழம்பிப் போயிருப்பார்கள்.

விஷுவல் முடிய, ரஹ்மான் வெள்ளை உடையில் மேடையில் தோன்றினார். பலத்த கரவோஷம். ஆரவாரம். அடங்க நேரமாயிற்று. ரஹ்மான் பேசுவது, நிகழ்ச்சி முழுக்க காதில் விழாதவாறு சத்தம், சத்தம். சத்தம்.சிறு குழுதான். ஆனால், அவர்களது தரம் - துல்லியம், உலகத்தரம்.

மேடையின் ஒளியமைப்பும், ஒலியமைப்பும் சர்வதேச தரம் எனலாம். பாடலுக்கு ஏற்ற காட்சிகள், பின்னால் திரையில் காட்டப்பட்டது. ஒரு பெண்மணி நடனமும் ஆடினார். அதுவே, தேவையே இல்லை என்பது போல் இருந்தது.ஒவ்வொரு நிமிடமும் கனவைப்போல் இருந்தது.டிவியில் மட்டுமே கண்ட ரஹ்மான், நேரில். இங்கும் அப்படியே இருக்கிறார். அப்படியே தானே இருப்பார்? கைக்குலுக்குவது தான் அடுத்த நோக்கம்!!!வந்திருந்தவர்களில், தமிழர்கள், தெலுங்கர்கள், ஹிந்தியர்கள்(!!!), வெள்ளையர்கள் என பல வெரைட்டி இருந்தார்கள். ரஹ்மான் எப்படி அனைவரையும் திருப்திப்படுத்துவார்? என்பது சுவாரஸ்ய கேள்வியாக இருந்தது. எத்தனை மேடைகள் பார்த்திருப்பார்? ரசிகர்கள் நாடித்துடிப்பை அறிந்தவர். அதனால் தான் இத்தனை உயரம்.


பாடல் வரிசை இந்த காலத்திற்கு ஏற்ப, புதுப்பாடல்களுடனும், அவருடைய கிளாசிக் பாடல்களுடனும் அமைந்திருந்தது. தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் வந்த பாடல்கள், மிக்ஸ் செய்து பாடப்பட்டது. சரணம் ஒரு மொழி, பல்லவி ஒரு மொழி என. இரு ஆங்கில பாடல்கள் பாடப்பட்டது. பின்னணி இசை இசைக்கப்பட்டது.

முதலில் பாடப்பட்டது, அவருடைய 'சாமி' பாட்டு என நினைக்கிறேன். ஹரிசரணும் ரஹ்மானும் பாடினார்கள். ஹரிசரண், ரஹ்மானின் ஆஸ்தான பாடகராகிவிட்டார். பெண் பாடகிகளில், ஜோனிதா காந்தி. இருவரும் அவ்வப்போது ஆட்டமும் போட்டார்கள்.ஒரு குறை. முதன்முதலில், இசை கலைஞர்களுக்கு கேசட்டில் பெயர் போட்டவர், இங்கு மேடையில் ஒவ்வொரு இசைக்கலைஞரையும் பெயர் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தவில்லை.

ரோஜா, பம்பாய், ஐ, ஓகே கண்மணி, அலைப்பாயுதே, சில்லென ஒரு காதல், கடல், குரு, ராக் ஸ்டார், தால், ஹைவே, உயிரே, 127, ஸ்லம் டாக் மில்லினியர் படங்களில் இருந்து பாடல்கள் பாடப்பட்டது. ஒரு ரஜினி பாடல் எதிர்ப்பார்த்தேன். இல்லை. இந்த லிஸ்ட்டை இப்போது பார்க்கும் போது தான் தெரிகிறது. மெஜாரிட்டி, மணிரத்ன படங்கள். அதற்கே வரவேற்பும் பலமாக இருந்தது.
நிகழ்ச்சியும் வடிவமைப்பு, ஒரு பிரமாண்ட திரைப்படத்திற்கு உரிய நேர்த்தியுடன் இருந்தது. இரண்டு- இரண்டரை மணி நேர நிகழ்ச்சியில் ரஹ்மான், மூன்று உடைகள் மாற்றினார். (உடைகள் - அவருடைய மனைவியாம். கடைசியில் கிரடிட்ஸ் போட்டார்கள்). நிகழ்ச்சியின் பேக்கேஜிங்கிற்கு பெரிய டீமே உழைத்திருப்பார்கள் போலும். நேர்த்தியான திட்டமிடல். எங்கும் வெயிட்டிங் டைமே இல்லை. ஒரு பாடல் இன்னொரு பாடல் தொடங்கியது. ஒரு சிலரை தவிர, ஒவ்வொருவருக்கும் இடை இடையே சிறு ஒய்வு இடைவெளி கிடைத்தது.


இசைக்கருவியே இல்லாமல் காற்றில் இசையமைக்க இண்டெல் உருவாக்கி இருக்கும் டெக்னாலஜிக்கு 'தீ தீ தித்திக்கும் தீ' பாடல் மூலம் ரஹ்மான் டெமோ கொடுத்தார்.

ரஹ்மான் அமைதியாக இருந்தாலும், இன்ஸ்டாடேனியஸாக ரெஸ்பான்ஸ் கொடுக்கிறார். உடனே பாராட்டுகிறார். கூட்டத்தை பாட வைக்கிறார். ஆட வைக்கிறார். தமிழ் பாடல் பாட போவதாக சொல்லி, பஞ்சாபி பாடல் பாடி ஏமாற்றிகிறார். முடிவில் சொல்லாமல், கொள்ளாமல் சென்று விட்டு, பிறகு சர்ப்ரைஸாக வந்து தெறிமாஸ் பாடல்கள் பாடி மெலிதாக ஆடுகிறார். கிரெட்.

அதுவரை உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கூட்டம், கடைசியாக பாடிய பாடலுக்கு நின்றுக்கொண்டு ஆட்டம் போட்டது. அவரது குரலை போலவே, ஒரு ஹை பிட்ச்சிற்கு, ரசிகர்களது உற்சாகமும் உச்சம் தொட்டது. ஜெய்ஹோ பாடலுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

நிகழ்ச்சி முடிந்தாலும், மக்கள் நகர மனமில்லாமல் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். வேறு வழியே இல்லாமல், ஆடிட்டோரிய பணியாளர்கள் கெஞ்சி வெளியே அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு புது அனுபவமாக இருந்திருக்கலாம்.

நமக்கு பிடித்த படைப்பாளியை நேரில் காணும் போது, பல சங்கடங்கள் ஏற்படலாம். அதை நினைத்தே, எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், நிகழ்ச்சி முடிந்தபோது, ரொம்பவும் மகிழ்வாக இருந்தது. ரஹ்மான் ரசிக மனோபாவம் பல மடங்கு ஏறியிருந்தது. ஏதோ சாதனை செய்த உணர்வு. பல நாட்களுக்கு தேவையான சார்ஜ் ஏறியது போல் இருந்தது. இரவு தூக்கம் வருமா என்றுக்கூட ஒரு சந்தேகம் இருந்தது.

ஆனால், அன்று நடந்த நடை, செய்த பயணங்கள், அனைத்திற்கும் மேல் ஓவர் உற்சாகத்தில் இருந்த மனம் களைத்து கொஞ்சம் ஓய்வை தேட, அன்றிரவு தூக்கம் நன்றாகவே வந்தது.


ஜெய்ஹோ.

எல்லா புகழும் இறைவனுக்கே.

பிகு.- திருஷ்டியாக 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்ற வாக்கியம் சரியான தமிழ் பாண்ட் இல்லாமல் உடைந்து இறுதியில் திரையில் தோன்றியது.

வீடியோவை விரைவில் இணைக்கிறேன்.

.1 comment:

Anonymous said...

கூடயே வந்து பாத்த எபக்ட்