Tuesday, August 11, 2009

கன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்

திரும்ப திரும்ப திருவள்ளுவர் சிலையைப் பற்றி எழுதவது போல் உள்ளது. இருந்தாலும் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.

சிலை திறப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி தினகரன் கூறியது, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

வழக்கு தொடர்ந்த கன்னட அமைப்பினர், அதை எதிர்க்க காரணமாக கூறியது - இடத்திற்கான அனுமதியையும், வீரப்பன் கோரிக்கையை ஏன் செயல்படுத்த வேண்டும் என்பதையும்.

தீர்ப்புக்கு முன் நீதிபதி பேசிய வார்த்தைகள், ஒவ்வொன்றும் சவுக்கடி.

----

சிலையைத் திறப்பதற்கான அனுமதியை மாநகராட்சியும், அரசும் வழங்கிவிட்டதைத் தெரியாமல் மனுதாரர்களாகிய கன்னட சங்கத்தினர் பொதுநல வழக்குத் தொடர்ந்தது சரியல்ல. மாநகராட்சி நிலம் என்பது அரசு நிலம்தானே? நீங்கள் தவறான முறையில் வழக்கைத் தொடர்ந்துள்ளீர்கள்.

நீங்கள் திருவள்ளுவர் சிலை திறப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தீர்களா அல்லது ஒட்டு மொத்தமாக நகரில் சிலைகள் அமைப்பதற்கு எதிராக மனு தாக்கல் செய்தீர்களா? வழக்கை விட்டு வேறு பக்கம் போகாதீர்கள். நாமெல்லாம் இந்தியர்கள் என்பதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?

நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இப்போது கர்நாடக தலைமை நீதிபதியாக பணியாற்றுகிறேன். கடந்த ஓராண்டாக கர்நாடகத்தில் வாழ்கிறேன். கன்னடராக வாழ்ந்து வருகிறேன். பெங்களூரில் நடக்கும் சிலை திறப்பு விழாவில், மனுதாரர்கள் கலந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

குடகு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் முன்பு கோவை ஆ‌ட்‌சிய‌‌ரி‌ன் ஆளுகையின் கீழ் இருந்தன. காவிரி நீரை தரமாட்டேன் என்கிறீர்களே, காவிரியை கர்நாடக எல்லைக்குள்ளே கட்டுப்படுத்த முடியுமா? அது இயற்கையாகவே தமிழகம் நோக்கி பாயத்தானே செய்யும்? மொழியின் பெயரால் நாட்டை பிரிக்காதீர்கள்.

வீரப்பன் கோரிக்கை விடுத்ததாலேயே, ஒரு விஷயம் சட்டவிரோதம் ஆகிவிடுமா? திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். 50 வருடங்களுக்கு முன்பு வந்தவர்கள் கூறியதற்காக சிலை திறப்பை தவிர்க்க முடியாது. தமிழகத்துடன் ஆயிர‌ம் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக திருவள்ளுவர் சிலை திறப்பை தடுப்பது நியாயமாகாது. பிரச்சனைகள் இருப்பதால் தமிழகத்துடன் போருக்கு போக முடியுமா? அப்படி போரிட்டால் என்னை எந்த அணியில் சேர்ப்பீர்கள்?

நமது நாடு மிகுந்த பலம் வாய்ந்த நாடாகும். கூட்டமைப்பின் கீழ் நாடு செயல்படுகிறது. இதனால் நாம் நம்மிடம் உள்ள கருத்துவேறுபாடுகளை மறக்க வேண்டும். நம் அனைவருக்குள்ளும் இந்தியன் என்ற மனப்பான்மை வளர வேண்டும். தமிழர், கன்னடர், மலையாளிகள் என்ற வேறுபாடு கூடாது.

மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் ஏற்கும்படியாக இல்லை. காவிரி, ஒகேனக்கல் பிரச்சினையுடன் இதை சம்பந்தப்படுத்த வேண்டாம். கர்நாடக எல்லைக்குள்ளேயே காவிரி நீரை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? அது இயற்கையுடன் ஒன்றுபட்டது. உங்களது முயற்சி இரு மாநிலங்களிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களிடம் கருத்து வேறுபாட்டை உருவாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது எளிது. ஆனால் தீயை அணைப்பது கஷ்டம். குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டத்துக்கு வழி வகுப்பது எளிது. ஆனால் போராட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்.

கோர்ட்டில் மனு செய்வது சுலபம். ஆனால் இதன் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டீர்களா?.

இதுபோன்ற வழக்குகளை கோர்ட்டுக்கு கொண்டு வந்து, பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்த வழக்கில் எந்த ஓர் அவசரமும் இருப்பதாக தெரியவில்லை. இதை ஒரு பொது நலன் வழக்கு என்றுகூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும்போது வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதற்காக அவசரம் காட்டுகிறீர்கள். இது முக்கியமான பொதுநல வழக்கு என்று கூறுகிறீர்கள். ஆனால் மனுதாரர்களில் ஒருவர் கூட கோர்ட்டுக்கு வரவில்லை. அப்படி இருக்கையில் இதை முக்கியமான வழக்கு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அரசு விழா இல்லை என்பதுபோல நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து, விழாவில் பங்கேற்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். அப்படி இருக்கும்போது இது எப்படி தனியார் நிகழ்ச்சியாக இருக்க முடியும்? அப்படியே இது அரசு விழா இல்லை என்று நீங்கள் கூறினால், அதையும் நீதிமன்றத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும் அல்லது நீங்கள் தான் பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

முதலில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அழைப்பிதழை கொண்டு வாருங்கள். அதில் கர்நாடக அரசு சின்னம் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போம். அது அரசு விழாவா இல்லையா என்பதை நானே உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன். எனவே மொழி, மதம், சாதி போன்றவற்றை காரணம் காட்டி, நாட்டை துண்டாடாதீர்கள். கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் இடையேயுள்ள இதயப்பூர்வமான உறவை கெடுக்கக்கூடாது.

திருவள்ளுவர் சிலைக்கு எதிராக போராடினீர்கள் என்றால் அதை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்திற்குள் அதை எடுத்து வராதீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால், சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கக் கூடாது என்று தமிழக நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள்.

மாநகராட்சி தேர்தலை முன்வைத்து சிலை திறக்க அரசு முயற்சிப்பதாக கூறுகிறீர்கள். திருவள்ளுவர் ஒரு அரசியல்வாதி அல்ல.

திருவள்ளுவர், சர்வக்ஞர் ஆகியோர் நாட்டின் கலாசார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள பெரும் புலவர்கள். இதன் மூலம் மதம், மொழி ஆகியவற்றின் பெயரால் நாட்டைப் பிரித்துப் பார்க்க முயற்சி செய்துள்ளீர்கள். இது தவறு. தவறான வழக்கை தாக்கல் செய்துள்ள உங்கள் மீது அபராதம் விதிக்க முடியும். ஆனால் மனுதாரர்களுக்கு, நீதிமன்றம் எச்சரிக்கை மட்டும் விடுக்கிறது.

9-ந் தேதி நடை பெறும் சிலை திறப்பு விழா முழு வெற்றி பெறட்டும். இதன் மூலம் சாதி, மதம், இனம், மொழிபேதம் இல்லாத சமுதாயத்தை படைப்போம்.

----

நீதிபதி ஐயா, சபாஷ்!

நன்றி : தினத்தந்தி, தினமணி, தமிழ்செய்தி

9 comments:

யாசவி said...

nice punch

:-)

நரேஷ் said...

சரியா கேட்டிருக்காரு!!!

இராகவன் நைஜிரியா said...

நெத்தியடி அப்படின்னு சொல்லுவாங்க... அதுக்கு இதுதான் உதாரணம்.

சரவணகுமரன் said...

வாங்க யாசவி

சரவணகுமரன் said...

ஆமாம் நரேஷ்

சரவணகுமரன் said...

கரெக்ட், இராகவன்

http://thisaikaati.blogspot.com/ said...

முதலில் அந்த நீதியரசருக்கு வாழ்த்துக்கள். கர்நாடகா நீதி மன்றத்தில் தமிழகத்தைச் சார்ந்த நீதியரசர் இந்த தீர்ப்பில் சரியான குட்டும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று உணர்த்தியதும் பாராட்ட தகுந்தது. இது வழக்கை தொடுத்தவர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து பிரிவினை சக்திகளுக்கும் ஒரு சவுக்கடி.

இதன் மூலம் நீதியும், இறையாண்மையும் சில இடங்களில் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என நம்புகிறேன்.

இதை இணைய உலகுக்கு அறிவித்த உங்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

-- ரோஸ்விக்.

சரவணகுமரன் said...

நன்றி ரோஸ்விக்

Shan Nalliah / GANDHIYIST said...

Tamils are the one and only people in India who include/accept all humans as brothers and sisters!Others shd learn this great civilisation from Tamils!Northern Film star:NAMEETHA SAID! IT IS TRUE,WHOEVER SAID IT!
An English Christian Priest who lived in TN many years and translated PERIAPURANAM in English told in an interview on DeepamTV.tv that Tamils are true friends,loyal believers of GOD who respect all humans!YATHUM OORE!YAAVARUM KELIR!!!GREAT PEOPLE!GREAT CULTURE!!SINHALESE,KANNADAS,KERALIS,TELUGUS,BENGALIS,HINDIS shd learn from Tamils how to live peacefully in this wonderful world!