Tuesday, July 28, 2009

எஸ்.வீ.சேகர் - நாடகம் - என் முதல் அனுபவம்

இன்றைய இளம் தலைமுறைக்கும் இதற்கு பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் நாடகம் என்றால் டிவியில் போடும் சீரியல்கள் தான் ஞாபகத்திற்கு வரும். நாடகம் என்ற சினிமாவின் தாய் கலையை, இதுவரை நான் நேரில் கண்டதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது, ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் என்று இருந்தேன். சென்ற ஞாயிறு எஸ்.வீ.சேகரின் ‘பெரிய தம்பி’ பார்த்தேன்.

---

நான் பைக்கில் உள்ளே நுழையும்போதே, சேகர் வாசலில் நின்று கொண்டிருந்தார். தேனீர் சட்டையின் (டி-சர்ட்) மேல் பட்டன்களை திறந்து விட்டு கொண்டு, பூணூல் தெரியும்வாறு. அப்போது தான் காரில் இருந்து இறங்கியிருப்பார் போல். யாருக்காக காத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. நாடகம் ஆரம்பிப்பதற்கு நிமிஷம் முன்வரை மேடையின் அருகே இருக்கும் கதவுக்கு வெளியேவே நின்று கொண்டிருந்தார். அவருக்கு மெஷின் கன்னுடன் ஒரு பாதுகாப்பு காவலர். எம்.எல்.ஏ. அல்லவா?

---

நாடகம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பூஜை பண்ணினார்கள். முடிவில், தேங்காய் உடைத்து முடித்து கொண்டார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் ஸ்கிரினை ஒருவர் ஓடிகொண்டே மாற்றியது, மேடையில் நாலு மைக் வைத்து, நாடகத்தின் கதாபாத்திரங்கள் அதில் தங்களை மாறி மாறி பொசிஷன் செய்து கொண்டே நடித்தது - எனக்கு புது அனுபவம். அவர் வீடு என்பதற்கு வரும் ஸ்கிரினில், அவர் தந்தை புகைப்படம், சங்கராச்சாரியார், ஜெயந்திரர் படங்களை மாட்டி வைத்திருந்தார்கள்.

---
இந்த நாடகத்தில் கிராமத்து வழக்கங்களையும் அப்படி சொல்லிவரும் திரைப்படங்களையும் கிண்டல் செய்து கதை அமைத்திருந்தார். 2 மணி நேரத்தில் 200க்கு மேல் ஜோக்ஸ் என்று டார்க்கெட் வைத்து அடிக்கிறார். அவர் சும்மா பேசினாலே, டைமிங் காமெடி சிதறும். அதனால் ரொம்ப சுலபமாகவே டார்க்கெட்டை கடக்கிறார். ஹிந்தி எதிர்ப்பு, டெல்லி, அம்மா, சன் டிடிஎச், மெகா சீரியல் காமெடிக்களுக்கு நல்ல கைத்தட்டல். லோக்கல் மேட்டர் திருவள்ளுவர் சிலை பற்றி சொல்லியும் கைத்தட்டல் அள்ளினார். நாடகத்தின் முடிவில் அவரே சொன்னதுபோல், எத்தனை நாடகங்கள் வேண்டுமானாலும் போடலாம், டைட்டிலை மாற்றி கொண்டு. டைட்டிலில் என்ன இருக்கிறது என்றார்.

---

அவர்களுக்குள் என்ன நகைச்சுவையோ தெரியவில்லை. மேடையிலேயே ஒரு பெண்மணி (இவர் மீண்டும் மீண்டும் சிரிப்பில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் வருபவர்) அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தார். நாடகம் முடிந்து குழுவினரை அறிமுகப்படுத்தி, வந்திருந்தவர்களுக்கு நன்றி சொல்லி இருபது நிமிடம் பேசியபோது, எஸ்.வீ.சேகரின் காமெடி இன்னும் அதிகமாக தொடர்ந்தது. அரங்கத்தில் சிரிப்பொலியும் அதிகமானது.

சிவசங்கரன் - மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இப்ப, கரண்ட் பிரச்சினைக்கு இவர் காரணம் கிடையாது. ரிட்டையர் ஆகிவிட்டார். இவர் சர்வீஸில் இருக்கும்போது, இவ்ளோ பிராப்ளம் கிடையாது. இன்னும் ஜாஸ்தியாத்தான் இருந்திருக்கும்.

டெலிபோன் மணி - நிறைய படங்களில் பார்த்திருப்பீர்கள். இவரோடுதான் ரஜினி, கமல் நடித்திருப்பார்கள். அந்த படங்கள் எல்லாம் பாருங்க. கண்டிப்பா இவரை தேடி கண்டுப்பிடிப்பீங்க.

கிருஷ்ணக்குமார் - இவர்தான் நாடக இன்சார்ஜ். எல்லாத்துக்கும் இன்சார்ஜ். ஏதாவது பழி வந்தா, இவர் மேலத்தான் போடுவோம்.

ராஜேந்திரன் - இவர் மதிமுகவில் இருக்கிறார். என்ன பொறுப்புன்னு கேட்டுக்கிட்டதில்லை. பதிலுக்கு அதிமுகவில் நீ என்னவா இருக்கன்னு கேட்டுட்டா?

முரளிதரன் - எங்க ட்ருப் ஆரம்பித்ததிலிருந்து ஆர்க்கெஸ்ட்ராவில் இருக்கிறார். காலேஜில் படித்த மாணவன் ஒருவன், அங்கேயே லெக்சரர் ஆன போது, அவனிடம் கல்லூரி முதல்வர் ‘இதை பத்தி என்ன நினைக்கிற?’ என்று கேட்டதற்கு, ’இங்க படிச்சா, வேற எங்கயும் வேலை கிடைக்காது’ என்றானாம். அது போல், என்னைக்கு எங்களுக்கு வாசிக்க ஆரம்பித்தாரோ, வேற எங்கயும் அவரால் போக முடியலை.

தனது மகன் அஸ்வீனையும் அறிமுகப்படுத்தினார். அவரிடம் “நீ ஆக்‌ஷன் ஹீரோவானதற்கு பிறகுதான் கல்யாணம்” என்றிருக்கிறாராம். அதனால், அவரும் சீக்கிரம் ஆக்‌ஷன் ஹீரோ ஆவதாக சொல்லியிருக்கிறாராம். இன்னொரு ஆக்‌ஷன் ஹீரோவா?

ம்ம்ம். அவருக்கென்ன? நடிச்சிட்டு போயிடுவாரு.

---தொடர்பு கொள்ள அவருடைய மெயில் ஐடி கொடுத்தார். மயிலாப்பூர் எம்.எல்.ஏ. அட் ஜிமெயில் டாட் காம். ”எம்.எல்.ஏ.வா இருக்கேனோ, இல்லயோ, ஐ.டி. என்னிடம் தான் இருக்கும். எப்படியும், இன்னும் கண்டிப்பா ரெண்டு வருஷம் எம்.எல்.ஏ.வாத்தான் இருப்பேன். ரொம்ப வருத்தப்படாதீங்க. அதுக்கப்புறம் எம்.பி.யா ஆயிருவேன். தன்னம்பிக்கைதான்.”

இப்படி நம்பிக்கை அவருக்கு இருந்தா சரி. மூடநம்பிக்கை என்று கருதும் பலவற்றை ஆதரித்து, பரிந்துரைத்து தகுந்த விளக்கம் கொடுக்காமல் பேசுவது சரியா?

---

அவரின் அரசியல் சண்டைகளே காமெடியாகத்தான் இருக்கும். உ.தா. சமீபத்தில் சட்டசபையில் கலைராஜனுடனான சண்டை.

எஸ்.வீ.சேகர் - ”நான் பேசினால் என்னை போட்டுவிடுவதாக கலைராஜன் மிரட்டுகிறார். எனது உயிருக்கோ, உடமைகளுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை இந்த சட்டசபையில் நான் பதிவு செய்கிறேன்.”

கலைராஜன் - “'எட்டப்பன்' எஸ்.வீ.சேகர் நாளை பன்றிக் காய்ச்சலால் “படார்” என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல”

எஸ்.வீ.சேகர் - ”பன்றிக் காய்ச்சலெல்லாம் எனக்கு வராது. ஒருவேளை கலைராஜன் என்னைக் கடித்தால் வரலாம்”

---

நாடகம் அழிந்து வரும் கலை என்று பல வருடங்களாக சொல்கிறார்கள். இன்னும் உயிர் பிழைத்து வருவதற்கு, எஸ்.வீ.சேகர், கிரேஸி மோகன், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றவர்களது குழுக்களே முக்கிய காரணமாக இருக்கிறது. இவர்களின் பலம் - நகைச்சுவை, சினிமா தந்த பிரபலம். நாடக ஆர்வம் குறைவதற்கு காரணம் - எத்தனை தடவை, பார்த்ததையே பார்ப்பது?, ஒரு நாடகம் பார்க்கும் காசில், நாலு படங்கள் பார்த்து விடலாம் போன்ற எண்ணங்கள்.

நாடகங்களை பற்றி அவர் சொன்னபோது, ‘சினிமா பிடிக்கவில்லையென்றால், வெளியே தான் போகணும். இங்க பிடிக்கலைன்னா, உள்ளே வரலாம்’. அதாவது அவரை சந்தித்து சொல்லலாமாம். சொன்னபடியே, எல்லாம் முடிந்தபிறகு, வெளியே செல்லும் கதவருகே நின்று, கை குலுக்கி பாராட்டு பெற்று அனைவரையும் அனுப்பி வைத்தார்.

ஏதாவது புதுசா முயற்சி பண்ணினால், நாடகங்களுக்கு மீண்டும் வரவேற்பு வரலாம். என்ன செய்வது? யார் செய்வது? தெரியவில்லை. பார்க்கலாம்.

மார்க்கெட் போன காமெடி நடிகர்கள் ட்ரை பண்ணலாம். கவுண்டமணி? கூட்டம் அம்மும்.

---

கடைசியா அவர் சொன்னது,

“உங்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காரணம், ஒரு ஞாயித்துக்கிழமை... தொலைக்காட்சிகளில் எத்தனை படங்கள், எவ்ளோ நிகழ்ச்சிகள்... எல்லாத்தையும் விட்டுட்டு இவ்ளோ பேரு வந்திருக்கீங்கன்னா, அதற்கு காரணமா இருக்கும் அனைத்து தொலைக்காட்சிக்களும் எனது மனமார்ந்த நன்றிகள்.”

:-)

14 comments:

கிரி said...

//இதுவரை நான் நேரில் கண்டதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது, ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் என்று இருந்தேன். //

நானும் ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்

//எஸ்.வீ.சேகர் - ”பன்றிக் காய்ச்சலெல்லாம் எனக்கு வராது. ஒருவேளை கலைராஜன் என்னைக் கடித்தால் வரலாம்”//

ஹா ஹா ஹா டாப்பு

// அதற்கு காரணமா இருக்கும் அனைத்து தொலைக்காட்சிக்களும் எனது மனமார்ந்த நன்றிகள்.”//

:-))))))))

நரேஷ் said...

இப்பல்லாம் வார இறுதில தமிழ் சானல் பாக்குறதுக்கே கொஞ்சம் பயமாயிருக்குன்னாலும், சோம்பேறித் தனத்தையும் தாண்டி வெளிய நாடகத்துக்கு போறது என்னைப் பொறுத்த வரை பெரிய விஷயம்...

எஸ்.வி. சேகரின் நாடக கேசட் நிறைய கேட்டிருக்கேன், ரொம்ப புடிக்கும் (புடிக்காட்டிதான் ஆச்சரியம்!!!)...ஆனா நேர்ல பாத்ததில்லை, உங்க வர்ணனைகள் நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது....அருமை...

எந்த மூட நம்பிக்கைகளை அவர் ஆதரிச்சு பேசினார்னு சொல்ல முடியுமா???

Anonymous said...

நானும் பார்த்து இல்லீங்க ...ஆனா கேட்டுருக்கேன்...

காதுல பூ,
சின்ன மாப்பிளை பெரிய மாப்பிளை அல்லது ஹனிமூன் இன் ஹைதராபாத்,
எல்லோரும் வாங்க
பெரிய தம்பி,
வால் பையன்,
அல்வா,
ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி,
வாங்க கார் வாங்கலாம்,
நம் குடும்பம்,
பேசும் பொம்மை நாய்

இப்படி நிறைய...அனைத்தும் திகட்டாத நகைச்சுவை கொண்டவை.
-Englishkaran

பிரபாகர் said...

எனக்கும் நேரில் பார்க்க ஆசை... சந்தர்ப்பம் சரியாக அமைய வில்லை.

ரசிக்கும் படியாக அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

சரவணகுமரன் said...

வாங்க கிரி...

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்...

//எந்த மூட நம்பிக்கைகளை அவர் ஆதரிச்சு பேசினார்னு சொல்ல முடியுமா???//

பிறகு தனிப்பதிவாக சொல்றேன்

சரவணகுமரன் said...

ஆமாம் Englishkaran...

சரவணகுமரன் said...

நன்றி பிரபாகர்

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு விமர்சனம்:)!

நானும் சில வருடம் முன்னே செளடய்யா மெம்மோரியல் ஹாலில் அவர் நாடகம் பார்த்தேன்.

க்ரேசி மோகன் நாடகம் பற்றிய தகவலுக்கு நன்றி:)!

Ananya Mahadevan said...

//உங்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காரணம், ஒரு ஞாயித்துக்கிழமை... தொலைக்காட்சிகளில் எத்தனை படங்கள், எவ்ளோ நிகழ்ச்சிகள்... எல்லாத்தையும் விட்டுட்டு இவ்ளோ பேரு வந்திருக்கீங்கன்னா, அதற்கு காரணமா இருக்கும் அனைத்து தொலைக்காட்சிக்களும் எனது மனமார்ந்த நன்றிகள்.”// - இது தமது எல்லா நாடகங்களின் முடிவிலும் சொல்லுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவருடைய எல்லா நாடகங்களையும் பார்த்தாகிவிட்டது.100% சிரிப்பு, & சிரிப்பு மட்டுமே.

Anonymous said...

//உங்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காரணம், ஒரு ஞாயித்துக்கிழமை... தொலைக்காட்சிகளில் எத்தனை படங்கள், எவ்ளோ நிகழ்ச்சிகள்... எல்லாத்தையும் விட்டுட்டு இவ்ளோ பேரு வந்திருக்கீங்கன்னா, அதற்கு காரணமா இருக்கும் அனைத்து தொலைக்காட்சிக்களும் எனது மனமார்ந்த நன்றிகள்.”
//

very funny.

சரவணகுமரன் said...

நன்றி ராமலக்ஷ்மி

சரவணகுமரன் said...

நன்றி அநன்யா மஹாதேவன்...

சரவணகுமரன் said...

நன்றி அம்மு...