Tuesday, July 7, 2009

கொலை செய்தாரா கலைவாணர்?

இன்று தமிழில் வரும் எல்லா இதழ்களிலும் கிசுகிசு உண்டு. ஜனரஞ்சகப் புத்தகம் என்றால் திரைத்துறையினரைப் பற்றிய கிசுகிசு. புலனாய்வு புத்தகம் என்றால் அரசியல்வாதிகளைப் பற்றிய கிசுகிசு. இலக்கியப் புத்தகம் என்றால் எழுத்தாளர்களைப் பற்றிய கிசுகிசு. தமிழ் புத்தகங்கள் தான் இவ்வாறு என்றில்லை. ஹிந்தியில் இதற்கென்று ஒரு தனி சானலே உண்டு. அடுத்தவன் பற்றிய அந்தரங்கத்தை தெரிந்து கொள்ள, இயற்கையாகவே மனிதனுக்கு அவ்வளவு ஆர்வம்.

தமிழில் இப்படி வந்த முதல் பத்திரிக்கை - சினிமா தூது. 1944 ஆண்டு இதை தொடங்கியவர், லட்சுமிகாந்தன். இவர் அப்பொழுது தான் அந்தமான் ஜெயிலில் இருந்து வந்திருந்தார். ஒரு போர்ஜரி கேஸில் ஜெயிலுக்கு சென்றிருந்தார். இந்த பத்திரிக்கை அரசாங்க அனுமதி பெறாததால், தடை செய்யப்பட்டது. தடை செய்தால், வாசகர்களின் அறிவுக்கு எப்படி தீனி போடுவது? அப்பொழுது அனந்தய்யர் என்பவர் இந்துநேசன் என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அவரிடம் லட்சுமிகாந்தன் சென்று, பக்கத்தை நான் பாத்துக்கிறேன், பதிப்பை நீங்க பாத்துக்கோங்க என்றிருக்கிறார். டீலிங் நன்றாக இருக்கவே, பத்திரிக்கை செம மேட்டர்களுடன் வெளியானது.

இப்போதைய இளம் நடிகர்கள் பத்திரிக்கையாளர்களிடம் ‘என்ன நீங்க? என்னை பத்தி கிசுகிசுவே எழுதலை?” என்று கோபித்துக் கொண்டிருக்க, அன்றைய நடிகர்கள் கிசுகிசுவை கண்டு நடுங்கி இருக்கிறார்கள். சிலர் பணம் கொடுத்து, தங்களை பற்றிய செய்திகள் வராமல் பார்த்து கொண்டார்கள். அது பொய்யாக இருந்தாலும்.

அந்நேரம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிரபல நடிகர். பல படங்களில் நடித்து கொண்டிருந்தார். அவரை பற்றியும் இந்துநேசனில் வந்தது.

என்.என்.கிருஷ்ணன் இதை கண்டுகொள்ளவில்லை. பணம் கேட்டு சென்ற போது, அவர் கொடுக்கவில்லை. தொடர்ந்து, அவரை பற்றிய செய்திகள் வந்து கொண்டு இருந்தது. கேட்டதற்கு, ’எவனோ ஒருவன் நம்மால் பொழைக்கிறான். பொழைச்சிட்டு போகட்டும்.” என்றார்.

இந்நிலையில் வடிவேலு என்பவர் தங்கியிருந்த வீட்டை லட்சுமிகாந்தன் வாங்கினார். வீட்டை காலி செய்ய சொன்னபோது, வடிவேலு மறுத்திருக்கிறார். இவ்விஷயத்தில் இவர்களுக்குள் தகராறு ஆகிவிட்டது.

ஒரு நாள் லட்சுமிகாந்தன் அவருடைய வக்கீலை பார்க்க ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்தார். போகும்வழியில் அவருக்காக காத்திருந்த வடிவேலுவும், அவருடைய நண்பரும், ரிக்‌ஷா கடந்து சென்றவுடன், பின்னால் சென்று, ரிக்‌ஷாவை பிடித்து இழுக்க, ரிக்‌ஷா கவிழ்ந்தது. ரிக்‌ஷா ஓட்டியவரை வடிவேலுவின் நண்பர் விரட்டியடிக்க, வடிவேலு லட்சுமிகாந்தன் மேல் பாய்ந்து கத்தியால் குத்தினார். சம்பவத்தில் கத்தி குத்துப்பட்ட லட்சுமிகாந்தன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பிறகு இறந்தார்.

இரு வாரங்கள் கழித்து, இந்த கொலை வழக்குக்காக என்.எஸ்.கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவருடன் அந்நாளைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டார். தவிர, வடிவேலுவும் இன்னும் சிலரும்.

அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு. நடிகர்களுக்கு பத்திரிக்கை ரீதியான தகராறு. வடிவேலுவுக்கு வீடு விவகாரத்தில் தகராறு. அதனால், பாகவதரையும், கலைவாணரையும் சந்தித்த வடிவேலுவிடம், அவர்கள் லட்சுமிகாந்தனை கொலை செய்யுமாறும் தேவையான பண உதவிகளை தாங்கள் செய்வதாகவும் கூறியிருக்கிறார்கள் என்பது தான்.

ஏழு மாதங்கள் நடந்த விசாரணையின் முடிவில் கொடுத்த தீர்ப்பில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சொல்லி பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.

கலைவாணர் சிறையில் அடைக்கப்பட, வழக்கு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் நடந்த வழக்குக்காக கலைவாணரின் சொத்துக்கள் விற்கப்பட்டது. வாரி வழங்கிக்கொண்டிருந்த குடும்பம், மற்றவர்களிடம் கை நீட்டி வாங்கும் நிலைக்கு வந்தது.

வழக்கில் பாகவதரும், கலைவாணரும் சம்பந்தப்பட்டு இருந்தது ஒரே இடத்தில் தான். வடிவேலு அவர்களை ஒரு தியேட்டரில் சந்தித்து, அவர்களிடம் இருந்து பணம் பெற்று கொண்டார் என்பது தான். ஆனால், சம்பவத்தன்று கலைவாணர் சேலத்தில் இருந்ததற்கு சாட்சிகள் இருந்ததாலும், அப்ரூவரான ஒருவரின் வாக்குமூலம் நிரூபணம் ஆகாததாலும், என்.எஸ்.கிருஷ்ணன் விடுதலை செய்யப்பட்டார். அதுபோல், பாகவதரும் விடுதலை செய்யப்பட்டார்.

லட்சுமிகாந்தனின் நிலைக்கு கலைவாணர் காரணம் இல்லை என்று நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறினாலும், அவருக்கு நேர்ந்ததை காலத்தின் தீர்ப்பாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும். எழுத்து தான் என்றாலும் அதில் கண்ணியம் இல்லாவிட்டால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு லட்சுமிகாந்தன் ஒரு உதாரணம். சோதனையான காலமென்றாலும், கூட இருந்தவர்களை கலைவாணர் புரிந்து கொள்ள உதவியது இந்த காலம் தான்.

மேலும் தகவலுக்கு & கலைவாணரைப் பற்றி அறிந்து கொள்ள - முத்துராமனின் சிரிப்பு டாக்டர்.

-----

நாளைய பதிவு : சரக்கடித்த சத்யசீலன்!

6 comments:

Anonymous said...

இதுவரிக்கும் எனக்கு இந்த விஷயம் மர்மமாகவே இருந்தது. அருமையாக விளக்கி எழுதியதற்கு எனது நன்றி.

சரவணகுமரன் said...

நன்றி இங்கிலீஷ்காரன்

dondu(#11168674346665545885) said...

இப்படியும் நான் கேள்விப்பட்டேன். அதாகப்பட்டது கேசை புலன்விசாரணை செய்த ஒரு காவல் அதிகாரி என்.எஸ்.கே. மற்றும் எம்.கே.டி.யிடம் ஒரு குறிப்பிட்ட தொகை லஞ்சமாக கேட்டதாகவும், அது கிடைக்காததால் வேண்டுமென்றே அவர்களையும் வழக்கில் இழுத்து விட்டதாகவும் படித்தேன்.

என்னதான் கடைசியில் விடுதலை ஆனாலும் சில மாதங்கள் ஜெயிலில் இருந்தது என்னவோ உண்மைதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சரவணகுமரன் said...

அறியாத தகவலை சொல்லியிருக்கீங்க, டோண்டு சார்...

நன்றி...

butterfly Surya said...

என்.எஸ். கிருஷ்ணன் ஒரு வழக்கின் காரணமாக சிறையில் இருக்கிறார்.அவரை வெளியில் எடுக்க வக்கீல் வைத்து வாதாட பணம் தேவைப்படுகிறது. அவரது துணைவியார் டி.கே.மதுரம் தயாரிப்பாளர் ஒருவரிடம் “கடனாக பணம் வேண்டுமென்று கேட்கிறார்.” அதற்கு அந்த தயாரிப்பாளர், “உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறதோ,அதை இனாமாக கொடுக்கிறேன். ஆனால் கடனாக கேட்காதீர்கள் என்றார்.

அதற்கு டி.கே.மதுரம், “கடனாக கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள்.இல்லையென்றால் உங்கள் பணம் தேவையில்லை. ஏனென்றால் இனாமாக வாங்கினால் அவருக்கு பிடிக்காது” என்கிறார்.
பின் தயாரிப்பாளர் “சரி கடனாக வேண்டாம். பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் அவர் வெளியில் வந்து என்னுடைய படத்தில் நடித்து கடனை அடைக்கட்டும்” என்று கூறிவிட்டு பணத்தை கொடுக்கிறார். பிறகு சிறையிலிருந்து வெளியே வந்து நடித்து கொடுத்த படம் தான் ‘சந்திரலேகா’. மாபெரும் வெற்றி பெற்றது. தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன். இந்த விஷயத்தை கலைவாணர் நூற்றாண்டு விழா கூட்டத்தில் நடிகர் சார்லி சொல்ல அரங்கமே கைத்தட்டலில் நனைந்தது.

பாலகிருஷ்ணன் said...

தன்னிடம் பணிபுரிந்த பாராட்டு விழா நடத்தி சிறப்பித்த ஒரே மனிதர்