Friday, July 24, 2009

ஒரு கிளியின் தனிமையிலே...

மகேந்திரனிடமிருந்து...

என் துவக்கப்பள்ளி பிராயத்தில் அது ஒரு அடைமழை நாள். இரவெல்லாம் விடாமல் பெய்த மழை காலையிலும் மெல்லியதாய் தூறிக்கொண்டிருந்தது, மேகமூட்டத்துடன் கூடிய மிகுந்த அழகான காலை. பெயர் மட்டுமே கேள்விப்பட்டிருந்த மெட்ராஸ் வங்கக்கடலில் புயல் என்பதால் மழை.

பிரிட்டிஷ் காலத்திய கட்டிடமும், அழகிய பெரிய சாளரங்களுடன் கூடிய வகுப்பறைகளுமுள்ள கிருஸ்த்துவப்பள்ளி நான் பயின்றது. வரிசையான மரங்களும் பசும்புல்வெளியுமான என் மைதானம். அப்போதெல்லாம் மழையினால் பள்ளி விடுமுறை என்பதை ஊடகங்கள் உறுதிசெய்யாது. பள்ளிக்கு போகிற வழியில் எதிர்ப்படும் யாரேனும் உற்சாகத்துடன் சொல்வார்கள். அப்படியே அவர்கள் சொன்னாலும் " நீ போயி பாத்தியா?" எனக்கேட்கும் அம்மாவின் "அன்பு" கேள்விக்கு அஞ்சி நாங்களே பள்ளிக்கு போய் உறுதிசெய்துவிட்டு வருவோம். அப்படி ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட காலை அது.

மழை எப்போதுமே குழந்தைகளுக்கானது. எப்போதெல்லாம் மழையினால் பள்ளிவிடுமுறை அறிவிக்கிறார்களோ, அடுத்த ஒருமணியில் மெலிதாய் வெயில் கிளம்பும். பள்ளி உள்ளே நுழைந்து விடுமுறை என்று அறிந்து எல்லோரும் திரும்பிக்கொண்டிருக்க, வரிசையாய் ஈரமாய் நின்ற புங்கன், வாகை மரங்கள், அவற்றினடியில் மழையில் மட்டுமே காணக்கிடைக்கும் அட்டைப்பூச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த நான், வீடு திரும்ப மனமில்லாமல் விருட்டென்று மஞ்சள் பையை எறிந்துவிட்டு மைதானத்துக்கு ஓடினேன். புல்வெளியின் இடையிடையே தேங்கியிருந்த மழை நீரில் என் காக்கி அரைக்கால்சராய் நனைய ஆடிக்கொண்டிருந்தபோது.. எங்கிருந்தோ வீசிய காற்றில் மெலிதாக துவங்கியது இந்த பாட்டு..

இத்தனை ரம்மியமான நேரத்துடன் தொடர்புள்ளதென்றால் அது ராஜாவின் பாடலன்றி வேறு எதுவாக இருக்கக்கூடும்? நிசப்தத்தை கிழித்துக்கொண்டு கிறீச்சிடும் ஒரு கிளிக்குஞ்சின் ஓசையுடன் துவங்கும் பாடலது.




படம்: பூவிழி வாசலிலே (1987) பாடல்: ஒரு கிளியின் தனிமையிலே..

இயக்குனர் பாசிலின் படங்களுக்கென்று ஒரு தனித்துவ, பட்டியலிலில்லாத வண்ணமுண்டு. காதல் காட்சிகளிலும் கூட ஒரு மெலிதான சோகம் இழையோடும். அதற்கேற்றார்போல ராஜா இழைத்துத்தரும் பிரத்தியேக பாடல்களும் பாசிலின் படங்களுக்கு இன்னுமொரு பலம்.

இன்றும் கூட கேட்ட பொழுதினில் மனதை லேசாக்கி, ஈரமைதானத்தில் இரு கைகளையும் விரித்து ஓடும் ஒரு பள்ளிச்சிறுவனாக என்னை மாற்றிவிடும் பாடலிது. படத்தின் முழுக்கதையையும் ஒரே பாடல் சொல்லிவிடும். கடந்த காலத்தின் காயம் மறைக்க, இலக்கின்றி மனம்போல வாழும் நாயகனிடம், வழிதவறி வந்து சேரும் ஒரு பேச இயலாத குழந்தை, இவர்கள் இருவரின் வாழ்வில் குறுக்கிடும் நாயகியின் காதல் என க(வி)தை..



ஜேசுதாஸ், சித்ராவின் குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் ஒரு சுகமான தாலாட்டு. இவர்கள் இருவருக்கும் இணையாக சேர்ந்திசைக்குரல்கள் நம் கைகளைப்பற்றி ஆடுவதற்கு அழைக்கும். மேற்கத்திய பாணியில் துவங்கும் பல்லவி, சரணத்தில் வரும்போதும் ஒரு தெளிந்த நீரோடை போல தெளிவான குரலோசையை தாங்கிப்பிடிக்கும் தபேலா இசையுடனிருக்கும்.

ஆசையால் உன்னை அள்ளவேண்டும்..
அன்பினால் எனைக்கொல்ல வேண்டும்...
சேரும் நாளிதுதான்..

என்று அவள் பாடும்போது அது குழந்தைக்காகவா இல்லை அவனுக்காகவா என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும்.



ஒரு இறைவன் வரைந்தகதை.. கதைமுடிவும் தெரிவதில்லை.. உண்மைதானே.. கதை முடிவு தெரிந்துவிட்டால் இவ்வளவு வருடம் கழித்தும் அதைப்பேசிக்கொண்டிருக்க மாட்டோமே..

மண்ணை குழைத்து நயம்பட எத்தனையோ ஆயிரம் பானைகள் செய்துவிட்ட குயவன் கைகட்டி நிற்கிறான், அதிலொரு பானையின் ஒருதுளி நீரை பருகுவதாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறேன் நான்..

இனி பாடல்..

ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
இருகிளிகள் உறவினிலே புதுக்கிளி ஒன்று வரவு
விழிகளிலே கனவு மிதந்துவர
உலகமெல்லாம் நினைவு பறந்துவர
தினம் தினம் உறவுஉறவு புதிது புதுது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு..

முத்துரத்தினம் உனக்கு சூட முத்திரைக்கவி இசைந்துபாட
நித்தம் நித்திரை கரைந்து ஓட சித்தம் நித்தமும் நினைந்து கூட..
சிறுமழலை மொழிதனிலே இனிமைத்தமிழில் இதயம் மகிழ
இருமலரின் விழிகளிலே இரவும் மறைய பகலும் தெரிய
ஆசையால் உன்னை அள்ள வேண்டும்
அன்பினால் எனைக்கொல்ல வேண்டும்
சேரும் நாளிதுதான்..

கட்டளைப்படி கிடைத்த வேதம் தொட்டணைப்பதே எனக்கு போதும்
மொட்டுமல்லிகை எடுத்து தூவும்.. முத்துப்புன்னகை எனக்கு போதும்..
ஒரு இறைவன் வரைந்த கதை, புதிய கவிதை இனிய கவிதை..
கதை முடிவும் தெரிவதில்லை, இளைய மனதில் எழுந்த கவிதை..
பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பெனும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இதுதான்..

ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
இருகிளிகள் உறவினிலே புதுக்கிளி ஒன்று வரவு
விழிகளிலே கனவு மிதந்துவர
உலகமெல்லாம் நினைவு பறந்துவர
தினம் தினம் உறவுஉறவு புதிது புதுது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு..


-மகேந்திரன்.

பாடலைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.

9 comments:

Pavan said...

அருமையான பாடலுக்கு அருமையான விமர்சனம்.

PAVAN said...

அருமையான பாடலுக்கு அருமையான விமர்சனம்.

jothi said...

ஹீரோயின் கலக்கல் ஹீரோயின்

மகேந்திரன் said...

நன்றி பவன்

சரவணகுமரன் said...

// jothi said...
ஹீரோயின் கலக்கல் ஹீரோயின்
//

ஏங்க ஜோதி, மகேந்திரன் எவ்ளோ பீல் பண்ணி பாட்டை பத்தி சொல்லியிருக்காரு... நீங்க என்னன்னா, ஹீரோயின் கலக்கல்’ன்னு சொல்றீங்க... :-))

அது சரி, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்... :-)

Anonymous said...

சரவணா குமரன் என் ப்ளாக்கில் உங்கள் கருத்திற்கு நன்றி..அடிக்கடி விசிட் பண்ணுங்கோ..

காரட் ஹல்வா,ஐஸ் கிரீம் காம்பினேஷன் வித்யாசமா இருக்கு..பிரட் ஹல்வா குறிப்பு இனும் இரண்டொரு நாட்களில் கொடுக்கிறேன்.பிரட்டில் எக்கசக்கமாக செய்யலாம் எடுத்துக்காட்டிற்கு சான்விச், பிரட் நூடுல்ஸ்,பிரட் உப்மா,பிரட் ச்டிக்க்ஸ்,பிரட் பொரியல் இப்படி கணக்கு நீண்டுக்கொண்டே போகும்..

உங்கள் ப்ளாக் நன்றாக இருக்கு.வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

சரவணகுமரன் said...

//அடிக்கடி விசிட் பண்ணுங்கோ..//

கண்டிப்பாக...

//பிரட் ஹல்வா குறிப்பு இனும் இரண்டொரு நாட்களில் கொடுக்கிறேன்.//

ரொம்ப நன்றி.

நரேஷ் said...

வழக்கமான மகேந்திரனின் கிளாசிக்...

வேறொன்றும் சொல்வதற்கில்லை, ஒவ்வொரு பாடலையும் நுணுக்கமாக ரசிக்க கற்றுக் கொடுக்கிறார் என்பதைத் தவிர.....

மகேந்திரன் said...

நன்றி நரேஷ்..