Tuesday, July 21, 2009

ஆடி விசேஷம்

காலையில்
அம்மாவின் பாசத்துடன்
தென்றலாய் தலை தடவி எழுப்பி

மதியம்
தோழனின் நட்புடன்
முதுகு தொட்டு தள்ளி

இரவில்
காதலுடன் தேகத்தினுள்
அனுமதியின்றி நுழைந்து சிலிர்ப்பூட்டி

தனிமையிலும்
உணர்வுகளை பகிர்ந்து கொண்டது
ஆடி மாத காற்று.

---

ஆடி மாதமென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நினைவிற்கு வரும். இன்று எல்லாவற்றையும் தள்ளி விட்டு, தள்ளுபடி நிற்கும்படி வர்த்தக நிறுவனங்கள் முண்டியடித்து நிற்கின்றன. கடந்த சில நாட்களாக, எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பேனோ, அப்படி இருக்கிறது வானிலை. அருமை.

ஆடி ஒன்றாம் தேதி மகேந்திரனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் அவருடைய வட்டார ஆடி விசேஷத்தை பற்றி சொன்னார். நன்றாக இருந்தது. இதை நான் பார்த்ததும் இல்லை, கொண்டாடியதும் இல்லையே’ன்னு லேசா ஒரு வருத்தமும் இருந்தது. அதற்கு அடுத்த நாள், கலைஞர் செய்திகளில் கரூர் அமராவதி கரையோரம் கொண்டாடியதாக அந்த விசேஷத்தை காட்டினார்கள்.

ஆடி ஒண்ணு பற்றி மகேந்திரன்...

---

ஆடி ஒண்ணு - லீவு போட்டு கொண்டாடினீர்களா? பணத்துக்கு பின்னால ஓட ஆரம்பிச்ச பிறகு ஆடி ஒண்ணாவது ரெண்டாவது. இதுக்கெல்லாமா லீவு போட முடியும்? அப்படியே போட்டாலும், ஆடி ஒண்ணுன்னு எப்படி என் மராத்தி மேனேஜருக்கு புரிய வைப்பேன்? என்ன விசேஷம்னு கேக்குறிங்களா? அதெல்லாம் பழைய கதை.. இப்போ யாருக்குமே தெரியுறதில்ல.. தெரிஞ்சாலும் செய்யறதில்ல. விஷயத்துக்கு வரேன்.

நானெல்லாம் சின்ன பயலா இருக்கும் போது எங்க ஊருல ஆடி ஒண்ணு கொண்டாட்டம் அமர்க்களமா இருக்கும். இந்த வழக்கம் சேலத்தில மட்டும்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பள்ளிக்கூடம் எல்லாம் உள்ளூர் விடுமுறை. ஒருவாரத்துக்கு முன்னையே எல்லா கடைகள்ளேயும் ஆள் உயர குச்சி ஒண்ணு மஞ்சள் எல்லாம் தடவி விற்பனைக்கு வெச்சிருப்பாங்க. புதுசா ஊருக்கு வர்ற யாருக்குமே அது எதுக்குன்னு தலைகீழ யோசிச்சாலும் புரியாது.

"அழிஞ்சி" என்ற ஒரு மரத்தின் உறுதியான குச்சி. நெருப்பில் போட்டாலும் லேசுல எரியாது. அந்த குச்சில யாரையும் அடிக்கக்கூட மாட்டாங்க. "அழிஞ்சி" குச்சில அடிச்சா அழிஞ்சி போயிடுவாங்களாம்.. நல்லாருக்கில்ல?? வீட்டுல எத்தனை குழந்தைகள் இருக்காங்களோ அத்தனை குச்சி வாங்குவோம். பெரியவங்களும் வாங்குவாங்க.

ஆடி ஒண்ணு அன்னிக்கு மதியமா, நல்ல தேர்ந்தெடுத்த இளம் தேங்காய் எடுத்து, தரையில கொஞ்சம் மணல் போட்டு அழுந்த எல்லாப்பக்கமும் தேய்ப்போம். (தேங்காய் உரைக்கிறது). நல்லா மொழுமொழுன்னு (விஜய் பாட்ட யோசிக்காதிங்க) வந்த உடன கழுவி, அந்த மூணு கண்ணுல ஒண்ணை ஓட்டை போட்டு தண்ணிய எல்லாம் வெளிய எடுப்போம். "தீனி" ன்னு ஒண்ணு, பச்சரிசி, அவல், பயத்தம் பருப்பு, பொட்டுகடலை, வெல்லம்,எள்ளு எல்லாம் பச்சையா கலந்திருக்கும். அதை அந்த தேங்காய் ஓட்டை வழியா, கொஞ்ச கொஞ்சமா ஒரு கோணி ஊசி இல்லன்னா மயிர்கோதி வெச்சி திணிப்பாங்க. வழக்கமா வீட்டுல இருக்குற பாட்டி, தாத்தா தான் இதை செய்வாங்க. இப்போ யார் வீட்டுலயும் மயிர்கோதியும் இல்ல தாத்தா பாட்டியும் இல்ல.!!

தீனி அடைக்கும் போதே அந்த தேங்காய் தண்ணியையும் கொஞ்ச கொஞ்சமா உள்ளேயே ஊத்திடுவாங்க. அது நிறைஞ்ச உடன் அந்த குச்சியின் ஒரு முனைய கூரா சீவி (ஏற்கனவே சீவி தான் இருக்கும்) தேங்காயின் துளையை அடைப்பாங்க. பிறகு அதுக்கொரு மஞ்சள் நீராட்டுவிழா.

தேங்காய்க்கு பொட்டு எல்லாம் வெச்சி ரெடியா வெச்சிட்டு எல்லாப்பசங்களும் தெருத்தெருவா போய் எரிக்கிற மாதிரி ஓலை, மரம் எல்லாம் சேகரிச்சிட்டு வந்து, தெருவில கூடுவோம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போகியைப்போல எரிச்சி தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாரும் ஒண்ணா கூடி அந்த தேங்காய்களை சுடுவோம். ஆடி ஒண்ணு எப்படியாவது மழை வந்தே வந்துவிடும். மேக மூட்டமா இருக்குற நேரத்தில அந்த நெருப்போட அனலில தேங்காய சுடுற சுகம்.. தேங்காய் நல்லா வெந்து, உள்ள இருக்குற தீனி எல்லாம் வெந்து ஓடு விரிசல் விட்டு நல்ல வாசம் வரும்.

அப்புறம் வெச்சி சாமி கும்பிட்டு வீட்டுல எல்லோரும் உட்கார்ந்து உடச்சி சாப்பிடுவோம். எல்லா வீட்டிலும் அதே தீனி, அதே தேங்காய்னாலும் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ருசியிருக்கும். மனுஷங்க மாதிரியே. சாப்பிடுற நேரத்தில கண்டிப்பா மழை வரும். மழை விட்ட பிறகு அந்த அழிஞ்சி குச்சிகளை வெச்சி ரோட்டில கல்லா மண்ணா விளையாட போவோம். அக்கா தங்கை வீட்டில இருந்தா கூட ஒரு குச்சி சேர்த்து விளையாட கிடைக்கும். தெரு முனை வரை போய் விளையாடிவிட்டு, தோற்றவன் அங்கிருந்து நொண்டி அடிச்சிகிட்டே வருவான். நாங்கெல்லாம் பின்னாடி ஆடிகிட்டே வருவோம்.

இப்போ எந்த தெருவிலயும் தேங்காய் சுடுறத பாக்க முடியல. என்னை மாதிரி ஆதங்கபடுறவங்க கூட அடுத்த வீட்டுக்கு வாசம் வராம காஸ் அடுப்புல வெச்சி சுடுறாங்க. இன்னைக்கும் ஆடி ஒண்ணு அன்று, என்னைப்போல எத்தனையோ பேரு நினைச்சாலும் கொண்டாட முடியாத தூரத்தில உட்கார்ந்துகிட்டு பழச நினைச்சிக்கிட்டு இருக்கோம். இதெல்லாம் யோசிச்சி பார்க்கும் போது, இப்படி நாம கைவிட்ட வழக்கங்கள எல்லாம் தொகுத்தாலே சிந்து சமவெளி நாகரீகம் மாதிரி புதுப்பெயரோட ஒரு நாகரீகம் கிடைக்கும்.. என்ன சொல்றீங்க??

3 comments:

Anonymous said...

Good Old times.. hope some one in villages follow our tradition even now ..need to recd and save for our future generation !

VS Balajee

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி பாலாஜி

Unknown said...

helo kumaran,

நான் எழுதணும்னு நினைச்சேன்.

அப்புறம் சாமி கும்புட்டுட்டு பிள்ளையார் தலையில மூணு கொட்டு கொட்டிட்டு வரணும். அத வுட்டுட்டிங்க.

ம்ஹிம்.......