Showing posts with label நாடகம். Show all posts
Showing posts with label நாடகம். Show all posts

Friday, September 23, 2016

தி லாஸ்ட் ஆங்க்லெட்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



காலப் புத்தகத்தில் பக்கங்களைப் பின்னோக்கிப் புரட்டி, ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு சென்று பார்ப்போம். 1910 ஆம் வருடம். நெட்ஃப்ளிக்ஸ் இல்லா காலம். சினிமா என்றொரு பதமே, அப்பொழுது தான் உருவாகி இருந்தது. அனைத்துலக மக்களின் பொது மொழியான மௌன மொழியில் படங்கள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அப்போது இந்தியாவின் முதல் சினிமா வெளியாகி இருக்கவில்லை. அச்சமயம், மினியாபோலிஸில் சதர்ன் தியேட்டர் திறக்கப்பட்டு, மௌனப் படங்கள் திரையிடப்பட்டுக்கொண்டு இருந்தது.
இன்னும் பல பக்கங்கள் பின்னோக்கிப் புரட்டி, மின்சாரமில்லா காலத்திற்குச் செல்லலாம். தமிழ் மக்கள் வாழ்வில், அப்பொழுதே பழங்கலைகளில் ஒன்றான தெருக்கூத்து இருந்தது. தெருக்கூத்து, கோவிலில், ஊர்த் திடலில், தெருமுனையில் நடந்திட, அது எளிய மக்களுக்கான கலையாக இருந்தது. மக்களுக்குத் தேவையான கருத்துகள், கதையாக, பாட்டுடன், ஆடலுடன், வசனத்துடன் நாடகமாகப் பரப்பப்பட்டது.
சரி, இப்போது வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி தற்காலத்திற்கு வரலாம்.
பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழின் பழமையான கலை, மினியாபோலிஸின் பழமையான அரங்கான சதர்ன் தியேட்டரில், ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, ஆங்கில வசனத்துடன், தமிழிசைப் பாடல் கலந்த புது வடிவத்தில் அரங்கேற்றப்பட்டது. ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தால், ‘தி லாஸ்ட் ஆங்க்லெட்’ (The Lost Anklet) என்னும் தெருக்கூத்து மேடையேற்றப்பட்டு, மினசோட்டா மக்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது எனலாம்.
தலைப்பே, இந்தத் தெருக்கூத்தின் கதையைச் சொல்லிவிடுமே!! ஆம், சிலப்பதிகாரத்தின் கதையே, இந்தத் தெருக்கூத்தின் கதை. மகிழ்வாகச் சென்று கொண்டிருக்கும் கண்ணகி-கோவலன் கதையில் தொடங்கும் தெருக்கூத்தை, கதை ஓட்டத்திற்கு ஏற்ற உணர்வுகளுடன் விவரித்துச் செல்கிறார் கட்டியங்காரன். சேரன் செங்குட்டுவன், கரிகாலச்சோழன், நெடுஞ்செழிய பாண்டியன் எனத் தமிழ் மண்ணை ஆண்ட மூன்று மன்னர்களுக்கும் இந்தக் கதையில் பங்குண்டு. மாதவியின் அழகிலும், நடனத்திலும் மயங்கிய கோவலன், கண்ணகியை மறந்து சில காலம் மாதவியுடன் தங்க, பிறிதொரு சந்தர்ப்பத்தில், மாதவியுடன் மனஸ்தாபம் ஏற்பட, கண்ணகியின் நினைவு வர, கண்ணகியுடன் திரும்பிச் சென்று சேருகிறார். தான் சேர்த்த பொருட்களை இழந்த காரணத்தால், கண்ணகியும், கோவலனும், கௌந்தி அடிகள் துணையுடன் பொருள் தேடி மதுரை வருகிறார்கள். வந்த இடத்தில் கோவலன் சிலம்பை விற்கச் செல்ல, அங்கு, பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு, அவையில் பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பால் உயிரிழக்க நேரிடுகிறது. அதனால் சோகம் கொண்டு ஆத்திரமுற்ற கண்ணகி, அவையில் மன்னனுடன் வாக்குவாதம் புரிந்து, தன் சிலம்பை எறிந்து, மன்னனின் தவறை நிரூபித்து, மதுரையை எரிக்கிறார்.
இந்தக் கதையை, ஒரு மணி நேர தெருக்கூத்தாக அழகாகச் சுருக்கி, அருமையான நடனத்துடன், தொன்மையான பாடல், இசையுடன் வழங்கினார்கள் இந்தக் கலைஞர்கள்.
கண்ணகியாக லக்சண்யா
கோவலனாக குமரகுரு
மாதவியாக மீனாக்ஷி
கௌந்தி அடிகளாக ஜானிஸ்
நெடுஞ்செழியனாக நாகச் சாய்
கோப்பெருந்தேவியாக யாமினி
செங்குட்டுவனாக வேல்முருகன்
கரிகாலனாக முகமது ஆசிஃப்
பொற்கொல்லனாக சுரேஷ்
கட்டியங்காரனாக ஹனிபால்
ஆகியோர் தாங்கள் ஏற்றிருந்த வேடங்களுக்கு உயிருட்டினர்.
நாடகக் கலையில் நெடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் வாய்ப்பில்லா விட்டாலும், ஒவ்வொருவரும் தங்கள் தேர்ந்த திறமையை இந்தத் தெருக்கூத்தில் காட்டினர். 165 பேர் உட்காரக்கூடிய இந்த அரங்கில், கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகருக்கும் கேட்கும் வகையில், மைக் இல்லாமல் வசனம் பேச வேண்டும். அதற்கேற்ற வகையில், உணர்வுகளை முகத்தில் கொஞ்சம் மிகையாக வெளிப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும், நமது கலைஞர்கள் சிறப்பாகச் செய்தார்கள்.
இது தவிர, வந்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் சிலப்பதிகாரக் கதை புரியும் வண்ணம் வசனம் ஆங்கிலத்திலும், நமது பாட்டிசை தெரிந்திடும் வண்ணம் பாடல்கள் தமிழிலும் அமைத்து, இந்தத் தெருக்கூத்து ஒரு நவீன ஃப்யூஷன் வடிவத்தில் அமைந்திருந்தது ஒரு சிறப்பு. இந்த வடிவத்திற்குள் தங்களை அழகாகப் புகுத்திக்கொண்ட இந்தக் கலைஞர்கள், பார்வையாளர்களின் கவனத்திற்கு எவ்விதக் குழப்பமும் ஏற்பட்டு விடாதவாறு, தங்களது நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, சிலரது பங்களிப்பைப் பாராட்டிவிட வேண்டும். இறுதிக் காட்சியில், லக்ஷண்யாவின் ஆவேச நடிப்பு, வரும் காட்சிகள் எங்கும் குமரகுருவின் நளினமான உடல்மொழி, நடனக் கலைஞர் மீனாக்ஷியின் நவரச முகபாவங்களுடன் கூடிய நாட்டியம், சுரேஷின் கணீர் குரல் மற்றும் ஹனிபாலின் நகைச்சுவை கலந்த வர்ணனைகள் வேடிக்கை நடிப்பு ஆகிய அனைத்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. இவை தவிர, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, இசை, பாடல்கள், ஒலி, ஒளி அமைப்புகள், கலை இயக்கம் என இந்தத் தெருக்கூத்துக்காக, மேடையின் பின்னால் இருந்து பங்களித்தவர்களும் தங்கள் பணியினைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இந்தத் தெருக்கூத்து முடிந்த பின்பு, வந்திருந்த பார்வையாளர்கள் அங்கிருந்த கலைஞர்களைப் பாராட்டியபடி, கை தட்டிக் கொண்டு அரங்கை விட்டுக் கலைந்தனர். முழு வண்ணமயமான ஒப்பனையுடன் இருந்த இந்தக் கலைஞர்களுடன், சிலர் ஆர்வத்துடன் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றனர். பிற மக்களும், ஒப்பனையுடன் சாலையில் நடந்து சென்ற நமது கலைஞர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டே சென்றதைக் காண சுவாரஸ்யமாக இருந்தது.
மொத்தத்தில், இந்தத் தெருக்கூத்தைக் கண்ட பார்வையாளர்களுக்கு, இது ஒரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும். இந்தக் காலத்தில், இந்த ஊரில், இப்படி ஒரு அனுபவத்தை அளித்த, இந்தத் தெருக்கூத்தை இயக்கிய சச்சிதானந்தம், வசனமெழுதிய சரவணன், இதற்கு உறுதுணையாக இருந்த மினசோட்டாத் தமிழ்ச் சங்கத் தன்னார்வலர்கள், மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் தன்னார்வலர்கள், பழமையான அமைப்புடன் சதர்ன் தியேட்டரைப் பராமரித்து வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் பனிப்பூக்கள் சார்பில் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

.

பேஸுபான் – பாலிவுட் டான்ஸ்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் பாலிவுட் டான்ஸ் குழுவின் பேஸுபான் (Bezubaan) என்னும் நடன நாடகக் காட்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
Bezubaan என்றால் குரலற்றவன். இந்தத் தலைப்பைக் கேட்டால், ஏதோ ஒரு சீரியஸான ஃபீல் கிடைக்கிறதல்லவா? ஆனால், இது ஒரு வண்ணமயமான, ஆடல், பாடல், ஜாலி, ஃபீல் குட் நாடகம். ஒரு சீரியஸான மையக் கருத்துடன்.
பாலிவுட் டான்ஸ் சீன் - மினசோட்டாவின் ஃபேமஸ் இந்திய நடனக்குழு. நடனம் தான் இந்தியத் தன்மை கொண்டது. மற்றபடி, அனைத்து நாட்டினரும் ஆடுவார்கள். பாலிவுட் டான்ஸ் என்று சொல்லிக் கொண்டாலும், க்ளாசிக் முதல் டப்பாங்கூத்து வரை அனைத்தையும் ஆடுவார்கள். ஆனால், எதை ஆடினாலும், உயர் தரத்துடன், தேர்ந்த நிபுணவத்துவத்துடன் ஆடுவார்கள்.
நம்மூர் பாலிவுட் பட அமைப்பைப் போன்றே கொஞ்சம் ட்ராமா, அடிக்கடி நகைச்சுவை, அவ்வப்போது செண்டிமெண்ட், நிறைய டான்ஸ் என வரிசையாகத் தொடர்ந்து வைத்து, கவனத்தை எங்கும் சிதறவிடாமல் மேடையை மட்டுமே கவனிக்க வைக்கிறார்கள். ஆக்ஷன் ப்ளாக் தான் இல்லை!!
கதை - மினசோட்டா இண்டர்நேஷனல் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் அப்பா என்னும் அப்பு மேனனையும், அவரது குடும்பத்தாரையும் சுற்றிச் சுழலுகிறது. பிற சமூகங்கள் மீதான சகிப்புத்தன்மையை மையமாகக் கொண்ட கதை. அப்புமேனனுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். முதல் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. பையன், அமெரிக்கக் கலாச்சாரத்தில் ‘Dude’ ஆக வாழ்கிறான்!! இளைய பெண், தந்தையின் கடைக்குப் பக்கத்தில் புதிதாகத் தரைவிரிப்புக் கடை திறந்திருக்கும் ஒரு முசல்மானைக் காதலிக்கிறாள். Dude பையன், ஒரு அமெரிக்கப் பெண்ணைக் காதலிக்கிறான். அந்த அமெரிக்கப் பெண், முசல்மான் நடத்தும் டான்ஸ் பள்ளியில் டான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறாள். அவளைக் கவர, அதாவது கவர் செய்ய, Dude பையனும் அந்த நடனப்பள்ளிக்குச் செல்கிறான். அமெரிக்கப் பெண்ணைக்கூட மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும் அப்பா, ஒரு முஸ்லிமை மருமகனாக ஏற்க மறுக்கிறார். காரணம் - அவருடைய ஃப்ளாஷ்பேக் மற்றும் பொதுவான சமூகப் பார்வை. பிறகு, அப்பாமனம் திருந்துகிறாரா? இந்த ஜோடிகள் இணைகிறார்களா? என்பது கண்டே பிடிக்க முடியாத (!!!) இந்தக் கதையின் முடிவு. இந்தக் கதையின் சுவாரஸ்யமான ஓட்டத்தைத் தள்ளிவிட, நடு நடுவே இரு தொகுப்பாளர்கள் மேடையேறி நமக்குக் கதையை விளக்குகிறார்கள். ஒரு கட்டத்தில், இந்தத் தொகுப்பாளர்களும் கதைக்குள் குதித்துவிடுகிறார்கள்.
எவ்விதக் குழப்பங்களும் இல்லாத சிம்பிள் கதை. அதை அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்கும், ஆடும் நடனத்திற்கும் தொடர்ந்து அரங்கத்தில் கரவொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வசனமெழுதிய ஹிமான்ஷு அகர்வாலும், வர்கீஸ் அலெக்சாண்டரும் இதற்காகப் பாராட்டுக்குரியவர்கள். பாடல்களுக்கு நடனம் அமைத்த அனைத்து பயிற்சியாளர்களுமே கலக்கியிருக்கிறார்கள்.
வசனங்களில் எங்கும் எள்ளலும், சுய பகடியும், சமூகச் சாடலும் பரவியுள்ளன. வசனகர்த்தாவுக்குத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் வித்தியாசம் தெரியாது எனத் தங்களைத் தாங்களே நக்கல் அடித்துக் கொள்கிறார்கள். மொழி தெரியாதவர்களும், ஹிந்தி பாடலுக்கு வாயசைத்து ஆடிக் கொள்ளலாம் என்று பாலிவுட்டையும் வாருகிறார்கள். அப்படியே சென்று, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்பவர்களையும் ஒரு குத்து விடுகிறார்கள். நாடகம் முழுக்கக் கொண்டாட்ட மனநிலை தான். ஏதோ வடக்கத்திய கல்யாண வீட்டுக்குச் சென்று வரும் உணர்வு கிடைக்கிறது.
மொத்தம் எட்டுப் பாடல்கள். அதில் ஒன்று மலையாளப்பாடல். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். விதவிதமான உடைகள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரும் சிறப்பாக ஆட்டம் போடுகிறார்கள். ஆவெனப் பார்வையாளர்கள் வாயைப் பிளக்கும் வகையில் மேடையில் சுழலுகிறார்கள். அனாயசமாக ஜிம்னாஸ்டிக் செய்கிறார்கள். இன்னொரு பக்கம், அனைவரும் நடிப்பிலும் சிக்ஸர் அடிக்கிறார்கள்.
சென்ற ஆண்டு ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில், அதிகப் பார்வையாளர்கள் பார்த்தது - இவர்களுடைய ஸ்பைசி மசாலா சாய் நாடகம் தானாம். இந்த வருடமும் அரங்கம் நிறைந்தே இருந்தது. கடந்த மே மாதத்தில் இருந்து தயாராகி, கடும் பயிற்சி எடுத்து மேடைக்கு வந்திருக்கிறார்கள். அது மேடையில் நன்றாகவே தெரிகிறது. நடப்புக் காலத்திற்கு ஏற்ற, தேவையான கருத்தை, அனைவரையும் மகிழ வைத்து, சிரிப்புடன் சேர்த்து, புகட்டி விடுகிறார்கள்.
எக்கச்சக்கமான கலைஞர்களின் பங்களிப்பை அருமையாக ஒருங்கிணைத்து, ஒரு பிரமாண்ட சினிமாவின் கனவுப் பாடல் காட்சியைப் போல், எந்த வி.எப்.எக்ஸும் இல்லாமல், அழகான அந்த எஃபெக்டை, இந்தச் சிறு மேடையிலேயே கொண்டு வந்து விடுகிறார்கள். படங்களில் காட்டுவது போல், பல வயது அப்புமேனனை, ஒரே சமயத்தில் மேடையில் காட்டுகிறார்கள். இப்படி வியப்பளிக்கும் பலவற்றை, இந்த ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் மேடையில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இந்த நாடகத்தின் இயக்குனர்களான ஸ்டீஃபன் அலெக்சாண்டரும், மது பெங்களூரும்.

நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான திவ்யா, இறுதியில் கிட்டத்தட்ட இதில் பங்கேற்ற நூறு கலைஞர்களையும் ஒரு சேர மேடையில் கொண்டு வந்து, வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, விருப்பமுள்ளவர்களைத் தங்கள் குழுவில் சேர அழைப்பு விடுத்தார். அடுத்த வருடம், இருநூறு பேரை மேடையில் ஏற்றி விடுவாரோ? இதற்காகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் அமைப்பு, இவர்களுக்கு இன்னும் பெரிய மேடை அமைத்துத் தரவேண்டும்!! இப்படி ஒரு பிரமாண்டமான, வண்ணமயமான நிகழ்வை விருந்தளித்த மினசோட்டாவின் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவிற்கு, நமது அன்பான சியர்ஸ்!!

.

Wednesday, April 7, 2010

பெங்களூரில் கிரேஸி மோகன்

வருகிற மே மாதம், 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கிரேஸி மோகனின் இரு நாடகங்கள் நடைபெற இருக்கிறது.



மதியம் மூணு மணிக்கு ஜூராசிக் பேபிவும், இரவு ஏழு மணிக்கு சாக்லேட் கிருஷ்ணாவும்.

மற்ற தகவல்களுக்கும், டிக்கெட் புக் செய்யவும், மேலே உள்ள லிங்க்களை க்ளிக் செய்யவும்.

நான் போன வருஷம், எஸ்.வி.சேகர் நாடகம் பார்த்த அனுபவம் இங்கே.

.

Tuesday, July 28, 2009

எஸ்.வீ.சேகர் - நாடகம் - என் முதல் அனுபவம்

இன்றைய இளம் தலைமுறைக்கும் இதற்கு பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் நாடகம் என்றால் டிவியில் போடும் சீரியல்கள் தான் ஞாபகத்திற்கு வரும். நாடகம் என்ற சினிமாவின் தாய் கலையை, இதுவரை நான் நேரில் கண்டதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது, ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் என்று இருந்தேன். சென்ற ஞாயிறு எஸ்.வீ.சேகரின் ‘பெரிய தம்பி’ பார்த்தேன்.

---

நான் பைக்கில் உள்ளே நுழையும்போதே, சேகர் வாசலில் நின்று கொண்டிருந்தார். தேனீர் சட்டையின் (டி-சர்ட்) மேல் பட்டன்களை திறந்து விட்டு கொண்டு, பூணூல் தெரியும்வாறு. அப்போது தான் காரில் இருந்து இறங்கியிருப்பார் போல். யாருக்காக காத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. நாடகம் ஆரம்பிப்பதற்கு நிமிஷம் முன்வரை மேடையின் அருகே இருக்கும் கதவுக்கு வெளியேவே நின்று கொண்டிருந்தார். அவருக்கு மெஷின் கன்னுடன் ஒரு பாதுகாப்பு காவலர். எம்.எல்.ஏ. அல்லவா?

---

நாடகம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பூஜை பண்ணினார்கள். முடிவில், தேங்காய் உடைத்து முடித்து கொண்டார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் ஸ்கிரினை ஒருவர் ஓடிகொண்டே மாற்றியது, மேடையில் நாலு மைக் வைத்து, நாடகத்தின் கதாபாத்திரங்கள் அதில் தங்களை மாறி மாறி பொசிஷன் செய்து கொண்டே நடித்தது - எனக்கு புது அனுபவம். அவர் வீடு என்பதற்கு வரும் ஸ்கிரினில், அவர் தந்தை புகைப்படம், சங்கராச்சாரியார், ஜெயந்திரர் படங்களை மாட்டி வைத்திருந்தார்கள்.

---




இந்த நாடகத்தில் கிராமத்து வழக்கங்களையும் அப்படி சொல்லிவரும் திரைப்படங்களையும் கிண்டல் செய்து கதை அமைத்திருந்தார். 2 மணி நேரத்தில் 200க்கு மேல் ஜோக்ஸ் என்று டார்க்கெட் வைத்து அடிக்கிறார். அவர் சும்மா பேசினாலே, டைமிங் காமெடி சிதறும். அதனால் ரொம்ப சுலபமாகவே டார்க்கெட்டை கடக்கிறார். ஹிந்தி எதிர்ப்பு, டெல்லி, அம்மா, சன் டிடிஎச், மெகா சீரியல் காமெடிக்களுக்கு நல்ல கைத்தட்டல். லோக்கல் மேட்டர் திருவள்ளுவர் சிலை பற்றி சொல்லியும் கைத்தட்டல் அள்ளினார். நாடகத்தின் முடிவில் அவரே சொன்னதுபோல், எத்தனை நாடகங்கள் வேண்டுமானாலும் போடலாம், டைட்டிலை மாற்றி கொண்டு. டைட்டிலில் என்ன இருக்கிறது என்றார்.

---

அவர்களுக்குள் என்ன நகைச்சுவையோ தெரியவில்லை. மேடையிலேயே ஒரு பெண்மணி (இவர் மீண்டும் மீண்டும் சிரிப்பில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் வருபவர்) அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தார். நாடகம் முடிந்து குழுவினரை அறிமுகப்படுத்தி, வந்திருந்தவர்களுக்கு நன்றி சொல்லி இருபது நிமிடம் பேசியபோது, எஸ்.வீ.சேகரின் காமெடி இன்னும் அதிகமாக தொடர்ந்தது. அரங்கத்தில் சிரிப்பொலியும் அதிகமானது.

சிவசங்கரன் - மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இப்ப, கரண்ட் பிரச்சினைக்கு இவர் காரணம் கிடையாது. ரிட்டையர் ஆகிவிட்டார். இவர் சர்வீஸில் இருக்கும்போது, இவ்ளோ பிராப்ளம் கிடையாது. இன்னும் ஜாஸ்தியாத்தான் இருந்திருக்கும்.

டெலிபோன் மணி - நிறைய படங்களில் பார்த்திருப்பீர்கள். இவரோடுதான் ரஜினி, கமல் நடித்திருப்பார்கள். அந்த படங்கள் எல்லாம் பாருங்க. கண்டிப்பா இவரை தேடி கண்டுப்பிடிப்பீங்க.

கிருஷ்ணக்குமார் - இவர்தான் நாடக இன்சார்ஜ். எல்லாத்துக்கும் இன்சார்ஜ். ஏதாவது பழி வந்தா, இவர் மேலத்தான் போடுவோம்.

ராஜேந்திரன் - இவர் மதிமுகவில் இருக்கிறார். என்ன பொறுப்புன்னு கேட்டுக்கிட்டதில்லை. பதிலுக்கு அதிமுகவில் நீ என்னவா இருக்கன்னு கேட்டுட்டா?

முரளிதரன் - எங்க ட்ருப் ஆரம்பித்ததிலிருந்து ஆர்க்கெஸ்ட்ராவில் இருக்கிறார். காலேஜில் படித்த மாணவன் ஒருவன், அங்கேயே லெக்சரர் ஆன போது, அவனிடம் கல்லூரி முதல்வர் ‘இதை பத்தி என்ன நினைக்கிற?’ என்று கேட்டதற்கு, ’இங்க படிச்சா, வேற எங்கயும் வேலை கிடைக்காது’ என்றானாம். அது போல், என்னைக்கு எங்களுக்கு வாசிக்க ஆரம்பித்தாரோ, வேற எங்கயும் அவரால் போக முடியலை.

தனது மகன் அஸ்வீனையும் அறிமுகப்படுத்தினார். அவரிடம் “நீ ஆக்‌ஷன் ஹீரோவானதற்கு பிறகுதான் கல்யாணம்” என்றிருக்கிறாராம். அதனால், அவரும் சீக்கிரம் ஆக்‌ஷன் ஹீரோ ஆவதாக சொல்லியிருக்கிறாராம். இன்னொரு ஆக்‌ஷன் ஹீரோவா?

ம்ம்ம். அவருக்கென்ன? நடிச்சிட்டு போயிடுவாரு.

---



தொடர்பு கொள்ள அவருடைய மெயில் ஐடி கொடுத்தார். மயிலாப்பூர் எம்.எல்.ஏ. அட் ஜிமெயில் டாட் காம். ”எம்.எல்.ஏ.வா இருக்கேனோ, இல்லயோ, ஐ.டி. என்னிடம் தான் இருக்கும். எப்படியும், இன்னும் கண்டிப்பா ரெண்டு வருஷம் எம்.எல்.ஏ.வாத்தான் இருப்பேன். ரொம்ப வருத்தப்படாதீங்க. அதுக்கப்புறம் எம்.பி.யா ஆயிருவேன். தன்னம்பிக்கைதான்.”

இப்படி நம்பிக்கை அவருக்கு இருந்தா சரி. மூடநம்பிக்கை என்று கருதும் பலவற்றை ஆதரித்து, பரிந்துரைத்து தகுந்த விளக்கம் கொடுக்காமல் பேசுவது சரியா?

---

அவரின் அரசியல் சண்டைகளே காமெடியாகத்தான் இருக்கும். உ.தா. சமீபத்தில் சட்டசபையில் கலைராஜனுடனான சண்டை.

எஸ்.வீ.சேகர் - ”நான் பேசினால் என்னை போட்டுவிடுவதாக கலைராஜன் மிரட்டுகிறார். எனது உயிருக்கோ, உடமைகளுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை இந்த சட்டசபையில் நான் பதிவு செய்கிறேன்.”

கலைராஜன் - “'எட்டப்பன்' எஸ்.வீ.சேகர் நாளை பன்றிக் காய்ச்சலால் “படார்” என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல”

எஸ்.வீ.சேகர் - ”பன்றிக் காய்ச்சலெல்லாம் எனக்கு வராது. ஒருவேளை கலைராஜன் என்னைக் கடித்தால் வரலாம்”

---

நாடகம் அழிந்து வரும் கலை என்று பல வருடங்களாக சொல்கிறார்கள். இன்னும் உயிர் பிழைத்து வருவதற்கு, எஸ்.வீ.சேகர், கிரேஸி மோகன், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றவர்களது குழுக்களே முக்கிய காரணமாக இருக்கிறது. இவர்களின் பலம் - நகைச்சுவை, சினிமா தந்த பிரபலம். நாடக ஆர்வம் குறைவதற்கு காரணம் - எத்தனை தடவை, பார்த்ததையே பார்ப்பது?, ஒரு நாடகம் பார்க்கும் காசில், நாலு படங்கள் பார்த்து விடலாம் போன்ற எண்ணங்கள்.

நாடகங்களை பற்றி அவர் சொன்னபோது, ‘சினிமா பிடிக்கவில்லையென்றால், வெளியே தான் போகணும். இங்க பிடிக்கலைன்னா, உள்ளே வரலாம்’. அதாவது அவரை சந்தித்து சொல்லலாமாம். சொன்னபடியே, எல்லாம் முடிந்தபிறகு, வெளியே செல்லும் கதவருகே நின்று, கை குலுக்கி பாராட்டு பெற்று அனைவரையும் அனுப்பி வைத்தார்.

ஏதாவது புதுசா முயற்சி பண்ணினால், நாடகங்களுக்கு மீண்டும் வரவேற்பு வரலாம். என்ன செய்வது? யார் செய்வது? தெரியவில்லை. பார்க்கலாம்.

மார்க்கெட் போன காமெடி நடிகர்கள் ட்ரை பண்ணலாம். கவுண்டமணி? கூட்டம் அம்மும்.

---

கடைசியா அவர் சொன்னது,

“உங்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காரணம், ஒரு ஞாயித்துக்கிழமை... தொலைக்காட்சிகளில் எத்தனை படங்கள், எவ்ளோ நிகழ்ச்சிகள்... எல்லாத்தையும் விட்டுட்டு இவ்ளோ பேரு வந்திருக்கீங்கன்னா, அதற்கு காரணமா இருக்கும் அனைத்து தொலைக்காட்சிக்களும் எனது மனமார்ந்த நன்றிகள்.”

:-)

Friday, July 24, 2009

பெங்களூரில் எஸ்.வீ.சேகர்

இந்த வார இறுதியில் பெங்களூரில் எஸ்.வீ.சேகரின் இரு நாடகங்கள் நடைபெறவுள்ளது.



சனிக்கிழமை - 25 ஜூலை 2009 - 'தத்துப்பிள்ளை'
ஞாயிற்றுக்கிழமை - 26 ஜூலை 2009 - 'பெரியதம்பி'

டிக்கெட் புக் செய்ய, இங்கே செல்லவும்.
http://www.ticketnew.com/Calender.aspx

பார்க்கிறதுக்கு இப்படி போங்க.


View Larger Map

அவரோட காமெடி கொஞ்சம்... இங்கே...

Wednesday, February 11, 2009

எஸ். வீ. சேகர் காமெடி

இது அவருடைய அரசியல் வாழ்வை பற்றிய பதிவு இல்லை.

சின்ன வயசுல, எஸ்.வீ.சேகர் நாடகங்கள வீட்டுல டேப்புல போட்டு சுத்தி உக்கார்ந்து கேட்போம். ரொம்ப நாள் கழிச்சு, இப்ப கேட்டேன்.

இப்ப, நான் படங்களில் பார்த்து சிரிக்குற காமெடி கூட ஒப்பிட்டு பார்த்தால், நகைச்சுவையில் உள்ள மாற்றம் தெரியுது. ஒரு வேளை, இன்னமும் நாடக நகைச்சுவை இப்படித்தான் இருக்குமோ?

யாமிருக்க பயமேன் நாடகத்தில் இருந்து சில.

---

என் வீட்டுல ரெண்டு பொண்டாட்டிக அடிக்குற கொட்டம் தாங்க முடிலப்பா...
என்கிட்டே விட்ருங்க.
ஆங்!
நான் டைவர்ஸ் வாங்கி தாரேன்.
டைவர்ஸ் வாங்குறது தமிழ் பண்பாடு இல்லையே?
ரெண்டு பொண்டாட்டி கட்டுறது மட்டும் தமிழ் பண்பாடா?
அது சங்ககால தமிழ் பண்பாடு.
இப்படி சொல்லியே ஆளாளுக்கு அஞ்சாறு ஒதுக்கிருவீங்களே?

---

யோவ்! முதல்ல என்னோட சொத்தை பிரிச்சி கொடு
சொத்த பிரிக்கறதா? நான் சாகறது வரை அது நடக்காது.
ஓகே. அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்.

----

மூதாதையர் உயில் என்ன சொல்லுது, தெரியுமா?
என்ன சொல்லுது?
பிரிக்க கூடாதுன்னு.
உயில் கவரையேவா?

----

சித்தப்பா : எனக்கு சின்ன வயசுலேயே பொய் பல். அதாண்டா எனக்கு கல்யாணம் ஆகல.
சேகர் : அதான். பொய் பல், பொய் கண் இப்படி என்னலாம் பொயோன்னு நினைச்சி பொண்ணுங்க பயந்திருப்பாங்க.
சித்தப்பா : எனக்கு செவ்வாய் தோஷம்'டா
சேகர் : இல்ல... வேறென்னமோ மர்மமான காரணம் இருக்கு.
சித்தப்பா : இல்லடா...
சேகர் : இருக்கு.
சித்தப்பா : இல்லடா...
சேகர் : இருக்கு.
சித்தப்பா : முடியலடா...
சேகர் : அப்படி ஒத்துக்க.
சித்தப்பா : ஐயோ...... உன்னோட மல்லு கட்ட முடியலடான்னு சொன்னேன்.

---

தரகர் : பொண்ண பத்தி சொல்றேன், நல்லா கேட்டுக்க.
சேகர் : ம்ம்ம்....
தரகர் : இந்த நெத்தி இருக்கே நெத்தி, ஸ்ரீதேவி நெத்தி.
சித்தப்பா : நெத்தியடி
சேகர் : சித்தப்பா, உணர்ச்சிவசப்படதே. பொண்ணு எனக்கு.
தரகர் : காது இருக்கே, ஒரு காது குஷ்பு காது; ஒரு காது ரூபிணி காது
சேகர் : பொண்ணுக்கு மொத்தம் ரெண்டு காது தானே?
தரகர் : ஆமாம் தம்பி. கண்ணு ரெண்டும் ஸ்ரீவித்யா கண்ணு.
சேகர் : ஓஹோ!
தரகர் : இந்த மூக்கு இருக்குல்ல, மூக்கு?
சேகர் : சுகன்யா மூக்கா?
தரகர் : அதான் இல்ல.
சேகர் : மூக்கே இல்லையா? அந்த இடத்துல என்ன இருக்கு? பிளாட் போட்டு வித்துடாங்களா?
தரகர் : ஐயோ, தம்பி! இந்திரா காந்தி மூக்குன்னு சொல்ல வந்தேன்.
சேகர் : என்னய்யா இது? நீ சொல்றது எல்லாம் மொத்தமா கூட்டி பார்த்தா, நம்ம ஜனகராஜுக்கு பொம்பள வேஷம் போட்டமாதிரி வருதேயா?

---

சித்தப்பா : இந்த கிழவியை நான் டைவர்ஸ் பண்றேன்.
சித்தி : அய்யய்யோ! என்ன வார்த்தை சொல்லிடீங்க? கிழவியா?
சேகர் : ஒ! அதுக்குதான் அதிர்ச்சியா? டைவர்சுக்கு இல்லையா?

----