லாஜிக் கேள்விகள் தடை செய்யப்படுகிறது.
---
ஒரு குட்டி குழந்தைக்கு, கடவுள் சொர்க்கத்துல மனிதர்களுக்கு ஆப்பிள் கொடுக்குற விஷயம் தெரியவருது. ஆப்பிள் வாங்கும் சந்தோஷத்துடன், சொர்க்கம் செல்கிறது. அங்கு, கடவுளிடம் ஆப்பிள் வாங்க, திருப்பதியில் லட்டு வாங்க நிற்பதை விட பெரிய க்யூ நிற்கிறது. குழந்தையும் வரிசையில் சேர்ந்து கொள்கிறது. நிற்கும்போது, குழந்தைக்கு ஒரே மகிழ்ச்சி. கடவுள் கையால் ஆப்பிள் வாங்க போகிறோமே? என்று.
குழந்தை கடவுள் அருகே நெருங்கிவிட்டது. கடவுள் பழத்தை குழந்தையின் கையில் கொடுக்கும்போது, குழந்தையின் பிஞ்சு கரங்களில் அப்பெரும் பழம் நிலைகொள்ளாமல், கீழே மண்ணில் விழுந்து விட்டது. அச்சச்சோ! குழந்தைக்கு வருத்தம். அங்கு இருக்கும் விதிமுறைப்படி, அந்த பழம் வேண்டுமானால், திரும்பவும் வரிசையில் நிற்க வேண்டும். தேவதூதர்கள், இந்த சட்டத்திட்டத்தை குழந்தையிடம் சொல்கிறார்கள். ’வந்தது வந்து விட்டோம். சும்மா போவதா?’ வெறும் கையோடு வீடு திரும்ப குழந்தைக்கு விருப்பமில்லை. திரும்பவும், க்யூவின் வாலில் தொடங்கியது.
இம்முறை வரிசையின் நீளம் முன்பைவிட அதிகம். முன்னர், குழந்தைக்கு பின்னால் நின்றவர்கள், இப்போது திருப்தியுடன் பழத்தை வாங்கி செல்கிறார்கள். வரிசையில் நின்று இதை கண்ட குழந்தைக்கு ஏக்கமாகிவிடுகிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு? மத்தவங்க எல்லாம் சுலபமா வாங்கிட்டு போறாங்க? எனக்கு மட்டும் ஏன்? நான் என்ன பாவம் செய்தேன்? கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது. கூடவே, பயமும் வந்தது. இந்த முறையும் தவறவிட்டு விட்டால்?
குழந்தை பழத்தை பெறும் நேரம் வந்தது. கடவுள் பழத்தை நீட்ட, குழந்தையின் கைகள் நடுக்கத்துடன் பெற்று கொண்டன.
கொடுத்து விட்டு கடவுள் பேச தொடங்கினார்.
”என்னருமை மழலையே, நான் போன முறை பழத்தை உன்னிடம் கொடுக்கும் போது தான் கவனித்தேன். அது ஒரு அழுகிய பழம். அது உனக்கு வேண்டாம் என்று தான் கீழே விழும்மாறு தவறவிட்டேன். உனக்கு அழுகிய பழத்தை கொடுக்க நேர்ந்ததை எண்ணி, வருந்தி, அடுத்த முறை உனக்கு ஒரு சிறப்பான பழத்தை கொடுக்க எண்ணினேன். அந்நேரம் அந்த பழம் தேவ தோட்டத்தில் செழுமை அடைந்து கொண்டிருந்தது. அப்பழம் முழுமையடையவே, உன்னை நீண்ட நேரம் வரிசையில் நிற்க வைக்க வேண்டி இருந்தது. இப்பொழுது, அது உன் கையில். இன்றைய தேதிக்கு, அத்தோட்டத்தில் வளர்ந்த சிறந்த பழம் இது தான். அது உனக்கு தான். மகிழ்ச்சியுடன் சென்று வா.”
கடவுள் குழந்தையை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
ஆகவே, நண்பர்களே, சில சமயம் நம்மை நூறு சதவிகிதம் ஒரு வேலைக்கு அர்பணித்தும், அதன் பலன் தாமதமாக கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலும் போகலாம். அந்நேரம் நாம் நினைத்து கொள்ள வேண்டியது. அதற்கான சிறப்பான வெகுமதி நமக்காக காத்திருக்கிறது என்றும், அதற்காகவே இந்த தாமதம் என்றும். நடப்பவை ஒவ்வொன்றையும் நல்லதென்றெண்ணி நன்றி கூறுங்கள். மேலும், நம் வாழ்வில் நன்மை பயக்கும்.
இதே நம்பிக்கையில், இதே கண்ணோட்டத்தில் இவ்வுலகை கண்டால், இதுவும் சொர்க்கம் தான்.
----
மின்னஞ்சலில் வந்தது. நல்லா இருக்குதேன்னு, இங்கே.. :-)