Friday, September 23, 2016

கபாலி கபளீகரம் - திரையிலும், திரைக்கு அப்பாலும்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரைபெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் “கபாலி” திரைப்படம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா? என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்பது தான் பெரும் எதிர்பார்ப்புகளுடன் சென்றவர்களின் பதிலாக இருக்கிறது. அதே சமயம், எவ்வித ரஜினிமேனியாவிலும் தாக்குப்படாமல், படம் பார்க்கச் சென்றவர்களுக்கு, படத்தின் சில அம்சங்கள் பிடித்திருக்கின்றன. இது தவிர, பலவித அரசியல் காரணங்களுக்காகச் சிலருக்குப் படம் பிடித்திருக்கிறது. சிலருக்குப் படம் பிடிக்கவில்லை. எவ்வித அரசியலுக்குள்ளும் நுழையாமல், ஒரு சினிமாவாகக் கபாலி எப்படியிருக்கிறது?
தமிழ்த் திரைப்படங்களில், உலகளாவிய அளவில் இந்த அளவுக்கு எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்ட படம் வேறு எதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. ரஜினி+ரஞ்சித் என்று தானாகவே கிளம்பிய எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், படம் வெளியீட்டுக்குத் தயாராகிய நேரத்தில், படத்தின் தயாரிப்புக்குழு பல்வேறு வகைகளில் உருவாக்கிய எதிர்பார்ப்பு, மற்றொரு பக்கம் பெரும் அலையாக எழுந்தது.
படம் பார்த்த பிறகு, படக் குழுவினர் தவறான எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டார்களோ எனத் தோன்றுகிறது. என்னவென்று ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
இந்தப் படத்தின் கதை, ஒரு மலேசிய தமிழ் டானின் கதை. மலேசியத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழ்த் தொழிலாளர்களின் தலைவராக உருவாகும் ரஜினிகாந்த், அங்கிருக்கும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து, மலேசிய அரசியலையும், வணிகத்தையும் ஆட்டிப் படைக்கும் பல குழுக்களில் ஒரு குழுவின் தலைவராக இருக்கும் நாசரின் இடத்தை, அவரது மரணத்திற்குப் பிறகு அடைகிறார். எதிர்க் குழுவின் சூழ்ச்சியால், தனது கர்ப்பிணி மனைவியை இழந்து, சிறைக்குச் செல்கிறார். இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு, சிறையில் இருந்து வெளிவரும் அவர் எப்படித் தனது குடும்பத்தைக் கண்டு அடைந்து, எதிரிகளை வெல்கிறார் என்பது தான் கபாலியின் சுருக்கமான கதை.
படத்தில் ரசிகர்களைக் கவரும் விஷயங்கள் என நிறையப் பட்டியலிடலாம். ரஜினியின் ஜெயில் ரிலீஸ் என்ட்ரியும் பறவைக்கடை சண்டைக் காட்சியும், அவரது மாஸ் ரசிகர்களுக்குக் கிடைத்த உடனடித் தீனி. பிரிந்த மனைவியை நினைத்து வாடும் காட்சிகளும், அவரைத் தேடி மகளுடன் செல்லும் காட்சிகளும், ரஜினியிடம் நல்ல நடிப்பை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு நெகிழ்ச்சியைக் கொடுக்கும். ரஞ்சித், ரஜினியை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார் எனக் காண வந்தவர்களுக்கு, ரஜினி ஆங்காங்கே பேசும் வசனங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். படம் பார்த்த அனைவரையும், ஒரு முழுமையான சினிமாவாக, ஒரு சேரக் கவரவில்லை என்பது தான் குறை.

இந்தப் படத்தின் திரைக்கதை, கபாலி என்ற டானின் பிரிந்த குடும்பக் கதையையும், அவரது எதிரிகள் கொடுக்கும் சிக்கல்கள் சேர்த்த ஆக்ஷன் கதையையும் ஒன்றாக இணைத்துச் செல்கிறது. படத்தின் முதல் பிரச்சினை இங்கு தொடங்குகிறது. ஜெயிலில் இருந்து வெளிவரும் கபாலி, எதிரிகள் அணிக்குள் ஒரு அதிரடி அட்டாக் கொடுக்கிறார். இந்தக் காட்சிகள் பரபரப்புடன் வேகமாகச் செல்கின்றன. பிறகு, தான் இழந்ததாக நினைத்த தனது மனைவியும், மகளும் உயிருடன் இருப்பதை அறிந்து, அவர்களைத் தேடி செல்கிறார். இந்தக் காட்சிகள் உணர்வு பூர்வமாக மெதுவாகச் செல்கின்றன. இக்காட்சிகளில், ரஜினியும், ராதிகா ஆப்தேவும் மிக நிறைவாக நடித்திருக்கிறார்கள் என்றாலும், மெதுவாக நகரும் காட்சித் தொகுப்புகள், தொடர்ந்து பரபரப்பான திரைக்கதையை எதிர்பார்த்து வந்த FDFS (முதல் நாள் முதல் காட்சி) ரசிகர்களை நெளிய வைக்கிறது. முக்கியமாக, சென்னை, பாண்டிச்சேரி காட்சிகளின் படு ஸ்லோவான வேகம், திரைக்கதைக்கு என்ன வித ஆதாயத்தை அளிக்கிறது என்று அமைத்தார்கள் எனத் தெரியவில்லை.

இன்னொரு பக்கம், மலேசிய தமிழர்களின் உலகமும், அங்கிருக்கும் ரவுடிகள் உலகமும் அன்னியமாகவும், செயற்கையாகவும் இருப்பதாக ஒரு உணர்வை அளிக்கின்றன. மலேசிய ரசிகர்களுக்கு இக்காட்சிகள் நெருக்கமாக இருக்கலாம். யாரும் தொடாத மலேசியத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பின்னணியாக வைத்து படமெடுத்து இருப்பதைப் பாராட்டலாம் என்றாலும், அது சரியான அழுத்தத்துடன் பதியப்படவில்லை என்பதையும் குறையாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மலேசியத் தமிழும் ஆங்காங்கே புரிபடாமல், நாமாகவே ஏதோ ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. மலேசியத் தமிழர் வரலாற்றுக்காக ரஞ்சித் நிறைய உழைத்திருக்கலாம். ஆனால், அதைச் சராசரித் தமிழ் ரசிகன் சரியாக உள்வாங்கும் விதத்தில் காட்சிகளை அமைக்காததால், எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.
படத்தின் இறுதியில் ‘இணைத்திருக்கும்’ கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சி, திரைப்படத்துடன் ஒட்டவில்லை. ஒரு இம்பாக்ட்டையும் கொடுக்க வலுவில்லா செயற்கைத் தோரணம். வில்லனின் சாம்ராஜ்யத்தை இருந்த இடத்தில் இருந்தே அழிக்கிறார் கபாலி. ரஜினி படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்றால், இது முழுமையான ரஜினி படமாகவும் வரவில்லை, இயக்குனர் ரஞ்சித்தின் நேர்மையான சமூகப் பார்வை கொண்ட படமாகவும் வரவில்லை என்பதே சோகமான உண்மை. இந்தக் கமர்ஷியல் கிளைமாக்ஸ் முடிந்த பிறகு, இயக்குனர் ஒரு ‘டைரக்டர் டச்’ கிளைமாக்ஸ் வேறு வைத்து, ரசிகனின் குழப்பத்துக்கு முடிவே இல்லாமல் படத்தை முடிக்கிறார்.
இயக்குனர் ரஞ்சித்தின் சுளீர் பளீர் வசனங்கள் இல்லாமல் இல்லை. “பறவையோட குணமே பறப்பது தான்… அதைப் பறக்க விடு…”, “காந்தி ஆடையை அணியாமல் இருந்ததற்கும், அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் காரணம் இருக்கு… அரசியல்” என்று கவனிக்க வைக்கிற, சிந்தனைத் தூண்டுகிற வசனங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அவை காட்சிகளுக்குத் தேவையானதாகத் தோன்றவில்லை. வசனம் சொல்லணும் என்பதற்காகச் சொல்லியதாக இருக்கிறது. அது போலவே, ரஞ்சித் வழக்கமான தனது சமூக அரசியலைப் பேச வேண்டி, அதைத் தமிழன் என்ற பொட்டலத்திற்குள் வைத்து மறைத்து கொடுக்கிறார். அதுவும் திரைக்கதைக்குத் தேவைப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம், மலேசிய சமூக அரசியலுக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகனுக்கும் இருக்கும் தூரமாகக்கூட இருக்கலாம்.
ஆரவாரமான பிக்கப் எடுக்கும் முதல் அரை மணி நேரக் காட்சிகள், பிறகு மூன்று, இரண்டு, ஒன்று என்று கியர் குறைத்து, வேகம் இறங்கி, பிறகு இறுதிக் காட்சிகளில் டேக் ஃஆப் எடுக்க நினைத்து, அது முடியாமல், இலக்கை அடையாமல், எங்கோ சென்று நிற்கிறது. இப்படி, படத்தின் inconsistent speed பார்வையாளர்களை நிலை கொள்ளாமல், தடுமாறச் செய்கிறது. ஒன்று கிளம்பிய வேகத்தில் செல்ல வேண்டும், அல்லது அடுத்து எடுத்துக் கொண்ட மெதுவேகத்தில் சீராகச் சென்றிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், சவசவவெனச் சென்று பயணம் கெட்டது தான் மிச்சம்.
அதே நேரத்தில், சில பாராட்டுகளையும் கூறி விடுவது முக்கியம். தனது டெம்ப்ளேட் கதைக்களத்தில் இருந்து விலகி வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்திற்கு முதல் பாராட்டு, ரஜினிக்கு. கிடைத்த வாய்ப்பில், ரஜினியின் இயல்பான நடிப்பை, பல ஆண்டுகளுக்குப் பிறகு காணும் வகையில், சில காட்சிகளை அமைத்த இயக்குனர் ரஞ்சித்திற்கு இரண்டாம் பாராட்டு. ரஜினி படங்களில் கேட்டிராத புது வகை இசையை அளித்த சந்தோஷ் நாராயணனுக்கு மூன்றாவது பாராட்டு. படம் நெடுகிலும், ஏதோ ஒரு வகையில் வந்து, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ராதிகா ஆப்தேவுக்கு நான்காவது பாராட்டு. அவ்ளோ தான்!!
இது தவிர, படத்தில் ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். யார் நடிப்பிலும் குறை சொல்ல முடியாது. ஹீரோ, ஹீரோயினைத் தவிர, மெட்ராஸ் படத்தில் நடித்திருந்த அனைவருக்கும் இதில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஏதும் வாக்குக் கொடுத்திருந்தாரா என்று தெரியவில்லை!! அத்தனை கதாபாத்திரங்களை உருவாக்கி நடமாடவிட்டிருக்கிறார். தினேஷ், தன்ஷிகா, ரித்விகா, ஜான் விஜய் தவிர மற்ற அனைவரும் கெஸ்ட் ரோல் என்பது போல் ஆங்காங்கு வந்து செல்கிறார்கள்.
இனி, படத்திற்கு வெளியே நிகழ்ந்த அரசியலைக் காணலாம்.
இது முழுமையான பரபரப்பு, விறுவிறுப்பு ஆக்ஷன் படம் அல்ல. ஆனால், வெளியிட்ட டீசர் கொடுத்த கண்ணோட்டம் வேறு. இது தற்செயலா அல்லது தெரிந்தே திட்டமிட்டு செய்த மோசடியா என்று தெரியவில்லை. இதனால் தான், படத்திற்கு ட்ரெய்லரே வெளியிடவில்லையா என்ற சந்தேகமும் எழுகிறது. கிஷோர், டீசரில் சொல்லும் “யாருடா, அந்தக் கபாலி” என்ற வசனத்தை யோசித்துப் பார்க்கவும். படத்தில் எங்கு வராத, வர முடியாத காட்சி அது. டீசருக்கு என்றே பிரத்யேகமாக எடுத்து இணைத்திருக்கிறார்கள்.
அடுத்து, அதிகார மையங்களுடன் இணைந்து படத்தின் தயாரிப்புக்குழு நிகழ்த்திய வணிக எதேச்சாதிகாரம். இந்த அளவு அதிகக் கட்டணக் கொள்ளையை, தமிழ்த் திரையுலக வரலாறு கண்டதில்லை. அதிகம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதால் கார்ப்பரேட்டுகளுக்கு முதல் நாள் டிக்கெட்டுகளை அள்ளிக் கொடுத்து விட்டு, கீழ் நிலை ரசிகர்களைத் தியேட்டர் பக்கம் வரவிடாமல் செய்தது சோகம். அது இத்தனை ஆண்டு காலம் திரையரங்குகளைத் திருவிழாக்களாக மாற்றி, சினிமாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அவர்களுக்குச் செய்த துரோகம்.
இவ்வளவு சீர்கேட்டை நிகழ்த்திவிட்டு, படத்தில் சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய கருத்துகளை ஆங்காங்கே பேசினால், அது எடுபடுமா என்ன?
பெரும் எதிர்பார்ப்பைப் பொய்யாகக் கிளப்பி, அதன் மூலம் பெரும் வசூல் வேட்டையை நடத்திவிட்டனர்., இன்னும் சில நாட்களுக்கு எத்தனை கோடி லாபம் எனச் சாதனை செய்திகள் அணிவகுத்து வரும். அதனுடன் சேர்த்துக் கொள்ள இன்னொரு சாதனையும் உள்ளது.
அது, இணைய தளங்களில் திருட்டுத்தனமாகப் படங்களை வெளியிடுபவர்களுக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் நடந்த நிழல் மோதல் பற்றியது. பட வெளியீட்டின் போது, தயாரிப்பாளர் தாணு படத்தை இணைய தளங்களில் வெளியிட தடையுத்தரவு வாங்குகிறார். சில டொமைன்கள் தடையாகின்றன. உடனே கணப்பொழுதில், புது டொமைன்கள் முளைக்கின்றன. பொதுவாக, திருட்டு இணைய தளங்களில் படம் வெளியாகி ஒருநாள் கழித்து வெளிவரும். கபாலியோ, படம் முதல் காட்சி முடிந்து, சில நிமிடங்களில் இணையத்தில் வெளியாகிறது. அது சமூக வலைத் தளங்கள் மூலமும், தகவல் தொடர்பு மொபைல் செயலிகள் மூலமாகவும், உடனே லட்சக்கணக்கில் பார்வையாளர்களைச் சென்று அடைகிறது. சட்ட விரோதமானது எனத் தெரிந்தும், இத்தளங்களுக்குச் சமூக வலைத்தளங்களில் நேரடியான பெரும் ஆதரவு குவிகிறது. ஒரு பக்கம் கட்டணக் கொள்ளை, இன்னொரு பக்கம் அதிவேகத் திருட்டு வெளியீடு, மற்றொரு பக்கம் திருட்டு வெளியீட்டுக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவு - இவை அனைத்துமே கபாலி சார்ந்து நாம் உரையாட வேண்டிய முக்கிய நிகழ்வுகள். பேராசையும், முறைகேடும் சமூகத்தில் நீக்கமற நிறைத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியதும், கபாலியின் சாதனைகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

.

No comments: