Monday, October 2, 2017

ராஜமெளலி - இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா?

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.எந்தவொரு மனிதனும் அவன் சார்ந்த பிராந்தியத்தில், மக்களின் மனங்கவர்ந்து வெற்றிகளைப் பெற்ற பின், தனது அடுத்த இலக்காகத் தனக்கான எல்லைகளை விரிவாக்க எண்ணுவான். அரசியலோ, சினிமாவோ அல்லது அது எந்தவொரு துறையாக இருந்தாலும் வளர்ச்சி என்பது இப்படியே அடையப்படும்.

சினிமாவிலும் இப்படி ஒரு மாநிலத்தில் பெயர் பெற்ற கலைஞர்கள், புகழ் ஏணியில் மேலும் ஏற, தங்கள் மாநில எல்லையைக் கடப்பார்கள். அதனால் தான், ஒரு மொழியில் நன்கு வெற்றியடைந்த ஹீரோக்கள், அடுத்துப் பக்கத்து மாநிலத்தைக் குறி வைப்பார்கள். தற்சமயம், ரஜினி படங்கள் தமிழ் ஆடியன்ஸ்களுக்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை. குறைந்தபட்சம், தெலுங்கு மக்களை மனதில் வைத்து அம்மாநிலத்தில் அறிமுகம் உள்ள நாயகிகள், வில்லன்கள் என அவர்களையும் படத்தில் சேர்த்து எடுக்கப்படுகிறது. ஷாருக்கான் போன்ற ஹிந்தி நடிகர்கள், தங்கள் படங்களின் வர்த்தகத்தைக் கூட்ட, தென்னிந்தியாவில் கடை விரிக்க ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் வந்து விடுகிறார்கள்.

இது நடிகர்களுக்கு உரித்தானது மட்டுமல்ல. படத்தின் முக்கியப் பணியான இயக்கத்தை ஏற்றிருக்கும் இயக்குனர்களுக்கும் பொருந்தும். தமிழில் தொடர் வெற்றிகளைப் பெற்ற பாலசந்தர், அடுத்துத் தெலுங்கு, ஹிந்திப் படங்களை எடுத்து, அங்கும் வெற்றிப் பெற்றார். மணிரத்னமும் தமிழ், தெலுங்கு வெற்றிகளைத் தொடர்ந்து மொத்த இந்தியாவுக்கான படங்களை எடுத்தார். அடுத்து வந்த ஷங்கர், முருகதாஸ் போன்றோரும் இப்படி மொத்த இந்திய மார்க்கெட்டையும் குறிவைத்து தான் தற்போது படங்களை எடுத்து வருகிறார்கள்.

இப்படி இந்திய அளவில் வெற்றியைக் கொடுக்கும் இயக்குனர்களைத் தான் இந்தியாவின் நம்பர் 1 டைரக்டர் என்று கமர்ஷியலாகக் குறிப்பிடுவார்கள். நடிகர், நடிகைகளைத் தாண்டி ஒரு இயக்குனருக்கான எதிர்பார்ப்பு இப்படி இந்திய அளவில் ஏற்படும் போது அவர்களை இந்தியாவின் நம்பர் 1 இயக்குனர் என்றழைப்பதில் ஏதும் தவறில்லை.

இந்த விஷயத்தில் தமிழக இயக்குனர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்கள். ரோஜா, பம்பாய் போன்ற படங்கள் வெற்றிப் பெற்ற போது, மணிரத்னம் நம்பர் 1 ஆக இருந்தார். முதல் ஐந்துப்படங்களின் மாநிலம் கடந்த வெற்றிக்குப் பிறகு, முதல்வன் படத்திற்குப் பிறகு, அப்படத்தை ஷங்கர் இந்தியில் நாயக் என்ற பெயரில் இயக்கினார். அந்தப் படத்தில் டைட்டில் கார்டில் இயக்குனர் பெயர் வரும் போது, ஒரு இயக்குனர் நாற்காலியின் பின்னணியில் 3 , 2 , 1 என்று ஒளிர்ந்து ஷங்கர் என்று பெயர் வரும்.

அந்தப் படம் தோல்வியடைந்தாலும், அக்காலக்கட்டத்தில் அவர் தான் நம்பர் ஒன் இயக்குனர். இன்னமும் அந்த ரேஸ்சில் அவர் இருக்கிறார் என்றாலும், 2000க்கு முன்பு போல் ஸ்ட்ராங்காக இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். 2.0 வரட்டும், பார்க்கலாம். முருகதாஸ் வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் ஹிந்தி கஜினி போன்ற இந்திய அளவிலான ஹிட்டை அதற்குப் பிறகு கொடுக்கவில்லை. தமிழ் ரசிகர்களால் விலங்குப் பட இயக்குனர் என்று கிண்டல் அடிக்கப்படும் மறைந்த இயக்குனர், தயாரிப்பாளர் ராமநாரயணன் அவர்கள் கூட இந்தியாவில் பல்வேறு மொழிகளில் படம் இயக்கியிருக்கிறார். அவை வெற்றிப் பெற்றாலும், அவை மாநிலம் கடந்து பேசப்படவில்லை. தவிர, அவை சிறு பட்ஜெட் தயாரிப்புகள் என்பதால், பெரிதாகக் கவனிக்கப்படவும் இல்லை.

இப்போது தெலுங்கு இயக்குனர் ராஜமெளலியின் வெற்றிக் காலம். இரண்டாயிரம் ஆண்டு ஸ்டுடண்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் மூலம் தெலுங்குப் படவுலகில் அறிமுகமானார். ஜூனியர் என்.டி.ஆருக்குத் திருப்புமுனையாக அப்படம் அமைந்தது. அதன் பின்னர், சிம்மாத்ரி என்ற படத்தை மீண்டும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து எடுத்து அடுத்த வெற்றியைக் கொடுத்தார். அதன் பிறகு, அவர் எடுத்த சை, சத்ரபதி, விக்கிரமார்க்குடு, எமதொங்கா என அனைத்தும் வெற்றிப் பெற்றன. இப்படங்களில் நிறைய மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன.

இதுவரை சராசரி கமர்ஷியல் படங்களை எடுத்து வந்தவர், மகதீரா என்ற சரித்திரம் கலந்த ஆக்ஷன் படத்தை 2009இல் சீரஞ்சிவியின் மகன் ராம்சரணை வைத்து இயக்கினார். இதற்கு முந்தைய படங்கள் அக்கம்பக்கம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருந்த வகையில் ராஜமௌலி மற்ற மாநிலத் திரைப்படத்துறையினருக்கு அறிமுகமாகியிருந்தார். மகதீராவிற்குப் பிறகு மொத்த இந்தியத் திரையுலகத்தையும் தன் பக்கம் பார்க்க வைத்தார் ராஜமௌலி.

ராஜமௌலியின் வெற்றிக்குப் பின்புலமாக அவரது தந்தை விஜேயந்திர பிரசாத். அவரது கதையைத்தான் ராஜமௌலி தொடர்ந்து கதையாக்கி வருகிறார். அப்பா - மகனும் மிகச் சிறந்த கதைச் சொல்லிகள். தந்தையின் பலமான கதையை, மிகச் சுவாரஸ்யமாகத் திரையில் காட்டுவது மகனுக்குக் கை வந்த வித்தை. மகதீராவில் ராஜாக்கள் காலத்தைத் திரையில் அவர் காட்டிய விதம், பார்ப்போரை வாய் பிளக்க வைத்தது. இச்சமயம், கிராபிக்ஷை எப்படிக் கையாளுவது என்பதிலும் ராஜமௌலி கில்லாடியாக உருவெடுத்தார்.

மகதீரா மிகப்பெரிய வெற்றிப்பெற்று, பெரும் புகழைக்கொடுத்தாலும், ராஜமௌலியை சீரஞ்சிவியின் குடும்பம் நடத்திய விதம், மகிழ்வைக் கொடுக்கவில்லை. படத்தை அவர்கள் குடும்பம் தயாரித்திருந்ததால், மொத்த வெற்றியையும் அவர்கள் குத்தகைக்கு எடுத்துச் சென்றனர். இதனால், ராஜமௌலி ஒரு முடிவுக்கு வந்தார். தனது அடுத்தப் படத்தில் முன்னணி கதாநாயகன் வேண்டாம். ஒரு காமெடியனை ஹீரோவாக நடிக்க வைத்து ஹிட் கொடுக்கிறேன் என்று சுனிலை ஹீரோவாக்கி ‘மரியாதை ராமண்ணா’ படத்தை இயக்கினார். மகதீரா போன்ற ஒரு படத்தை எடுத்துவிட்டு, சுனிலா என்று மொத்தச் சினிமா உலகமும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தது. படம் வந்த பிறகு, வழக்கம் போல் ராஜமௌலியைத் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

காமெடியனை ஹீரோவாக்கி ஹிட் கொடுத்தாயிற்று. அடுத்து, ஒரு ஈயை ஹீரோவாக்கி ஹிட் கொடுப்போம் என்று ஈகா படத்தைத் தொடங்கினார். 2012இல் தெலுங்கிலும், தமிழிலும் வெளியான இந்தப் படம், போட்ட தியேட்டரெங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தின் மூலம் ராஜமௌலிக்கு தமிழிலும் ரசிகர்கள் உண்டானார்கள். வி.ஃஎப்.எக்ஸ்.இல் புதுப் பரிமாணம் காட்டினார், ராஜமௌலி. தனது படத்திற்கு எந்தப் பெரிய ஹீரோவும் வேண்டாம், கம்ப்யூட்டரில் ஒரு ஈயை உருவாக்கி, அதையும் ஹிட்டாக்கி காட்டுவேன் என்று நிருபித்தார். இப்போது இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனர் நாற்காலி இவருக்குத் தயாரானது.

அடுத்து, எடுத்து வைத்த அடி தான் - பாகுபலி. 2015 இல் வெளிவந்த பாகுபலி முதல் பாகம், பிரமாண்ட வெற்றிப் பெற்றது. நவீன இந்தியாவின் அடையாளம் என்று இப்படம் புகழப்பட்டது. பெரும் நடிகர் பட்டாளம் இருந்தாலும், இது ஒரு ராஜமௌலி படம் என்று தான் பெருமை பேசப்பட்டது. இதற்குத் தானே ஆசைப்பட்டாய், ராஜமௌலி!!

இந்தாண்டு 2017 ஏப்ரல் 28ஆம் தேதி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகுபலியின் இரண்டாம் பாகம் வெளியானது. படம் பார்த்த அத்தனை பேரும், தங்களது பெரும் எதிர்பார்ப்பைப் பல மடங்கு இப்படம் பூர்த்திச் செய்ததாகக் கூறி மகிழ்கிறார்கள். இந்தியச் சினிமாக்களின் அனைத்துச் சாதனைகளையும் இப்படம் அடித்து நொறுக்கும் என உறுதியாகக் கூறுகிறார்கள். பிரமாண்டம் என்றால் இதுவரை ஷங்கரைத் தான் கைக்காட்டுவார்கள். இப்போது, ராஜமௌலி.

ரஜினி, ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்ற டாப் ஹீரோக்களின் பட வசூலைச் சர்வசாதாரணமாக முறியடிக்கிறார் ராஜமௌலி. இன்றைய தேதியில், இந்தியச் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனர் யார் என்ற கேள்விக்குச் சந்தேகமில்லாமல் பதில் சொல்லிவிடலாம் - ராஜமௌலி என்று.

வெல்டன் ராஜமௌலி. வாழ்த்துகள்!!

.

No comments: