Monday, October 2, 2017

ஒரு ராக்கெட்டும் 104 சேட்டிலைட்களும்

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.

அரசியல்வாதிகள் நமது மானத்தை வாங்கிக் கொண்டிருக்கும் போது, நம் காலரைத் தூக்கி விட வைப்பது இஸ்ரோ (ISRO) வின் வழக்கம். பிப்ரவரி 15ஆம் தேதி அன்றும் இந்தியர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள் இஸ்ரோவின் இந்திய விஞ்ஞானிகள்.

அன்றைய தினம் இந்திய நேரப்படி காலை 9.28 க்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பிய பிஎஸ்எல்வி விண்கலம், அடுத்த அரை மணி நேரத்திற்குள், ஏற்றிச் சென்ற 104 செயற்கைக்கோள்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக, திட்டமிட்ட விண்வெளிச் சுற்றுப்பாதையில் இறக்கி, தன் வேலையைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளது. ஆம், நீங்கள் வாசித்தது சரிதான். 104 செயற்கைக்கோள்கள்.

2014 இல் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், பத்தில் ஒரு பங்கு எனக் குறைந்த செலவில் செவ்வாய்க்கு மங்கல்யான் அனுப்பிய இஸ்ரோ, இம்முறை அதே போல் குறைந்த செலவில் 104 சேட்டிலைட்களை ஒரு விண்கலம் மூலம் விண்வெளியில் கொண்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு, ரஷ்யா 37 சேட்டிலைட்களையும், அமெரிக்கா 29 சேட்டிலைட்களையும் ஒரு ராக்கெட்டில் அனுப்பியதே அதிகபட்சமாக இருந்தது. அதையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்வது போல், ஒரே ராக்கெட்டில் 104 சேட்டிலைட்களை எடுத்துச் சென்று, அவை அனைத்தையும் பிசிறில்லாமல் விண்வெளிச் சுற்றுப்பாதையில் நிறுவி உலக, இல்லை பிரபஞ்ச சாதனை படைத்திருக்கிறார்கள் இந்திய நாட்டு விஞ்ஞானிகள்.

பிஎஸ்எல்வி ஏவுகலம், இதுவரை மொத்தம் 122 செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுவி இருக்கிறது. அதில் 79 செயற்கைக்கோள்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தது. இதோ, இந்த முறை ஒரே பாய்ச்சலில் 104 செயற்கைக்கோள்களைச் சுமந்துச் சென்று விண்வெளி செஞ்சுரி அடித்திருக்கிறது இஸ்ரோ. இதில் அமெரிக்கா, ஸ்வீஸ், நெதர்லாந்து, கஜகஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடக்கம்.

இஸ்ரோவிற்கு விண்வெளியில் செஞ்சூரி போட வேண்டுமென்று எந்த முன்திட்டமும் கிடையாது. இந்தியாவின் மூன்று சேட்டிலைட்களைத் தவிர, மேலும் பிற நாடுகளின் 101 சேட்டிலைட்களை எடுத்துச் செல்லும் திறன் இருந்ததால், அவையும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்தத் திட்டத்தின் செலவில் பாதிப் பங்கு, இஸ்ரோவிற்கு மிச்சமாகி உள்ளது.

இந்திய விண்வெளிப் பயணத்தின் ஆரம்ப வருடங்களில் ரஷ்யாவின் உதவியைப் பெற்று வந்த இந்தியா, இன்று பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுவ உதவுகிறது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளை விட அதிகச் செயற்கைக்கோள்களை ஒரே தடவையில் குறைந்த செலவில் அனுப்பிச் சாதனை புரிய முடிகிறது.

இந்தியாவின் விண்வெளி விஞ்ஞானம், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அவ்வளவு செலவு பிடித்ததில்லை. ஹாலிவுட் படப் பட்ஜெட்டினைக் காட்டிலும், குறைந்த செலவில் தான் விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்குக் குறைந்த செலவிலான மனித வளம் மட்டும் காரணமல்ல, செலவுகளைக் குறைக்கும் திட்டமிடலும் தான் காரணம். சாதனங்களின் எடையைக் குறைத்து, அதே சமயம் அவற்றின் திறனில் எந்தச் சமரசமும் செய்துக்கொள்ளாமல் தங்களது தேவையை அடைவது மூலமும் செலவு குறைகிறது. அதிலும் இம்மாதிரி மற்ற நாடுகளின் விண்வெளித் தேவையைப் பூர்த்திச் செய்வதன் மூலம் இஸ்ரோவின் செலவுகளின் ஒரு பகுதியை அதுவே ஈட்டி கொள்கிறது.

இம்முறை எடுத்துச் சென்ற செயற்கைக்கோள்களில் முதன்மையானது, இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய CartoSat-2D. இது பூமியைக் கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள். இதில் இருக்கும் இருக்கும் புகைப்படச் சென்சார்கள், பூமியில் இருக்கும் நிலப்பரப்பு, கடற்பரப்பு, நீர் வினியோகம், சாலை இணைப்புகள் ஆகியவை பற்றி ஆராய உதவும்.

அடுத்து INS - 1A என்ற நேனோ வகைச் சேட்டிலைட். இது நிலப்பரப்பில் இருந்து பிரதிபலிக்கும் சூரிய ஓளியை ஆராய உதவும் செயற்கைக்கோள். இது எதிர்கால மாணவ ஆராய்ச்சிகளுக்கும் உதவும்.

இதற்கு அடுத்துச் சுற்றுப்பாதையில் இறக்கிவிடப்பட்ட அடுத்தச் செயற்கைக்கோள், INS - 1B. இது ஒரு சோதனைக்கட்ட புகைப்படக் கருவி கொண்ட செயற்கைக்கோள். சிறிய கட்டமைப்பில் அதிக உயர்தரப் புகைப்படங்கள் எடுக்க உதவும் கருவிகள் இதில் உள்ளன.

இந்த இந்தியச் செயற்கைக்கோள்களுக்கு அடுத்ததாக, அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ப்ளானெட் (Planet) என்ற நிறுவனத்தின் 88 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இறக்கப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் அனைத்தும் பூமியைத் தொடர்ச்சியாகத் தினமும் புகைப்படங்கள் எடுக்கும். இவை வணிக ரீதியிலும், இயற்கைப் பேரிடர்களிலும் நிறுவனங்களுக்கு உதவும்.

இதற்கு அடுத்ததாக, ஸ்பையர் க்ளோபல் (Spire Global) என்னும் அமெரிக்க நிறுவனத்தின் 8 Lemur-2 சேட்டிலைட்கள் விண்வெளியில் நிறுவப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள்களின் மூலம் கடல்வெளியில் இருக்கும் கப்பல்களைக் கண்காணிக்க முடியும். கடல் சார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு, இது அளிக்கும் தகவல்கள் மிகவும் முக்கிய முடிவுகளை எடுக்க உதவும். இது தவிர, தட்பவெப்ப நிலை குறித்த தகவல்களையும் இவை அளிக்கும்.

அமெரிக்க நிறுவனங்களின் இந்த வணிகச் செயற்கைக்கோள்களுக்கு அடுத்து, நெதர்லாந்தின் PEASSS, ஸ்விட்சர்லாந்தின் DIDO-2, இஸ்ரேலின் BGUSat, கஜகஸ்தானின் Al-Farabi 1, அரபு நாட்டின் Nayif-1 ஆகிய செயற்கைக்கோள்களும் இந்திய பிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் சில செயற்கைக்கோள்கள், அந்நாட்டு மாணவர்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை பல்வேறு வகை ஆராய்ச்சிகளுக்குப் பயன்படும்.

இது போன்ற திட்டங்கள், எதிர்காலத்தில் இந்திய விண்வெளித்துறைக்கு இருக்கும் பிரகாசமான வணிக வாய்ப்புகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளன. இஸ்ரோ, பிற வணிக நிறுவனங்களுடன் இணைந்து இது போன்ற முயற்சிகளில் ஈடுபடும் திட்டங்களும் உள்ளன. இதன் மூலம் இந்தியா வணிகரீதியில் விண்வெளித்துறையில் முதன்மையான இடத்தை அடையும்.

உலகமெங்கும் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரோவிற்கும் அதன் கிளை வணிக நிறுவனமான ஆண்ட்ரிக்ஸிக்கும் (Antrix) எதிர்ப்புகளும் விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. 104இல் பெரும்பாலானவை நேனோ வகைதானே?, இந்திய அரசு அளிக்கும் சலுகைகள் ஏன்?, இவற்றால் விண்வெளியில் கழிவு எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் தானே? என்பது போன்ற கேள்விகளை இவர்கள் எழுப்புகிறார்கள். இவை இஸ்ரோ, பிற நாட்டின் நிறுவனங்களுக்குப் பலத்த போட்டியைக் கொடுப்பதால் வரும் எரிச்சலாலும் இருக்கலாம்.

எப்படி இருப்பினும், உலகத் தொழில்நுட்ப மேடையில் இந்திய விஞ்ஞானிகளுக்கு இருக்கும் இடம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. உலக எலைட் கிளப்பில் இந்தியாவிற்குக் கிடைக்கும் மதிப்பிற்கு, அவர்கள் காரணகர்த்தாவாக என்றென்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய மக்களின் ஆதரவு என்றும் தேவை. என்றும் இருக்கும்.

மேலும் தகவலுக்கு - http://www.isro.gov.in/

.

No comments: