Monday, October 2, 2017

வசந்தத்தின் தொடக்கம் - Spring Equinox

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



இந்தாண்டு 2017 இல் மார்ச் 20ஆம் தேதியன்று வசந்தக் காலத்தின் தொடக்கமான சமப் பகலிரவு தினம் (Equinox) நிகழவிருக்கிறது. Equinox என்பது சமமான இரவு என்ற பொருளளிக்கும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்த சொல். ஒரு வருடத்தின் இரு நாட்களில் மட்டுமே இரவும் பகலும் சமமான நேரம் கொண்டவையாக இருக்கும். ஒன்று, வசந்தச் சமப் பகலிரவு நாள் (Spring Equinox). மற்றொன்று, இலையுதிர் சமப் பகலிரவு நாள் (Autumn Equinox).

ஏன் அனைத்து நாட்களிலும் இரவும், பகலும் சம நேரத்தைக் கொண்டிருக்கவில்லை? எதனால் இரு தினங்களில் மட்டும் சமமான பகல் இரவு நேரம் அமைகிறது? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ்ஸைப் பார்த்து விடலாம்.

சூரியன் ஒரு பேரழகும், பெரும் திமிரும் கொண்ட பிரபஞ்ச ஃபிகர். இதைச் சுற்றி வரும் பல கோள்களில், நாமிருக்கும் உலகப் பந்தும் ஒன்று. உலக உருண்டை, தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, அதாவது சுழன்றுக் கொண்டு, சூரியனையும் சுற்றி வரும் ஒரு விநோத கேரக்டர். இது ஒரு தடவை முழுமையாகச் சுழல ஒரு நாளும், சூரியனைச் சுற்றி ஒரு ரவுண்ட் வர ஒரு வருடமும் எடுத்துக் கொள்ளும். பல ஆயிரம் ஆண்டுகளாக இப்படித் தான் சுற்றி வந்து டாவடித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப் பக்கம் வராமல், ஒரு குறிப்பிட்ட தூரத்தில் சுற்றி வந்துக் கொண்டே இருப்பது தான், அதற்கும் நல்லது. நமக்கும் நல்லது.

பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதை, ஒரு முழு வட்டப் பாதை இல்லை. நீள் வட்டப் பாதை. சாதாரணமாக இல்லாமல், இறைவன் அழகியலோடு படைத்த பாதை என்று சொல்லிக் கொள்ளலாம். இதனால் சுற்றி வரும் போது, சில இடங்களில் சூரியனுக்குப் பக்கமாகவும், சில இடங்களில் தூரமாகவும் இருக்கும். பக்கம் இருக்கும் போது, சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுவே, கோடைக்காலம். இது போல் தான், சூரியனின் சுற்று வட்டத்தில் பூமி இருக்கும் இடத்தைப் பொறுத்துப் பூமியில் இருக்கும் காலங்கள் வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் காலம் என மாறுகிறது.

இப்படிப் பூமி சுற்றும் போது, அச்சுக்கோட்டுக்கு நேராக இல்லாமல், 23 டிகிரியில் சாய்ந்துக் கொண்டு சுற்றுகிறது. இதனால், பூமிப்பந்தின் மேல் அரைக்கோளத்திற்குக் (North Hemisphere) கிடைக்கும் சூரிய ஒளியும், கீழ் அரைக்கோளத்திற்குக் (South Hemisphere) கிடைக்கும் சூரிய ஒளியும் ஒரே அளவில் இருப்பதில்லை. இதன் காரணமாகவே, பூமியில் இருக்கும் வெவ்வேறு இடங்களில் தட்பவெட்பம் வித்தியாசமாக இருக்கிறது. அமெரிக்காவில் குளிர்காலமாக இருக்கும் டிசம்பரில், ஆஸ்திரேலியாவில் கோடைக்காலமாக இருப்பதற்கான காரணம் இதுதான்.

சூரிய ஒளி எவ்வாறு பூமியின் மீது படுகிறதோ, அதற்கேற்ப பகலின் நீளமும் இரவின் நீளமும் மாறுபடுகிறது. மார்ச் 20 ஆம் தேதி அன்று, சூரிய ஒளி பூமியின் மீது படும் போது, அது பூமியின் மத்திய கோட்டின் (Equator) மீது செங்குத்தாக விழும். அச்சமயம், பூமியெங்கும் பகலும் இரவும் சம அளவில், அதாவது 12 - 12 மணி நேரம் எனச் சரிச்சமமாக இருக்கும். இதுவே, சமப் பகலிரவு தினம் (Equinox) என்று அழைக்கப்படுகிறது. அச்சமயத்தில், அதாவது மத்திய நேரத்தில் (CST) அதிகாலை 5:28 மணிக்கு, வட அரைக்கோளத்தில் வசந்தக்காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது எனலாம். இதுவே, தென் அரைக்கோளத்தில் இலையுதிர் காலத்தின் தொடக்கம் என்றாகும்.

இதற்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் பகலின் நீளம் அதிகரிக்கும். இரவின் நீளம் சுருங்கும். உலகம் மேலும் அதிகமாக உழைக்கத் தொடங்கும்.

அன்றைய தினம் பூமி இருக்கும் நிலையின் காரணமாக, சிலர் முட்டையை நேராக நிற்க வைக்கப் போகிறேன் என்று கிளம்புவார்கள். அதை நம்ப வேண்டாம். அப்படி முட்டையை நிற்க வைப்பவர்களால், எந்தத் தினத்திலும் நிற்க வைக்க முடியும். இதற்கும் அன்றைய தினத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் முட்டைக்கும் இந்தத் தினத்திற்கும் சம்பந்தம் உண்டு. இந்தச் சமயம் உலகில் இருக்கும் பல உயிர்களுக்கு மறுபிறப்பு என்பதால், பிறப்பைக் குறிப்பிடும் வகையில் முட்டை சிறப்பிக்கப்படும். கிருஸ்துவர்கள் அந்தச் சமயம் வரும் ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவார்கள். இயேசு கிருஸ்து உயிர்த்தெழுந்த தினம் அது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் போன்ற நாடுகளில், இந்தத் தினத்தில் தான் புதிய காலத்தின் தொடக்கம் என்னும் நம்பிக்கையில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்தக் காலக்கட்டத்தில் தான் வண்ணங்களைப் பூசிக்க்கொண்டு விளையாடும் ஹோலி பண்டிகை நடைபெறுகிறது. இதுவும் வசந்தத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் ஒரு விழாவாகவே பார்க்கப்படுகிறது.

சமப் பகலிரவு தினத்திற்குப் பிறகு, அதுவரை நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அதனால், கனமான ஜாக்கெட்டுக்கு அதற்குப்பிறகு விடைக்கொடுத்து விடலாம். சில காலச் சன்னியாசத்திற்குப் பிறகு, மரங்களில் இலைகளும், பூக்களும் துளிர்விடும். தெற்கே சென்ற பறவைகள், வடக்கிற்கு வீடு திரும்பும். நிலத்திற்கு அடியே நெடும் தூக்கத்திற்குச் சென்ற சில விலங்குகள், சகஜ வாழ்வு நிலைக்குத் திரும்பும். மீன்கள் ஏரியின் மேற்பரப்பிற்கு வரும்.

வசந்தம் என்றாலே வளம் தான். நம்முடைய வாழ்வின் நல்ல காலத்தை வசந்தக் காலம் என்போம். அப்படி, வசந்தமும், வளமும் நெருங்கிய தொடர்பு கொண்டது. அதனால், இந்த வசந்தக்காலமும் நம் வாழ்வில் சிறந்த தருணங்களை அமைத்துக்கொடுக்கும் என்னும் நம்பிக்கையில் வரும் வசந்தத்தை மகிழ்வுடன் வரவேற்போம்.

.

No comments: