Monday, October 2, 2017

ட்வின் சிட்டீஸ் உழவர் சந்தைகள்


பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.உலகில் இருக்கும் பனிரெண்டு மண் வகைகளில், ஒன்பது வகை மண்ணைக் கொண்ட மினசோட்டா ஒரு விவசாயப் பூமியாக இருப்பதால், மினசோட்டாவாசிகளுக்கு ஒரு அனுகூலம் உள்ளது. ஃப்ரெஷ்ஷாக உணவு உண்ணலாம். அதுவும், உணவுக் குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ள இக்காலத்தில், இது போன்ற வாய்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புத்தம் புதியதாக விவசாய நிலத்தில் இருந்து வரும் விளைப் பொருட்கள், மக்களை உடனடியாகச் சென்றடைய உதவுபவை, உழவர் சந்தைகள். அந்த வகையில், மினசோட்டா எங்கும் நடக்கும் உழவர் சந்தைகள் (Farmer's markets), மினசோட்டாவாசிகளை அதிர்ஷ்டம் கொண்டவர்களாக உணரச் செய்பவை.

விவசாய உற்பத்தியில் அமெரிக்காவில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் மினசோட்டாவில், அதன் விவசாயத் துறையின் ஒருங்கிணைப்பில், மேற்பார்வையில் இங்குள்ள உழவர் சந்தைகள் நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நோக்கம், உள்ளூரில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள், பெரிய இடைவெளி இல்லாமல், வாடிக்கையாளர்களை உடன் சென்றடைவது மற்றும் இரு தரப்பினருக்கும் எவ்வித இடைத் தரகும் இல்லாமல் நல்ல விலையில் கிடைப்பது. முக்கியமாக, சிறு விவசாயிகளுக்கான களம் இது. பெரிய பன்னாட்டு விவசாய நிறுவனங்களுக்கு நேரடியாக இங்கு இடமில்லை.

மின்னியாபோலிஸ், செயிண்ட் பால் போன்ற சில உழவர் சந்தைகள் அனைத்து நாட்களிலும் நடைபெற்றாலும், மற்ற நகரங்களில் நடைபெறும் பெரும்பாலான உழவர் சந்தைகள் வாரத்தில் ஏதேனும் ஒருநாள் நடைபெறுபவையாக இருக்கின்றன. எப்படி இருந்தாலும், வாரத்தில் ஒரு நாள் தான் கடைக்குச் சென்று காய்கறி வாங்க போகிறோம். மின்னியாபோலிஸ், செயிண்ட் பால் டவுண்டவுனை விட்டுத் தள்ளி இருப்பவர்களுக்கு, அவ்வளவு தூரம் போகணுமா என்று நினைப்பவர்களுக்குப் பக்கத்தில் இருக்கும் வாராந்திரச் சந்தைதான் வசதி. எப்படி இருந்தாலும் டவுண்டவுனில் வாரயிறுதியில் நடைபெறும் சந்தை தான், பெருமளவு மினசோட்டாவாசிகளை வாடிக்கையாளர்களாகக் கொண்டது. அதிகமான வியாபாரிகளின் எண்ணிக்கையும் , காய்கறி வகைகளின் எண்ணிக்கையும் அதற்குக் காரணம் எனலாம்.

மின்னியாபோலிஸ் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் மட்டுமில்லாமல் சீஸ், முட்டை, கறி வகைகளும் கிடைக்கும். அது மட்டுமில்லாமல், கையால் நெய்யப்பட்ட துணிமணிகள், அழகழகான பூக்கள், பீங்கான் சாமான்கள் என்று உணவைத் தாண்டி மற்ற பொருட்களும் கிடைக்கும். இது தவிர, உணவகங்கள், காபி கடைகள், பாப்கார்ன், ஜூஸ் கடைகளும் இருப்பதால், எதையாவது கொறித்துக் கொண்டே ஷாப்பிங் செய்யலாம். ஆங்காங்கே, யாராவது ஏதேனும் இசைக்கருவியை வேறு அருமையாக இசையமைத்துக் கொண்டிருப்பார்கள். காய்கறி வாங்குகிறோம் என்பதற்கு மேலான ஒரு சந்தோஷ அனுபவத்தை அளிப்பதால் தான் இந்த உழவர் சந்தைகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்காத பல காய்கறிகள், இங்கு நல்ல தரத்துடன் கிடைக்கும். சீசனுக்கு ஏற்றாற்போல், சில வகைக் காய்கறிகள் அவ்வப்போது கிடைக்கும். தமிழ்நாட்டில் சில இடங்களில் பட்டர்பீன்ஸ் என்றொரு வகைப் பீன்ஸ் கிடைக்கும். தேங்காயுடன் சேர்த்து அரைத்த மசாலாவில் செய்த பட்டர்பீன்ஸைச் சாப்பிடுபவர்கள், அதற்கு ரசிகர்களாகிப் போவார்கள். பெங்களூரில் இருந்த போது, அங்கு இந்தப் பீன்ஸ் கிடைக்காததால், ஊரில் இருந்து எடுத்துச் செல்வோம். வீட்டில் இருந்து யாரேனும் விஜயம் புரிந்தாலும், அவர்களது பையில் பட்டர் பீன்ஸிற்கு இடமிருக்கும். அப்படி எங்களது மனதிலும் இடம் பிடித்த பட்டர் பீன்ஸை அமெரிக்கா வந்த பின்பு மறந்தே போயிருந்தோம். இங்கு மினசோட்டா வந்த பின்பு, ஒரு நாள் மின்னியாபோலிஸ் உழவர் சந்தையில் அதைக் கண்டப் பொழுது, நாங்கள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தோம். இப்படிச் சர்ப்ரைஸ் ஷாக் அளிக்கக்கூடியவை, உழவர் சந்தை விசிட்ஸ்.

தொடர்ந்து வாராவாரம் செல்ல, கடைகள், காய்கறிகள், கடை உரிமையாளர்கள் என நல்ல பழக்கம் ஏற்பட்டு விடும். எந்தப் பக்கம் சென்றால், என்ன வாங்கலாம் என்று தெரிந்துவிடும். சில காய்கறிகள் சில காலங்களில் தான் கிடைக்கும் என்பதால், அச்சமயங்களில் அந்தக் காய்கறிகள் பெரும்பாலான கடைகளில் வைத்திருப்பார்கள். ஒரு வாரம் கிடைக்கும் காய்கறி, அடுத்த வாரம் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. அதனால், புதிதாகக் கிடைக்காத காய்கறிகளைப் பார்த்தால், உடனே வாங்கிக் கொள்ளவும். முதலில், ஒரு ரவுண்ட் அனைத்துக் கடைகளையும் பார்த்து விட்டால், அடுத்த ரவுண்டில் தேவையான காய்கறிகளைச் சரியான கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

குளிர்காலத்தில் மூடப்படும் வெளிப்புற உழவர் சந்தைகள், கோடைக்காலத்தில் மீண்டும் முழுவீச்சில் செயல்படத்தொடங்கும். இந்தாண்டு இதோ மே முதல் வாரத்தில் இருந்து மின்னியாபொலீஸ் - செயிண்ட் பால் உழவர் சந்தைகள் ஆரம்பிக்கப்படப்போகின்றன.

உழவர் சந்தைக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்கள் ரெடி ஸ்டார்ட், வீக் எண்ட் சூப்பர் ஷாப்பிங் ஆரம்பம்!!


.

No comments: