Friday, February 6, 2009

ஒபாமா

எந்த அமெரிக்க அதிபருக்கும் இல்லாத ஆர்ப்பாட்டம் இருந்தது ஒபாமாவுக்கு. அனைத்து வகை ஊடகங்களிலும் அவரை பற்றிய செய்திகள் தான். ஒரே சமயத்தில் ஒரு மனிதரை பற்றி ஏகப்பட்ட புத்தகங்கள். ஆங்கிலத்தில் இல்லை. இங்கே தமிழில். அதில் ஒன்று. ஆர். முத்துக்குமார் எழுதிய “ஒபாமா, பராக்!”. ஒபாமாவின் கதையை மட்டும் சொல்லாமல், அமெரிக்காவின் அடிமைகள் கதை, அமெரிக்க கட்சிகளின் கதை, அமெரிக்க தேர்தல் கதை, அதிபருடைய வேலைகள் என்று எல்லாவற்றையும் சேர்த்து அளித்திருக்கிறார், முத்துக்குமார்.

---

ஒபாமா யார்?

அமெரிக்கர்.

ஆப்பிரிக்கர்.

கிறிஸ்தவர்.

முஸ்லீம்.

கறுப்பர்.

வெள்ளையர்.

இப்படி எது சொன்னாலும் ஒபாமா ஒத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்டது அவரின் பாரம்பரியம். ஒபாமாவின் தாத்தா கென்யாவை சேர்ந்தவர். தான்சானியா, பர்மா, இலங்கை, அரேபியா என்று உலகம் முழுக்க சுற்றியுள்ளார். கிறிஸ்துவராக இருந்து இஸ்லாமியத்திற்கு மதம் மாறியவர் ஒபாமா வின் தாத்தா. அமெரிக்காவில் பிறந்தவர் ஒபாமா. இளம் வயதில் இந்தோனெஷியாவில் வளர்ந்திருக்கிறார். அமெரிக்க அதிபரை சொந்தம் கொண்டாட உலகம் முழுக்க ஆட்கள் இருக்கிறார்கள். நல்ல வேளை, இந்த பக்கம் வரவில்லை.

--

அவர் பரம்பரை, வாழ்க்கை இப்படி உலகளாவியளவில் இருந்தாலும் அவர் தன்னை சொல்லி கொள்வது அமெரிக்க கிறிஸ்துவராகதான். அவரது வம்சமே, குறுகிய வட்டத்திற்குள் வாழாமல் பரந்த மனப்பான்மையோடுதான் வாழ்ந்திருக்கிறார்கள். ஒபாமா தாத்தாவுக்கு மூன்று மனைவிகள். ஒபாமா அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். ஒபாமா அம்மாவுக்கு இரு கணவர்கள்.

---

ஒபாமா, அமெரிக்க அதிபராக ஜெயித்திருப்பதற்கு காரணமாக எதை சொல்லலாம்? பேச்சு. பேச்சு. பேச்சுதான்.

”இங்கே லிபரல் அமெரிக்கா என்று எதுவும் இல்லை. கன்சர்வேட்டிவ் அமெரிக்காவும் கிடையாது. கறுப்பு அமெரிக்காவும் இல்லை. வெள்ளை அமெரிக்காவும் இல்லை. ஹிஸ்பானிய அமெரிக்காவும் இல்லை. ஆசிய அமெரிக்காவும் இல்லை. இங்கே இருப்பதெல்லாம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா. நாம் அனைவரும் ஒரே மக்கள்”

பேசும் இடத்தில் எல்லாம் கைத்தட்டல்கள். ஆதரவுகள். அப்படி ஒரு பேச்சு திறமை. அவர் அதிபர் ஆனதில் என்ன மாற்றம் வர போகிறதோ தெரியவில்லை, அமெரிக்க மக்கள் சந்தோஷப்படும் வகையில் நிறைய சொற்பொழிவுகள் கேட்கலாம்.

---

ஒபாமா கல்லூரியில் படித்தது அரசியல் பாடம். நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறார். நிறைய படித்தாலே அதையெல்லாம் யாரிடமாவது பேச தோன்றும். வாதம் செய்திருக்கிறார். சட்டத்திட்டம் தெரியாததால் அதிகாரிகளிடம் வாதம் புரிய முடியவில்லை. சட்டம் படித்து வக்கீலாகிவிட்டார்.

கறுப்பின மக்களுக்காக வாதாடுகிறார். அரசியல் ஆசை வருகிறது. ஒரு கட்சியை பார்த்து சேர்கிறார். கிளிண்டனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். அப்படியே வட்டம், மாவட்டம்ன்னு போயி அதிபர் தேர்தலில் யாருக்காக பிரச்சாரம் செய்து அரசியல் அடியை எடுத்து வைத்தாரோ, அவரின் மனைவியையே ஜனாதிபதி பிரைமரி தேர்தலில் தோற்கடிக்கிறார். அதிபர் ஆகிறார். சுலபமாக தெரிகிறதல்லவா? எந்த பிரிவு மக்களையும் நோகடிக்காமல் பேசுவது என்பது கஷ்டமான கலை. அதில் இவர் எக்ஸ்பர்ட் போல? எல்லோரையும் பேசியே வளைச்சி போட்டுடாரு. நம்ம அரசியல்வாதிகள் இதில் வீக்கு.

---

ஒபாமாவின் அப்ரோச் எப்படி என்று இப்படி சொல்கிறார் ஆசிரியர்.

வணக்கம் நண்பரே. உங்கள் தொகுதியில் போக்குவரத்துக் சிக்கல்கள் அதிகமாகிவிட்டன என்று கேள்விப்பட்டேனே. இப்போது நிலைமை சரியாகிவிட்டதா? ஆங். கேட்கவேண்டும் என்று நினைத்தேன். சாக்கடைப் பிரச்னை உங்கள் ஏரியாவில் வந்தபோது எப்படி சரி செய்தீர்கள்? கொஞ்சம் எனக்கு சொன்னால் உபயோகமாக இருக்கும். இப்போது குடியரசுத்தலைவர் அறிவித்திருக்கும் புதிய பென்ஷன் கொள்கையில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை. கண்டனக் கூட்டம் ஒன்று நடத்த இருக்கிறோம். நேரம் ஒத்துழைத்தால் அவசியம் வாருங்கள்.

ஒபாமாவின் பேச்சை பற்றி குறிப்பிடும்போது, அங்குள்ள சூழல், வரவேற்பு பற்றியும் குறிப்பிடுகிறார்.

தெருவில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறீர்கள். திடீரென ஒருவர் உங்கள் தோள்மீது கைபோட்டு, ‘என்ன நண்பரே, எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வீட்டுக்குச் சாப்பிட வரலாமா?” என்று கேட்டார் என்ன செய்வீர்கள்? ‘நீ யாருய்யா?’ என்றுதானே கேட்கத் தோன்றும்> ஒரு வேளை கேட்கும் நபர் மாகாண முதல்வர் என்றால்? அப்படியொரு பரவச அனுபவத்தை அமெரிக்க வாக்காளப் பெருங்குடி மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார் பராக் ஒபாமா.

---
அமெரிக்க அரசியல் அமைப்பு, தேர்தல் முறை போன்றவை எல்லாம் குழப்பமானவை. நமக்கு. அதையெல்லாம் விலாவரியாக விளக்கியுள்ளார் ஆசிரியர். இன்னும் டேபிள், ட்ரீ படங்கள் போட்டு விளக்கி இருந்தால் ரெபரன்ஸுக்கு உதவியாக இருந்திருக்கும்.

ஒரு இடத்தில் ஒபாமா பேச்சின் தமிழ் வடிவம் பின்னிணைப்பில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது (பக்கம்-112). ஆனால் பின்னிணைப்பில் அப்படி எதுவும் இல்லை.

லிங்கன், லிண்டா பிரவுன், ரோஸா பார்க்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களை பற்றி சொல்லி இருப்பது அமெரிக்க கறுப்பின கொடுமைகளின் வரலாறை புரிந்து கொள்ள உதவுகிறது. அவரின் பிரச்சாரத்திற்கு பெரிதும் துணையாக இருந்த அவரின் பிரச்சார ஆலோசனை குழுவை பற்றிய குறிப்பும் இப்புத்தகத்தில் உள்ளது.

---

கென்ய ஓலைகுடிசையில் இருந்து ஆரம்பித்து அமெரிக்க அதிபர் இருக்கை வரை ஒபாமாவை இந்த புத்தகத்தில் கவர் செய்திருந்தாலும், அவருடைய வாழ்வின் மிக முக்கிய தருணங்கள் இனி தான் வரும் என்று நான் எண்ணுகிறேன். அந்த வகையில் இந்த புத்தகத்தை ஒரு முன்னோட்டமாக தான் கருத முடியும். ஆக்‌ஷன் இனிதான். ஆக்‌ஷனின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த புத்தகம் உதவும். கிழக்கு பதிப்பகத்தில் இருந்து வெளிவந்துள்ள இப்புத்தகத்தை வாங்க இங்கே செல்லவும்.

முடிவா அமெரிக்க தேர்தலுக்கும் இந்திய தேர்தலுக்கும் ஒரு வித்தியாசத்த நான் சொல்லுறேன். அமெரிக்க தேர்தலப்ப மக்கள்கிட்ட வசூல் செய்யுறாங்க. இந்திய தேர்தலப்ப மக்கள் வசூல் செய்யுறாங்க. அப்ப, நாம தானே கொடுத்து வச்சவங்க (கொடுக்காட்டியும்).

6 comments:

Anonymous said...

I liked the 'Punch' in the last paragraph..
Very real :)
-Arthi

கணேஷ் said...

//நிறைய படித்தாலே அதையெல்லாம் யாரிடமாவது பேச தோன்றும். //

:-))

சரவணகுமரன் said...

நன்றி ஆர்த்தி...

சரவணகுமரன் said...

வாங்க ராம் சுரேஷ்....

மே. இசக்கிமுத்து said...

நல்லா நச்சுன்னு சொன்னீங்க முடிவில!

சரவணகுமரன் said...

நன்றி இசக்கிமுத்து.