Sunday, October 23, 2011

சொந்த சமையல்

எனக்கு உணவின் மீது இருக்கும் காதலைப் போல, சமையலின் மீதும் உண்டு. உணவின் மீதான காதலை, எப்பொழுதுமே வெளிப்படுத்தி, அனுபவித்திருக்கிறேன். ஆனால், சமையல் மீதான காதல் சமீப காலம் வரை கைக்கூடியதில்லை.நான் சிறுவனாக இருக்கும்போதே சமையல் மீது ஆசை உண்டு. சிறுவயதில், பயோரியோ பல் பொடி டப்பாவை, சிறு கற்கள் மீது வைத்து, அடியில் ஒரு சின்ன மெழுகுவர்த்தியை வைத்து, அதனுள் அரிசியையும், தண்ணீரையும் விட்டு ஒலை வைத்திருக்கிறேன். போட்ட அரிசி, எடுக்க எடுக்க, டப்பாவை மீறி சாதமாக வந்தது, அவ்வயதில் ஆச்சரியம்.

இப்படியெல்லாம் விளையாடிக் கொண்டிருந்த நான், பின்பு வாசிக்க தொடங்கியப்பிறகு, சமையல் பகுதிகளை விடாமல் வாசித்திருக்கிறேன். சமையறை அதிகாரம் கிடைக்காத வயதென்பதால், வாசிப்போடு சரி. ஒரே மாதிரி சிக்கன் சமைக்கப்படும் என் வீட்டில், நண்பன் வீட்டில் வாசித்த சிக்கன் ரெசிப்பியை, அம்மாவிடம் கொடுத்து, சமைக்க செய்து, வீட்டில் சிக்கன் புதுமையை புகுத்திய அனுபவமும் உண்டு.

என் அண்ணனுக்கும் இதுப்போல் சமையல் ஆர்வம் உண்டு. வீட்டில் அம்மாவும், அப்பாவும் ஊருக்கு போய் விட்டால், ஹோட்டலில் போய் சாப்பிட சொல்வார்கள். அச்சமயங்களில், என் அண்ணன், அவருடைய நண்பரை அழைத்து வந்து அசைவ உணவு சமைக்க சொல்வார்கள். அவர் கேட்டரிங் துறையில் அனுபவம் உள்ளவர் என்பதால், ஏதேனும் புதிதாக ட்ரை செய்வார்.

பள்ளி காலத்தின் இறுதியில், மைதா, வனஸ்பதி, பால், சர்க்கரை போட்டு பர்பி செய்யும் செயல்முறையை எதிலோ படித்து, வீட்டில் அனுமதி வாங்கி, செய்து, பாராட்டு பெற்றிருக்கிறேன். கிடைத்த பாராட்டால், ஈஸியாக செய்யலாம் என்பதால், பல முறை அதை செய்து, பர்பி என்றாலே வீட்டினர் வெறுத்து, தெறித்து ஓட வைத்திருக்கிறேன்.

கல்லூரி சென்ற காலத்தில், சமையலுக்கும் எனக்கும் பெரிய இடைவெளி. அதன் பிறகு, வேலைக்கு சென்ற காலத்திலும், வீட்டில் இருந்து சென்றதால், அந்நேரத்தில் மற்றவர்களுக்கு வாய்க்கும் வாய்ப்பு (தொல்லை?) எனக்கு வாய்க்கவில்லை.

எப்பொழுதுவாவது வீட்டில் ஊருக்கு செல்லும் போது, அந்நேரத்தில் பெங்களூரில் எங்கள் வீட்டின் அருகில், தமிழ் கடைகள் ஏதும் இல்லாத காரணத்தால், வீட்டில் சமைப்பதுண்டு. வீட்டில் ஒரு வாரத்திற்கு போதுமான, தோசை மாவு இருக்கும். 2-3 நாட்களுக்கு போதுமான சாம்பார் இருக்கும். அதையும் அவ்வப்போது நூடுல்ஸ் செய்தும் சமாளிப்பேன். பிறகு, வீட்டின் அருகில் தமிழ் உணவகங்கள் வந்தப்பிறகு, நிறைய கடைகளைப் பற்றி தெரிந்த பிறகு, வெளியே சென்று விடுவேன்.

நண்பர் கணேஷுக்கு நன்கு சமைக்க வரும். அவருடைய அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாத சமயம், அவர் அம்மா சொல்லிக்கொடுக்க, இவர் சமைத்து, அவருடைய அம்மாவின் கை பக்குவம் இவருக்கு வந்துவிட்டது. அதனால், சமயங்களில் இவரும் வீட்டுக்கு வந்து, சமையல் செய்வார். இப்படி இவர் வந்துவிட்டால், என் வேலை, காய்கறி நறுக்குவதும், பாத்திரங்களை கழுவுவதும் என்று சென்றுவிடும்.

கணேஷ் சமையல் பிரமாண்டமானது. அவருக்கு சாதாரணமாக செய்ய தெரியாது. முந்திரியை கொட்டி, சிக்கன் க்ரெவி வைப்பார். தேங்காயை அரைத்து, கெட்டியாக மீன் குழம்பு வைப்பார். ஒருமுறை தெரியாமல், அவித்த கடலை கேட்டுவிட்டேன். மாலையில், வெங்காயம், தேங்காய் துறுவல் போட்டு தாளித்து அதை ரெடி செய்துவிட்டார். நான் சாப்பிட நினைத்தது, ஒரு தட்டு அளவுக்கு. அவர் ஒரு சட்டி நிறைய செய்து வைத்திருந்தார். அப்புறம் என்ன செய்வது? பக்கத்து வீடுகளுக்கு சப்ளை செய்தோம்.

காலை சமையல் முடித்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மதிய சமையலைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். மதிய சாப்பாட்டின் போது, இரவு வேளைக்கான திட்டங்கள் தீட்டப்படும்!

அதனால், அச்சமயங்களில், என் வயிற்றுக்கான தீனி நன்றாக கிடைத்துக்கொண்டிருந்தாலும், என் சமையல் ஆர்வத்திற்கான தீனி கிடைக்கவில்லை.

பிறகு, திருமணம் நடந்தது. இப்ப, இன்னுமா தீனி கிடைக்காமல் இருக்கும்? இரண்டுக்குமே தீனி கிடைத்தது.

சமையல் ஆர்வத்திற்கு, சாப்பாட்டு ஆர்வம் தேவை. சாப்பாட்டு ஆர்வத்திற்கு, சமையல் ஆர்வம் தேவை. உண்மையோ, பொய்யோ, வைரமுத்துவின் வரிகள் போல், இப்பதிவிற்கும் இரு வரிகள் கிடைத்துவிட்டது. (ரொம்ப யோசிக்காதீங்க!)

ஒரே மாதிரி சாப்பிடாமல், வித விதமாக சாப்பிடும் ஆர்வமும், அதற்கான பொறுமையும் இருப்பதால், இணையத்தில் கிடைக்கும் பலவித சமையல் குறிப்புகளை, மனைவிடம் சொல்லி, வீட்டில் பலவித சமையல் நடக்கும். நல்லவேளை, மனைவிக்கும் இதில் ஆர்வம் இருந்தது. நானும் இம்முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதால், திட்டோ, சலிப்போ இல்லாமல், மனைவி செயல்வடிவம் கொடுத்துவிடுவார்.

ஒவ்வொரு ஆணுக்கும் சமைக்க தெரிய வேண்டும். அட்லீஸ்ட், அதற்கான ஆர்வம் இருக்க வேண்டும். மனைவியின் பிறந்தநாளின் போது, காலையிலேயே அவருக்கு முன்பு எழுந்து, ஏதோ கேசரி போன்ற ஒரு ஸ்வீட்டை செய்து, பிறகு மனைவிக்கு அதை ஆச்சரியத்தோடு காண்பித்து உண்ண வைப்பது, எவ்வளவு சந்தோஷம்?

இப்பொழுது தனியாக இருப்பதால், வேறு வழியே இல்லாமல், நான் தான் சமைக்க வேண்டும். உடன், ஒரு நண்பர் வந்து சேர்ந்திருக்கிறார். அவரும் சமைப்பார் என்றாலும், வேகமாக, விரைவாக சாப்பிட வேண்டும் என்ற சமையல் தேர்ச்சி பெற்றவர் அவர். நம்முடையது கொஞ்சம் நேரம் எடுக்கும் சமையல் முறை கொண்டது. என் சமையல், அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. கடந்த ஒருவருடமாக சமைத்துக்கொண்டிருந்தவர் என்றாலும், இப்பொழுது அவர் எது சமைத்தாலும், என்னிடம் ஆலோசனை பெறும் அளவுக்கு, என் சமையல் ஏதோ மதிப்பு கொடுத்து இருக்கிறது.

என் நளபாகத்திற்கு பெரும் பின்னணியாக இருப்பது - சமையல் குறிப்புகள் தான். இணையத்தில் சமையல் குறிப்புகளை எழுதி தள்ளும் அனைத்து அன்னையர்களுக்கும், சகோதரிகளுக்கும் என் நன்றிகள். ஒரு ஐட்டத்தை எத்தனை முறை செய்தாலும், ஒவ்வொரு முறையும் இக்குறிப்புகளை பார்த்தே செய்வேன். ப்ராசஸ் முக்கியமல்லவா? அப்பொழுது தான் எனக்கு கன்ஸிஸ்டன்ஸி வருகிறது.

இங்கு அவ்வப்போது பாட்லக் (Potluck) எனப்படும் கூட்டஞ்சோறு முறை, இந்திய சமூகத்தினரிடம் நடைபெறும். மனைவியுடன் செல்லும் போது, மனைவி சமைத்து கொண்டு வருவார். இப்பொழுது நான் மட்டும் செல்வதால், என்னிடம் எதையும் சமைத்து எடுத்து வர சொல்ல மாட்டார்கள். நானும் போய் நன்றாக கட்டிவிட்டு, பிறகும் பார்சலும் கட்டிக்கொண்டு வருவேன்.சென்ற வாரம், பாட்லக்கிற்கு செல்லும் போது, மனைவியின் தோழி கேட்டார்.

“சமைக்கிறீங்களா? ஒழுங்கா சாப்பிடுறீங்களா? காலையில என்ன சாப்பிட்டீங்க?”

“பொங்கல், வடை, சட்னி” (முந்திய தினம், இன்னொரு வடை எக்ஸ்பெர்ட் நண்பர் வந்து செய்து கொடுத்துவிட்டு சென்றார்)

அவருக்கு ஆச்சரியம்.

“ஆஹா!!! என்னங்க இது? அடுத்த முறை, உங்களுக்கும் ஒரு ஐட்டம் கொடுக்க போறோம்...”

இப்பொழுது என் வாழ்க்கையில் மூன்றே மூன்று தினசரி நடவடிக்கைகள் தான் நடைபெறுகிறது. அலுவலக வேலை, வீட்டுக்கும் நண்பர்களுக்கும் போன், சமையல். இதுவரை செய்யாத ஒரு ஐட்டத்தை முதல்முறை செய்து முடிக்கும் போது, பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. போன வாரம் ஒருநாள், வத்தக்குழம்பு. நேற்று, மீன் குழம்பு. இதோ, இன்று சிக்கன் செய்ய வேண்டும்.

காலையில் ஒரு உறவினரிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

”தனியா இருக்கோம்ன்னு சாப்பிடமா இருக்காதே? எதையாவது செஞ்சு சாப்பிடு! சரியா?”

“சரி”. மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

.

2 comments:

Chitra said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

சரவணகுமரன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், சித்ரா...