Friday, April 9, 2010

தியேட்டர் - 1

யாருமே உங்களை கவனிக்காத இடத்தில், உங்களுடைய நடவடிக்கைக்கள் எப்படி இருக்கும்? இம்மாதிரி இடங்களில் நீங்கள் சிரிப்பது, அழுவது, குதிப்பது என அனைத்துமே கட்டுப்பாடை மீறியதாக இருக்கும். தியேட்டரும் அப்படிப்பட்ட இடம் தான். உங்களை சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்தாலும், நீங்கள் அங்கே யாரையும் பொருட்படுத்துவதில்லை.

---நான் முதல் முறை எப்போது தியேட்டருக்கு சென்றேன் என்று நினைவில்லை. ரொம்பவும் யோசித்துப்பார்த்தால், அரியலூரில் ’மனிதன்’ பார்க்க போனது நினைவுக்கு வருகிறது. தியேட்டர் பெயர் நினைவில்லை. அரியலூரில் எந்த தியேட்டரில் ‘மனிதன்’ ரிலீஸ் ஆனது என்று யாராவது சொன்னால், வரலாற்றில் குறித்துவைத்துக் கொள்வேன்.

சிறு வயதில், தியேட்டருக்கு செல்லும் போது, காலை அசைக்காமல் படம் பார்ப்பதாலோ, என்னவோ, கால்கள் மரத்து போய்விடும். இடைவேளைகளின் போதும், படம் முடிந்த பின்பும், நடக்க சிரமப்படுவேன். என் அண்ணனின் சைக்கிளில் முன்னாடி உட்கார்ந்திருக்கும்போதும், இது நிகழும். இதனால், அடிக்கடி என் கால்கள் செருப்பை துறக்கும்.

---

தியேட்டர் ஏற்படுத்தும் மேஜிக் உணர்வின் மேல், சிறு வயதிற்கே உரிய ஒரு ஆர்வம் எனக்கிருந்தது. இந்த ஆர்வத்தால், வீட்டை தியேட்டராக்கி நண்பர்களுடன் விளையாடி இருக்கிறேன்.மளிகை சாமான்கள் வாங்கும் போது கிடைக்கும் சிறு அட்டைப்பெட்டி தான், என் ப்ரொஜக்டர். அப்போது, கடைகளில் விளையாட லென்ஸ்கள் கிடைக்கும். இப்போதும் கிடைக்கும் என நினைக்கிறேன். (சமீபத்தில் ஒரு வக்கீல் டாக்குமெண்ட் படிக்க, இதை போன்ற, ஆனால், உயர்தரமான ஒன்றை உபயோகித்ததை பார்த்தேன்.) வட்டவடிவான லென்ஸை, ப்ளாஸ்டிக்கால் சுற்றி ப்ரேம் அமைத்து, பிடிக்க கைப்பிடியும் கொடுத்திருப்பார்கள். வெயிலில் இந்த லென்ஸை ஒரு பேப்பரில் காட்டிக்கொண்டிருந்தால், பேப்பர் தீப்பிடிக்க துவங்கிவிடுவது இன்னொரு மேஜிக்.

இந்த லென்ஸ் வடிவத்திலேயே, அட்டை பெட்டியின் முன்புறத்தில் ப்ளேடால் ஒரு ஓட்டை போடுவேன். அங்கு லென்ஸ் நிறுத்தி வைத்துவிடுவேன். அட்டைப்பெட்டியில் அதற்கு எதிர்புறத்தில், ஒரு பிலிம் அளவிற்கு இன்னொரு ஓட்டை. இதில் பிலிமை நிறுத்தி வைப்பேன்.

பிலிம்கள் எக்கச்சக்கமாக கிடைக்கும். தெரிந்த படங்களின் பிலிமோ, அதில் தெரிந்த நடிகர்களோ இருந்தால் ஆனந்தம். சமயங்களில் பிலிம் ரோலே கிடைக்கும். அச்சமயம் பேரானந்தம்.

என் தியேட்டருக்கு தேவையான ஒளி வெள்ளத்தை பாய்ச்சுவது, அப்பா சேவிங் செய்ய வைத்திருக்கும் கண்ணாடி. அதனால், அப்பா சேவிங் செய்யும் சமயங்களில், என் தியேட்டரில் காட்சி கிடையாது. ஒரு கட்டத்தில், அந்த கண்ணாடியின் ஒரு பக்கம் சிறிது உடைந்ததால், அப்பா புது கண்ணாடி வாங்க, பழைய கண்ணாடி தியேட்டரின் பிரத்யோக சொத்தானது.

எங்கள் வீட்டின் பின்புறம், சமையலறை பக்கம் இருக்கும் வாசலில் சூரிய வெளிச்சம் விழும். அதை கண்ணாடியில் பிடித்து, முன்புறம் இருக்கும் அறையின் சுவரில் விழுமாறு போகஸ் செய்து, கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து, தாங்குவதற்கு முன்பும் பின்பும் கற்கள் வைப்பேன். ஏற்கனவே, செய்து வைத்திருந்த அட்டை பெட்டியை, இந்த கண்ணாடியின் முன்பு வைத்தால், முன்புற சுவற்றில் பெரிய வெள்ளை திரை உருவாகும். உள்ளூக்குள் பெரும் ஆரவாரத்தை இது கிளப்பும். வீட்டின் முன்பக்கம் இருந்து, பின்பக்கம் வரை நீண்ட நடைபாதை இருக்கும்வாறு வடிவமைத்து கட்டியிருந்ததால், பெரிய வடிவம் சாத்தியம். 29 இன்ச் டிவி திரையின் அளவை விட பெரியதாக வந்த ஞாபகம்.

சென்சார் சர்டிபிகேட் பிலிம், டைட்டில் பிலிம் என இருந்ததால், வரிசையாக போடுவேன். பக்கத்து வீடுகளில் இருக்கும், என்னைவிட சின்ன பசங்க தான் இங்கு ஆடியன்ஸ். அப்படி யாரும் வராவிட்டாலும் கவலையில்லை. நானே போட்டு பார்த்துவிடுவேன். பிலிம் ஓட்டையின் மேலும் கீழும் இரு கோடுகளை கிழித்து, அதில் பிலிம் ரோலை நுழைத்து, இழுத்துப்பார்த்திருக்கிறேன். படமாக வருமோ என்ற நப்பாசையில். இப்படி இழுப்பதால், என் ’செட்டாப்’ பாக்ஸ் கலைந்து போகும் சாத்தியமே அதிகம் நிகழும்.

எனது அன்றைய கோடை விடுமுறை கொண்டாட்டம் இது தான்.

---

இன்று எல்லாம் டிஜிட்டல்மயமாகிவிட்டதால், முன்பு போல் பிலிம் கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைக்கும். இவ்வளவு நாட்கள் வந்த படங்கள், எங்கே போயிருக்கபோகிறது? பழைய படங்களும் டிஜிட்டலாகிவிட்டால், அந்த பிலிம்களும் உபயோகமற்றுதான் போகும். ஆனால், அதை வைத்து வருங்காலத்தில் குழந்தைகள் விளையாட விரும்புவார்களா? என்பது தான் தெரியவில்லை.

(தொடரும்)

.

10 comments:

குலவுசனப்பிரியன் said...

சிறு வயது ஞாபகங்களைக் கிளறிவிட்டீர்கள். நானும் இதேபோல் படம் காட்டி விளையாடி இருக்கிறேன். என்ன குவிஆடி எல்லாம் வாங்க காசு இருக்காது. அதற்கு பதில் பழுதடைந்த குமிழ் விளக்கின் மேல்பகுதியைக் குடைந்து எடுத்துவிட்டு அதில் நீரை நிரப்பிக்கொள்வோம்.

பகிர்வுக்கு நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

y blood same blood naanum vilayaadirukiren

திருநெல்வேலி ஜங்ஷன் said...

சல்யூட்!

திருநெல்வேலி ஜங்ஷன் said...

aha!! good .

எவனோ ஒருவன் said...

ரொம்ப மகிழ்ச்சி.
Keep writing like it.

சரவணகுமரன் said...

நன்றி குலவுசனப்பிரியன்

சரவணகுமரன் said...

குலவுசனப்பிரியன்,

நீங்க சொன்ன குமிழ் விளக்கின் மேல்பகுதி விஷயம் நல்லா இருந்தது...

சரவணகுமரன் said...

அப்படியா ரமேஷ்...

சரவணகுமரன் said...

நன்றி மிஸ்டர் இட்லி

சரவணகுமரன் said...

நன்றி புல்லட் மணி