Thursday, April 1, 2010

வைரமுத்துவின் ‘பாட்டு’ டைரி

பாடல்களை ரசிக்கும் அனைவருக்குமே, பாடல்கள் உருவான விதம், பாடல்களுடனான அனுபவம் பற்றிய கட்டுரைகளும் பிடிக்கும். உதாரணத்திற்கு, இந்த தளத்தில் நண்பர் மகேந்திரன் எழுதிய இசை பக்கங்களை சொல்லலாம். அது ஒரு இசை ரசிகனின் பார்வையில் எழுதப்பட்டவை.

சமீபத்தில் பாடலாசிரியர் யுகபாரதியும், அவரது வலைத்தளத்தில் தான் எழுதிய பாடல்கள் உருவான அனுபவங்களை ‘முன்னாள் சொற்கள்’ என்ற தலைப்பில் எழுதி வருகிறார்.

அதுபோல், வைரமுத்து அவர் எழுதிய பின்னணிப் பாடல்களின் பின்னணி பற்றி எழுதியிருக்கும் புத்தகம் தான் - நேற்றுப் போட்ட கோலம் (1985).



---

’சின்ன வீடு’ பட பாடல் பதிவின் போது, பாக்யராஜிடம் இளையராஜா கூறியது,

“நம்முடைய நாட்டுப்பாடல்களும், மேற்கத்திய இசையும் செவிகளுக்கு வேறு வேறாய்த் தோன்றிய போதிலும் ஏதோ ஓர் புள்ளியில் இரண்டும் சந்தித்துக் கொள்கின்றன. அங்கே அவை இரண்டும் ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. மேற்கத்திய இசையின் பாட்டை நம்முடைய நாட்டுப்புற பாணிக்கு இறக்குமதி செய்து நிறம் மாற்றினால், அது ஒரு வித்தியாசமான கலவையாக இருக்கும். அதுவே காதல் பாடலென்றால், மாறுதலாக இருக்கும்”

அப்படி மெட்டமைத்ததுதான் ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது’.

இந்த பாடல் எழுதும்போது தான், பாக்யராஜின் பாடல் உருவாக்கத் திறன் பற்றி தெரிந்து கொண்டார் வைரமுத்து.

இளையராஜாவிடமிருந்து மெட்டுக்களை வாங்கிச் சென்றவுடன் அவர் அவற்றை ஆறப்போட்டுவிடுவதில்லை. மனசுக்குள் ஊறப்போட்டு விடுகிறார். ஏறக்குறைய எல்லா மெட்டுக்களுக்கும் அவரே எழுதிப் பார்த்தும் விடுகிறார்.

இந்த பாடலில் “முத்தம் தரவே முகமே தருமே” என்று வைரமுத்து எழுதியிருந்த இடத்தில், பாக்யராஜ் “அந்தப்புரமே வரமே தருமே” என்று எழுதி வைத்திருந்தார். ஏனோ, அவர் எழுதிய வரிகள் வேண்டும் என்று பாக்யராஜுக்கு தோன்ற, வைரமுத்துவும் சம்மதித்து, அந்த வரியை மாற்றியிருக்கிறார்.

---

சிவாஜி நடித்த சாதனை படம். அந்த படத்தில் வரும் ‘அன்பே அன்பே’ பாடலில் இருக்கும் வினோதம் என்று இவ்வாறு கூறுகிறார்.

எனக்கு இசை தெரியாது. சுரஞானம் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.

ஆனால் இந்த பாடலின் ஒலிப்பதிவின்போது இளையராஜா அவர்கள் சொன்ன சில செய்திகள் என்னை வியப்பின் விளிம்பிற்குத் தள்ளின.

இந்த பாடலின் முதல் சரணத்தில் ’பாவை செய்த பாவம் என்ன’ என்று எழுதியிருக்கிறேன். அவரது சுரம் ‘பா’ எனத் தொடங்குகிறது. என்னை அறியாமல் அதே இடத்தில் நானும் ‘பா’ என்று தொடங்கியிருக்கிறேன்.

’சாவை இன்னும் கொஞ்சநேரம் தள்ளிப்போடக்கூடாதோ’ என்ற வரியில் அவரது சுரம் ‘சா’ என தொடங்குகிறது. நானும் என்னையறியாமல் ‘சா’வென்று தொடங்கித்தான் எழுதியிருக்கிறேன்.

’தள்ளிப்போடக் கூடாதோ’ என்ற இடத்தில் இயல்பாகவே தாளம் தள்ளி வருகிறது. நான் இதனை அறியாமலேயே ’தள்ளிப்போடக் கூடாதோ’ என்று எழுதியிருக்கிறேன்.

இந்த ஒப்புமைகளையெல்லாம் இளையராஜா அவர்கள் எனக்குச் சுட்டிக் காட்டியபோது, என்னால் நம்பவே முடியவில்லை. நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். காரணம் தெரியாமல் என் கண்கள் பனிக்கின்றன.


---

ஒரு பாடலை பற்றி இப்படி படித்துவிட்டு, திரும்பவும் அந்த பாடலை கேட்கும்போது, கேட்ட பாடலாக இருந்தாலும், இன்னும் ப்ரெஷாக, இன்னமும் இனிமையாக இருக்கிறது. பிடித்த பாடல், மேலும் பிடித்து போகிறது.

ஆனால், நான் கேட்டிராத சில பாடல்கள் பற்றிய வைரமுத்துவின் எண்ணவோட்டத்தை, நான் அறிந்திராத காரணத்தால் என்னால் முழுமையாக உணரமுடியவில்லை.

மொத்தம் 25 பாடல்களை பற்றி 141 பக்கங்களில் சொல்லியிருக்கிறார். பெரும்பாலானவை, இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள். எம்.எஸ்.வி, சங்கர்கணேஷ், கங்கைஅமரனுக்கு எழுதிய பாடல்களும் உண்டு.

இதை அவர் எழுதிய காலம், ரஹ்மான் வருகைக்கு முந்திய காலம் என்பதால், ரஹ்மான் பாடல்கள் பற்றிய குறிப்புகள் இதில் இல்லை என்பது என்னளவில் இன்னொரு குறை. இதற்கு பிறகு, இது போல் ஏதும் வைரமுத்து எழுதியிருக்கிறாரா?

ஆனால், ரஹ்மான் இதுபோல் பாடல் பதிவு அனுபவங்களை புகைப்பட புத்தகமாக (Coffee Table Book) போட போவதாக கேள்விப்பட்டேன். அதில் பார்த்துக்கொள்ளலாம்.

.