Friday, April 2, 2010

பையா

முதல்ல எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இந்த படத்துக்கு ஏன் ‘பையா’ன்னு பேரு வச்சாங்க? இப்படி வச்சதுக்காகவே, “அவன யாருன்னு நினைச்சுக்கிட்ட... பையா!”, அப்படின்னு ஏதாச்சும் பன்ச் வசனம் இருக்கும்’ன்னு நினைச்சேன். இல்ல.




இது ஒரு யதார்த்தமான தமிழ் சினிமா. ஆம். ஹீரோவுக்கு ஹீரோயினை பார்த்தவுடனே, லவ் வந்து விடுகிறது. நம்ம பயலுகளுக்கும் அப்படித்தான். ஹீரோயினுக்கு கடைசி வரைக்கும் லவ் வரல. நம்ம பொண்ணுங்களுக்கு அப்படித்தான். கடைசில, ஹீரோயின் ஒரு பெரிய வீட்டுக்குள்ள போகுது. சந்தோஷமா பையனுக்கு டாட்டா காட்டிட்டு. உள்ள போனா, பொண்ண யாரும் மதிக்கல. என்ன பண்ணும்? வெளியே வந்துடுது. அப்புறம் வேற வழியே தெரியாததால, ஹீரோ மேல லவ் வந்துடுது. இவ்ளோ, துணிச்சலா காதலை சொல்ல முடியுமா?

படம் பெங்களூரில் ஆரம்பிக்கிறது. என்னை சுற்றி படம் பார்த்தவர்கள், இது அந்த இடம், இது இந்த படம் என்று படத்தை விட்டு, ஊர் சுற்றி பார்க்க கிளம்பி விட்டார்கள். இதில் ஒரு ஜோடி, படத்தில் காட்டியது எந்த மால்? என்று சண்டை வேறு போட்டுக்கொண்டார்கள்.

படத்தின் கலகலப்பு, கார் கிளம்பியவுடன் தொடங்கி, கார் நின்றவுடன் முடிந்துவிடுகிறது. ரன்னில் லிங்குசாமி பல்சருக்கு விளம்பரம் பண்ணியது போல், இதில் லான்சர். அந்த காரை ஒரு கதாபாத்திரமாக ஆக்கியிருக்கியிருக்கலாம். இந்தியாவின் உள்கட்டமைப்பு முன்னேற்றத்தை (ரோட்டை) படமெங்கும் காட்டுகிறார்கள்.

லிங்குசாமி சொல்லுவார், “நான் தியேட்டரில் போய், எப்படி படம் பார்க்க விரும்புவேனோ, அப்படித்தான் படம் எடுப்பேன்”. எல்லா இயக்குனர்களுமே, அப்படித்தான் நினைப்பார்கள். அதனால், இவருடைய கவனம், சீன் பை சீனுக்கு தான் இருக்கும் என நினைக்கிறேன். சில காட்சிகளுக்கு, நல்ல ரெஸ்பான்ஸ். இப்படி முழு கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், சீன்களுடன் பாட்டு, பைட் சேர்த்து ‘மசாலா’ படமெடுப்பதால் மொத்த படமாக முழு திருப்தி கிடையாது.

கார்த்தி ஜீன்ஸ், டீ-சர்ட் போட்டு ப்ரொமோஷன் வாங்கியிருக்கிறார். மற்றபடி, அதே போல் முழிக்கிறார். சிரிக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் விவாதத்தின் போது, பறந்து பறந்து சண்டை போடுவதை தப்பாக சொல்லாதீங்க என்றார். இதில் அவரும் பறந்து, பறந்து சண்டை போட்டு ஆக்‌ஷன் ஹீரோ லிஸ்டில் இணைந்துள்ளார். மூன்று வருட இடைவெளி என்றில்லாமல், இம்முறை மூன்று மாத இடைவெளியில் அவருடைய படம் வந்திருக்கிறது.

தமன்னாவின் படங்களை சன் பிக்சர்ஸ் கண்டிப்பாக வாங்கும் என்று சக்சேனா சொல்லியிருக்கிறார். (அப்ப, சுறாவை விஜய்காக வாங்கவில்லையா?) அவர் வாங்காவிட்டாலும், மற்ற ’நிதி’கள் வாங்கிவிடுவார்கள் போல. தமன்னாவின் ஸ்டார் வேல்யூ கூடிக்கொண்டே போகிறது. தூத்துக்குடியில் அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து, தியேட்டர் முன்பு கட்-அவுட் வைத்திருப்பதாக நண்பன் சொன்னான்.

முதல் பாதி முழுக்க, கார்த்தி பேசும் வசனங்கள் தான் காமெடி. இரண்டாம் பாதியில், ஜெகன் வருகிறார். மும்பையில் ஜெகன் பேசும் ஹிந்தி, ஹி... ஹி... படத்தில் கார்த்தியின் நண்பர்கள், ஒரு பெண் உள்பட, ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். என்ன விஷயம்’ன்னு புரியல. கார்த்தி, இண்டர்வியூக்கு ஒரு சாப்ட்வேர் கம்பெனி செல்வார். ஐய்யய்யோ! லாஜிக் கண்டுபிடிக்க, சாப்ட்வேர் விமர்சகர்கள் கிளம்பிவிடுவார்களே என்று நினைப்பதற்குள், நல்லவேளை, காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

லிங்குசாமி, எஸ்.ராமகிருஷ்ணனை கைவிட்டு விட்டு, வசனத்திற்கு தன் முதல் பட வசனகர்த்தா பிருந்தாசாரதிவை சேர்த்துள்ளார். எளிமையாக இருந்தாலும், ஆங்காங்கே கவனம் பெறுகிறது. லிங்குசாமி, கூடிய விரைவில் ஹிந்தி படமெடுப்பார் என நம்பலாம். அதற்கான, எல்லா தகுதிகளும் தெரிகிறது.

யுவன் பாடிய ”என் காதல் சொல்ல நேரமில்லை” - சூப்பர். அவர் பாடியதில், ரொம்ப பிடித்த பாடலாகிவிட்டது.

கண்ணுக்கு குளிர்ச்சியா செட் போடுவதில் ராஜீவனை மிஞ்ச முடியாது. இதில் நிலவொளியுடன் கூடிய அருவி செட் ஒண்ணு போட்டு இருக்கிறார், பாருங்க! அட்டகாசம்.

பையாவின் கார் பயணம் சந்தோஷமாக தொடங்கினாலும், முடிவில் தலைவலியை கொடுப்பதும் உண்மை.

.

12 comments:

King Viswa said...

//அவன யாருன்னு நினைச்சுக்கிட்ட... பையா!”, அப்படின்னு ஏதாச்சும் பன்ச் வசனம் இருக்கும்’ன்னு நினைச்சேன். இல்ல.//

இந்த ஒரு விஷயமே போதாதா படம் ஓட?

Anonymous said...

படம் நல்லா இருக்கும்னு நினைச்சேன்.

Sukumar said...

ரைட்டு... தேறுமா தேராதா தல

திருவாரூர் சரவணா said...

எல்லாம் நல்லாத்தான்யா யோசிக்கிறாங்க...ஆனா கதையைப் பத்தி மட்டும் கேட்டா கெட்ட வார்த்தையா நினைச்சுடுறாகளோ?

ராமலக்ஷ்மி said...

//படம் பெங்களூரில் ஆரம்பிக்கிறது. என்னை சுற்றி படம் பார்த்தவர்கள், இது அந்த இடம், இது இந்த படம் என்று படத்தை விட்டு, ஊர் சுற்றி பார்க்க கிளம்பி விட்டார்கள். இதில் ஒரு ஜோடி, படத்தில் காட்டியது எந்த மால்? என்று சண்டை வேறு போட்டுக்கொண்டார்கள்.//

:))!

சரவணகுமரன் said...

அம்மு,

படம் சுமார் தான்.

சரவணகுமரன் said...

வசனத்துல பன்ச் இல்ல... மத்தபடி, சண்டைக்காட்சிகளில் கார்த்தி நிறைய பன்ச் கொடுக்குறாரு...

சரவணகுமரன் said...

சுகுமார்,

பார்க்கலாம்... மெதுவா... ப்ளாக் டிக்கெட் எடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்ல...

சரவணகுமரன் said...

நன்றி மதுரை சரவணன்

சரவணகுமரன் said...

வாங்க திருவாரூர் சரவணன்

சரவணகுமரன் said...

வாங்க ராமலக்ஷ்மி

Manion said...

கதைகாக இல்லை [கதையா அப்படீன்னு]
தமனாவின் அங்கங்களை காண படம் பார்க்கலாம்!