Thursday, February 16, 2012

இணைய திரையரங்குகள்

வாரத்திற்கு ஒரு படமாவது தியேட்டர் சென்று பார்த்துக்கொண்டிருந்தவனை, தியேட்டர் இல்லாத ஊருக்கு அனுப்பி வைத்தால் என்ன செய்வான்? (நான் பார்க்க விரும்பும் படங்களை திரையிடும் தியேட்டர் இல்லாத ஊர் என்று பொருள் கொள்க!). இணையம் தான் கதி.



சிறு பட்ஜெட் படங்களை, திரையரங்குகள் தான் கண்டு கொள்வதில்லை என்றில்லை. திருட்டுத்தனமாக படங்களை வழங்கி வரும் இணையத்தளங்களும் கண்டு கொள்வதில்லை. முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் முதல் நாளே சுட சுட பதிவேற்றுபவர்கள், சிறு பட்ஜெட் படங்களை ஒன்றிரண்டு நாளிலோ, அல்லது பதிவேற்றாமலே விட்டுவிடுவார்கள். இதுவே, பெரிய படங்கள் என்றால் ஒவ்வொரு நாளும் வகை வகையான ப்ரிண்ட்டை தளத்தில் ஏற்றுவார்கள். முதல் நாள், தியேட்டர் காப்பி. அடுத்தது, தியேட்டரில் எடுத்ததில் நல்ல ப்ரிண்ட். அப்புறம், இன்னும் கொஞ்சம் நல்லது. சில வாரங்களுக்கு பிறகு, டிவிடி, ப்ளு-ரே என்று அப்-லோடி அப்-லோடி அப்-டூ-டேட்டாக இருப்பார்கள். சின்ன படங்கள், அப்படி அல்ல. கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

நல்ல விமர்சனங்களை பெற்ற சில சிறு பட்ஜெட் படங்களைத் தேடி தேடி களைத்திருக்கிறேன். இதற்கு எஸ்.ஏ.சி. ஏதாவது செய்ய வேண்டும். (என்னைத் தேடி வந்து உதைக்க போகிறார்கள்.)

தமாஷை விடுங்கள். பிறகு, நான் என்ன தான் செய்வது? பெங்களூரில் இருந்த போதும், இப்படி சில படங்கள் வராமல் இருந்த போது, ஓசூருக்கு பைக்கில் சென்று பார்த்து வந்திருக்கிறேன். இப்போது, என்ன செய்ய? ஆபத்துக்கு பாவமில்லை என்று இணையத்தில் மட்டமான ப்ரிண்ட் என்றாலும் பார்த்து தொலைக்க வேண்டி இருக்கிறது.


---

மகான் கணக்கு என்றொரு படம் வந்தபோது இணையத்திலும் சரி, டிவி விமர்சனங்களிலும் சரி, ஒரளவுக்கு நன்றாக இருப்பதாக சொன்னார்கள். நானும் தேடி தேடி பார்த்தேன். எங்கும் எனக்கு சிக்கவில்லை.

சமீபத்தில், இந்தியாக்லிட்ஸ் மூவிஸ் தளத்தில் காணக்கிடைத்தது. முக்கியமாக, இது லீகலான தளம். திருட்டுத்தனமாக பார்க்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி இல்லாமல் பார்க்கலாம்.

படம் ஓகே. காதில் பூ சுற்றும் கதை தான் என்றாலும், இது போன்ற யாரும் சொல்லாத கதைகள், நடைமுறையோடு ஒட்டிய கதைகள் என்றால், சில குறைகள் இருந்தாலும் பார்க்கலாம். ‘ஹைய்யா! லோனு’ என்று இருப்பவர்களை, ‘ஹைய்யையோ! லோனா?’ என்று தெறிக்க விட்டு யோசிக்க வைக்கும் விழிப்புணர்வை கொடுப்பதால், இயக்குனரை பாராட்டத்தான் வேண்டும். வசனங்கள், நிறைய இடங்களில் சிரிக்க வைத்தது. நாடகத்தன்மை தான் குறை.

---

ஒரு இரண்டு மணி நேரம், ஏதேனும் வேலை பார்க்க வேண்டும் என்றால், முன்பு பாட்டை போட்டுவிட்டு வேலையை பார்ப்பேன். இப்போது, ஏதேனும் படத்தை போட்டுவிட்டு பார்க்கிறேன்.

யூ-ட்யூபில் நிறைய பழைய படங்கள், புது படங்கள், நல்ல தரத்தில் காணக்கிடைக்கின்றன. போட்டுவிட்டோம் என்றால், அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்க, வேலையும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும். யூ-ட்யூபில் லீகல், இல்லீகல் - இருவகை படங்களும் இருக்கின்றன. பெரும்பான்மை, இல்லீகல்.


லீகல் என்றால் சட்டத்திற்காக மட்டும் அல்ல. நமக்கும் பார்க்க கொஞ்சம் தரத்தில் இருக்கும். உங்களுக்கு தெரிந்த லீகல் தளங்களை சொல்லுங்களேன்?

.

2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஹிந்தி படங்கள் எல்லாமே ஒண்ணு ரெண்டு வாரத்துக்குள்ள கிடைக்குது தலைவரே.. தமிழ்ல பாக்குறதுக்கு நீங்க அதுங்களப் பார்த்துட்டுப் போயிரலாம்..:-))

சரவணகுமரன் said...

நன்றி கார்த்திகைப் பாண்டியன் :-)