Sunday, May 5, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 6

இன்று நிறைவு நாள். அமெரிக்காவின் தொழிலாளர் தினம் - செப்டம்பர் மூன்றாம் தேதி. இது அந்த விடுமுறை சமயம் சென்ற பயணம். ஒரு நாள் கூடுதல் விடுப்பு எடுத்து பயணித்தது.

அந்த கூடுதல் தினம் இன்று தான். இன்று அலுவலகத்தில் மற்றவர்கள் வேலை பார்க்க, நாம் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் என்ற குறுகுறுப்பே ஸ்பெஷல் தான். பள்ளிக்காலங்களில் இருந்து இன்றும் இந்த குறுகுறுப்பு தொடர்ந்து வருகிறது.

நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மேலாளர், ஒரு இந்தியர். குஜராத்தியன். அவன் கூட கொஞ்சம் பேசியதில், மோடி அபிமானி என்று தெரிந்தது. மோடி புகழ் பாடிக்கொண்டிருந்தான்.

தோசை சுடுவது போல, அங்கிருந்த மெஷினில் சுட சுட பேன் கேக் (Pan Cake) செய்ய சொல்லிக்கொடுத்தான். சாப்பிட்டுவிட்டு திரும்ப, இரவு வந்த வழியே கிளம்பினோம். முந்திய தினம் தரவிறக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’ கேட்டுக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.இன்று செல்லும் இடம் - கிராண்ட் டெடான் தேசிய பூங்கா. செல்லும் வழியில் ஏதோ வேலை நடந்துக்கொண்டிருந்ததால், சாலையின் ஒரு பகுதியில் ட்ராபிக்கை நிறுத்தி, ஒரு சமயம் ஒரு பக்க ட்ராபிக் என்று அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ஒருபக்க ட்ராபிக்கை வழி நடத்த ஒரு சிறு வண்டி வைத்திருந்தார்கள்.

கிராண்ட் டெடான், யெல்லோஸ்டோனுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு தேசிய பூங்கா. யெல்லோஸ்டோனில் அபூர்வ ஊற்றுகள் இருக்கிறதென்றால், இங்கு அழகிய ஏரிகளும், மலைத்தொடர்களும்.


யெல்லோஸ்டோனில் வெப்பத்துடன் கூடிய ரசாயன அனல் ஊற்றுகளைத் தொடர்ந்து பார்த்த கண்களுக்கு க்ராண்ட் டெடானின் ஜாக்சன் ஏரியும் அதன் பின்னணியில் இருக்கும் மலைத்தொடர்களும் குளிர்ச்சியைக் கொடுத்தது.


ஜாக்சன் ஏரி படகு பயணத்திற்கு முதலில் சென்றோம். ஆனால், சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே படகு பயணம் இருந்தது. எங்கள் நேரத்திற்கு அது சரிப்பட்டு வராததால் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பினோம். அங்கு நிறையவே நேரத்தை விரயம் செய்தோம். சாப்பிட சென்ற நண்பர்கள் திரும்ப வர ரொம்பவே நேரமாகியது. நான் மனைவி குழந்தையுடன் அங்கிருந்த கடைகளைச் சுற்றி வந்துக்கொண்டிருந்தேன்.


அடுத்து அங்கு இருந்த அணையின் பக்கம் கொஞ்சம் நேரத்தை செலவழித்தோம்.


யெல்லோஸ்டோன் அனல் பறக்கும் ஆக்ஷன் படமென்றால், கிராண்ட் டெடான் டூயட் பாடல்கள் கூடிய ரொமான்ஸ் படம்.


டூயட் பாடல்கள் எடுக்க ஏற்ற இடம்.


வாக்கிங் செல்ல நடை பாதைகள், குதிரை சவாரி வழிகள் என்று பொழுதை ரம்மியமாக கழிக்க சிறந்த இடம்.


மாலை வரை அங்கிருக்கும் ஏரிகளுக்கு ஏறி இறங்கி சென்று வந்தோம். மாலையானதும் ஊருக்கு கிளம்ப தொடங்கினோம். அங்கிருந்து மாலை கிளம்பினால் தான் நடுராத்திரி அல்லது அதிகாலைக்கு முன்பு ஊர் வந்து சேர முடியும். அடுத்த நாள், அலுவலகம் வேறு செல்ல வேண்டும்.

கிளம்பும் சமயம், வெளியே வரும் இடத்தில் சின்ன ட்ராபிக். சாலையின் ஓரத்தில் கார்கள் பார்க் செய்யப்பட்டு, மக்கள் ஆர்வத்துடன் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு பக்கத்தில் நிறுத்த இடம் எதுவும் இல்லையென்பதால், நானும் மனைவியும் அங்கே இறங்கிக்கொள்ள, நண்பர் காரில் முன்னே பார்க் செய்ய சென்றார்.

 

அங்கு நின்றுக்கொண்டிருந்தது, மூஸ் எனப்படும் மான். இங்கு இருக்கும் ஸ்பெஷல் மான். அதன் கொம்பு டிசைன் தான், இதன் சிறப்பம்சம்.


சுற்றி இத்தனை பேர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாலும், அசராமல் அதன் வேலையைப் பார்த்துக்கொண்டு, போஸ் கொடுத்துக்கொண்டிருந்தது. நாங்களும் புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பினோம்.

செல்லும் வழியில் ஒரு இடத்தில் டீ, காபியும், இன்னொரு இடத்தில் இரவு உணவும் சாப்பிட்டுவிட்டு, டென்வரில் வீட்டை வந்து சேரும் போது மணி இரண்டு இருக்கும். குறைந்த நேரத்தில் முடிவெடுத்துவிட்டு கிளம்பிய பயணம், ஒருவித குறைந்த திட்டமிடலுடன் சிறப்பாகவே முடிந்தது.

.

4 comments:

கோவை நேரம் said...

சுற்றுலா நன்றாக இருக்கிறது...என்ன வெளிநாடா போய்விட்டது..இல்ல்லனா வரலாம்..

அமுதா கிருஷ்ணா said...

அனைத்து படங்களும் அருமையா இருக்கு.

சரவணகுமரன் said...

நன்றி கோவை நேரம் :-)

சரவணகுமரன் said...

நன்றி அமுதா கிருஷ்ணா