Sunday, May 12, 2013

கிடா வெட்டு


சாப்ட்வேர் வேலைக்காக வெளிநாட்டுக்கு வருபவர்கள் பெரும்பாலோருக்கு வேலை பிடித்து போய், இல்லை இடம் பிடித்து போய், இல்லை கிடைக்கிற சம்பளம் பிடித்து போய், இங்கேயே இருக்க ஆசைப்படுவார்கள். விசாக்காலம் முடிந்து ஊருக்கு கிளம்புவார்கள், அல்லது நிரந்தர குடியுரிமை தேடி செல்வார்கள்.

இது ஒருபுறம் என்றால், இன்னொரு பக்கம் வேலை பிடிக்காமல், இடம் பிடிக்காமல், வந்து சில நாட்களில் இந்தியா திரும்பி செல்பவர்களும் இருக்கிறார்கள். அல்லது, வேறு சில குடும்ப தேவைகளுக்காக உடனே திரும்பி செல்வார்கள். எங்கள் டீமில் அப்படி ஒருவன். பெயரை பிரதீப் என்று வைத்துக்கொள்ளலாம்.

பிரதீப் சமீபத்தில் தான் அமெரிக்கா வந்தான். திருமணம் ஆகி சில வாரங்களில், அமெரிக்கா வந்திருந்தான். தனியாக. மனைவியை சில மாதங்களுக்கு பிறகு கூட்டிவருவதாக ப்ளான் செய்திருந்தான். சில நாட்களிலேயே, இந்தியா திரும்ப வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான். கேட்டதற்கு, தங்கைக்கு திருமண ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான். மாப்பிள்ளை பார்ப்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமாம். அதை எல்லாம் இங்கிருந்தே போன் மூலம், இண்டர்நெட் மூலம், அங்கிருக்கும் உறவினர்கள், நண்பர்களை வைத்து செய்யலாமே என்றதற்கு, இல்லை நான் தான் போக வேண்டும் என்றான்.

இதற்கிடையில், அவனது மாமியாருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதய ஆபரேஷனும் செய்யப்பட்டது. இப்போது கண்டிப்பாக செல்ல வேண்டும் என்றான். எங்கள் மேனேஜரிடமும் சொன்னான். அவர் என்னிடம் பேச சொல்லிவிட்டார். என்னிடமும் சமாதானம் செய்து, சமாளிக்க சொன்னார். அணியில் சீனியர் என்பதால், இந்த வேலையும் எனக்கு எக்ஸ்ட்ரா. நமக்கு அவ்வளவு சமாளிப்பு திறன் கிடையாது. ரொம்ப பேசவும் மாட்டோம்.

யாராவது நான் சொல்வதற்கு எதிராக எதையாவது எதையாவது சொன்னால், என் தரப்பு நியாயத்தை சொல்லிப்பார்ப்பேன். ரொம்பவும் சச்சரவுக்குள் போக மாட்டேன். நான் சொல்வதை கேட்காவிட்டால், ஏதாவது பிரச்சினை நேரும் என்று தோன்றினால், அதையும் பாதிக்கப்பட போவோரிடம் சொல்லிவைப்பேன். அவ்வளவு தான். முதல் பாதிப்புக்கு பிறகு, நம் பேச்சை கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இப்படிப்பட்ட நான் என்ன சமாதானம் சொல்வது? அவன் பக்கம் கொஞ்சம் நியாயமும் இருக்கிறது. அதனால், லைட்டாக என்ன செய்யலாம், இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கலாம் என்று ப்ரண்ட்லியாக சொல்லி பார்த்தேன். அவனும் அதன்படி அவன் வீட்டினரிடம் பேசிப்பார்த்தான். சில நாட்கள் ஒன்றும் பிரச்சினை இல்லாமல் போனது. திரும்ப வேதாளம் முருங்கைமரம் ஏறியது. எனக்கும் புரிந்தது. திருமணம் முடிந்து சில நாட்களில் மனைவியை விட்டு வந்தவனிடம், பெண் வீட்டினர் என்ன சொல்வார்கள்? வந்து கூட இரு என்றிருக்கிறார்கள். தவிர, பெண்ணின் அம்மா வேறு படுத்த படுக்கையாக இருக்கிறார்.

எனக்கும் சரி என்று தான் பட்டது. இப்ப போனால், திரும்ப நினைத்தவுடன் வர முடியுமா? அதனால் ஒன்றும் பாதிப்பு இல்லையே? என்று அந்த கோணத்தில் யோசித்துவிட்டு முடிவெடுத்துக்கொள் என்று முடித்துக்கொண்டேன். இதற்கு மேல், மேனேஜருடன் பேசிக்கொள் என்றேன்.

எங்கள் மேனேஜர் லீவில் கிளம்புகிறார். புதிதாக இன்னொரு மேனேஜர் வந்திருந்தார். இவர்கள் இருவரும் அவனுடன் என்னையும் சேர்த்துக்கொண்டு மீட்டிங் வர சொன்னார்கள்.

அங்கேதான் கிடா வெட்டு. சுற்றி வளைத்தார்கள். அப்படி பண்ணலாமே? இப்படி பண்ணலாமே? என்றார்கள். சொந்த கதையை சொல்லி பார்த்தார்கள். அவன் எதை சொன்னாலும், அழகாக, ப்ரொபஷனலாக, எமோஷனலாக, செண்டிமெண்டலாக சமாளித்தார்கள். அவனால் எதையும் சொல்ல முடியாதபடி செய்தார்கள். முடிவில், அவனுடைய காசில் இரு வாரங்கள் இந்தியா சென்று குடும்பத்தை சமாளிக்க சொல்லி, அதை ப்ளானை ஏற்க செய்தார்கள். அடப்பாவிகளா!!! என்று நினைத்துக்கொண்டேன். எங்கிருந்து இதை கற்றுக்கொண்டார்களா?

ஆன்-சைட் வருபவர்கள் ஊரில் ஹவுசிங் லோன் எடுத்துவிட்டு வந்திருந்தால்,  அதை அடைத்துவிட்டு செல்லவே விரும்புவார்கள். கடனை அடைக்கும் வரை, எப்படியாவது இங்கேயே இருந்துவிட பிரயத்தனப்படுவார்கள். இவனுக்கு ஊரில் சொந்த வீடு இருந்ததால், அந்த பிரச்சினை இல்லை.

மீட்டிங் முடியும் போது, ஒரு மேனேஜர் அவனிடம் அக்கறையுடன் ஒரு அட்வைஸ் சொன்னார்.

”லீவுக்கு ஊருக்கு போகும் போது, ஏதாவது சொத்து வாங்கி போடு!!!”.

அதானே?
அப்படி போடு....!!!!

.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வாறு கற்றுக் கொண்டால் தான் மேனேஜர் பதவியோ...? கொடுமை...

இராஜராஜேஸ்வரி said...

அட்வைஸ் என்கிற பெயரில் வலை விரித்தல் ..!

அப்படி போடு....!!!!