Sunday, September 8, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

டென்வரில் பெரிய நடிகர்கள் படங்கள் தான் வெளிவரும். கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் தவிர சில ஹை ஹைப், ஹை பட்ஜெட் படங்கள் வந்து பார்த்திருக்கிறேன். இந்த வாரம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ வந்திருக்கிறது. சிவகார்த்திக்கேயன், அதற்குள் அந்த லீகில் சேர்ந்துவிட்டாரா?



சுந்தர்.சி, பூபதிபாண்டியன் கூட்டணி கற்பனை சங்கத்தை வைத்து ஒரு படத்தையே ராஜேஷ்-பொன்ராம் கூட்டணி எடுத்திருக்கிறது. (பூபதி பாண்டியன், வெற்றி இயக்குனராக தொடர்வார் என்று நினைத்திருந்தேன். அவருடைய எந்த முடிவு, அவரை இந்நிலைக்கு கொண்டு சென்றதோ?)

சும்மா இந்த டைட்டிலை வைத்தே ஒரு கதையை ரெடி செய்து படமெடுத்திருக்கிறார்கள். துப்பாக்கி திருட்டு போல சில மொக்கை தருணங்கள் இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனை, முதல் முறையாக பெரிய திரையில் இப்போது தான் பார்த்தேன். நகைச்சுவை, நடனம் பற்றி சொல்ல தேவையில்லை. அவருக்கேற்ற லைட்டான கேரக்டர். கோடிகளில் சம்பளம் கூடும் போது வரும் செய்தியை கேட்டு, சிலருக்கு பொறாமை வரும். மற்றபடி, பெரும்பாலோருக்கு பிடித்த நடிகராக இருப்பார்.

சத்யராஜ் நடிக்க மறுத்த படங்கள் லிஸ்டை கேட்டவர்களுக்கு, அவர் இப்போது நடித்து வரும் படங்களையும், கேரக்டர்களையும் பார்த்தால், அதற்கான உளவியல் பின்னணி புரிகிறதோ இல்லையோ, அவருடைய மார்க்கெட் நிலவரம் புரியும். மற்றவர்களெல்லாம் கேஷுவலாக வந்து போன மாதிரியும், இவர் மட்டும் நடித்தது போலவும் எனக்கு தெரிந்தது.

ஹீரோயின் அம்சமாக இருக்கிறார். முக எக்ஸ்பிரெஷனில் கவர்கிறார். ரவுண்ட் வருவாரா தெரியாது. ஆகலாம். (கல்யாண பெண்ணுக்கு தோழியாக வரும் காட்சியில், அவர் கட்டியிருக்கும் பட்டுபுடவையை பார்த்து ஒரு டிமாண்ட் வந்திருக்கிறது!!!)

சூரியிடம் ஒரு பேட்டியில் ‘நீங்கதான் செகண்ட் ஹீரோவாமே?’ என்று கேட்டதற்கு, ‘அப்படியெல்லாம் இல்லை, சிவா தான்’ என்று கூச்சப்பட்டுக்கொண்டு சொன்னார். தாராளமாக, ‘ஆமா’ என்று சொல்லியிருக்கலாம். துப்பாக்கி ஆரம்பித்தபோது ஒரு பேட்டியில் சத்யன், ‘கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ அளவுக்கு’ என்று பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த படத்தை தியேட்டர் சென்று பார்க்க வைத்ததற்கு முதல் காரணம் - இமான் தான். சிலமுறை கேட்டபோது சலிப்பாக ஒரு டைப்பாக இருந்தாலும், தற்போதைக்கு தொடர்ந்து கேட்கும் ஆல்பம் இதுதான். திரும்பவும் சொல்கிறேன். இளையராஜா பாடல்களை கேட்டு ரசித்த எனக்கு, இமானுடைய சில பாடல்கள், இளையராஜா பாடல்களை நவீன தொழில்நுட்பத்தில் கேட்பதை போல இருக்கிறது.

லோ பட்ஜெட் படமென்றாலும், பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தை ரிச்சாக காட்டியிருக்கிறது. கலர்ஃபுல்.

காமெடி, காதல், பாடல்கள் எல்லாம் தூக்கலாக படத்தை தூக்கி நிறுத்தினாலும், மாட்டை கிணற்றில் இருந்து மேலே தூக்கும் காட்சி, படத்தை செண்டிமெண்டலாகவும் தூக்கிவிட்டிருக்கிறது. படத்தில் ‘காதல்’ தண்டபாணி வரை சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகளை தவிர, மற்றவை அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட்டாகியிருக்கிறது. நல்ல டைம் பாஸ். தியேட்டரில் படம் பார்த்தவர்கள், கடைசியில் வரும் மேக்கிங் டைட்டில் காட்சி வரை பார்த்து, முடிவில் கைத்தட்டி சென்றார்கள்.

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி ட்ரெண்டை திட்டி எழுதுபவர்களும், ஒருமுறை குடும்பத்துடன் சென்று படம் பார்த்துவிட்டு டென்ஷனை குறைக்கலாம்.

.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

டென்ஷனை குறைக்க சென்று விடுவோம்... நன்றி...