Sunday, August 11, 2013

911

டென்வர், அமெரிக்கா.

திங்கள்கிழமை.

இரவு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு, டிவியில் யூ-ட்யூப் மூலமாக அதற்கு முந்தைய நாளைய ‘நீயா நானா’ பார்த்துக்கொண்டிருந்தேன். மனைவியும் கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு, ஹாலுக்கு வந்தாள். பெட் ரூமில், மகள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

திடீரென கிச்சனில் ஏதோ தண்ணீர் சத்தம். ஓடி சென்று பார்த்தேன்.

கிச்சனில் இருக்கும் வாஷ்பேசினில் இரு குழாய்கள் இணைப்பு இருக்கும். ஒன்றில், குளிர்ந்த நீரும், மற்றொன்றில் வெந்நீரும் வரும். எவ்வளவு சூடாக வரும் என்றால், அதை மட்டும் திறந்து வைத்து, கையை கிட்டே கொண்டு செல்ல முடியாது. குளிர்ந்த நீருடன் சேர்த்தே உபயோகிக்க முடியும்.


அந்த வாஷ்பேசினின் கீழ்புறம் ஒரு கப்போர்ட் உண்டு. அதற்குள்ளாக இருந்து, தண்ணீர் பீச்சியடித்துக்கொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தால், சூடான நீர். தள்ளி வந்து விட்டேன். வாஷ்பேசின் கீழே இருக்கும் குழாயில் ஏதோ பிரச்சினை. என்ன செய்ய? சிறிது நேரத்தில், கிச்சன் தரைபுறம் முழுவதும் தண்ணீர். அடுத்து வெளியே இருந்த ஹார்பட்டை நெருங்கிவிடும்.

அபார்ட்மெண்ட் அவசர பராமரிப்பிற்கு போன் செய்யலாம். நம்பர் கைவசம் இல்லை. உள்ளே எங்கோ வைத்திருந்தேன். தண்ணீர் வேகமாக சிந்திக்கொண்டிருந்தது. இந்த வேகத்தில் போனால் என்னாவது? 911க்கு போன் செய்தேன்.

911. வட அமெரிக்காவிற்கான அவசர நேர தொலைபேசி எண். தீயணைப்பு உதவியோ, போலீஸ் உதவியோ, மருத்துவ உதவியோ தேவையென்றால், இந்த எண்ணிற்கு போன் செய்யலாம். சும்மானாச்சுக்கும் போன் செய்தால் ஆப்பு. பெருசா அபராதம் விதிப்பார்கள்.

இங்கு அபார்ட்மெண்டில் லைட்டாக புகை வந்தாலே, பத்து நிமிடத்தில் வீட்டு வாசலில் பயர் இஞ்சின் நிற்கும். நம்மவர்கள் வீட்டில் சாம்பிராணி போட்டு, அடுப்பில் சாம்பார் வைத்து மறந்து போவது, தந்தூரி சிக்கனை ஓவனில் வைத்துவிட்டு தம்மடிக்க போவது என பல சந்தர்ப்பங்களில் அவர்களை அறியாமலேயே ஃபயர் இஞ்சினை வரவழைப்பார்கள். வீட்டிலிருக்கும் ஆலாரம் அலறும். அபார்ட்மெண்டில் இருக்கும் அனைத்து குடித்தனவாசிக்களும், இரவு பனிரெண்டு மணி என்றாலும், வெளியே பனிக்கொட்டுகிறது என்றாலும், வெளியே வந்து நிற்க வேண்டும்.

911க்கு போன் செய்து விபரத்தை சொல்கிறேன். நிதானமாக அட்ரஸ், பிரச்சினை எல்லாவற்றையும் கேட்டார்கள். இங்கே தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நான் பேச்சில் படபடக்கிறேன். அந்த பக்கம் ஸ்லோமோஷனில் பேசுவது போல் எனக்கு தோன்றுகிறது. 911 ஆபரேட்டர், தீயணைப்பு நிலையத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்க, அங்கும் அட்ரஸ் போன்றவற்றை கேட்க, சொன்னேன்.

வெந்நீர் கொட்டுவதில் புகை கிளம்ப, அபார்ட்மெண்ட் முழுக்க ஆலாரம் அடிக்கிறது.

மனைவியை பாப்பாவைத் தூக்கிக்கொண்டு கீழே போகச் சொன்னேன். எனக்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை. தரைவிரிப்பில் நீர் பரவ, கால்கள் சுட, செருப்பு போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் நடந்தேன். தூரத்தில் ஃபயர் இஞ்சின் சத்தம் கேட்டது. எப்போதும் உடனே வருவது போல் தோன்றுவது, இன்று சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருக்கும் போது, மெதுவாக வருவது போல் தோன்றியது.

தீ என்றால் பாதிப்பு இருக்கும். தண்ணீர் தானே என்பதால் பெரிய பயம் இல்லை. நானும் கீழே போய் நின்றேன். பக்கத்தில் நின்ற பக்கத்து வீட்டு பெண்மணி, முக்கியமானவைகளை எடுத்து வந்துவிட்டீர்களா? என வினவினார். பொதுவாக, தீ போன்ற பிரச்சினைகள் வரும் போது, நம்மாட்கள் பாஸ்போர்ட், விசா போன்றவைகளை கையோடு எடுத்து வருவார்கள். எனக்கு அதெல்லாம் உள்ளே இருப்பதால், ஒன்றும் ஆகாது என நம்பிக்கை இருந்தது. இருந்தாலும், ஹாலில் தரையில் ஏதேனும் இருந்தால், நனையுமே என்று திரும்ப வீட்டிற்கு வந்தேன். எனது ஆபிஸ் பை இருந்தது. அதை எடுத்து சோபாவில் போட்டுவிட்டு, திரும்ப கீழே வர, தீயணைப்பு வீரர்கள் வந்துவிட்டார்கள்.

ஒரு பைப் பிரச்சினைக்கு இந்த அக்கப்போரா? என்று தோன்றினாலும், என்ன செய்ய? வெந்நீர், இப்படி ஒரு பிரச்சினையை கிளப்பும் என்று நினைத்தேயில்லையே?

அவர்கள் மெதுவாக வந்து, சைரன் ஆப் செய்து விட்டு, அவர்கள் விதிமுறைகளை எல்லாம் கடைபிடித்து, மேலே வீட்டிற்குள் வந்தார்கள். நான் தான் போன் செய்தேன் என்று சொல்லி அறிமுகம் செய்துக்கொண்டேன். விபரத்தை சொன்னேன். எந்த ரியாக்‌ஷனும் இல்லை.  ஒருவித அமைதி, அவர்கள் அனைவரது முகத்திலும் காணக்கிடைத்தது.

உடல் முழுக்க கவசமாக உடையணிந்து இருந்தாலும், கைகளில் க்ளவுஸ் இல்லை. அவராலும், பைப்பை நெருங்க முடியவில்லை. பிறகு, கையுறையை அணிந்து வந்தார்கள். என்னன்னமோ செய்து பார்த்தார்கள். சுலபத்தில் பிரச்சினை முடியவில்லை. பிறகு, பைப் கனெக்‌ஷனை நிறுத்தினார்கள். அதற்குள் பாதி ஹால் முழுக்க தண்ணீர்.

அவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்கள் கொண்டு, முடிந்த வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்தார்கள். அதற்கு மேல், அபார்ட்மெண்ட் பராமரிப்பு குழுவிடம் சொல்லிவிட்டு சென்றார்கள். எதற்கு எங்களுக்கு போன் செய்தீர்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. வேறு எதுவும் கேட்கவில்லை. தரைவிரிப்பிற்கு கீழே தண்ணீர் சென்று இருப்பதால், முழுவதுமாக ட்ரை ஆக வேண்டும். இல்லாவிட்டால், பல நோய்கள் வரும் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார்கள்.

நான் எங்கள் வீட்டு வாசலிலேயே நின்றுக்கொண்டிருந்தேன். கீழே இருந்த மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் மேலே வந்துவிட்டார்கள். நான் வாசலில் இருப்பதை பார்த்த, பக்கத்து வீட்டு பெண்மணி ‘உட்கார சேர் எடுத்து வரவா?’ என்று கேட்டார். நானென்ன கோலம் போடுவதையா பார்த்துக்கொண்டிருக்கிறேன்?

பிறகு, அபார்ட்மெண்ட்காரன் ஒரு கார்பட் க்ளினீங் நிறுவனத்திற்கு போன் செய்து வர வைத்தான். அவன், அவனுடைய வேனில் இருக்கும் மோட்டார் மூலமாக பைப் போட்டு, விதவிதமான உபகரணங்களால் வீட்டிலிருந்த தண்ணீர் முழுவதையும் எடுத்தான். தண்ணீர் நன்றாக உறிஞ்சப்பட்டிருந்தாலும், ஈரபதம் இருந்ததால், நாலு பெரிய டர்போ ஃபேன்களையும், ஒரு de-h
umidifierயும் வைத்துவிட்டு சென்றான். நைட் முழுவதும் இது ஓட வேண்டுமா? என்று கேட்டதற்கு, 48 முதல் 72 மணி நேரம் வரை ஓட வேண்டும் என்று பயம் காட்டி சென்றான்.

இந்த மெஷின்களையும் சத்தம் ரொம்ப பெரிதாக இல்லாவிட்டாலும், தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால், மனநிலை கெட்டுப்போகும் வாய்ப்பை உருவாக்குவதாக தெரிந்தது. அடுத்த நாள், அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு, மனைவியும், குழந்தையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றேன். அதற்கு அடுத்த நாளும் ஓடியது. திரும்ப விடுமுறை கஷ்டம் என்பதால், நான் அலுவலகம் செல்ல, மனைவியும், குழந்தையும் பக்கத்துவிட்டிற்கு சென்றார்கள்.

சொன்ன மாதிரியே கிட்டத்தட்ட 72 மணி நேரத்திற்கு 3 நாட்களுக்கு இந்த மின் விசிறிகளை ஓட்டியே எடுத்து சென்றான். இப்போது எல்லாம் சரி. அமெரிக்க 911, ஃபயர் இன்ஜின் அனுபவமும் கிடைத்து விட்டது.

.

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

அட ராமா.எனக்கும் நேற்று இங்கு 1 மணிநேரம் பெய்த கனமழையால் ரூம் எங்கும் தண்ணீர் வெராண்டா வழியாக உள்ளே நுழைந்து நடுராத்திரியில் விளக்குமாறும் கையுமா சுறுசுறுப்பானேன்.
அங்கே கொதிக்கும் தண்ணீர் வேறு கேட்கவா வேண்டும்.

Anonymous said...

Hey...u will never forget this experience.....