Monday, January 4, 2010

வேட்டைக்காரன் முதல் அவதார் வரை

சில சமயம் காமெடிக்கு என்று எழுதும் பதிவுகளில், யாரையாவது ரொம்பவும் கிண்டல் செய்து விட்டு, பிறகு சிந்திப்பதுண்டு. யாரையாவது கிண்டல் செய்யாமல், ஏதாவது ஒரு செயலை கிண்டல் செய்யாமல் காமெடி செய்ய முடியாதா? முடியாது என்று தான் நினைக்கிறேன். இல்லாவிட்டால், சிரிப்பு வராது. இந்த வருடம் முதல், இனி இது போல் கிண்டல் செய்து எழுதக்கூடாது என்று ஒரு சபதம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன். கவனிக்கவும். இன்னும் எடுக்கவில்லை.

அதனால, ஆண்டு துவக்கத்தில் ஒரு பாஸிட்டிவ் பதிவு. சும்மா பாஸிட்டிவ் பதிவு எழுதுவதில் என்ன பெரிய கஷ்டம் இருக்க போகிறது? அதனால், விஜய் & வேட்டைக்காரன் பற்றி ஒரு பாஸிட்டிவ் பதிவு.சன் டிவியில் போட்ட வேட்டைக்காரன் இசை வெளியிட்டு விழாவை, சமீபத்தில் தான் யூ-ட்யுபில் பார்த்தேன். நல்ல காமெடியாக இருந்தது! அட, நிஜமாதாங்க...

பாக்யராஜ் மாதிரி யாருக்கும் சிந்திக்க வராதுங்க. இந்த வயசிலையும், எப்படி யோசிக்கிறாரு? “நான் அடிச்சா தாங்க மாட்டே! நாலு மாசம் தூங்க மாட்டே!” பாடலை பற்றி சொல்லிவிட்டு, ”இந்த பாடலை ஹீரோ, வில்லனைப் பார்த்தும் பாடலாம். ஹீரோயினை பார்த்தும் பாடலாம்.” என்றார். கேட்ட அனைவரும், சில விநாடிகள் யோசித்துவிட்டு சிரித்தார்கள். உம்மென்று இருந்த விஜய் உட்பட.

கருணாஸ் ரொம்ப ‘உற்சாகமாய்’ பேசினார். தான் கிராமங்கள் வரை ரீச் ஆனதற்கு சன் டிவியும், கலாநிதி மாறனும் தான் காரணம் என்றார். இது ஜால்ரா இல்லை என்று டிஸ்கி போட்டு கொண்டார். நகுல் நடிக்கும் படமாக இருந்தாலும், முதல் நாள் நேராக காலைக்காட்சிக்கு சென்று ரிசல்ட் தெரிந்துக்கொள்ளும் கலாநிதி மாறனின் தொழில் நேர்மையை பற்றி சொன்னார்.

உண்மைதான். கலாநிதி மாறன் மட்டுமில்லை. இந்த நிகழ்ச்சியை எடிட் செய்து, ஒலிப்பதிவு செய்து ஒளிப்பரப்பும் சன் டிவியின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரது தொழில் நேர்மையும் மெச்சும்படியானது. எப்பொழுதெல்லாம், மேடையில் கலாநிதி மாறனின் பெயர் உச்சரிக்கபடுகிறதோ, அப்பொழுதெல்லாம் அரங்கத்தில் பெரும் கரகோஷம் எழும்புகிறது. விஜய் ரசிகர்கள் போல் தெரியவில்லை, கலாநிதி மாறனின் ரசிகர்கள் உற்சாகமாய் கைத்தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். எப்படியெல்லாம் படம் காட்டுகிறார்கள்? நல்ல கட்டிங், ஒட்டிங்.

இதில் என்ன கொடுமை என்றால், படத்தை தயாரித்த ஏவிஎம் பெயரை சொல்லும்போதும், மற்றவர்கள் பெயரை சொல்லும்போதும் மயான அமைதியாக இருக்கிறது. கலாநிதி மாறன் பெயருக்கு மட்டும் இவ்வளவு வரவேற்பு. விட்டால், உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு விநியோகஸ்தரும் (!), தயாரிப்பாளருமான ஒருவருக்கு ரசிகர் மன்றம் (வைக்க) வைத்துவிடுவார்கள் போல் இருக்கிறது.

சக்சேனாவுக்கு விஜய் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. ரஜினி பற்றியும், ஷங்கர் பற்றியும், எந்திரன் பற்றியும் சொன்னவர், விஜய் ரஜினியை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடித்துக்கொண்டார்.

விஜய் தன் பையனை படத்தில் நடிக்கிறாயா? என்று கேட்டதாகவும், அவன் அதற்கு சரியென்று சொன்னதாகவும் சஞ்சய் ஆரம்ப பாடலில் ஆடியதை பற்றி கூறினார். கேமரா பார்த்து பயப்படாமல் நடிக்க வேண்டும் என்று சொல்லி கூட்டி சென்றதாகவும், அவனும் நன்றாகவே செய்திருப்பதாக சொல்லி மகிழ்ச்சியில் சிரித்த போது, ஒரு அப்பாவாக அவரது முகம் பிரகாசித்தது. அடிக்கடி எஸ்.ஏ.சந்திரசேகரன் உணரும் ஒரு பரவசத்தை, முதல்முறையாக விஜய் மேடையில் வெளிக்காட்டினார்.

அவதார் பார்த்தேன். இந்த விமர்சகர்கள் போக்கு கொஞ்சம் கூட சரியில்லை. விஜய் பாலத்தின் மேலிருந்தோ, அருவியின் மேலிருந்தோ குதித்தால், ஆயிரம் நொள்ளை சொல்லும் இவர்கள், அவதார் படத்தில் ஜேம்ஸ் கேமரூம் ஹீரோவை அதேப்போல் அருவியின் மேலிருந்து தள்ளிவிட்டால், “ஆஹா! அற்புதம்... வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்... என்னா பிரமாண்டம்?” என்று வாயை பிளப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

விஜய் படத்தில் இருக்கும் சின்ன லாஜிக் ஓட்டைகளை எல்லாம் பெருசாக்குபவர்கள், அவதார் படத்தில் உள்ள ராட்சத ஓட்டைகளை கண்டுக்கொள்ளாமல், கேட்டால், “இது ஒரு சயின்ஸ் பிக்‌ஷன்... பேண்டஸி” என்று கதையளக்கிறார்கள். நாங்க மட்டும் என்ன யதார்த்த படமா எடுக்கிறோம்?

ச்சே! யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால், இன்னொருத்தரை கீழே இழுக்க வேண்டி இருக்கிறதே? பதிவின் முதலில் சொன்ன சபதம், இறுதி வரையில் கூட தாக்குப்பிடிக்க மாட்டேங்கிறது.

.

9 comments:

Anonymous said...

Vijay Miss Kanthakottai - It will be apt for him...and far better that the hunter..

Hunter - Audience Haunted

angel said...

//விஜய் படத்தில் இருக்கும் சின்ன லாஜிக் ஓட்டைகளை எல்லாம் பெருசாக்குபவர்கள், அவதார் படத்தில் உள்ள ராட்சத ஓட்டைகளை கண்டுக்கொள்ளாமல், கேட்டால், “இது ஒரு சயின்ஸ் பிக்‌ஷன்... பேண்டஸி” என்று கதையளக்கிறார்கள். நாங்க மட்டும் என்ன யதார்த்த படமா எடுக்கிறோம்?//
yeah i accept with u.

hayyram said...

gud. continue

regards
ram

www.hayyram.blogspot.com

Naresh Kumar said...

நீங்க சொன்ன மாதிரி கிண்டல் பண்ணாம இருக்குறது கொஞ்சம் கஷ்டந்தானாட்டுங்குது!!! அதுவும் கவுண்டமணி ரசிகரான என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ரொம்பவே கஷ்டந்தான்...

Sukumar said...

நல்ல சபதம். இதை எல்லோரும் எடுத்துட்டா அப்புறம் பதிவு எப்படி எழுதறது. புத்தாண்டு வாழ்த்துக்கள் தல....

சரவணகுமரன் said...

வாங்க ஏஞ்சல்

சரவணகுமரன் said...

நன்றி ஹேராம்

சரவணகுமரன் said...

ஆமாங்க நரேஷ்... ரொம்பவே...

சரவணகுமரன் said...

ஹி... ஹி...

சுகுமார், அதுக்கு பதிவெழுத மாட்டேன்னு சபதம் பண்ணிரலாமோ?