Thursday, January 7, 2010

பஸ்ஸா? ரயிலா? இரண்டும் தான்...

முன்பு எனக்கு பஸ் பயணங்கள் தான் பிடித்திருந்தது. நினைத்த நேரத்திற்கு செல்லலாம். கோவை, சேலம், மதுரை என்று எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் தொடர்ந்து மற்ற ஊர்களுக்கு பஸ்கள் இருக்கும். வெயிட் பண்ண வேண்டிய தேவையிருக்காது. நமக்கு தேவையான நேரத்திற்கு கிளம்பி போய் கொண்டே இருக்கலாம். இதுவே, ரயிலென்றால் அதன் நேரத்தை பொறுத்து தான் நாம் செல்ல வேண்டி இருக்கும். அதுவும் எப்போது வேண்டும் என்றாலும் வரும். போகும். என்ன, பஸ் ஒவ்வொரு ஊராக நிறுத்தி நிறுத்தி, நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும்.ரயிலில் சவுகரியம் என்னவென்றால், இரவில் காலை நீட்டிக்கொண்டு நன்றாக படுத்து உறங்கலாம். காலையில் பல் தேய்த்துவிட்டு, டீயோ காபியோ குடித்து நாளை தொடங்கலாம். பஸ்ஸை விட வேகமாக சென்றுவிடும். ஒவ்வொரு ஊரிலும், ஐந்து நிமிடத்திற்கு மேல் நிற்காது. சின்ன ஊர் என்றால், ஒன்றிரண்டு நிமிடங்கள் தான். முன்னமே திட்டமிட்டு சரியாக ரிசர்வ் செய்துவிட்டால், சீப்பாக முடிந்துவிடும்.

சில இடங்களில் ரயிலின் பாதை, சாலை பாதையை விட கம்மியாக இருக்கும். உதாரணத்திற்கு, ஓசூரிலிருந்து சேலம் செல்லும் வழித்தடத்தை சொல்லலாம். கிருஷ்ணகிரி செல்லாமல், தர்மபுரி சென்று சேலம் போய்விடும். இதற்கும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைநகர். இதுபோல், நாமக்கல் சுற்றுவட்டாரத்திலும் தண்டவாளங்கள் இல்லை. ஏன் இந்த பிரச்சினை என்று யாராவது சொல்லலாம். இதனால வேறு சில இடங்களில், ரயிலில் சென்றால் சுற்றி செல்ல வேண்டி இருக்கும். சேலத்தில் இருந்து கரூர் செல்ல, ஈரோட்டை சுற்றி செல்லவேண்டியிருக்கும். மற்றபடி, பெரும்பாலான இடங்களில் ரயில் தடங்களும், சாலை வழிகளும் சேர்ந்தே செல்லும்.மேலே குறிப்பிட்ட காரணங்களால், சமீபகாலங்களில் பஸ்ஸை விட ரயிலில் தான் அதிகம் பயணிக்கிறேன். எதிலும் ரிசர்வ் செய்யாவிட்டால், மாறி மாறி பஸ்ஸில் செல்வேன். இது கடுப்பான விஷயம் என்றாலும், வேண்டிய இடத்தில் இறங்கும் சுதந்திரம் இருக்கும். சில நேரம் யோசிப்பதுண்டு. பஸ்ஸில் மாறி மாறி செல்வது போல் ஏன் ரயிலில் செல்ல கூடாது என்று. நேர நேரத்திற்கு வராத ரயிலை நம்பி, எதற்கு வம்பு என்று விட்டு விடுவேன்.

கொஞ்ச நாட்கள் முன்பு, பெங்களூரில் இருந்து கிளம்பி கோவில்பட்டிக்கு அதிகாலையில் சென்று விட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். தூத்துக்குடி எக்ஸ்பிரஸில் சென்றால், காலை ஒன்பது மணிக்கு மேல்தான் செல்ல முடியும். அதற்கு முன்பு, செல்ல வேண்டும்.

எப்ப வேண்டுமென்றாலும் கிளம்பலாம் என்பது போல் ப்ரீயாக இருந்தேன். www.erail.in என்ற இணையத்தளம் திட்டமிடுவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒவ்வொரு ரயிலாக, இணைத்து இணைத்து பார்த்துக்கொண்டிருந்ததில், ஈரோட்டில் இருந்து கோவில்பட்டிக்கு செல்ல கோவையில் இருந்து வரும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் கண்ணில் பட்டது. அடுத்த நாளுக்கு டிக்கெட் இருக்கிறதா என்று ஒரு அசட்டு நம்பிக்கையில் பார்த்தால், ஆச்சரியம். ஆர்ஏசியில் இருந்தது. புக் செய்து விட்டேன்.

பெங்களூர் - சேலம் : பஸ்
சேலம் - ஈரோடு : ரயில்
ஈரோடு - கோவில்பட்டி : ரயில்

என ரயில்-பஸ் காம்பினேஷனில் செல்வதாக திட்டமிட்டு கொண்டேன்.

போட்ட திட்டத்தின் படி, மதியம் மூன்று மணிக்கு கிளம்பினேன். ஏழரைக்கு சேலம் ரயில் நிலையத்தில் இருந்தேன். எட்டு மணிக்கு வந்த கோவை இன்டர்சிட்டி பிடித்து, ஒன்பது மணிக்கு முன்பாகவே ஈரோடு வந்தேன். செம ஸ்பீடு. சுஜாதாவின் மூன்று சிறுகதைகளை சாவகாசமாக படித்து முடிப்பதற்குள் ஸ்டேசன் வந்துவிட்டது. கோவில்பட்டிக்கு ரயில் பத்து மணிக்கு தான். இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. வெளியே சென்று, இருக்கிற கடைகளிலே எங்கு கூட்டம் அதிகமாக இருக்கிறதென்று பார்த்து, ஒரு கடையில் முட்டை வீச்சு புரோட்டா சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தால், டிக்கெட் கன்பர்ம் ஆகியிருந்தது. சொன்ன டைமுக்கு ரயில் வர, பெர்த்தில் ஏறி படுத்து உறங்கியவன், காலையில் கோவில்பட்டியில் இறங்கிய போது, மணி நாலு. ஆபரேஷன் சக்ஸஸ்!

குறிப்பு: அந்த ஈரோட்டு ஹோட்டல் பெயர் மறந்துவிட்டது. உள்ளே பெரியார் படம் மாட்டி இருந்தது. ஒவ்வொரு இலைக்கும் ஒரு பெரிய கப்பில் தாராளமாக சால்னா வைத்தார்கள். கல்லாவில் ஒரு பெண்மணி இருந்தார். பரிமாறிய பெரியவர், ரொம்ப பரிவாக பண்பாக பேச, எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அடுத்த முறை ஈரோட்டுக்கு சென்றால், அவருக்காகவே அந்த ஹோட்டல் செல்ல வேண்டும்.

இந்த பயணத்திற்கு நேர் எதிராக திரும்பி வரும்போது, ரயிலில் நான் வரும்போது பட்ட அவஸ்தை இருக்கிறதே? ஆத்திரத்தை அடக்கலாம்... ஆர்வத்தையும் அடக்கிக்கொண்டு, இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

.

3 comments:

Naresh Kumar said...

//குறிப்பு: அந்த ஈரோட்டு ஹோட்டல் பெயர் மறந்துவிட்டது. உள்ளே பெரியார் படம் மாட்டி இருந்தது. ஒவ்வொரு இலைக்கும் ஒரு பெரிய கப்பில் தாராளமாக சால்னா வைத்தார்கள். கல்லாவில் ஒரு பெண்மணி இருந்தார். பரிமாறிய பெரியவர், ரொம்ப பரிவாக பண்பாக பேச, எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அடுத்த முறை ஈரோட்டுக்கு சென்றால், அவருக்காகவே அந்த ஹோட்டல் செல்ல வேண்டும்.//

ஈரோட்டுல எந்த இடத்துல இருக்குன்னு தெரியுமா???

சரவணகுமரன் said...

ஈரோடு ரயில்வே ஸ்டேசன் வெளியே வந்து, வலதுப்பக்கமாக சென்று, சிறிது தூரத்தில் இடதுபக்கம் வந்தது. தெரியுமா?

SNR.தேவதாஸ் said...

தங்களது பிளாக் சுவராசியமாக இருக்கிறது.படிப்பதற்கும்,அனேக தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கும் பயனாக உள்ளது.