இறுக கட்டிவைக்கப்பட்ட என் பொய்களெல்லாம்
வெளியேற ஏதுவின்றி அமைதியாய் காத்திருக்கும்...
என்றேனுமொரு தனித்த பயணம் வேண்டி
நாள் குறிக்கையில் மூட்டையிலிருந்து
முதல் பொய் ஒன்று அறைத்தோழனை அடையும்...
வீட்டிலிருந்து வரும் அழைப்பிற்காய்
அடுத்த பொய் வெளியே வரும்...
பேருந்திற்கான காத்திருப்பில் எதிர்பாராமல்
சந்திக்கும் நட்பு இன்னுமொரு பொய்யை சுமந்து போகும்...
இப்படியாக அரை மூட்டை காலியான பின்பு,
போகுமிடத்தில் வீட்டிற்கென வாங்கும் தோரணமொன்று ,
முதல் பொய்யை இழுத்துப்பிடித்து மூட்டையில் திணிக்கும்...
உச்சிப்பொழுதில் சாப்பிட்டயா என கேட்டு வரும்
அம்மாவின் அழைப்பிற்கு வெட்கப்பட்டு
இரண்டாம் பொய் இடம் பெயரும்...
அலைந்து திரிந்து அறை திரும்பி வெந்நீர் குளியலுக்கு பின்
சகவாசியுடன் அருந்துமொரு இரவு உணவுடன்
அடுத்த பொய் தன்னிடத்திற்கே திரும்பும்...
அடுத்த நாள் அலுவலகத்தில் வார இறுதி எப்படியிருந்ததென
நண்பன் கேட்கையில் இறுதிப்பொய்யும்
தன்னை மூட்டைக்குள் புகுத்தி இறுக்கமாய்
முடிச்சிட்டுக்கொள்ளும்...
பொய்களின் ருசியை முழுவதுமாய்
சுவைக்கத்தெரியாமல் ஒரு அசடென
என் நாட்களை முடிக்கிறேன்...!!!
மூட்டையிலிருந்து வெளிவரும் நாட்களுக்காய்
என் பொய்களெல்லாம் மீண்டும்
காத்திருக்கின்றன...!!!
-மகேந்திரன்.
.
Monday, January 18, 2010
பொய் மூட்டை
வகை
கவிதை,
மகேந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)




1 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:
mahendran unga kavithaiya vida pattu varnanai nalla iruku:). wtz ur nxt song?????
Post a Comment