Saturday, November 24, 2012

விரதம்

சென்ற வாரம் கந்த சஷ்டி வந்ததல்லவா? அதற்கு ஆறு நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். நானல்ல, என் தந்தை இருப்பார். திருச்செந்தூருக்கு நடந்தும் செல்வார். தற்சமயம், வயதின் காரணமாக செல்வது இல்லை. நான் இதற்கு என்று இல்லை. பொது பிரச்சினைக்களுக்காக கூட விரதம் இருந்ததில்லை. இருக்க தோன்றியதும் இல்லை.திருமணத்திற்கு முன்பு, என் மனைவி நிறைய முறை விரதம் இருந்திருக்கிறாளாம். இந்த முறை, இங்கு விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்தாள். எதற்கு, முடியுமா, வேண்டாம் என்றெல்லாம் லைட்டாக சொல்லிப்பார்த்தேன். ஒரு தடவை முடிவெடுத்துவிட்டால் என் பேச்சே நானே கேட்க மாட்டேன் என்று பன்ச் பேசாவிட்டாலும், அதுதானே மனைவிகளின் தத்துவம்? இருந்தார்.

தினமும் எதுவும் சாப்பிடாமல், எனக்கு மட்டும் வீட்டிலும், அலுவலகத்திற்கும் சமையல் செய்துக்கொடுத்தாள். அவ்வப்போது, எலுமிச்சை சாறுடன், வெல்லம் கலந்து குடித்து வந்தாள். சில சமயம், பழங்களும் சாப்பிடுவாள். விதவிதமாக சமைத்து சாப்பிட விட்டாலும், அவள் விரதமிருக்க, நான் மட்டும் கட்டுகட்டு என கட்டுவது சமயங்களில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தினாலும், என்ன செய்ய? கட்டி வந்தேன்.

சென்ற வெள்ளிக்கிழமை என்ன தோன்றியதென்றால், வாரயிறுதியில் நாமும் சாப்பிடாமல் இருந்தால் என்ன? என்று. விரதம், டயட் என்று இல்லாமல், விரதம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு ஆர்வம்.

பொதுவாக, எனக்கு சாப்பிடும் நேரம் கொஞ்சம் தள்ளி சென்றாலே, பசி வயிற்றை கிள்ள, சிறிது நேரத்தில் தலைவலி வந்துவிடும். வீட்டில் இருக்கும் போதும் சரி, படிக்கும் காலத்தில் ஹாஸ்டலில் இருக்கும் போதும் சரி, நேரா நேரத்திற்கு மணியடித்து சாப்பாடு போடுவார்கள். குறிப்பாக, ஹாஸ்டல் சாப்பாட்டைப் பற்றி சொல்ல வேண்டும். கல்லூரி எட்டரைக்கு என்றால், என் கல்லூரி நண்பர்கள் எட்டே காலுக்கு எழுந்து கிளம்பி கல்லூரிக்கு வருவார்கள். நானோ எட்டு மணிக்கே ஹாஸ்டல் மெஸ்ஸை நோக்கி நடந்து செல்வேன்.

காரணம் சிம்பிள். காலை உணவு முக்கியம் என்று என்றோ வாசித்தது. இரவு உணவிற்கு பிறகு, நாம் நீண்ட நேரம் உண்ணாமல் இருப்பதால், காலை உணவு அந்த விரதத்தை முடித்து வைக்கும் காரணத்தாலே, அதற்கு ‘ப்ரெக்பாஸ்ட்’ என்று பெயர் என்றும், காலை உணவை சாப்பிடாமல் விட்டோமானால், உணவை செரிக்க உதவும் திரவத்தாலேயே உடலுக்கு தீங்கு என்றும் படித்ததாலே, எதற்கு தேவையில்லாமல் வம்பை விலைக்கொடுத்து வாங்க வேண்டும் என்று காலை உணவு எவ்வளவு கேவலமாக இருந்தாலும் லைட்டாகவாவது சாப்பிட்டு விடுவேன்.

சமீபத்தில் ஒருநாள் காலையில் பதினொரு மணி இருக்கும். என் கல்லூரி நண்பனுடன் போனில் பேசிக்கொண்டு இருந்தேன். ’சாப்டாச்சா?’ என்று கேட்டதற்கு ’இல்லை... இனிதான்’ என்றான். திரும்ப அவன், ’நீ?’ என்று கேட்டவன், அவனாகவே, ‘அந்த ஹாஸ்டல் காலை சாப்பாட்டையே விடாமல் சாப்பிட்டவன், இப்ப வீட்டு சாப்பாடு. சாப்பிடாமல் இருப்பியா? சாப்பிட்டு இருப்பே!! அப்புறம்?’ என்று அடுத்த டாபிக்கிற்கு அவனாகவே சென்று விட்டான்.

அப்படிப்பட்ட நான், இரு நாட்கள் விரதம் இருக்க போகிறேன், என்பது எனக்கே ‘நான் என்னவாவேன்’ என்ற ஆர்வத்தை கிளப்பியது.

சனிக்கிழமை மதியம் வயிறு லைட்டாக ‘சாப்பாடு போடுடா!’ என்று நினைவுப்படுத்தியது. சிறிது நேரத்தில், அதுவாகவே அமைதியாகியது. அதன் பிறகு, உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், மனரீதியாக சில கேள்விகள்.

நாம் எதற்கு விரதம் இருக்கிறோம்? நமக்கு இது தேவையா? சாப்பிட்டு விடலாமா? என்பது போன்ற கேள்விகள். பிறகு, முடிவெடுத்துவிட்டோம். அதற்காக இருந்தே ஆகவேண்டும் என்று விரதத்தைத் தொடர்ந்தேன்.

இரவில் கொஞ்சம் எலுமிச்சை சாறும், ப்ளாக் பெர்ரி சிறிதும் சாப்பிட்டேன்.

இன்னொரு பிரச்சினை. பொதுவாக, விடுமுறை நாட்களில் வேறு ஏதும் முக்கியமான வேலை இல்லாவிட்டால், வீட்டில் சமைப்பது உண்டு. சமையலுக்கு உதவுவது உண்டு. இந்த இரு நாட்களில் வெளியே செல்லும் வேலையும் இல்லை. வீட்டில் சமையலும் இல்லையென்பதால், ஒரே போர். எவ்வளவு நேரம், லாப்டாப்பை கட்டிக்கொண்டு அழுவது? தூங்கிவிட்டேன்.

ஞாயிறு அன்று, எங்கள் அப்பார்ட்மெண்டில் தீபாவளி கொண்டாட்டம் இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமையல் ஐட்டம் செய்துக்கொண்டு வர வேண்டும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஐட்டம் - இட்லி. சட்டி நிறைய இருந்தாலும், தொட்டு பார்க்க மட்டும் தான் முடிந்தது.

அன்று சாயங்காலம், விரதத்தை முடித்துவிட்டு தான், இட்லியை வாயில் போட முடிந்தது. முதலில் இருநாட்கள் பெரிதாக தெரிந்தாலும், கடந்தபிறகு அவ்வளவே என்று தோன்றியது. சாதித்தது என்னவென்றால், இரு நாட்கள் (ஆக்சுவல்லி, ஒன்றரை நாள் தான்) என்னால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது தான்.

இனி, அடுத்த சஷ்டிக்கு இன்னும் நாட்களைக் கூட்ட முடியுமா? என்று பார்க்க வேண்டும். உடல்நலன் சார்ந்து செய்ய வேண்டும்.

 
.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒன்றரை நாளுக்கே இப்படியா... ஆரம்பம் இப்படித்தான்... இனிய அவஸ்தை...

உடல் நலம் முக்கியம்... விரதம் அப்புறம்...
tm1

pudugaithendral said...

மாதாமாதம் ஷஷ்டி, கிருத்திகை விரதம் இருப்பேன். கந்த ஷஷ்டி கூடுதலாக 36 தடவை கவசம் படித்து விரதம் இருந்து என தடபுடலாக இருக்கும். ஆனால் இப்பொழுது விரதமா நோ ... நோ என்று டாக்டர்கள் சொல்லிவிட்டதனால் அன்றைய பொழுது வெங்காயம், பூண்டு தவிர்த்து விடுவேன். :(

சரவணகுமரன் said...

நன்றி தனபாலன்

சரவணகுமரன் said...

விருந்து தடபுடலா கேள்விப்பட்டிருக்கேன். விரதமே தடபுடலா இருப்பீங்களா? சூப்பருங்க, புதுகைத் தென்றல்... :-)

சரவணகுமரன் said...

நன்றி மதுரைத் தமிழன்.