காலையில ஆபிஸ்க்கு வீட்ல இருந்து கிளம்பி பைக்குல வந்துட்டு இருக்கும்போதே மனசில சின்னதா ஒரு சஞ்சலம். என்னமோ இன்னைக்கி நடக்க போகுதுன்னு. சரி, பாத்துக்கிலாம்னு போயிட்டு இருக்கும்போது, நம்ம பக்கத்து வீட்டு பையன் ரோட்ல நடந்து போயிட்டு இருக்கான். அவன் கழுத்துல பாக்குறேன். எனக்கு ஒரே அதிர்ச்சி.
அவன் ஸ்கூல் ஐடி கார்டு மாட்டி இருக்கான். சரி, நம்ம பாக்கெட்டுல ஐடி இருக்கான்னு பார்த்தா, இல்ல. போச்சுடா, மறந்துடோம் போல'ன்னு வீட்டுக்கு திரும்ப வேண்டியதா போச்சு. அப்ப, வண்டியில திரும்பினேன் பாருங்க... அதுதான் இன்னைக்கி என் வாழ்க்கையில நடந்த பெரிய திருப்புமுனை. 360 டிகிரினா சும்மாவா? அதுக்கு அந்த பையன்தான் காரணம். அவனுக்கு இந்த பதிவு மூலம் என் நன்றிய தெரிவிச்சுக்கிறேன். அவன் எப்ப பெரியவனாகி இத வந்து படிக்க போறானோ?
நடப்பது எல்லாம் நன்மைக்கேன்னு சும்மாவா சொன்னாங்க? வீட்டுக்கு போனபெறவு தான் அது எவ்ளோ உண்மையின்னு எனக்கு தெரிஞ்சது. வீட்டுக்கு உள்ள நுழைஞ்சா, என் டூத்ப்ரேஷ் டிவி டேபிள் மேல இருக்கு. அப்பத்தான் நான் இன்னைக்கி பல் தேய்க்காம மறந்து ஆபிஸ் கிளம்புனது ஞாபகம் வருது. (ச்சி... அதான் சாப்டும்போது வாய் நமநமன்னு இருந்திச்சா?). ச்சே... நம்ம திருப்புமுனை நமக்கு எம்மாம் பெரிய விஷயத்த ஞாபக படுத்திருக்குன்னு நினைச்சிக்கிட்டே பல் தேய்ச்சேன்.
பின்ன என்னங்க? எப்ப பாரு, பதிவு போடுறத பத்தியே நினைச்சிகிட்டு இருந்தா இப்படி தான் ஆகும். சில பேரு கனவுல எல்லாம் பதிவு போடுறாங்களாம். காரணம் ஒன்னுதாங்க. பிளாக்கர், வோர்ட்ப்ரெஸ் கணக்குல இருந்து ஆபிஸ் இன்டர்நெட் வரை எல்லாம் ஓசி. ஒரு வேளை, கூகிள் "பணவீக்கம் அதிகமாயிடுச்சு... இனி அக்கௌன்ட் ஓசியா தரமுடியாது. ஒரு கணக்குக்கு ரெண்டு டாலர்தான்" சொன்னா இங்க ஒரு பயபுள்ள இருக்கமாட்டான். தமிழ்மணத்துல ஈ கும்மி அடிச்சி டான்ஸ் ஆடும். அப்புறம் எங்க, பதிவு எழுதி சமூகத்த புரட்டி போடுறது? :-)
சரி, திருப்புமுனைக்கு வருவோம். சர்வேசன் அண்ணன் "திருப்புமுனைல, வேற பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க"ன்னு கேட்டு இருந்தாரு. என்ன ஆயிருக்கும்? ரோட்டுக்கு அந்த பக்கம் BSNL க்காரன் தோண்டியிருந்த குழிக்குள்ள விழுந்திருப்பேன். அப்பாடி! சுவாரஸ்யமா, உண்மைய சொல்லியாச்சு.
இதுப்போல நான் பல திருப்புமுனைகளை சந்திச்சிருக்கேன். உதாரணமா, ஊட்டி, கொடைக்கானல், திருப்பதி போறப்ப, ஒரே நாள்'லே பல டர்னிங் பாயிண்ட்'கள பார்த்துருக்கேன். அந்த மாதிரி, சமீபத்துல, கன்னியாகுமரி போனப்ப, விவேகானந்தர் பாறை போயி திரும்பி வருரத நம்ம நாட்டின் திருப்புமுனையா எடுத்துக்கிலாம்'ங்கறத கண் கூடா பார்த்தேன். ஆனா இங்கெல்லாம், திருப்புமுனையில அந்த பக்கம் திரும்பி இருந்தா என்ன ஆயிருக்கும்?'ங்கறத நினைச்சா ஒரே கலவரமா இருக்கு. :-)