Monday, February 11, 2008

பாவப்பட்ட தமிழ் பட தயாரிப்பாளர்கள்

தமிழ் படம் தயாரிக்க என்ன தேவை? திரைப்பட ரசனை! ரசிகனின் எதிர்பார்ப்பு பற்றிய அறிவு! இப்படி எதுவும் தேவை இல்லை. ஒரு படம் தயாரிக்க வேண்டிய அளவு பணம் தேவையா? அதுவும் இல்லை. ஒரு அளவுக்கு பணத்தை புரட்டி, பூஜை அன்னிக்கி விநியோகஸ்தர்கள், டிவி, வெளிநாட்டு உரிமை என்று விற்று, சரியான தேதியில் ரிலிஸ் பண்ணினால் எதாவது தேறலாம். அப்படியே அந்த படம் ஓடினால், லாபம் பார்க்கலாம். இல்லாட்டி? கஷ்டம் தான்.

நான் இங்கே தயாரிப்பு வேலைகளை மட்டும் செய்யும் தயாரிப்பாளர்களை பற்றி சொல்கிறேன். பட தயாரிப்புக்களில் ஈடுபடும் நடிகர், இயக்குனர்களை விட்டுவிடலாம். ஏனென்றால் இவர்கள் ஒரு சில படங்களை மட்டுமே தயாரிப்பார்கள். மற்றவற்றை வெளியாரை கொண்டு தயாரிக்க செய்து அதில் நடிக்கவோ அல்லது இயக்கவோ மட்டும் செய்வார்கள். அதற்கு காரணம், அந்த ஒரு சில படங்களில் அவர்கள் கொண்ட நம்பிக்கை. நம்பிக்கை கொஞ்சம் குறைந்தாலும் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். விவரமானவர்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வரலாறை பார்க்கும் போது, படங்களை மட்டுமே தொடர்ந்து தயாரித்து செல்வத்தை பெருக்கியதாக யாரும் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டவர்களில் மெய்யப்ப செட்டியாரின் ஏவிஎம், வாசனின் ஜெமினி ஆகியவை குறிப்பிட தக்கவை. அதில் ஜெமினி பட தயாரிப்பில் இருந்து விலகி ரொம்ப நாட்கள் ஆகிறது. ஏவிஎம், எண்பதுகளில் நிறைய வெற்றி படங்களை கொடுத்து, உச்ச நடிகர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தாலும் தற்போது தொலைக்காட்சி தொடர்களின் மூலமாகவே செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இவர்கள் பேரழகன் படத்தின் விழாவின் போது, இனிமேல் பட தயாரிப்பில் ஈடுபடுவதில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாயின. ஆனால் அதன் பின்பும் ஏவிஎம் குடும்பத்தினரின் இளைய தலைமுறையினரால் படங்களை தயாரித்து வருகின்றனர். அதே சமயம், ஏவிஎம் முன்பு போல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே படங்களை எடுத்து வருவதாக தெரிகிறது.

அதேபோல் வெற்றி படங்களை தந்த பாலாஜி, கலைப்புலி தாணு, ராவுத்தர், ஜீவி போன்றவர்களும் தொடர்ந்து படங்களை எடுத்ததில்லை. இதில் ஜீவி பொருளாதார சூழ்நிலையால் தற்கொலை செய்து கொண்டார். தாணு, திமுகவில் இருந்து வைகோவுடன் விலகி மதிமுகவில் இருக்கிறார். இதனால் சன் டிவியுடன் மோதல் கொண்டு, இவருடைய படங்கள் எதுவும் சன் டிவியில் வருவதில்லை. தற்போது, தன் மகனை வைத்து ஒரு படம் தயாரித்து வருகிறார். அதேபோல், தொடர்ந்து புது முகங்களுக்கு வாய்ப்பளித்து பல வெற்றி படங்களை வழங்கி வந்த ஆர். பி. சௌத்திரியும் பட தயாரிப்புகளை பெருமளவு குறைத்து விட்டார். தன் இரு மகன்களையும் நடிகராக்கியதால், அதுவே போதும் என்று நினைத்து விட்டார் போல?

தற்போது, பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருவதில் முன்னிலையில் இருப்பவர்கள், ஏ. எம். ரத்னமும் ஆஸ்கர் ரவிச்சந்திரனும். ஏ. எம். ரத்னம் நிறைய மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர். ஆனால், நாயக் (இந்தியில் முதல்வன்), பாய்ஸ் (உபயம்: ஷங்கர்), உனக்கு 20 எனக்கு 18 (உபயம்: அவரின் சொந்த மகன்) போன்ற படங்களின் நஷ்டத்தினால், அதன் பின் வெளிவந்து வெற்றி பெற்ற ரன், தூள், 7 ஜி படங்களின் லாபத்தை கொண்டும், வட்டி மட்டும் கட்டி வருவதாக செய்தித்தாள்கள் மூலம் கேள்விபடுகிறேன். தற்போது வெளிவந்த பீமாவும் இவரின் கையை கடித்து இருக்கும். ஆஸ்கர் ரவிச்சந்திரன் சென்ற இரண்டு மூன்று வருடங்களில் நிறைய வெற்றி படங்களை தயாரித்து, விநியோகித்து இருந்தார். இவர் வெளிவர சிரமப்பட்டு இருந்த பல படங்களை வாங்கி, வெளியிட்டு லாபம் அடைந்தார். இந்த வருடம் தசாவதாரம் படத்தை பிரமாண்டமாக வெளியிட இருக்கிறார்.

ஒரு படத்திற்கு தயாரிப்பாளர்கள் தான் முதலாளிகள். ஆனால், ஒரு நடிகரோ இயக்குனரோ இசையமைப்பாளரோ திரைப்பட தொழில் மூலம் வசதியடைந்தது போல் எந்த ஒரு தயாரிப்பாளரும் வசதியடைந்ததாக தெரியவில்லை. இருந்ததை இழந்தவர்கள் தான் இங்கே அதிகம். இல்லாவிட்டால் இருப்பதை இழக்காமல் இருப்பதற்காக வாழ்க்கையில் மூச்சு முட்ட ஓடுகிறார்கள்.

இதற்கு என்ன காரணமாக இருக்க கூடும்?

திரைப்படம் கூறித்த ரசனையின்மையா? ரசிகனின் எதிர்பார்ப்பு பற்றிய தெளிவின்மையா? அதை அறிந்து கொள்ளாமல் இருக்கும் ஆர்வமின்மையா? வெற்றியடைந்த ஒரு படத்தை போல் தொடர்ந்து படமெடுக்கும் குருட்டு துணிச்சலா? கதையை நம்பாமல் நடிகனை முதலாளியாக்கும் அடிமைத்தனமா? பண நிர்வாகத்தில் தேர்ந்து இருக்க வேண்டியவர்கள், ஒழுங்கற்ற முறையில் செயல்படுவதாலா? வெற்றி பெற்றவர்களை இணைத்தால் மட்டுமே வெற்றி பெற்றிவிடலாம் என்ற நப்பாசையா? அது எதுவானாலும் அதை ஆராய்ந்து திருத்துவதற்கு இந்த துறையில் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. ஏனேன்றல், அவர்கள் இங்கே மிக பெரும் அளவிலான பணத்தை கொண்டு ஆடுகிறார்கள். ஒரு முறை தோல்வி அடைந்தாலும் அது அவர்கள் கழுத்தில் ஒரு பாறையை சங்கிலி கொண்டு மாட்டிவிடும். அதன் பின் அடையும் ஒவ்வொரு தோல்வியும் பாறையின் எடையை தான் கூட்டும்.

தற்பொழுது, திரைப்பட தயாரிப்பு துறையில் செயல் பட பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வர துவங்கியுள்ளன. இவர்கள், நிர்வாக பணியில் சிறப்பாக செயலாற்றினாலும், மேலே கூறியுள்ள மற்றவற்றில் கவனமில்லாமல் இருந்தால், இவர்களின் நிலையும் அதுவே. ஒரே வித்தியாசம் என்னவென்றால் இவர்களுக்கு நஷ்டத்தை பங்கு போட பங்குதாரர்கள் இருப்பார்கள்.

2 comments:

தெமுஜின்/Temujin said...

தமிழ் சினிமா கடந்த சில வருடங்களில் தான் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. 1999-2003 ஆண்டுகளில் முக்கால்வாசி தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களாக மாறின என்பது நினைவிருக்கலாம். இன்றைக்கு கேரள சினிமா இந்த நிலையில்தான் இருக்கிறது என்று நண்பர் சொல்லி ஆதங்கப்பட்டார். அந்த நாட்களில்தான் நீங்கள் குறிப்பிடும் தானு, ஏஎம் ரத்னம் போன்றவர்கள் தனி தயாரிப்பாளர்களாக கொஞ்சம் வளர்ந்திருந்தார்கள். இதில் ஏஎம் ரத்னம் தொடர்ந்து பிரம்மாண்டத்தையே முன்னிருந்தி படங்கள் தயாரித்தார். இந்தியனு-க்கு பிறகு அவர் எடுத்த எந்த ஒரு படமும் ஓடவில்லை என்றே நியாபகம். ஜீவி பாவம், என்ன ஆச்சுனு தெரியல. ரத்தின இயக்குனரை பிரிஞ்சு அவர் எடுத்த படங்கள் எல்லாம் 2000-2003 வருடங்களில்தான். கடைசியா அவர் தயாரிச்சது 'சொக்கத்தங்கம்'. இத்தனைக்கும் அது விஜயகாந்த் நடிச்சு பாக்யராஜ் இயக்கியபடம். ஆனா சுத்த ஊத்தல். அதுக்கு கதையே காரணம்னு நினைக்கிறேன்.

இதில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தான் தொடர்ந்து steady-ஆக இருக்கிறார். எனக்கு தெரிஞ்சு அவர் ஆரம்பத்தில் ஜாக்கி சான் படங்கள் வினியோகத்தில் பிசியாக இருந்து நிறையா சம்பாதிச்சார். 'தசாவதாரம்' இசை வெளியீட்டு ஜாக்கியை அழைத்ததாகூட சில நாட்கள் முன் படித்தேன். மேலும் காதலுக்கு மரியாதை போன்ற படங்களை அவர் தயாரிச்சிருக்கார். ரவிச்சந்திரன் ஒரு மாதிரி balanced-ஆக தயாரிக்கிறார். அந்நியனுக்கு பிறகு, பச்சைகிளி முத்துச்சரம் எடுத்தார். அப்புறம் டோட்டல் சேஃபாக மருதமலை படம் எடுத்து அதிலும் லாபம் பார்த்துவிட்டார்! இப்போது தசாவதாரம். ஆனால் இப்போ தமிழ் சினிமா தொழில் நல்ல ஆரோக்கியமா இருக்கு. அதன் காரணமாத்தான் கார்ப்பரேட்-கள் உள்ளே நுழைந்து புரட்சி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

எப்படியோ ஒரு balanced-approach ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன்.

சரவணகுமரன் said...

தெமுஜின், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.